புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 10 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 10 of 84 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 47 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 07, 2013 12:37 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (60)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

எழுத்துகளோடு எழுத்துகள் புணர்வதை வகைப்படுத்திக் காட்டிய தொல்காப்பியர் , அடுத்துச் சொற்களோடு சொற்கள் புணர்வதை வகைப்படுத்துகிறார் !

விளக்கு + எரியும் = விளக்கெரியும்

இதில் , ‘கு’வின் ‘உ’வும் , வருசொல் ‘எ’யும் மோதும்போது , ‘எ’ மட்டும் மிஞ்சுகிறது ! இதுதான் புணர்ச்சி !
இப்படிப்பட்ட சொற் புணர்ச்சிகள் நான்கு வகைகள் (Four types) என்கிறார் தொல்காப்பியர் ! :-

“அவற்றுள்
நிறுத்த சொல்லின் ஈறாகு எழுத்தொதொடு
குறித்துவரு கிளவி முதலெழுத்து இயையப்
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென
ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” (புணரியல் 6)


இவ் விதிப்படிக் , கீழ்வரும் நான்கு வகைகளில் தமிழ்ச் சொற்கள் புணர்கின்றன ! :-

1 . பெயர் + பெயர்
2 . பெயர் + வினை
3 . வினை + பெயர்
4 . வினை + வினை

இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளைத் தொல்காப்பியர் நூற்பாக்களிலிருந்தே தரலாம் ! :-

1. முதல் + எழுத்து = முதலெழுத்து (பெயர் + பெயர்)
2. ஈறு + ஆகு = ஈறாகு (பெயர் + வினை)
3. வரும் + கிளவி = வருகிளவி (வினை + பெயர்)
4. அறிய + கிளக்கும் = அறியக் கிளக்கும் (வினை + வினை)

புணரும்போது மாறுதல்கள் ஏற்படுகின்றன அல்லவா ? இந்த மாறுதல்களைத் ‘திரிபு’ என்கிறார் தொல்காப்பியர் !

எத்தனை வகைத் திரிபுகள் வரும் ?

மூன்று வகைகள் என்பது அவர் விடை ! :-

அவைதாம்
மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று
இவ்வென மொழிப திரியு மாறே (புணரியல் 7)


அஃதாவது திரியும் மூன்று வகைகளாவன !:-

1 . மெய் பிறிதாதல்
2 . மிகுதல்
3 . குன்றல்

முன் நூற்பாவில் கூறிய ‘இயல்பை’யும் சேர்த்து நான்குவகைப் புணர்ச்சிகள் ! :-

1 .மெய் பிறிதாதல் (திரிதல்) - கல் + பாறை = கற்பாறை .
‘ல்’என்பது , ‘ற்’ஆகப் பிறிது ஆகின்றது !

2 . மிகுதல் ( தோன்றல்) - மா + பழம் = மாம்பழம் .
‘ம்’ மிகுந்துள்ளது . ‘ம்’ புதிதாகத் தோன்றியுள்ளதால் , இதனைத் ‘தோன்றல்’ என்று கூறுப.

3 . குன்றல் (கெடுதல்) - கரம் + வேல் = கரவேல்
‘ம்’காணாமல் போனது ! அஃதாவது குன்றிவிட்டது . குன்றுதலே கெடுதல் !

4 . இயல்பு - சாவி + நுனி = சாவி நுனி .
எந்த மாற்றமும் இல்லை !

‘கெடுதல்’ - என்ற சொல் ‘மாறுதல்’ , ‘காணாதுபோதல் ’ ஆகிய பொருள்களைத் தரும் ! “என் ஓலையைச் சித்திர புத்திரன் கெட்டுப் போக்கிட்டான் !” – வயதான பாட்டி ‘இன்னும் சாவு வரவில்லையே’ என்று புலம்பும்போது கூறுவாள் !

கெட்டுப் போக்குதல் – தொலைத்தல் .

பெயர் , வினைகளுக்கு இடையே ஏற்படும் புணர்ச்சிகளைத்தானே கூறியுள்ளார்! அப்படியானால் இடை , உரிகளுக்குப் புணர்ச்சியில் பங்கு இல்லையா ?

பங்கு உண்டு !

இடைகள் , எப்போதும் பெயர் வினைகளைச் சார்ந்துதான் வரும் ! உரிகள் , எப்போதும் பெயர் போலவோ வினை போலவோதான் வரும் ! எனவேதான் தனியே அவற்றுக்குப் புணர்ச்சிவிதிகள் கூறப்படவில்லை !

மேலும் , சொற் புணர்ச்சிகளில் இவை அமையும் ஆற்றை வேற்றுமை இயல் , இடையியல் , உவமவியல் , உரியியல் முதலிய வேறு இடங்களில் தொல்காப்பியர் பேசுகிறார் !

தொல்காப்பியம் எழுதி 3000 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் , இன்று நாம் போடும் வினாக்கள் அத்தனைக்கும் விடை தருவதுதான் தொல்காப்பிய இரகசியம் !
=========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 13, 2013 5:44 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (61)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33



தொல்காப்பியர் , செய்யுளியலின் முதல் நூற்பாவில் அந்த இயலுக்குரிய பொருளடக்கத்தைத் (Contents) தருகிறார்!

மொத்தம் 34 செய்யுள் உறுப்புகளின் பெயர்களை மட்டும் அதில் குறிக்கிறார் !

இவற்றின் பெயர்களை மட்டுமே அவர் தரினும் , சுருக்கக் கருத்துடன் , அவர் கூறிய வரிசையிலேயே வருமாறு பட்டியலிடலாம் !:-

1 . மாத்திரை

இது காய்ச்சல் மாத்திரை அல்ல !

கண் இமைக்கும் நேரம்தான் மாத்திரை !

2 . எழுத்தியல்

நேரசை , நிரையசை எனும் அசைகளுக்குள் அகப்பட்ட எழுத்துகளே எழுத்தியல் !

அஃதாவது , குறில் , நெடில் , ஒற்று , குற்றியலுகரம் ஆகியனவே இப்பகுதியில் அறியப்படும் !

3 . அசை

நேரசை , நிரையசை தவிர நேர்பு ,நிரைபு எனப்படும் உரியசையையும் பேசுகிறார் !

4 . சீர்
அசைகள் சேர்ந்து உருவாவது சீர் !

5 . அடி

சீர்கள் சேர்ந்து அமைவது அடி (line) !

6 . யாப்பு

எழுத்து முதற்கொண்டு எல்லாவற்றையும் கவனித்துச் , சொற்களை (சீர்களை) அடிகளாக்கி , அதனுள் குறிப்பிட்ட பொருளைத் தெளிவாக வரையறுத்துத் தருவது யாப்பு !

7 . மரபு

இது சிலர் எழுதியுள்ளதுபோல ‘இலக்கிய மரபு’ அல்ல !

மரபு – சொல் மரபு

அஃதாவது , இயற் சொல் , திரி சொல் , திசைச் சொல் , வட சொல் என்ற நான்கு பற்றியதே ‘மரபு’ !

8 . தூக்கு

ஓசைதான் தூக்கு !

‘அகவல் ஓசை’ எனில் அகவல் தூக்கு ! அகவல் தூக்கே ‘செந்தூக்கு’

9 . தொடை

நாமறிந்த எதுகை , மோனைகள் எல்லாம் தொடைகளே !

10 . நோக்கு

வரிக்கு வரி படித்தேன்’ – என்று கூறுகிறோம் ! ஆனால் , செய்யுளுக்கு அதுபோதாதாம் !

எழுத்தின் ஒலிப்புக் காலம் (மாத்திரை) முதற்கொண்டு , சீர்கள் , அடிகள்வரை எல்லாக் கூறுகளையும் (Aspects) ஆராய்ந்து பார்த்தலே நோக்கு !

11 . பா

ஆசிரியப்பா , வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய முதன்மைப் பாக்கள் நான்கு !

12 . அளவியல்

இன்ன பா எனில் , குறைந்தது (Minimum) இத்தனை அடி , கூடியது (Maximum) இத்தனை அடி என அறிவது !

13 . திணை

கைக்கிளை , முல்லை , குறிஞ்சி , பாலை , மருதம், நெய்தல் , பெருந்திணை – இவை அடிப்படியான ஏழு திணைகள் !

14 . கைகோள்
களவு , கற்பு என்ற இரு அகத்திணைக் கூறுகளே ‘கைகோள்’!

15 . கூற்று

களவு , கற்பு எனும் இரு பகுதிகளிலும் தோழி , தலைவி ,செவிலி முதலானோர் பேசுவனவே ‘கூற்று’ !

16 . கேட்போர்

‘கூற்று’ப் பகுதியில் கூறுவோர்தம் பேச்சுகளை இன்னின்னார் கேட்கலாம் என வரையறுப்பது !

17 . களன்

நிகழ்வுதான் களன் (Scene ) !

18 . காலம்

மேற்சொன்ன நிகழ்வு எந்தக் காலம் பற்றியது என்ற தெளிவு பாடலில் தரப்பட வேண்டும் !

19 . பயன்

“தலைவா ! நீங்கள் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல் தள்ளிப்போடக்கூடாது” ! என்று தோழி கூறுவதாகப் பாடல் இருந்தால் , அப் பாட்டின் பயன் – ‘வரைவு வேண்டல்’ !

20 . மெய்ப்பாடு

ஒரு கருத்தைப் பாடலில் கூறிய விதமானது ,அப் பாட்டைப் படித்தவனின் உடலில் ஒரு மெய்ப்பாட்டைக் கொணர்வதாக இருக்கவேண்டும் !

21 . எச்சம்

சொல்லெச்சம் , குறிப்பெச்சம் என்ற இரு வகைகளும் இதில் அடங்கும் !

“இப்பவே மணி பத்தாகிவிட்டது” என்று கூறினால் , ‘சீக்கிரம் கிளம்புங்கள்’ என்ற சொற்கள் எஞ்சி நிற்பதால் , இது ‘சொல்லெச்சம்’ !

‘சொல்லெச்சத்தில் ஒரே ஒரு சொல்தான் எஞ்சி நிற்கவேண்டும் ’என்பது பிழை !

“நான் நேற்றுப் போயிருந்தால் அதை முடித்திருப்பேன்” என்றால் , ‘அவர் நேர்றுப் போகவில்லை’ என்பது ‘குறிப்பெச்சம் ’ !

22 . முன்னம்

இன்ன இடத்தில் இன்ன வகையான கருத்தை இவர் வாக்காக அமைக்கவேண்டும் என்ற விதியே ‘முன்னம்’ !

அஃதாவது , சரியான பாத்திரங்களிடத்தில் சரியான கூற்றுகளை அமைப்பதே ‘முன்னம்’ !

பாத்திரங்கள் பேசுவதற்காக அவர்கள் ‘முன்’ உள்ளதால் அது ‘முன்னம் ’ என அழைக்கப்பட்டிருக்கலாம் !

23 .பொருள்

ஒரு பாடல் பொதுவாக எதைக் கூறுகிறதோ அதுதான் அப் பாடலின் பொருள் !

பொதுவான பொருளைக் காணுமிடத்து அதனை ‘உரிப்பொருள் அடிப்படையில் காணவேண்டும்’ எனக் கருதக்கூடாது என்பார் தொல்காப்பியர் ! (செய்யுளியல் 207)

24 . துறை

“நீ பேசாமல் வீட்டுக்குள் கிட! போதும் நீ வெளியே போனது!” என மகளைத் தாய்க்காரி அடக்கி வீட்டுக்குள்ளே இருத்தி வைத்தால் , அது ‘இற் செறிப்பு’ என்ற ‘துறை’ !

துறைக் கணக்கீட்டில் , அந்தந்த நிலத்திற்குரிய பறவை , உணவு முதலிய கருப்பொருள்களைக் கருதவேண்டாம் என்கிறார் தொல்காப்பியர் !

25 . மாட்டு

ஒரு பாடலில் பொருளைச் சரியாக உணர்வதற்கு , அப் பாடலின் பொருட்குறிப்புகள் பல இடங்களில் சிதறிக் கிடந்தாலும் அவற்றைத் தொடர்புபடுத்தலே ‘மாட்டல்’ !

26 . வண்ணம்

ஒரு பாட்டில் மெல்லின எழுத்துகளே மிகுந்து வந்தால் , அதில் ‘மெல்லிசை வண்ணம்’ உள்ளது என்பர் !

செய்யுளியலில் தொல்காப்பியர் பேசிய வண்ணங்கள் மொத்தம் – 20 .

27 . அம்மை

இது வியாதி அல்ல !

திருக்குறள் போலக் குறைந்த அடிகளால், குறைந்த சொற்களால் ஆகும் செய்யுளில் ‘அம்மை’ வனப்பு உள்ளது என்பார் !

28 . அழகு

செய்யுளுக்குரிய மேம்பட்ட எழிற் சொற்களால் பாட்டு அமைந்தால் , அதில் ‘அழகு’ எனும் வனப்பு இருக்கிறது எனப்படும் !

29 . தொன்மை

பழைய கதைகளைக் கொண்டு உரைநடை கலந்து பாடினால் , அதுதான் ‘தொன்மை’ !

30 . தோல்

நல்ல பொருத்தமான ஓசையுடன் நினைத்த கருத்தைப் புலப்படுத்தும் வகையில் அமைந்த நீண்ட செய்யுள்களில் ‘தோல்’ வனப்பு உள்ளது என்ப !

31 . விருந்து

புதிய யாப்பு வகையில் பாடினால் , அது ‘விருந்து’ வனப்புக் கொண்டது !

முத்தொள்ளாயிரத்தை எடுத்துக்காட்டுவர் ! இது வெண்பா யாப்பில் நடப்பது !

32 . இயைபு

பாடல் அடிகளில் ஈற்றுச் சீர்களின் இறுதி எழுத்துகள் யாவும் மெய்யெழுத்தாக வரின் அது ‘இயைபு’ வனப்புக் கொண்ட பாடல் !

33 .புலன்

பலருக்கும் தெரிந்த எளிய சொற்களில் , பொருள் அறிவதில் சிக்கல் எதுவும் இலாது நடக்கும் பாடல்கள் ‘புலன்’ வனப்புக் கொண்டவை !

நாட்டுப்புறப் பாடல்கள் (Folk songs) , கதைப் பாடல்கள் (Ballads) போன்றவை ‘புலன்’ வனப்புக் கொண்டவையே !

34 . இழைபு

பாட்டில் , வல்லின மெய் எழுத்துகளே இல்லாமலிருந்தால் , அப்பாடல், ‘இழைபு’ வண்ணம் கொண்டது !

இந்த 34 உறுப்புகளைக் கொண்டதே ‘செய்யுள்’ என்ற தலைப்பு ! :-

“மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
யாத்த சீரே அடியாப்பு எனாஅ
மரபே தூக்கே தொடைவகை எனாஅ
நோக்கே பாவே அளவியல் எனாஅத்
திணையே கைகோள் கூற்றுவகை எனாஅ
கேட்போர் களனே காலவகை எனாஅப்
பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ
முன்னம் பொருளே துறைவகை எனாஅ
மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின்
ஆறுதலை யிட்ட அந்நால் ஐந்தும்
அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனேஇழைபு எனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ
நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே” ! (செய்யுளியல் 1)

செய்யுளியல் முழுமைக்குமான ‘பொருளடக்கம் ’ இது !

பொருளடக்கம் போடும் முறை தமிழ் முறையே , ஆங்கிலேயர்களிடமிருந்து கற்றுக்கொண்டது அல்ல என்பதற்கு இந்த இடமே சான்று !

பழந்தமிழர்தம் அறிவுகள் யாவும் செய்யுள் வடிவில் எழுதப்பட்டவையே !

மருத்துவமானாலும் சரி , வானியலானாலும் சரி, இலக்கணமானாலும் சரி எல்லாம் பாட்டுதான் !

இது தமிழ் மொழியின் தனிச் சிறப்பு !

இதனைத்தான் சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றித் தந்துள்ளது தொல்காப்பியம் !

==========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:03 pm

நல்லதொரு தொடர் பதிவு தமிழ் இலக்கணத்தை முழுமையாக தெரிந்துகொள்ள உதவும் அருமையான பதிவு தொடருங்கள் ஒவ்வொரு பதிவையும் பிரதி எடுத்துக்கொண்டுள்ளேன் மிக்க நன்றி ஐயா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 19, 2013 9:35 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (62)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியச் சூத்திரங்களின் சொற்கள் யாவும் தொல்காப்பியர் காலத்தவை அல்ல !

தொல்காப்பியர் காலத்திற்கு மிக முந்தைய சொற்களும் , தொல்காப்பியர் காலத்துச் சொற்களும் கலந்தவைதாம் தொல்காப்பியச் சொற்கள் !

எனவே மிகப் பழைய சொல் வடிவங்களின் கருவூலமாகத்தான் நாம் தொல்காப்பியத்தைக் கருதவேண்டும் !

‘ஞ்’ஐ ஈறாகக் கொண்ட சொற்கள் இன்று புழக்கத்தில் இல்லை !

ஆனால் தொல்காப்பியருக்கு முன்பும் தொல்காப்பியர் காலத்தும் அவை இருந்திருக்கவேண்டும் !

புள்ளிமயங்கியலின் முதலிரு நூற்பாக்களில் ‘ஞ்’ஐ ஈறாகக் கொண்ட தொழிற்பெயர்ச் சொற்களின் புணர்ச்சியைப் பேசுகிறார் தொல்காப்பியர் ! :-

1 . “ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே
உகரம் வருதல் ஆவயி னான” (புள்ளிமயங்கியல்1)

(ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் - உரிஞ் அல்லது கிளப்பினும் - அல்வழிப் புணர்ச்சிக் கண்ணும் )

உரிஞ் + கடிது = உரிஞுக் கடிது
உரிஞ் + சிறிது = உரிஞுச் சிறிது
உரிஞ் + தீது = உரிஞுத் தீது
உருஞ் + பெரிது = உரிஞுப் பெரிது

மேல் நான்கு புணர்ச்சிகளுமே அல்வழிப் புணர்ச்சிகள் ! நான்கிலும் இடையே உகரச் சாரியை வந்துள்ளதைக் கவனியுங்கள் !

உரிஞ் + கடுமை = உரிஞுக் கடுமை
உரிஞ் + சிறுமை = உரிஞுச் சிறுமை
உரிஞ் + தீமை = உரிஞுத் தீமை
உரிஞ் + பெருமை = உரிஞுப் பெருமை

மேல் நான்கு புணர்ச்சிகளுமே வேற்றுமைப் புணர்ச்சிகள் ! நான்கிலும் உகரச் சாரியை வந்துள்ளதைக் காண்க !

அல்வழியாயினும் வேற்றுமையாயினும் புணர்ச்சியில் ஒற்று வரவேண்டிய இடத்தில் வந்துள்ளதை நோக்குக !

தமிழ்ப் புணர்ச்சி இலக்கணத்தின் உயிர் நாடியே ஒற்றுதான் !

அடுத்ததாக ,
2 . “ஞநமவ இயையினும் உகரம் நிலையும்” (புள்ளிமயங்கியல் 2)
என்றார் தொல்காப்பியர் !

மேலே நாம் பார்த்த எட்டுப் புணர்ச்சிகளிலும் , ‘உரிஞ்’ என்பதோடு , வல்லின எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததைத்தானே பார்த்தோம் ? இப்போது , அதே ‘உரிஞ்’ என்பதுடன் மெல்லின எழுத்துகளில் ஞ , ந , ம ஆகியவற்றை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போதும் , இடையின வகரத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போதும் அடையும் மாற்றங்களைக் காணலாம் ! :-

உரிஞ் + ஞான்றது = உரிஞு ஞான்றது
உரிஞ் + நீண்டது = உரிஞு நீண்டது
உரிஞ் + மாண்டது = உரிஞு மாண்டது
உரிஞ் + வலிது = உரிஞு வலிது

இந்த நான்கு புணர்ச்சிகளுமே அல்வழிப் புணர்ச்சிகள்தாம் ! இடையே உகரச் சாரியை வந்தமை காண்க !

இவற்றை ஏன் அல்வழிப் புணர்ச்சி என்கிறோம் ?

‘உரிஞை வலிது’ , ‘உரிஞுக்கு வலிது’ என்றெல்லாம் சொற்றொடர்கள் வாரா ! எனவேதான் , ‘வேற்றுமை அல்லாதவழிப் புணர்ச்சி’ என்பதைச் சுட்ட , ‘அல்வழிப் புணர்ச்சி’ என்கிறோம் !

இனி , இப்போது பார்த்த நான்கு புணர்ச்சிகளும் வேற்றுமைப் புணர்ச்சியில் எப்படி வரும் ? :-

உரிஞ் + ஞாற்சி = உரிஞு ஞாற்சி
உரிஞ் + நீட்சி = உரிஞு நீட்சி
உரிஞ் + மாட்சி = உரிஞு மாட்சி
உரிஞ் + வலிமை = உரிஞு வலிமை

‘உரிஞ்’ என்பதுடன் யகரத்தை முதலாகக் கொண்ட சொற்கள் புணரும்போதும் , உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் புணரும்போதும் , இயல்பாகவே புணரும் என்று வேறிடத்தில் கூறுகிறார் ! :-

“உகரமொடு புணரும் புள்ளி இறுதி
யகரமும் உயிரும் வருவழி இயற்கை” (தொகை மரபு 21)

இதன்படி ,

உரிஞ் + யானா = உரிஞு ஞானா ×
= உரிஞ் ஞானா √

உரிஞ் + அனந்தா = உருஞு அனந்தா ×
= உரிஞ் அனந்தா √

- இவை இரண்டும் அல்வழிப் புணர்ச்சிகள் !

வேற்றுமைப் புணர்ச்சியில் ,

உரிஞ் + ஆதா = உரிஞு ஆதா ×
= உரிஞ் ஆதா √
என வரும் என்பது தொல்காப்பியம் !

‘உரிஞ்’ என்ற சொல்லுக்குத் தொல்காப்பியர் தந்த சிறப்பிடம் நோக்கத்தக்கது !

நல்ல செல்வாக்குடன் கொடிகட்டிப் பறந்த மிகப் பழைய தமிழ்ச் சொல் இது என்பதை இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டும் !

‘உரிஞ்’ என்பது முதனிலைத் தொழிற்பெயர் !

முதனிலைத் தொழிற்பெயர் என்றால் ?

‘கெடுமதி’ , ‘கெடுதல் மதி’ – பொருள் ஒன்றுதான் ! இவற்றில் ‘கெடு’ – முதல்நிலைத் தொழிற் பெயர் ; ‘கெடுதல்’ – முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் ! ‘கேடு’ என்பதும் முதல் நிலை திரிந்த தொழிற்பெயர்தான் ! அஃதாவது , முதல்நிலைத் தொழிற்பெயரை அதற்குமேல் பிரிக்க முடியாது !

உரிஞு = தேய்த்தல் ; உரிஞ்சுதல் .

இந்தச் சொல் தொல்காப்பியருக்குப் பின் எங்காவது வந்துள்ளதா என்று குடைந்தால் , ஒரே ஒரு தடயம் கிடைத்தது (Lexicon 1982 : 441)! :-

“உரிஞுகன் னடுவோர்” (தணிகைப் புராணம்)

இதனைப் போன்றே , ‘ஞாற்சி’ என்ற சொல்லைத் தேடிப் போனபோது , ஒரே ஒரு இடம் தட்டுப்பட்டது (Lexicon 1982 : 1686) ! :-

“ஞாற்சியிற் றிரண்டவந் நாகம்” (சேது புராணம்)

ஞான்றது – தொங்கியது .

‘ஞாயிறு’ , ‘நாயிறு’ அனது போல , ‘ஞான்றது’ , ‘ஞாண்டது’ ஆகிப் பின் , ‘நாண்டது’ ஆனது ; ‘நாண்டுக்கிட்டுச் செத்தான்’ என்று கூறக் கேட்டிருக்கலாம் !

உரிஞ் , ஞாற்சி – ஆகிய சொற்களை இன்று நாம் அறியோம் ! ஆனால் தொல்காப்பியர் காலத்துச் சொற்களில் ஒன்றிரண்டு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னே வந்த நூற்களில் பதிவாகியுள்ளன என்பதைக் காணும்போது மெய்ச் சிலிர்ப்பு ஏற்படுகிறது !

‘பிற்கால நூற்கள்’ என்று பலர் சிற்றிலக்கியங்களை அசட்டை செய்வதை நான் அறிவேன் ! அது எவ்வளவு தவறு என்பதற்கு நமது இந்த ஆய்வே சான்று !
=======




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Apr 20, 2013 5:02 pm

தொடர் பதிவுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி முனைவர் அவர்களே! சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 20, 2013 5:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (63)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

புள்ளிமயங்கியலில் ஞகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சியைக் குறித்த தொல்காப்பியர் , ஞகரத்தோடு தொடர்புடைய நகர ஈற்றுச் சொற்கள் புணருமாற்றைக் காட்ட வந்து, ‘ “இதுவும் ஞகர ஈற்றுப் புணர்ச்சி” போலத்தான் என்கிறார் ! :-

“நகர இறுதியும் அதனோ ரற்றே” ! (புள்ளிமயங்கியல் 3)

அஃதாவது , நகர ஈற்றுத் தொழிற்பெயர்களும் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது , வலி (வல்லொற்று) மிகும் ; ஞ , ந , ம , வ-க்களை முதலாகாக் கொண்ட சொற்களுடன் புணரும்போது இயல்பாகப் புணரும் ! இரண்டு இடத்தும் உகரச் சாரியை வரும் ! :-

பொருந் + கடிது = பொருநுக் கடிது √
= பொருந் கடிது ×

பொருந் + சிறிது = பொருநுச் சிறிது √
= பொருந் சிறிது ×

பொருந் + தீது = பொருநுத் தீது √
= பொருந் தீது ×

பொருந் + பெரிது = பொருநுப் பெரிது √
= பொருந் பெரிது ×

மேல் நான்கும் , வல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் ஏற்படும் புணர்ச்சியைக் காட்டும் !

இந் நான்கும் அல்வழிப் புணர்ச்சிகள் !

இதே ‘பொருந் ’ , ஞ , ந , ம , வ-க்களை முதல் எழுத்துகளாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது , கீழ்வருமாறு அமையும் ! :-

பொருந் + ஞான்றது = பொருநு ஞான்றது √
= பொருந் ஞான்றது ×

பொருந் + நீண்டது = பொருநு நீண்டது √
= பொருந் நீண்டது ×

பொருந் + மாண்டது = பொருநு மாண்டது √
= பொருந் மாண்டது ×

பொருந் + வலிது = பொருநு வலிது √
= பொருந் வலிது ×

மேல் நான்கும் அல்வழிப் புனர்ச்சிகளே !

ஆனால் ‘பொருந் ’ வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு வரும் ?

தொல்காப்பியர் விடை ! :-

“வேற்றுமைக் குக்கெட வகர நிலையும்” ! (புள்ளிமயங்கியல் 4)

பொருந் + கடுமை = பொருநுக் கடுமை ×
= பொருநக் கடுமை √

பொருந் + சிறுமை = பொருநுச் சிறுமை ×
= பொருநச் சிறுமை √

பொருந் + தீமை = பொருநுத் தீமை ×
= பொருநத் தீமை √

பொருந் +பெருமை = பொருநுப் பெருமை×
= பொருநப் பெருமை √

இவை , வல்லெழுத்துச் சொற்களுடன் புணரும் முறை !

இனி , மெல்லின ,இடையின எழுத்துச் சொற்புணர்ச்சி !:-

பொருந் + ஞாற்சி = பொருநு ஞாற்சி ×
= பொருந ஞாற்சி √

பொருந் + நீட்சி = பொருநு நீட்சி ×
= பொருந நீட்சி √

பொருந் + மாட்சி = பொருநு மாட்சி ×
= பொருந மாட்சி √

பொருந் + வலிமை = பொருநு வலிமை ×
= பொருந வலிமை √

இதே வேற்றுமைப் புணர்ச்சி , கீழ்வருமாறும் அமையலாம் என விளக்குகிறார் இளம்பூரணர் ! :-

பொருந் + குறை = பொருநக் குறை √
= பொருநின் குறை √
( ‘இன்’ சாரியை இடையே வந்ததை நோக்குவீர்!)

உரிஞ் + குறை = உரிஞக் குறை √
= உரிஞின் குறை √
(இங்கும் ‘இன்’ சாரியை வந்தது)

இங்கே ஓர் இலக்கண நுட்பம் !

அஃதாவது , ‘பொருநினது குறை’ என ‘அது’ உருபுக்காக நுழைந்த ‘இன்’ , பின்னர், ‘பொருநின் குறை’ என்று உருபு இல்லாமல் நின்று , உருபோடு தந்த பொருளையே தரும்!
வேறு எளிய எடுத்துக்காட்டால் இதனை விளக்கலாம் !

‘வீட்டினது குறை’ என்பதில் ‘இன்’ சாரியையானது ‘அது’உருபு நுழைவதற்காக வந்தது! பின்பு , ‘அது’ நீங்கினாலும் ‘வீட்டின் குறை’ என நின்று அதே பொருளைத் தருகிறது!

இதைத்தான், இளம்பூரணர் , ‘உருபுக்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி’என்று எழுதுகிறார் !


மேலைப் ‘பொருந்’ என்பது , வேர்றுமைப் புணர்ச்சியில் ,

பொருந் + சென்றன்ன = பொருநுச் சென்றன்ன (அகம்.65) என வரும் என்கிறார் இளம்பூரணர் !

தொல்காப்பியர் காலத்துத் தமிழ் , இளம்பூரணர் காலத்தில் நெகிழ்ந்து நின்றதால் , இளம்பூரணர் பல விதி விலக்குகளைக் கூறி , ‘இப்படியும் வரும்’ என்று தம் உரையில் புதிய இலக்கண நூலை எழுதிவிடுகிறார் ! அப்படி எழுதப்பட்ட ஓரிடத்தைத்தான் மேலே பார்த்தோம் !

இதே வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘வெரிந்’ என்பது , கீழ்வருமாறும் புணரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

“வெரிநென் இறுதி முழுதுங் கெடுவழி
வருமிடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை” (புள்ளிமயங்கியல் 5 )

வெரிந் + குறை = வெரிங் குறை √
வெரிந் + செய்கை = வெரிஞ் செய்கை √
வெரிந் + தலை = வெரிந் தலை √
வெரிந் + புறம் = வெரிம் புறம் √
(இவற்றில் , ங் ,ஞ் , ந் , ம் ஆகிய மெல்லினச் சந்திகள் வந்தமை காண்க.)

இதே நான்கும் , வல்லெழுத்துப் பெற்றும் வரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

“ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே” (புள்ளிமயங்கியல் 6)


வெரிந் + குறை = வெரிங் குறை √
= வெரிக் குறை √

வெரிந் + செய்கை = வெரிஞ் செய்கை √
= வெரிச் செய்கை √

வெரிந் + தலை = வெரிந் தலை √
= வெரித் தலை √

வெரிந் + புறம் = வெரிம் புறம் √
= வெரிப் புறம் √

மேலை எடுத்துக்காட்டுகளில் ,

‘பொருந்’ – முதல் நிலைத் தொழிற் பெயர் ; ‘பொருதல்’ எனும் பொருள் தருவது .

‘உரிஞ்’ - முதல் நிலைத் தொழிற் பெயர் ; ‘உரிஞ்சுதல்’ எனும் பொருள் தருவது .

‘வெரிந்’ – பெயர்ச் சொல் ; ‘முதுகு’ எனும் பொருள்கொண்டது .

======




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 21, 2013 12:59 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (64)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

ஞகர , நகர, ஈர்றுச் சொற் புணர்ச்சிகள் சிலவற்றை விளக்கிவிட்டு, ணகர ஈற்றுச் சொற் புணர்ச்சிகள் சிலவற்றை ஓதுகிறார் தொல்காப்பியர் !:-

“ணகார இறுதி வல்லெழுத் தியையின்
டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே” (புள்ளிமயங்கியல் 7)

அஃதாவது , வேற்றுமைப் பொருளில் (Declentional meaning) கீழ்வருமாறு புணர்ச்சி நடக்கும் ! :-

மண் + குடம் = மண் குடம் ×
மண் + குடம் = மட்குடம் √

மண் + சாடி = மண் சாடி ×
மண் + சாடி = மட் சாடி √

மண் + தூதை = மண் தூதை ×
மண் + தூதை = மட் தூதை √
(தூதை – சிறு மண் பாத்திரம்)

மண் + பானை = மண் பானை ×
மண் + பானை = மட் பானை √

மேற் புணர்ச்சிகளில் , வல்லெழுத்துகளை (Hard consonants) முதலாகக் கொண்ட சொற்கள் மட்டும் வந்து புணர்ந்துள்ளதை நோக்கலாம் !

சரி ! வேற்றுமைப் புணர்ச்சியின் (Casual combination) தன்மையை மேலே பார்த்தோம் ; அல்வழிப் புணர்ச்சியில் (Incasual combination) ?

மண் + கடிது = மண் கடிது √
மண் + கடிது = மட் கடிது ×

மண் + தீது = மண் தீது √
மண் + தீது = மட் தீது ×

- என இயல்பாக வரும் !

இதற்கு விதி விலக்காக , ‘ஆண்’ , ‘பெண்’ ஆகிய சொற்கள் , வேற்றுமைப் பொருளில் இயல்பாகப் புணரும் முறையை -

“ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை” (புள்ளிமயங்கியல் 8)

என்கிறார் !

அஃதாவது ,

ஆண் + கை = ஆட்கை ×
ஆண் + கை = ஆண்கை √

பெண் + கை = பெட்கை ×
பெண் + கை = பெண்கை √

ஆண் + செவி = ஆட்செவி ×
ஆண் + செவி = ஆண்செவி √

ஆண் + தலை = ஆண்றலை ×
ஆண் + தலை = ஆண்தலை √

பெண் + தலை = பெண்றலை ×
பெண் + தலை = பெண்தலை √

ஆண் + புறம் = ஆட்புறம் ×
ஆண் + புறம் = ஆண்புறம் √

இங்கேதான் சிக்கலே !

‘ண்’ ஈற்றுச் சொற்கள் , வேற்றுமையில் , ‘ட்’ ஆகும் என்று முதலில் தொல்காப்பியர் கூறியபோது , ‘சரி ! இப்படித்தான் எல்லாச் சொற்களும் புணரும் !’ என்று நாம் நினைக்கத் தொடங்குவோம் ! அந்த நினைப்பு சிந்தையில் ஏறுமுன் , “எல்லாச் சொற்களும் அப்படி இல்லை ! இதோ விதிவிலக்கைக் காட்டுகிறேன் !” என்று வேறு நூற்பாவைத் தூக்கிப் போடுகிறார் தொல்காப்பியர் ! விதியும் தொலைந்தது ! விதி விலக்கும் தொலைந்தது !

பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட மொழி தமிழ் மொழியாதலால் , பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததுதானே ?

=======




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 22, 2013 4:44 pm

மிகவும் பயனுள்ள இலக்கணப் பதிவு. நன்றி முனைவர். செளந்திர பாண்டியன் அவர்களே. என்னைப்போன்று அரைகுறையாகத் தமிழ் படித்தவர்களுக்கு புரியும்படியாக எளிய நடைமுறையில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து வருகிறேன். :வணக்கம்:

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 22, 2013 8:44 pm



தொடத் தொடத் தொல்காப்பியம் (65)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

புள்ளி மயங்கியலில் ‘ண்’ ஈற்றுச் சொற்கள் சிலவற்றின் புணர்ச்சியைக் காட்டிய தொல்காப்பியர் மேலும் சில ணகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சியை விவரிக்கிறார் !:-

“ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே” ! (புள்ளி மயங்கியல் 9)

அஃதாவது , ‘ஆண்’ என்பது ஆண்மகனைக் குறிக்காமல் ‘ஆண்’ என்றொரு வகை மரத்தைக் குறித்தால் என்ன செய்வது ?

இப்படிச் செய்வது ! :-

ஆண் + கோடு = ஆட் கோடு × ஆண் + கோடு = ஆண் கோடு ×
ஆண் + கோடு = ஆணங் கோடு √
ஆணங் கோடு = ஆண் + அம் + கோடு
அம் – சாரியை (Euphonic extention)

ஆண் + செதிள் = ஆஞ் செதிள் × ஆண் + செதிள் = ஆண் செதிள் × ஆண் + செதிள் = ஆணஞ் செதிள் √

ஆண் + தோல் = ஆண் டோல் × ஆண் + தோல் = ஆண் தோல் ×
ஆண் + தோல் = ஆணந் தோல் √

ஆண் + பூ = ஆம்பூ ×
ஆண் + பூ = ஆண்பூ ×
ஆண் + பூ = ஆணம்பூ √



மேற் புணர்ச்சிகள் யாவும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

மேல் எடுத்துக்காட்டுகளில் ‘அம்’ எனும் சாரியை வந்து புணர்ந்ததை நோக்குவீர் !

‘சாரியை’ என்பது தமிழர் நாவின் சுழற்சி முறையைக் காட்டுவது!

ஒருவரின் மனப் போக்குக்குத் தக்கவாறுதான் நாக்கு சுழலும் !

தமிழ் இனத்தாரின் மனப் போக்கிற்கு ஏற்றவாறு அவர்தம் நா சுழலும் விதத்தைப் பொறுத்துத்தான் சாரியைகள் சொற்களிடையே புகுகின்றன!

இலக்கணம் என்பது , இவ்வாறு , மானிடவியல் , உடற்கூற்று இயல்புகளை உள்ளடக்கியது என்பதை நாம் அறியலாம் !

மேலை நூற்பாவினைத் தொல்காப்பியர் ‘இயற்று’ எனக் குறிப்பு வினைமுற்றுப் போட்டு முடித்திருக்கலாம் !; ஆனால் , ‘இயற்றே’ எனும் ஏகார அசைநிலை போட்டு முடித்தார் !

ஏன் ?

ஏனெனில் , தொல்காப்பியர் அவர்தம் மாணவர்களின் மனப்பாடத்திற்காக எழுதியதே தொல்காப்பியம் ! ஏகாரம் போட்டுப் படித்தால்தான் மனப்பாடம் ஏறும் ! இதுதான் இரகசியம் !

தொல்காப்பியர் குறித்த ‘ஆண்’ மரம் , ‘சே’ எனும் மரம் எனப்படுகிறது . இம் மரத்தின் ஆங்கிலப்பெயர் – ‘Marking – nut tree ’; தாவரவியல் பெயர் (Botanical name) – ‘Semecarpus anacardium ’; மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘ஆண்’ எனப்பட்ட மரம் , ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘சே’ எனப்பட்டுத் , தற்போது ‘எரிமுகி மரம்’ என்று வழங்குகிறது !இந்த மரத்திலிருந்து எடுத்த மையைக்கொண்டுதான் சலவையாளர்கள் ஆடைக்கு அடையாளம் இட்டனராம் ! இந்த மரம் சதுரகிரி மலையில் இருப்பதாக எழுதியுள்ளார்கள் ! இலக்கண வரலாற்றோடு தாவர வரலாறும் கொடுக்கைப் பிடித்துக்கொண்டு வருகிறது பார்த்தீர்களா?


[You must be registered and logged in to see this link.]
ஆண் மரம் இதுவே ! Courtesy- opendata.keystone-foundation.org

‘அரை’மரம் , அரச மரமாக இருக்கலாம் என்பர் .

அடுத்த நூற்பாவில் , ஆகாயம் என்ற பொருளைத்தரும் ‘விண்’ எனும் இன்னொரு ணகர ஈற்றுச் சொல்லின் புணர்ச்சியை விளக்குகிறார் !

“விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின்
உண்மையும் உரித்தே அத்தென் சாரியை
செய்யுள் மருங்கில் தொழில்வரு காலை” ! (புள்ளி மயங்கியல் 10)

இதன்படி ,
விண் + அத்து + கொட்கும் = விண்ணத்துக் கொட்கும்
(அத்துச் சாரியை வந்தது)

விண் + குத்து = விண் குத்து
(அத்துச் சாரியை வரவில்லை)


மேல் நூற்பாவில் , ‘உண்மையும்’ என்று எதிர்மறை உம்மை போட்டுத் தொல்காப்பியர் எழுதியதால் , ‘அத்து’ வந்தும் புணரும் , வராதும் புணரும் என்பது கருத்து ! இளம்பூரணர் இரண்டிற்கும் உதாரணம் தந்ததை மேலே கண்டோம் !

மேலை இளம்பூரணரின் இரு எடுத்துக்காட்டுகளில் ‘கொட்கும்’ ( = சுழலும்) , ‘குத்து’ ஆகியன வினைச் சொற்கள் ! தொல்காப்பியர் ‘தொழில்’ என்று நூற்பாவில் கூறியது வினையையே ! தொல்கப்பியர் கூறியதற்கு ஏற்பத்தான் இளம்பூரணரும் வினைச் சொற்களைத் தேர்ந்தெடுத்து உதாரணம் தந்துள்ளதை நோக்கலாம் !

தொல்காப்பிய நூற்பாவில் , ‘காயப் பெயர்’ என வந்துள்ளதல்லவா ? ‘காயம்’ என்று அவர் குறித்ததை இன்ரு நாம் ‘ஆகாயம்’ (Sky) என்கிறோம் !

‘ஆகாயம்’ – தமிழ்ச் சொல்தான் என்பதற்கு இந் நூற்பாவே சான்று ! ‘காயம்’ தமிழாகும்போது , ‘ஆகாயம்’மட்டும் வேற்றுமொழிச் சொல்லாகிவிடுமா ? ‘ஆ’காரம் தமிழ் எழுத்துதானே ?

====[url][/url][img][/img]



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 24, 2013 8:29 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (66)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

ணகர ஈற்றுச் சொற்கள் புணர்வதை முன்பு பார்த்தோம் !

தொல்காப்பியர் மேலும் தொடர்கிறார் !:-

“தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல” (புள்ளிமயங்கியல் 11)

ணகர ஈற்றுத் தொழிற்பெயர்கள் , ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் போல , அல்வழியிலும் வேற்றுமையிலும் , உகரச் சாரியை (Empty morph U)பெற்றுப் புணர்ச்சி கொள்ளும் ! :-

மண் + கடிது = மண்ணுக் கடிது (அல்வழிப் புணர்ச்சி)
மண் + கடுமை = மண்ணுக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + சிறிது = மண்ணுச் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
மண் + சிறுமை = மண்ணுச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + ஞான்றது = மண்ணு ஞான்ற து (அல்வழிப் புணர்ச்சி)
மண் + ஞாற்சி = மண்ணு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + வலிது = மண்ணு வலிது (அல்வழிப் புணர்ச்சி)
மண் + வலிமை = மண்ணு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கே வந்த ‘மண்’ முதனிலைத் தொழிற்பெயர் (Verbal noun base)!
மண்ணுதல் – கழுவுதல்
ஆடை கழுவுபவன் – மண்ணான்; இதுவே ‘வண்ணான்’ ஆனது !

தொழிற்பெயர் அல்லாது மண்ணைக் (Soil) குறிக்கும் சொல்லும் , அது போன்ற வேறு சில ணகர ஈற்றுச் சொற்களும் வல்லெழுத்துச் சந்தியும் , உகரச் சாரியையும் பெறும் என்கிறார் இளம்பூரணர் ! : -

மண் + சோறு = மண்ணுச் சோறு (வேற்றுமைப் புணர்ச்சி)
(மண்தரையில் சோற்றைப் போட்டுச்
சாப்பிடுவது)

வெண் + கரை = வெண்ணுக் கரை (வேற்றுமைப் புணர்ச்சி)
(வெண் - வெண்ணாறு)

எண் + பாறு = எண்ணுப் பாறு (வேற்றுமைப் புணர்ச்சி)
(எள் மூட்டைகள் ஏற்றின ஓடம் அல்லது கப்பல்)

ஆனால் , ‘ண்’ஈற்றில் முடியும் சாதிப் பெயர்களில் எந்த மாற்றமும் , புணர்ச்சியில் இராது என்கிறார் தொல்காப்பியர் ! :-

“கிளைப்பெயர் எல்லாம் கொளத்திரி பிலவே” ! (புள்ளிமயங்கியல் 12)

இதன்படி,

உமண் + குடி = உமணக் குடி ×
உமண் + குடி = உமண் குடி √ (உமணர்கள் - உப்பு விற்றோர்)

உமண் + சேரி = உமணச் சேரி ×
உமண் + சேரி = உமண் சேரி √

உமண் + தோட்டம் = உமணத் தோட்டம் ×
உமண் +தோட்டம் = உமண் தோட்டம் √

உமண் + பாடி = உமணப்பாடி ×
உமண் + பாடி = உமண் பாடி √

இந் நூற்பா உரையில் இளம்பூரணர் சில புதுப் புணர்ச்சிகளைக் காட்டுகிறார் ! :-

அங்கண் + கொண்டான் = அங்கண் கொண்டான் ×
அங்கண் + கொண்டான் = அங்கட் கொண்டான் √

உங்கண் + கொண்டன் = உங்கண் கொண்டான் ×
உங்கண் + கொண்டான் = உங்கட் கொண்டான் √

ஆங்கண் + கொண்டான் = ஆங்கண் கொண்டான் ×
ஆங்கண் + கொண்டான் = ஆங்கட் கொண்டான் √

ஈங்கண் + கொண்டான் = ஈங்கண் கொண்டான் ×
ஈங்கண் + கொண்டான் = ஈங்கட் கொண்டான் √

அவண் + கொண்டான் = அவண் கொண்டான் ×
அவண் + கொண்டான் = அவட் கொண்டான் √ (அவண் - அங்கே)

இவண் + கொண்டான் = இவண் கொண்டான் ×
இவண் + கொண்டா = இவட் கொண்டான்√ (இவண் - இங்கே)


உவண் + கொண்டான் = உவண் கொண்டான் ×
உவண் + கொண்டான் = உவட் கொண்டான் √ (உவண் – அங்குமில்லாது இங்குமில்லாது நடுவிடத்தில்)

மண் + கடி = மட் கடி ×
மண் + கடி = மண்ணக் கடி √ (மண் + அக்கு + கடி ; கடி – மணம் ; அக்கு – சாரியை)

எண் + நோலை = எண்ணோலை ×
எண் + நோலை = எண்ண நோலை √ (எண்ண நோலை – எள்ளுருண்டை ; எள்+அம்+நோலை; ‘ள்’, ‘ண்’ஆகி, ‘ண்ண
’ என இரட்டித்து, நகரம் வர ‘ம்’ கெட்டது.)

பரண் + கால் = பரட்கால் ×
பரண் + கால் = பரண்கால் √

கவண் + கால் = கவணக் கால் ×
கவண் + கால் = கவண் கால் √

‘எண்’ எனும் உணவுப் பெயர் (எள்), அல்வழிப் புணர்ச்சியில் , வேற்றுமைப் புணர்ச்சி போலவும் புணரலாம் என்று ஓர் விதிவிலக்கை அடுத்துக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

“வேற்றுமை அல்வழி எண்ணென் உணவுப்பெயர்
வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே” ! (புள்ளிமயங்கியல் 13)

இதன்படி ,

எண் + கடிது = எண் கடிது √
எண் + கடிது = எட் கடிது √

எண் + சிறிது = எண் சிறிது √
எண் + சிறிது = எட் சிறிது √

எண் + தீது = எண் தீது √
எண் + தீது = எட் தீது √

எண் + பெரிது = எண் பெரிது √
எண் + பெரிது = எட் பெரிது √ என வரும் !

இறுதியாக , ‘முரண்’ எனும் தொழிற்பெயர் (Verbal noun), அல்வழியிலும் வேற்றுமையிலும் புணரும் வழிகளைக் கூறுகிறார் !: -

“முரணென் தொழிற்பெயர் முதலியல் நிலையும்” ! (புள்ளிமயங்கியல் 14)

இதன்படி ,

முரண் + கடிது = முரண் கடிது (அல்வழிப் புணர்ச்சி)
முரண் + கடுமை = முரட் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

முரண் + சிறிது = முரண் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
முரண் + சிறுமை = முரட் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

முரண் + தீது = முரண் தீது (அல்வழிப் புணர்ச்சி)
முரண் + தீமை + முரட் தீ மை (வேற்றுமைப் புணர்ச்சி) என வரும் !

ஆனால் , இளம்பூரணர் காலத்தில் ,

முரண் + கடுமை = முரண் கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
முரண் + கடுமை = முரட் கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

அரண் + கடுமை = அரண் கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
அரண் + கடுமை = அரட் கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

என்றாங்கு இரு வழிகளிலும் புணரலாம் என்று , சில சொற்களைப் பொறுத்தவரை , இலக்கணப் புலவர்கள் ஒத்துக்கொண்டனர் ! “

‘இதனைத் தொழிற்பெயரெல்லாம் ’ என்பதன் பின் வையாத முறையன்றிக் கூறினான் , ‘முரண் கடுமை’ என்னும் இயல்பும் , ‘அரண் கடுமை’ , ‘அரட் கடுமை’ என்னும் உறழ்ச்சியும் கொள்க ” என்ற அவரது உரையால் அறிகிறோம் !

இப்படியெல்லாம் கிளைத்துச் செழித்த தமிழின் வியப்பூட்டும் வீச்சுகளை நாம் அரியவரும்போது , வியப்பு ! வியப்பு !

மரபுவழி இலக்கணத்தில் இத்தகைய , ‘உறழ்ச்சி’ ( ‘இப்படியும் வரும் , அப்படியும் வரும்’ என்பது)இருப்பதால் , இதனைக் களைய மொழியியலார் (Linguists) , ஆங்கில மரபை ஒட்டிப் புதுப் பாதை வகுக்கத் தலைப்பட்டனர் ! ஆனால் , அதில் ஒழுங்கு கிடைத்ததா?
இல்லையே !
=========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 10 of 84 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 47 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக