புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 3 Poll_c10எனது கதைகள் -- - Page 3 Poll_m10எனது கதைகள் -- - Page 3 Poll_c10 
64 Posts - 58%
heezulia
எனது கதைகள் -- - Page 3 Poll_c10எனது கதைகள் -- - Page 3 Poll_m10எனது கதைகள் -- - Page 3 Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 3 Poll_c10எனது கதைகள் -- - Page 3 Poll_m10எனது கதைகள் -- - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எனது கதைகள் -- - Page 3 Poll_c10எனது கதைகள் -- - Page 3 Poll_m10எனது கதைகள் -- - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 3 Poll_c10எனது கதைகள் -- - Page 3 Poll_m10எனது கதைகள் -- - Page 3 Poll_c10 
106 Posts - 60%
heezulia
எனது கதைகள் -- - Page 3 Poll_c10எனது கதைகள் -- - Page 3 Poll_m10எனது கதைகள் -- - Page 3 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 3 Poll_c10எனது கதைகள் -- - Page 3 Poll_m10எனது கதைகள் -- - Page 3 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
எனது கதைகள் -- - Page 3 Poll_c10எனது கதைகள் -- - Page 3 Poll_m10எனது கதைகள் -- - Page 3 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கதைகள் --


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 8:55 am

First topic message reminder :

ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,

"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "

" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "

" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )

" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "

" அது என்ன வழி ? "

" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )

அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."

" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"

உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "

" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "

" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "

ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.

" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 31, 2015 5:32 pm

உனக்கு என்ன யோக்கியதை இருக்கு ?
=======================================
Robert Bruce and The Spider கதையைப் பேரனுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார் இராமசாமித் தாத்தா.

" இந்தக் கதையைப் பேரனுக்குச் சொல்லித்தர உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ? " - சீறினாள் சீதாப் பாட்டி.

" இந்தக் கதையைச் சொல்வதற்கு என்று தனியாக ஏதாவது யோக்கியதை வேண்டுமா என்ன ? "- இராமசாமித் தாத்தா திருப்பிக் கேட்டார்.

" ஆமாம் ! கண்டிப்பாக ஒரு யோக்கியதை வேண்டும்; அந்த யோக்கியதை உங்களுக்கு இல்லை "

" ஏன் இல்லை ? "

" இந்தக் கதையின் மூலமாகப் பேரனுக்கு என்ன நீதி சொல்ல வர்றீங்க ? ''

" வலை கட்டும் முயற்சியில் ஆறு முறை தோற்ற சிலந்தி ஏழாம் முயற்சியில் வெற்றிபெற்றது. ஆகவே விடாமுயற்சி இருந்தால் எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடையலாம் ; மாறாக இடையிலே தொய்வு இருந்தால் எடுத்த காரியம் யாவினும் தோல்விதான் என்ற நீதியைத்தான் சொல்ல வருகிறேன். '

" இத... இதத்தான் நான் எதிர்பார்த்தேன்; உங்களோட நண்பர் கந்தசாமிக்கு ஒரு லட்ச ரூபா கடன் கொடுத்தீங்க. ஹார்ட் ஆபரேஷன் செலவுக்காக வாங்கிட்டுப் போனாரு. இன்னிக்குத் தேதியில வருஷம் இரண்டாச்சு. அசலும் வரல; வட்டியும் வந்தபாடில்ல. நீங்களும் ஒப்புக்கு ஒரு தடவ கேட்டுட்டு அத்தோட விட்டுட்டீங்க! அந்த சொரண கேட்ட மனுஷனும் ரொம்ப நல்லதாப் போச்சுன்னு பேசாம இருக்காரு !"

" வாய மூடு ! அவனுக்கு என்ன கஷ்டமோ? கண்டிப்பாக் கொடுத்துடுவான்."

" அப்படி இல்லீங்க " பாக்காத வயலும் கேட்காத கடனும் பாழ் " அப்படின்னு சொல்லுவாங்க. கொடுத்த கடனை வசூல் பண்ணனும்னா விடாம கேட்டுகிட்டே இருக்கனுங்க! அப்பத்தான் கொடுப்பாங்க ; இல்லைன்னா பேசாம இருந்திடுவாங்க."

அந்த சமயத்தில் " இராமசாமி ! " என்று யாரோ வாசலில் கூப்பிட்டார்கள்.

" சீதா! அது யாருன்னு பாரு ! "

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த சீதாப் பாட்டி," அந்த மனுசந்தான் வந்திருக்காரு; உங்க பிரண்டு கந்தசாமி; மறுபடியும் கடன்கேட்க வண்டிருக்காரோ என்ன எழவோ ! உஷாரா இருங்க ! ஒரு டம்ளர் காப்பிக்குக் கேடு . " என்று சொல்லிக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

" வாப்பா ! கந்தசாமி ! என்ன இந்தப் பக்கம் ? " என்று கேட்டு நண்பனை வரவேற்றார் இராமசாமி.

" ஒன்னுமில்லையப்பா! இன்னிக்கிக் காத்தாலப் பேரனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன்; அதாவது காக்கா நரிக் கதையை சொல்லிக்கிட்டு இருந்தேன்; அப்ப என் பொஞ்சாதி வந்து , இந்தக் கதையைப் பேரனுக்குச் சொல்லித்தர எனக்கு யோக்கியதை இல்லைன்னு சொன்னா.

ஏண்டி ! என் யோக்கியதைக்கு என்ன குறைச்சல்? ன்னு கேட்டேன். அதுக்கு அவ

இந்தக் கதை மூலமாப் பேரனுக்கு என்ன நீதியைச் சொல்ல வர்றீங்க ? ன்னு கேட்டாள். அதுக்கு நான் , காக்கா போல நாம் ஏமாறக்கூடாது;அதே சமயத்தில் நரியைப்போல யாரையும் ஏமாத்தக் கூடாது என்ற நீதியைத்தான் சொல்ல வர்றேன்னு சொன்னேன். உடனே அவ

" இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்க நண்பர் இராமசாமி கிட்ட ஒரு லட்ச ரூபா கடனா வாங்கிட்டு வந்து வருஷம் இரண்டு ஆவுது; நீங்க வட்டியும் கொடுக்கல அசலும் கொடுக்கல. அந்தப் பணத்தை அவரு அந்த சமயத்துல கொடுத்து உதவாம இருந்திருந்தா இன்னிக்கி நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க ! உங்க நண்பர் நல்ல மனுஷங்க! அவரை ஏமாத்த நினைக்காதீங்க ! "என்று சொன்னாள். அதான் பணத்தையும் , வட்டியையும் எடுத்துகிட்டு வந்திருக்கேன் என்று சொல்லி ஒரு மஞ்சள் பையை நீட்டினார்.

இதையெல்லாம் சமையல் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சீதாப் பாட்டி சரேலென வெளியே வந்து,
" வாங்க அண்ணா! வாங்க! இந்தாங்க ஹார்லிக்ஸ் குடிங்க " என்று சொல்லி டம்ளரை நீட்டினாள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 03, 2015 1:23 pm

பெருசும், சிறுசும்.
===================
காலை 9 மணி. அது ஒரு ஹார்டுவேர் பொருட்கள் விற்பனை செய்யும் கடை. வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள், கார்ப்பெண்டர்கள், பெயிண்டர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அந்தக் கடைக்கு வந்தார். கூட்ட நெரிசலில் நுழைய முடியாமல் சற்றுத் தொலைவிலேயே நின்று கொண்டிருந்தார். பத்து நிமிடம் சென்றிருக்கும். கூட்டம் குறைந்த பாடில்லை. கல்லாவில் உட்கார்ந்திருந்த கடை முதலாளி பெரியவரைப் பார்த்து

" பெருசு ! உங்களுக்கு என்ன வேணும் ?" என்று கேட்டார்.

" புருசு வேணும்." என்றார் பெரியவர்.

" எதுக்கு ?"

" வீட்டுக்கு வெள்ளையடிக்க ! எவ்வளவு விலை?"

" எழுபது ரூபா ஆகும்."

" சரி, ஒன்னு கொடுங்க."

" பெருசுக்கு நல்லதா புருசு ஒன்னு எடுத்துக் குடுடா !" என்று கடைப் பையனிடம் சொல்லிவிட்டு மற்றவர்களைக் கவனித்தார் கடை முதலாளி.

கடைப்பையன், பெரியவருக்கு ஒரு புருசு கொண்டுவந்து கொடுத்தான். அதை வாங்கிக்கொண்ட பெரியவர் , கடை முதலாளியிடம் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார். அதை வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொண்டார் கடை முதலாளி. உடனடியாக சில்லறை கொடுப்பதற்குள் , கைபேசி சிணுங்கவே ,அதை எடுத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

பெரியவர் கால்மணி நேரமாக நின்றுகொண்டிருந்தார். பெரியவருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கி சில்லறையை மறந்துவிட்டு , வியாபாரத்தைக் கவனித்தார் கடை முதலாளி.

" ஐயா ! எனக்குப் பாக்கித்தொகையைக் கொடுத்தீங்கன்னா நான் போயிடுவேன்! என்னால நிக்க முடியல !"

" உடனே முதலாளி, பெருசு ! நீங்க என்ன வாங்கினீங்க? எவ்வளவு கொடுத்தீங்க ?" என்று கேட்டார்.

" இந்தப் புருசு ஒன்னு வாங்கினேன்; ஐந்நூறு ரூபாய் கொடுத்தேன். " என்றார் பெரியவர். சொல்லி முடிப்பதற்குள் பெரியவருக்கு வியர்த்தது.

மீதி 430 ரூபாயை பெரியவரிடம் கடைக்காரர் கொடுத்தார்.

அவசர அவசரமாக ரூபாயை வாங்கி , பேண்ட் பைக்குள் திணித்துக்கொண்டு பெரியவர் புறப்பட்டார். கர்சீப்பால் தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

பெரியவர் சிறிது தூரம் சென்றிருப்பார்.

" தாத்தா ! தாத்தா !" என்ற குரல் கேட்டு பெரியவர் திரும்பினார். தன்னை நோக்கி ஒரு பத்துவயதுப் பையன் ஓடி வருவதைக் கண்டார்.

பெரியவரிடம் வந்த அந்தப் பையன், " தாத்தா! நீங்க கர்சீப் எடுக்கும்போது , உங்க பேண்ட் பாக்கெட்டிலிருந்து இந்த ரூபா நோட்டுங்க கீழே விழுந்துடிச்சி ! இந்தாங்க " என்று சொல்லிக் கொடுத்தான். கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே அந்தப் பையன் ஓடிவிட்டான்.

பெரியவர் அந்தப் பணத்தை உற்றுப் பார்த்தார். அந்த ரூபாய் நோட்டிலிருந்த காந்தித் தாத்தா , பெரியவரைப் பார்த்து,

" நீயும் பெருசு; நானும் பெருசு, ஆனால் நமக்குள்ளே எத்தனை வித்தியாசம்! " என்று கேட்பதுபோல் தோன்றவே பெரியவர் குற்ற உணர்ச்சியால் தலை கவிழ்ந்தார்.


குறள் :
=======

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் . ( வாய்மை-293 )

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 04, 2015 3:45 pm

மீள்வரவுக்கு நன்றி.
====================
வீட்டு வாசலில் நிழலாடியது.

செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நடேசன் நிமிர்ந்து பார்த்தார். எதிரே யாமினி நின்று கொண்டிருந்தாள். நடேசனுக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை. கண்களைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தார்.

ஆம்; அது யாமினிதான்.

" வாங்க ! உள்ளாற வாங்க ! " நடேசன் வரவேற்றார்.

" என்னைத் தெரியுதா உங்களுக்கு ? "

" நீங்க யாமினி தானே ? இருபது வருஷங்களுக்கு முன்பு பார்த்தது; அதான் அடையாளம் கண்டுகொள்ள கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்படி உட்காருங்க ; ஆமா ! கூட யாரு இது ? "

" எம் பொண்ணு ; +2 படிக்கிறா ! நீங்க நல்லா இருக்கிங்களா ? "

" எனக்கென்ன குறைச்சல் ? நான் நல்லாத்தான் இருக்கேன். கொஞ்சம் இருங்க; காப்பி போட்டுக் கொண்டு வரேன். "

இரண்டு டம்ளர்களில் காப்பி கொண்டுவந்து கொடுத்தார் நடேசன்.

" வீட்ல யாரும் இல்லையா ? "

" நான் மட்டும்தான் இருக்கேன்; ஏன் ? "

" நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா ? "

சிறிதுநேரம் நடேசன் எதுவும் பேசவில்லை.

" நான் ஏதும் தப்பாக் கேட்டுட்டேனா ? "

" நீங்க கேட்டதில் தப்பு எதுவும் இல்லை; ஆனால் காதலிக்க ஒருத்தி ; கைப்பிடிக்க மற்றொருத்தி என்று இருக்க நான் விரும்பவில்லை; அதனால்தான் கல்யாணமே பண்ணிக்காம காலத்தை ஓட்டிவிட்டேன். "

இதைக் கேட்டதும் யாமினியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. தரையைப் பார்த்தபடியே குனிந்து இருந்தாள். சற்றுநேரம் எதுவும் பேசவில்லை. அவளால் பேச முடியவில்லை.

' இப்ப எதுக்கு என்னை பாக்க வந்து இருக்கீங்க ? காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா ? "

மீண்டும் மௌனம்;மீண்டும் அழுதாள் யாமினி.

" என்னுடைய கணவன் இப்ப உயிரோடு இல்லை; நல்லவன் என்று நம்பினேன்; ஏமாந்துவிட்டேன். திருமணத்திற்குப் பிறகுதான் அவர் ஒரு குடிகாரன் என்பது தெரிய வந்தது. குடித்துக் குடித்தே சொத்தையெல்லாம் அழித்துவிட்டார். அளவுக்கு மிஞ்சிய குடியால் குடல்வெந்து போன வருடம் இறந்துவிட்டார். இப்போது நான் தனிமரம்; வருமானத்திற்கு வழியில்லை; இவளை வைத்துக்கொண்டு நிராதரவாக நிற்கின்றேன். உங்கள் ஞாபகம் வந்தது. அதான் உங்களைப் பார்க்க வந்தேன்."

" உங்களோட அம்மா அப்பா ...? "

" எல்லாம் போய் சேர்ந்துவிட்டார்கள். "

" உங்களுக்கு சொந்தக்காரங்க ..? "

" யாரும் இல்லை. என்னை நீங்க யாமினின்னு பேர் சொல்லியே கூப்பிடலாம்; நீங்க இன்னும் காபி சாப்பிடலையே ! நான் வேண்டுமானால் உங்களுக்குக் காப்பி போட்டு தரவா ? "

" எதுவும் வேண்டாம்; இனி எந்த புதிய உறவையும் நான் விரும்பவில்லை; என் வாழ்க்கை இப்படித்தான் என்று எப்போதோ நான் முடிவு செய்துவிட்டேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த முடிவு. அதை மாற்ற நான் விரும்பவில்லை. கொஞ்சம் இருங்கள் ! " என்று சொல்லிவிட்டு நடேசன் அறைக்கு உள்ளே போனார்.

சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த நடேசன், " இதில் ஐந்து லட்ச ரூபாய்க்கு செக் எழுதியிருக்கேன். உங்க பேரை நீங்க எழுதிக் கொள்ளுங்கள். என்னால் முடிந்த உதவி இதுதான்; வேறு எதையாவது எதிர்பார்த்து நீங்கள் வந்திருந்தால்.. மன்னிக்கவும் என்னால் அது முடியாது. எது எப்படி இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னைப் பார்க்க வந்ததற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "

நடேசன் கொடுத்த செக்கை யாமினி பெற்றுக் கொண்டாள். அதற்குள் டெலிபோன் மணி அடிக்கவே நடேசன் உள்ளே சென்றார். ஐந்து நிமிடம் பேசிவிட்டு வெளியே வந்தவர் , ஹாலில் யாமினியும் , அவள் மகளும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த செக் மேஜை மீது அப்படியே இருந்தது.

அவசரமாக நடேசன் தெருவுக்குச் சென்றார். அங்கே யாமினியும், அவள் மகளும் சென்றுகொண்டு இருப்பதைப் பார்த்தார்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 05, 2015 9:08 pm

துளசியோட கதையை முடிச்சுடுங்க !
=====================================
மதுசூதனன் அலுவலகத்தில் தன் வேலையில் மூழ்கி இருந்தான்.

அப்போது ஆபீஸ் பியூன் சுப்பு அவனிடம் வந்து, " சார் ! மேனேஜர் உங்களைக் கூப்பிடறார். " என்று சொன்னான்.

" இதோ வந்துட்டேன் " என்று சொல்லிக்கொண்டே மேனேஜருடைய கேபினுக்கு மதுசூதனன் சென்றான்.

" சார் ! மே ஐ கம் இன் ? "

" வாங்க மது வாங்க ! பிளீஸ் பீ சீடெட். "

" என்ன சார் ! என்ன விஷயம் ? எதுக்குக் கூப்பிட்டீங்க ? "

" ஒரு முக்கியமான விஷயம்; அது உங்களால மட்டும்தான் முடியும். "

" என்ன மேட்டர்னு சொல்லுங்க ! " மது கேட்டான்.

" துளசியோட கதைய நீங்க முடிச்சுடனும் ! "

மதுவுக்குக் குப்பென்று வியர்த்தது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

" சார் ! நான் அவங்களை நெருங்கக் கூட முடியாது; அப்புறம் எப்படி அவங்கக் கதைய நான் முடிக்கிறது ? சார் ! என்னால முடியாது; தயவுபண்ணி வேறு யாரையாவது துணிச்சலான ஆளை நீங்க ஏற்பாடு பண்ணுங்க ! சாரி சார் ! என்னால முடியாது. "

" மது ! மத்தவங்களை விட உங்களுக்குத்தான் துளசியோட பழக்கம் அதிகம்; அவங்களோட ஒவ்வொரு மூவ்மெண்டும் உங்களுக்கு அத்துபடி; அதனாலதான் இந்தவேலைக்கு உங்களை நான் தேர்ந்தெடுத்தேன். மத்தவங்ககிட்ட இந்த வேலைய ஒப்படைச்சா அவங்க சொதப்பிடுவாங்க ! இனிமேலும் இந்த வேலைய நான் தள்ளிப்போட முடியாது; நாலாபுறமிருந்து நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க ! உங்கபேரு வெளிய வராம நான் பாத்துக்கிறேன்.

இந்த File -ல் எல்லா விவரமும் இருக்கு; இத எடுத்துகிட்டு போங்க; இன்னும் இரண்டு நாள்ல இந்த வேலைய நீங்க முடிக்கணும். இந்தாங்க இந்த ஐம்பதாயிரம் ரூபாயை அட்வான்சா வச்சிகுங்க ! மீதியை வேலைய முடிச்சப்புறம் தரேன் ! "

மிகுந்த மனக் கலக்கத்தோடு அந்த ரூபாயை மது வாங்கிக் கொண்டான்.

" சரிங்க சார் ! இரண்டு நாள் கழிச்சு வந்து உங்களைப் பார்க்கிறேன். "

இரண்டு நாட்கள் கழிந்தது. வேலையைக் கச்சிதமாக முடித்த மது மேனேஜரிடம் சென்று பைலைக் கொடுத்தான். பைலைப் படித்துப் பார்த்த மேனேஜர் துள்ளிக் குதித்தார்.

" வெல்டன் மது ! அபாரம் ! அருமை ! நான் நினைச்ச மாதிரியே வேலையைக் கச்சிதமா முடிச்சிட்டீங்க ! எழுத்தாளர் துளசியின் அகால மரணம், அதாவது சாலை விபத்துல அவங்க காலமானது நமக்கு ஹெவி லாஸ். அவங்களோட " ஆளவந்தார் கொலை வழக்கு " என்கிற துப்பறியும் கதை ஜனங்ககிட்ட ரொம்பவும் வரவேற்பைப் பெற்றது. ஆனா நம்மளோட துரதிஷ்டம் அந்தக் கதையோட கிளைமேக்சை எழுதிகிட்டு இருக்கும்போது துளசிக்கு இந்த மாதிரி ஒரு மரணம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. துளசி இறந்து மூணு மாசம் ஆயிடுச்சி. ஜனங்க அவங்க கதையை முடிக்கச்சொல்லிப் பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நேரடியாகவும், போன் மூலமாகவும், கடிதங்கள் எழுதியும் கதையை முடிக்கச் சொல்லி என்னைக் கேட்டுகிட்டாங்க. நல்லவேளை ! கதையோட அவுட்லைனை துளசி என்னிடம் கொடுத்து வச்சிருந்தாங்க. மீதிக் கதை முடிக்க அது ரொம்பவும் உதவியா இருந்தது. இந்த பைல் மட்டும் இல்லைன்னா, கதையை முடிக்க ரொம்பவும் கஷ்டமா இருந்திருக்கும். துளசி மாதிரி ஒரு பிரபலமான எழுத்தாளரோட கதையை அவங்க விட்ட இடத்திலிருந்து எழுதறதுன்னா அது சாதாரண விஷயம் இல்லை. முதல்ல நீங்க ரொம்பவும் பயப்பட்டீங்க ! அது இயல்புதான் ஆனாலும் எனக்கு உங்கமேல ரொம்ப நம்பிக்கை இருந்தது; அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

துளசியோட கதையைக் கச்சிதமா முடிச்சிட்டீங்க ! இந்தாங்க மீதி ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிக்குங்க !"

" தேங்க்ஸ் !" என்று சொல்லி அந்த ரூபாயைப் பெற்றுக் கொண்டான் மதுசூதனன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 06, 2015 3:31 pm

போனவன் வந்தானடி!
=======================
" போன்ல யாருங்க ? " சரவணனைப் பார்த்து மீனாட்சி கேட்டாள்.

" அப்பா பேசினாரு. "

" என்ன பேசினாரு ? "

" எனக்கு பொண்ணு பார்த்திருக்காராம்; உடனடியாய் ஊருக்குப் புறப்பட்டு வரச் சொல்றாரு! "

" ஏங்க ! நம்ம காதலைப் பத்தி இன்னும் உங்க அப்பாகிட்ட சொல்லலையா? சீக்கிரம் சொல்லிடுங்கன்னு உங்ககிட்ட பலமுறை நான் சொல்லியும் நீங்க கேட்கலை ! இப்ப பாத்தீங்களா ! விஷயம் முத்திப் போச்சு. இப்ப என்ன பண்ணப்போறீங்க?

" என் அப்பாவை எதிர்த்துப் பேசற தைரியம் எனக்குக் கிடையாது; என்ன மன்னிச்சுடு மீனாட்சி! நம்ம காதல இத்தோட மறந்துட்டு, ஒரு நல்ல பையனா பாத்து நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு, வாழ்க்கையில செட்டில் ஆயிடு ! அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது! "

" அடப்பாவி! இவ்வளவுதானா உன் தைரியம்? இப்படிச் சொல்ல உனக்கு வெக்கமா இல்ல? இதுக்கு நீ என்னை காதலிக்காமலேயே இருந்திருக்கலாம்! ரெண்டு வருஷமா பழகிட்டு , இப்படி சர்வ சாதாரணமா என்னைத் தூக்கி எரிஞ்சிட்டியே! பொம்பிளைங்க மனசுல ஒருத்தனுக்கு இடம் கொடுத்துட்டா , அவ்வளவு சீக்கிரமா அவனைத் தூக்கி எறிஞ்சுட்டு , வேற ஒருத்தனுக்கு இடம் கொடுக்கமாட்டாங்க! அத நீ நல்லா புரிஞ்சிக்கோ! பாறையில செதுக்குன சிற்பம் மாதிரி உன்னோட முகம் என் நெஞ்சுக்குல்லாற பதிஞ்சு போச்சு! அத எப்பிடி ஐயா நான் மறப்பேன்? எனக்கு உன்னோடதான் வாழ்க்கை. இல்லைன்னா எனக்கு சாவுரததைத் தவிர வேற வழியில்ல! " என்று சொல்லிவிட்டு மீனாட்சி தேம்பித் தேம்பி அழுதாள்.

" சாரி! மீனாட்சி! எனக்கு வேற வழி தெரியல! என் அப்பாவை எதிர்த்துட்டு என்னால வாழமுடியாது; நான் வறேன் ! " என்று சொல்லிவிட்டு சரவணன் போய்விட்டான்.

அப்போது மீனாட்சியின் தோழி காமாட்சி அங்கு வந்தாள்! அவளிடம் , சரவணன் தன்னைக் கைவிட்டுப் போனதைக் கூறி மீனாட்சி அழுதாள்!

" கவலைப்படாதே மீனாட்சி! சரவணன் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவான்! உன் காதலை ஏத்துக்குவான் ! இது உறுதி ! "

" எப்படி காமாட்சி அவ்வளவு உறுதியா சொல்றே ? "

" சரவணன் இந்தப் பொட்டல் காட்டின் வழியாக மூன்று கிலோமீட்டர் நடந்து சென்றுதான் பஸ்ஸைப் பிடிக்கணும்; அதுக்குள்ளார அவன் மனசு மாறி திரும்ப வந்திடுவான்! இந்தப் பொட்டல்காடு அவனோட மனசை மாத்திடும் . '

" அது எப்பிடி காமாட்சி , இந்தப் பொட்டல்காடு சரவணனோட மனசை மாத்தும் ? "

" நீ வேடிக்கை பாரு! நான் சொன்னபடி நடக்குதா இல்லையான்னு !"

என்ன அதிசயம்! காமாட்சி சொன்னதுபோல் நான்கு மணிநேரம் கழித்து சரவணன் திரும்பி வந்தான்!அவனைக் கண்டதும் மீனாட்சி, காமாட்சியைப் பார்த்து சந்தோசத்துடன் சிரித்தாள்.

" என்ன சரவணன் ! உன் காதலி மீனாட்சியை விட்டுவிட்டுப் போன நான்குமணி நேரத்தில் திரும்பி வந்துட்டியே! என்ன காரணம்?-காமாட்சி கேட்டாள்.

" என்ன மன்னிச்சுடு மீனாட்சி! நான் உன்னைவிட்டுப் போனது தப்புதான்; என்ன நடந்தாலும் சரி; யார் எதிர்த்தாலும் சரி; நம்ம காதல் நிறைவேறும். இது சத்தியம். அப்பாவை எப்படியாவது நான் சமாதானப் படித்திடுவேன். " என்று சொல்லி மீனாட்சியின் கையைப் பிடித்தான்.

" அது சரி சரவணன் ! உன்னுடைய இந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம் ? " - காமாட்சி கேட்டாள்.

" காட்டிலே கண்ட சில நிகழ்வுகள்தான் என்னுடைய மனமாற்றத்திற்குக் காரணம். "

" அப்படியா! காட்டிலே அப்படி என்ன பார்த்தாய் ?"

" நான் பொட்டல்காடு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு யானைக் குடும்பம் என் கண்ணில் பட்டது. ஆண் யானை, பெண் யானை , குட்டியானை என்று அந்த மூன்று யானைகளும், கடுமையான வெய்யிலின் காரணமாகத் தண்ணீர் தேடி அலைந்து கொண்டிருந்தன. அப்போது சிறிது தூரத்தில் ஒரு குட்டையில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. அதைப் பார்த்த குட்டியானை, மிகவும் விரைவாகச் சென்று , அந்த நீரைக் கலக்கி விட்டுவிட்டது. பிறகு பெண்யானை , அந்தக் குட்டையில் இருந்த நீரைத் தும்பிக்கையால் உறிஞ்சிக் குடித்தது. இருக்கும் கொஞ்ச நீரைத் தானும் குடித்தால் , பெண் யானைக்குப் போதிய நீர் கிடைக்காது என்று எண்ணிய ஆண்யானை , பெண் யானையும், குட்டி யானையும் குடித்த பிறகு, மீதி நீர் இருந்தால் குடிக்கலாம் என்று எண்ணி வாளா இருந்தது.

அதைப் பார்த்தவாறே சிறிது தூரம் சென்றேன். அங்கே ஒரு மரக் கிளையில் பெண் புறாவும், ஆண் புறாவும் அருகருகே அமர்ந்திருந்தன. கோடையின் வெப்பம் தாளாமல் , பெண் புறா மிகவும் துன்பப்பட்டது. அதைக்கண்ட ஆண்புறா, தன் மெல்லிய சிறகை விரித்து , ஆட்டி அதன் துன்பத்தைப் போக்கியது.

அதைப் பார்த்தவாறே சிறிது தூரம் சென்றேன். அங்கே ஆண் மான் , அதாவது கலைமான் ஒன்று நின்றுகொண்டு இருந்தது; அந்த ஆண் மானின் நிழலிலே , பெண் மான் ஒன்று இளைப்பாறிக் கொண்டு இருந்தது.

நான் கண்ட இந்த மூன்று காட்சிகளும்தான் , என்னுடைய மனமாற்றத்திற்குக் காரணம். நம்மை நம்பி வந்தவளை நட்டாற்றில் விடக்கூடாது என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது. எனவேதான் என்னுடைய மீனாட்சியைப் பார்ப்பதற்காகத் திரும்பி வந்தேன். இனி இந்த உலகமே எதிர்த்தாலும் , நான் மீனாட்சியைக் கைவிடமாட்டேன். " என்று சொல்லி சரவணன் சிரித்தான்.

காமாட்சியும் , மீனாட்சியைப் பார்த்து," என்ன நான் சொன்னது உண்மையாகிவிட்டதல்லவா? "
என்று கேட்டாள்.

" எனக்கு வாழ்வளித்த பொட்டல்காடு வாழ்க ! " என்று சொல்லி மீனாட்சி சிரித்தாள்.


" அடிதாங்கும் அளவின்றி, அழலன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாய்! காடு " என்றார் , " அக்காட்டுள்
துடியடிக் கயந்தலைக் கலக்கிய சின்நீரைப்
பிடியூட்டிப் பின்உண்ணும் களிறு " எனவும் உரைத்தனரே.

" இன்பத்தின் இகந்துஒரீஇ இலைதீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடு " என்றார் " அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகால் ஆற்றும் புறவு " எனவும் உரைத்தனரே.

" கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரும் தகையவே காடு " என்றார் " அக்காட்டுள்
இன்நிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலை " எனவும் உரைத்தனரே.

கலித்தொகை- பாலைக்கலி-பாடியவர்-பெருங்கடுங்கோன்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 3:50 pm

எனது கதைகள் -- - Page 3 3838410834 எனது கதைகள் -- - Page 3 3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 07, 2015 7:24 pm

தமிழாசிரியரும் மாத்ருபூதமும்
==================================
தமிழாசிரியர் அறிவொளி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ( அவருக்குப் பெற்றோர் இட்டபெயர் ஞானப்பிரகாசம். தமிழின் மீது கொண்ட தணியாத தாகத்தால், தன் பெயரை அறிவொளி என்று மாற்றியமைத்துக் கொண்டார். ) அப்போது

" ஐயா ! வணக்கம் ! " என்ற குரல் கேட்டு , சைக்கிளை நிறுத்தினார்.

எதிரே வாலிபன் ஒருவன் நின்றிருந்தான். அவரைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினான்.

" தம்பி ! யாரப்பா நீ ? "

" ஐயா ! என்னைத் தெரியவில்லையா ? நான்தான் உங்களிடம் தமிழ் படித்த மாணவன்; என் பெயர் மாத்ரு பூதம். நீங்கள் கூட மாத்ருபூதம் என்ற பெயரை , தாயுமானவன் என்று மாற்றி வைத்துக்கொள் என்று அடிக்கடி கூறுவீர்களே ! அந்த மாத்ருபூதம் நான்தான் ஐயா !"

" ஓ ! அந்த மாத்ருபூதமா நீ ? பார்த்து நெடுநாட்கள் ஆகிவிட்டதல்லவா ! அதுதான் உன்னுடைய முகம் மறந்துபோய் விட்டது. நலமாக இருக்கின்றனையா ?"

" நலமாக உள்ளேன் ஐயா ! "

" தம்பி ! தற்போது என்ன செய்துகொண்டு இருக்கிறாய் ? "

" ஐயா ! நான் இப்போது பி.இ. ஃ பைனல் இயர் படித்துகொண்டு இருக்கிறேன் . தற்போது பரீட்சை எழுத சென்றுகொண்டு இருக்கிறேன் ஐயா ! "

" பொறியியல் இறுதி ஆண்டா ? மிகவும் நல்லது. கூடச்சீட்டு மற்றும் எழுதுபொருட்கள் ஆகியனவற்றை மறவாமல் எடுத்துக் கொண்டாயா ? "

" கூடச்சீட்டு என்றால் என்ன ஐயா ?"

" ஹால் டிக்கெட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே ! அதைத்தான் கூடச்சீட்டு என்று குறிப்பிட்டேன். "

" எல்லாவற்றையும் மறக்காமல் எடுத்துக்கொண்டேன் ஐயா ! தாங்கள் எங்கே சென்றுகொண்டு இருக்கிறீர்கள் ?"

" வீட்டிலே அடுக்களை எரிவாயு தீர்ந்துவிட்டது; எனவே மாற்று எரிவாயு உருளை பதிவு செய்வதற்காக சென்றுகொண்டு இருக்கிறேன்."

" ஐயா ! இன்னமும் சைக்கிளிலேயே சென்றுகொண்டு இருக்கிறீர்களே ! இப்பதான் கார் எல்லாம் மலிவு விலையில் வந்துவிட்டதே ! தாங்கள் கார் ஒன்றை வாங்கியிருக்கலாமே ! பேங்கிலும் லோன் தருகிறார்களே !"

" தம்பி ! என்னுடைய ஆசிரியப் பணிக்கு மிதிவண்டியே போதுமானது; மேலும் வீட்டிற்கு அருகிலேயே பள்ளி இருப்பதால் , மகிழுந்து ஏன் வாங்கவேண்டும்? மகிழுந்து வாங்கினால் அதை சரிவரப் பேண வேண்டுமே ! மேலும் அது என்னுடைய வருவாய்க்கு மீறியது. " கடன்படா வாழ்வே கவலையற்ற வாழ்வு " என்பது என்னுடைய கொள்கை. எனவே வங்கியில் கடன் வாங்கி மகிழுந்து வாங்க நான் விரும்பவில்லை. மேலும் என் ஆசான் அய்யன் வள்ளுவர்

ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

என்று போதித்துள்ளார். "

" ஐயா ! காபி, டீ ஏதாவது சாப்பிடுகிறீர்களா ?"

" தம்பி ! கொட்டைவடி நீரும், தேநீரும் நான் அருந்தும் வழக்கமில்லை."

" ஃ புரூட்சால்ட் சாப்பிடுகிறீர்களா ?"

" தம்பி ! பனிக்கட்டி பெய்த பழக்கூழ் அருந்தினால் , உடனே எனக்கு நீர்க்கோர்வை வந்துவிடும்; எனவே நீ மிகவும் வற்புறுத்துவதால், எனக்கு அடுமனையில் செய்த இரண்டு ரொட்டித் துண்டுகள் வாங்கித் தந்தால் போதுமானது. "

இருவரும் அருகிலிருந்த டீக்கடை ஒன்றுக்குச் செல்கிறார்கள். அப்போது டீக்கடைக்காரன் பாய்லரில் கரித்துண்டுகளைப் போட்டு ஊதிக்கொண்டு இருந்தான். அது எளிதில் தீப்பற்ற வில்லை. அப்போது தமிழாசிரியர் டீக்கடைக்காரனைப் பார்த்து,

" தம்பி ! கொதிகலனில் கரித்துண்டுகளைப் போட்டு ஊதினால் எளிதில் தீப்பற்றுமா ? சுளகினால் விசிறினால் எளிதில் தீப்பற்றும்.'

" சுளகா ? அப்படிஎன்றால் என்ன ?"

" சுளகு என்றால் முறம் ; இதுகூடத் தெரியாதா உனக்கு ? '

சிறிதுநேரம் கழித்து டீக்கடைக்காரன் , மாத்ருபூதத்துக்கு ஒரு காபியும், தமிழாசிரியருக்கு இரண்டு ரொட்டித் துண்டுகளும் கொண்டுவந்து கொடுத்தான்.

தமிழாசிரியர் ஒரு ரொட்டித் துண்டை சாப்பிட்டுவிட்டு மற்றொரு ரொட்டித்துண்டை அருகிலிருந்த நாய்க்குப் போட்டார். அதைக்கண்ட மாத்ருபூதம்,

" என்ன ஐயா ! நீங்கள் சாப்பிடாமல் நாய்க்குப் போடுகிறீர்களே ! "

" தம்பி ! ஞமலி மனிதனுக்கு உற்ற தோழன். பாரதியார்

வாலைக் குழைத்து வரும் நாய்தான்-அது
மனிதனுக்குத் தோழனடி பாப்பா !

என்று பாடியதை நீ அறியாயோ ? '

" சரி ஐயா ! தேர்வுக்கு நேரமாகிவிட்டது. நான் வருகிறேன் ஐயா !"

" தம்பி! விண்ணிலே கருங் கொண்டல்கள் முழவு செய்கின்றன; மழை வரும்போல் தெரிகிறது; விரைவாகச் செல். என்னுடைய வாழ்த்துக்கள் ! "

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 12, 2015 2:52 pm

போர்வை வியாபாரி.
======================
உச்சிவேளை பகல் 12 மணி. சூரியன் நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்தது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், ஒரு சைக்கிளில் பின்புறம் கேரியரில், போர்வையை அடுக்கி வைத்துக்கொண்டு, தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்தான். ஒரு போர்வைகூட விற்பனை ஆகவில்லை. நடந்து நடந்து கால்கள் வலித்தன; தாகத்தால் நாக்கு வறண்டது. சற்றுநேரம் ஒய்வு எடுத்துக்கொள்ள நினைத்தவன், சாலையோர மரத்தடி நிழலில் ஒதுங்கினான்.தாகம் தணித்துக்கொள்ள அருகிலிருந்த தெருக்குழாயைத் திறந்தான். புஸ்......சென்று காற்றுதான் வந்தது; தண்ணீர் வரவில்லை.அந்தநேரம் பார்த்து மரக்கிளையில் அமர்ந்திருந்த காக்கை ஒன்று போர்வையின்மீது எச்சமிட்டது. அதைக்கண்ட அவன்

" ஆண்டவா! என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் ? நான் உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது. காலையிலிருந்து ஒரு போர்வைகூட விற்பனை ஆகவில்லை; தண்ணீர் வரவேண்டிய குழாயில் நான் திறந்தால் காற்றுதான் வருகிறது. போதாக்குறைக்கு காக்கை வேறு போர்வையில் எச்சம் போட்டுவிட்டது. என்னை ஏன் இப்படி துரதிஷ்டசாலியாகப் படைத்துவிட்டாய் ? " என்று கூறித் தலையில் அடித்துக்கொண்டான்.

" உன் முட்டாள்தனத்துக்கு ஆண்டவன்மீது ஏனப்பாப் பழியைப் போடுகிறாய்?" என்ற குரல்கேட்டு வாலிபன் திரும்பிப் பார்த்தான். மரத்தின் மறுபுறத்திலிருந்து குரல் வந்தது. அங்கே ஒரு பெரியவர் மரநிழலில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்ற வாலிபன்

" ஐயா! நான் என்ன முட்டாள்தனம் செய்தேன் ?"

' தம்பி ! எந்தக் காலத்தில் எதை விற்பனை செய்வது என்று தெரியாத உன்னை முட்டாள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது ? இந்த வேகாத வெயில் காலத்தில் எவனாவது போர்வை வாங்குவானா ? இந்த வெயில் காலத்துக்கு ஏற்றவாறு தார்பூசணி, இளநீர் போன்றவற்றை விற்பதை விட்டுவிட்டுப் போர்வையைத் தூக்கிக்கொண்டு தெருத்தெருவாக அலைகிறாயே! மார்கழி மாதம், குளிர்காலத்தில் செய்யவேண்டிய போர்வை வியாபாரத்தைக் கோடை காலத்தில் செய்யலாமா? ஒருசெயல் வெற்றிபெற வேண்டுமானால் காலம், இடம், கருவி ஆகியக் கூறுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் அறிவுரை உனக்குத் தெரியாதா?"

" ஐயா! நான் அதிகம் படிக்காதவன்; எட்டாம் வகுப்புவரைதான் படித்துள்ளேன். எனக்குத் தெரிந்த வியாபாரம் துணிமணிகளை வாங்கி விற்பதுதான்; வேறு ஒன்றும் தெரியாது."

" தம்பி! இதற்குப் படிப்பறிவு எதுவும் தேவையில்லை; பட்டறிவு இருந்தால் போதுமானது. நான் சொல்வதைக் கவனமாகக் கேள்; உன்னைப்போன்ற சிறு வியாபாரிகள் காலத்துக்கு ஏற்றவாறு தொழிலை மாற்றிக் கொள்ளவேண்டும்;தொழிலுக்கு ஏற்றவாறு இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்; அத்தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கின்ற கருவிகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும். இதுதான் வெற்றியின் இரகசியம்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.( காலம் அறிதல்-483 )

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். ( காலம் அறிதல்- 484 )

என்பதுதான் வள்ளுவர் வாக்கு."

" ஐயா! சற்று விளக்கமாகக் கூறுங்கள்."

" நல்லது தம்பி! விளக்கமாகவே கூறுகிறேன். உன்னைப்போன்ற சிறு வியாபாரிகள், தெரு வியாபாரிகள் காலத்துக்கு ஏற்றவாறு தொழிலை மாற்றிக்கொள்ள வேண்டும்;அதாவது இந்தக் கோடைகாலத்தில் நீ செய்யவேண்டிய வியாபாரம் தார்பூசணி, இளநீர் விற்பதுதான். அடுத்தபடியாக வருவது இடம். ஜனநடமாட்டம் மிகுந்த சாலை ஓரங்களில், மரத்தடி நிழலில் செய்தால் இந்த வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.மூன்றாவதாக வருவது கருவிகள். தொழிலுக்குத் தேவையான கருவிகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். ஒரு தள்ளுவண்டி, தார்பூசணி, இளநீர் வெட்டுவதற்குத் தேவையான கத்திகள், இளநீர் உறிஞ்சிக் குடிப்பதற்கு ஸ்ட்ரா, நான்கைந்து கண்ணாடிக் குவளைகள், பனிக்கட்டி ஆகியவை இருந்தால் போதுமானது. இந்த வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.

ஒருசெயலில் நாம் வெற்றிபெற வேண்டுமானால் காலம், இடம்,கருவி ஆகிய மூன்று காரணிகளும் மிகவும் இன்றியமையாதது. வள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள இக்கருத்துக்கள் நாடாளும் வேந்தனுக்கு மட்டுமல்ல, தனிமனித வாழ்க்கைக்கும் மிகவும் பொருந்தும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இந்தப் போர்வையை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு , விரைவில் இளநீர் வியாபாரத்தைத் தொடங்கு. எல்லாம் வெற்றிகரமாக நடக்கும்.'

" நாளையே இதே இடத்தில் கடையைப் போட்டுவிடுகிறேன் ஐயா! தங்கள் யோசனைக்கு மிக்க நன்றி.நான் வருகிறேன் ஐயா!"

" நல்லது சென்று வா."

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 12, 2015 2:56 pm

யானைப் போர்.
=================
என் மகளுடைய திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன.திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்துகொண்டிருந்தன.பக்கத்து ஊருக்குச் சென்று நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.வழியில் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள அடர்ந்த வனப்பகுதியைக் கடக்கவேண்டும்.பஸ் வசதி கிடையாது.மாலை மணி மூன்று.இருட்டுவதற்குள் அந்த வனப்பகுதியைக் கடந்து விடவேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தேன்.இருட்டிவிட்டால் கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம். எனவே விரைவாக நடந்தேன்.

காட்டின் நடுப் பகுதிக்கு வந்தபொழுது திடீரென்று இடி இடித்தது போல பெரிய ஓசைக் கேட்டது.எதிரே நான் பார்த்த காட்சி என்னைக் குலை நடுங்க வைத்தது.இரண்டு ஆண் யானைகள் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டிருந்தன.அவைகளின் பிளிறல் சத்தம் அந்த வனாந்திரம் முழுவதும் எதிரொலித்தது.முயல், நரி போன்ற சிறு விலங்குகள் அலறி அடித்துக் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் தஞ்சம் புகுந்தன.யானைகள் இரண்டும் மூர்க்கத் தனமாகப் போரிட்டுக் கொண்டிருந்தன.ஒன்றையொன்று ஆவேசமாகத் தாக்கிக் கொண்டன. இரண்டு மலைகள் மோதிக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தக் காட்சி.

யானைகள் சுழன்று சுழன்று போரிட்டன.இருபதடி தூரத்தில் நான்.நம்மீது மோதிவிட்டால் என்ன ஆகுமோ என்ற பயத்தில், பக்கத்தில் இருந்த ஒரு உயரமான பாறையின் மீது ஏறி நின்று கொண்டேன். பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன், பயம் விலகிவிட்டது.யானைகள் போரிடுகின்ற அந்தக் காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது.தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.யானைகளின் மத்தகங்களில் இருந்து ரத்தப் பெருக்கு ஏற்பட்டு, ரத்தம் தும்பிக்கைகளின் வழியாக வழிந்துகொண்டிருந்தது.மோதிக்கொண்ட வேகத்தில், ஒரு யானையின் தந்தம் முறிந்து கீழே விழுந்தது.வலிகாரணமாக அந்த யானையால், தொடர்ந்து போரிட முடியவில்லை.பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு,காட்டுக்குள் ஒடி விட்டது.மற்றொரு ஆண்யானை, அதை விரட்டிக் கொண்டே அதன் பின் சென்றது.

யானைப்போர், ஒரு வழியாக முடிந்தது.இனி ஆபத்தில்லை என்று உறுதி செய்துகொண்டு,பாறையை விட்டு இறங்கிவந்தேன்.வேகமாக நடந்து ஊர் வந்து சேர்ந்தேன்.

பத்து நாட்கள் கழித்து,என்மகளின் திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திவிட்டு மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றனர்.

என்னுடைய நண்பர் ஒருவர் விடை பெற்றுச் செல்லும்போது,"மகளின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி முடித்து விட்டீர்கள்.சாப்பாடு பிரமாதம்; எவ்வளவு செலவாயிற்று?" என்று கேட்டார்.
"சுமாராக ஐந்து லட்சம் வரைக்கும் செலவாயிருக்கும் என்று எண்ணுகிறேன்" என்று பதில் சொன்னேன்.
"வங்கியில் கடன் ஏதும் வாங்கினீர்களா?" என்று நண்பர் கேட்டார்.
"இல்லையில்லை; கடன் ஏதும் வாங்கவில்லை.சென்ற ஆண்டு நான் ஒய்வு பெற்றேன்.அதனால் வந்த பணப்பயன்கள் யாவையும் சேமித்து வைத்திருந்தேன்.நல்ல வரன் வந்தது.பத்து பைசா கடன் வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்.கையில் பணத்தை வைத்துக்கொண்டு திருமணம், வீடுகட்டுதல் போன்ற செயல்களை மேற்கொள்ளும்பொழுது எவ்வித மன இறுக்கமும் இருக்காது.அதில் ஏற்படும் இன்பமே அலாதிதான்" என்று சொல்லி முடித்தார்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

என்பது குறள். தன கையிலே பொருளை வைத்துக் கொண்டு ஒரு செயலைச் செய்தல் என்பது மலைமேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பாகும் என்பது இக்குறளின் பொருள்.

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 12, 2015 7:30 pm

எனது கதைகள் -- - Page 3 3838410834 சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக