புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 20 of 84 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 52 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 02, 2013 12:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (136)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘உண்டு’ என்ற சொல்லை வைத்துத் தொல்காப்பியர் நம்மை  ‘உண்டு இல்லை’என்றாக்கியுள்ளார் !

உண்டு -  சாப்பிட்டு (வினை எச்சம்) (Verbal participle)
உண்டு -  உள்ளது (குறிப்பு வினைமுற்று) (Appellative finite verb)

கடையில் நூல் உண்டு – விற்பனைக்கான நூல் நம் காணுமாறு இருக்கிறது .

உழைப்புக்கு உயர்வு  உண்டு – உழைப்புக்கான உயர்வு கிட்டும் என்ற உண்மை நிலவுகிறது .

‘உண்டு’ என்பதற்கான பொருள் நுணுக்கத்தைச் சற்று நிறுத்துவோம் !

தொல்காப்பியத்தின்படி(நூற்பாவைப் பிறகு பார்ப்போம்),

உண்டு + பொருள் = உண்டு பொருள் √ (அல்வழிப் புணர்ச்சி)

உண்டு + பொருள் = உள்பொருள் √ (அல்வழிப் புணர்ச்சி)

இந்த ‘உள்பொருள் ’ என்பதற்கு , ‘உளதாகிய பொருள்’ எனப் பொருள் சொன்னால் , அப்போது பண்புத் தொகை   (Qualitative compound)ஆகும் !அங்கே , ‘உள்பொருள்’ என்பதை ஒருசொல் (single word) போல , இடைவெளி இல்லாமல் உச்சரிக்கவேண்டும் !  இந்த உச்சரிப்பு நுணுக்கத்தைச் சொல்பவர் – இளம்பூரணர் !

இடைவெளியோடு ‘உள் - பொருள்’ என்று உச்சரிப்பீர்களானால் , ‘உள்’ என்பது ‘உண்டு’ என்ற பொருள் கிடைக்கும் ! அஃதாவது , சுட்டும் பொருளின் உண்மைத் தன்மை புலனாகும் !

உண்மைத் தன்மை என்றால் ?

தெய்வம் உண்டு ! – இதில் ‘உண்டு’ என்பதற்கு ‘உண்மைத் தன்மை’ என்ற பொருள் உளது ! ‘தெய்வம் உண்மை’ என்பது கருத்து ! (நீங்கள் நாத்திகராக இருந்தால் ‘ஒரு பேச்சுக்காக’என்று எடுத்துக்கொள்ளுங்கள் !)

‘களிறு உண்டு’ – களிறு என்ற விலங்கிருப்பது உண்மை !  (அது நேரிலே நின்றுகொண்டிருக்க வேண்டுமென்பதில்லை !)

‘ப’வை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போதுதான் , ‘உண்டு’ , ‘உள்’ என மாறுகிறது !

வேறு புணர்ச்சிகளில் ‘உண்டு’ , ‘உள்’ ஆவதில்லை ! :-

உண்டு + காணம் = உண்டு காணம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்டு + சாக்காடு = உண்டு சாக்காடு √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்டு + தாமரை = உண்டு தாமரை √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்டு + ஞாண் = உண்டு ஞாண் √√(அல்வழிப் புணர்ச்சி)
உண்டு + நூல் = உண்டு நூல் √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்டு + மணி = உண்டு மணி √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்டு + யாழ் = உண்டி யாழ் √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்டு + அடை = உண்டடை √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்டு + ஆடை = உண்டாடை √ (அல்வழிப் புணர்ச்சி)

காணம் – பொன் .
(உண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்).
‘உண்டு காணம்’  - பயனிலைத் தொடர் (Predicative sentence).
அஃதாவது , ‘உண்டு’ , பயனிலையாகத் (Predicate) தொடரில் முதற்கண் நிற்கிறது ! ; ‘காணம்’ ,எழுவாய் (Subject); ‘உண்டு’ எனும் குறிப்பு வினைமுற்று ,பயனிலையாகத் தொடரில் நிற்கிறது !

இப்போது தொல்காப்பிய நூற்பாவைக் காண்போம் ! :-

“உண்டென் கிளவி யுண்மை செப்பின்
முந்தை யிறுதி மெய்யொடுங் கெடுதலும்
மேனிலை யொற்றே ளகார மாதலும்
ஆமுறை யிரண்டு முரிமையு முடைத்தே” (குற்றியலு. 25)

’உண்டென் கிளவி’ – ‘உண்டு’ எனும் சொல் ,
‘உண்மை செப்பின்’ – உண்மைத் தன்மை கூறினால் ; அஃதாவது , எப்போதும் நிலைபெற்றிருக்கும் அதன் தன்மையைக் கூறினால் ,
‘முந்தை இறுதி’ – ‘உண்டு’ என்பதிலுள்ள கடைசி ‘உ’ ,
‘மெய்யொடுங் கெடுதல்’ – உகரம் , ‘ட்’ என்ற மெய்யோடு சேர்ந்து கெடுதலும் ; அஃதாவது , ‘டு’கெடுதலும் ,
‘மேனிலை ஒற்றே’ – ‘டு’வுக்கு முன் (இடப்புறம்) உள்ள ‘ண்’,
‘ளகர மாதலும்’ – ‘ண்’ என்ற எழுத்து ‘ள்’ ஆதலும் ,
‘ஆ முறை இரண்டும்’ -  ‘உண்டு’ என்பது மேலே விவரித்தபடி , ‘உள்’ ஆதல் ஒரு முடிவு ; ‘உண்டு’ என மாறாமல் அப்படியே நிற்பது இரண்டாம் முறை ; இவ்விரண்டு முறைகளும் ,
‘உரிமையும் உடைத்தே’ – உரித்தாகும் ,
‘வல்லெழுத்து வரூஉம் காலையான’  - புணர்வதற்கு வரும் சொற்களின் முதல் எழுத்துகள் வல்லின எழுத்துகளாக இருக்கும்போது !

- இந்த நம் உரையில் , ‘ப’வை முதல் எழுத்தாகக் கொண்ட சொல் பற்றி ஒரு வரிகூட இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும் !
‘ப’வை முதலாகக் கொண்ட சொற்களோடு , ‘உண்டு’ புணரும்போது , ‘உள்’ ஆகும் என்று தெளிவு தந்தவர் இளம்பூரணர்தான் !
உரையாசிரியர்கள் இல்லையாயின் தொல்காப்பியத்தில் நாம் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது !
ஏனெனில் , மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற சுருக்கச் சூத்திரங்களே தொல்காப்பியம் ! அதில் விளக்கத்தை எதிர்பார்க்க இயலாது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 05, 2013 7:58 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (137)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

கிழக்கு – வன்றொடர்க் குற்றியலுகரம் .
மேற்கு – வன்றொடர்க் குற்றியலுகரம் .
தெற்கு – வன்றொடர்க் குற்றியலுகரம் .
வடக்கு – வன்றொடர்க் குற்றியலுகரம் .

இவ்வாறு திசைகள் குற்றியலுகரச் சொற்களாக இருப்பதால் தொல்காப்பியர் இவற்றின் புணர்ச்சிகளைத் தெரிவிக்க முனைகிறார் !

கிழக்கையும் மேற்கையும் சேர்த்துக் குறிப்பிடக் , ‘கிழக்கும் மேற்கும்’ என்று நாம் கூறுவோம் !
ஆனால் தொல்காப்பியர் , ‘கிழக்கே மேற்கு’ என்று ஒரு புது வடிவத்தைக் காட்டுகிறார் ! :-

“இருதிசை புணரின் ஏயிடை வருமே” (குற்றியலு. 26)

இதன்படி ,

கிழக்கு + மேற்கு = கிழக்கே மேற்கு (ஏ – சாரியை ) (அல்வழிப் புணர்ச்சி)
தெற்கு + வடக்கு = தெற்கே வடக்கு (ஏ – சாரியை ) (அல்வழிப் புணர்ச்சி)

‘கிழக்கே மேற்கு’ – என்றால் என்ன பொருள் ?

‘கிழக்கும் மேற்கும்’ என்பது பொருள் !

எனவே , ‘கிழக்கே மேற்கு’ – உம்மைத் தொகை (Ellipsis of the conjuctive particle உம்)!

‘ஏ யிடை’ என்பதையும் கவனிக்க !
ஏ + இடை = ஏவிடை ×
ஏ + இடை = ஏயிடை √  (ய் – உடம்படு மெய், Onglide)

மொழியியலில் வருமாறு குறிப்பர் ! :-
ø  →    ய் / ஏ – உயிர் (ø  - சூனியத்தைக் குறிக்கப் பயன்படும் அடையாளம்; வெற்றிடத்திலிருந்து ‘ய்’ உருவாகிறது, எப்போதென்றால் ‘ஏ’ முன் உயிர் வரும்போது என்று நிரலே இதனைப் படிக்கவேண்டும். )

  ஆமாம் ! ‘வட கிழக்கு’ , ‘தென் மேற்கு’ என்றெல்லாம் கூறுவோமே , அதுபற்றித் தொல்காப்பியர் கூறியுள்ளாரா?

அடுத்த நூற்பா அது பற்றியதுதான் ! :-

“திரிபுவேறு கிளப்பி னொற்று மிறுதியும்
கெடுதல் வேண்டு மென்மனார் புலவர்
ஒற்றுமெய் திரிந்து னகார மாகும்
தெற்கொடு புணருங் காலை யான ”   (குற்றியலு. 27)

‘திரிபு வேறு கிளப்பின்’ – முன் நூற்பாவில் கிழக்கு +மேற்கு, தெற்கு+ வடக்கு எனப்   புணரவிட்டது போலப் புணர்க்காமல் , வடக்கு+ கிழக்கு , தெற்கு+ கிழக்கு என மாற்றிப் (திரிபு) புணரவிட்டால் ,

‘ஒற்றும் இறுதியும் கெடுதல் வேண்டும்’ – ‘வடக்கு’ , ‘கிழக்கு’ ஆகிய திசைச் சொற்களின் ஈறுகளாகிய ‘க்’ , ‘கு’ ஆகியவை கெடவேண்டும் !

‘ஒற்றுமெய் திரிந்து னகார மாகும்’ -  ‘ற்’ திரிந்து , ‘ன்’ஆகும் !

‘தெற்கொடு புணரும் காலையான’ -  ‘தெற்கு’ என்ற சொல்லோடு புணரும் போது !

இவ் விளக்கத்திற்குக் கீழே வருவன சான்றுகள் ! :-

வடக்கு + கிழக்கு = வட கிழக்கு (க்கு - கெட்டன) (வேற்றுமைப் புணர்ச்சி)
வடக்கு + மேற்கு = வட மேற்கு (க்கு - கெட்டன) (வேற்றுமைப் புணர்ச்சி)

தெற்கு + கிழக்கு = தென் கிழக்கு (ற் → ன் ஆனது; கு- கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)

தெற்கு + மேற்கு = தென் மேற்கு (ற் → ன் ஆனது; கு- கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கே இளம்பூரணர் நமக்காக ஒரு சிறப்புக் குறிப்பைத்  தருகிறார் ! :-

“திசைப் பெயரோடு பொருட் பெயருக்கும் இவ்விதி கொள்க ; வட கடல் , வட வரை என வரும்” !

இதன்படி ,

வடக்கு + கடல் = வட கடல் (க்,கு - கெட்டன) (வேற்றுமைப் புணர்ச்சி)
வடக்கு + வரை = வட வரை (க்,கு - கெட்டன) (வேற்றுமைப் புணர்ச்சி)

    இவற்றைப் போலக் கீழ்வரும் வேறு எடுத்துக்காட்டுகளையும் நாம் தரலாம் ! :-

வடக்கு + மாநிலம் = வட மாநிலம் (க்,கு - கெட்டன) (வேற்றுமைப் புணர்ச்சி)
வடக்கு + நெறி = வட நெறி (க்,கு - கெட்டன) (வேற்றுமைப் புணர்ச்சி)
தெற்கு + பொதிகை = தென் பொதிகை (ற் → ன் ஆனது; கு- கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)
தெற்கு + பழனி = தென் பழனி (ற் → ன் ஆனது; கு- கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)

மேல் ஆறு எடுத்துக் காட்டுகளில் , ‘கிழக்கு’ , ‘மேற்கு’ வரவில்லை என்பதைக் கவனியுங்கள் !
ஏன் ?
இதற்குத் தனி விதி கூறுகிறார் இளம்பூரணர் ! :-

“திசைப் பெயரோடு பொருட்பெயர் புணருமிடத்து இறுதியும் முதலும் திரிந்து முடிவன வெல்லாம் கொள்க ; கீழ் கரை , மேல் கூரை என வரும் !”.

இதன்படி ,

கிழக்கு + கரை = கீழ்க் கரை ×
கிழக்கு + கரை = கீழ் கரை √ (கி →கீ ஆனது; ழ → ழ் ஆனது ;க் , கு – கெட்டன  ) (வேற்றுமைப் புணர்ச்சி)


மேற்கு + கூரை = மேற் கூரை ×
மேற்கு + கூரை = மேல் கூரை √  (ற் → ல் ஆனது ; கு - கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)

மேல் உதாரணங்களில்  ‘கீழ்க் கரை’ ,‘மேற் கூரை’ ,என ஏன் வரக்கூடாது?

நல்ல கேள்வி !

‘கீழ்க் கரை’ எனில் , ‘கீழே உள்ள கரை’ என்றாகிவிடும் ! ‘கிழக்கு’ என்ற பொருள் இருக்காது !
இதைப்போலவே , ‘மேற் கரை’ எனில் , ‘மேலே உள்ள கரை’ என்றாகிவிடும் ! ‘மேற்கு’ என்ற பொருள் இருக்காது !

‘கீழ் கரை’யில் இவ்விதக் குழப்பம் சிறிது இருந்ததால்தான் , அகரச் சாரியை கொடுத்துக் ‘கீழக் கரை’ ஆக்கியுள்ளனர் ! அதன் பிறகுதான் ‘கீழக் கரை பாய்’ நமது நண்பரானார் !

கீழ் கரை , மேல் கரை – பழைய வழக்குகள் (Old Tamil Usages) !
கிழக்குக் கரை ,மேற்குக் கரை – புதிய வழக்குகள் (New Tamil Usages)!

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 05, 2013 10:37 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (138)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் நாம் அடுத்துக் காணவிருக்கும் சொல் – பத்து !

பத்து – வன்றொடர்க் குற்றியலுகரம் .

  இஃது , ‘ஒன்று’ முதலிய சொற்களுடன் (எண்ணுப் பெயர்களுடன்) எப்படிப் புணரும்?

பத்து + ஒன்று = பதினொன்று (து – கெட்டது; இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + மூன்று = பதின் மூன்று (து – கெட்டது; இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + நான்கு = பதினான்கு (து – கெட்டது; இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + ஐந்து = பதினைந்து (து – கெட்டது; இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + ஆறு = பதினாறு (து – கெட்டது; இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + ஏழு = பதினேழு (து – கெட்டது; இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + எட்டு = பதினெட்டு (து – கெட்டது; இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

இப் பட்டியலில் ‘இரண்டு’ இடம்பெறவில்லை என்பதைக் கவனியுங்கள் ! இதற்குத் தனி விதி கூறியுள்ளார் தொல்காப்பியர் ; அதனைப் பிறகு பார்ப்போம் !

இங்கு இளம்பூரணர் அரிய இரு பழைய புணர்ச்சிகளை நமக்கு அறிமுகம் செய்கிறார் ! – “இன் பெற்றவழி பதிற்றொன்று , பதிற்றிரண்டு என்றாற்போல முடிபுகள் வேறுபட வருவனவெல்லாம் கொள்க ! ”.
இதன்படி –
பத்து + ஒன்று = பதினொன்று √ (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
= பதிற் றொன்று √ (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

பத்து + இரண்டு = பதிற் றிரண்டு √ (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
அஃதாவது , முதலில்,
‘பத்து + ஒன்று = பதின் + ஒன்று ’ ஆகிறது (இன் - சாரியை); பின்பு ,
‘பதின் + ஒன்று = பதிற் றொன்று ’ ஆகிறது ! பொதுவாக ‘ன்’ → ‘ற்’ ஆவது தமிழ்ப் புணர்ச்சி இலக்கணத்திற்கு உட்பட்டதுதானே?

ஆனால் , ‘பதிற்றொன்று’ , ‘பதிற்றிரண்டு’ ஆகிய பழைய  புணர்ச்சி விதிகள் (Old Tamil Marphophonemic rules ) செல்வாக்குப் பெறாமல் மறைந்தன !

 ‘இன்’ சாரியை மேலே வந்ததல்லவா?

 அது ‘பத்து’ என்பதோடு மட்டுமல்ல , வேறு சில எண்களோடும் வரலாம் என்கிறார் இளம்பூரணர் ! – “பிற மொழியும் அவ் ‘இன்’ பேறு கொள்க ; ஒன்பதின் பால் , ஒன்பதின் கூறு என வரும் . ”

  இதற்கிணங்க ,
ஒன்பது + பால் = ஒன்பதின் பால் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + கூறு = ஒன்பதின் கூறு (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

பால் – பகுதி ; பிரிவு .
ஒன்பதின் பால் – ஒன்பது பகுதிகள் .

தொடக்கத்தில் ‘இரண்டு’ என்பதன் புணர்ச்சியைப்  ‘பிறகு பார்ப்போம்’ என்றோமல்லவா?
இப்போது பார்க்கலாம் ! :-

“ பத்தனொற்  றுக்கெட  னகார மிரட்டல்
 ஒத்த தென்ப விரண்டுவரு  காலை”  (குற்றியலு . 29)

எடுத்துக்காட்டு –

பத்து + இரண்டு = பதினிரண்டு ×
= பன்னிரண்டு √  (த், து – கெட்டன ; இன் –சாரியை; ன்- இரட்டித்தது)
இதனை , வருமாறு விளக்கலாம் –
பத்து + இரண்டு = பதின் + இரண்டு (து - கெட்டு, இன் – சாரியை  வந்தது)
பதின் + இரண்டு = பன் + இரண்டு (தி - கெட்டது)
பன் + இரண்டு = பன்னிரண்டு (ன் - இரட்டித்தது)

‘பத்து’ , ‘இரண்டு’ என்பதோடு  புணரும்போது மட்டும் ஏன் இரட்டிக்கிறது ? இதன் இரகசியம் யாது ?
ஒலிப்பு முறைதான் இரகசியம் !
‘பதின் ’ என்பதன் ஈறான ‘ன்’னை( Apical alveolar nasal) உச்சரித்தபின் , ஒ, மூ, நா, ஐ, ஆ,ஏ,எ ஆகிய ஒலிகளை உச்சரிப்பதில் சிக்கல் இல்லை ! ஆனால் ‘ன்’னை உச்சரித்துவிட்டு ‘இ’யை உச்சரித்துப் பாருங்கள் ; இடர்ப்பாடு தெளிவாகும் ! இந்த இடர்ப்பாட்டைக் களையத்தான் ‘பதின்’ என்பதன் நடுவே உள்ள ‘தி’யை  நீக்கிவிட்டுப், ‘பன்’ ஆக்கிப், பிறகு இரட்டித்துப் ‘பன்னி’ஆகிக்கொள்கிறது ;உச்சரிப்பு எளிமையாகிறது !

‘பன்னிரண்டு’ ஆனதன் இரகசியம் இதுவே !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 10:09 am

பன்னிரண்டின் ரகசியம் விளக்கிய விதம் அருமை ஐயா தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 20 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 06, 2013 7:34 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (139)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘பத்து’ என்ற வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்லின் புணர்ச்சிகளைப் பார்த்துவருகிறோம் !

‘ஆயிரம்’ என்ற சொல்லோடு ‘பத்து’ப்  புணரும்போது கீழ்வருமாறு புணரும் என்பது தொல்காப்பியம் ! :-

பத்து + ஆயிரம் = பதினாயிரம் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

இதற்குத் தொல்காப்பிய நூற்பா :-
“ஆயிரம் வரினு மாயிய றிரியாது” !  (குற்றியலு. 30)

‘ஆயியல்’ – குற்றியலு. 27இல் ( ‘ஒன்று முதலா…’) கூறியபடி ‘இன்’ சாரியை பெறுதல் ,
‘திரியாது’ – குறையாது முடியும் !
இதற்கு எடுத்துக்காட்டுகள் :-
பத்து + ஆயிரம் = பத்தாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி) (தற்காலப் புணர்ச்சி)
பத்து + ஆயிரம் = பதினாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி) (தொல்காப்பியப் புணர்ச்சி)

‘பதினாயிரம்’ என்று சொல்லும்போது ஒரு குழப்பம் ஏற்படுகிறது ! பத்தாயிரமா ? பதினான்காயிரமா? இக் குழப்பத்தைத் தீர்க்கத்தான் , ‘பத்தாயிரம்’ !
மொழிக் குழப்பத்தை நீக்கக் காலந்தோறும் மொழியானது தன்னைத் தகுதியாக்கிக் கொள்கிறது ! இஃது ஒரு மொழியியல் அடிப்படைத் தத்துவம் (Basic Linguistic Principle)!

அடுத்துப் ‘பத்து’என்பதோடு , நிறைப் (எடை) பெயரும், அளவுப் (முகத்தலளவு)பெயரும் புணரும் முறையைக் கூறுகிறார் ! :-

“நிறையு மளவும் வரூஉங் காலையும்
குறையா தாகு மின்னென் சாரியை” ! (குற்றியலு . 31)

இதன்படி –
நிறைப் பெயர்கள்
பத்து + கழஞ்சு = பதின் கழஞ்சு (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + தொடி = பதின் தொடி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + பலம் = பதின் பலம் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

அளவுப் பெயர்கள்
பத்து + கலம் = பதின் கலம் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து +சாடி = பதின் சாடி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + தூதை = பதின் தூதை (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + பானை = பதின் பானை (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + நாழி = பதின் நாழி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + மண்டை = பதின் மண்டை (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + வட்டி = பதின் வட்டி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + அகல் = பதினகல் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + உழக்கு = பதினுழக்கு (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

இவற்றின்பின் , இளம்பூரணர்   ஒரு கூடுதல் இலக்கணம் கூறுகிறார் ! –   “பத்து என்பதன் முன்னர்ப் பொருட் பெயர்க்கு முடிபும் கொள்க ” எனக் கூறிவிட்டுச் சில எடுத்துக் காட்டுகளைத் தருகிறார் ! அவற்றை வருமாறு காட்டலாம் –
பத்து + திங்கள் = பதின் றிங்கள் (இன் -சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + முழம் = பதிற்று முழம் (இன் -சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + வேலி = பதிற்று வேலி (இன் -சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பத்து + இதழ் = பதிற் றிதழ் (இன் -சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

1 வேலி = 6. 74 ஏக்கர்
1 ஏக்கர் = 43,560 சதுர அடி .


‘பத்து ’ என்பதை நிலை மொழியாக நிறுத்திக்கொண்டு , பிற சொற்களும் , எண்ணுப் பெயர்களும் வந்து புணர்ந்தால் எப்படிப் புணரும் என்று இதுவரை பேசினார் தொல்காப்பியர் !
அடுத்துப் ‘பத்து’ எனும் சொல்லை வருமொழியாக்கிப் பிறகு என்ணுப் பெயர்களை நிலைமொழியாக்கிப் பார்க்கிறார் தொல்காப்பியர் ! –

“ஒன்றுமுத லொன்பா னிறுதி முன்னர்
நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம்
வந்திடை நிலையு மியற்கைத் தென்ப
கூறிய வியற்கைக் குற்றிய லுகரம்
ஆற னிறுதி யல்வழி யான ” (குற்றியலு . 32)

‘ஒன்றுமுத லொன்பா னிறுதி முன்னர்’ – ‘ஒன்று’ முதல் ‘ஒன்பது’ வரை நிலை மொழிகள் ! இவற்றின் முன் ,
‘நின்ற பத்தன் ஒற்றுக் கெட’ – ‘பத்து’ வரும்போது , இதன் ‘த்’ கெட ,
‘ஆய்தம் வந்து இடை நிலையும் இயற்கைத்து என்ப’  - அவ்விடத்து  ‘ஃ’ வரும் என்பார்கள் ;
‘கூறிய இயற்கைக் குற்றிய லுகரம் ஆறன் இறுதி அல்வழி யான’ -  நிலை மொழி ஈற்று உகரம் , அது ஏறிய மெய்யோடு (  ‘ஒன்று’ என்பதன் ‘று’ , ‘ இரண்டு’ என்பதன் ‘டு’ முதலியன) கெடும், ‘ஆறு’ என்ற சொல் தவிர !
இதன்படி ,
ஒன்று + பத்து = ஒரு பஃது  ( ‘த்’ கெட்டது ; ஃ - தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + பத்து = இரு பஃது  ( ‘த்’ கெட்டது ; ஃ - தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

மேல் விளக்கத்தில் , ‘ஒன்று’ → ‘ ஒரு’ ஆவதற்கு விதி கூறப்படவில்லையே ?
‘இரண்டு’ → ‘இரு’ ஆவதற்கு விதி கூறப்பட வில்லையே ?


நாம் கேட்போம் என்று தெரிந்துதான் , முன் நூற்பா எழுதிய கையோடு , நம் வினாக்களுக்கு விடையையும் எழுதியுள்ளார் தொல்காப்பியர் ! :-

“முதலீ ரெண்ணி னொற்று ரகரமாகும்
உகரம் வருத லாவயி னான ”  (குற்றியலு. 33)

‘முதல் ஈரெண்ணின்’ – ‘ஒன்று’ , ‘இரண்டு’ ஆகிய எண்களின் ,
‘ஒற்று ரகரம் ஆகும்’ -  ‘ன்’ →   ‘ர்’ ஆகும் ; ‘ண்’ → ‘ர்’ ஆகும்;
‘உகரம் வருதல் ஆவயி னான’ – அந்த ‘ர்’ உடன் ‘உ’ சேர்ந்து , ‘ரு’ ஆகும் !

அஃதாவது –
ஒன்று  →  ஒன் ( ‘று’ கெட்டது ; விதி- குற்றியலு . 32)
ஒன்  →  ஒர் (  ‘ன்’→‘ர்’ ஆனது ; விதி- குற்றியலு . 33)
ஒர் + உ  → ஒரு  (  ர் + உ = ரு , ஆனது ; விதி- குற்றியலு . 33)


மேல் நூற்பாக்களில் ,
‘இரண்டு’ → ‘இரண் ’( விதி – குற்றியலு. 32)
‘இரண்’ → ‘இரர் ’( விதி – குற்றியலு. 33)
‘இரர்’ → ‘இரரு ’( விதி – குற்றியலு. 33) !

ஆக , ‘இரண்டு’  →  ‘இரரு’ ஆனதற்கு விதிகள் பார்த்துவிட்டோம் !

‘இரரு’ → ‘இரு’ ஆனதற்கு விதி ?
“அவசரப் படாதீர்கள் ! இதோ வந்துவிட்டேன் !” – என்பவர் தொல்காப்பியர் ! –

“இடைநிலை  ரகர  மிரண்டெ  னெண்ணிற்கும்
நடைமருங்  கின்றே  பொருள்வயி  னான”  (குற்றியலு. 34)
‘இடை நிலை ரகரம்’ -  ஏற்கனவே , ‘இரண்டு’ என்ற சொல் ‘இரரு’ வரை வந்துள்ளதல்லவா? அதன் ‘ர்’ ,
‘நடை மருங்கின்றே’ – நடக்கும் இடமிலாது கெடும் ! ‘ர்’ கெட்டு , ‘இரு’ ஆகும் !


மேலே , ‘ஒரு பஃது’ , ‘இரு பஃது’ வந்த வழியைத்தானே பார்த்தோம் ? ‘முப்பஃது’ , ‘நாற்பஃது’ முதலியன எப்படி வரும் ?
அவற்றுக்குத் தனித்தனி நூற்பாக்கள் ஓதியுள்ளார் தொல்காப்பியர் ! அவற்றைப் பின்னர் காண இருக்கிறோம் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 06, 2013 7:43 pm

எண்ணுப் பெயர் புணர்ச்சி அருமையாக விளக்கம் பெற்றுள்ளது. இது ஈகரைக்கு ஒரு வெகுமதி ஐயா. மிக்க நனறி



[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 08, 2013 9:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (140)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

எண்ணுப் பெயர்களுடன் (Count nouns) ‘பத்து’ எனும் சொல் வந்து புணர்வதைப் பார்த்துவருகிறோம் !

இப்போது , ‘மூன்று’ , ‘அறு’ ஆகிய எண்ணுப் பெயர்களை நிலை மொழியாக நிறுத்திக் கொள்கிறார் தொல்காப்பியர் ! வருமொழியாகப்  ‘பத்து’ என்பதை வரவிடுக்கிறார் அவர் ! விளைவு ? :-
 “மூன்று  மாறு  நெடுமுதல்  குறுகும்
 மூன்ற  னொற்றே பகார மாகும் !”   (குற்றியலு . 35)

‘மூன்றும் ஆறும்’ – ‘மூன்று’ , ‘ஆறு’ ஆகிய இரு சொற்களும் ,

‘நெடுமுதல் குறுகும்’ – மூ → மு,  ஆகும் ; ஆ  → அ , ஆகும் !

‘மூன்றன் ஒற்றே’ -  ‘மூன்று’ என்பதன் நடுவே உள்ள ‘ன்’ ,

‘பகார மாகும்’ -  ன் → ப் , ஆகும் !

                 அஃதாவது –

மூன்று + பத்து = முப்பஃது  (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + பத்து = அறுபஃது  (அல்வழிப் புணர்ச்சி)

அது சரி !  ‘பத்து’ →  ‘பஃது’ ஆவது பற்றி இந்த நூற்பவில் இல்லையே ?

இல்லைதான் ! ஆனால் இதனை முன்பே (குற்றியலு. 35) கூறிவிட்டாரே ! “நின்ற பத்தன் ஒற்றுக் கெட ஆய்தம் வந்திடை நிலையும்”  என அங்கு சொல்லிவிட்டார் ! அதை நாமும் விளக்கமாகப் பார்த்துவிட்டோம் !

இப்போது , ‘நான்கு’ :-

“நான்க  னொற்றே  றகார மாகும்”  (குற்றியலு . 36 )

  ‘நான்கன் ஒற்றே’ – ‘நான்கு’ என்பதிலுள்ள  ‘ன்’ ,
‘றகார மாகும்’ -    ன்  →  ற்  ,  ஆகும் !

இதன்படி –

நான்கு +  பத்து =  நாற்பஃது  (அல்வழிப் புணர்ச்சி)

இனி , ‘ஐந்து’ :-

“ஐந்த  னொற்றே  மகாரம்  ஆகும்”  (குற்றியலு . 37)

‘ஐந்தன் ஒற்றே’ – ‘ஐந்து’ என்ற சொல்லின்  மெய்யாகிய ‘ந்’ ,

‘மகாரம் ஆகும்’ – ந்  →  ம் , ஆகும் !

            அஃதாவது –    
ஐந்து + பத்து = ஐம்பஃது (அல்வழிப் புணர்ச்சி)

அடுத்த நூற்பா :-

“எட்டன்  ஒற்றே  ணகாரம் ஆகும்”  (குற்றியலு .38 )

’எட்டன் ஒற்றே’ -  ‘எட்டு’ என்பதன் மெய் , ‘ட்’ ,

‘ணகாரம்  ஆகும்’ -  ட்  →  ண் , ஆகும் !

         அஃதாவது -  
எட்டு  +  பத்து =  எண்பது  (அல்வழிப் புணர்ச்சி)

‘மூன்று’ முதல் ‘எட்டு’ வரை பார்த்தோமே , அவற்றின் இடையில் வந்த எழுத்துகளின் மாற்றத்திற்குத்தானே விதிகள் பார்த்தோம் ? ஈற்று எழுத்துகள் - ‘று’ , ‘கு’ , ‘து’ முதலியன  - என்னவாயின?

று, கு , து – முதலிய ஈற்றுக்  குற்றியலுகரச் சொற்கள் எல்லாம் கெடும் என்று முன்பே (குற்றியலு 32) கூறிவிட்டார் ! அதனால் , ஒவ்வொரு நூற்பாவிலும் அதனைக் கூறிக்கொண்டிருக்க வேண்டாம் என்று தொல்காப்பியர் விட்டுவிட்டார் !

மேலே வந்த எண்ணுப் பெயர்களில் ‘ஏழு’ பற்றிக் கூறப்படவில்லையே ?

அப்படிக் கேளுங்கள் !
‘ஏழு’ என்பதன் ஈற்று உகரம் , குற்றியலுகரம் அல்ல ! எனவேதான் , குற்றியலுகரப் புணரியலில் இந்த எண் பற்றிக் கூறவில்லை !

‘ஒன்று + பத்து =  ஒரு பஃது’ என்பதற்கான தொல்காப்பிய விதியைப் பார்த்தோம்   (குற்றியலு. 32) !

இதனோடு சற்று விளையாடுவோம் வருகிறீர்களா ?

தொல்காப்பியர் , புணர்ச்சியில், ‘இன்ன எழுத்து இந்த எழுத்தாக மாறும் ’ என்று அதனதன் மாற்றத்தை எழுத்துவிடாமல் கூறியுள்ளார் !
ஆனால் , ஏன் அப்படி மாறுகிறது என்ற இடத்திற்கு அவர் போகவில்லை !

இந்த இடத்தில்தான் நுழைந்தார்கள் மொழியியலாளர்கள் (Linguists)! அஃது ஒரு தனி வழி !

ஆனால் , நாம் , தமிழுக்கே உரிய வழியில் செல்லலாம் !

அஃது என்ன தமிழுக்கே உரிய வழி ?

அதுதான் வேர்ச்சொல்  (Root word)வழி !

‘ஒன்று’ என்பது , ‘பத்து’ எனும் எண்ணுடன்  புணரும்போது , சட்டென்று ‘ஒரு’ ஆவதில் ‘ஒ’ மட்டும் மாறாமல் கட்டை கட்டையாக நிற்பதைக் கவனியுங்கள் !

அதுதான் வேர் !

‘ஒ’ என்ற தமிழ் வேருக்கு ஒன்று , ஒருமை , தனி என்றெல்லாம் பொருண்மைகள் உண்டு !
‘ஒற்றை மாடு’
‘ஒண்டிக் கட்டை’
‘ஒருத்தி’  -  இப்படிப் பல சொற்களை ஆயும்போது இந்த உண்மை புலனாகும் !

‘தமிழர்களுக்குத் தமிழ்ச் சொற்களே வழிகாட்டும் ’என்பது இலக்கண உண்மை மட்டுமல்ல ; வாழ்க்கைத்  தத்துவமும் ஆகும் !  

தமிழில் எடுத்த எடுப்பிலேயே  ‘ஒருபஃது’ வந்திருக்காது !  ‘ஒரு பத்து’ என்பதுதான் வந்திருக்கும் !

இந்த ‘ஒருபத்து’ என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பாருங்கள் ! ‘த்’ ஆனது மெலிந்து ஒலிக்க நம்முள் ஓர் உந்துதல் இயல்பாக ஏற்படும் !  அந்த இடத்தில் ‘த்’ஐ  அனுசரித்து ஒலிக்கக் கூடிய  ஒரு சார்பெழுத்தான  ‘ஃ’ வந்து உட்கார்ந்துகொண்டது !
பத்து →  பஃது ஆன இரகசியம் இதுதான் !

‘பல் + துளி = பஃறுளி’ ஆனதை இங்கு ஒப்பிட்டால் நம் ஆய்வு சரிதான் என்பது விளங்கும் !

நாளடைவில்  ‘ஒருபஃது ’ என்று உச்சரிக்க உச்சரிக்க , அச் சார்பெழுத்தும் சற்று இடர்ப்பாடாக இருக்கவே , ‘ஒரு பஃது’ →  ‘ஒருபது’ ஆனது ! ‘இருபது’ , ‘முப்பது’ என்பனவெல்லாம் இப்படி ஆனவையே !

வேர்ச்சொல் அடிப்படையிலும் , ஒலிப்பு முறையிலும் இப்படி ஆய்வதே தமிழ் வரலாற்றிலக்கணத்தை  (Historical Grammar of Tamil) நமக்குச் சரியாகக் காட்டும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 10, 2013 10:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (141)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘தொண்ணூறு’ என்ற  எண்ணுப் பெயர்ச் சொல் எப்படி வந்தது ? இதற்குத் தொல்காப்பிய விதி யாது ?

இதோ ! :-

“ஒன்பா  னொகரமிசைத் தகர மொற்றும்
முந்தை யொற்றே ணகார மிரட்டும்
பத்தென் கிளவி யாய்த பகரங் கெட
நிற்றல் வேண்டு மூகாரக் கிளவி
ஒற்றிய தகரம்  றகார மாகும் ! ”     (குற்றியலு . 39)

‘ஒன்பான் ஒகரமிசை’ -  ‘ஒன்பது’ நிலை மொழி ; அதிலுள்ள  ‘ஒ’ என்ற எழுத்துடன் ,

‘தகரம்  ஒற்றும்’ -  ‘த்’ சேரும் ; சேர்ந்து , ‘தொ’ ஆகும் !

‘முந்தை ஒற்று’ – ‘ஒ’வுக்கு முன்னுள்ள (வலப் புறம்) மெய்யான ‘ன்’ ,

‘ணகாரம் இரட்டும்’ – ‘ன்’ ,  ‘ண்ண்’ ஆகும் !

‘பத்து என் கிளவி’  -  ‘பத்து’ என்னும் சொல்,

‘பகரம் ஆய்தம் கெட’ -   ‘பஃது’ என்பதிலுள்ள  ‘பஃ’ கெட !

‘ நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி’ – ‘ஊ’ வரவேண்டும் ; வந்தால் , ‘ண்ண்’ என்பதோடு சேர்ந்து, ‘ண்ணூ’ ஆகும் !

‘ ஒற்றிய தகரம்’ -  ‘பஃது’ என்பதிலிருந்த ‘து’வின் ‘த்’ ,

‘றகாரம் ஆகும்’ -  ‘த்’ ,  ‘ற்’ ஆகும் ; ஆகவே , ‘து’விலிருந்த  ‘உ’ சேர்ந்து ‘று’ ஆகும் !

இவ்வுரையைக் கீழ் வருமாறு காட்டலாம் ! :-

ஒன்பது + பத்து   →  ‘ஒ’வுடன்  ‘த்’ சேர்ந்து   →  தொன்பது + பத்து →  ‘ன்’ , ‘ண்ண்’ ஆன பின் →  தொண்ண்பது + பத்து →  ‘பத்து’ ,  ‘பஃது’ ஆனபின் →  தொண்ண்பது + பஃது → ‘பஃது’வின் ‘பஃ’ கெட்ட பின் → தொண்ண்பது + து → ஊகாரம் நின்ற பின் →  தொண்ணூ + து →  ‘து’வின் ‘த்’ , ‘ற்’ ஆனபின் →  தொண்ணூ + று = தொண்ணூறு !
 
  ஒழுங்காக வந்த புணர்ச்சி இரண்டு இடங்களில் தாவி உள்ளது !

‘பத்து’ , ‘பஃது’ ஆகியுள்ளது ! – ஒரு தாவல் !

‘ஒன்பது’ என்பதிலுள்ள ‘பது’ திடீரென்று காணாமல் போயுள்ளது ! – இன்னொரு தாவல் !

இதற்கு இளம்பூரணர் விடை கூறுகிறார் !

அவர் கூற்றின்படி , ‘பத்து’ , ‘பஃது’ ஆனதும் , ‘து’ கெட்டதும்  குற்றியலு.நூ 32இன்படி ஆகும் ! (இதனை முன்பே பார்த்துள்ளோம் !) ; மீதி இருப்பது ‘பது’விலுள்ள ‘ப’ மட்டுமே !  ‘ ஒன்பதும் பத்தும் புணரும்போது , பத்து , பஃது ஆகும் என்று ஒவ்வொரு படியாகத் தொல்காப்பியர் விளக்காததால் , இந்தப் ‘ப’வும் கெட்டதாக நாம் பொருள் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்பது இளம்பூரணர் கருத்து !

ஆக , ஒன்பது + பத்து = தொண்ணூறு (அல்வழிப் புணர்ச்சி) !

இந்தப் புணர்ச்சியை மேலோட்டமாகப் பார்த்தால் குழப்பம் வருவது இயற்கையே !

இதற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது !

‘ஒன்பது’ – எப்படி வந்தது ?

ஒன்பது -  பத்தில் ஒன்று குறை !

ஒன் – பது ; ‘பது’வில் (பத்தில்)  ஒன்று குறை !  =  9

இதே போன்று –

தொண்ணூறு -  நூறில் பத்துக் குறை !

ஒன் – நூறு ; நூறில் , ஒன்(ஒரு) பத்துக் குறை !

நூறில் ஒரு 10 போக மீதி 90 தானே?

இதுதான் அவ் வரலாறு !

சரிதான் ! ஆனால் , ‘ஒ’ எப்படித் ‘தொ’ ஆகிறது ?

‘ஒ’ முன் ‘த்’ சேரும் என்று தொல்காப்பியர் கூறியதை யாரும் நம்பவில்லை ! ‘தொண்ணூறு’ பற்றி ஆய்ந்த அறிஞர்கள் பலரும் இந்த இடத்தில் தடுமாறியுள்ளனர் !

‘ஒ’ எப்படித் ‘தொ’ஆகும்? அதெல்லாம் தொல்காப்பியர் கூறியது தவறு !  ‘தொண்டு’ என்பதுதான் பகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்றெல்லாம் பலர் எழுதியுள்ளனர் !

ஆனால் , தொல்காப்பியர் கூறிய இலக்கணம்தான் சரி !

‘ஒ’ முன் ‘த்’ வந்து ஒட்டுவது தமிழ் இலக்கணத்திற்கு உட்பட்டதே !

இதனை விளக்கலாம் !

‘த்’ முன்னே சேர்ந்து பல  தமிழ்ச் சொற்கள் உருவாகியுள்ளன!

‘தொண்டு கிழம்’ என்கிறோம் ! என்ன தொண்டு ? என்ன தொண்டாற்றினார் அவர் ? ‘ஒண்டு கிழம்’ என்பதே ‘த்’ சேர்ந்து ‘தொண்டு கிழம்’ ஆனது !  ஒண்டு – ஒல்லி .

வட்டிப் பணத்தை அண்டி (சேர்த்து) வசூலிப்பதால் அது ‘அண்டல்’ ; ‘த்’ சேர்ந்து ‘தண்டல்’ ஆனது !

‘கண் அடித்து வீங்கியுள்ளது’ என்பர் ! தடித்து வீங்கியுள்ளதையே அப்படிக் குறிப்பிடுகின்றனர் ! ‘த்’ ஒட்டுவதற்கு முன் ‘அடித்து’ ;  ஒட்டிய பின் ‘தடித்து’ ! இரண்டும் வழக்கில் உள்ளதைப் பார்த்தீர்களா?

‘ஒற்று’ என்பதன் முன் ‘த்’ சேர்ந்து ‘தொற்று’ ஆனது ! ‘ஒற்று நோய்தான்’ , ‘தொற்று நோய்’ ஆயிற்று !

இப்படி ஆய்ந்தால் தமிழ்ச் சொற்கள் பல ‘த்’தை முன்னொற்றகப் பெற்றுள்ளமை புலனாகும் !

ஆகவே ‘ஒன்பது’ என்பதன் முன் ‘த்’ ஒட்டியதாகத் தொல்காப்பியர் எழுதியது தவறல்ல !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 12, 2013 3:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (142)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


மக்கள் பொருள்களை அளந்து வாங்குவதும் , நிறுத்து வாங்குவதும் அன்றாடம் செய்யக் கூடியவை !

அளவு , நிறை வரலாற்றில் , உலகளவில் தமிழர்கள் முன்னோடிகள் !

எனவேதான் , தொல்காப்பியர் , அளவுப் பெயர்ச் சொற்களையும், நிறைப் பெயர்ச் சொற்களையும்,  வெவ்வேறு  சொற்களுடன் புணர்த்திக் காட்டிய வண்ணம் உள்ளார் !

இப்போது , ‘ஒன்று’ முதல் ‘ஒன்பது’ வரை உள்ள எண்ணுப் பெயர்ச்சொற்களுடன் , அளவுச் சொற்களையும் , நிறைச் சொற்களையும் புணர்த்துவதற்கான விதி கூறுகிறார் ! :-

“அளந்தறி கிளவியும் நிறையென் கிளவியும்
கிளந்த வியல தோன்றும் காலை ”   (குற்றியலு . 40)

‘அளந்தறி கிளவியும்’ -  முகத்தல் அளவைப் பெயர்ச் சொற்களும் ,
 ‘நிறையென் கிளவியும்’ -  நிறுத்தல்  அளவைப் பெயர்ச் சொற்களும் ,
‘கிளந்த இயல’ -  குற்றியலு . நூ. 32 இல் கூறிய முறைப்படி ,
‘தோன்றும் காலை’ -  புணர்ச்சி நடக்கும் !

குற்றியலு. நூ. 32ஐ  முன்பே படித்துள்ளோம் !

அதில் , ‘ஒன்று’ →  ‘ஒரு’ ஆவதும், ‘இரண்டு’ → ‘இரு’ ஆவதும் கூறப்பட்டுள்ளது !

அதே அடிப்படையில் , வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட அளவு ,நிறைச் சொற்களும் , இடையின எழுத்துகளை முதலாகக் கொண்ட  அளவு, நிறைச் சொற்களும் , மெல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட அளவு, நிறைச் சொற்களும் , ‘ஒன்று’ மற்றும் ‘இரண்டு’ என்பவற்றோடு புணரும் முறை :-

                 அளவுப் பெயர்
------------------
ஒன்று + கலம் = ஒரு கலம்  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + சாடி = ஒரு சாடி  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + தூதை = ஒரு தூதை  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + பானை = ஒரு பானை  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + வட்டி = ஒரு வட்டி  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + நாழி = ஒரு நாழி  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + மண்டை = ஒரு மண்டை  (அல்வழிப் புணர்ச்சி)

                        நிறைப் பெயர்
         ------------------
ஒன்று + கழஞ்சு = ஒரு கழஞ்சு  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + தொடி = ஒரு தொடி  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + பலம் = ஒரு பலம்  (அல்வழிப் புணர்ச்சி)

                 அளவுப் பெயர்
------------------
இரண்டு + கலம் = இரு கலம்  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + சாடி = இரு சாடி  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + தூதை = இரு தூதை  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + பானை = இரு பானை  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + வட்டி = இரு வட்டி  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + நாழி = இரு நாழி  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + மண்டை = இரு மண்டை  (அல்வழிப் புணர்ச்சி)

நிறைப் பெயர்
         ------------------
இரண்டு + கழஞ்சு =இரு கழஞ்சு  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + தொடி = இரு தொடி  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + பலம் = இரு பலம்  (அல்வழிப் புணர்ச்சி)

இளம்பூரணர் இங்குக் கூடுதல் இலக்கணம் தருகிறார் !  அவர் தந்தபடி –

ஒன்று + ஒன்று  = ஓரொன்று  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + இரண்டு  = ஓரிரண்டு  (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + ஒன்று  = ஈரொன்று  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + இரண்டு  = ஈரிரண்டு  (அல்வழிப் புணர்ச்சி)

ஒன்று + முந்திரிகை  = ஒரு முந்திரிகை  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + முந்திரிகை  = இரு முந்திரிகை  (அல்வழிப் புணர்ச்சி)

ஒன்று + அரைக்கால்  = ஓரரைக்கால் (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + அரைக்கால்  = ஈரரைக்கால் (அல்வழிப் புணர்ச்சி)

ஒன்று + கால்  = ஒரு கால் (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + கால்  = இரு கால் (அல்வழிப் புணர்ச்சி)

ஒன்று + அரை  = ஓரரை (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + அரை  = ஈரரை (அல்வழிப் புணர்ச்சி)

ஒன்று + முக்கால்  = ஒரு முக்கால் (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + முக்கால்  = இரு முக்கால் (அல்வழிப் புணர்ச்சி)
1 பலம் = 35 கிராம்
1 கலம் -  64½  லிட்டர்
அரைக்கால் =  1/8
முந்திரி =  1/320
மேலைப் புணர்ச்சிகளில் சிலவற்றை ஆயலாம் !

ஒன்று + ஒன்று  =  ஓரொன்று √ (அல்வழிப் புணர்ச்சி)  (பழைய புணர்ச்சி)
ஒன்று + ஒன்று  =  ஒவ்வொன்று √ (அல்வழிப் புணர்ச்சி)  (புதிய புணர்ச்சி)

இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான் !

ஒரு + கால்  =  ஒரு கால் √  (அல்வழிப் புணர்ச்சி)  (¼ பங்கு)
ஒரு + கால்  =  ஒருக் கால் ×

ஒருக் கால்  =  ஒருவேளை (Perhaps)

‘ஒருக்கால்’ , ‘ஒருவேளை’ ஆகியன வினை அடைகளாகக் (Adverbs) கீழ்வரும் தொடர்களில் நிற்கின்றன ! :-
‘ஒருக்கால் உன் மனைவி சண்டை பிடிச்சா?’
‘ஒருவேளை மணமகள் தாலி கட்ட மறுத்துவிட்டால் ?’  

(3) ஒன்று + அரை =  ஒன்றரை √  (அல்வழிப் புணர்ச்சி)  ( 1 +  ½)
ஒன்று +  அரை =  ஓரரை √  (அல்வழிப் புணர்ச்சி)  (½ பங்கு)

தமிழ்ப் புணர்ச்சிகள் தொடத் தொட இன்பம்தான் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 12, 2013 9:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (143)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் கட்டுரையில் ,
‘ஒன்று  + கலம் = ஒரு கலம்’ என்பதற்கான தொல்காப்பிய விதியைப் பார்த்தோம் !

அப்படியானால் ,
‘மூன்று + கலம் = மூன்று கலம்’ என எழுதலாமா?

‘கூடாது !’ என்று நம் கையைப் பிடிக்கிறார் தொல்காப்பியர் ! :-

“மூன்ற னொற்றே வந்த தொக்கும்”  (குற்றியலு . 41)

‘மூன்றன்  ஒற்றே’ -  ‘மூன்று’ என்ற சொல்லின் நடுவே நிற்கும் ‘ன்’,

‘வந்தது’ – ‘மூன்று’  என்பதோடு ‘கலம்’ என்ற சொல் வந்து புணருமானால் , அதன் முதல் எழுத்தாகிய ‘க்’ ,

‘ஒக்கும்’  -  ‘ன்’ →‘க்’  ஆகும் !

இதற்கு , இளம்பூரணர் காட்டுகளை வருமாறு பிரித்துத் தரலாம் !

மூன்று +  கலம் =  முக் கலம் (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ → ‘க்’)
மூன்று +  சாடி =  முச் சாடி (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ → ‘ச்’)
மூன்று +  தூதை =  முத் தூதை (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ → ‘த்’)
மூன்று +  பானை =  முப் பானை (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ → ‘ப்’)
மூன்று +  கழஞ்சு =  முக் கழஞ்சு (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ → ‘ஞ்’)
மூன்று +  தொடி =  முத் தொடி (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ → ‘த்’)
மூன்று +  பலம் =  முப் பலம் (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ → ‘ப்’)

அது சரி ! மூ →  மு  ஆனதற்கு மேல் நூற்பாவில் விதி இல்லையே?

அதற்கு விதியைக் குற்றியலு. 35 இல் கூறிவிட்டார் ; நாமும் பார்த்தோம் !

அதில் (35) , “மூன்றும்  ஆறும் நெடுமுதல் குறுகும்”  என்றதை நினைத்துக்கொள்க !

‘மூன்று’ போலவே , ‘ஐந்து’ என்பதன் ‘ந்’ ஆனது முதல் எழுத்தை அனுசரித்து  மாறிக்கொள்கிறது என்கிறது அடுத்த நூற்பா !

“ஐந்தன் ஒற்றே  மெல்லெழுத் தாகும்” (குற்றியலு. 42)

‘ஐந்தன் ஒற்றே’ – ‘ஐந்து’ என்பதன் ‘ந்’ ,

‘மெல்லெழுத்து ஆகும்’ -  ‘கலம்’ என்பது வருமொழியாயின் , ‘ற்’  →  ‘ங்’ ஆகும் !

இதற்கான இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு பிரித்துப் பார்க்கலாம் ! : -

ஐந்து + கலம் =  ஐங் கலம் (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்’ → ‘ங்’)
ஐந்து + சாடி =  ஐஞ் சாடி (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்’ → ‘ஞ்’)
ஐந்து + தூதை =  ஐந் தூதை (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்’ , மாறாது)
ஐந்து + பானை =  ஐம் பானை (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்’ → ‘ம்)
ஐந்து + கழஞ்சு =  ஐங் கழஞ்சு (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்’ → ‘ங்’)
ஐந்து + தொடி =  ஐந் தொடி (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்’, மாறாது)
ஐந்து + பலம் =  ஐம் பலம் (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்’ → ‘ம்’)

மேல் ‘மூன்று’ , ‘ஐந்து’ ஆகியவற்றின் புணர்ச்சி விதிகளைப் பார்த்தோமல்லவா?

அதற்கான எடுத்துக்காட்டுகளை உற்றுப் பாருங்கள் ! க,  ச, த , ப – நான்கு எழுத்துகளை முதலாகக் கொண்ட அளவு , நிறைப் பெயர்கள் மட்டுமே  வந்து புணர்ந்துள்ளன !

மீதி எழுத்துகள் ?

மீதி எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது இந்த விதிகள் பொருந்தா ! இதற்குத்தான் எல்லை கட்டுகிறார் தொல்காப்பியர் ! :-

“க ச த ப   முதன்மொழி வரூஉங் காலை” (குற்றியலு . 43)  

இவண் , இளம்பூரணர் , “மேல் மாட்டேற்றானே , அறுகலம் , - சாடி,- தூதை , -      பானை எனவும் , அறுகழஞ்சு , - தொடி ,- பலம் எனவும் வரும்”என்று குறிப்பு எழுதுகிறார் !

மாட்டேறு’ பற்றி முன்பே விளக்கப்பட்டுள்ளது ! அஃதாவது- முன் வந்த ஒன்றோடு தொடர்புபடுத்திப் பார்த்தல் !

இங்கு இளம்பூரணர் குற்றியலு .35இல் , ‘மூன்று மாறும் நெடுமுதல் குறுகும்’ என்ற தொல்காப்பிய விதியோடு பொருத்தித்தான் ‘அறு கலம்’ முதலியன வரும் என்கிறார் !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் ! :-
                  அளவுப் பெயர்
----------------

ஆறு + கலம் = அறு கலம் (அல்வழிப் புணர்சி) (ஆ →அ)
ஆறு + சாடி = அறு சாடி (அல்வழிப் புணர்சி) (ஆ →அ)
ஆறு + தூதை = அறு தூதை (அல்வழிப் புணர்சி) (ஆ →அ)
ஆறு + பானை = அறு பானை (அல்வழிப் புணர்சி) (ஆ →அ)

                    நிறைப் பெயர்
----------------
ஆறு + கழஞ்சு = அறு கழஞ்சு (அல்வழிப் புணர்சி) (ஆ →அ)
ஆறு + தொடி = அறு தொடி (அல்வழிப் புணர்சி) (ஆ →அ)
ஆறு + பலம் = அறு கலம் (அல்வழிப் புணர்சி) (ஆ →அ)

இப் புணர்ச்சி  இலக்கணம் இன்றியமையாதது !

 இதன்படி –

‘ விளையாட்டு அறுநாட்கள் நடக்கும்’ ×  
‘ விளையாட்டு ஆறுநாட்கள் நடக்கும்’ √

‘ அறு வீடுகள் வாடகைக்கு உள்ளன’ ×  
‘ ஆறு வீடுகள் வாடகைக்கு உள்ளன’ √

‘அறுமரம் வெட்டினான்’ ×
  ‘ஆறுமரம் வெட்டினான்’ √

மேலே பார்த்த இருவகைப் புணர்ச்சிகள் குழப்பம் தருவதாகவே உள்ளது ! இடையின , மெல்லின எழுத்துகளுக்கு ஒருவகையாகவும் , வல்லின எழுத்துகளுக்கு வேறுவகையாகவும் இருந்தால் குழப்பம் வரத்தான் செய்யும் !

இக் குழப்பத்தை நீக்கத்தான் தொல்காப்பியர் காலத் தமிழை நெகிழ்த்து இன்று க , ச , த , ப – எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தாலும் ‘ஆறு’ என்ற பகுதி வரலாம் என
இயல்பாகவே ஒரு மாற்றம் கொண்டுள்ளது !


 ஆகவே –

‘பிடிபட்ட  அறுகட்டி தங்கத்தையும் ’ √
‘பிடிபட்ட  ஆறுகட்டி தங்கத்தையும் ’ √

‘அவள்  அறுசட்டி கொணர்ந்தாள்’ √
‘அவள்  ஆறுசட்டி கொணர்ந்தாள்’ √

‘மேசையில்  அறுதட்டு  வைத்தாள்’ √
‘மேசையில்  ஆறுதட்டு  வைத்தாள்’ √

‘குயவனின் அறுபானைக்கு நல்ல விலை’ √
‘குயவனின் ஆறுபானைக்கு நல்ல விலை’ √

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 20 of 84 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 52 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக