ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» ஓம் சரவண பவ
by ayyasamy ram Yesterday at 9:46 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:44 am

» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Yesterday at 6:31 am

» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Yesterday at 6:08 am

» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm

» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm

» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm

» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm

» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm

» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm

» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm

» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm

» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm

» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm

» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:14 pm

» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:11 pm

» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 5:22 pm

» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:37 pm

» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:36 pm

» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:35 pm

» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:33 pm

» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:32 pm

» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 1:48 pm

» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 12:08 pm

» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 11:53 am

» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:25 am

» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:15 am

» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:13 am

» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:12 am

» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 9:59 am

» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 9:01 am

» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Wed Jun 29, 2022 5:19 am

» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm

» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm

» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm

» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm

» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm

» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்


தொல்காப்பிய இலக்கணம் (619)

2 posters

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 09, 2022 10:14 am

தொல்காப்பிய இலக்கணம் (570)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்ததாகத் தொல்காப்பியர் இடைச்சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகிறார்:-

அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருசெய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை (இடையியல் 2)

‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுநவும்’ – இரு சொற்கள் புணரும்போது, இடையே ஏதேனும் ஒரு பொருளுக்காக வருவனவும்,
‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்’ – வினைச் சொல்லில் காலம் , பால்,இடம் காட்டுபவைகளும்,
‘வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்’- வேற்றுமைப் பொருளைத் தரும் உருபுகளாக நிற்பவையும்,
‘அசைநிலைக் கிளவி யாகி வருநவும்’ – தனக்கெனப் பொருள் இலாது, தான் சார்ந்த பெயர் வினைகளோடு ஒட்டிநின்று அவற்றைச் சிறப்பிக்க உதவுவனவும்,
‘இசைநிறைக் கிளவி யாகி வருநவும்’ – செய்யுளில் இசையை நிறைக்க வருபவைகளும்,
‘தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்’ – கூறுபவர்களின் குறிப்புப் பொருளை வெளிப்படுத்த நிற்பவைகளும்,
‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் என்று’ – வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும், ஏதோ ஒரு ஒப்புமையால் ஒன்றுபட்டு நிற்க உதவுபவைகளும்,
‘அப்பண் பினவே நுவலுங் காலை’ – ஆகத் திகழ்வதே இடைச்சொற்களாம்,உரைக்கப் புகின்!

இப்படி நடக்கும் இடைச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1 . ’ புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுந’

பாட்டு +இன் + இனிமை = பாட்டின் இனிமை
இதில், ‘இன்’ எனும் சாரியை இடைச்சொல் , நடுவே வந்து , பொருளைத் தருகிறது; ‘பாட்டு’, ‘இனிமை’ என்று தனித் தனியாக நின்றால் பொருள் திரளாது என்பதைக் கவனிக்க!

2 . ‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருந’
வாழ்+ வ்+ஆன் = வாழ்வான்
இங்கே, ’வ்’எனும் இடைச்சொல்லாகிய எதிர்கால இடைநிலை வந்ததால்தான் ‘வாழ்வான்’ என்ற வினைச்சொல்லுக்குப் பொருளே ஏற்படுவதைக் காண்கிறோம்.

3 . ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’

குமணனை வாழ்த்தினான் – இங்கே, ‘ஐ’ எனும் இடைச்சொல்லாகிய வேற்றுமை உருபுதான் தொடர்ப் பொருளையே நல்குவதைக் காணலாம்; இல்லையேல், ‘குமணன் வாழ்த்தினான’ என நின்று , வாழ்த்தியவன் குமணன் எனும் தவறான பொருள் அல்லவா ஏற்படும்?

4 . ‘அசைநிலைக் கிளவி யாகி வருந’
சேனாவரையரின் விளக்கம்- “அசைத்தல் – சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை யாயிற்று.அவை ‘அந்தில்’ முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’, ‘உரைத்திசினோரே’ எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின்,அசைநிலைச் சொல்லாயின என்பாரு முளர்”

இங்கே ஒன்றை நான் தெளிவுபடுத்த வேண்டும்!

‘அசைநிலை’ வேறு, ‘அசைச் சொல்’ வேறா?
உரையாசிரியர் சிலரின் நடை இந்த ஐயத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது!

அசைநிலை வேறு, அசைச் சொல் வேறு எனத் தொல்காப்பியர் கருதியிருந்தால், இடைச் சொற்களைப் பாகுபடுத்திக் கூறும் அவரின் பட்டியலில், இரண்டும் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?பட்டியலில் ‘அசைநிலைக் கிளவி’ என்ற ஒன்று மட்டும்தானே உள்ளது?

‘மா’ எனும் சொல், வியங்கோளை அடுத்துவரும் ‘அசைச் சொல்’ எனத் தொல்காப்பியர்(இடை.25) கூறச் ,சேனாவரையர், “அது வியங்கோளைச் சார்ந்து, ‘அசைநிலையாய் வரும்’’என்றார்.
இதனால், அசைநிலையும் அசைச் சொல்லும் ஒன்றுதான் என்பது தெளிவாகிற தல்லவா?
ஆகவே,
அசைநிலைக் கிளவி =அசைநிலைச் சொல் = அசைநிலை= அசைச் சொல் !

மேற் சேனாவரையர் உரையிற் கண்ட இரு அசைநிலைகளை வருமாறு பார்க்கலாம்-

புகழ்ந்திகு மல்லரோ பெரிதே – இதில், ‘இகும்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.
உரைத்திசினோரே - இதில், ‘இசின்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.

5 . ‘ இசைநிறைக் கிளவி யாகி வருந ’

இசையை நிறைக்க வரும் சொல் , இசைநிறை இடைச்சொல் எனப்படும்.
இசையை நிறைக்க – யாப்புக் குறையைப் போக்க
‘கடாஅக் களிற்றின்மேல்’ – இந்த இரு சீர்களில், முதற்சீரிலுள்ள ‘அ’வை எடுத்துவிட்டால், ‘கடாக்’ என்று ஒரே ஒரு நிரைஅசையாக மட்டும் நிற்கும்; சீர் கிடைக்காது;யாப்பிலக்கணம் பிழையாகும். ஆகவே சீர் ஏற்பட்டு, யாப்பிலக்கணம் செம்மையாக, ‘அ’ சேர்க்கப்படுகிறது; இதுவே இசை நிறைக்கப்படுதல்.
இங்கே ‘அ’ , இசைநிறைக்கும் இடைச்சொல்.

இன்னோர் எடுத்துக்காட்டு:
‘காடிறந் தோரே’ – இதில், இரண்டாம் சீரின் ஈற்றில் உள்ள ஏகாரமே இசைநிறைக்க வந்த இடைச்சொல். ஏன்?
ஈற்று ஏகாரத்தை எடுத்துவிட்டால், ‘தோர்’ என்பது மட்டுமே மிஞ்சும்; இஃது ஓர் அசைதானே தவிரச் சீர் ஆகாது; சீர் ஆக்கவேண்டும் என்பதற்காகவே ஈற்றில், ‘ஏ’ சேர்க்கப்படுகிறது; அஃதாவது, யாப்பியல் நோக்கில் சேர்க்கப்படுகிறது; இதனால்தான் ‘இசை நிறை’ எனப்படுகிறது.
6 . தத்தங் குறிப்பிற் பொருள்செய்குந

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம்235)- இதில், ‘மன்’ எனும் இடைச்சொல் வந்துள்ளது. ‘சிறு அளவிலான கள் இருந்தால் அவன் எனக்குத் தந்துவிடுவான்! அப்படிப்பட்ட அரசன் அவன் ! அது ஒரு காலம்!’ எனக் கடந்துபோன (கழிந்துபோன) செயலைக் குறிப்பது எது? ‘மன்’அல்லவா? இதனால், ‘மன்’ எனும் இடைச்சொல், கழிவுப் பொருளைக் குறிப்பால் தருகிறது என்கிறோம்!

7 . ‘ஒப்பில் வழியாற் பொருசெய்குந’

இதற்கும் உரையாசிரியரிடையே வேறுபட்டு கருத்துகள் உண்டு!

நம் விளக்கத்தை வருமாறு வைக்கலாம்.

காளை மாடும் மணி என்ற மனிதனும் ஒன்றா?
வேறு வேறுதானே?
இரண்டையும் ஒன்று எனக் கூற முடியாது என்பதே , ‘ஒப்பில் வழி’!
ஆனால், இப்படிப்பட்ட ‘ஒப்பில்வழி’யாக இருப்பினும் , சில உருபுகளைப் போட்டுப் நாம் விரும்பிய பொருளை வெளிப்படுத்துகிறோம்! இந்த உருபுகளை நாம் உவம உருபுகள் என்கிறோம்! இவைகள் இடைச்சொற்களே!

காளை அன்ன மணி – இங்கே , ‘காளை’ , ‘மணி’ ஆகியன ஒப்பில்வழிச் சொற்கள்; ஆனால், ‘அன்ன’ எனும் இடைச்சொல்லால், நம்மால் ஓர் ஒப்பீட்டைத் தர முடிந்துள்ளது!இதைத்தான் தொல்காப்பியர் தன் நூற்பாவில் குறித்துள்ளார்!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (571)

Post by Dr.S.Soundarapandian Thu Feb 10, 2022 11:08 am

தொல்காப்பிய இலக்கணம் (571)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது இடைச்சொல் எந்தெந்த இடங்களிற் பயிலும் என்று விளக்குகிறார் தொல்காப்பியர்-

அவைதாம்
முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும்
தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும்
அன்னவை யெல்லாம் உரிய வென்ப (இடையியல் 3)

முன்னும் – இடைச்சொல் சாரும் சொல்லுக்கு முன்பாகவும்,
பின்னும் - இடைச்சொல் சாரும் சொல்லுக்குப் பின்னேயும்,
மொழியடுத்து வருதலும் – (இவ்வாறு)சொல்லருகே வருதலும்,
தம் ஈறு திரிதலும் – இடைச்சொல்லின் ஈறானது திரிபுபட்டு வரலும்,
பிறிதவண் நிலையலும் – ஓர் இடைச்சொல்லை அடுத்து இன்னோர் இடைச்சொல் வருதலும்,
அன்னவை எல்லாம் உரிய என்ப- ஆகிய இடங்களுக்கு உரிமை பூண்டவை இடைச்சொற்களாம்!

இவற்றுக்குச் சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்.

1 .சொல்லுக்கு முன்னே இடைச்சொல் வரல்

‘ அதுமன்’ (புறம்.147)– இங்கே ‘மன்’ எனும் இடைச்சொல்லானது, ‘அது’ என்பதற்கு முன்னே வந்துள்ளது.
‘ கேண்மியா’ – இங்கே ‘மியா’ எனும் இடைச்சொல்லானது, ‘கேள்’ என்பதற்கு முன்னே வந்துள்ளது.

2 .சொல்லுக்குப் பின்னே இடைச்சொல் வரல்
‘கொன்னூர்’(குறுந்.138) - இங்கே ‘கொன்’ எனும் இடைச்சொல்லானது, ‘ஊர்’ என்பதற்குப் பின்னே வந்துள்ளது.
‘ஓஓ இனிதே’(குறள் 1176) - இங்கே ‘ஓ’ எனும் இடைச்சொல்லானது, ‘இனிது’ என்பதற்குப் பின்னே வந்துள்ளது.

3 . ஈறு திரிந்து வரல்
உடனுயிர் போகுக தில்ல (குறுந்.57) – இங்கே, ‘தில்’ எனும் இடைச்சொல்லானது, ‘தில்ல’ எனத் திரிந்து (மாறுபட்டு) வந்துளது.
4 . பிறதவண் நிற்றல்
வருகதில் லம்மவெஞ் சேரி சேர – இதில், ‘தில்’ , ‘அம்ம’ எனும் இரு இடைச்சொற்களும் அடுத்தடுத்து வந்துள்ளதை நோக்குவீர்.

தொடர்ந்து , தொல்காப்பியர் சில இடைச்சொற்களை எடுத்துக்கொண்டு அவை என்னென்ன பொருட்களில் வரும் என்று விளகலுறுகிறார்.

முதலில் ‘மன்’ எனும் இடைச் சொல்!

கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று
அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே (இடையியல் 4)

அஃதாவது , கழிவுப் பொருளிலும், ஆக்கப் பொருளிலும்,ஒழிந்தமை குறித்த பொருளிலும் ‘மன்’ எனும் இடைச்சொல் வரும்!

இவற்றுக்குச் ,சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கமாகக் காணலாம்.

1 . கழிவுப் பொருள்
கழிவுப் பொருள் என்றால், ஏதோ குப்பையில் கொட்டப்படும் கழிவுகள் என எண்ணக்கூடாது!
கழிவுப் பொருள் – கடந்துபோன செயல் குறித்த பொருண்மை

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’(புறம் 235) – இதில் ‘மன்’எனும் இடைச்சொல்லானது, கழிவுப் பொருளில் வந்துள்ளது. ‘ சிறிதளவு கள்ளை வைத்திருந்தால், அதைத் தான் குடிக்காமல் எனக்குக் கொடுத்துவிடுவான் அரசன்’ என்று ஔவையார், கடந்துபோன ஒரு நிகழ்வு பற்றிக் கூறுவதைக் கவனியுங்கள்.

இன்றும் , ‘சென்ற புதன்’ , என்பதைக் ‘கழிந்த புதன்’ எனக் கூறும் வழக்கம் உண்டு.

2 . ஆக்கப் பொருள்

ஆக்கம் – சிறப்பானதாக ஆதல்; ஆகுவது, ஆக்கம்.
‘பண்டு காடுமன்; இன்று கயல் பிறழும் வயலாயிற்று’ – இதில், ‘மன்’ எனும் இடைச்சொல்லானது, ஆக்கப் பொருளில் வந்துள்ளது. ‘காடாக இருந்தது உண்மைதான்; ஆனால் இன்று நல்ல வயலாயிற்று’ என்பதே பொருள்; இந்தப் பொருளைச் சிறப்பாகத் தருவது எது? ‘மன்’ எனும் இடைச்சொல்லே! ‘காடு’ , ஆக்கம் பெற்று, ‘வயல்’ ஆனது! இதுவே ஆக்கப் பொருள்!
3 . ஒழியிசைப் பொருள்
கூறாது விடப்பட்ட பொருளைத் தாங்கி வரக்கூடியது ‘மன்’!
‘எச்சமாக ஒழிந்த’ சொற்பொருளைச் சுட்டிவரும் இடைச்சொல் ‘மன்’!

‘கூரியதோர் வாள் மன்’ – இதில், கூறாது விடப்பட்டது எது?
‘இப்போது வாளானது கூர்மையானதாக இல்லை’ என்பதே கூறாமல் விடப்பட்டது.
கூறாது விடப்பட்டதே, ‘ஒழியிசை’ எனப்படுகிறது!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (572)

Post by Dr.S.Soundarapandian Fri Feb 11, 2022 10:18 am


தொல்காப்பிய இலக்கணம் (572)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்ததாகத் ‘தில்’ எனும் இடைச்சொல்!

விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்று
அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே (இடையியல் 5)

அஃதாவது, ‘தில்’எனும் இடைச்சொல்லானது, ‘விழைவு’ , ‘காலம்’, ‘ஒழியிசை’ ப் பொருட்களில் செய்யுள்களிற் பயிலும்.

இவற்றுக்குச் சேனாவரையர் எடுத்துக்காட்டுகளை விளக்கிக் காண்போம்.
1 . விழைவு
விழைவு – விருப்பம்
விருப்பத்தை வெளிப்படுத்தும் பொருட்குறிப்பைத் ‘தில்’ எனும் இந்த இடைச்சொல் காட்டும்.

‘அரிவையைப் பெறுகதில் லம்ம யானே’ (குறுந். 14)

எனுமடியில், தலைவனின், ‘காதலியை நான் பெறுவேன்’ என்ற அவனது விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில், பயிலுகிறது ‘தில்’ எனும் இடைச்சொல்.

2 . காலம்
மேற் குறித்த இதே குறுந்தொகைப் பாடலில்(14), ‘பெற்றாங்கு அறிகதில் அம்ம இவ் வூரே’ எனும் அடி வருகிறது; ‘நான் தலைவியைப் பெற்ற பின்பு இந்த ஊர் அறியவரும்’ என்பது கருத்து. ‘அறிகதில்’ என்பதற்கு ‘அப்போது அறியும்’ என்பது பொருள்.இங்கே எதிர்காலக் குறிப்பை நாம் அறியவருகிறோம். இதுவே ‘தில்’ எனும் இடைச்சொல் காலத்தைச் சுட்டுவதாம்.

3 . ஒழியிசை

முன் ஆய்வில் ‘ஒழியிசை’க்குக் கூறப்பட்ட அதே பொருள்தான் இங்கும்.
கூறாது விடப்பட்ட கருத்தைச் சுட்ட நிற்கும் இடைச்சொல் ‘தில்’ என்பது கருத்து.

‘வருகதில் அம்ம எம் சேரி சேர’ (அகம் 276)- இதற்குத், ‘தலைவி இங்கு வரட்டும்; வந்தால் என் சேரிக்கு அவளைக் கூட்டிக்கொண்டு செல்வேன்’ கருத்து.
வருகதில் – வரட்டும்
‘வருகதில்’ என்பதன் ‘தில்’ எனும் இடைச்சொல்லானது, ‘சேரிக்குக் கூட்டிச் செல்வேன்’ என்ற ஒழிந்த எச்சக் கருத்தைச் சுட்டி நிற்கிறது; எனவே ‘தில்’ , இங்கே ஒழியிசை இடைச்சொல்!

இப்போது ‘கொன்’ எனும் இடைச்சொல்!

அச்சம் பயமிலி காலம் பெருமையென்று
அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே (இடையியல் 6)

அச்சம்,பயமின்மை, காலம், பெருமை ஆகிய நான்கு பொருட்களை நோக்கி நிற்கும் இடைசொல் ‘கொன்’!

சேனாவரையை காட்டியாங்கு , விளக்கம் சேர்த்து, எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
1 . அச்சம்
‘கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே’ (குறுந். 91)
இங்கு வந்துள்ள, ‘கொன்’ எனும் இடைச் சொல்லுக்கு அச்சப் பொருள் உள்ளது.
கொன்முனை – அச்சம்தரும் போர் முனை ; முனை – போர் முனை
‘அச்சம் தரும் போர்முனையை அடுத்துள்ள ஊர்மக்கள் எப்படி உறங்காமல் தவிப்பார்களோ, அப்படி உன் மனமும் அல்லலுறும்’ என்று தலைவி , தன் நெஞ்சுக்குக் கூறுவதாகப் பாட்டு நடக்கிறது.

இவ்வாறு மேல் எடுத்துக்காட்டில், ‘கொன்’ எனும் இடைச்சொல்லுக்கு, அச்சப் பொருள் உள்ளதைக் காண்கிறோம்.

2 .பயமிலி
பயமிலி – பயனின்மை
‘கொன்னே கழிந்தன்று இளமை’ (நாலடி.55); இதற்குப், ‘பயனில்லாது வீணாகக் கழிந்தது இளமை’ என்பதே பொருள்.
இங்கே ‘கொன்’ எனும் இடைச்சொல் , தனித்து வராமல், ‘கழிந்தது
எனும் சொல்லை ஒட்டியே வந்ததைக் காண்க.

3 . காலம்
‘கொன்வரல் வாடை’ – உரிய காலத்து வந்த வாடைக் காற்று.இதில் ,‘கொன்’னுக்குக் காலப் பொருண்மை இருப்பதை அறியலாம்.
இங்கும், ‘கொன்’ எனும் இடைச்சொல், தனித்து வராமல், ‘வரல்’ என்பதோடு இயைந்தே வந்ததைக் காண்க.
4 . பெருமை
‘கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே’ (குறுந். 138)

கொன்னூர் – பெருமை மிகு ஊர்
இங்கும், ‘கொன்’ எனும் இடைச்சொல்லானது, தனித்து வராமல், ‘ஊர்’ எனும் சொல்லை ஒட்டியே வந்துள்ளதை நோக்கலாம்.

இங்கு நான் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும்!
‘கொன்’ எனும் இடைச்சொல்லுக்குப் ‘பெருமை’ப் பொருள் இருக்கிறது என்பதற்காகத், தொடர்களில் ‘பெருமை’ என்று வரவேண்டிய இடத்தில் ‘கொன்’னைப் போட்டு எழுத முடியாது!

அவன் பெருமை பேசப்பட்டது √
அவன் கொன் பேசப்பட்டது ×

ஏனெனில், ‘கொன்’ பெயர்ச்சொல் அல்ல; இடைச்சொல்!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (573)

Post by Dr.S.Soundarapandian Sat Feb 12, 2022 11:50 am

தொல்காப்பிய இலக்கணம் (573)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த இடைச்சொல் – ‘உம்’!

எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை யாக்கமென்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே (இடையியல் 7)

1 . எச்ச உம்மை

’அங்கே கமலாவும் வந்திருந்தாள்’ – இதில், ‘கமலாவும்’ என்பது நமக்குத் தெரிவிப்பது என்ன? ‘அப்படியானால் வேறு ஒருவர் அல்லது பலரும் வந்திருந்தனர் ’ என்ற கருத்தைத்தானே? இவ்வாறு , எஞ்சி நிற்கும் பொருளைத் தெரிவுத்து உதவும் இடைச்சொல்லுக்குத்தான் ‘எச்ச உம்மை’ என்பது பெயர்.
2 . சிறப்பு உம்மை

‘வேட்டைக்காரனும் அஞ்சும் காடு’- இதில், ‘வேட்டைக்காரன் அஞ்சமாட்டான்; ஆனால் அவனும் அஞ்சும் வகையில் உள்ளது காடு’ என்ற பொருளை நல்குவது எது ? ‘உம்’ என்ற இடைச்சொல்தான்! ‘வேட்டைக்காரனும்’ என்பதில் உள்ள ‘உம்’மைதான் வேட்டைக்காரனைச் சிறப்பிற்குரியனாக ஆக்குகிறது! இதனா , இத் தொடரில் உள்ள ‘உம்’மை , சிறப்பும்மை! ( அஞ்சும்- என்பதிலும் உம்மை வருகிறதே என்றால், அது செய்யும் எனும் வாய்பாட்டு உம்மை; இடைசொல் அல்ல!)

3 . ஐய உம்மை
’உம்’ எனும் இடைச்சொல், உறுதியில்லாத ஐயத்தைத் தருவதானால், அந்த உம்மை, ‘ஐய உம்மை’.

‘அவருக்கு ஐந்து ரூபாயும் கொடுக்கலாம்; பத்து ரூபாயும் கொடுக்கலாம்’- இத் தொடரில் வந்துள்ள உம்மை , நமக்குத் தெளிவைத் தராமல், ‘இது அல்லது அது’ என்ற ஐயத்தையே தருகிறதல்லா? இதனால் இவ்வும்மையை ‘ஐய உம்மை’ என்கிறோம்!

மேலைத் தொடரில் இரு உம்மைகள் வந்துள்ளனவே எந்த உம்மை ஐய உம்மை?
நல்ல வினா!
இரண்டு இடங்களிலும் வந்துள்ள உம்மைகளே , ‘உம்மை’ எனப் பேசப்படுகிறது! ஐயத்தைக் கிளப்புபவைகள் இரண்டு உம்மைகளும் சேர்ந்தே அல்லவா?

ஐய உம்மை வர, இரண்டு உம்மைகள்தாம் வேண்டும் என்பதில்லை! தொடரின் ஓர் உம்மைகூட ஐய உம்மையாக வரலாம்!
நச்சர் , “பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே”என்ற அடியை (குறுந்.113) மேற்கோள் காட்டுகிறார், ஐய உம்மைக்கு!

சேய்த்து – தொலைவினது; சேய்த்தும் அன்று – தொலைவிலும் இல்லை
‘ பொய்கையிலிருந்து தொலைவில் உள்ளது ஆறு’ என்றால் சிக்கல் இல்லை; பொருளில் தெளிவு இருக்கிறது , ஆனால், ‘தொலைவிலும் இல்லை’ என்று உம்மை சேர்த்துச் சொல்லும்போது, ஐயம் வந்துவிடுகிறதல்லவா? இதுவே ஐய உம்மையின் தன்மை!

4 . எதிர்மறை உம்மை

‘பாரி நாளை இங்கு வருதலுக்கும் உரியவன்’- இங்கு வந்துள்ள உம்மையே எதிர்மறை உம்மை! தொடரின் உம்மையானது, ‘வராமைக்கும் உரியவன்’ என்ற பொருளைத் தருகிறது அல்லவா?
வருதலுக்கும் × வராமைக்கும்

எதிர்மறையான பொருளைத் தர முடிந்துள்ளதால் , ‘உம்’ , எதிர்மறை உம்மை எனப்படுகிறது!
5 . முற்றும்மை

‘தமிழக மூவேந்தர்களும் வந்தனர்’- இதில், ‘இருக்கும் வேந்தர்கள் மூன்று பேர்களுமே’ என்ற பொருளைச் சுட்ட உதவுவது ‘வேந்தர்களும்’ என்பதில் உள்ள இடைச்சொல்லான ‘உம்’தான்!
‘உன் மாங்காய் இரண்டையும் எனக்குக் கொடு’ – இங்கு, ‘அவன் வைத்திருக்கும் இரண்டு மாங்காய்களில் ஒன்றையும் மிச்சமில்லாமல்’ அவன் கேட்பது தெரியவருகிறது.
இவ்வாறு, தொடரில் வரும் ‘உம்’மானது, பேசப்படும் பொருள் முழுவதையும் தெரிவிப்பதால் அது முற்றும்மை!

6 . எண்ணும்மை

‘இராமனும் சோமனும் குயிலனும் வாணியும் எப்போதும் நல்லவர்கள்தாம் ’
இங்கு, ஆள் ஒவ்வொருவராக என்ணப்பட்டுச் செல்வதைக் காண்க; இதனால், இந்த உம்மைகளுக்குப் பொதுப்பெயர் ‘எண்ணும்மை’.

7 . தெரிநிலை உம்மை

‘உயரமாக இருக்கும் அது மலையும் அல்ல’- இத் தொடரில் ‘மலையும்’ என்பதனோடு வரும் ‘உம்’ , தெரிநிலை உம்மை; உயரமாக இருப்பதால் மலையோ என்று ஐயம் வரும்போது அதைத் தீர்க்கும் வகையில், அதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்துவது ‘உம்’தான்!

‘அடித்து விளையாடலாம் மட்டைப் பந்தும் அல்ல’ – இங்கு, அடித்து விளையாடலாம் என்றதும் , ‘மட்டைப் பந்தாக இருக்குமோ’ என்ற ஐயத்தைத் தீர்ப்பது ‘உம்’ இடைச்சொல்லே! இப்படித்,தெரிதல் பொருளைக் கொடுப்பதால் , இந்த உம்மை, தெரிநிலை உம்மை!
8 . ஆக்க உம்மை

‘வீட்டில் தோட்டம் போடுவது , நல்ல உடற்பயிற்சி; சமையலுக்குக் கறிகாயும் ஆயிற்று’ – இங்கு வந்துள்ள ‘ஆயிற்று’ என்பதைக் கவனியுங்கள்; இதையே ‘ஆக்கம்’ என்கின்றனர். ஆதலால். ‘கறிகாயும்’ என்பதன் ‘உம்’மே, ஆக்க உம்மை!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (574)

Post by Dr.S.Soundarapandian Sun Feb 13, 2022 11:26 am

தொல்காப்பிய இலக்கணம் (574)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ஓகார இடைச்சொல்!
பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவிசிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப ஓகாரம்மே (இடையியல் 8)

இவற்றுக்கான விளக்கத்தை வருமாறு காண்போம்.

1 . பிரிநிலை ஓகாரம்
‘இவனோ படித்தவன்;இருக்கட்டுமே என்றுதான் வேலைக்கு வைத்தேன்’ – இதில் ‘ஓ’ இடைச்சொல் வந்துள்ளதைக் காண்க. இந்தா ‘ஓ’தான், மற்றவர்களிலிருந்து அவனைப் பிரிக்கிறது!இதனால், ‘பிரிநிலை ஓகாரம்’!
இங்கே இன்னொன்றையும் நான் உங்களுக்குக் கூறவேண்டும்.
இடைச்சொல் என்பது செய்யுளுக்கு மட்டும்தான் உரியது என எண்ண வேண்டாம்!வழக்கிற்கும் இடைச்சொல் உரியதுதான்! இப்போது பார்த்த இந்த எடுத்துக்காட்டே இதற்குச் சான்று!

2 . வினா ஓகாரம்
‘மலரவன் போய்விட்டானே, அவன் சாப்பிட்டானோ?’- இத் தொடரில், ஈற்று ஓகாரம்தான் வினாவைக் காட்டுகிறது; இதனால் இது வினா ஓகாரம்!

3 .எதிர்மறை ஓகாரம்
‘அவன் ஊழல்காரன்; அவனுக்கோ ஓட்டுப்போடுவேன்’- இத் தொடரில், ‘அவனுக்கு ஓட்டுப் போடமாட்டேன்’ என்ர எதிமறைப் பொருள் வந்ததா? இந்த எதிமறைப் பொருளைத் தந்தது ‘ஓ’தானே? இதனால், இது எதிர்மறை ஓகாரம்!

4 . ஒழியிசை ஓகாரம்
‘அவன் திருடுவதற்கோ போனான்?’ – இதில் ‘திருடி வளமாக வாழலாம் எனும் எண்ணம் அவனுக்கு இல்லை’ என்ற பொருள் தொக்கி (ஒழிந்து) நிற்கிறது.
‘கொளலோ கொண்டான்’ – இதில், ‘அவன் பொருளை வாங்கிய நோக்கம் தான் வாழவா?ஏதோ பெரியவர் கொடுத்தார் என்று வாங்கிக் கொண்டான் ’ என்ற பொருள் தொக்கி நிற்கிறது.

5 . தெரிநிலை ஓகாரம்
‘இவன் முரடனோ? அல்லன்! இவன் கிறுக்கனோ? அல்லன்’- இத் தொடரில் ஓர் ஆராய்ச்சி நடக்கிறது! உண்மை தெரிவதற்கானா ஆராய்ச்சி இது! இதை ஏற்படுத்துவது ‘ஓ’ எனும் இடைச்சொல்தானே? இதனால்தாn இது தெரிநிலை ஓகாரம்!

6 . சிறப்பு ஓகாரம்
‘ஓஒ உன் உவமை மிகப் பொருத்தமாக இருக்கிறதே’- என ஆசிரியர் மாணவனைப் புகழ்வதில் ‘ஓ’ எனும் இடைச்சொல் உள்ளது; இது சிறப்பைத் தெரிவிப்பதால், ‘சிறப்பு ஓகாரம்’!
எடுத்துக்காட்டில் ஓகாரமும் ஒகரமும் வந்துள்ளதைக் கவனியுங்கள்! சிறப்புப் பொருண்மை தாங்கி,இப்படி வரும் ஓகாரம் எப்போதும் அளபெடை ஒகரத்துடன்தான் வரும்;தனியாக வராது.ஏனெனில் , உச்சரிப்பில் ‘ஓஒ’ என்ற ஒரு நீட்டம் கட்டாயம் வேண்டும்!அப்பொழுதுதான் ‘சிறப்புப் பொருண்மை’ கிட்டும்!
தொல்காப்பியம், எப்போதுமே மக்கள் நாவில் தமிழ் புழங்கும் வகையைக் கருத்திற் கொண்டே நடக்கிறது என்பதை மறவற்க!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (575)

Post by Dr.S.Soundarapandian Mon Feb 14, 2022 1:17 pm

தொல்காப்பிய இலக்கணம் (575)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இனி, ஏகார இடைச்சொல்!

தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை யிவ்வைந் தேகா ரம்மே (இடையியல் 9)

1 . தேற்றேகாரம்
‘அவனே அடித்தது; நான் பார்த்தேன்’ – இத் தொடரில் அடித்த ஆள் தெளிவாகச் சுட்டப்படுவதைக் காண்கிறோம். இத் தெளிவைத் தருவது எது? ‘ஏ’ எனும் இடைச்சொல்தான்! இதனால், இது தேற்றேகாரம்.
தேற்றம் – தெளிவு
தெளிவைத் தரும் ஏகாரமாதலால், தேற்றேகாரம்.

2 . வினா ஏகாரம்

‘அவளே தள்ளிவிட்டாள்?’ – என்ற தொடரில் உள்ள ‘ஏ’ இடைச்சொல்லானது ஒரு வினாப் பொருளைக் கொண்டுள்ளது; இதனால் இந்த ஏகாரம் ‘வினா ஏகாரம்’!
ஆனால், இப்போதைய நடையிற் கூறுவதானால், ‘அவளா தள்ளிவிட்டாள்?’ என்றுதான் கூறவேண்டும்!
எனவே , இந்த வினா ஏகாரம் காலத்தாற் பழைமையானது என்பது புலனாகிறது!

தொல்காப்பியம் கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டது என்பதர்கு இந்த இடமும் ஒரு சான்று!

ஏகாரத்திற்கு வினாப்பொருள் உள்ளதைக் கன்னட மொழியில் இன்றும் நாம் காணலாம்!
’அப்படியானால்?’ – தமிழ்
’அந்தரே?’ - கன்னடம்

கன்னடச் சொல்லின் ஏகாரம்தான், அங்கு வினாப்பொருளைத் தந்துள்ளது!

தமிழிலிருந்து பிரிந்த கன்னட மொழியானது, அது பிரிந்த காலத்துத் தமிழ்க் கூறுகளைப் பெற்றிருந்தன என்பதற்கு இந்த இடமும் ஒரு சான்று!
தொல்காப்பியமானது திராவிட மொழிகளின் ஒப்பாய்வுக்கு (Comparative Research in Dravidian Languages) அடிப்படைக் களம் தருவது என்பதை இப்போது நினைக்கவேண்டும்!

3 . பிரிநிலை ஏகாரம்
சேனாவரையர் எடுத்துக்காட்டுத் தொடர் – ‘அவருள் இவனே கள்வன்’
‘இவனே’ என்பதன் ‘ஏ’, ‘இவன்தான் கள்வன்; மற்றவர்கள் கள்வர்களில்லை ’எனக் கூற நிற்கிறது;இதனால் ‘ஏ’ எனும் இடைச்சொல், பிரிநிலை ஏகாரம் எனப்படும். ஒன்றைத் தனியாகப் பிரிக்க முடிந்துள்ளதால் , இந்த ஏகாரத்திற்குப் ‘பிரிநிலை ஏகாரம்’ எனப் பெயர்!

4 . எண்ணேகாரம்
தெய்வச்சிலையார் எடுத்துக்காட்டுத் தொடர் – ‘சொல்லே குறிப்பே ஆயிரண்டு எச்சம்’.
இத் தொடரில், சொல்லே, குறிப்பே … என்று வரிசையாக எண்ணுதல் நடப்பதைக் கவனிக்கலாம். இதனால், இந்த எண்ணுதல் வேலையை நடத்துவது, ‘ஏ’காரம் ஆதலால், இவ்வேகாரத்துக்கு, ‘எண்ணேகாரம்’ என்று பெயரானது.

5 . ஈற்றசை ஏகாரம்
பொதுவாக அகவற் பாக்களின் ஈற்றெழுத்தானது ‘ஏ’ ஆக இருக்கும். பாடலின் ஈற்றில் நிற்கும் இந்த ஏகாரத்திற்குப் பொருளில்லை. பாடலின் ஈற்றில் வரும் அசையாதலால், ‘ஏ’காரம் , ஈற்றசை எனப்படுகிறது.
சேனாவரையரின் எடுத்துக்காட்டுத் தொடர் – ‘கடல்போல் தோன்றல் காடிறந் தோரே’ (அகம்.1)
இவ்வடியின் ஈறானது ‘ஏ’ எனும் ஈற்றசையில் முடிவதைக் காணலாம்.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (576)

Post by Dr.S.Soundarapandian Tue Feb 15, 2022 10:43 am

தொல்காப்பிய இலக்கணம் (576)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘என’ – இந்த இடைச்சொல்லை இப்போது காண்பாம்.

வினையே குறிப்பே இசையே பண்பே
எண்ணே பெயரோடு அவ்வறு கிளவியும்
கண்ணிய நிலத்தே எனவென் கிளவி (இடையியல் 10)

இவற்றுக்கு, எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

1. வினைப் பொருளில்

‘இந்தா பிடி எனக் கொடுத்தான்’- இத் தொடரில் வந்துள்ள
‘என’வென்இடைச்சொல்லானது, வினைப் பொருளில் வந்துள்ளது.
இங்கே ‘என’ என்பது, ‘பிடி’ எனும் வினைச்சொல்லுக்கும் ‘கொடுத்தான்’ எனும் மற்றொரு வினைச்சொல்லுக்கும் இடையே வந்துள்ளதைக் கவனிக்க! இப்படித்தான் வினைப்பொருளில் வரக்கூடிய எனவென் இடைச்சொல்லானது வரவேண்டும்! இந்த நுட்பத்தை எனக்குச் சொன்னவர் கல்லாடனார்! “முன்னின்ற வினைச்சொல்லைப் பின்வரும் வினைசொல்லோடு இயைவித்த லென்னும் பொருண்மை” பெற்றது ‘என’வாகிய இடைச்சொல் என்றார் கல்லாடனார்!

2 . குறிப்புப் பொருளில்
‘அவளுக்குச் சுள்ளெனக் கோபம் வந்தது’ – இங்கே வந்துள்ள ‘என’ என்னும் இடைச்சொல்லானது , கோபத்தைக் குறிப்பால் தெரிவிக்கப் பயன்படுவது; இதனால் இந்த இடைச்சொல்லின் ஆற்றல்களில் ஒன்றாகக் குறிப்புப் பொருண்மை கூறப்படுகிறது தொல்காப்பியரால்.
3 . இசைப் பொருண்மையில்

அவள் கணீர் எனப் பேசுவாள் – இத் தொடரில் எனவென் இடைச்சொல்லானது, இசைப்பொருண்மையில் வந்துள்ளது.
இசை – ஓசை

4 . பண்புப் பொருளில்
சேனாவரையர் எடுத்துக்காட்டு – ‘வெள்ளென விளர்த்தது’

காலைப் பொழுது விடியும்போது, இருள் மாறி வெளிச்சம் வருமல்லவா? அதுவே இங்கு ‘வெள்ளென விளர்த்தது’ எனப்படுகிறது.
ஒளியானது வானில் பரவும் ஒரு பண்புதான் ‘வெள்ளென’ எனச் சுட்டப்படுகிறது. இவ்வாறு பண்பைச் சுட்டும் இடைச்சொல்லாக இங்கே ‘என’ வதுள்ளது.

5 .எண்ணுப் பொருண்மையில்

‘பறவையெனக் குருவியென விலங்கெனக் காட்டில் பல உள ’ – இத் தொடரில் ஒவ்வொன்றாக எண்ணப்படுவதைக் காணுங்கள்; ‘பறவையென …. குருவியென …’ என்று அடுக்கி வருவதே எண்ணப்படுதல்.
இப்படி எண்ணப் பயன்பட்டுவரும் ‘என’வுக்கே ‘எண்ணுப் பொருண்மை இடைச்சொல்’ என்பது பெயராகும்.


6 . பெயர்ப் பொருண்மையில்

முகிலன் என ஒருவன் இருந்தான் – இங்கே ‘என’வென் இடைச்சொல்லானது பெயர்ப் பொருண்மையில் வந்துள்ளது.
‘முகிலன் ஒருவன் இருந்தான்’ – இது தெளிவற்ற தொடர்.
‘முகிலன் என ஒருவன் இருந்தான்’ – இது தெளிவான தொடர்.

- இங்கே , ‘என’ என்னும் இடைச்சொல்லானது, ‘முகிலன்’ எனும் பெயரைத் தொடரில் நிலை நிறுத்துகிறது; ‘முகிலன்’ எனும் பெயர்ச் சொல்லோடு ஒட்டி நின்று, தனக்கென வேறு பொருளைக் கொள்ளாது,பொருள் பொதிந்த தொடராக ஆக்குகிறது. இவ்வாறு வருவதால் ‘என’வென் இடைச்சொல் பெயர்ப் பொருண்மையில் பயிலுகிறது என்கிறோம்.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (577)

Post by Dr.S.Soundarapandian Tue Feb 15, 2022 9:16 pm

தொல்காப்பிய இலக்கணம் (577)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது நாம் காணப்போவது, ‘என்று’ எனும் இடைச்சொல்!

என்றென் கிளவியும் அதனோ ரற்றே (இடையியல் 11)

‘என்று’ எனும் இடைச்சொல்லுக்கும் ஆறு பொருண்மைகள் உண்டு.

இவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு.

1 . வினைப் பொருண்மையில்

’கொரோனா வரும் என்று பயந்தான்’ – இங்கே, ‘என்று’ எனும் இடைச்சொல்லானது, ‘வரும்’ எனும் வினைக்கும் ‘பயந்தான்’ என்ற இன்னொரு வினைக்கும் இடையே வந்து, முதல் வினையான ‘வரும்’ என்பதனோடு ஒட்டிநின்று, அதைச் சிறப்பிக்கக் காணலாம்.
சேனாவரையர், ‘நரைவரும் என்று எண்ணி’ (நாலடியார் 11) என்ற தொடரைக் காட்டியுள்ளார்.

2 .குறிப்புப் பொருண்மையில்

‘மல்லிகை வாசனை கும்மென்று தூக்குகிறது’ – இங்கு பயின்றுள்ள ‘என்று’ எனும் இடைச்சொல்லாது, ‘கும்’மோடு சேர்ந்து, வாசனையின் தன்மையைச் சிறப்பிக்கின்றது. ‘கும்’ என்பது, குறிப்புச் சொல்; அதைச் சிறப்பித்து நிற்கும் இடைச்சொல்லே ‘என்று’.

3 .இசைப் பொருண்மையில்

‘ஙொய்யென்று காதில் ரீங்காரம் இட்டது கொசு’- இங்கு, ‘என்று’ எனும் இடைசொல்லானது ‘ஙொய்’ எனும் ஒலிக்குறிப்புச் சொல்லைச் சிறப்பித்து நிற்கக் காணலாம்.
சேனாவரையரின் எடுத்துக்காட்டு – ஒல்லென்று ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு (ஐந்திணை ஐம்பது 28).
ஒல்லென்று ஒலிக்கும் – ‘ஒல்’ என்று சத்தமிடும்
ஒலிபுனல் – ஓசை எழுப்பும் புனல்

4 .பண்புப் பொருண்மையில்

‘பச்சென்று பசத்தது’ – இது சேனாவரையரின் காட்டு.
இதில், பச்சைப் பண்பைச் சுட்டும் வகையில் நிற்கும் ‘பச்’ எனும் சொல்லைச் சிறப்பித்து , பச்சை நிறத்தை நம் மனத்தில் நிறுத்துவது ‘என்று’ எனும் இடைசொல்லே;இவ்வாறு பண்புகளோடு ஒட்டிநின்று அதனைச் சிறப்பிக்க வரும் இடைச்சொல்லைப் ‘பண்புப் பொருண்மை இடைச்சொல்’ என்பர்.

5 .எண்ணுப் பொருண்மையில்

அவரை என்று புடலை என்று கத்தரி என்று முருங்கை என்று பல கறிகாய்கள் !- இத் தொடரில் ‘என்று’ எனும் சொல் தொடர்ந்து அடுக்கி வருவதைக் காணலாம்; அஃதாவது காய்களை எண்ணி வருவதைக் காணலாம்.இதனால், இந்த இடைச்சொல் (’என்று’), ‘எண்ணுப் பொருண்மையில் வரும் இடைச்சொல்’ ஆயிற்று.

6. பெயர்ப் பொருண்மையில்

பேகன் என்றொரு வள்ளல் இருந்தான் – இதில், ‘என்று’ எனும் இடைச்சொல்லானது, தனக்கெனப் பொருள் எதையும் கொள்ளாது, ‘பேகன்’ என்ற பெயர்ச்சொல்லை அண்டி, அதனைச் சிறப்பிக்க வந்துள்ளதை நோக்குவீர்.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (578)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 16, 2022 1:46 pm

தொல்காப்பிய இலக்கணம் (578)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சற்று முன்பு விழைவு முறித்து வரும் ‘தில்’ எனும் இடைச்சொல்லைப் பார்த்தோமல்லவா?
தொல்காப்பியர் ‘அவ்வாறு வரும்போது அது தன்மை குறித்து மட்டுமே வரும்’ என்று மேலும் ஒரு பயன்மிகு குறிப்பை நமக்கு மறக்காமல் எழுதுகிறார்!:

விழைவின் தில்லை தன்னிடத் தியலும் (இடையியல் 12)

விழைவு – விருப்பம்
சேனாவரையர் முன்பு காட்டிய அதே எடுத்துக்காட்டை இங்கும் பொருத்தலாம்-
‘அரிவையைப் பெறுகதில் லம்ம யானே’ (குறுந். 14)

- இங்கே ‘தில்’ எனும் இடைசொல்லானது, ‘யான்’ என்ற தன்மை சார்ந்தே வந்துள்ளதைக் காண்க.
விழைவுப் பொருளில் வரும் ‘தில்’ எனும் இடைச்சொல், தன்மைப் பொருள் தவிர வேறு பொருளில் வருமா?
‘வராது!’ என்கிறார் சேனாவரையர். “…விழைவின் தில்லை தன்மைக்கண் வருதலும் மேலே பெறப்பட்டதனைப் பின்னுங் கூறினார் ஏனையிடத்து வாராதென்று நியமித்தற் பொருட்டு.”

‘ஏ’ , ‘ஓ’ ஆகிய இரு இடைச்சொற்கள் பற்றி மேலே பார்த்தோமல்லா?
இவற்றுக்கும் ஒரு கூடுதற் செய்தியை வரைகிறார் தொல்காப்பியர்-

தெளிவின் ஏயுஞ் சிறப்பின் ஓவும்
அளபின் எடுத்த இசைய என்ப (இடையியல் 13)

இதற்குச் சேனாவரையர் – “தெளிவின்கண் வரும் ஏகாரமும் ,சிறப்பின்கண் வரும் ஓகாரமும் அளபான் மிக்க இசையையுடைய என்று சொல்லுவர் ஆசிரியர்” என உரை கூறுகிறார்.

உண்டேஎ மறுமை – நச்சரின் இந்த எடுத்துக்காட்டில், ஏகார இடைசொல்லானது, தெளிவுதரும் ஒரு பணியைச் செய்கிறது; ‘உண்டே’ என அடித்துச் சொல்கிறது பாருங்கள்! இதுதான் தெளிவு.இங்கு ‘எ’, அளபெடையாக வந்துள்ளதைக் காண்க.

ஓஒ பெரியன் – சேனாவரையரின் இந்த எடுத்துக்காட்டில், ஓகார இடைச்சொல்லானது , சிறப்பின்கண் வந்துள்ளதையும் , உடன் ‘ஒ’ அளபெடை வந்துள்ளதையும் நோக்கலாம். ‘பெரியன்’ என ஒருவரைப் பெருமைப்படுத்திச் சொல்வதே , நூற்பா கூறிய ‘சிறப்பின்கண்’கூறுதலாம்.

அளபின் எடுத்த – அளபெடை பெற்ற
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (579)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 16, 2022 7:55 pm

தொல்காப்பிய இலக்கணம் (579)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த இடைச்சொல் ‘மற்று’!:


மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை
அப்பா லிரண்டென மொழிமனார் புலவர் (இடையியல் 14)

மற்றென் கிளவி – ‘மற்று’ எனும் சொல்லானது,
வினை மாற்று அசைநிலை – வினை மாற்றாகவும் அசைநிலையாகவும் என,
அப்பால் இரண்டென மொழிமனார் புலவர் - இரு பொருண்மைகளிலும் வரும் எனப் புலவோர் கூறுவார்கள்.
1 . வினை மாற்று

(அ) மற்றறிவாம் நல்வினை யாமிளையம் (நாலடியார் 9) – இது சேனாவரையரின் எடுத்துக்காட்டு.
‘நான் இப்போது இளைஞன்தான்; வயதான காலத்திலே நல்ல அறங்களைச் செய்தால் போதா?’ என நினைக்காமல் இப்போதே அறம் செய்யவேண்டும் என்பது கருத்து. இதில், ‘மற்றறிவாம்’ என்பதில் ஒளிந்துகொண்டுள்ள ‘மற்று’ என்பதுதான் நாம் தேடும் இடைச் சொல்! இந்த இடைச் சொல்லானது என்ன செய்கிறது? ‘பின்னாளிலே’ என்ற பொருளைத் தாங்கி நிற்கிறது! நல்வினை ஆற்றுவது எனும் வினையைப் பின்னே ஒரு நாளுக்குத் தள்ளிவிடுகிறது(மாற்றுகிறது) பாருங்கள், இதனால்தான் இதனை ‘ வினை மாற்று’ என்கிறார்கள்.

(ஆ) மற்றுங் கூடும் மனைமடி துயிலே (நற்றிணை 360)- இது நச்சினார்க்கினியரின் எடுத்துக்காட்டு.
மனைமடி துயில் – வீட்டில் தூங்கும் தூக்கம்
கூடும் – நிகழலாம்
மற்றும்- இன்னொரு நாள்

- இங்கே ‘பின்னாள்’ அல்லது ‘இன்னொரு நாள்’ எனும் பொருளைத் தருவது எது? ‘மற்று’ எனும் இடைச்சொல் அல்லவா? ‘இப்போது வினை நடவாது’ என அறிவித்து, வினை நடக்கும் காலத்தை மாற்றி விடுகிறதல்லவா, இதனால்தான் இதனை ‘வினை மாற்று’ என்பர்.

2 . அசைநிலை

சேனாவரையரின் எடுத்துக்காட்டுத் தொடர் – ‘அது மற்று அவலம் கொள்ளாது’(குறுந்.12)

இப் பாடல் அடிக்கு ‘அது வருத்தம் கொள்ளாது’ என்பதே. அவலம் – வருத்தம்; ஆகவே இடையில் நிற்கும் ‘மற்று’ எனும் சொல்லானது , அசையாகவே செயற்படுவது தெளிவு.

இடையியலில் அடுத்த இடைச்சொல் , ‘எற்று’!:

எற்றென் கிளவி இறந்த பொருட்டே (இடையியல்15)

எற்று என் கிளவி – ‘எற்று’ எனும் இடைச்சொல்,
இறந்த பொருட்டே – இறந்தது எனும் பொருள்பட வரும்.

நச்சர் , ‘இறந்த பொருட்டே’ என்பதற்கு, “ ‘ஒன்றினிடத்தினின்றும் ஒன்று போயிற்று’ என்னும் பொருண்மை உணர்த்துதல் உடைத்து” என விளக்குகிறார்.

‘எற்றென் உடம்பின் எழில் நலம்’- உரையாசிரிரியன்மார் தரும் எடுத்துக்காட்டு.
‘எற்றென் உடம்பின் எழில் நலம்’- இறந்தது என் மேனியின் அழகு நலம்; இங்கே , ‘எற்று’ எனும் இடைச்சொல்லுக்கு ‘இறந்தது’ எனும் பொருளைக் காண்கிறோம்.
இந்த இடைச்சொல் எல்லாம் நம் எழுத்திலும் , கவிதையிலும் இன்று பயிலாததால் நமக்கு இதெல்லாம் புதிதாக இருக்கிறது! இதுவே தமிழின் தொன்மையை(Antiquity of Tamil Language) நமக்குக் காட்ட வல்லதாகும்!
உரையாசிரியர்கள் காட்டும் இன்னொரு எடுத்துக்காட்டு – ‘எற்றேற்றம் இல்லாருள் யான் ஏற்றம் இல்லாதேன்’
எற்றேற்றம் = எற்று + ஏற்றம்
‘என் துணிவு இறந்தது; இப்போது பலர் துணிவற்றவர்கள்; இவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்’ என்பது எடுத்துக்காட்டுத் தொடரின் பொருள்.
இதனால்,‘எற்று’ எனும் இடைச்சொல்லுக்கு இறந்தது (கழிந்து போனது) என்ற பொருள் இருப்பதைக் காணலாம்.
எங்காவது ‘எற்று’ என்ற சொல் வந்தால், உடனே ‘அட நம்ப இடைச்சொல்’ எனப் பாய்ந்து விடாதீர்கள்! கீழ்வரும் தொடர்களைப் பாருங்கள்!

1 . பந்தைக் காலால் ஒரு எற்று எற்றினான்
இங்கே , ‘எற்று’ , இடைச்சொல் அல்ல! பெயர்ச்சொல்!
2 . ‘எற்று என்னை உற்ற துயர் ’(குறள் 1256)
இங்கு, ‘எற்று’, இடைச்சொல் ஆகாது! குறிப்பு வினைமுற்று! எற்று – எத்தன்மைத்து.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (580)

Post by Dr.S.Soundarapandian Thu Feb 17, 2022 12:55 pm

தொல்காப்பிய இலக்கணம் (580)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இனி, ‘மற்றையது’ எனும் இடைச்சொல்!:

மற்றைய தென்னுங் கிளவி தானே
சுட்டுநிலை யொழிய இனங்குறித் தன்றே (இடையியல் 16)

சேனாவரையரின் எடுத்துக்காட்டின்படி – ஒருவர் ஓர் ஆடையை உங்களுக்குக் காட்டுகிறார்; அது உங்களுக்குப் பிடிக்கவில்லை; அப்போது நீங்கள், ‘இது வேண்டாம், வேறொன்றைக் கொணருங்கள்’ என்கிறீர்கள்; இந் நேரத்தில், ‘மற்றையதைக் கொணருங்கள்’ என்றும் கூறலாம். ‘மற்றையது’ , இங்கே இடைச்சொல்.
இங்கு , மற்றையது – இன்னொன்று; இந்த ‘இன்னொன்று’ , இதே இனத்தில் , இதே பொருள் வகையில் இருக்கவேண்டும்; துணியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ‘மற்றையது’ , இன்னொரு துணியைத்தான் குறிக்குமே அல்லாமல், ‘இன்னொரு நகை’யைக் குறிக்காது!’. இதுவே ‘இனங்குறித்தல்’.
இனங்குறித்தன்று – இனத்தைக் குறித்தது
சுட்டு நிலை = சுட்டிப் பேசிக்கொண்டிருக்கும் பொருள்

நீங்கள் கேட்டபடி, இன்னொரு ஆடையைக் கடைக்காரர் உங்களுக்குக் காட்டுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது அவர், ‘மற்றையது இது’ எனக் கூறுகிறார் எனில், இங்கே ‘மற்றையது’, தன்னைத் தானே சுட்டிக்கொள்கிறது ; அதே இனத்தில் வேறு ஆடையைச் சுட்டாது. இந்த விளக்கமும் சேனாவரையரின் உரைக்கு மேல் விளக்கமே.

இங்கே நாம் பார்த்து மகிழ்ந்தது , 600,700 ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்துக் காட்சியாகும்!
இவ்வாறு ‘ தொல்காப்பிய உரைக் காட்சிகள்’ என்பதே தனித்து ஆயத்தக்க ஆய்வுத் தலைப்பாக (Research Topic)உள்ளது! இந்த ஆய்வு இதுவரை நிகழ்த்தப்படவில்லை!

இப்போது – ‘மன்ற’ எனும் இடைச்சொல்!

மன்றெவென் கிளவி தேற்றஞ் செய்யும் (இடையியல் 17)

மன்ற என்னும் சொல், தெளிவைத் தரும் – இதுவே நூற்பாப் பொருள்.
தேற்றம் - தெளிவு

சேனாவரையரின் எடுத்துக்காட்டு – ‘மடவை மன்ற வாழிய முருகே’ (நற்றிணை 34)
மடவை மன்ற- நீ மடையன்தான்!
வாழிய முருகே – முருகனே வாழ்வாயாக!
- இங்கே ‘மன்ற’ எனும் இடைச்சொல்லானது, ஒரு தெளிவைத் தருவதற்காக ஆளப்பட்டுள்ளதை நோக்கலாம்; ‘மடையனே’, ‘மடையன்தான்’ , ‘மடவையே’ என்பன தெளிவைத் தருதல் காண்க.
இதற்கடுத்த இடைச்சொல் – ‘தஞ்சம்’!:

தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே (இடையியல் 18)

எண்மை – எளிமை

சேனாவரையரின் எடுத்துக்காட்டு – முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் (புறம் 73)
முரசு கெழு தாயத்து – முரசானது முழங்கக் கூடிய எனது உரிமைச் சொத்தாகிய
அரசோ தஞ்சம் – அரசாட்சியை நான் கொடுப்பது எளிது
சோழன் நலங்கிள்ளி , தன் மீது நெடுங்கிள்ளி போர் தொடுத்தபோது கூறியது இது.
இங்கு, ‘தஞ்சம்’ எனும் இடைச்சொல் பயின்றுள்ளதை நோக்கலாம்.

‘உங்களையே தஞ்சம் என்று வந்தேன்’ என ஒரு பெண், ஆணிடம் கூறும் வேளையிl, ‘தஞ்சம்’, இடைச்சொல் அல்ல! பெயர்ச்சொல்!

நாம் பார்க்கபோகும் இடைச்சொல் ‘அந்தில்’!:

அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவியென்று
ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப (இடையியல் 19)

இதற்குச் சேனாவரையர், “அந்தில் என்னுஞ் சொல் ‘ஆங்கு’ என்னும் இடப்பொருள் உணர்த்துவதும், அசைநிலையும் என இரண்டாம்” என்றார்.

(அ)இடைச்சொல் ‘அந்தில்’ ,என்பது ‘ஆங்கு’ எனும் பொருளில் – ‘வருமே சேயிழை அந்திற், கொழுநற் காணிய’ (குறுந். 293). ‘அணிகலன்களைப் பூண்ட பரத்தை அங்கே தலைவனைக் காண வருவாள்’ என்பது பாடற் கருத்து. இங்கே ‘அந்தில்’ எனும் இடைச்சொல்லானது, ‘ஆங்கு’ எனும் பொருளில் வந்துள்ளதை நோக்கலாம்.
(ஆ)இடைச்சொல் ‘அந்தில்’ ,என்பது அசைநிலையாய் வருவது – ‘அந்திற் கச்சினனன் கழலினன்’ (அகம் 76). ‘இடுப்பிலே கச்சையும் , காலிலே கழலையும் உடைய’ ஆட்டனத்தியை இந்த அடி பேசுகிறது.
ஆட்டனத்தி – ஆட்டன் அத்தி; ஆட்டன் – ஆட்டக்காரன் ; நடனக்காரன்.
மேலை அடியில்,’அந்தில்’ எனும் இடைச்சொல்லானது, பொருட் குறிப்பு ஏதுமின்றி, அசைநிலையாக வந்துள்ளதைக் காணலாம்.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (581)

Post by Dr.S.Soundarapandian Thu Feb 17, 2022 6:47 pm

தொல்காப்பிய இலக்கணம் (581)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது ‘கொல்’ எனும் இடைச்சொல்!:

கொல்லே ஐயம் (இடையியல் 20)

’கொல்’ எனும் இடைசொல்லானது ஐயப் பொருளில் வரும்.

‘குற்றி கொல்லோ மகன் கொல்லோ’ எனக் ‘கொல்’ ஐயத்துக்கண் வந்தது என்றார் சேனாவரையர்.
ஓர் உருவம் எதிரில் தெரிந்தது; அது மரக்கட்டையா? ஆளா? தெளிவில்லை!
இந்த நிலையில்தான் அவன் ‘குற்றி கொல்லோ மகன் கொல்லோ’ என்கிறான்; இங்கே ‘கொல்’ எனும் இடைச்சொல்லானது ஐயப் பொருளை வெளிப்படுத்து நிற்கக் காண்கிறோம்.

அடுத்த இடைச்சொல் நூற்பா –
எல்லே இலக்கம் (இடையியல் 21)

சேனாவரையர் , “எல் என்பது இலங்குதற்கண்” என உரை கூறுகிறார்.
இலக்கம் - இலங்குதல் – விளங்குதல்; விளங்கித் தோன்றுதல்; நலம்பெற்றுத் திகழ்தல்.

அவரது எடுத்துக்காட்டு – எல்வளை (புறம் 24)
எல்வளை – ஒளிமிகு, சிறப்பான வளையல்
இதில், ‘எல்’ எனும் இடைச்சொல்லானது ’இலக்கம்’ எனும் பொருளில் வந்தமை காணலாம்.
விளங்கித் தோன்றுதலுக்கும் ‘எல்’லுக்கும் என்ன தொடர்பு?
விளங்கவில்லை!
இந்தச் சிந்தனை, சேனாவரையருக்கு வந்துள்ளது!
அதனால்தான் , “எல் என்பது உரிச்சொல் நீர்மைத்து ஆயினும் , ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையான், இடைச்சொல்லென்று கோடும்” என்றார்!
கோடும் – கொள்ளப்படும்
‘எல்’ எனும் சொல், அடிப்படையில் உரிச்சொல்லாகவே காணப்படினும், ஆசிரியர் இடைச்சொல் எனச் சொல்லிவிட்டதால் நாமும் அப்படியே எடுத்துக்கொள்வோம் என்பது சேனாவரையரின் தீர்ப்பு!
ஆசிரியர் - தொல்காப்பியர்
தொல்காப்பியரின் உரியியலில் ‘எல்’ இல்லை !
சேனாவரையர், தொல்காப்பியத்திற்கு எவ்வளவு மதிப்பளித்துள்ளார் என்பதை நாம் இங்கே நினைக்கவேண்டும்! இதுதான் பழந்தமிழ்க் கல்விமுறை (Ancient Educational System of Tamil Country)என்பதையும் நாம் உளங்கொள வெண்டும்!

மு.சண்முகம் பிள்ளை, தனது தொல்காப்பிய உரை நூலில் (முதற் பதிப்பு 2006), தந்துள்ள அடிக்குறிப்பு இங்கே எழுதத் தக்கது:
“இலக்கணக் கொத்து நூலாசிரியர் , ‘எல்லே விளக்கம்’ எனப் பாடம் கொண்டுள்ளனர். சொல்லதிகாரம் ஓர் ஏட்டுப் பிரதியில் ‘எல்லே இரக்கம்’எனப் பாடம் கோடற்கு ஏது உண்மையின் சிலர் ‘இரக்கம்’ எனப் பாடங் கொண்டு, ‘எல்லே இளங்கிளியே’ எனத் திருப்பாவையில் வரும் இப் பகுதியை உதாரணமாகக் காட்டுகின்றனர். இப் பாவை உரையாசிரியர் ‘எல்லே’ என்பதற்கு ‘என்னே’ எனப் பொருள் கொண்டுள்ளனர்.”
இக் கருத்து, தொல்காப்பியச் செம்பதிப்பு (Critical Edition of Tholkappiyam) ஆய்வு நோக்கில் இன்றியமையாததாகும்.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (582)

Post by Dr.S.Soundarapandian Fri Feb 18, 2022 10:18 am

தொல்காப்பிய இலக்கணம் (582)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘ஆர்’ எனும் இடைச்சொல்!:

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே (இடையியல் 22)

இயற்பெயர் முன்னர்- இயற் பெயர்கள் முன்னாலே,
ஆரைக் கிளவி – ‘ஆர்’ எனும் சொல் வரும்போது,
பலர்க்குரி எழுத்தின் – ‘ர்’ எனும் எழுத்துக் கொண்டு
வினையொடு முடிமே – முடியும் வினைச்சொல் முடிவு பெறும்.

கன்ணன் , சோமன், குட்டுவன் , அந்துவன் , நரி, நாய், அக்காள், அத்தான் – எல்லாம் இயற் பெயர்களே!
‘ஆர்’ எனும் இடைச்சொல்லைக் , ‘கண்ணன்’ முன்னே போட்டுக், ‘கண்ணனார்’ என நீங்கள் எழுத ஆசைப்பட்டால், அந்தத் தொடரை எப்படி முடிப்பீர்கள்? இதற்கு விதிதான் மேலைத் தொல்காப்பியரின் நூற்பாவில் உள்ளது!
கண்ணன் வந்தான் √
கண்ணனார் வந்தான் ×
கண்ணனார் வந்தார் √
மூன்றாம் தொடர்தான், பலர்க்குரி எழுத்தான ‘ர்’ கொண்டு முடியும் வினையான ‘வந்தார்’ என்ற சொற்கொண்டு நிறைவு பெறுகிறது!

இதே ‘ஆர்’ எனும் இடைச்சொல்லானது, அசைநிலைக் கிளவியாகவும் வரும் என்பது அடுத்த நூற்பா:
அசைநிலைக் கிளவி ஆகுவழி யறிதல் (இடையியல் 23)

அசைநிலைக் கிளவி – ‘ஆர்’ எனும் அசைச் சொல்லானது,
ஆகுவழி அறிதல் – தொடர்களில் வரும்; அந்த இடங்கள் வரும்போது அறிந்துகொள்க!
சேனாவரையரின் எடுத்துக்காட்டு –
(i)பெயரினாகிய தொகையுமா ருளவே (தொல்.சொல். 67)
தொகையும் +ஆர் = தொகையுமார்
இங்கு, ‘தொகையும்’ என்பதன் ஈற்று ‘உம்’மை அடுத்து, ‘ஆர்’ இடைச்சொல் வந்துள்ளதைக் கவனிக்க.
(ii)எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே(தொல்.எழுத். 61)
செல்லும் +ஆர் = செல்லுமார்
இங்கு, ‘செல்லும்’ எனும் ‘உம்’ ஈற்று வினை முன்னர் , ‘ஆர்’ இடைச்சொல் வந்துள்ளதைக் காணலாம்.

சேனாவரையர், ‘இப்படிப்பட்ட இரு வகைகளில்தான் ‘ஆர்’ அசையாக வரும்; வேறு வழியில் வராது’ என்று குறிக்கிறார்; குறித்த கையோடு, ‘சிறுபான்மை பிறாண்டு வருமேனும் கொள்க!’ என்று ஒரு பாதுகாப்புக்காகச் சொல்லியும் வைத்துள்ளார்!
’பிறாண்டு’ என்றால், பக்கத்து ஆளைப் பிறாண்டுவதல்ல!
பிறாண்டு = பிற ஆண்டு ; பிற இடம்
***

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (583)

Post by Dr.S.Soundarapandian Fri Feb 18, 2022 7:33 pm

தொல்காப்பிய இலக்கணம் (583)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஆர்’ இடைச்சொல்லை அடுத்து, இரு இடைச்சொற்களைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர் :
ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை
ஆயிரண் டாகும் இயற்கைய வென்ப (இடையியல் 24)

‘ஏ’ மற்றும் ‘குரை’ இரண்டு இடைச்சொற்களும் இசைநிறைக்கவும் அசைநிலைக்காகவும் வரும் என்பது நூற்பாக் கருத்து.

சேனாவரையர் எடுத்துக்காட்டுகளுக்கு விளக்கம் :

1 . ஏ – இசை நிறைக்க வரல்
ஏஎ யிஃதொத்த னென்பெறான் கேட்டைக் காண் (கலி.61)

இதில், முதற் சீருக்குக்காக – யாப்புக்காக – ‘ஏ’ எனும் இடைச்சொல் வந்துளது; இஃது எப்போதும் அளபெடையோடுதான் வரும் என்பதை முன்பே கண்டுள்ளோம்!

2 . ஏ – அசைநிலையாக வரல்
தெய்வச்சிலையார் எடுத்துக்காட்டு - ‘ஏ தெளிந்தேம்யாம்’
- இங்கே ‘ஏ’ , யாப்பு நோக்கில் வரவில்லை; வெறும் அசைநிலையாகவே இடப்பட்டுள்ளது.
3 . குரை- இசைநிறையாக வரல்
சேனாவரையர் எடுத்துக்காட்டு – ‘அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே’ (புறம் 5)
எடுத்துக்காட்டின் பொருள் – ‘கருணை மிக்க செயல் உனக்கு பெறுதற்கரிய அருமையுடைத்தது.’
ஈற்று நான்காம் சீருக்குக் ‘குரை’ எனும் இடைச்சொல் வேண்டும்; இல்லையாயின் அடி முழுமை பெறாது! ‘குரை’தான் வேண்டும் என்பதில்லை; வேறு எந்த இடைசொல்லை அந்த இடத்தில் எழுதினாலும் அதையும் ‘இசை நிறைக்க வந்தது’ என்றே குறிப்பர். இங்கே ‘குரை’யை வைத்து யாப்பைக் காப்பாற்றி உள்ளதால், ‘குரை’யானது, ‘இசைநிறை இடைச்சொல்’லானது.

4 . குரை – அசைநிலையாக வரல்
சேனாவரையர் எடுத்துக்காட்டு – ‘பல்குரைத், துன்பங்கள் சென்று படும்’ (குறள்1045)

இதில், முதற் சீரான ‘பல்குரை’ என்பதில், ‘குரை’ அசைநிலையாக வந்த அழகே அழகு! ‘குரை’ என்பதற்குப் பொருளே இல்லை(Expletive); ஒரு சீர் அசைப்புக்காகவே வந்துள்ளது. ‘குரை’தான் அசைப்புக்காக வரவேண்டும் என்பதில்லை; வேறு அசைகளும் வரலாம்,யாப்புக்கு ஊறு வராமல்!வள்ளுவர் தேர்ந்தெடுத்தது ‘குரை’!
அசைநிலை அமைப்பதிலும் நல்ல கவித்துவம் உள்ளது மேல் எடுத்துக்காடே சான்று! இலக்கியத் திறனாய்வில் (Literary Criticism) இது குறிப்பிடத் தக்கது!
‘கவித்துவ நோக்கில் அசைநிலைகள்’ (Expletives From Literary Criticism Standpoint) என்பதே தனித்து ஆயத்தக்க பெரிய ஆய்வுத் தலைப்பு!

இப்போது ‘மா’ எனும் இடைச்சொல்!:
மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல் (இடையியல் 25)

இதற்குச் சேனாவரையரின் ‘நச்’ உரை – “மாவென்னு மிடைச்சொல் வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய் வரும்”.

‘மா’ எனும் இடைச்சொல்லானது,பெரும்பாலும், ஒரு வியங்கோட் சொல்லை அடுத்தே வரும்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டு – ‘புற்கை யுண்கமா கொற்கை யோனே’
தெய்வச்சிலையாரின் எடுத்துக்காட்டு – ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’

உண்க , ஓர்க – இரண்டும் வியங்கோள் வினைச்சொற்கள்; இவற்றை அடுத்து, ‘உண்கமா’, ‘ஓர்கமா’ என்று ‘மா’எனும் இடைச்சொல் வந்துள்ளதைக் காணலாம்.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty தொல்காப்பிய இலக்கணம் (584)

Post by Dr.S.Soundarapandian Sat Feb 19, 2022 9:56 am


தொல்காப்பிய இலக்கணம் (584)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முன்னிலை அசைச் சொற்களை இப்போது காட்டுகிறார் தொல்காப்பியர் :

மியாஇக மோமதி இகும்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (இடையியல் 26)

சேனாவரையர் முதலானோரின் எடுத்துக்காட்டுகளை விளக்கமாகக் காணலாம்.

1. மியா – முன்னிலை அசைச்சொல்
‘கேண்மியா’ , ‘சென்மியா’ – என்பனவற்றில் ‘மியா’ வந்துள்ளதை நோக்கலாம்.
கேண்மியா = கேள் +மியா ; ’கேள்’ என்பதே பொருள்; ‘மியா’ , அசைச்சொல்.
சென்மியா = செல் +மியா ; ‘செல்’ என்பதே பொருள்; ‘மியா’ , முன்னிலை அசைச்சொல்;தனக்கு முன்னே நிற்பவரிடம் கூறுவதாக வருவதே ‘முன்னிலை.’

2 . இக – முன்னிலை அசைச்சொல்
“தண்டுறை ஊர காணிக எனவே ” – இவ்வடியில் ‘இக’ பயின்றுள்ளதைக் காணலாம்.
காணிக = காண்+ இக ;’காண்’என்பதே பொருள்; ‘இக’ முன்னிலை அசைச்சொல்.

3 . மோ- முன்னிலை அசைச்சொல்
சேனாவரையரின் காட்டு – ‘காமஞ் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந். 2)
மொழிமோ – மொழி; சொல்லு. ‘மோ’ , இங்கு முன்னிலை அசைச்சொல்; தனக்கு முன்னே இருக்கும் வண்டைப் பார்த்துக் கூறுவதாக வந்துள்ள நடையைக் கவனிக்க.

4 . மதி - முன்னிலை அசைச்சொல்

‘உரைமதி வாழியோ வலவ’ என்பதில்,
உரைமதி –உரை; உரைப்பாய்
இதில் ‘மதி’ எனும் இடைச்சொல் வந்துள்ளது; இது முன்னிலை அசையாகவே நிற்கிறது;எதிரில் இருப்பவரைப் பார்த்து ‘உரை’ என்பதாக வருகிறதல்லவா?

5 . இகும் – முன்னிலை அசைச்சொல்

‘மெல்லம் புலம்ப கண்டிகும்’ - இங்கு, வந்துள்ள, கண்டிகும் = காண்.எதிரில் நிற்பானைப் பார்த்துக் கூறுவதாக அமைவதால் ‘இகும்’, முன்னிலை அசை ஆயிற்று ; ‘இகும்’ என்பதற்கு வேறு எப்பொருளும் இல்லை என்பதையும் கவனிக்க.

6 .இசின் – முன்னிலை அசைச்சொல்

‘காப்பும் பூண்டிசின் கடையும் போகலை’ (அகம் 7) ; இங்கு, பூண்டிசின் = பூண். தனக்கு முன்னே நிற்பாரிடம் மொழிவதாக இருப்பதால், ‘முன்னிலை’; ‘இசின்’ என்பதற்குப் பொருள் இல்லையாதலால், அசைச்சொல்.

மேல் ஆறு முன்னிலை அசைச்சொற்களையும் காட்டிய கையோடு தொல்காப்பியர் என்ன வரைகிறார் பாருங்கள் :

அவற்றுள்
இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடும்
தகுநிலை யுடைய என்மனார் புலவர் (இடையியல் 27)

முதலில் ஆறு இடைச்சொற்களும் முன்னிலை அசைச்சொற்களாகவே வரும் என்று சொல்லிவிட்டு, இப்போது ‘ஆறில், ‘இகும்’, ‘ சின்’ ஆகிய இரண்டும் ஏனை இரு இடங்களிலும் வரும் என்று புலவோர் கூறுவர்’ என்கிறார்!

இப்படிச் சொல்வதற்கு என்ன காரணம்?

‘ஆறும் முன்னிலை அசைச்சொற்களாக வரும்’ என்பது தொல்காப்பியர் படித்த இலக்கணம்! அவர் காலத்திற்கு முன்பு இருந்த இலக்கணம்! ஆனால், அவர் காலத்தில் பல இலக்கியங்கள் புதிதாகத் தோன்றிவிட்டதால், இலகண வளர்ச்சி ஏற்பட்டது; வழக்கிலும் வளர்ச்சி ஏற்பட்டது; இவற்றை உள்ளடக்கி இலக்கணம் செய்யவேண்டிய பொறுப்பானது தொல்காப்பியருக்கு ஏற்பட்டது; அகத்தியம் முதலான பழைய நூற்கள் இருந்தாலும் வளர்ச்சிகளை உள்ளடக்கிப் புது இலக்கணம் எழுதும் தேவை ஏற்பட்டது; அப்படி எழுதப் புகுந்ததால்தான், வளர்ச்சி நிலைகளைப் பழைய இலக்கணத்திற்கு அடுத்து வைத்துச் சென்றுள்ளார். ‘புறனடை’ நூற்பாக்களையும் இக் கண்ணோட்டத்துடனே நாம் அணுக வேண்டியவர்களாக இருக்கிறோம்!

இப்போது நூற்பாவுக்கு வருவோம்:
“இகும், சின் ஆகிய அசைகள், முன்னிலை இடத்துக்கு மட்டுமல்லாது, தன்மை, படர்க்கை ஆகிய இடங்களிலும் பயின்று வரும்”என்பது நூற்பாப் பொருள்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கிக் காண்போம்.

1 . இகும் – தன்மை, படர்க்கை இடங்களுக்கும் வரல்

‘கண்டிகும் அல்லமோ’ (ஐங்.121); கண்டிகும் – கண்டோம்;‘கண்டோம் அல்லவோ’ என்பது பொருள்; இங்கே ‘இகும்’ எனும் அசைநிலையாம் இடைச்சொல், தன்மை இடப்பொருளில் வந்துள்ளது தெரிகிறது.

‘புகழ்ந்திகும் அல்லரோ பெரிதே’; புகழ்ந்திகும் – புகழ்ந்தார்; ‘புகழ்ந்தார் அல்லரோ பெரிதே’ என்பது பொருள்; இங்கே ‘இகும்’ எனும் அசைநிலை இடைச்சொல், படர்க்கை இடப் பொருளில் நிற்கக் காண்கிறோம்.

2 . சின் – தன்மை, படர்க்கை இடங்களுக்கும் வரல்

‘கண்ணும் படுமோ என்றிசின் யானே’ ; என்றிசின் – என்றேன். இவண், ‘சின்’ எனும் அசைச்சொல்லானது, தன்மை வினையொடு வந்ததைப் பார்க்கிறோம்.

’யாரஃ தறிந்திசி னோரே’ (குறுந்.18); அறிந்திசினோர் – அறிந்தவர்; இங்கே, ‘சின்’னானது, படர்க்கை இடத்தில் பயின்றதைக் காணலாம்.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) Empty Re: தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை