புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
418 Posts - 48%
heezulia
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_m10 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:39 pm

First topic message reminder :

அபினவ - ஸ்நாப்

பாங்கியில் இருந்த இரண்டாயிரத்துச் சில்லறை ரூபாய் ஒத்தி வைக்கப்பட்ட - மாஜி மந்திரி வாசஸ்தலமாக இருந்த பங்களாவிற்கு எதிர்வீடு 'ஸ்ரீ நிவாஸ்' ஆனபொழுது, வரதவேங்கடராமன் அபினவ - ஸ்நாப் ஆனார். இந்த விபத்து ஏற்படுமுன் சென்னையின் தொண்ணூற்று ஒன்பதாவது பெரிய குடும்பஸ்தன், சந்துபாய் லல்லுபாய், சணல், வெங்காய வியாபாரக் கம்பெனியின் ஹெட்குமாஸ்தா. அவருக்கு ஒன்பதாவது வயதில் ஆனி மாதம் (நல்ல சுப லக்கினத்தில்தான்) இந்த விபத்து ஏற்பட்டது.

ஸ்நாப் என்றால் என்ன என்பதைச் சொல்லிவிடுகிறேன். நாகரீகமானவர்கள், நல்லவர்கள் (முக்கியமாக மெஜாரிட்டியினர்) அங்கீகரிக்கும் கொள்கைகளை, செய்யும் காரியங்களை ஒப்புக் கொள்வதற்காக, தானும் பின்பற்றுவதாகப் பாவனை செய்தல். அஸ்திவாரமில்லாத கட்டடமாகையால் எப்பொழுதும் மூக்கு கொஞ்சம் நெற்றிக்குமேல் உயர்ந்து காற்றில் மிதக்கும். நாசி நுனியில் பார்வையை நிறுத்தினால் என்னவெல்லாமோ தெரியும் என்பார்கள் யோகிகள். தங்க விளிம்பு கண்ணாடி வழியாக மூக்கின் நுனியில் ஸ்நாப்களின் பார்வை கவிந்தே இருக்கும். அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மாத்திரம் நிச்சயமாகத் தெரியும். எதிரில் நிற்கும் உம்மையும் நம்மையும் போன்ற சாதாரண பேர்வழிகள் மனிதப் பிராணிகளாகக் கூட அவர்களுக்குத் தோன்றாது.

ஸ்ரீமான் வரத வேங்கடராமன், இருளப்பன் சந்து 49-ம் நம்பர் வீட்டு மாடியில் ஐந்து குழந்தைகளுடன் (மனைவி ஒன்றுதான்) இருந்தபொழுது - முதல் மகன் சர்வீஸ் கமிஷன் பாஸ் பண்ணி வீட்டிலிருக்கிறான்; ரங்கநாயகிக்குக் கூடிய சீக்கிரத்தில் சாந்தி நடத்த வேண்டும் - கடன் வாங்கத் தெரியும்; மிச்சம் பிடிக்கத் தெரியும்; லல்லுபாய் கணக்குகளை ஆடிட் செய்யத் 'தயார்' பண்ணவும், குடும்பத்தின் நுணுக்க விவகாரங்களில் உள் வீட்டு மந்திரியுடன் அபிப்ராய பேதம் கொள்ளவும் தெரியும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'ஹிந்து' பத்திரிகை என்று ஒன்று இருப்பதாகத் தெரிந்துகொண்டார். அவரது கடைசிப் பதிப்பு - ஆப்டோ ன் படங்கள் அடங்கியவை அல்ல - சிந்தாமணிப் பாட்டுப் பாடியபொழுது தமிழில்கூட பேசுகிற பயாஸ்கோப் வந்துவிட்டதாகத் தெரிந்து கொண்டார்.

அன்று சேட்ஜி விஷயமாக - சென்னையில் வடக்கத்தியார் யாவரும் 'சேட்ஜி' தான் - லஞ்ச் ஹோம் பக்கமாகப் போனபொழுது அந்தத் தறிதலை மணி அவரை ஹோட்டல் வாசலில் சந்தித்தான். காப்பி சாப்பிட்டு முடியுமுன் புது மாம்பலம் 'ஸ்ரீ நிவாஸ்' அவர் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. பாங்க் டிபாஸிட் அப்புறம் பெயர் மாறியது. சில்லறை விஷயந்தானே. அன்றைக்கு வீட்டுக்குப் போகும்போது அவருடைய நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொண்டது. ஆனால் தெய்வ சங்கல்பமாக, பூக்காரன் கை நிறைய கனகாம்பரமும் கொஞ்சம் நீளமாகவே கதம்பமும் கொடுத்துவிட்டுப் போயிருந்தது அவருக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நெஞ்சு அவ்வளவு வேதனைப்பட்டிருக்காது.

பூரண சுதந்திரம் அடைந்துவிட்டால் நமக்கெல்லாம் எவ்வளவு குதூகலம் இருக்குமோ அவ்வளவு கண்மண் தெரியாத மகிழ்ச்சி இருளப்பன் சந்து 49-ம் நம்பர் மாடியில். பங்களாவை வாங்கி விட்டதாகவே நினைத்துவிட்டாள் சகதர்மிணி. செய்தி கிடைத்த அரைமணி நேரத்துக்கெல்லாம் கீழே வசிக்கும் ஒட்டுக் குடித்தனங்களுக்கெல்லாம் டபிள் காலம் பதிமூன்று திக்கில் ஸ்ட்ரீமர் தலைப்பு அலங்காரங்களுடன் விசேஷப் பதிப்பு விநியோகிக்கப்பட்டது. வேறு என்ன சொல்ல வேண்டும்? அன்று ஸ்ரீமான் வரத வேங்கடராமன் அவரது குடும்பத்தினர் முன் 'மாபெரும் வீரராகவே' திகழ்ந்தார். விசுவரூப தரிசனம் குடும்ப நபர்களுக்குக் கிட்டியது என்னலாம்.

"அப்பா ஒரு கூச் வச்சிப்பிட்டா நீ காலம்பர ஒன்பதுக்குள்ளேயே எலக்ட்ரிக் ட்ரெயினிலே போயிடலாம். ஒரு செக்கண்ட் கிளாஸ் பாஸ் வாங்கினாப் போரது..." என்றான் 'கருவிலுருவாகும்' கவர்மெண்ட் குமஸ்தா.

"நம்ம ரங்கத்துக்கு வர்ற ஆவணியிலேயே நல்ல நாளாய்ப் பார்த்து நம்ம பங்களாவிலேயே மோஸ்தராகச் செய்யணும்" என்றாள் கனகாம்பரம் - வைக்கோல் போரைச் சுமந்த சகதர்மிணி.

"இதிலென்ன பிரமாதம்" என்றார் ஸ்ரீமான் வரத வேங்கடராமன், சிவபுரியை ஆசமனம் பண்ணிக்கொண்டு.


கம்பன் தன் கதாபாத்திரத்தின் பூரிப்பைக் குறிக்க, 'வாம மேகலையினுள் வளர்ந்த தல்குலே' என்கிறான். ஆனால் எனது ஜுனியர் கனகாம்பரம் - வைக்கோல் போர் கதம்பத்தின் உள்ள நிகழ்ச்சி பற்றி எனக்குத் தகவல் இல்லை.

சின்னமணியின் சிந்தாமணிப் பாட்டுகளுக்குப் பதிலாக 'ஸ்ரீ நிவாசில்' ரேடியோ வைத்துவிடுவது என்று நிச்சயமாயிற்று...

மாஜி இருளப்பன் சந்து 49ம் நெ. மாடிவாசியை இப்பொழுது உங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அவர் ஸ்ரீ.வி.வி.ராமன். பித்தளை போர்ட் தொங்குகிறதே, அதைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது அவர் டவுனில் 'பிஸினஸ்' பண்ணுகிறார் (தொழில் மாறவில்லை - சந்துபாய் லல்லுபாயில் ஆடிட்டுக்கு கணக்கு 'தயார்' செய்வதுதான் - பெயர் மாறிவிட்டது). காலை ஒன்பது மணிக்கு சுந்துவின் வேகாத உருளைக்கிழங்கு சாம்பார் - விட்டமின் போகாதிருக்க - உள்ளும் உணர்வும் சுடும் ரஸம், அதற்கெதிர்த்த தன்மை படைத்த தயிர் இவற்றைக் கனவேகமாக உள்ளே செலுத்திவிட்டு கனவேகமாக செகண்ட் க்ளாஸில் - பாஸ் வாங்கியதன் பயனாக - நின்றுகொண்டே பீச் ஸ்டேஷன் வரை யாத்திரை - இந்தப் பேறுகள் யாவும் ஸ்ரீமான் வி.வி.ராமனுக்கு.

இரண்டாயிரத்துச் சில்லறைக்கு மாறிய 'ஸ்ரீ நிவாஸ்' ரெடிமேட் செமண்ட் விஷயமானாலும் ஜப்பான் சரக்கைப் போல மினுக்குள்ளது. அதோடு எதிர் பங்களா மாஜி சுகாதார மந்திரி வசித்த இடம்.

ரங்கத்தின் சாந்தி ஏகமோக்களா. விசேஷ கலாபவனத்தில் மட்டிலும் பிரத்யேகமாகக் கீழைப் பிரதேச நாட்டியத் திறமையை விளக்கும் குமாரி பானுசுமதி - பங்கஜத்தின் பரத நாட்டியம். 'ஸ்ரீ நிவாசில்' கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? சாக்ஷாத் சர்க்கார் செக்ரடரியேட்டில் ஆயுளில் முக்கால்வாசியைக் கழிக்கும் பெரிய உத்யோகஸ்தர்கூட வந்திருந்தார். குமாரி பானுசுமதி - பங்கஜத்தின் நாட்டியமென்றால் சகாரா பாலைவனத்திலும் கூட அவரைப் பார்க்க முடியும் என்பது ஸ்ரீமான் வி.வி.ராமனுக்குத் தெரியாது.

குமாரி பானு... இத்யாதி இத்யாதிக்கு சங்கீதத்திலும் பிரபலம். பலர் 'சபாஷ்!' சொன்னார்கள். 'ஐயோ...!' நீட்டலாகச் சொல்லி நயத்தில் தெவிட்டி மகிழ்ந்தார்கள்.

"சங்கீதம் ஒரு சமுதாயத்தின் ஜீவநாடி!" என்றார் ஒரு மாஜி நீதிபதி நரைத்தலையை ஆட்டிக்கொண்டு.

"ஜீவநாடியின் துடிதுடிப்பு என்று சொல்லுங்கள் சார்!" என்றார் சகாராவுக்கும் துணியும் தீர உத்யோகஸ்தர்.

'மனமாகிய மாயையிலே
அருளாகிய கோவிலிலே'

என்பதற்கு அபிநயம் பிடித்தாள் குமார் பானுசுமதி இத்யாதி.

"நாட்டியம் என்றால் குமாரி, குமாரி என்றால் நாட்டியம்" என்று சொன்னார் விசேஷ கலாபவன நிரந்தர பிரஸிடண்ட்.

"ஆர்ட்ன்னா கலை, கலைன்னா ஆர்ட்" என்றார் தமக்கு இங்கிலீஷ் தெரிந்ததாக நினைத்துக் கொண்ட சங்கீத பூஷணம் பால கந்தர்வ தாதாசார்யார்.

"ஆஹா!" என்றார் அவரது பின்பாட்டுக்காரர்.

"என்னடா பாபு, சங்கீத பூஷணத்தை ரொம்ப நாளாக் கேட்கல்லியே, வர்ற சீசன்ல ஒரு ஸ்பெஷல் வீக் (வாரம்) ஒதுக்கிவிடு" என்று உத்தவரவு போட்டார் மாஜி நீதிபதியொருவர்.

"கம்பன் சொல்ரான் பார் ஒரு இடத்திலே..." என்று ஆரம்பித்தார் ஒரு கலாரஸிகர்...

"அதெல்லாம் உள்ளுணர்வு சார்... அந்த சமுதாயத்திலே துன்பமும் இல்லை. மரணமும் இல்லை. சாயுஜ்ய பதவி ஸார். கனவு லோகம் - ஞானரதம்" என்று அடுக்கிக்கொண்டே போனார் ஒரு ஆர்ட் கிரிடிக்.


ஸ்ரீமான் வி.வி.ராமனுக்கு இது ஒன்றும் புரியவில்லை. அவரது சங்கீத ஞானம் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ குட்டி பாலர் வகுப்பு, 'தந்தம் தந்தம் தனதினனா! தந்திரக் குரங்கின் மோசம் பார்' என்ற அளவிலேயே நின்றுவிட்டது. ரங்கத்தின் ஞானம் ஞாயமாக எல்லாரும் புரிந்துகொள்ளும் பெட்டி வாசிப்புடன் நின்றுவிட்டது. அவளுக்கும் பரத நாட்டியம் ஒரு புது தினுசு சர்க்கஸ் மாதிரி இருந்தது. தகப்பனாருக்கும் பெண்ணுக்கும் இந்த விஷயத்தில் ஏகமனதான அபிப்பிராயம். ஆனால் வந்திருந்தவர்களுடன் கலை பேசினார்கள். ஸ்ரீமதி ராமன் பதிர்பேணி சிருஷ்டியில் ஈடுபட்டிருந்தால் சிரமமில்லாமல் போயிற்று. இல்லாவிட்டால், 'ஏண்டி இவள் இப்படி அம்மணமா வந்து ஆடறாள்' என்று வெடிகுண்டு ஏறிந்திருப்பாள். நாட்டியத்தின் விளைவாக ஸ்ரீ.வி.வி.ராமன் விசேஷ கலாபவனத்தின் கௌரவ அங்கத்தினர் ஆனார்.

27-வது அகில இந்திய சங்கீத மகாநாட்டில் 'பரத நாட்டியமும் ஆத்ம பலமும்' என்ற பொருள் பற்றி அரிய உபன்னியாசம் செய்தார். பையன் குமாரியின் சதங்கை ஒலியில் சிதறிப் போகாமலிருந்த காரணம் காட்பாடியில் ஸ்பெஷல் மலேரியா எதிர்ப்பு உத்யோகஸ்தர் பர்ஸனல் கிளார்க்காகச் சென்றதுதான். இல்லாவிட்டால் பையனும் கலை பண்ண ஆரம்பித்திருப்பான்.

'ஸ்ரீ நிவாஸ்' வாழ்வு குஷாலாகக் கழிந்தது என்றாலும் குடும்ப வரவு செலவுக் கணக்கு, வாராவாரம் நடைபெறும் விசேஷக் கலை வகுப்புகள் முதலியவற்றின் விளைவாக நிரந்தரமாக பிரஞ்சு பட்ஜெட்டாக - நஷ்டக் கணக்கு - மாறியது. மாதத்தின் சில தேதிகள் குடும்ப எரிமலைகள் சீறின என்றாலும் நெருப்புக் கக்கும் நிலையை எட்டவில்லை.

அன்று ஒரு ஞாயிற்றுகிழமை. 'ஸ்ரீ நிவாஸ்' ரேடியோ ஸ்ரீமான் உச்சி பாகவதரின் கிராமிய கீதங்கள் யந்திர கமறலுடன் பாடிக் கொண்டிருந்தது...

அப்பொழுது தறிதலை மணி வந்தான்.

"என்னடா மணி காண்றதே இல்லியே! ஏண்டா குமாரியின் ஆத்மிக டான்ஸ்க்கு வரலே... அன்னிக்கு சபையில் கிருஷ்ணன் வந்து பொன் கொரல்லே உபதேசம் பண்ணாப்லே இருந்தது. நம்ம நாகரீகத்து ஜீவத் துடிதுடிப்புடா? உள்ளுணர்வு அப்படியே பேசித்து; மயிர்க் கூச்சலிட்டதா!" என்று பரவசப்பட்டார்.

"அது சரிதான்டா, பங்களாவை மீட்கலாம்னு நினைக்கிறேன், என்ன சொல்றே!"

"எனக்கே கொடுத்திடேன்" என்று வார்த்தை பின்தங்கியே வந்தது.

"இல்லடா, அதுமேலே எனக்கு ஒரு பற்றுதல்; அது என் அதிர்ஷ்ட சக்கரம்" என்றான் மணி.

ஸ்ரீமான் வரத வேங்கடராமன் நிம்மதியாக மூச்சுவிட்டார். இருளப்பன் சந்துக்குப் போவதா, மாரியப்பன் தெருவுக்குப் போவதா என்று அவர் மனம் பிளான் போட ஆரம்பித்தது.

"அன்னிக்கு உடம்புக்கு என்னமோன்னியே, டொமாட்டோ சாப்பிடு, எல்லா விட்டமினும் இருக்கு" என்று உபதேசம் செய்தார் கடைசி முறையாக ஸ்ரீ வி.வி.ராமன். அதற்கப்புறம் அவர் குமாஸ்தா வரத வேங்கடராமனாகிவிட்டார்.

ஜோதி, அக்டோபர் 1938





 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:50 pm

2

கோபாலய்யங்கார் சிறிது கஷ்டப்பட்டு ஒரு பிராமணப் பரிசாரகனை நியமித்தார். சம்பளம் இருபத்தைந்து ரூபாய் என்ற ஆசையும், கலெக்டர் அய்யங்கார் என்ற பயமும் இருந்தால் ஒரு ஏழைப் பிராமணன் அகப்படாமலா போகிறான்?

ஆனால் கலெக்டருக்கும் பரிசாரகனுக்கும் ஒரு சமரச ஒப்பந்தம். கோபாலய்யங்கார் தஞ்சை ஜில்லாவிற்குப் பூராவாகவும் எதேச்சாதிகாரியாக இருப்பது என்றும், சமயலறையைப் பொறுத்தமட்டில் பரிசாரகன் சுப்புவய்யர் தான் எதேச்சாதிகாரி என்றும், சமயலறைப் பக்கம் கலெக்டர் அய்யங்காரோ கலெக்டர் அம்மாளோ வரக்கூடாது, பாத்திரங்களைத் தொடக்கூடாது, இருவருக்கும் பரிமாறுவதும் சமையல் செய்வதும் சுப்புவைய்யரின் வேலை என்றும் திட்டமாயிற்று.

சாப்பாட்டுப் பிரச்சனை ஒருவாறு முடிந்ததும், கோபாலய்யங்கார் தமது கலெக்டர் தொழிலையும் காதல் கனவையும் அனுபவிக்க முயன்றார். கலெக்டர் வேலை பரிச்சயமானது. ஆனால் காதல்...

மீனாளுக்குப் பயமும், கோபாலய்யங்காரின் மீது மோகமும் தான் இருந்து வந்தன. அதிலும், அவர் பயிற்சி செய்வித்த மருந்தில் கொஞ்சம் பிரேமையும் விழுந்திருந்தது.

ஒருநாள் சாயங்காலம்.

கோபாலய்யங்கார் ஆபீஸிலிருந்து வந்து, தமது ஆங்கில வேஷத்தைக் களைந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது மீனாள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அய்யங்கார் 'டிரஸ்' செய்வதைப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு பிரேமை. ஆச்சரியம்.

கோபாலய்யங்கார் ஒரு முத்தத்தை எதிர்பார்த்தார். ஆசை இருந்தாலல்லவோ, பாசம் இருந்தால் அல்லவோ?


கோபாலய்யங்காருக்குச் சிறிது ஏமாற்றமாகவிருந்தது.

"மீனா! என் பேரில் உனக்குக் காதல் இருக்கிறதா?" என்றார்.

மீனாவுக்கு அர்த்தமாகவில்லை. சிறிது தயங்கினாள்.

"அப்படிண்ணா?"

கோபாலய்யங்காருடைய ஏமாற்றம் சிறிது கோபமாக மாறியது.

"என் பேரில் பிரியமில்லை போலிருக்கிறது!" என்றார்.

"என்ன சா... என்னாங்க அப்புடிச் சொல்லுறிய? உங்க மேலே புரியமில்லாமலா?" என்று சிரித்தாள் மீனாள்.

"வந்து இவ்வளவு நேரமாக ஒரு முத்தமாவது நீயாகத் தரவில்லையே?"

"எங்க ஜாதியிலே அது ஒண்ணும் கெடையாது இப்போ?" என்றாள்.

கோபாலய்யங்காருக்குச் சுறுக்கென்று தைத்தது. நல்ல காலமாக சுப்புவைய்யர் காப்பியைக் கொண்டு வந்து கொடுக்க உள்ளே நுழைந்தார். கோபம் அவர் மேல் பாய்ந்தது.

"தடியா! காப்பியை வைத்துவிட்டுப் போ!" என்று இரைந்தார்.

அய்யங்காருக்கு கொஞ்சம் 'டோஸ்' ஜாஸ்தி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு போய்விட்டார் பரிசாரகர்.

நாட்களும் வெகுவாக ஓடின. கோபாலய்யங்கார் ஒரு பொம்மைக்குக் காதலுயிர் எழுப்ப பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார். இதில் தோல்வி இயற்கையாகையால் மது என்ற மோகனாங்கியின் காதல் அதிகமாக வளர ஆரம்பித்தது.

மீனாளுக்கு இந்தச் சாப்பாட்டுத் திட்டம் வெகு நாட்களாகப் பிடிக்கவில்லை. தான் பணிப்பெண்ணாக இருக்கும்பொழுது வேளா வேளைகளில் கிடைக்கும் பிராமண உணவு இப்போது வெறுப்பைத் தருவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தகப்பனார் வீட்டில் நடக்கும் சமையலைப் பற்றி ஏங்கவாரம்பித்தாள். தனக்குத் தானே சமைத்துக் கொள்ள அனுமதி கேட்கப் பயம். ஆபீஸ் பியூன் கோபாலக்கோனார் கலெக்டர் வீட்டு வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்ட கிழவன். அவன் வேளாவேளைகளில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் சாப்பிடும்பொழுது அவளுக்கு நாவில் ஜலம் ஊறும்.

வீட்டினுள் இருந்து கண்ணீர் விடுவாள். அவளுக்குக் குழந்தையுள்ளம்; கேட்கவும் பயம்.

கோபாலக் கோனார் அனுபவம் உள்ள கிழவன். இதை எப்படியோ குறிப்பால் உணர்ந்து கொண்டான். ஒருநாள் ரகஸியமாக மாமிச உணவு தயாரித்து வந்து, அவளுக்குக் கொடுத்தான். அவளுக்கு அவன் மீது ஒரு மகளின் அன்பு ஏற்பட்டது. கோபாலக் கோனாருக்கு ஒரு குழந்தையின் மீது ஏற்படும் வாத்ஸல்யம் ஏற்பட்டது.

ரகஸியமாகக் கொஞ்ச நாள் கொடுத்து வந்தான். ரகஸியம் பரமகேட்டை விளைவிக்கும் என்று உணர்ந்து மீனாளுக்கு ஒரு தந்திரம் கற்பித்தான். அய்யங்கார் போதையிலிருக்கும் பொழுது மாமிச உணவைப் பழக்கப்படுத்த வழி சொல்லிக் கொடுத்தான்.

மீனாள் பிராமணப் பெண் ஆவது போய், கோபாலய்யங்கார் இடையனானார்.

கோபாலய்யங்காரின் மனைவி

3

கோபாலய்யங்கார் மாமிசப்பட்சணியான பிறகு சுப்புவைய்யரின் எதேச்சாதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரகலட்சுமியானாள்.

இரண்டு வருஷ காலம் அவர்களுக்கு சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக்கருவியாக கோபாலய்யங்காரின் மேல்நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன.

தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரீரியானாள். கோபாலய்யங்கார் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார்.

இதை மறப்பதற்குக் குடி.

ஆபீஸிற்கு போகுமுன் தைரியம் கொடுக்கக் குடி.

வந்ததும் மீனாளின் சௌந்தரியத்தை மறக்கக் குடி.

இப்பொழுது அவர்கள் தென்னாற்காட்டு ஜில்லாவில் இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே.

இரவு பத்து மணிக்கு அப்பக்கம் யாராவது போனால் கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.

"ஏ! பாப்பான்!" என்று மீனாள் கொஞ்சுவாள்.

"என்னடி எடச்சிறுக்கி!" என்று கோபாலய்யங்கார் காதலுரை பகருவார்.

இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள்.

மீனாளின் 'டிரியோ, டிரியோ' பாட்டில் கோபாலய்யங்காருக்கு - அந்த ஸ்தாயிகளில் - பிரியமதிகம்.

மணிக்கொடி, 09-12-1934




 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:50 pm

இது மிஷின் யுகம்

நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட - ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே - ஹோட்டலுக்குச் சென்றேன்.

உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். 'அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!' என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு.

போய் உட்கார்ந்தேன்.

"ஸார், என்ன வேண்டும்?"

"என்ன இருக்கிறது?" என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன்.

அவ்வளவுதான்! கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன.

"சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங்கு!" அது அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே! உள்ளே போகிறான்.

"ஒரு ஐஸ் வாட்டர்!"

"என்னப்பா, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?"

"என்ன கிருஷ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?"

"இதோ வந்துவிட்டது, ஸார்!" என்று ஓர் அதிகாரக் குரல் கெஞ்சலில் முடிந்தது.

"காப்பி இரண்டு கப்!"

இவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன் ஒரு கையில் நான் கேட்டதும், மற்றதில் ஐஸ் வாட்டரும் எடுத்துவருகிறான்.

"ஸேவரி (கார பக்ஷண வகை) எதாகிலும் கொண்டா!"

"இதோ, ஸார்!"

"பில்!"

உடனே கையிலிருந்த பில் புஸ்தகத்தில் லேசாக எழுதி, மேஜையில் சிந்திய காப்பியில் ஒட்ட வைத்துவிட்டு, ஸேவரி எடுக்கப்போகிறான்.

"ஒரு கூல் டிரிங்க்!"

"ஐஸ்கிரீம்!"

பேசாமல் உள்ளே போகிறான். முகத்தில் ஒரே குறி.

அதற்குள் இன்னொரு கூட்டம் வருகிறது.

"ஹாட்டாக என்ன இருக்கிறது?"

"குஞ்சாலாடு, பாஸந்தி..."

"ஸேவரியில்?"


கொஞ்சமாவது கவலை வேண்டுமே! அதேபடி பட்டியல் ஒப்புவிக்கிறான். சிரிப்பா, பேச்சா? அதற்கு நேரம் எங்கே? அவன் மனிதனா, யந்திரமா?

"ஐஸ் வாட்டர்!"

"ஒரு கிரஷ்!"

"நாலு பிளேட் ஜாங்கிரி!"

கொஞ்சம் அதிகாரமான குரல்கள்தான். அவன் முகத்தில் அதே குறி, அதே நடை.

நான் உள்பக்கத்திற்குப் போகும் பாதையில் உட்கார்ந்திருந்தேன். என் மேஜையைக் கவனித்துக்கொண்டு உள்ளே போகிறான்.

மனதிற்குள் "ராம நீஸமாந மவரு" என்று கீர்த்தனம்! உள்ளத்தை விட்டு வெளியேயும் சற்று உலாவியது. அப்பா!

திரும்பி வருகிறான் கையில் பண்டங்களுடன். பரிமாறியாகிவிட்டது.

என்னிடம் வந்து பில் எழுதியாகிவிட்டது. எல்லாம் பழக்க வாசனை, யந்திரம் மாதிரி.

"ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது, ஸார்!"

அவன் குனிகிறான் எடுக்க. நானே எடுத்துக்கொண்டேன்.

மனிதன் தான்!

"ஒரு ஐஸ்கிரீம்!"

திரும்பவும் மிஷினாகிவிட்டான்!





 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:52 pm

கடவுளின் பிரதிநிதி

1

சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.

அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.

அங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.

கூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்
சோறுகண்ட மூளி யார் சொல்.

சிவபிரான் உண்மையாகப் பிச்சாண்டியாக இருப்பதைக் காண வேண்டுமானால் சிற்றூருக்குத்தான் செல்ல வேண்டும்.

ஊருக்கு வெகு தொலைவில், அதாவது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க்காலையும், வயல் காடுகளையும் தாண்டி ஊரின் சேரி.

இந்த அக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள்.

இரு ஜாதியருடைய நிலைமையும் ஒன்றுதான். ஒருவர் சேஷப் படாது பட்டினியிருந்தால், இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான்.

சேரிப் பட்டினிகளுக்கு அக்ரகாரப் பட்டினிகளின் மீது பரமபக்தி. இருவருக்கும் அந்தப் பெயர் தெரியாத கும்பினி ராஜ்யத்தில் பரம நம்பிக்கை, பயம்.

ஊர்க்காரர்களுக்கு பிரிட்டிஷ் அமல் அதன் பக்கத்தூரிலிருந்துதான். அதாவது ஐந்து மைல் தூரத்திலுள்ள பெத்துநாய்க்கன்பட்டியில் தான் கி.மு. என்ற பிரிட்டிஷ் பிரதிநிதி.

ஊர்க்காரர்களுக்குச் சுற்றுப் பிரயாணத்தில் நம்பிக்கை கிடையாது. கலியாணம், காட்சி, பிராமண போஜனம் விதிவிலக்காக அவர்களை வெளியூருக்கு இழுத்தால், மறுபடியும் தங்கள் இடிந்த வீட்டில் வந்து பட்டினி கிடக்கும் வரையில் கால் கொள்ளாது.

ஊர்க்காரர்களுக்கு அவர்கள் பிரதிநிதியும் மெய்க்காப்பாளருமான சிவபிரானின் மீது பரமபக்தி. இவ்வளவு சுபிட்சமாக இருப்பதும் நெற்றிக் கண்ணைத் திறக்க மறந்த சிவபிரானின் கருணை என்று நினைப்பவர்கள்.

கோவில் அர்ச்சகர் சுப்பு சாஸ்திரிகள் சிற்றூரைப் பொறுத்தமட்டிலும் வீட்டில் பட்டினியானாலும் நல்ல மதிப்பு உண்டு. வேத அத்தியயனத்தில் சிறிது பயிற்சி. பூஜை மந்திரங்கள் மனப்பாடம். வேதத்தின் அர்த்தம் அவருக்கும் தெரியாது. பரமசாது. தெரியாததினால் அதில் பக்தி.

கோவிலில் வரும் சிறு வரும்படிகளில் காலம் தள்ளி வந்தார். கோவில் சேவையில் கிடைக்கும் கூலி நியாயமாகப் பெற வேண்டியதுதான் என்று நினைப்பவர்; ஏனென்றால் அவருடைய தகப்பனாரும் அந்தத் தொழில் செய்தவர்.

ஊரில் நல்ல மனிதன் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.

இளகிய மனதுடையவர் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.

2

இம்மாதிரி சாந்தி குடிகொண்ட வாழ்க்கையிலே சூறைக்காற்று போல் புகுந்தது ஹரிஜன இயக்கம்.

அது ஊரையே ஒரு குலுக்கு குலுக்கியது.

திரு.சங்கர் சிற்றூரில் தமது தொண்டைப் பிரசாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்னியால் புனிதமாக்கப்பட்டவர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவில்லாது போட்டு அடித்து உடைப்பவர்.

ஊருக்கு வந்ததும் சாயங்காலம் கோவில் முன்பு ஹிந்து தர்மத்தைப் பற்றிப் பேசப்போவதாக வீடுவீடாகச் சென்று சொல்லிவிட்டு வந்தார்.

அவ்வூர்க்காரர்கள் காந்தி என்ற பெயர் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெயரின் மேல் காரணமற்ற பக்தி. கதருடையணிந்தவர்கள் எல்லாம் காந்தியின் தூதர்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது.

அன்று சாயங்காலம்.

மேற்கு வானத்திலே சூரியன் இருப்பது கிளைகளினூடு இடிந்த கோபுரத்தில் பாய்ந்த கிரணங்களால் தெரிந்தது. பாழ்பட்ட இலட்சியத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கப் பாயும் தெய்வீக ஜீவநாடி போல சூரிய கிரணங்கள் கோபுரத்தைத் தழுவின. அந்தப் பிரகாசத்தில் கோவில் பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது.

துவஜஸ்தம்பத்தினடியில் நின்றுகொண்டு திரு.சங்கர் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

முதலில் சேரியின் தினசரி வாழ்க்கையையும் கடவுளற்ற இலட்சியமற்ற இருளில் அவர்கள் தடுமாறுவதையும் அவர்களும் நமது சகோதரர்கள் என்பதையும் வருணிக்கும் வரை சபையினர்கள் எல்லோரும் அவருடன் ஒத்து அபிப்பிராயப்பட்டனர்.

சுப்பு சாஸ்திரிகளுக்கு கேட்கும் பொழுது கண்களில் ஜலம் தளும்பியது.

பிறகு-

ஹரிஜனங்களைக் கோவில்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதைத் தடை செய்வதைப் போல் மகத்தான பாபம் கிடையாது என்றும் விஸ்தரிக்கலானார்.

சுப்பு சாஸ்திரிகளுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

கோவிலுக்குள்ளா?

"அடா பாபி! உன் நாக்கு வெந்துபோகாதா?" என்றார்.

"காந்தி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்" என்று மற்றொருவர் அபிப்பிராயப்பட்டார்.

திரு.சங்கர் இதற்கு வேதத்திலிருந்தும், ஹிந்து தர்ம சாஸ்திரங்களிலிருந்தும் ஆதாரம் கூற வேதங்களை இயற்றிய ரிஷிமூலங்களை விஸ்தரிக்கவாரம்பித்தார்.

சுப்பு சாஸ்திரிகளுக்குப் பெரும் கலக்கமாயிற்று. தான் இதுவரை நம்பிக்கை வைத்து அதன்படி ஒழுகுவதாக நினைத்த வேதமும் இப்படிக் கூறுமா? பாபி பொய் சொல்லுகிறான். உண்மையாக இருக்குமோ? இருந்தால் இதுவரை முன்னோர்கள் இது தெரியாமலா இருந்திருப்பார்கள்? கலக்கம், சந்தேகம், குழப்பம்.

உள்ளத்தின் கலக்கம் எல்லாம் சீறிக் கொதித்துக் கலங்கிய கண்ணீருடன் வெளிப்பட்டது.

"பதிதன்! சண்டாளன்! துரோகி! கோவிலைப் பாழ்படுத்த வருகிறான்" என்று என்னென்னமோ தழுதழுத்த குரலில் பிதற்றி விட்டு அகன்றுவிட்டார்.

உடனே கூடியிருந்த சபையும் பேசி வைத்ததுபோல கலைந்து போயிற்று.

துவஜஸ்தம்பத்தினருகில் அதைப் போல் மௌனமாக நிற்கும் திரு.சங்கரைத் தவிர வேறு யாருமில்லை.

இப்படிப்பட்ட வாயில்லாப் பூச்சிகளுக்கு என்னத்தைச் சொல்லுவது? நினைவு குவிந்த உள்ளத்துடன் ஊருக்கு வெளியே சென்றார். ஊர் இருக்கும் மனப்பான்மையில் அன்று அவர் பட்டினி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டார்.


ஊர் அன்றிரவு அல்லோலகல்லோலப்பட்டது.

இந்தப் பேச்சு சேரிப் பறையர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இம்மாதிரி மகத்தான பாவத்தைப் போதிக்கும் மனிதனை உதைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள். 'சாமி'களுக்குச் சரிசமானமாய் கோவிலுக்குள் இவர்கள் போக வேண்டும் என்று சொன்னால் கண், அவிந்து போகாதா?

திரு.சங்கர் என்னவோ நினைத்துக் கொண்டு ஊருக்கு மேற்குப் பக்கம் செல்லுகிறார்.

தூரத்திலிருந்து நாலைந்து கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒரு கல் அவர் மண்டையில் விழுந்து காயத்தை உண்டு பண்ணி விட்டது.

இதை எதிர்பார்க்கவில்லை.

திரும்பிப் பார்க்குமுன் தலைசுற்றி மயங்கி விழுகிறார்.

3

சுப்பு சாஸ்திரிகளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. திரு.சங்கருக்கு அவர் வீட்டில் சாப்பாடு என்று அவர் சொல்லியிருந்தார்.

அதிதியின் கொள்கைகள் எப்படியிருந்தாலும் அதிதி, அதிதி தானே?

வெகு நேரமாகியும் சங்கர் வரவில்லை.

ஒரு வேளை கூச்சத்தினால் கோவிலில் இருக்கிறாரோ என்று போஜனத்தையும், கையில் விளக்கையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.

அங்கு அவர் இல்லை.

கோவிலில் மடைப்பள்ளியில் போஜனத்தை வைத்து விட்டு மேற்குப்புறம் வாய்க்கால் பக்கமாகத் தேடிச் சென்றார்.

அங்கு சங்கர் மயங்கிக் கிடப்பதைக் கண்டதும் பதைபதைத்து, பக்கத்திலிருக்கும் வாய்க்காலில் ஓடி ஜலம் எடுத்துவந்து தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்.

திரு.சங்கரின் நிலைமை தெய்வ நிந்தனையின் கூலி என்று அவர் எண்ணக்கூட அவருக்கு நினைவில்லை.

அவரை மெதுவாகக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று போஜனத்தைக் கொடுத்து உண்ணச் சொன்னார்.

திரு.சங்கருக்கு இதில் ஆச்சரியப்படக்கூட நேரமில்லை.

அவ்வளவு தலைவலி.

உணவருந்தியதும் படுத்துக் கொண்டார். துணைக்கு சாஸ்திரிகளும் படுத்துக் கொண்டார்.

அன்று இருவருக்கும் தூக்கம் வரவில்லை. ஒருவருக்கு வலி இன்னொருவருக்குக் குழப்பம்.

நடுநிசி!

சாஸ்திரிகள் எழுந்து மூலஸ்தானத்தின் பக்கம் சென்று தமது உள்ளத்தின் கவலைகளை எல்லாம் சொல்லியழுதார். நம்பிக்கை உடைந்து போயிற்று. எதை நம்புவது என்ற சந்தேகம் வந்துவிட்டது.

"இதுவரை நடந்துவந்தது உண்மையா? அவர் சொல்லுவது உண்மையா? பேசாது இருக்கிறாயே நீயும் உண்மைதானா?"

இந்தப் பரிதாபகரமான குரல், வலியில் தூங்காதிருக்கும் திரு.சங்கருக்கு கேட்டது. குரலில் என்ன பரிதாபம்! என்ன சோகம்! என்ன நம்பிக்கை!

சங்கருக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. ஆனால் அந்தக் குரல் வலியைப் போக்கும் சஞ்சீவியாக இருந்தது.

"ஏ! தெய்வமே, நீயும் உண்மைதானா?"

இதற்குப் பதில் போல வானவெளியிலே நாலு மேகங்கள் ஒன்றாகக்கூடி கர்ஜித்துச் சிரித்தன.

மணிக்கொடி, 25.11.1934




 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:53 pm

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

1

மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். 'டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் 'கப்' காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...'

'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.'

'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.'

இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.

திடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, "இந்தா, பிடி வரத்தை" என்று வற்புறுத்தவில்லை.

"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?" என்று தான் கேட்டார்.

"டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே" என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.

"நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி?" என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

சாடி மோதித் தள்ளிக்கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி, செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.

மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதிதீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்கவஸ்திரம்.

வழி கேட்டவரைக் கந்தசாமிப் பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம்; அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.

தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக் கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கறேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கனிந்தது. சிரிப்பு? அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.

"ரொம்பத் தாகமாக இருக்கிறது" என்றார் கடவுள்.

"இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம்" என்றார் கடவுள்.


கந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.

"சரி, வாருங்கள் போவோம்" என்றார். 'பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால்?' என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான்' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.

இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.

இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங் கொடுக்காமல், "சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!" என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.

"தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்" என்றார் கடவுள்.

"அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்" என்று தமிழ்க் கொடி நாட்டினார் பிள்ளை.

முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். "நல்ல உயரமான கட்டிடமாக இருக்கிறது; வெளிச்சமும் நன்றாக வருகிறது" என்றார்.

"பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ? கோவில் கட்டுகிறது போல என்று நினைத்துக் கொண்டீராக்கும்! சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள்" என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.

கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.

"அப்படி என்றால்...?" என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. "சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும்?" என்று கேட்டார் கடவுள்.

"ஓ! அதுவா? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்தியோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துதான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள்" என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகித்தார்.

கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தைவிட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்தது.

"இதோ இருக்கிறதே!" என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.

"என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே! இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும்" என்றார் பிள்ளை.

"ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்" என்று முனகிக் கொண்டார் கடவுள்.

பையன் இரண்டு 'கப்' காப்பி கொண்டுவந்து வைத்தான்.


கடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.

"நம்முடைய லீலை" என்றார் கடவுள்.

"உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கிறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே" என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்சனையைத் தீர்த்துவிட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.

"சிக்கரிப் பவுடர் என்றால்...?" என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.

"சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர் தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.

பெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம்புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.

"சில்லறை கேட்டால் தரமாட்டேனா? அதற்காக மூன்றணா பில் எதற்கு? கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா?" என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.

"நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம்" என்றார் கடவுள்.

"அப்படியானால் சில்லறையை வைத்துக்கொண்டு வந்திருப்பீர்களே?" என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். "தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதின்மூன்று - சரியா? பார்த்துக்கொள்ளும் சாமியாரே!"

"நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது" என்றார் கடவுள்.

ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.

வெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.

கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுக்களில் ஐந்தாவதை மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.

"கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன்" என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.

"என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக் கொண்டு வந்திருப்பேனே!" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டீரா இல்லையா? அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக்கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அதனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன்" என்றார் கடவுள்.


வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடைபெற்றுக் கொள்வது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.

"திருவல்லிக்கேணிக்குத்தானே? வாருங்கள் டிராமில் ஏறுவோம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"அது வேண்டவே வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாமே" என்றார் கடவுள்.

"ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப் போகலாமே" என்றார் கந்தசாமிப் பிள்ளை. 'நாம்தாம் வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன?' என்பதுதான் அவருடைய கட்சி.

"நர வாகனமா? அதுதான் சிலாக்கியமானது" என்றார் கடவுள்.

இரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்கள். "சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன்" என்றான் ரிக்ஷாக்காரன்.

பொழுது மங்கி, மின்சார வெளிச்சம் மிஞ்சியது.

"இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகி விட்டோ மே! நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே இப்படிச் சந்திக்க வேண்டுமென்றால்..."

கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. "நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்" என்றார் அவர்.

கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக்கொண்டால் விட்டுவைப்பாரா? கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.

"சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"இல்லை" என்றார் கடவுள்.

"அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"பரிச்சயம் உண்டு" என்றார் கடவுள்.

'இதென்னடா சங்கடமாக இருக்கிறது?' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. "உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிசயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிசயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒரு முறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்..."





 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:54 pm

'பதினேழு வருஷ இதழ்களா? பதினேழு பன்னிரண்டு இருநூற்று நாலு.' கடவுளின் மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம்' என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.

"தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள் நாட்டுக்கு ரூபாய் ஒன்று; வெளிநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம்" என்று கடவுளைச் சந்தாதாராகச் சேர்க்கவும் முயன்றார்.

'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓட ஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது' என்று யோசித்து விட்டு, "யாருடைய ஜீவியம்?" என்று கேட்டார் கடவுள்.


"உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல, பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக்கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.

வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.

"என்னடா திரும்பிப் பார்க்கிறே? மோட்டார் வருது, மோதிக்காதே; வேகமாகப் போ" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா? வண்டியிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு" என்றான் ரிக்ஷாக்காரன்.

"வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

"தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக்கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு" என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.

'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய்க் காணமே' என்று நினைத்தார் கடவுள். "தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர்?" என்று கேட்டார்.

"பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்றுவிடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாது என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும். மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் விஷயம் புரிந்தவர் போலத் தலையை ஆட்டினார்.

"இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம்" என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா?" என்று சிரித்தார் கடவுள்.

"அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். "பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டோ ?" என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை.


"நீ கெட்டிக்காரன் தான்; வேறும் எத்தனையோ உண்டு" என்று சிரித்தார் கடவுள்.

"ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து" என்றார் கடவுள்.

"அடெடே! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்?"

"கந்தசாமிப் பிள்ளையை!"

"சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ? இனம் தெரியவில்லையே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நானா? கடவுள்!" என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.

கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

"பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி."

கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். "எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது" என்றார்.

"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.

கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!

"என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது?" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

"அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?" என்றார் கடவுள்.

"அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்!" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன், அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா கண் பாக்கணும்" என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.

"மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன் தான்! தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல? கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான்" என்று சொல்லிக்கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.


கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.

"இதுதான் பூலோகம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இவ்வளவுதானா!" என்றார் கடவுள்.

இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.

கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.

"பக்தா!" என்றார் கடவுள்.

எதிரில் கிழவனார் நிற்கவில்லை.

புலித் தோலாடநயும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.

"பக்தா!" என்றார் மறுபடியும்.

கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.

"ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.

கந்தசாமிப் பிள்ளை வாசலருகில் சற்று நின்றார். "சாமி, உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா?" என்றார்.

"பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம்."

"அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன்; உடன்பட வேணும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை" என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.

"அப்படி உங்கள் சொத்து என்னவோ?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான்" என்றார் கடவுள்.

"பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை" என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.




 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:54 pm


2

வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ? ஒரு குழந்தை, அதற்கு நாலு வயசு இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை வாளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடு போட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு, இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும் போது அப்பா உள்ளே நுழைந்தார்.

"அப்பா!" என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக்கொண்டது. அண்ணாந்து பார்த்து, "எனக்கு என்னா கொண்டாந்தே?" என்று கேட்டது.

"என்னைத்தான் கொண்டாந்தேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது?" என்று சிணுங்கியது குழந்தை.

"பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இதுதான் உம்முடைய குழந்தையோ?" என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.

கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.

"சும்மா சொல்லும்; இப்பொவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால், தயிர்கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை" என்று சிரித்தார் கடவுள்.

"ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார்.

மனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.

"வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே?" என்று கைகளை நீட்டினார் கடவுள்.

ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.

"எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா?" என்று கேட்டது.

அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறு தென்பட்டது.


"அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

"கூச்சமா இருக்கு" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.

"ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப் பட்டு பொத்துப் போச்சா? எனக்கும் இந்தா பாரு" என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் போன கொப்புளத்தைக் காட்டியது.

"பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக்கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலெ இருந்து அது அங்கியே சிக்கிக்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லியா?" என்று கேட்டார் கடவுள்.

"வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா?" என்று கூப்பிட்டது.

குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.

"தாத்தா, தோத்துப் போனியே" என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.

"ஏன்?" என்று கேட்டார் கடவுள்.

கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.

"முந்தியே சொல்லப்படாதா?" என்றார் கடவுள்.

"ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா?" என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.

அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள்.

"இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா, கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குத் தான் கொடுத்திருக்கு. தெரியாதா?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா? வாருங்க மாமா, சேவிக்கிறேன்" என்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.

"பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும்" என்று ஆசீர்வதித்தார் கடவுள்.

காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது. மனமும் குளிர்ந்தது. கண்ணும் நனைந்தது.

"வாசலில் இருக்கற அரிசி மூட்டையை அப்படியே போட்டு வச்சிருந்தா?" என்று ஞாபகமூட்டினார் கடவுள்.

"இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னுதான் பார்க்கணும்" என்றாள் காந்திமதி அம்மாள்.


"பாத்துக்கிட்டுத்தான் நிக்காறே" என்றார் கடவுள் கிராமியமாக.

"பாத்துச் சிரிக்கணும், அப்பந்தான் புத்தி வரும்" என்றாள் அம்மையார்.

கடவுள் சிரித்தார்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.

"இந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே" என்றார் பிள்ளை காதோடு காதாக.

"இனிமேல் இல்லை" என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.

"நல்ல இளவட்டம்!" என்று சிரித்துக் கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள்.

"நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே!" என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.

"நீ சும்மா இரம்மா; எங்கே போடணும்னு சொல்லுதெ?" என்றார் கடவுள்.

"இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க" என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.

கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று.

"இனிமேல் என்ன யோசனை?" என்றார் கடவுள்.

"தூங்கத்தான்" என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.

"தாத்தா, நானும் ஒங்கூடத்தான் படுத்துக்குவேன்" என்று ஓடிவந்தது குழந்தை.

"நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர்?" என்று கேட்டார் கடவுள்.

"மனுஷாள்கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால் பேசாமல் படுத்துக்கொண்டிருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

3

கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்து கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.

"ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப் பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப்பச்சை என்றும் பாடம்)..." என்று எழுதிவிட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, "இன்றைக்கு பத்திரிகை போகாது" என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.

வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கை நிறைய மிட்டாய்ப் பொட்டலம்.


"தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம்" என்று துள்ளியது குழந்தை.

"எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ?" என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.

"அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்துவிடுவார்களா? சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்துவிடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆக வேணும்" என்று கையை நீட்டினார் பிள்ளை.

"இது யாரை ஏமாற்ற? யார் நன்மைக்கு?" என்று சிரித்தார் கடவுள்.

"தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால் தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டீர்களே! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா?" என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் யோசனையில் ஆழ்ந்தார்.

"அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை உண்டா? அல்லது கருடப்பிச்சுதானா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது நியாயமா? நான் என்னத்தைக் கண்டேன்? உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான் தான் பழியா?" என்று வாயை மடக்கினார் கடவுள்.

"நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்துவிட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, "ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனிச்சுக் கெடக்கு" என்று கடவுளை அழைத்தது.

குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே, "பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு!" என்றார் கடவுள்.

குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.

"தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு செல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா?" என்று கேட்டது குழந்தை.

கடவுள் விழுந்துவிழுந்து சிரித்தார். "அவ்வளவும் உனக்கே உனக்குத்தான்" என்றார்.




 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:55 pm


"அவ்வளவுமா! எனக்கா!" என்று கேட்டது குழந்தை.

"ஆமாம். உனக்கே உனக்கு" என்றார் கடவுள்.

"அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாங்களே! அப்பா லேவியம் குடுப்பாங்களே!" என்று கவலைப்பட்டது குழந்தை.

"பசிக்கும்; பயப்படாதே!" என்றார் கடவுள்.


"தாங்கள் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம் இருக்கட்டும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நான் தான் இருக்கிறேனே!" என்றார் கடவுள்.

"நீங்கள் இல்லையென்று நான் எப்பொழுது சொன்னேன்?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

சில விநாடிகள் பொறுத்து, "இன்றைச் செலவு போக, அந்த நூறு ரூபாயில் எவ்வளவு மிச்சம்?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"உமக்கு ரூபாய் இருபத்தைந்து போகக் கையில் ஐம்பது இருக்கிறது" என்று சிரித்தார் கடவுள்.

"அதற்குப் பிறகு என்ன யோசனை?"

"அதுதான் எனக்கும் புரியவில்லை."

"என்னைப் போல வைத்தியம் செய்யலாமே!"

"உம்முடன் போட்டிபோட நமக்கு இஷ்டம் இல்லை."

"அப்படி நினைத்துக்கொள்ள வேண்டாம். என்னோடே போட்டி போடல்லே; லோகத்து முட்டாள்தனத்தோடே போட்டி போடுகிறீர்கள்; பிரியமில்லை என்றால் சித்தாந்த உபந்நியாசங்கள் செய்யலாமே?"

"நீர் எனக்குப் பிழைக்கிறதற்கா வழி சொல்லுகிறீர்; அதில் துட்டு வருமா!" என்று சிரித்தார் கடவுள்.

"அப்போ?"

"எனக்குத்தான் கூத்து ஆட நன்றாக வருமே; என்ன சொல்லுகிறீர்? தேவியை வேண்டுமானாலும் தருவிக்கிறேன்."

கந்தசாமிப் பிள்ளை சிறிது யோசித்தார். "எனக்கு என்னவோ பிரியமில்லை!" என்றார்.

"பிறகு பிழைக்கிற வழி? என்னங்காணும், பிரபஞ்சமே எங்கள் ஆட்டத்தை வைத்துத்தானே பிழைக்கிறது?"

"உங்கள் இஷ்டம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை மறுபடியும் சிறிது நேரம் சிரித்தார். "வாருங்கள், போவோம்" என்று ஆணியில் கிடந்த மேல்வேட்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டார்.

"குழந்தை!" என்றார் கடவுள்.

"அதுதான் உறங்குகிறதே; வருகிற வரையிலும் உறங்கட்டும்" என்றார் பிள்ளை.

கால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர் பிரகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை; மற்றொருவர் கடவுள்; மூன்றாவது பெண் - தேவி.

"நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால் கேட்பார்" என்று விளக்கிக் கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ளை; இருவரும் பின் தொடர்ந்தனர். தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது.

"சாமி இருக்காங்களா; நான் வந்திருக்கேன் என்று சொல்லு" என்று அதிகாரத்தோடு வேலைக்காரனிடம் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை.


"பிள்ளையவர்களா! வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப் பட்டேன்" என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான் பகதூர் ஓடி வந்தது. எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.

"உட்காருங்கள், உட்காருங்கள்" என்றார் திவான் பகதூர்.

கந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, "பரவாயில்லை; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணி வைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம்; உங்கள் நிருத்திய கலாமண்டலியில் வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள்வாங்கின. கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க்கட்டையிலுமாக வைத்துக்கொண்டு "உம்", "உம்" என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

"இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள்" என்று உறவைச் சற்று விளக்கிவைத்தார் கந்தசாமிப் பிள்ளை.

"நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா?" என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.

கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் "நாங்கள் ஆடாத இடம் இல்லை" என்றாள் தேவி.

"என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்று தான் யோசிக்கிறேன்" என்றார் வர்ணபேத திவான் பகதூர்.

"பெண் பார்க்க வந்தீரா அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ?" என்று கேட்டாள் தேவி.

"அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரஸிடெண்டாக இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள் தான் கறுத்திருக்கும்."

"உம்ம மண்டலியுமாச்சு, சுண்டெலியுமாச்சு!" என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள்.

"இப்படி கோவிச்சுக்கப்படாது" என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.

"இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்த மாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்க வேணும். ஒரு முறை தான் சற்றுப் பாருங்களேன்" என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.

"சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம்?" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். "சரி, நடக்கட்டும்!" என்று சொல்லிக்கொண்டு இமைகளை மூடினார்.

"எங்கே இடம் விசாலமாக இருக்கும்?" என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.

"அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே" என்றார் கடவுள்.

"சரி" என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.

சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.

மயான ருத்திரனாம் - இவன்
மயான ருத்திரனாம்!

கதவுகள் திறந்தன.


கடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.

மறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோ ட, காலைத் தூக்கினார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.

"ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்."

"சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு" என்று அதட்டினார் திவான் பகதூர்.

ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள்.

"ஓய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை!" என்றார் திவான் பகதூர்.

ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டுவிடவில்லை. "கந்தசாமிப் பிள்ளைவாள், நீர் ஏதோ மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் பார்க்க முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம்?"

கால் மணி நேரங்கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு பேரும் மௌனமாக இருந்தார்கள். "தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே!" என்றார் கடவுள்.

"நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை; வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே!"

கடவுள், 'ச்சு' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.

"அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ!"

"உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்" என்றார் கடவுள்.

"உங்களைப் பார்த்தாலோ?" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.

மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.

"கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து" என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.

"தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.

கலைமகள், அக்டோபர், நவம்பர் 1943




 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:55 pm

படபடப்பு


பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க முடியாததாயிற்று. மோக்ஷவாசல் ஊசியின் காதைப் போல அவ்வளவு சிறியது என்று கிறிஸ்துமகான் சொன்னார். பட்டணத்து வாசல்களான ஸ்டேஷன்கள் பட்டணவாசிகளுக்கு மோக்ஷவாசல்களாக மாறியது. ஒவ்வொரு ரயில் வண்டியும் உயிர் பொதிந்த மூட்டை முடிச்சுக்களைத்தான் ஏற்றிச் சென்றன. ஒவ்வொருவரும் உயிரை பத்திரமான இடத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பித்துக் கொள்ள, சகல கஷ்டங்களையும் சகிக்கத் தயாராயிருந்தனர். சாலையில் பெட்ரோலும் நீராவி வசதியும் வருமுன் இருந்த சஞ்சார உலகம் காட்சியளித்தது. கூடை, முறம், குழந்தை குட்டிகள், கிழடு, நோய் நோஞ்சான், நகை நட்டு முதலிய சகல சுமைகளையும் தபால் வண்டிகள் என்ற இரட்டை மாட்டு வண்டிகள் பத்திரமாக, மெதுவாக வேற்றிடங்களுக்கு சுமந்து சென்று கொண்டிருந்தன. பெட்ரோல் கட்டுப்பாடு சிலரைக் கட்டுப்படுத்தவில்லை; மாட்டு வண்டிச் சாரைகளை விலக்கிக் கொண்டு மின்வெட்டி மறைவது போலவும், அரசியல் துறையில் சந்தர்ப்ப விசேஷத்தைத் தொத்தி முன்னேறுகிறவர் போலவும் அவர்கள் தோன்றி மறைந்தார்கள். 'நீர் எவ்வளவு வேகமாகத்தான் செல்லுமே; நான் வருகிற போதுதான் வந்து சேருவேனே; எப்படியும் நான் வந்துதான் சேரப் போகிறேனே' என்று சொல்லிக் கொண்டு இயங்கும் உலகம் போல, தபால் வண்டிகளும் தம் போக்கில், இலட்சியத்தை நோக்கி ஊர்ந்து செல்லும் மனித சமுதாயம் போல, மாட்டின் சதங்கையொலிக்கு ஏற்ப ஆற அமர முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

பூக்கடையும் ரவுண்டாணாவும் சைனா பஜாரும் அத்துவானமாயின. ஜனங்கள் ஆவேசமாக சிங்கப்பூர் வீழ்ந்து விட்டதை விவாதித்தார்கள். பிறகு ரங்கூன் விழுந்து விட்டதைத் தர்க்கித்தார்கள். பிறகு ஆபத்து, தற்காப்பு, ஜப்பான் நோக்கம், உலகயுத்தம், எல்லாவற்றையும் விவாதித்தார்கள். சென்னையில் வீடுகள் காலியாகிக் கொண்டே வந்தன. பிறகு ரயிலைச் சீந்துவாரும் குறைந்தது. டைபாய்ட் ஜுரம் கண்டவன் உடம்புச் சூடு பதிவுப்படம்போல, கவலையும் பரபரப்பும் மங்கியது; பிறகு உயர்ந்தது; பிறகு மங்கியது.

அபாய அறிவிப்புச் சங்கு ஊதும் பழக்கமும் அமலுக்கு வந்தது. முதலில் அபாய நீக்க சப்தமே சிலரை வெருள வைத்தது. அதைத் தொடர்ந்து ஊதும் அபாய அலமறல் என்ன வேடிக்கை பண்ணியிருக்கும் என்று சொல்ல வேண்டுமா? ஒத்திகைகள் இருட்டடிப்புகள் முதலில் வேடிக்கையாகி, அப்புறம் ஜனங்கள் மனசில் பதிந்து ஜனங்கள் வெகுசிரத்தையுடன் பின்பற்றும் சடங்காயிற்று.

தினசரி, பேப்பரில் படித்து, தர்க்கம் நடத்தி, பொழுது போக்குவதற்குச் சௌகரியமாக, சென்ற இரண்டு வருஷங்களாக இருந்து வந்த ஒன்று திடீரென்று நகரத்திற்குள்ளாகவே புகுந்துவிட்டது. அதாவது ராவணன் கண்ணால் காணுமுன் காதலித்த மாதிரி, நேரில் அனுபவிக்குமுன் மனசிற்குள் புகுந்துவிட்டது. அதிகாலையில் ஆற்றங் கரையில் நின்று கொண்டு, முதல் முழுக்கு போடும் வரை உலகெல்லாம் பரந்து கிடக்கும் குளிர் ஒருங்கே திரண்டு ஆற்றுப் பிரவாகமாக ஓடுவதாக நினைத்து உடல் நடுக்கம் கொள்வதுபோல, ஜனங்கள் நரம்பிலே எப்பொழுதும் ஒரு படபடப்பை கொடுத்து வந்தது. தூங்கும் போதும் நடக்கும்போதும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் போதும் கறி தாளிக்கும் போதும் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தார்கள். 'அதோ என்னமோ கேட்கிறதே' என்ற ஒரு பிரமை சிலர் மனசில் சாதாரணமாயிற்று. அபாயச்சங்குடன் நாயின் ஊளையும், ஜனங்களின் அமைதியும் குசுகுசுப் பேச்சும் விபரீதக் கலவைகளாயின. சென்னைக்கு அபாயமில்லை என்று சிலர் நம்பினார்கள்; சிலர் தாம் வெளியேறிய பின்பு முதல் குண்டு விழக்கூடும் என்று தம்முடைய பொருளாதார நிர்ப்பந்தத்தில் ஜப்பானிய போர்த்திட்டத்தைக் கட்டிப் போட்டார்கள்.


சாயங்காலமாகி விட்டால் அசுரனுக்குப் பலம் வருவது போல பீதிக்கு, பயத்துக்கு, உருவம், சக்தி, நோக்கம், விருப்பு வெறுப்பு யாவும் கூடிய ஒரு உயிர்ச்சொருபமாக நகரத்தில், நடமாடுகிறது. அலைமேலலையாக, இறங்கியும் தாழ்ந்தும் உயர்ந்தும் காதைத் தொலைத்து அலமறும் சங்கு அதற்கு பள்ளியெழுச்சி பாடுகிறது. நல்ல வெளிச்சத்தில் ஓடிப்பழகிய யந்திரங்கள் மோதிக் கொள்ளுகின்றன; கவிழ்ந்து விழுகின்றன. 'அம்மாடி' என்ற குரலுடன் ஒரு உயிர் கஷ்டச் சுமையை நொடியில் உதறித் தள்ளிவிட்டு ஓடிவிட்டது. கோடிகோடியாக வருஷக்கணக்காக உயிர்ப்பாரம் குறைக்கப்பட்டு வரும் காலத்தில் இந்தத் தனி உயிர் என்ன பிரமாதம்? இருட்டிலே வேற்றுலக சத்தம்போல, அகண்டமான, எல்லையற்ற இருள் வெளியிலே வேற்றுலகத்து மனிதர்பேசும் குரல்போல, தெருவிலே, இருளில் மறைந்து சிரித்து உற்சாகமற்ற, பீதி கலந்த வேடிக்கை பேசும் விடலைக்கும்பலின் கதம்பக்குரல் கேட்கிறது. கதவடைத்து கொலை செய்வார்கள்; மனக் கதவடைத்து மருட்செயல் புரிவார்கள். ஆனால் இப்போது, சாதாரண காரியம், வியாபாரம், பேச்சு, வியவகாரம் எல்லாம் இருட்டில் கதவடைத்து நடக்கிறது. கடைக்காரன் சாமான் கொடுக்கவில்லை. தன் மனசில் உள்ள குழப்பத்தை, நாடியில் ஓடும் படபடப்பைப் பகிர்ந்து கொள்ளுகிறான். தூரத்திலே நகரத்தின் ஜீவாதாரத் தேவைகளை முன்னிட்டு கடவுளைப் போல் தொண்டு புரியும் இரும்பு யந்திரங்களின் துடிதுடிப்புக்கூட ஜீவநாதமாகத் தென்படவில்லை. ஊரிலே களை குடியோடிப் போயிற்று. நட்சத்திரங்களும் நிர்மலமான வானமும் தூரத்தில் ஒலிக்கும் சமுத்திரமும் ஏன் இப்படி வேறு மாதிரியாகத் தோன்றவேண்டும். ஜனங்கள் அத்தனை பேரும் கோழைகளா? அவனிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்துப்பார் தெரியும். தனித்தனியாக ஒவ்வொருவனும் தீரன் தான். சமுதாய பீதி கவ்வியது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஏற்பட்ட இயற்கையின் கோளாறு அந்த இடத்திற்கு சற்றும் ஸ்னானப் பிரார்ப்தியே அற்ற மற்றொரு இடத்தில் அதிர்ச்சி காண்பிப்பது போல இருந்த ஒரு விஷயம் இப்போது உலகம் முழுவதையுமே கேந்திரஸ்தானமாகக் கொண்டு அசைக்க ஆரம்பித்துவிட்டது. ஜனங்கள் பார்த்தசாரதியை நம்பினார்கள்; பக்கத்து வட்டாரக் கடவுள்களை நம்பினார்கள். கடைசியில் இப்போது தங்கள் கால்களையே நம்ப ஆரம்பித்து விட்டார்கள். இதோ தொட்டிலில் கிடந்து காலை உதைத்துக் கொண்டு அழுகிறதே அதற்கும் இந்தப் படபடப்பு பற்றி விட்டது.

இராத்திரியும் வெகுநேரமாகிவிட்டது. பேப்பரில் இனிமேல் ஞாபகப்பிசகை முன்னிட்டு திரும்பிப் படிக்கிறதானால் ஒழிய, மற்றப்படி படிப்பதற்கு ஒன்றுமில்லை. நானும் சற்று கண்ணயர்ந்தேன். அன்று மப்பும் மந்தாரமுமாகச் சற்று சுகமாகத்தானிருந்தது. வெக்கைப் புழுக்கம் கிடையாது. வழி தவறி நுழைந்த அதிதிபோல காற்றும் சமயாசமயங்களில் வீட்டுக்குள் எட்டிப் பார்த்துச் சென்றது.

மனித சமுதாயத்திலே அதன் ஆரம்பம், வளர்ச்சி, நைந்து போன பிறகு அதற்கு ஏற்படும் ஸ்திரத்தன்மைபோல தூக்கமும் உடலயர்ச்சி முடிவில் ஆதிக்கம் கொள்ளும்வரை நிமிர்ந்தும் பணிந்தும் கொடுத்து, முடிவில் என்னையாண்டது. உலகிலே - மனிதனுக்கு உலகம் என்பது என்ன? பூகோள புஸ்தகத்தில் படிப்பதா? அல்லவே அல்ல. அனுபவ கிரந்தத்தில் படிப்பதேயாகும். அது இரண்டரைச் சதுர மைல் விஸ்தீரணமுள்ள ஓட்டப் பட்டியாக இருக்கலாம். அல்லது நியுயார்க் மாதிரி ஒரு சின்ன பிரபஞ்சமாக இருக்கலாம். அல்லது நாலு முழத்தொட்டிலாக இருக்கலாம். பக்குவத்துக்கு ஏற்றபடி அதுதான் உலகம். அந்த உலகத்தைத்தான் ஆதிசேஷன் தாங்குகிறான். சூரிய மண்டலத்தைச் சுற்றிவரும் உருண்டையான கிரஹகோளத்தையல்ல... அந்த உலகிலே, அனுபவத்தை வைத்துத்தான் அனுபவிக்க முடியாத, கூடாத ஒன்றை அனுமானிப்பது; அனுமானமும் பக்குவப் படியாகும். அந்த உலகத்திலே இருளோடு இருளாக இருட்டில் ஓடி மறையும் இரும்புத் தண்டவாளங்கள் போன்ற பழக்க வாசனை, வருங்காலம் என்ற ஒரு இருட்பிழம்பில் எவ்வளவு தூரம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை யாரறிவர்? முன் கூட்டி அறிந்துதான் லாபம் என்ன? நான் என்பது இனிமேல் இந்த நானாகவே இருக்குமா?...அதோ என்ன சப்தம், மெதுவாக எங்கோ ஊதுகுழல் மாதிரி தூரத்திலிருந்து வருவதால் காதில் இனிமையாக நுழைகிறதே! திடுக்கிட்டு உட்காருகிறேன். வேறொன்றுமல்ல, யாரோ ரசித்து அனுபவித்து ராக ஆலாபனத்துடன் கொட்டாவி விடுகிறானா? இல்லவே இல்லை.


படபடவென்று எழுந்து மொட்டை மாடிக்கு வந்தேன். வானத்தில் நட்சத்திரங்கள் வழக்கம் போல மினுக்கிக் கொண்டிருந்தன. ஆனால் என் சரகத்துக்கு அருகாமையில் உள்ள சங்கு அலமறுகிறது, உலகத்தின் விதியை நினைத்து அங்கலாய்த்துப் பிரலாபிப்பது போலிருந்தது அது அபாயத்தின் நெருக்கத்தை அறிவிக்கவில்லை. சமுதாயத்தின் வலுவை பிரலாபத்துடன் படபடப்போடு எழுப்புவது போல இருக்கிறது. நகரத்தின் மீது கவிந்து அமுக்கிக் கொண்டிருக்கும் படபடப்பு என்ற அரக்கன் தன் முழு சக்தியையும் நகரத்தின் மீது உபயோகிப்பதற்காக முக்கி முனங்கி உறுமித் திணறுவது போலிருக்கிறது.

என்னவானால் என்ன? அது அர்த்த ஜாமத்தில் எழுப்பி விட்டது. விடிவதற்கு எவ்வளவு நேரம் என்று பார்க்க உள்ளே வந்து கெடிகாரத்தை எடுத்துப் பார்த்தேன். அதற்கு ரேடியம் டயல். அது கொள்ளிக் கண் தீயுமிழ, ஏற்கனவே விடிந்துவிட்டது என உறுமியது. விடிந்துவிட்டது என்பதில் ஆசுவாசம்; நிம்மதி; அலமறலும் அடங்கியது. அப்புறம் ஒரு அமைதி... பிரலாபத்தின் விபரீத நாதத்தைவிட பயங்கரமாக இருந்தது அந்த அமைதி. மனசு நிதானப்படுவதற்காக வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு வெளிச்சம் போடாமல் உட்கார்ந்திருந்தேன். விரல்கள் சுண்ணாம்பு தடவி வெற்றிலை கிழித்து சீவல் பாக்கைக் கிரமப்படி தேடிக் கொண்டிருந்தாலும் காது விமானத்தின் ரீங்காரம் கேட்கிறதா என்று துழாவியது. வெற்றிலையும் புகையிலும் வாயில் அடக்கிக் கொண்ட பிற்பாடு மனசோட்டம் நிற்கவில்லை.

'நான் பார்த்தேன்' என்றது குரல்.

'அதற்குப் பிறகுதான் சங்கு ஊதினான்' என்று குறைப்பட்டுக் கொண்டது மற்றொரு குரல்.

'விமானமாவது கத்திரிக்காயாவது... நான் ஒன்றும் பார்க்கவில்லை, ஒரு நாழியாக வாசலில் வந்து நிற்கிறேன்' என்றது வேறு ஒரு குரல்.

'அப்படியானால் நம்ம பயணம் நாளைக்கு' என்றது மற்றொரு குரல்.

'விடியட்டும் மகளே...' என்று கேலி செய்தது முன் கேட்ட மற்றொரு குரல்...

வார்டன்களுடைய பிகில் சப்தம். இடைவிட்டு இடைகேட்டு இவர்களது வாதத்தில் தலையிட்டுத் தடுத்தது...யார் தடுத்தால் என்ன? ரசிப்பு அற்ற படபடப்பு துடிக்கும் கைத்த குரல்கள் தான் பேசுகின்றன. எங்கோ நடக்கும் விவகாரம் இங்கும் பவனி வருகிறது. வாசல் வழி வருவதைத் தாளிட்டுக் கொண்டால் தடுத்துக் கொள்ள முடியுமா? வெளிக்குரல்கள் எனது செவிப்புலனுக்கு எட்ட விலகிச் செல்வது போல பிரமை; அது படிப்படியாக மங்கிக் கொண்டு ஒரே ரீங்காரமாக அமுக்கியது.

நான் விழித்துப் பார்க்கும்போது விடிந்து வெகுநேரமாகி விட்டது. அபாய நீக்கச் சங்கு எப்போது ஊதினார்களோ தெரியாது.

வெளிக்குரல்கள் கேட்டன. அதிலே பழைய உயிர்ப்பற்ற படபடப்பு தொனித்தது.

கவிக்குயில், முதல் மலர், 1946




 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:56 pm

ஒரு நாள் கழிந்தது



"கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில் இரண்டாகக் கிழிந்து ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருத்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்.

முருகதாசரைப் பொறுத்தவரை (அது அவரது புனை பெயர்) அது இரண்டு பேர் செய்ய வேண்டிய காரியம்.

மறுபடியும், "கமலா!" என்று கூப்பிட்டார்.

சமையல் + உக்ராண + ஸ்நான அறை மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால் இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு எட்டவில்லை.

சென்னையில் 'ஒட்டுக் குடித்தனம்' என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் 'திருக்கழுக்குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக் கொள்ளுவானோ என்னமோ!

'குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி' என்று வெளியில் போட்டிருந்த போர்டை நம்பித்தான் முருகதாசர் வீடு வேட்டையின் போது அங்கே நுழைந்தார்.

உள்ளே வீட்டின் பாக வசதிதான் விசித்திரமாக இருந்தது. முன்பக்கம், ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அதற்கப்புறம் எங்கோ பல கட்டுகள் தாண்டி மற்றொரு அறை. அதுதான் சமையல் வகையராவுக்கு. முதல் அறை படிக்க, படுக்க, நாலு பேர் வந்தால் பேச இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான 'பிளவு' இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர் யோசிக்கக் கூடியவரும் அல்லர்.

பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார்.

இடைவழியில், குழாயடியில், உள்ள வழுக்குப் பிரதேசம். அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துக்கள் உள்ள 'பிராட்வே' யை எல்லாம் பொருட்படுத்தாது, ஒருவாறு வந்து சேர்ந்தார். சமையல் அறை வாசலில் ஒரே புகைமயம் "கமலம்!" என்று கம்மிய குரலில் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, "வீடோ லட்சணமோ! விறகைத்தான் பார்த்துப் பாத்து வாங்கிக் கொண்டு வந்தியளே! ஒங்களுக்கிண்ணு தண்ணீலே முக்கிக் கொடுத்தானா? எரியவே மாட்டுதில்லை? இங்கே என்ன இப்பொ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்?" என்று வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டது.

"தீப்பெட்டியை இப்படி எடு! அதுக்காகத்தான் வந்தேன்!" என்று நடைப் பக்கமாகப் பின் நோக்கி நடந்தார்.

"இங்கே குச்சியுமில்லை, கிச்சியுமில்லை! அலமுவெ தீப்பெட்டி வாங்க அனுப்பிச்சேன். மண்ணெண்ணெய் விளக்கே நீங்கதான் துடைச்சிக் கொள்ளணும்!" என்றாள் கமலம்.

"குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த பிறகு வாங்கிக் கொள்ளப் படாதா?" என்று அதட்டினார் முருகதாசர்.

"ஆமாம், சொல்ல மறந்தே போயிட்டுதே... செட்டியார் வந்து விட்டுப் போனார், நாளை விடியன்னை வருவாராம்!" என்றாள் கமலா.


முருகதாசர் இந்தப் பாசுபதாஸ்திரத்தை எதிர்பார்க்கவில்லை.

"வந்தா, வெறுங்கையை வீசிக்கிட்டுப் போக வேண்டியதுதான்! வாரத்துக்கு நேரம் காலம் இல்லை?" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேற முயற்சித்தார்.

"அங்கே, எங்கே போயிட்டிஹ, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிட்டு வாருங்களேன்!"

"எங்கிட்ட இப்பொ துட்டுமில்லே, காசுமிலே!" என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர்.

"அதுவும் அப்படியா! இன்னா இந்த மிளவொட்டியிலே(*மிளகுப் பெட்டி - ஐந்தரைப் பெட்டி) மூணு துட்டு (*ஓர் அணா; ஒரு துட்டு - நான்கு பாண்டி நாட்டு தம்பிடி) இருக்கு. அதெ எடுத்துகிட்டுப் போங்க!"

"வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒரு பாடு எழுதித் தொலைக்கணும். இங்கே உனக்கு இப்பத்தான் எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே? இருட்ன பொறவா என்னை வாங்குறது! எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்!"

"சோம்பல் வந்தா சாத்திரமும் வரும். எல்லாம் வரும். ஏன் அண்ணைக்குப் போய் வாங்கிட்டு வரலியா? எல்லாம் உங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்துட்டுப் போனான்; பிரியமா சாப்பிடுவேளென்னு சொன்னேன். பின்னே அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே! போனப்ப போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!"

இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டிவிட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகி விட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால் சென்னையில் 'லைட்டிங் டைம்' அட்டவணையைக் கூட மதிக்காமல் அது இருண்டுவிடும்.

இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி. ஆனால் எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபெருமானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல், எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பொரேஷன் தயவு வரும் வரை, ஸ்ரீ முருகதாசர் வேறு வழியில்லாமல் தெரு நடையில் நின்று அலமுவின் வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று.

முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்; 'சாகாவரம் பெற்ற' கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகை எடுத்துக் கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன் முதல் மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார். 'டபாஸா' வீரிய மாத்திரையின் மீது பாடிய பரணியும், தேயிலைப் பானத்தின் சுயசரிதையும், அந்தத் தமிழ் தெரியாத வெள்ளைக்காரனையும் இவர்மீது அனுதாபம் காட்டும்படி செய்துவிட்டன. அதற்காகத்தான் அந்த முப்பது ரூபாய்!

வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக் கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வெற்றிலை, வேலை, குழந்தை வராத காரணம். எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. நடையிலிருந்து கீழே இறங்கிச் சந்தின் மூலை வரை சென்று பார்த்து வரலாமா என்று புறப்பட்டார்.


பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கிறார்கள். மனம் ஒரே விஷயத்தில் லயித்துவிட்டால் போதுமாம். பிள்ளையவர்களைப் பொறுத்த வரை அவர் இந்தப் 'பணம்' என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர். பணத்தை வாரிச் சேர்த்துக் குபேரனாகி விட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோ ம் வேலை பார்த்தோம் வந்தோம் என்று இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ வித்தைகளையெல்லாம் செய்துவிட்டார். அவருடைய குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை மட்டிலும் அவரால் எப்பொழுதும் சமன் செய்ய முடியவில்லை. நிதி மந்திரியாக இருந்தால் பட்ஜெட்டில் துண்டுவிழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் காட்டிவிட்டு, உபமான்யங்களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலையில்லாமல், கொஞ்சமும் உடம்பில் பிடிக்காமல் கடன் கேட்டுப் புறப்படுவதற்கு முடியுமா? குடும்பச் செலவு என்றால், சர்க்கார் செலவாகுமா?

கவலை இருக்கப்படாது என்ற உறுதியின் பேரில்தான் நம்பிக்கை என்ற இலட்சியத்தை மட்டும் திருப்தி செய்விக்க, 'சாகாவரம் பெற்ற' கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டி வைத்துவிட்டு, இந்த 'லிப்டன் தேயிலை', காப்பி கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால் அது ஒரு பொன் காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு. இப்பொழுது அது ஒரு நெடுந்தூர இலட்சியமாகவே மாறிவிட்டது.

முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத்ததைக் கிறுக்கி வைக்கக் காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிக்கை ஆபீஸில் வேலை. ஆனால், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில் தான் எழுதிக் கொள்ள வேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி. அதனால்தான் முதுகில் எழுதிக் கொள்ளவில்லை. யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும், தமது தூர இலட்சியத்தைப் பற்றி அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ்.பி.ஸி.ஏ (ஜீவஹிம்சை நிவாரண சங்கம்) யின் அங்கத்தினர்களோ என்னவோ, அத்தனையும் சகித்துக் கொண்டிருப்பார்கள்.

சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது.

"ஏட்டி என்ன! நீயோ, உன் லட்சணமோ?" என்று ஆரம்பித்தார் முருகதாசர்.

ஒரு ரிக்ஷா வண்டி ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக்காரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அலமு, ஒரு சுண்டெலி மாதிரி ஜம்மென்று மெத்தையில் உட்கார்ந்திருக்கிறாள். ரிக்ஷாக்காரனுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது போலும்!

"ஏட்டி!" என்றார் முருகதாசர் மறுபடியும்.

"இல்லையப்பா? நீ இனிமே என்னை அலமுன்னு கூப்பிடுவேன்னியே!" என்று சொல்லிக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.

"தீப்பெட்டி எங்கடீ?" என்றார் முருகதாசர்.

"கடைக்காரன் குடுக்கமாட்டேங்கறான். அப்பா!"

"குடுக்காதெ போனா நேரே வீட்டுக்கு வாரது! இங்கே என்ன இருப்பு?"

"அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மெரட்டாமே சொல்லிப் பாத்தேனுங்க. வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து வுடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக் காலுலே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும்..." என்று நீட்டிக் கொண்டே போனான் ரிக்ஷாக்காரன்.


"அப்பா, அவன் பங்கஜத்தே மாத்ரம் கூட்டிக்கிட்டே போரானே!" என்றாள் அலமு. பங்கஜம் எதிர்வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்! அந்த விஷயம் ரிக்ஷாவுக்குத்தான் புரியுமா, குழந்தைக்குத்தான் புரியுமா?

"அலமு! ராத்திரிலே கொழந்தைகள் ரிக்ஷாவிலே போகப்படாதுடீ! எறங்கி வா!" என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்றார் முருகதாசர்.

பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே கடைக்காரன், "சாமி! இந்த மாதிரியிருந்தா கட்டுமா? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு. பாக்கியை முடிச்சு, கணக்கெத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது. நான் பொளைக்க வந்தவன்!" என்றான்.

"நானும் பிழைக்க வந்தவன் தான். எல்லாரும் சாகவா வருகிறார்கள்! மின்னே பின்னேதான் இருக்கும். நான் என்ன கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறேனா?"

"போங்க சாமி! அது ஒண்ணுதான் பாக்கி! ரூ.2.5.4 ஆச்சு. எப்ப வரும்?"

"தீப்பெட்டியெக் குடு, சொல்றேன்!"

"பெட்டிக்கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும்?"

"எப்பவா? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கிறேன்; நாளை இல்லாவிட்டால் திங்கள்கிழமை."

"திங்கட்கிழமை நிச்சயந்தானே? நான் சீட்டுக் கட்டணும்!" என்றான்.

"சரி, பார்க்கிறேன்!" என்று திரும்பினார் தாசர்.

"பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம். நிச்சயமாக வேண்டும்!"

ஒரு கவலை தீர்ந்தது... அதாவது திங்கட்கிழமை வரை.

பாதி வழியில் போகையில், "அப்பா!" என்றது குழந்தை.

அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னையறியாமல் கொஞ்சம் கடினமாக, "என்னடி!" என்றார்.

"நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்லமாட்டேன். போ!"

"கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!"

"அதோ பார். பல்லு மாமா!"

முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை, அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது.

"எங்கடி!"

"அதோ பார், வீட்டு நடேலே! என்னை எறக்கிவிடப்பா!" என்று அவரது கையிலிருந்து வழுக்கி விடுவித்துக் கொண்டு, வீட்டிற்கு ஓட ஆரம்பித்தது.

"மெதுவா! மெதுவா!" என்றார் பிள்ளை; குழந்தையா கேட்கும்?

"மாட்டேன்!" என்றது. அதற்கப்புறம் ஏக களேபரம். பாவாடை தடுக்கிற்றோ என்னமோ? அலமு வலுக்கட்டாயமாக அங்கப் பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தாள்.




 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 8:57 pm



பிள்ளையவர்கள் ஓடிப் போய்க் குழந்தையை வாரி எடுத்தார். ஆனால் இவர் பதட்டத்திற்கு ஏற்ப அங்கு குழந்தைக்கு ஒன்றும் ஏற்படவில்லை.

"தோளுக்கு மேலே தொண்ணூறு, தொடச்சுப் பார்த்தா ஒண்ணுமில்லே!" என்று பாடிக் கொண்டு குழந்தை எழுந்தது.

"என்ன ஸார், குழந்தையை நீங்க இப்படி விடலாமா?" என்று சொல்லிக்கொண்டே சுப்பிரமணியம் அவர்கள் பக்கம் வந்தார்.

"என்ன ஸார் செய்யட்டும்! என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை என்ற உறுதி மனசிலே ஏறிப்போயிருக்கு. வெளிலே புறப்பட்டாச்சா, அப்புறம் தேடிக்கொண்டு பின்னோட பத்துப் பேர். இவளைக் கடைக்கனுப்பிச்சுட்டா தாயார். இவ்வளவு நேரம் அந்த ரிக்ஷாக்காரனோடு தர்க்கம் - என்ன செய்கிறது! வாருங்கள் ஸார். உள்ளே! ஒன் மினிட்! விளக்கை ஏத்துகிறேன்."

குழந்தை அலமு அதற்குள் வீட்டிற்குள், "பல்லு மாமா வந்துட்டார்!" என்று பொதுவாக உச்ச ஸ்தாயியில் விளம்பரம் செய்து கொண்டு ஓடிவிட்டாள்.

"குழந்தை துருதுருவென்று வருகிறதே! பள்ளிக்கூடத்திற்காவது அனுப்பக் கூடாதா?" என்றார் நண்பர்.

"ஆமாம் ஸார். தொந்திரவு சகிக்கலே. அங்கேதான் கொண்டு தள்ளணும். வயசு கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்" என்றார் முருகதாசர். விளக்குத் திரியை உயர்த்திக் கொண்டே.

"நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த்தேன்..." என்று ஆரம்பித்தார் சுப்பிரமணிய பிள்ளை.

"அந்த ராஸ்கல் வந்துட்டானா! என்றைக்கும் அவன் தொல்லைதான் பெரிய தொல்லையாக இருக்கிறது. இங்கே வந்தான்னா ஆபீஸுக்கு வந்து யாருக்காவது வத்தி வச்சுட்டுப் போயிடரது...மின்னே வந்தப்போ, என்ன எழவு சொன்னானோ, அந்த ஆர்ட்டிஸ்ட் 'பதி' இருந்தானே அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட்டான்..." என்று படபடவென்று பேசிக்கொண்டே போனார் முருகதாசர்.

"அப்படிப் பாத்தா உலகத்திலே யார்தான் ஸார் நல்லவன்! அவன் உங்களைப் பத்தி ரொம்ப பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கிறான்?"

"சவத்தெ தள்ளுங்க, ஸார்! பேன் பார்த்தாலும் பார்க்கும். காதை அறுத்தாலும் அறுக்கும். அவன் சங்காத்தமே நமக்கு வேண்டாம்... நீங்க என்ன சொல்ல வாயெடுத்தீர்கள்?"

"அதுதான். உங்களெப் பத்திதான் ஒரு இங்கிலீஷ்காரனிடம் பிரமாதமாகப் பேசிக்கொண்டிருந்தான்..."

"இவ்வளவுதானா! கதையை எழுதரேன் அல்லது கத்தரிக்காயை அறுக்கிறேன், இவனுக்கென்ன?..."

அதே சமயத்தில் வெளியிலிருந்து "முருகதாஸ்! முருகதாஸ்!" என்று யாரோ கூப்பிட்டார்கள்.

"அதுதான்! அவன் தான் வந்திருக்கிறான் போலிருக்கிறது! பயலுக்கு நூறு வயசு..."

"'சைத்தான் நினைக்கு முன்னால் வந்து நிற்பான்' என்பதுதான்!" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

பிறகு அவர் எழுந்து நின்று வெளியில் தலையை நீட்டி, "யாரது?" என்றார்.

"என்ன? நான் தான் சுந்தரம். இன்னும் என் குரல் தெரியவில்லையா?" என்று உரத்த குரலில் கடகடவென்று சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் வந்தவர். அவருடைய சிரிப்புக்கு இசைந்தபடி காலில் போட்டிருக்கும் ஜோடு தாளம் போட்டது.


"என்ன சுந்தரமா? வா! வா! இப்பொத்தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நீயும் வந்தாய்! காப்பி போடச் சொல்லட்டுமா? அலமு! அலமு!" என்று உரக்கக் கூவினார் முருகதாசர்.

எங்கிருந்தோ, "என்னப்பா!" என்று அலமுவின் குரல் வந்தது.

"அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கிரம் ஆகணும்!"

"நீ என்ன பத்திரிகையையே விட்டுவிட்டாயாமே! இப்பத்தான் கேள்விப்பட்டேன்."

"வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன? சீலைப்பேன் குத்துகிறதும் ஒரு 'பிஸினஸ்' ஆக இருந்து, அதில் ஒரு 'சான்ஸ்' கிடைத்தால் அதையும் விட்டா வைக்கிறது? நான் பத்திரிகையை விட்டுவிட்டா கதை எழுதாமல் இருந்துவிடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்கு 'பிளான்' போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும். அதில் 'சென்ட்ரல் ஐடியா' என்ன தெரியுமா?..."

"நீங்க நேற்று பொருட்காட்சிக்குப் போனீர்களாமே!" என்று பேச்சை மாற்ற முயன்றார் சுப்பிரமணிய பிள்ளை. இந்த விஷயத்தைத் தொட்டுவிட்டால், முருகதாசர் கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் மாதிரி விடாமல் திருப்பித் திருப்பி அதையே கதைத்துக் கொண்டிருப்பார்!

"அப்பா! காப்பியாயிட்டுது. நீதான் வந்து எடுத்துக்கிட்டுப் போகணும். சுடுது!" என்று சொல்லிக் கொண்டு, நிலைப்படி இரண்டு பக்கத்தையும் தொட்டவண்ணமாய் ஒற்றைக் காலை ஆட்டிக் கொண்டு நின்றாள் அலமு.

"அம்மா எங்கே?"

"அம்மா சாதத்தெ வடிச்சுக்கிட்டிருக்கா, அப்பா!"

"சரி! இதோ வாரேன், போ!"

"வாயேன்!"

"வாரேன்னா, போடீ உள்ளே!"

"காப்பி ஆறிப்போயிடும், அப்பா!"

"இதோ ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றார்.

"மாமா! நீ என்ன கொண்டாந்தே!" என்று கேட்டுக் கொண்டு, சுப்பிரமணிய பிள்ளை மடியில் உட்கார்ந்து, கழுத்திலிருக்கும் நெக்டையைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள் அலமு.

"அதெப் பிடித்து இழுக்காதே! மாமாவுக்கு கழுத்து வலிக்கும்!" என்றார் சுந்தரம் பிள்ளை.

"வலிக்காதே!" என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.

முருகதாசரும் மேல் துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்திய வண்ணம் உள்ளே நுழைந்தார்.

"என்னப்பா, மூணு டம்ளர் கொண்டாந்தே! எனக்கில்லையா?"

"உனக்கென்னடி இங்கே! அம்மாகூடப் போய்ச் சாப்பிடு."

"மாட்டேன்" என்று ஒரு டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டது குழந்தை.

முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம் கையில் ஒரு டம்ளரைக் கொடுத்தார்.

சுந்தரம் வாங்கி மடமடக்கென்று மருந்து குடிப்பது போல் குடித்து விட்டு, "காப்பி வெகு ஜோர்!" என்று சர்டிபிகேட் கொடுத்தார்.

மற்றொரு டம்ளர் சுப்பிரமணிய பிள்ளையிடம் கொடுக்கப்பட்டது. "மாமா! எனக்கில்லையா?" என்று அவரிடம் சென்று ஒண்டினாள் அலமு.

"வாடி, நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம்!" என்றார் முருகதாசர்.


"மாமாகூடத்தான்!" என்றது குழந்தை, சுப்பிரமணியபிள்ளை கையிலிருந்த டம்ளரில் அலமுவைக் குடிக்கச் செய்தார்.

பாதியானதும், "போதும்!" என்றது குழந்தை.

"இந்தாருங்க ஸார்!" என்று மற்ற டம்ளரையும் நீட்டினார் முருகதாசர்.

"வேண்டாம்! வேண்டாம்! இதுவே போதும்!" என்றார் சுப்பிரமணிய பிள்ளை.

"நான்சென்ஸ்!" என்று சொல்லிவிட்டு, குழந்தை எச்சிற்படுத்தியதைத் தாம் வாங்கிக் கொண்டார் தாசர்.

"நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!" என்று எழுந்தார் சுந்தரம். "அதற்குள்ளாகவா! வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!" என்றார் முருகதாசர்.

"கையில் எடுத்துக் கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டு வெளியேறினார் சுந்தரம்.

கையில் இருந்த புகையிலையை வாயிற் ஒதுக்கிவிட்டு, சிறிது சிரமத்துடன் தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை.

தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, "சுப்ரமண்யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ஜ் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!" என்றார் முருகதாசர்.

"ஏது அவசரம்!"

"சம்பளம் போடலே: இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது...திங்கட்கிழமை கொடுத்துவிடுகிறேன்!"

"அதற்கென்ன!" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என் கையில் இது தான் இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.

"இது போதாதே!" என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர்.

"அப்பொ..." என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார்.

"பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சுப்பிரமணியமும் விடை பெற்றுச் சென்றார்.

முருகதாசர் தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப் பாயில் உட்கார்ந்து கொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

"அங்கெ என்ன செய்யறீங்க?" என்று மனைவியின் குரல்!

"நீதான் இங்கே வாயேன்!"

கமலம் உள்ளே வந்து, "அப்பாடா!" என்று உட்கார்ந்தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்துவிட்டு, "இதேது?" என்றாள்.

"சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!"

"உங்களுக்கும்... வேலையில்லையா?" என்று முகத்தைச் சிணுங்கினாள் கமலம். பிறகு திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு "ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்றாள்.

"அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்?"

"திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்!"

"அதற்கென்ன இப்பொழுது!"

"போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!"

"திங்கட்கிழமைக்கு?"

"திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!"

மணிக்கொடி, 15-01-1937




 புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக