ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by சண்முகம்.ப Yesterday at 9:06 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 1:18 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 12:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:06 pm

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 2:06 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 19, 2021 1:01 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:23 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Mon Jan 18, 2021 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 8:45 pm

Admins Online

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Sun Jun 22, 2014 2:15 am

நலம் 360’ - 1
மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P20a
குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது!

''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை’ முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் தோசை சுடுறா. வித்துடலாம்னு சொன்ன பூமில 'ஏதாச்சும் செய்யலாமாப்பா?’னு பையன் கேட்கிறான். இப்போ 'ஆறாம்திணை’யைக் கண்டிப்பா நிறுத்தியே ஆகணுமாப்பா?'' மேலும் நெகிழ்வுடனும் ஆதங்கத்துடனும் அந்தத் திருப்பூர் பெரியவர் பேசப் பேச, நான் அழுதேவிட்டேன். எத்தனை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இணையத்தில், சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த அரவணைப்புகளில் நானும் விகடனும் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம். இழந்ததையும் தொலைத்ததையும் எடுத்துச் சொல்லி, தினம் நம் மீது இறுகும் இறுக்கமான வணிகப்பிடியை அடையாளம் காட்டி, நலவாழ்வை நோக்கி நகர வழிகாட்டிய வரிகள்தான் 'ஆறாம்திணை’ கட்டுரையின் வாசக்கால்கள். அழுக்குப் புடைவை அணிந்த பொக்கை வாய்ப் பாட்டியைக் கண்டதும் பட்டணத்துப் பேரக் குழந்தை ஓடிச்சென்று கட்டி அணைப்பது போலதான், 'ஆறாம்திணை’யை அதன் வாசகர்கள் உச்சிமோந்து அணைத்துக்கொண்டார்கள்.

அதே நெகிழ்வுடனும் நிறைவுடனும் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வரலாம் என சென்னை வெப்பத்தில் இருந்து தப்பி, சொந்த கிராமத்துக்குச் சென்று, பக்கத்துத் தோட்டத்தில் புதுசாக வாங்கியிருந்த டிராக்டரை குதூகலமாக ஓட்டிப்பார்த்தபோதுதான் அந்த அழைப்பு! ''சார்... எங்க இருக்கீங்க?'' என விகடன் ஆசிரியர் தொலைபேசினார். ''சின்ன பிரேக் எடுத்துக்கலாம்னு சொன்னீங்களே... அதான் ஊரு பக்கம் வந்துட்டேன்...'' என நான் பதிலளிக்க, ''இங்க மெயிலும் போனும் கதறது. ''ஆறாம்திணை’யை ஏன் நிறுத்தினீங்க?’னு கேட்கிறாங்க. அடுத்த வெர்ஷனை உடனே ஆரம்பிச்சிடலாம்னு ஐடியா. தலைப்புகூட முடிவு பண்ணிட்டோம். நீங்க ரெடியா?'' என்று கேட்க, 'நலம் 360’ பூத்துவிட்டது.

'நலம் 360’... வெறும் மருத்துவக் கட்டுரை அல்ல. நலவாழ்வு என்பது மருந்து, மாத்திரை, கசாயம், ஈ.சி.ஜி. விஷயம் அல்ல. ஆரோக்கியம் என்பது, சிக்ஸ்பேக் உடம்பில் கட்டமைக்கப்படுவதும் கிடையாது. ஆறு லட்சம் பாலிசி மூலம் அதை வாங்கி வீட்டில் வைக்கவும் முடியாது. அஞ்சறைப்பெட்டியிலும், அடுப்பாங்கரைப் பரணில் கவிழ்த்திவைத்த வெங்கலத் தவலையிலும், ரசம் வைக்கும் ஈயச்சட்டியிலும், பட்டாசல் மாடக்குழியில் பத்திரப்படுத்திய அகல்விளக்கிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி, கீழாநெல்லியிலும், கரிசாலை கண்மையிலும், கத்தாழை எண்ணெய்க் குளியலிலும், வசம்புக் கட்டை கை வளவியிலும், மருதாணிப் பற்றிலும், புளியில்லா பொரிச்ச குழம்பிலும், சுண்டுவார் ரசத்திலும், இடுப்புச் சுருக்குப்பை தாம்பூலத்திலும்தான் நம் நலவாழ்வு நங்கூரமிட்டு இருந்தது!

வண்ணத்துப்பூச்சியின் சிறகு அசைவில் எங்கோ சூறாவளி உருவாகும் கேயாஸ் தியரி போல, மீந்துபோன சாம்பாரை ப்ளாஸ்டிக் கவரோடு ரயில் பயணத்தின்போது வீசி எறிவதில்கூட, யாருடைய வாழ்க்கைப் பயணத்திலோ ப்ளாஸ்டிக்கின் சுவடுகளான அடினோ கார்சினோமா தூக்கிச் செருகும் சாத்தியம் மிக அதிகம். பின்னிரவில் முகநூலில் ஏற்றிய தன் புகைப்படத்துக்கு எத்தனை 'லைக்ஸ்’ விழுந்திருக்கின்றன என இரவெல்லாம் பரபரப்புடன் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செல்போனைச் சீண்டும் இளசுகளுக்கு, உறக்கம் தொலைத்த தன் உடம்புக்கு நோய்க்கூட்டம் 'லைக்’ போட்டிருக்கும் விஷயம் தெரியவில்லை. இதுவும் இன்னபிறவுமாக நல்வாழ்வு தொடர்பான விசாலமான பார்வையை விதைப்பதே நலம் '360’-ன் நோக்கம்!

'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது முதுமொழி. ஆனால், அந்த எண்சாண் உடம்பு, நலத்தோடு அன்றாடம் நகர்வதற்கு அடிப்படையான விஷயம் வயிறும் அதில் நடக்கும் செரிமானமும்தான். சாப்பிட கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் லேசாக நெஞ்சாங்கூட்டுக்குக் கீழே எரிவதும், 'எண்ணெய் பலகாரம் வீணாகுதே’ என என்றைக்கோ ஒரு நாள் சாப்பிட்டதற்கு, அடுத்த இரண்டு நாள்கள் ஏப்பத்தில் வாசம் காட்டி வதைப்பதையும் நாம் பல சமயம் அலட்சியப்படுத்திவிடுவது உண்டு. அரிசியையும், கம்பையும், சோளத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய நம் ஜீரண மரபுக்கு, சிவப்பு சிக்கன் பீஸுடன் வரும் 'அலூரா சிவப்பு’, 'எரித்ரோசைன்’ ஆகியவை கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். இந்தத் திகிலில், சில துளி ஜீரணசுரப்பைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்போதுதான் அல்சரில் இருந்து கொலைட்டிஸ் வரை குடலின் இயல்பு தாறுமாறாகச் சிதைகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி ஜெயித்துவிடலாம் என்று பழகிவிட்ட டி-20 மனம், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு கடைசி நிமிடத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு அரக்கப் பரக்கக் கிளம்பும் பழக்கம்... இவைதான் வியாதிக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும்!

உமிழ்நீரில் தொடங்குகிறது ஜீரணம். உணவு மேஜையில் மூக்கின் மோப்பத்தில் தொடங்குகிறது என்றுகூட சொல்லலாம். 24 மணி நேரத்தில் சுரக்கும் சுமார் 11.25 லிட்டர் எச்சில், அதனுடன் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டை உடைத்து, குளுக்கோஸ் துகள்களாக்கி ஜீரணத்துக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.

ஒரு துண்டு உணவு உள்ளே போனதும் வாயில் ஊறும் எச்சிலில் உணவைச் செரிக்க உதவும் மியூசின் அமைலோஸ் சுரப்புகளும், உடலுக்கு ஒவ்வாத பொருள்களை முறித்து வெளியேற்றும் லைபேஸ் நொதியும் சுரக்கத் தொடங்கும். உணவை மெதுவாக நொறுக்கி, அந்த உமிழ்நீருடன் கலந்து உள் அனுப்ப வேண்டும். இதற்கு எல்லாம் அறுசுவையை உணரும் ஆசுவாசமான மனம் நிச்சயம் வேண்டும். இடது கையில் கம்ப்யூட்டர் மவுஸோ, ஸ்மார்ட் போனோ, தொலைக்காட்சி ரிமோட்டோ... ஏன் 'ஆறாம்திணை’ புத்தகமோ வைத்துக்கொண்டு வலது கையில் பாற்கடல் அமிர்தம் சாப்பிட்டால்கூட அது பாழ் தான். உணவு உத்தமமாக ஜீரணிக்க பரபரப்பு இல்லாத மனம் அடிப்படைத் தகுதி.

உடலை நோய்ப்பிடிக்குச் சிக்காமல் தற்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர். சாதாரண சளி, இருமலில் இருந்து சர்க்கரை வியாதி வரை காக்கும் அப்படியான ஒரு பொடி அன்னப் பொடி. சமீபமாக எக்குத்தப்பு இரவு விருந்து உண்டாக்கும் எதுக்களிப்பு, வயிறு முதல் தொண்டை வரை எரியவைத்து நாள்பட்ட வயிற்று வியாதியை (Gastroesophageal Reflux Disease) வரவைக்கிறது. இதற்கு அன்னப்பொடி மிகச் சிறந்த மருந்து. ஜீரணத்தை வரைமுறைப்படுத்தும் அன்னப்பொடியின் செய்முறை பெட்டிச் செய்தியில்.

தாய்ப்பாலுக்குப் பின் அரிசி/கஞ்சியில் தொடங்கி, ஐந்து வயதுக்குள்ளாகவே ஹைதராபாத் தம் பிரியாணி வரை ஜீரணிக்கப் பழகும் நம் ஜீரண மண்டலம், உடலுக்கான மிகப் பெரிய பாதுகாப்பான அரண். அதில் ஓட்டை உடைசல் ஏற்படுவதற்குக் காரணம்... வாயைக் கட்டாமல் வளைத்து அடிக்கும் மனோபாவமும், எதைத் தின்கிறோம் என்ற அக்கறையில்லாத வாழ்வியலும், 'ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போயேன்’ என்ற கரிசனக் குரலை அலட்சியப்படுத்தி நகர்வதும்தான். சின்னச் சின்ன அக்கறைகளை சிறுவயது முதல் உண்டாக்குவது மட்டுமே நாளைய நலவாழ்வுக்கான நம்பிக்கைகள்.

நம்பிக்கையோடு நலம் காப்போம்!

- நலம் பரவும்...

அன்னப்பொடி

தேவையான பொருள்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, கல் உப்பு அனைத்தும் தலா 50 கிராம். பெருங்காயம் 25 கிராம்.

செய்முறை: சுக்கின் புறத்தோலைச் சீவி உலர்த்தி, மற்றவற்றை எல்லாம் நன்கு குப்பை நீக்கி உலர்த்தி, அனைத்தையும் பொன்வறுவலாக வாணலியில் வறுத்து, பொடித்துவைத்துக்கொண்டு வாரம் மூன்று நாள் முதல் உருண்டைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது அஜீரணத்தைப் போக்கும் எளிய மருந்து.

உணவுக்கு முன் வெந்தயப்பொடி, உணவோடு அன்னப்பொடி அல்லது ஐங்காயப்பொடி, உணவில் தூதுவளை ரசம், உணவுக்குப் பின் கடுக்காய்ப்பொடி என்று உணவை மருந்தாக்கிச் சாப்பிட்டவர்கள் நாம். நவீனத்தில் மாடுலர் கிச்சனாக மாறிப்போன அடுப்பங்கரையில், ஆலிவ் ஆயிலும் மயோனைஸும் குடியேறி, ஓமத்தையும் திப்பிலியையும் ஓரங்கட்டி ஒழித்துவிட்டன. கொஞ்சம் அவற்றை மீட்டெடுத்து சாம்பார் பொடி, ரசப்பொடி செய்வது போல அன்னப்பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் உங்கள் வீட்டில் ஆயுளுக்கும் குடியிருக்கும்!
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P20b
சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே...

நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை.

எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது.

ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனால், 'விண்டோ ஷாப்பிங்’ போல பராக்குப் பார்த்துக்கொண்டே நடப்பது அதிகம் பயன் தராது.

நடைக்கு முன்னர் தேநீர் அருந்தலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சிக்கு முன்னர் பச்சைத் தேநீரும், கொஞ்சம் முளைகட்டிய பயறு அடங்கிய சுண்டலும் சாப்பிடலாம்.

நடக்கும் 45 மணித்துளிகளும் பாட்டு கேட்டுக்கொண்டே நடப்பேன்’ எனப் பிடிவாதம் பிடித்தால், கூடிய விரைவில் ஆரோக்கியமான காதுகேளாதவராக மாறக்கூடும்.

குடும்ப உறவுச் சிக்கல்கள், ஷேர் வேல்யூ, பட விமர்சனம், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எனப் பேசிக்கொண்டு நடப்பது உடற்சோர்வையும் மன உளைச்சலையுமே தரும்.

'அதான் கிச்சன்ல, மொட்டைமாடில நடக்கிறேனே... அதுவே ரெண்டு கி.மீ வரும்!’ போன்ற சமாதானங்கள் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது.

சர்க்கரை நோயாளிகள், கண்டிப்பாக வெறும் காலில் நடக்கக் கூடாது. தரமான, எடை குறைவான, மெத்தென்ற கேன்வாஸ் ஷூ அல்லது செருப்பு நல்லது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Sun Jun 22, 2014 2:20 am

நலம் 360’ - 2
மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P20a
தொழில்நுட்பம், நம் விரல் நுனிக்குள் உலகை அடக்கிவிட்டது உண்மைதான். நியூயார்க் நகரத்து வெள்ளைக்காரன், தான் பயணிக்க வேண்டிய விமானத்தின் இருக்கையை உறுதிசெய்ய, சென்னையின் கடற்கரை சாலையின் அடுக்குமாடி கம்பெனியில் இருந்து தெலங்கானா ராமண்ணாவிடம்தான் பேசியாக வேண்டும். 'யோசனைகாத தூரங்கள்’ எல்லாம் எலெக்ட்ரான் துகள்களுக்குள் நெருக்கப்பட்டு மைக்ரோ விநாடிகளில் கடந்துபோக ஆரம்பித்தாயிற்று. அதே சமயம், நம்மில் பலருக்கும் அடிக்கடி எழும் கேள்வி... இந்தத் தொழில்நுட்ப வீச்சில் நாம் எல்லோரும் நெருங்கி இருக்கிறோமா... விலகி இருக்கிறோமா? என்பதுதான்.

இன்று இணையமும், முகநூலும், கைபேசிக் குறுஞ்செய்திகளும் நாம் எழுதிய அடுத்த கணத்தில், எமோட்டிக்கான் புன்னகையுடன் என்னதான் அதனையே பரிமாறினாலும், தொலைவும் காத்திருப்பும் தந்த உயிர்ப்பசையை உலரவைத்துவிட்டது என்பதே உண்மை.

'நாட்டார் வழக்காற்றியல்’ மூத்த பேராசிரியர் தொ.பரமசிவம் தன்னுடைய 'வழித்தடங்கள்’ என்ற நூலில், ஒரு பொருளின் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையிலான பண்பாட்டு விலகல் எந்த அளவு நம் சமூகத்தைச் சிதைக்கிறது என, மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். உற்பத்தி செய்யப்படும் பொருள் குறித்த முழுமையான அறிவை மரபுவழித் தொழில்நுட்பம் அறிந்திருக்கும். அது வீட்டுக்கான வாசற்கதவு செய்வதாக இருந்தாலும் சரி, மாதவிடாயின்போது வாந்தியுடன் வரும் வயிற்றுவலிக்கான கைப்பக்குவ மருந்து செய்வதாக இருந்தாலும் சரி, யாருக்காகச் செய்கிறோம், எப்படிச் செய்கிறோம், எதைக்கொண்டு செய்கிறோம், நுகர்வோரின் மனம் அதில் எப்படிக் களிக்கும் என்ற பார்வை, மரபுவழித் தொழில்நுட்பத்தில் இருந்தது.

மூட்டு அறுவை மருத்துவர் 'எலும்புமுறிவை நான் இணைத்துவிட்டேன். நடக்கவைப்பதற்கு பிசியோதெரபிஸ்ட் வருவார்’ என்று மறைவதும், அதற்குள் அவசரமாக, 'சா£ர்... நான் என்ன சாப்பிடலாம்?’ என்றால், 'டயட்டீஷியனிடம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டீங்கல்ல...’ என்று பதில் வருவதும், தொழில்நுட்பம் புகுத்தும் விலகலுக்கான நிதர்சன அடையாளங்கள்.

பாரதிதாசனின் கவிதையில் வரும் 'கொண்டவர்க்கு ஏது பிடிக்கும், குழந்தைகள் எது விரும்பும், தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன?’ என, உண்பவர் தம்மைக் காணும் அக்கறையைத் தொலைத்தோம். 'என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன?, எப்படித் தயாரித்தார்கள்?’ என்ற விவரங்கள் படுநேர்த்தியாக மறைக்கப்பட்ட குப்பை உணவுக்கூட்டம் ஒவ்வொரு வீட்டிலும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இந்தத் துரித உணவின் படைப்புகள், பெரும்பாலும் நுகர்வோரிடம் இருந்து வெகுதூரம் திட்டமிடப்பட்டு விலகியே இருக்கிறது. மெக்ஸிகோ சோளம், ஜெர்மானிய இயந்திரத்தில் இத்தாலியன் நறுமணத்துடன், கிழக்காசியக் கூலிகளால் தயாரிக்கப்பட்டு, பின்னர் இங்கிலாந்து கம்பெனியால் இந்தியாவில் வணிகப்படுத்துவதில் எப்படி விலகுகிறோம், எப்படித் தொலைந்துபோகிறோம் என்பது தெளிவாகவே புரியும். படைப்பும் நுகர்வும் அந்நியப்பட்டுப்போனது, ஆதிக்க சக்திகளுக்கான அதிகபட்ச லாபத்துக்கான சுரங்கம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அது விளிம்பு நிலையில் உள்ள விலாசமற்ற மனிதர்களின் நலவாழ்வை மிதித்து நசுக்கி நாசமாக்குவது வேதனையான விஷயம். படைப்பின் சூட்சுமம் நேர்த்தியாக மறைக்கப்பட்டு, அதீத அலங்காரத்துடன் விற்கப்படும் 'ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, ஜீரண நலத்துக்குச் சிக்கல் வைப்பவை. காலை எழுந்ததும் சிரமம் ஏதுமின்றி மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.

'காலைக் கடன்’ என்ற வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் எனத் தெரியவில்லை. உடனே பைசல் பண்ணாவிட்டால், வட்டியைக் குட்டியாகப்போட்டு வாழ்வைச் சிதைக்கும் கடன் சுமைபோல... மலச்சிக்கல் பல நோய்களைப் பிரசவித்து நல்வாழ்வுச் சிக்கலை உண்டாக்கும். நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகிய வலியுடன்கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் 'மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பரிய மருத்துவம் அனைத்தும், எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகிறது. 'கட்டளைக் கலித்துறை’ என்ற நூலோ நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்றும், சித்த மருத்துவ நோய் அணுகா விதியோ... 'மலத்தை அடக்கினாலோ

'முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே’

என்று அறிவுறுத்துகிறது. மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் தலையாய முதல் படியாக, சித்த மருத்துவமும் தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன. சமீபமாக, துரித நவீன வாழ்வியலில் இந்தப் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்படுகிறது. வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் பலமாக வளர்கிறது, 6.30 மணிக்கு எழுந்து 7 மணிக்குள் வண்டியேற வேண்டிய பால்குடி மறந்த பச்சிளம் கேஜி முதல், சில நேரங்களில் பல் துலக்காமல், குளிக்காமல்கூட ஆனால் மறக்காமல் செல்போன் ஹியர் பீஸை மட்டும் காதில் செருகிவிட்டு, பஸ் இருக்கையில் தூங்கிக்கொண்டே பயணிக்கும் கல்லூரி இளசுகள் வரை காலைக் கடன் கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி காலைக் கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. 'அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல வியாதிகளுக்கும் ஆரம்பம். அதிகாலையில் மலம் கழிப்போருக் குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும். நேற்று சாப்பிட்ட உணவில் கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ, அதனால்தான் மலச்சிக்கலோ என வீட்டுப் பெரியவர் யோசித்து, அடுத்த முறை வாழைப்பூவின் அளவைக் குறைத்து சமைக்கும் தொழில்நுட்ப சாத்தியம், 'டூ மினிட்ஸ்’களில் சாத்தியம் இல்லை.

பாரம்பரியப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத 'அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். ஸ்கூல்விட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்குப் பறந்தோடும் குழந்தைக்கு மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசிக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திருப்பிக் கொண்டுவர வைக்கும். நாள்பட்ட மூட்டுவலி முதல் பக்கவாதம், தோல் நோய்கள் வரை உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பதுதான் பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடம் இரண்டு முறை பேதி எடுத்துக்கொள்வது நல்லது. உடனே 'பேதி மருந்து ரெண்டு பார்சல்...’ என மளிகைக் கடை சாமான் மாதிரி வாங்கி வராமல், குடும்ப மருத்துவரை அணுகி நாடி பார்த்து, உடல் வன்மை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்து எடுப்பதுதான் உத்தமம்.

மலச்சிக்கலைத் தவிர்க்க, கொஞ்சம் மலம் இறுகத் தொடங்கினாலோ அல்லது அதற்கான அழைப்பு காலையில் வரவில்லை என்றாலோ மெனக்கெடுவது மிக மிக அவசியம். பெருங்குடலில் தண்ணீர் அதிகம் உறிஞ்சப்படுவது, குடலின் இயல்பான அசைவுவேகம் குறைவு, இரும்பு வலிநிவாரணி மாத்திரைகள், நார்ச்சத்து அற்ற குப்பை உணவுகள்... என மலச்சிக்கலை வரவழைக்கும் அன்றாட விஷயங்கள் நிறைய. அலட்சியமும் சோம்பேறித்தனமும் கூடுதல் காரணங்கள்.

மைக்ராஸ்கோப் டெலஸ்கோப் வைத்து பார்த்தாலும், எந்த இணையத்தில் தேடினாலும் சிக்கவே சிக்காத சூத்திரத்தில் செய்யப்படும் இது மாதிரி உணவுகளுக்குள் சிக்காமல், நிறையவே கரிசனத்துடன் உருவாக்கப்பட்ட உணவையும் வாழ்வியலையும் அப்படியே பின்பற்றுவது நிறையவே நலம் பயக்கும். ஆனால், 'கொஞ்சம் கோணலா இருந்தாலும் குத்தமில்லை’ எனக் கும்மியடித்து விற்கப்படும் பல உணவுகள், சில நேரம் நல்வாழ்வை முற்றும் கோணலாக்கும் வாய்ப்பு உண்டு.

- நலம் பரவும்...

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P20c
இரவில் படுக்கும்போது இளஞ்சூடான நீர் இரண்டு குவளை அருந்துவதும், காலை எழுந்ததும் பல் துலக்கி, பின்னர் இரண்டு குவளை சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.

பச்சிளங்குழந்தைகளுக்கு 5-10 திராட்சைகளை (அங்கூர் திராட்சை அதிலும் குறிப்பாக ஆர்கானிக் கிஸ்மிஸ் வாங்குவது நல்லது. திராட்சைக்குத்தான் சகட்டுமேனிக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்கள்.) நீரில் 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதனை நன்கு நீருடன் பிசைந்து கொடுக்கலாம்.

கடுக்காய்ப் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து, பொடித்த பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் சுகமாகக் கழிவதுடன் கடுக்காயின் எக்கச்சக்கமான ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் வயோதிக மாற்றங்களைக் குறைக்கவும் செய்யும்.

மேலே சொன்னதுக்கு எல்லாம் பெப்பே காட்டும் நபருக்கு, நிச்சயம் மருத்துவ ஆலோசனை அவசியம். ஊசிப்பட்டாசு / பொட்டுவெடியில் இருந்து ஏகே 47 வரையிலான பல வகையான மலமிளக்கிகள் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த (விதை நீக்கிய பின்) தூள், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கிய மருந்து; உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் வரை சாப்பிடுவது காலையில் மலத்தை எளிதாகக் கழியவைப்பதுடன் பல ஆரோக்கிய அசைவுகளை உடலில் நிகழ்த்தும். 'திரிபலா’ என்றழைக்கப்படும் இந்த மும்மூர்த்திக் கூட்டணி, வீடுதோறும் இருக்க வேண்டிய நலப்பொக்கிஷம்.


ஐங்காயப் பொடி செய்முறை:

வயிறு சம்பந்தமான உபாதகளைத் தவிர்க்க ஐங்காயப் பொடி நல்ல உபாயம். அதன் செய்முறை இங்கே...

தேவைப்படும் பொருட்கள்: வேப்பம் பூ ஒரு டேபிள்ஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் ஒரு டேபிள் ஸ்பூன், மணத்தக்காளி வற்றல் ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், திப்பிலி 6, சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, தனியா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

இவை அத்தனையையும் உலர்த்தி, வறுத்து, பருப்புப் பொடி செய்வதுபோல் மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். சுடுசோற்றில், குறிப்பாக வரகரிசி சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயுடன் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால், சுவையுடன் ஆரோக்கியம் அலவன்சாகக் கிடைப்பது உறுதி!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Jun 22, 2014 6:51 am

சேமித்துக் கொண்டேன். நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4535
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Sun Jun 29, 2014 11:15 am

நலம் 360’ - 3
மருத்துவர் கு.சிவராமன்
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P26a
முடி பற்றிய புரிதலும் வரலாறும் மிக மிக நீட்சியானது. முடியைப் பராமரிக்க, அலங்கரிக்க, அதை வைத்து அடையாளப்படுத்திக்கொள்ள மனித இனம் காலம்தொட்டு எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதற்கான பதிவுகளும் வியப்பையும் விஞ்ஞானத்தையும் உள்ளடக்கியவை.

'ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே’ என, காதலோடு நெருங்கிய கணவனைக் காண வெட்கி, ஆம்பல் மலர் கொய்த தன் கூந்தலை விரித்து அதன் கருமைக்குள் புதைந்த கவித்துவம் முதல், 'அரிவை கூந்தலின் நறியவும் உளவோ...’ என ஆண்டவரும் அரசாங்கக் கவியும் அடித்துக்கொண்டது வரை சங்க இலக்கியத்தில் கூந்தல் குறித்த செய்திகள் ஏராளம். ஆணும் பெண்ணும் பன்னெடுங்காலமாகக் கூந்தலை ஆற்றலின் வடிவமாக, ஆண்மையின் அடையாளமாக, பெண்மையின் அழகியலாக, மனச்செம்மையின் சின்னமாக... எனப் பல வடிவில் வைத்திருந்தனர். சமணர்கள், துறவின் அங்கமாக மழித்ததும், சமயம் கிடைத்தபோதெல்லாம் சைவம் அதைப் பழித்ததும் வரலாறு சொல்லும் முடி குறித்த செய்திகள்.

தன் அழகிய கூந்தலை, மிகுந்த மனஉளைச்சலில் இருக்கும் பெண்கள் கத்தரிக்கோலால் வெட்டிக்கொள்ளும் செய்தி, இன்றைக்கு உளவியல் நோயான Paranoid Diseases-ல் விவரிக்கப்படுவதுபோல, தமிழின் பழம் இலக்கியங்களில் உளப் பிறழ்வு கிரியை நோய்களிலும் சொல்லப்பட்டுள்ளன. கவிதையாக சங்கம் பேசிய இந்த முடி விஷயம், இன்று இந்தியச் சந்தையில் 100 பில்லியன் ரூபாய் வணிகம் என நீல்சன் கணக்கீடு சொல்கிறது.

'கோவிந்தா... கோவிந்தா...’ என திருப்பதியில் நாம் கொடுக்கும் முடி, நம்மிடம் மழித்த பிறகு fumigate (கிருமி களை முழுமையாக நீக்க, பூச்சிக்கொல்லி மருந்தடித்து 'ட்ரீட்’ செய்யும் முறை) செய்யப்பட்டு, பல தரப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு, கொஞ்சம் கெரட்டின் சத்து எடுக்கவும், 'தாத்தா’ வயதில் 'மாமா’ தோற்றம் காட்ட 'விக்’ செய்யவும் விற்கப்படுகிறதாம். எவ்வளவுக்குத் தெரியுமா? வருடத்துக்கு 200 கோடி ரூபாய் மதிப்புக்கு!

20 வயது வரை, 'எண்ணெயா? என் தலையைப் பார்த்தா, உனக்குத் தாளிக்கிற பாத்திரம் மாதிரி தெரியுதா?’ என்றெல்லாம் கேட்டுவிட்டு, 'அங்கிள்... நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க?’ எனப் பக்கத்து வீட்டுச் சின்னப் பெண் கேட்டதும் பதறி, 'அங்கிளா... நானா?’ என ஓடிப்போய் கண்ணாடியைப் பார்க்கையில், முன் மண்டையின் ஊடாக 'கூகுள் எர்த்’ தெரியும். உடனே, 'மச்சான் டேய்... முடி கொட்டுதுபோல. யாரைப் பார்க்கலாம்?’ என்ற முதல் கேள்வி பிறக்கும்.

அப்படி விசாரிக்கும் இளைஞர் கூட்டம் சிட்டி, பட்டி வித்தியாசம் இல்லாமல் பல்கிப் பெருகுவது தெரிந்ததும், 'பிசிபிசுப்பு இல்லாத மிகவும் லேசான எண்ணெய், நறுமண எண்ணெய், நெல்லிக்காய் முதலிய மூலிகை சேர்ந்த தைலம், வைட்டமின், புரதம் எல்லாம் சேர்ந்த மருத்துவ எண்ணெய், குளிர்ப்பூட்டி எண்ணெய்...’ என, இன்று சந்தையில் பல கம்பெனிகள், இந்த முடி பிரச்னைக்கு மருந்து தருவதாக ஏராளமான எண்ணெய் களுடன் திரிகின்றன. 'சாட்சாத் சந்திர மண்டலத்தில் இருந்து எடுத்த எண்ணெயில் காய்ச்சியது என்றும், வெள்ளை கோட் அணிந்த டாக்டர் தோற்ற அழகி, 'இந்த உலகின் முதல் தர சர்ட்டிஃபிகேட் பெற்றது எங்கள் எண்ணெய்’ என்றும் அல்வா கிண்டுகிறார்கள். கூடவே, 'இது மொட்டை மண்டையில்/வழுக்கையில் முடி வளரவைக்கும்’ என்றெல்லாம் சொல்லி, சாட்சிக்கு கிராஃபிக்ஸ், அனிமேஷன் எல்லாம் செய்து, 'அப்போ அப்படி... இப்போ இப்படியாக்கும்’ என, கூந்தல் வளர்ந்ததைக் காண்பித்து நடக்கும் வணிகம் கோடிகளில் கொடிகட்டிப் பறக்கிறது.

Androgenetic alopecia எனும் வழுக்கைதான், இன்றைய இளைஞர்களுக்கும் பெண்களுக்குமான முக்கிய முடி பிரச்னை என நவீன மருத்துவம் கூறுகிறது. AR எனும் மரபணுவின் காரணமாகத்தான் இந்த வழுக்கை வருகிறது. பொதுவாக, தலையின் ஒரு சதுர செ.மீட்டரில் புதிதாக முளைக்கும் முடி, நீளமான வளர்ந்த முடி, வளர்ந்து வாழ்ந்து ஓய்வில் இருக்கும் முடி... எனப் பலதரப்பட்ட முடிகள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் வயதாக வயதாக புது முடி பிறக்காமல் இருப்பதுதான் வழுக்கைக்கான காரணம்.

டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண்ட்ரோ ஜனின் காரணமாக இது அதிகரிப்பதாகவும் கண்டறிந் துள்ளார்கள். தமிழர் மருத்துவமான சித்த மருத்துவமோ பித்தம் உடலில் அதிகரிப்பதும், உடற்சூடு பெருகுவதை யுமே முடி கொட்டுவதற்கான முக்கியக் காரணங்கள் எனச் சொல்கிறது. இதில் முக்கியமான விஷயம், ஹிப்போகிரேட்டஸ் பேரன்மார் சொல்லும் நவீன மருத்துவ டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோனும், புலிப்பாணி பேரன்மார் சொல்லும் சித்த மருத்துவப் பித்து ஆதிக்கமும் உற்றுப்பார்த்தால் ஒன்றாகப் புரிவது வியப்பு மட்டுமல்ல; பாரம்பரிய அனுபவத்தின் அறிவியல் செறிவும்கூட!

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, குழந்தை முதலே கரிசனம் வேண்டும். உணவு அக்கறை, முடி பராமரிப்பு, கூடவே நன்மை மட்டுமே விளைவிக்கும் வாழ்வியல்... இவைதான் அடர்த்தியான முடிக்கு அடிப்படை. அதோடு அப்பாவுக்கு 'அனுபம்கெர்’ நெற்றி இருக்கும்போது, பையனுக்கு 40 வயதில் 'விராட் கோஹ்லி’ கூந்தல் வராதுதான். முடி கொட்டுவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, எந்த நேரமும் அதைப் பற்றியே சிந்தித்து, கூகுளில் துழாவி, எல்லா மருத்துவர் கிளினிக்கிலும் கர்ச்சீஃப் போட்டு வைத்து, வாழ்வைத் தொலைக்கும் இளைஞர் கூட்டமும் இன்று ஏராளம். 'சார்... போன 15 நாள்ல எனக்குக் கொட்டுன முடியைப் பார்க்கிறீங்களா?’ என ஒரு கைப்பையில், தினமும் படுக்கையில், பாத்ரூமில், சீப்பில் சேகரமான முடிகளை ஒன்றுவிடாமல் சேகரித்து எடுத்து வந்த அந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எனக்கு திகில் ஏற்படுத்தினார். 'சுவாரஸ்யமாப் படிச்சிட்டு இருக்கும்போது, என்னை அறியாம முடியை விரல்ல சுத்தி 'பச்சக்’னு பிடுங்கிடுறேன்’ என, தலைப்புண்ணோடு முடி கொட்டி வந்த பெண்ணையும் பார்த்துப் பயந்திருக்கிறேன்.

'தலைக்குக் குளிச்சிட்டு காஞ்சதும் தேங்காய் எண்ணெய் கொஞ்சமாவது தேய்ச்சுக்கணும்’ என்பது மட்டும்தான் நம்மவர்கள் கடைப்பிடிக்கும் பல ஆண்டு பழக்கம். ஆனால் இன்றைக்கு, பல குளியல் அறைகளை எட்டிப் பார்த்தால், ஒரு மருந்துக்கடை அலமாரி போலவே காட்சியளித்து பயம் தருகிறது. பழைய நம்பியார் படங்களில் கண்ணாடிக்குப் பின் உள்ள அலமாரியில் தங்கக்கட்டிகள் இருப்பதுபோல, குளியலறை சவரக் கண்ணாடிக்குப் பின் பல கெமிக்கல் சாமான்கள். 'குளிப்பதற்கு முன் இந்த ட்ரீட்மென்ட் ஆயிலை கொஞ்சம் தேய்க்கணும். அப்புறம் இந்த ஷாம்பு, அதுக்குப் பின்னாடி இந்தக் கண்டிஷனர், அதன் பின்னர் உலர்த்திவிட்டு இதில் சில சொட்டுகள்... அதோடு முடி கலையாமல் இருக்க இந்த கிரீம், மினுமினுப்பாக இருக்க இந்தத் தெளிப்பான்’ என, ஏழெட்டுச் சங்கதிகளை சின்னதாக ஒரு யாகம் நடத்துவதுபோல தலையில் நடத்தும் இளைஞர்களுக்கும், ஆன்ட்டி-அங்கிள் பருவத்தினருக்கும், சோடியம் லாரல் சல்பேட், மீத்தைல் ஐசோ தையோசிலினைன் முதலான பல விஷமிகள் அலர்ஜி முதல் கேன்சர் வரை வரவைப்பன என்று தெரியுமா?

சரி, இதற்கெல்லாம் என்ன செய்யலாம்?

சின்ன வயசு முதலே சாப்பாட்டில் முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்பஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலை துவையல்... போன்றவை வாரம் 2-3 நாட்கள் அவசியம். மாதுளை ஜூஸ், காய்ந்த திராட்சை, உலர் அத்தி சாப்பிடுவது மிக நல்லது. வாரம் ஒரு நாளேனும் தலைக்கு நல்லெண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது அவசியம். தினமும் தலைக்குக் குளிப்பது முடி கொட்டும் என்பது, புளியமரத்தடியில் படுத்தால் பேய் பிடிக்கும் என்பது மாதிரியான மூடநம்பிக்கை. தலைக்குக் குளித்தால் முடி வளர்க்கும். சிஸ்டின் லைசின், அர்ஜினைன், மித்தோனைனின் போன்ற அமினோ அமிலங்களின் குறைவும்கூட முடி கொட்டுவதற்கான காரணங்கள். குழந்தைப் பருவம் முதல் வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகள் சாப்பிடுவது, முடி கொட்டும் குறைபாடு நிகழாது தடுக்கும். இளம் வயதில் உணவின் மீதான அக்கறை, பின்னாளில் இளநரை இல்லாமல் முடியைக் காக்கும்!

திருச்செங்கோடு அருகில் 2,200 அடி தோண்டி தண்ணீர் எடுத்து, தென்னைக்கு ஊற்றுகிறார்களாம். இப்படிச் சூழல் சிதைவால் நீர் வற்றி, காற்று மாசுபட்டுப்போனதும் முடி கொட்டுவதற்கானப் பின்னணிச் சூழலியல் காரணங்கள். கட்டுப்படாத சர்க்கரை, இதய நோய், அதற்கான தவிர்க்க முடியாத மருத்துவம், சினைப்பை நீர்க்கட்டிகள், புராஸ்டேட் கோள வீக்கம், தைராய்டு குறைவு... என, சில மருத்துவக் காரணங்களும் முடி கொட்டுதலுக்குத் துணை செய்யும். இவையெல்லாம் தாண்டி, முடி கொட்டுவதற்கு மிக முக்கிய இன்னொரு காரணம், பரபரப்பாகவும், பரிதவிப்பாகவும், பயமாகவும் நகரும் மனம். பல பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் முடி கொட்டுவதற்கும் இதுதான் முக்கியக் காரணம். இளைஞர்களுக்கு வாழ்வின் முக்கிய நகர்வுகள் மீதான பயமும் அவநம்பிக்கையும் முடி கொட்டவைக்கும் முக்கியக் கூறுகள். மசபுசா மலையடிவார மூலிகை, அல்ட்ரா டெக்னாலஜி அணுக்கள் அடங்கிய ட்ரீட்மென்ட்டைவிட, சின்னதாக உச்சி முத்தம், கைகளை அழுந்தப் பற்றிய நடை, தோளோடு சேர்த்த அரவணைப்பு, 'அட’ எனும் பாராட்டுகள்கூட முடி கொட்டுவதை நிச்சயம் நிறுத்தும். செய்துதான் பாருங்களேன்..!

- நலம் பரவும்...

பொடுகு, டை... சில நம்பிக்கைகள்!

1. பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படு வதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. 'பொடுதலை’ என்ற ஒரு மூலிகை நம் மண்ணில் உண்டு. அதன் சாற்றை, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். SCALP PSORIASIS எனும் தோல் நோயைப் பலரும் பொடுகுத் தொல்லை என தவறாக நினைத்து அலட் சியப்படுத்துகின்றனர். அதிக அளவில் பொடுகுத் தொல்லை இருந்தால் குடும்ப மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

2. 100 சதவிகித 'மூலிகை டை’ என்று ஒன்று உலகில் இல்லவே இல்லை. 'கௌரவ வேடத்தி லாவது நீங்க நடிச்சா போஸ்டர்ல உங்க படம் போட்டு பப்ளிசிட்டி பண்ணிக்குவோம் சார்!’ எனப் பிரபலத்தை 'லைட்டா’ காட்டி படம் எடுப்பது போலத்தான், மூலிகை டை விஷயமும். கறுப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை. அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே!

3. தலையில், தாடி, மீசை, புருவத் தில் ஆங்காங்கே மழித்ததுபோல் வரும் சிக்கலை 'புழுவெட்டு’ எனும் அலோபீசியா ஏரியேட்டா என்பார்கள். இது உடல் நோய் எதிர்ப்பாற்றல் குறைபாட்டால் முடி வளர்ச்சியைப் பாதிக்கும் நோய். ஆனால் புழு, பூச்சிகள் இதற்குக் காரணம் கிடையாது. மற்றவர் பயன்படுத்திய சீப்பைப் பயன்படுத்தியதால் பரவும் தொற்று நோயும் கிடையாது. இதற்கு தடாலடி மருத்துவம் பயன் அளிக்காது. மன அழுத்தம் காரணமாக ஏற்படும் இந்தத் தொல்லைக்கு, தொடர்ச்சியான சிகிச்சை மட்டுமே அதுவும் மெள்ள மெள்ள நிவாரணம் அளிக்கும்!

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)

2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்

3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்

4. அவுரி சாறு - 0.5 லிட்டர்

5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்

6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்

7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்

8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P26b
இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.

இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Jul 03, 2014 7:20 am

நலம் 360’ - 4

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P50

புத்திசாலியாக இருப்பதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பு இல்லை என்பதற்கு, வால்ட் டிஸ்னி, வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்... எனப் பல உதாரணங்கள் உண்டு. ஆனாலும், 'நேத்து படிச்சது


இன்னைக்கு ஞாபகம் இல்லைன்னா எப்படி... மண்டைக்குள்ள அப்படி என்ன ஓடுது?’ எனும் கவலை நம்மில் பலருக்கும் உண்டு.  

ஒன்பது வகையான அறிவாற்றல்கள் இருப்பதாக நவீன அறிவியல் சொன்னாலும், படித்ததை ஞாபகம் வைத்து, அப்படியே வாந்தி எடுக்கும் ஸ்கூல் இயந்திரத்தை, 'பல தொழிலுக்கும் தகுதியானவர்’ என்று தேர்ந்தெடுப்பதுதான், அந்த ஒன்பது அறிவாற்றல்களில் ஞாபகசக்தியை மட்டும் சமூகம் உசத்திப் பிடிக்கக் காரணம்!

எப்படியோ முக்கி முனகிப் படித்து, வேலை தேடி, உழைத்து, ஓடி, ஓயும் சமயத்தில் மீண்டும் அந்த 'ஸ்கூல் மனப்பாடப் பிரச்னை’ தலைதூக்கினால், சின்ன வயதில் ஸ்கேலில் வாங்கிய அடி, இப்போது மனதில் விழத் தொடங்கும். அந்த மறதியைத்தான் 'அல்சீமர்’ என்கிறது மருத்துவ மொழி; 'வயசாச்சா... அவருக்கு ஓர்மையே இல்லை’ என்கிறது உள்ளூர் மொழி. 'கார் சாவியை எங்க வெச்சேன்?’, 'காதலியிடம் புரபோஸ் பண்ண தேதியை எப்படி மறந்து தொலைச்சேன்?’ அவன் முகம் ஞாபகம் இருக்கு... ஆனா, பேரு மறந்துபோச்சே’ எனும் முக்கல் முனகல்கள், ஆரம்பகட்ட மறதி நோய் (அல்சீமர்) என்கிறது நவீன மருத்துவம். இப்படி, கொஞ்ச மாக மறக்கத் தொடங்கி, கடைசியாக எங்கு இருக்கிறோம், என்ன செய்ய வந்தோம்... என்றெல்லாம் மறக்க ஆரம்பிப்பதுதான் அல்சீமர் நோயின் உச்சகட்ட அட்டகாசம்!  

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த மறதி பற்றிய படமான 'பிளாக்’ பார்த்தவர்களுக்கு, இந்த அல்சீமர் நோயின் பிரச்னை கொஞ்சம் புரிந்திருக்கும். 2001-2011-ம் ஆண்டுகள் வரை, 1,000 முதியவர்களைத் தொடர்ந்து ஆராய்ந்த ஆய்வு ஒன்று, 'முன் எப்போதும் இல்லாதபடி இந்தியாவில் இந்தப் பிரச்னை அதிகரித்துள்ளது. அதே சமயம் ஐரோப்பா, அமெரிக்கா அளவுக்கு நாம் அதிக அளவில் அல்சீமருக்குள் சிக்கவில்லை. என்றாலும், இங்கே இருக்கும் வயோதிகத்தின் சமூகப் பிரச்னைகள் பலவற்றை கருத்தில்கொண்டால், எதிர்காலத்தில் அல்சீமர் நிச்சயம் மிகப் பெரிய சவால்!’ என எச்சரிக்கிறது.

ஆம்... இது நிதர்சன உண்மை! வழக்கமாக இல்லாமல், இந்த நோய் ஏன் இங்கு கொஞ்சம் குறைவு எனப் பார்த்தால், 'APO4’ எனும் மரபணு சங்கதி என்கிறது ஆய்வு முடிவுகள். வளர்ந்த நாட்டினரைவிட 'APO4’ மரபணு சங்கதி நம்மவர்களுக்குக் குறைவாக இருந்து, பாதுகாப்பு அளிக்கிறது என்று மரபணு விஞ்ஞானிகள் பலர் கூறுகிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சூரியனை வணங்கும் சாக்கில் உடம்பின் உள்ளிருக்கும் நாளமில்லா சுரப்பிகளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கும் யோகாசனப் பழக்கம் போன்றவை அதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு முன்னரே 'மனசுதாம்லே முக்கியம்; அது சரியா இருந்துச்சுன்னா, ஒரு மந்திர மாங்காயும் வேண்டாம்’ என நியூரோ பிசியாலஜியை வேறு மொழியில் சொன்ன திருமூலரின் கூற்றை, சில பல நூற்றாண்டுகளாவது பின்பற்றிய வாழ்வியல்தான் இந்தப் பாதுகாப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அதெல்லாம் 'ஆஹா... மெள்ள நட... மெள்ள நட... மேனி என்னாகும்?’ காலத்தில். இந்த 'எவன்டி உன்னைப் பெத்தான் பெத்தான்...’ யுகத்தில் நிலைமை அப்படியா இருக்கிறது?

'ஏம்ப்பா... அப்பா சாப்பிட்டாங்களா?’ எனக் கேட்க பெரும்பாலும் வீட்டில் எவரும் இல்லை. 'அவரு ஒருத்தருக்காக மூணு பெட்ரூம் உள்ள ஃப்ளாட்டுக்குப் போக வேண்டியிருக்கு. அவரு எப்போ 'போவாரோ’ தெரியலை?’ என்ற 'எதிர்பார்ப்பு’, தீப்பெட்டிக் குடியிருப்பு நகர வாழ்க்கையில் இப்போது அதிகம். 'நீங்க அந்தக் கல்யாணத்துக்குப் போயி அப்படி என்ன ஆகப்போகுது? உங்களைக் கவனிக்கவே தனியா ஒரு ஆள் வேணும். நாங்க மட்டும் போயிட்டு வந்துடுறோம்’ என்ற 'அக்கறை’யான உதாசீனமும் சகஜம். 'அதெல்லாம் டிக்கெட் புக் பண்ணும்போதே, 'கீழ் பர்த் வேணும்’னு கேட்டிருக்கணும். இப்போ வந்து ஏற முடியாதுனா எப்படி? எனக்கும்தான் லோ பேக் பெயின்’ எனும் சக முதிய பயணிகளைக் கண்டிக்கும் சுயநலம், 'யோவ் பெருசு... நீயெல்லாம் எதுக்குய்யா தியேட்டருக்கு வர்ற? அதுதான் திருட்டு டி.வி.டி விக்கிறாங்களே. இங்கே கூட்டத்துல வந்து எங்கேயாவது விழுந்து வைக்கிறதுக்கா? போய் ஓரமா நில்லுய்யா...’ என்ற தீண்டாமை, 'அதுக்குத்தாம்பா, இந்தப் பிரச்னை எல்லாம் இல்லாத ஒரு ஹோமுக்கு உங்களைக் கூட்டியாந்திருக்கேன். வருஷத்துக்கு ஒருக்கா திருப்பதிக்கு வந்து பெருமாளைச் சேவிச்சிட்டு, தி.நகர்ல ஜட்டி, பனியன் எல்லாம் வாங்கிட்டு அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போயிடுவேன்’ எனும் 'க்ரீன் கார்டு ஹோல்டர்’ மகனின் கரிசனம்... எனப் பல சங்கடங்களைத் தினமும் கடக்கவேண்டியுள்ளது இப்போதைய வயோதிகம்!

இவை அத்தனையையும் மூளையின் கார்டெக்ஸ் மடிப்புகளுக்குள் வைத்துப் புழுங்கும்போது, இத்தனை காலம் குறைச்சலா இருந்த 'APO4’ மரபணு, எபிஜெனிடிக்ஸ் விநோத விதிகளின்படி விக்கி, வீங்கி, அல்சீமர் நோய், கட்டுக்கடங்காமல் போகக்கூடிய சாத்தியங்கள் அதிகம். 'இருக்கிற வியாதியைப் பார்க்கவே நேரம் இல்லை. இதைப் பத்தி இப்போ என்ன அக்கறை வாழுதாம்?’ என அவசரப்பட வேண்டாம்.

2020-ல் உலக மக்கள்தொகையில் 14.2 சதவிகித 'வயோதிகர்கள்’ இந்தியாவில்தான் இருப்பார்கள் என்கிறது ஒரு கணக்கு. அதேபோல் பென்ஷன் பேப்பர் வந்த பின்தான் மறதி நோய் வரும் எனக் கிடையாது. முன் நெற்றி, மீசைப் பகுதிக்கு டை அடித்து, செல்ல தொப்பையை அமுக்கி, திணித்து ஜீன்ஸ் போட்டுக் கொள்ளும் 40-களிலும் இந்த மறதி நோய் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

'அவ்வளவா பிரச்னை இல்லை’ என்று நம்மை எப்போதோ யோசிக்கவைத்த மறதி, 'அடடா... மறந்துட்டேனே’ என நாம் சுதாரிக்கும் மறதி, மற்றவர் 'அதுக்குள்ள மறந்துட்டீங்களா?’ என அங்கலாய்க்கும் மறதி, 'சார்... அவரு மறதி கேஸ். எழுதிக் குடுத்துடுங்க’ என அடுத்தவர் எச்சரிக்கும் மறதி, 'எதுக்குக் கிளம்பி வந்தேன்?’ என யோசித்து நடு வழியில் திணறும் மறதி, 'நான் யார், என்ன செய்ய வேண்டும்?’ என்பதே தெரியாதுபோகும் மறதி, ஒட்டுமொத்தமாகச் செயல் இழந்து முடங்கும் மறதி... என அல்சீமர் மறதி நோயை ஏழு படிநிலைகளாகப் பார்க்கிறது நவீன மருத்துவம்.

சற்றே ஆழ்ந்து யோசித்தால், அவற்றில் இரண்டு, மூன்றை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். ஆனால், சாதாரண வயோதிகத்துக்கும், இந்த மறதி நோய்க்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. மூளையில் புதிதாக முளைக்கும் அமைலாய்டு பீட்டாவை இதற்கு முக்கியமான தடயமாகப் பார்க்கிறார்கள். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, அதிக ரத்தக்கொதிப்பு போன்ற தொற்றா வாழ்வியல் நோய்கள்தான், இந்த மறதி நோயைத் திரிகிள்ளித் தூண்டும் என உலகச் சுகாதார நிறுவனம் பலமாக எச்சரிக்கிறது.

ஓர் ஆச்சர்யமான விஷயம், Mediterranean diet  சாப்பிட்டால் இந்த மறதி நோய் வருகை குறையும் என்பது! 'இது என்னப்பா புது கம்பெனி உணவு?’ எனப் பதற வேண்டாம். மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் வழக்கமாக இருந்த பாரம்பரிய உணவுகளை 'Mediterranean diet ’ என்கிறார்கள். இந்த வகை உணவுகள், அதிக ஆன்ட்டி ஆக்சிடென்ட்களையும், அழற்சியைக் குறைக்கும் (Anti-inflammatory) தன்மையையும் கொண்டவை என, அமெரிக்கா, இங்கிலாந்து விஞ்ஞானிகளால், ஹார்வர்டு போன்ற பல்கலைக்கழகங்களில் ஆராயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் உலகச் சுகாதார நிறுவனப் பட்டியலில் அவற்றுக்குத் தனி இடம் கிடைத்திருக்கிறது.

அந்த மத்தியத் தரைக்கடல் சங்கதிகளுக்கு, நம் ஊர் மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு, பெரிய நெல்லிக்காய், முருங்கை, மணத்தக்காளி கீரை, கம்பு, கேழ்வரகு முதலான சிறுதானியங்களும், பாரம்பரிய இந்திய உணவுகளும் கொஞ்ச மும் சளைத்தவை அல்ல. இவை எல்லாமே அதைவிட அதிக ஆன்ட்டி ஆக்சிடெண்ட்களையும், அழற்சியைக் குறைக்கும் தன்மையையும் கொண்டவைதான். கூடுதலாக, மருத்துவக் குணம்கொண்ட பல தாவர நுண்சத்துக்களையும் கொண்டது.

என்ன... படிக்கப்போன நம்ம ஊர்  அண்ணன்மார்கள், கம்பங்கூழையும் சோளப் பணியாரத்தையும் பற்றி யோசிக்காமல், நாம் ஏன் கத்திரிக்காயின் மரபணுவை மாற்றி அதில் சிக்கன் 65 சுவை கொண்டுவந்து மக்களைக் குஷிப்படுத்தி, அதற்கு காப்புரிமை பெற்று, நாம் மட்டுமே நிறைய சம்பாதித்து, ஜாகுவார் காரில் உல்லாசமாகப் போகக் கூடாது என தீவிரமாகச் சிந்தித்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

எதிர்கால மறதி சிக்கலில் இருந்து தப்பிக்க, நிகழ்காலத் தேவை, அப்போது இருந்த அக்கறை மட்டுமே.

நம் பிள்ளைகளுக்கு, நெருக்கடியிலோ அல்லது சுயநலத்திலோ உதாசீனப்படுத்தும் உள்ளத்தை, 'எனக்கான ஸ்பேஸ் இது’ எனும் அலங்கார வார்த்தை மூலம் சுயநலமாக வாழக் கற்றுக்கொடுக்கிறோம். அப்படி நாம் கற்றுக்கொடுக்கும் அவர்களது 'எனக்கான ஸ்பேஸ்’ வாழ்வியலில், நமக்கான 'ஸ்பேஸ்’ நிச்சயம் இருக்காது. நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, அன்றாடம் ஆரோக்கியமான உணவு என வாழ்க்கையைத் திட்டமிடத் தவறினால், பெற்ற பிள்ளை, மாமன், மச்சான் என அனைவரையும் மறந்துபோகும் மறதி நோய்கொண்ட வயோதிகம் வரும் சாத்தியம், மிக அதிகம் என்பதை ஞாபகத்தில் கொள்வோம்!

- நலம் பரவும்...

பி.குறிப்பு: இரு வாரங்களுக்கு முந்தைய ஜீரணம் குறித்த கட்டுரையில், ஒரு நாளைய உமிழ் நீர் சுரப்பு 11.25 லிட்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு. 1 முதல் 1.25 லிட்டர் என்பதே சரி!

ஞாபகசக்தி அதிகரிக்க...

வல்லாரை கீரையைச் சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். அதிலுள்ள Asiaticosides,  மூளைச் சோர்வு தராமல் அறிவைத் துலங்கவைக்கும் என்று நவீன அறிவியல் நம் பாரம்பரியப் புரிதலுக்குச் சான்று அளிக்கிறது. கொத்துமல்லி சட்னி அரைப்பதுபோல் கொஞ்சம் மிளகாய் வற்றல், கொஞ்சமாக புளியைச் சேர்த்து சட்னியாக அரைத்து தோசைக்குச் சாப்பிடலாம். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பரிய உணவகங்களில் பிரபல உணவும்கூட.

'பிரமி’ - பாரம்பரிய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள Baccosides பயன் அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது, நீரோடைப் பக்கம் நிற்பதால் 'நீர்ப் பிரமி’ என்றும் அழைக்கப்படும்.

சித்த மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் வாலுளுவை அரிசி எனும் மூலிகையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், மறதிக்கு மருந்து எடுக்கும் முயற்சி இன்றும் ஆய்வில் உள்ளது. நீதி வழங்கும் முன் அலசி ஆராய(!) அந்தக் கால நீதிபதிகள் இதில் இரண்டு அரிசி எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்களாம்.

DHA   - ஞாபகமறதி நீக்க பயன்படும் சத்து மீனில் இருந்தும், ஃபிளாக்ஸ் விதையில் இருந்தும் இதை உணவில் அன்றாடம் பெற்றுக்கொள்ள முடியும்.

வல்லாரையோ, பிரமியோ எதுவாக இருந்தாலும் நாம் எடுக்கும் முயற்சியில்தான் பயன் அளிக்குமே தவிர, சுவர் ஏறிக் குதித்து படம் பார்த்துவிட்டு குப்புறப் படுத்துத் தூங்கும் பிள்ளைக்கு, சந்தனக் காப்பு அரைத்துக் குளிப்பாட்டினாலும் எதுவும் நினைவில் நிற்காது!

யோகா அளிக்கும் ஆஹா மெமரி!

தினசரி 20 முதல் 40 நிமிடங்கள் யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள், முதியோருக்கு மறதியைப் போக்கவும், இளைஞர்களுக்கு ஞாபகசக்தியைப் பெருக்கவும் பெரும் அளவில் பயன்படும் என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. யோகாசனப் பயிற்சியும், பிராணாயாமப் பயிற்சியும், வார்த்தைகளைத் தேடும் மறதியை, உருவ மறதியை, கவனச் சிதறலால் ஏற்படும் மறதியை, வார்த்தைகளைச் சரளமாக உச்சரிப்பதை நிர்வகிக்கும் ஆற்றல் குறைவு, பணியில் மந்தம் போன்றவற்றைத் தீர்ப்பதாக Trail Making Test மூலம் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். கூகுளிலோ, பழைய புத்தகக் கடையில் தற்செயலாகப் பார்த்த புத்தகத்திலோ கற்றுக்கொள்ளாமல், யோகாசனப் பயிற்சியில் தேர்ந்த ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Jul 10, 2014 6:50 pm

நலம் 360’ - 5
மருத்துவர் கு.சிவராமன்

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P28

ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்தியதில் இருந்து, தோராயமாக 35 வருடங் களாகவது, மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்களை கொஞ்சம் வலி, கொஞ்சம் சிரமம், கொஞ்சம் பயம், கொஞ்சம் சுகவீனம் கலந்தே நகர்த்தி வருகிறார்கள். 47-51 வயதை எட்டும்போது மாதவிடாய் நின்று, 'இனிமேல் இது இல்லை’ என்ற விடுதலையைத்தான் 'மெனோபாஸ்’ என்கிறார்கள். இது நல்ல உடல்வாகைப் பெற்றிருக்கும் 35 சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களுக்குத்தான். மீதமுள்ள 65 சதவிகிதத்தினர் இந்த நாட்களில் படும் அவஸ்தைகள், அனுபவித்தால் மட்டுமே புரியும். சாதாரண ரத்தசோகையில் இருந்து, வாந்தி, தலைவலி, பிழியும் வயிற்று வலி, வயிற்று உப்புசம்... என உபாதைகள் அவஸ்தையாக, 'சனியன்... இது எப்போ ஒழியும்?’ என்று உதிரத்துக்கு முன்னதாகவே கண்ணீர் ஊற்று எடுக்க, இறுதி யுத்தத்துக்குக் காத்திருப்பார்கள்.

'மாதவிடாய் நிறுத்தத்தை, இயல்பான உடல் இயங்கியல் நகர்வு’ என்று நினைத்துதான் பெண்ணுலகம் இத்தனை காலம் அதனைக் கடந்து வந்தது. ஆனால், நிலைமை சமீபமாக அப்படி இல்லை. 'மூட்டுவலி, இடுப்புவலி, இதயப் படபடப்பு, திடீர் வியர்வை, தனிமையான பய உணர்வு’ எனப் பல சிக்கல்களை மெனோபாஸ் தோற்றுவிக்கிறதோ எனச் சந்தேகம் உண்டாகிறது. மாதவிடாய் முடிவை பல்நோய்க்கூட்டமாகவும், நோயின் முதல் அறிகுறியாகவும் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். 'சில மாற்றங்களுக்குத் தயாராகும் மனமும் உடலும் தயங்கித் திணறும் சில பொழுதுகள் மட்டும்தான் அப்படி. அதெல்லாம் சீக்கிரமே சரியாகிடும்’ என்று கூறிக்கொண்டே, 'எதுக்கும் இந்த டெஸ்ட் எல்லாம் பண்ணிடுங்க...’ என்று ஒரு பட்டியலையும் நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.

'உனக்கு எதுக்கும்மா இப்போ அனார்கலி சுடிதார்?’ என்ற வளர்ந்த குழந்தைகளின் உதாசீனங்களும், கூடவே தொலைந்துபோய்விட்ட அவசர முத்தங்கள், அரவணைப்புகள், 'அட’ எனும் ஆச்சர்யங்கள், சந்திக்க மறுக்கும் கண்கள்... என கணவரின் விலகல் தரும் வலி, பலருக்கு இப்போது மாதாமாதம் அல்ல... தினமும் உண்டு. 'முகச் சுருக்கமும் வாடலும் உலர்ந்துபோய்விட்ட சருமமும் மகப்பேறுகள் தந்த தொப்பையும்தான், என்னை இப்படி அவரிடம் இருந்து விலக்கி வைக்கின்றனவா? அல்லது மகன்/மகளின் மொழி, உடை, அசைவு, அலங்காரம் அவர்களது முக்கியங்கள், படிப்பு, பரபரப்பு... என எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியவில்லையே... அதனாலா?’ என்ற குழப்பத்துடன் நகரும் நாட்கள் இவை. உடலும் மனமும் வதைபடும் இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும், எதைச் சாப்பிட்டால் மீண்டும் புத்துணர்வு பெறலாம், இது நோயா... அல்லது வெறும் பயமா? ஏராளமான சந்தேகங்கள் மெனோபாஸ் பருவப் பெண்களை அலைக்கழிக்கும். ஆங்கிலத்தில் இதனை Empty nest syndrome என்பார்கள்.

தாய்ப் பறவை, தினம் தினம் தன் கூட்டிலுள்ள குஞ்சுகளுக்கு உணவு எடுத்து வந்து வாயில் புகட்டும். ஒருநாள் அப்படி வரும்போது கூட்டில் எந்தக் குஞ்சும் இல்லாததைக் கண்டு, பதறி அலறி முடங்குமாம். அந்தக் குஞ்சுகளுக்கு இறக்கை வளர்ந்து தனியாகப் பறந்து போய்விட்டன எனத் தாய்ப் பறவைக்குத் தெரியாது; புரியாது. இந்த வலியை, படபடப்பைத்தான், மாதவிடாய் முடிவில் இருக்கும் தாயுடன் ஒப்பிடுகிறார்கள்.

இனிமேல் கருமுட்டை வேண்டாம் என உடல் நிறுத்திக்கொள்ளும் இந்தப் பருவத்தில்தான், எலும்புகளின் சுண்ணாம்பு அடர்வு குறைய ஆரம்பிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு 'வி.ஆர்.எஸ்’ எடுத்துக்கொள்வதால், இந்தக் குறைபாடு நிகழ்வதாக நவீன மருத்துவம் கூறுகிறது. இதனால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ், மகப்பேறு சமயம் விரிந்து சீரான கூபக (pelvis) எலும்புகளைப் பாதிக்கும். அதோடு மாதவிடாயின்போதும் ஓய்வின்றி அடுப்பு ஏற்றி, ரயில் ஏறி, பஸ் ஏறி, எவரும் தன் சிரமம் உணராவண்ணம் ஓடியாடி உழைத்ததில், கால் மூட்டுகளில், கழுத்து - இடுப்பு எலும்புகளில் பெரும்பாலும் கால்சியம் குறையும். இதைத் தவிர்க்க சற்றே அதிகப்படி கால்சியம் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக தினசரி 1,000 மி.கி கால்சியம் தேவைப்படும்போது, மெனோபாஸ் சமயத்தில் 1,250 மி.கி வரை அவசியமாம். அப்படி எடுக்கத் தவறும்போது, முதுமையில் குளியலறையில் வழுக்கி விழுந்தால், பாட்டிகளுக்கு தொடை எலும்பின் பந்து கழுத்துப்பகுதி உடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்!

மாதவிடாய் முடியும் தருவாயில் கால்சியம் மட்டும் போதாது; வைட்டமின்-டி சத்தும் தேவை என்கிறது அறிவியல். அதனால், இப்போது வைட்டமின்-டி பரிசோதனை கிடுகிடுவெனப் பிரபலமாகி வருகிறது. மெனோபாஸ் மட்டுமல்லாது, சர்க்கரை வியாதி, இதய வியாதி, ரத்தக் கொதிப்பு/கொழுப்பு என எதற்கு வைத்தியம் செய்தாலும், 'எதுக்கும் வைட்டமின்-டி சரியா இருக்கானு பார்த்துக்கங்க...’ என அறிவுறுத்துகிறார்கள். சூரிய ஒளியில் இருந்து மனித உடல் தானே இதனைத் தயாரித்துக்கொள்ளும் நிலையில், நம்ம ஊரில் குறைச்சலாகவா சூரிய ஒளி இருக்கிறது... இங்க எதுக்கு இதெல்லாம்? என யோசித்தால், உண்மை விவரம் உலுக்குகிறது.

இந்தியரில் 79 சதவிகிதத்தினருக்கு வைட்டமின்-டி மிகக் குறைவாகவும், 15 சதவிகிதத்தினர் பற்றாக்குறையுடனும், 6 சதவிகிதத்தினருக்கு மட்டுமே சரியான அளவிலும் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சூரிய ஒளி தரும் யுவி கதிரை, சருமத்துக்கு அடியில் உள்ள கொழுப்புச் சத்தும் ஈரலும் சேர்ந்து 'வைட்டமின்-டி3’ ஆக உருமாற்றி அனுப்பும் சம்பவம், பெரும்பாலானோருக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோனது ஏன் எனப் புரியவே இல்லை. 'ஏ.சி-யில் வேலை செய்கிறார்கள், சூரிய ஒளியையே பார்ப்பது இல்லை, சன் ஸ்கிரீன் லோஷன் தேய்க்கிறார்கள்...’ எனப் பல காரணங்களை அடுக்குகிறார்கள். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, உணவிலும் சூழலிலும் வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்ற ரீதியிலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

வைட்டமின்-டி சேர்க்காத பால் விநியோகமும், பலர் சைவம் மட்டுமே சாப்பிடுவதும்தான் இதற்குக் காரணங்கள் எனச் சொல்லும் மருத்துவ ஆய்வாளர்கள், அயோடின் சேர்த்த உப்பு போல, 'வைட்டமின்-டி’யையும் அனைத்திலும் சேருங்கள் எனக் கிட்டத்தட்ட அலறுகிறார்கள். அயோடின் உப்பு தரும் நன்மை-தீமை(?) குறித்த விவாதங்களே இன்னும் நிலுவையில் இருக்கும்போது, இது வேறா எனத் தோன்றுகிறது. அதோடு, அந்த அலறலுக்குப் பின்புறம் இருப்பது அக்கறையா, வணிக் கண்ணியா என்ற பயமும் உள்ளது. இப்போது வாரத்துக்கு ஒருமுறையேனும் வைட்டமின்-டி மாத்திரை சாப்பிடுங்க எனச் சொல்வது மருத்துவ சம்பிரதாயமாகி வருகிறது.

'அந்த அரசியல் எல்லாம் இருக்கட்டும். முதல்ல எங்களுக்கு கால்சியமும் வைட்டமின்-டி வேறு எங்கு கிடைக்கும்? அதைச் சொல்லுங்க!’ எனக் கேட்போருக்குச் சில செய்திகள்.

பால், கால்சியத்துக்கான சரியான தேர்வு என்றாலும், பால் அருந்துவதால் உண்டாகும் பக்கவிளைவுகளைப் பார்க்கையில், மோர்தான் 'பெட்டர் சாய்ஸ்’ என்று தோன்றுகிறது. ஒரு குவளை மோரில் கிட்டத்தட்ட 250 மி.கி கால்சியம் கிடைக்கும். சில வகை கீரை, வெண்டைக்காய், சோயா பீன்ஸ், தொலியுடன்கூடிய உருளை, அத்திப்பழம், பாதாம் பருப்பு... இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் கால்சியம் உண்டு. கீரை, சூரிய ஒளியில் வளரும் சில காளான்கள், மீன், முட்டை, இறைச்சி, ஈரலில்... வைட்டமின் டி அதிகம் கிடைக்கும்.

பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் வரும் இன்னொரு பிரச்னை, கேன்சர் பயம். புள்ளிவிவரங்கள் சொல்லும் மார்பகப் புற்றின் எதிர்பாராத அளவு உயர்வு, காலங்காலமாக நம்மிடையே உள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்று இரண்டுமே சமீபத்திய துரித வாழ்விலும், சிதைந்த உணவிலும், மன அழுத்தத்திலும் இன்னும் கூடிக்கொண்டே போகின்றன. ஒவ்வொரு பெண்ணும், இந்தப் பருவத்தில் மார்பகங்களை மேமோகிராம் மூலம் பரிசோதித்துக்கொள்வதும், கர்ப்பப்பை வாய்ப் பகுதிக்கு பாப்ஸ்மியர் சோதனை மேற்கொள்வதும் அவசியமான ஒன்று. தங்கள் பரம்பரையில் முன்பு புற்று வரலாறு இருந்தால்கூட, அவை வரும் வாய்ப்பு அதிகம். நிறைய மகளிர், மாதவிடாய் முடியும் சமயம் வரும் கர்ப்பப்பை நார்க்கட்டியைப் பார்த்து, புற்றுக்கட்டியோ என்ற அச்சத்தில், கர்ப்பப்பையை அறுவைசிகிச்சை செய்து நீக்கிவிடும் போக்கு, மிக அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, இந்த அறுவைசிகிச்சை கிராமங்களிலும் செமி நகரங்களிலும் அதிகம். புற்றுக்கான மரபு வாய்ப்பு, மிக அதிக ரத்தப்போக்கும் அதனால் ஏற்படும் அனீமியாவையும் தவிர, பிற காரணங்களுக்கு அறுவைசிகிச்சை அவசியம் இல்லை. 30-35 வயதுகளில் ஏற்படும் இந்த வகையான கர்ப்பப்பை நீக்கத்தில், செயற்கையாக நிகழும் மெனோபாஸ், நிறையப் பேருக்கு உடல் எடை திடீர் அதிகரிப்பு, மூட்டுவலி, உளவியல் சிக்கலை ஏற்படுத்தும். அதிக ரத்தப்போக்குடன் சின்ன நார்க்கட்டிகள் இருக்கும்பட்சத்தில், சாப்பாட்டில் துவர்ப்பு சுவை அதிகம் உடைய உணவுகள் சேர்ப்பது அவசியம். வாழைப்பூ பொரியல், வாழைத்தண்டு தயிர்பச்சடி, சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், கிரீன் டீ... போன்றவை துவர்த்து உடல் காப்பவை. எந்தக் கட்டியும் வளரக் கூடாது எனில், இனிப்பு குறிப்பாக வெள்ளை அரக்கனான சர்க்கரையைத் தவிர்ப்பது மிக முக்கியம்.

இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கைதான் மெனோபாஸுக்கான முதல் எண்ணம். 'நீ ஏன் என்னோட டிசைனர் ஸாரியைக் கட்டக் கூடாது?’ என மகளின் அன்பான அக்கறையும், 'என்னோட காலேஜ் ஃபங்‌ஷனுக்கு நீ கண்டிப்பா வர்ற... சொல்லிட்டேன்’ என்ற மகனின் பாசமான கண்டிப்பும் மெனோபாஸுக்கான தடுப்பு வேக்சின்கள். 'தினம் ஓடிக்கிட்டே இருக்கிற... இன்னைக்கு கம்பு தோசையும் கடலைச் சட்னியும் நாங்க செஞ்சு தர்றோம். நீ கொஞ்சம் டி.வி பாரு, புத்தகம் படி, கேண்டி க்ரஷ் விளையாடு...’ என்ற கணவரின் கரிசனமும் மாதவிடாய் சம்பந்தமான, பிரிஸ்கிரிப்ஷனில் இடம்பெறாத மிக முக்கியமான மருந்துகள்!

மெனோபாஸ் பருவத்தினருக்கான நலம் டிப்ஸ்!

1. உடற்பயிற்சி மிக அவசியம். இதுவரை நடைப்பயிற்சி இல்லை என்றாலும், இனி மிக அவசியம். அது மட்டுமே புற்றின் அபாயத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்!

2. மனப் பதற்றம், பயம், படபடப்பு, திடீர் வியர்வை அவஸ்தைகளுக்கு, பிராணாயாமமும், 'சூரிய வணக்கம்’ யோகாசனப் பயிற்சியும் பெரும் பலன் அளிக்கின்றன. பாரம்பரிய மருத்துவ முறைகள், சூரிய வணக்கத்தின்போது உடலின் ஆறு சக்கரங்களை (யோகாவில் ஏழு என்கிறார்கள்) வலுப்படுத்தி, ஹார்மோன்களைச் சீராக்க உதவும்.

3. 30 சதவிகித உணவு, இனி பழங்களாக இருக்கட்டும். குறிப்பாக சிவந்த நிறமுள்ள மாதுளை, சிவப்பு கொய்யா, பப்பாளி... ஆகியவை கர்ப்பப் பை மற்றும் மார்புப் புற்று இரண்டின் வருகையையும் தடுப்பவை. ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த தொலி உளுந்து, நவதானியக் கஞ்சி, டோஃபு எனும் சோயா கட்டி, இரும்புச்சத்து நிறைந்த கம்பும், கால்சியம் நிறைந்த கேழ்வரகும் உணவில் அடிக்கடி வேண்டும்.

4. பால் சேர்க்காத தேநீர், குறிப்பாக பச்சைத் தேநீர் (கிரீன் டீ) சிறப்பான பானம். அதே சமயம் தேநீரைக் கஷாயம் போடுவதுபோல காய்ச்சி எடுப்பது தவறு. அது தேநீர் அளிக்கும் பலனைக் குறைக்கும். கொதிக்கும் வெந்நீரில் தேயிலையைப் போட்டு 4-5 நிமிடங்கள் வைத்துவிட்டு, பின்னர் வடிகட்டி ஆறவைத்துக் குடிக்க வேண்டும்!

நவீன அறிவியல் பரிந்துரைக்கும் பாரம்பரிய உணவுப் பட்டியல்!

1. காலை - நீராகாரம் அல்லது தேநீர்... முந்தைய தினம் ஊறவைத்த பாதாம் பருப்பு - 2.

2. காலைச் சிற்றுண்டி - கம்பு, சோள, உளுந்து மாவில் சுட்ட தோசையுடன் பிரண்டை சட்னி அல்லது வெங்காயச் சட்னி. அத்திப்பழம் - 2, வாழைப்பழம் - 1.

3. முற்பகல் - மோர் (2 குவளை)

4. மதிய உணவு - கருங்குறுவை (அ) மாப்பிள்ளை சம்பா (அ) கவுனி அரிசி (அ) வரகரிசியில் சோறு. வாழைத்தண்டு பச்சடி, பீன்ஸ், அவரை, சிவப்பு கொண்டைக் கடலை சேர்ந்த தொடுகறிகள். முருங்கை/பசலை கீரை, சுரைக்காய்க் கூட்டு, சுண்டைக்காய் வற்றல் மற்றும் குதிரைவாலி மோர் சோறு.

5. மாலை - முருங்கைக்காய் சூப் உடன் ராகி பனைவெல்ல உருண்டை, நவதானியச் சுண்டல் உடன் தேநீர்.

6. இரவு - கேழ்வரகு தோசை அல்லது உளுந்து கஞ்சி. (உங்கள் குடும்ப மருத்துவர் கண்டிப்பாகப் பரிந்துரைத்தால் மட்டும், பால்).

இவற்றை மட்டுமே தினமும் கெடுபிடியாகச் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. உணவுப்பழக்கத்தை, வாரம் 2-3 நாட்கள் இப்படி அமைத்துக்கொள்வது, மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்கவைக்கும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 29, 2014 10:26 pm

நலம் 360’ - 6
மருத்துவர் கு.சிவராமன்


வாய்க்கால் வரப்பில் வேலை செய்யும் களத்துமேட்டுப் பெண்கள் முதல் வாட்ஸ்-அப் பெண்கள் வரை கவலையுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயம், 'என்ன செஞ்சாலும் என் குழந்தை சாப்பிடுவேனானு அடம் பண்ணுது’ என்பதுதான். 'அதட்டி, மிரட்டி, கொஞ்சி, கெஞ்சி எல்லா ஆட்டமும் ஆடிப் பார்த்தாச்சு. தட்டுல போட்டது அப்படியே கெடக்கு. ஸ்கூலுக்கு டப்பால கொண்டுபோனது அப்படியே திரும்பி வருது. என்ன சார் செய்ய?’ என மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கும் பெற்றோரின் எண்ணிக்கை இப்போது அதிகம். 'சிறுதானிய சுண்டல், பழம், காய்கறிகள்னு என்னென்னவோ சொல்றீங்க. ஆனா, குழந்தை வாயைத் திறந்தாத்தானே அதெல்லாம் கொடுக்க முடியும்’ என அம்மாக்கள் வருத்தப்பட, 'எதுக்கு இந்தக் கவலை? அதான் அத்தனை நல்ல சத்துக்களையும் நாங்க துரித உணவுல, ஊட்டச்சத்து பானத்துல ஒளிச்சுவெச்சுத் தர்றோம்ல’ என அந்த வருத்தத்திலும் வணிகம் பார்க்க நினைக்கின்றன சத்துணவு நிறுவனங்கள். அந்த உணவு மற்றும் பானங்களின் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் 3,000 கோடிகளைத் தாண்டுகிறதாம்.

சரி... பிரச்னைக்கு வருவோம்!

பசி வந்தால் எந்தக் குழந்தையும், 'மம்மூ தா’ எனக் கேட்டு வாங்கிச் சாப்பிடும். ஆக, குழந்தைகளுக்குப் பசியைத் தூண்டுவதே, உணவூட்டலின் முதல் செயல். ஆனால், 'பள்ளி செல்லும் குழந்தைக்குப் பசியைத் தூண்டுவது எப்படி?’ என்று திட்டமிட்டு பிரயோஜனம் இல்லை. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே, அந்த அக்கறை தேவை என்கிறது நம் பாரம்பரியம்.

தமிழர் மருத்துவத்தில், வாழ்வியலில் 'மாந்தம்’ என்ற அற்புதமான ஒரு சொல் வழக்கில் இருந்தது. ஆனால், இன்றைய துரித யுகத்தில் அது ஒட்டுமொத்தமாகத் தொலைந்துவிட்டது. மாந்தத்தைச் சரிசெய்யாவிட்டால், குழந்தைகளுக்கு சுலபத்தில் பசியெடுக்காது. அதுவே, வருங்காலத்தில் பல நோய்களுக்கு வழிவகுக்கும். குழந்தை உடல் எடை குறைந்து, நோஞ்சானாக இருக்கும். பசி குறைந்திருத்தல், மலக்கட்டு, ஜீரணம் இன்றி மலம் கழிதல், நீர் அல்லது சீதமுடன்கூடிய வயிற்றுப்போக்கு... என, பச்சிளங்குழந்தைகள் மந்தமாக இருப்பதைத்தான் மாந்த நோய்களாக அடையாளம் காட்டினார்கள் நம்மவர்கள்.

குழந்தை அழுவதைவைத்தும், அதற்கு வரும் காய்ச்சலின் தன்மையைக்கொண்டும், வீசிங் எனும் இரைப்பில் அது படும் அவஸ்தைகளைக்கொண்டும் அதற்கு அள்ளு மாந்தம், போர் மாந்தம், சுழி மாந்தம் என மிக அழகாக விவரித்த 'பீடியாட்ரீஷியன்’ பாட்டிகள் அன்றே நம்மிடையே உண்டு. டயாப்பர் இல்லாத காலத்தில் ஒரு பேருந்து பயணத்தின்போது பக்கத்து இருக்கையில் அம்மா கையில் இருந்த குழந்தை ஒன்று மலம் கழித்துவிட, 'முதல்ல மாந்தத் தைச் சரிசெய்யுமா... இல்லைனா கணச்சூடு ஏறி குழந்தை வாடிப்போயிடும். அப்புறம் நீ எதைக் கொடுத்தாலும் உடம்பு பிடிக்காது’ எனச் சொல்லிய அக்காக்களை இப்போது பார்க்க முடியவில்லை. வருங்காலத்தில் கணச்சூடு போன்ற உபாதைகள் வராமல், குழந்தைகளின் மாந்தப் பருவத்திலேயே வாரம் ஒரு நாள் வேப்பங்கொழுந்து, ஓமம், மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து மிளகு அளவுக்கு உருட்டி, அதில் தேன் கோட்டிங் கொடுத்து, வயிற்றுப்புழு நீக்கும் பழக்கமும் காணாமல் போய்விட்டது.

தாய்ப்பால் கொடுக்கும் சமயம், நிலக்கடலை உள்ளிட்ட ஜீரணிக்கச் சிரமம் தரும் பொருட்களைச் சாப்பிடாதீர்கள் என நம் முன்னோர்கள் சொல்வதை, நவீனம் முன்பு மறுத்தது. ஆனால், இப்போது அதே நவீனம், 'பிரசவித்த தாய் ஒருவேளை சாப்பிடும் ஏதேனும் புரதப்பொருள், தாய்க்கு ரத்தத்தில் lgE-ஐ அதிகரித்தால் (lgE- உடலின் அலர்ஜி பாதிப்புக் குறியீடு), அது தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு வரக்கூடும். அதனால், குழந்தைக்கு மாந்தமோ, கரப்பான் எனும் அலர்ஜி தோல்நோயோ வரலாம். எனவே, நிலக்கடலை குறைச்சுக்கலாமே, சோயா வேண்டாமே’ என்கிறது. ஒரே விஷயம்தான்... வேறு மொழியில்; வேறு வார்த்தைகளில்!

குழந்தைக்கு தாய்ப்பால் வழியாக நல்ல விஷயங்களைக் கொண்டுசென்று, திட உணவு (weaning food) சாப் பிடத் தொடங்கும் சமயம் ஜீரணத்தைத் தூண்டி, நன்கு பசிக்கவைக்கவும்தான், 'பிரசவ நடகாய் லேகியத்தில்’ அத்தனை மணமூட்டி மூலிகைகளையும் சேர்த்து, பிரசவித்த பெண்ணுக்கு அன்று தாய் வீட்டில் கொடுத்தனர். வீட்டிலேயே கிளறிக் கொடுக்கப்படும் அந்தச் சிறப்பு உணவில் உள்ள தண்ணீர்விட்டான் கிழங்கும், வெந்தயமும், பூண்டும் தாய்க்கு அதிக பால் சுரப்பைக் கொடுக்கும் என்றுதான் நெடுநாட்களாக சித்த ஆயுர்வேத மருத்துவர்கள்கூட நினைத்திருந்தனர். ஆனால், சமீப ஆய்வுகள் அந்த வெந்தயமும் பூண்டும் தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் உரமூட்டும் என்று உணர்த்துகிறது!

ஒன்றரை, இரண்டு வயதில் மாந்தத்தினால், அடிக்கடி வயிறு உப்புசத்துடன் வயிற்றுப்போக்கும் இருக்கும் குழந்தைக்கு, மிக அதிகமாகப் பயன்படும் மூலிகைக் கீரை உத்தாமணி. 'உத்தமம்’ என மகுடம் சூட்டி நம் சமூகம் கொண்டாடிய மூலிகை அது. வீட்டிலேயே விளக்கெண்ணெயில் உத்தாமணிச் சாற்றை சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணெயைக் குழந்தைகளுக்கான முதல் கைவைத்திய மருந்தாகப் பயன்படுத்திய நெடுநாள் வரலாறு நம்மிடையே உண்டு. அதைவிட அசரவைக்கும் செய்தி, அதைக் குழந்தைக்குப் பரிமாறிய விதம்! 'டிராப்பரில்’ வைத்து வாயில் ஊற்றினால், கொடுக்கும்போது ஒருவேளை குழந்தை திமிறி, மருந்து உணவுக்குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாய்க்குப் போய் நிமோனியா வந்துவிடக் கூடாது என எச்சரிக்கைகொண்டிருந்தனர் அப்போதே. அதனால் உத்தாமணி எண்ணெயை, தாயின் மார்புக்காம்பில் தடவி பால் கொடுக்கும்போது முதல் துளியாக உறிஞ்சவைக்கச் செய்திருக்கிறார்கள். அதுவும் குழந்தை குளித்ததும் பசித்திருக்கும்போது, எண்ணெயின் சுவை உணராதபடி வேகமாக உறிஞ்சும் என்பதால், அந்தச் சமயமே மருந்தைத் தடவச் சொன்ன நம் பாட்டி எந்தப் பட்டமும் படிக்காத விஞ்ஞானி!

பிறக்கும் முன், பிறந்த குழந்தைகளுக்கு இதெல்லாம் சரி..? வளர்ந்த குழந்தைகளின் மாந்தத்துக்கு என்ன செய்வது? 'போக்கை அடக்குமாம் பொடுதலை; ஆற்றை அடக்குமாம் அதிவிடயம்’ என்கிறது மாந்தத்துக்கான சித்த மருத்துவ முதுமொழி. மாந்தத்தில் வரும் வயிற்றுப்போக்கை அடக்கும் குணம் பொடுதலைக்கு உண்டு. ஆறு சீற்றத்துடன் பாய்வதைப்போல நீராகக் கழியும் வயிற்றுப் போக்குக்கு அதிவிடயம் அருமருந்து. பொடுதலையைச் சாறாக எடுத்துச் சூடாக்கி சுரசம் பண்ணியும், அதிவிடயத்தைக் கஷாயமிட்டும் கொடுத்தால் மாந்தம் மறையும்.

பின்னாளில் 'கணச்சூடு’ என்று அன்று சொன்ன பிரைமரி காம்ப்ளக்ஸ் எனும் இளங்காச நோயின் வருகைக்கு, சிவப்புக் கம்பளம் விரிப்பதுகூட இந்த மாந்தம்தான். 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனும் கிருமிதானே அதைத் தருகிறது. மாந்தக் கழிச்சலுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?’ எனப் படித்தவர்கள் வினவலாம். கழிச்சலில் குறைந்த நோய் எதிர்ப்பாற்றலில் சாதாரணமாகத் திரியும் அந்தக் கிருமி உடலுக்குள் குடித்தனம் நடத்த ஆரம்பித்து, நுரையீரலில் தொடங்கி அத்தனை உறுப்புகளையும் பதம் பார்ப்பது அதனால்தான். நவீன மருத்துவத்தில் 6 - 8 மாத காலத்தில் இதனை முற்றிலுமாக ஒழிக்க மருந்து இருக்கும் நிலையிலும், 'எங்களுக்கெல்லாம் இது வருமா?’ என்ற அலட்சியத்தில் மெலிந்த பல குழந்தைகள், பசியில்லாக் குழந்தைகள் காசநோயின் கணிப்பில் இருந்து தப்பி பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

'காசம் மட்டுமல்ல... ஆட்டிச நோய் நிவாரணத்துக்குக்கூட இந்த மாந்தக் கழிச்சலை முதலில் சரிசெய்யுங்கள். அது குழந்தையின் மூளைச் செயல்சிதறலைச் சரியாக்கி மீட்டெடுக்கும்’ என ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இத்தனைக்கும் காரணமான மாந்தத்துக்குத் தடுப்பாக நம் வாழ்வியலோடு ஒட்டியிருந்த விஷயங்கள் ஏராளம். பல்லூறும் பருவத்தில் வாயில் கடிக்க கையில் வசம்பு வளையல், வைத்து விளையாட வேங்கை மரத்தில் செய்த மரப்பாச்சி பொம்மை எல்லாம் இப்போதைய பார்பி டால்களிடமும் டெடி பியர்களிடமும் தோற்றுவிட்டன.

'போர்மாந்தக் கட்டை’ என்ற ஒன்று, திருச்சி மாவட்டப் பகுதிகளில் இருந்து வந்திருக்கிறது. 'குழந்தைகள் பசி இல்லாமல் மாந்தமாக இருக்கும்போது இந்தக் கட்டையில் உரைத்தோ அல்லது உடைத்துக் கஷாயமாக்கியோ பயன்படுத்தி மாந்தம் போக்கியிருக்கின்றனர்’ என்ற குறிப்பை தமிழ் மூதறிஞர் கி.ஆ.பெ. வரை பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இப்போது அதைக் கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. மாந்தத்துக்கு அதிகம் பயன்படுவது நுணா மரக்கட்டையா, வேங்கை மரக்கட்டையா எனச் சித்த மருத்துவர்கள் இப்போதும் ஆராய்ந்து வருகின்றனர்.

கருச்சிதைவு குறைந்திருப்பது, மகப்பேறு சமயத்தில் தாய்-சேய் மரணங்கள் பெருவாரியாகக் குறைந்தது, பெருமளவில் அதிகரித்துள்ள தாய்-சேய் நலம் எல்லாமுமே நவீன மருத்துவமும் பொதுச் சுகாதாரப் புரிதலும் வந்ததால்தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதே சமயம் கொஞ்சம் அழுக்குப் படிந்திருக்கிறது என்பதற்காக, கழுத்துச் சங்கிலியைக் கழட்டி எறிவோமா நாம்? ஆனால், மரபு விஷயத்தில் அப்படித்தான் நடக்கிறது. நவீன அறிவியலாளரும் நவீன மருத்துவத் துறையும், இணைந்து பாரம்பரிய மருத்துவத்தில் தொலைந்தும், தூசி ஏறியும், மறைந்தும் இருக்கும் பல மகத்துவங்களை மீட்டு எடுக்க வேண்டிய காலம் இது. இணைவதில் மீட்டு எடுக்கவேண்டியது, பன்னாட்டுப் பிடியில் சிக்கியிருக்கும் நலவாழ்வு மட்டுமல்ல; இந்திய மண்ணின் உற்பத்தித் திறனும்தான்!

- நலம் பரவும்...

பஞ்சமூட்டக்கஞ்சி!

'பஞ்ச காலத்தில் ஊட்டக்கஞ்சி’ என்றும், 'ஐந்து பொருட்களால் செய்யப்படுவதால்’ என்றும்... இதற்குப் பெயர்க் காரணம் சொல்வார்கள். அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, சிறுபருப்பு, துவரம்பருப்பு எல்லாவற்றிலும் சமபங்கு எடுத்துக்கொண்டு, நன்கு வறுத்து வெள்ளைத்துணி ஒன்றில் தளர்வாக முடிந்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு, நீரின் மத்தியில் இது தொங்கும்படியாக பாத்திரத்தின் குறுக்கே ஒரு கம்பியில் கட்டி நீரைக் கொதிக்கவிட வேண்டும். நீரில் மூழ்கி இருக்கும் பொட்டலத்தின் தானியங்கள் நன்கு வெந்து, புரதமும் சர்க்கரையும் பிற சத்துக்களும் நீரில் கஞ்சியாகக் கரைந்துவரும். இந்தக் கஞ்சி, உடலுக்கு மிக ஊட்டம் தந்து உடல் எடையை அதிகரிக்கவைக்கும்!

நேந்திரம்பழக் கஞ்சி

நேந்திரம் வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலரவைத்துப் பொடித்துக்கொள்ளவும். அந்தப் பொடியில் துளி சுக்கு சேர்த்து, கஞ்சி காய்ச்சுவதுபோல காய்ச்சிக் கொடுக்க எடை கூடும். இது கேரளா ஸ்பெஷல்!

பஞ்ச தீபாக்கினி சூரணம்

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம்... இவற்றின் கூட்டணிக்கு இப்படி ஒரு பெயர் உண்டு. சுக்கை மேல் தோல் சீவியும், பின் எல்லாவற்றையும் லேசாகப் பொன் வறுவலாக வறுத்தும் பொடி செய்துகொள்ளவும். அந்தக் கூட்டணிப் பொடியின் எடைக்குச் சமமாக நாட்டு ஆர்கானிக் வெல்லம் கலந்துகொண்டால், பஞ்ச தீபாக்கினி சூரணம் ரெடி. பசியைத் தூண்டும் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு தேனில் கலந்து குழந்தைகளுக்குக் காலை உணவுக்கு முன் கொடுத்து வந்தால், மதியம் லன்ச் பாக்ஸ் எப்போதும் காலியே!

சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு...

1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை, உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.

2. 'ஸ்வீட் எடு.. கொண்டாடு!’ என இருக்க வேண்டாம். கொண்டாட்டம் என்றால், 'பழம் எடு... பரவசமாகு’ என கற்றுக்கொடுப்போம். அத்தனை இனிப்புப் பண்டங்களும் பசியடக்கி கபம் வளர்க்கும். குறிப்பாக 'மில்க் ஸ்வீட்’!

3. 'எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கோம்! அது புத்திசாலியாக்கும், ஓட வைக்கும், உயர வைக்கும், அழகாக்கும்...’ என சந்தையின் பாக்கெட் உணவுகளை முடிந்தவரை அன்றாட உணவில் இருந்து நீக்கிவிடுங்கள். பசி தானாக வரும்.

4. சாதாரண கீரை சாதம், மாவடுடன் மோர் சாதம், பால் கொழுக்கட்டை, மோதகம், ராகி உருண்டை, கருப்பட்டி சோளப் பணியாரம், உளுந்தங்களி, மாலாடு, கறிகோலா உருண்டை, சுறா மீன் புட்டு... இந்த உணவுகள் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும்!

5. 'எல்லாம் கெடக்கு... அப்படியும் வாயைத் திறக்க மாட்டேங்கிறான்’ என்போர் ஏதேனும் வியாதி இருக்கிறதா என உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேளுங்கள். தைராய்டு, காசம் முதல் சிலியாக் வியாதி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் வரை பல வியாதிகள் பசியின்மைக்குக் காரணங்களாக இருக்கலாம்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 29, 2014 10:29 pm

நலம் 360’ - 7
மருத்துவர் கு.சிவராமன்,


'காசு, பணம், துட்டு, மணி, மணி...’ - என ஆடவைக்கும் வாழ்க்கைச் சூழலில், அமைதியாக வளர்ந்து ஆளைக் கொல்லும் அரக்கனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது ரத்தக் கொதிப்பு நோய். 'இந்த நோய்க்குக் கூடுதல் கவனம் கொடுங்கள். உங்கள் நாட்டில், கிட்டத்தட்ட 25 வயதுக்கு மேல் உள்ள மக்களில் 25 சதவிகிதம் பேருக்கு பி.பி எகிறிப்போய் இருக்கிறது’ என்று இந்தியா மீது கரிசனக் கவலை தெரிவிக்கிறது உலகச் சுகாதார அமைப்பு. மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல்... எனத் தீர்ப்பதற்கு மிகக் கடினமான பல பிரச்னைகள உண்டாக்கும் இந்த ரத்தக் கொதிப்பு, முழுக்க முழுக்க தவிர்க்கக்கூடியதும் கட்டுப்படுத்தக்கூடியதும்கூட. நோய்குறித்த அலட்சியமும் தவறான புரிதலும் 'துரத்தலும் தப்பித்தலுமான’ துரித வாழ்வியலும்தான் இந்த நோய் கும்மியடித்துக் குத்தாட்டம் போடுவதற்கான முக்கியமான காரணங்கள்.

ரத்தக் கொதிப்பு நோய் வர, மரபும் ஒரு முக்கியமான காரணம். ஆனால், 60 வயதைத் தாண்டி அப்பா-அம்மாவுக்கு வந்த இந்த ரத்தக் கொதிப்பு, சூழலையும் வாழ்வியலையும் நாம் சின்னாபின்னமாக்கியதில் 25 வயதில் எல்லாம் இப்போது தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது. உணவைப் பக்குவப்படுத்தும் வித்தை குறித்த நம் மூத்தக்குடியின் அனுபவ முதுமொழியான 'உப்பில்லாப் பண்டம் (சீக்கிரம்) குப்பையிலே’ என்பதைத் தப்பாகப் புரிந்துகொண்டு, மானம் ரோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உப்பை அள்ளி அள்ளிப் போட்டுக்கொள்வதிலும், 'நாங்கள் கூடுதலாக எந்தச் செயற்கை கெமிக்கலும் சேர்க்கவில்லை’ என்று கூவிக் கூவி விற்கப்படும் குளிர்பானத்தையும் பாக்கெட் பழச்சாறையும் முட்ட முட்டக் குடிப்பதிலும் உப்பு தப்பாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது.

உப்பு, ஊறுகாயில் மட்டும்தான் இருக்கும் என்பது தப்புக் கணக்கு. இனிப்புச் சுவையோடு இருக்கும் ஜாம், ரொட்டிகளிலும் உப்பு இருக்கிறது. 'கொஞ்சம்தானே... எப்போவாவதுதானே!’ என வயிற்றுக்குள் கொட்டப்படும் சிப்ஸ், சூப்பில் தூவப்படும் உப்பு, 'ரெடி டு ஈட்’ எனும் அத்தனை துரித வகையறா உணவுகளிலும் உப்பு தூக்கலாகவே தூவப்படும். சுவையூட்டுவதாகச் சொல்லிவரும் மோனோ சோடியம் குளூட்டமேட், 'உணவைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்குமாக்கும்’ எனச் சொல்லிச் சேர்க்கப்படும் சோடியம் நைட்ரேட், சோடியம் பை கார்பனேட் வகையறாக்கள் எல்லாம் உப்புச் சத்தான 'சோடியம்’ நிரம்பியவையே. கேக், சாக்லேட், பாஸ்ட்ரி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பன்னீர் பட்டர் மசாலா... என, துரித உணவுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சோடியம் உள்ளே போவதுதான் 45 வயதில் வரவேண்டிய நாய் குணம், நாலாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளிலேயே வாலாட்டி வளர்கிறது.

சாது பொமரேனியனாக இளமையில் இருக்கும் இந்தக் குணம் ஆவேச அல்சேஷனாக ஆர்ப்பரிக்கும்போது, 'சார்... நீங்க மாத்திரை சாப்பிட்டே ஆகணும்... அதுவும் காலம் பூரா!’ என்ற மருத்துவ எச்சரிக்கை மிரட்டும். அப்போது, 'சார் உங்களைப் பார்த்தாதான் எனக்கு பி.பி ஏகிறுது. மத்தபடி நான் புத்தர் மாதிரி’ என, கொதிப்பை அளந்து பார்த்துச் சொன்ன மருத்துவரை பூச்சாண்டியாக்கித் தப்பிக்க முயற்சிப்பவர், 'வீட்ல பொண்டாட்டி இம்சை... ஆபீஸ்ல சீனியர் தொல்லை... இதுல நான் எங்கே நிம்மதியா இருக்கிறது?’ என அலுத்துக்கொள்வோர், 'நேற்று தூங்கலை; வரும்போது டிராஃபிக்ல வண்டி ஓட்டினேன். அதனாலயா இருக்கும்!’ என மருந்து சாப்பிட மறுப்போர் என விதவிதமான காரணங்களைச் சொல்லி, ரத்தக் கொதிப்பை அதிகரித்துக்கொள்ளும் பரந்த மனசுக்காரர்கள் இங்கே அதிகம்.

சரி, 'அந்தக் கொதிப்பைக் குறைக்க மருந்து கண்டிப்பாக அவசியமா?’ என்று கேட்டால், 'ஆம். நிச்சயம் அவசியம்’. இதயம் சுருங்கும்போது மிக அதிகபட்சமாக 140-ம், விரியும்போது 90-ம் தாண்டி ரத்த அழுத்த அளவு இருந்தால் ரத்தக் கொதிப்பு என்கிறது மேற்கத்திய விஞ்ஞானம். '136-ஐ தாண்டவில்லை. அது ஆரம்பக்கட்ட லேசான உயர்வுதான்’ எனில், உணவில் திருத்தம், நிறைய நடைப்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, சரியான தூக்கம் மூலம் நிச்சயம் அதைக் கட்டுக்குள் வைக்கலாம். கூடவே, நாம் வழக்கமாக மருத்துவரிடம் போனால் முன்கையில் பார்க்கும் பிரஷர், புற ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தை மட்டும்தான் பிரதிபலிக்கும். மத்திய ரத்தக்குழாய் அழுத்தத்தையும் சோதித்தால்தான், உண்மையிலேயே நோய் கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கலாம் என்கிறது இன்றைய நவீன மருத்துவம். அதனால்தான் பல நேரம் இந்த வியாதி இருப்பது பலருக்கும் தெரியாமல் போய், ஒரு பக்கம் ஸ்ட்ரோக் பாதித்த பிறகு, 'அடடா... இவ்ளோ பி.பி இருந்துருக்கு; அவரும் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தாரு. எப்படி இப்படி ஆச்சு?’ என நாம் குழம்பித் தவிப்போம்!

ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பல மூலிகைகளை வைத்து ஆராய்கிறார்கள். சீரகம், பூண்டு, வெங்காயம், வெந்தயத்தில் தொடங்கி செம்பருத்தி, முருங்கைக் கீரை, தக்காளி, கேரட் வரை பல உணவுக் காய்கறிகளில் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் மருந்துக்கு துணை நின்று பயனாகும் உணவே (functional food ingredient) தவிர, மருந்துக்கு மாற்று கிடையாது.

நம் சித்த மருத்துவ மரபு வெகுகாலம் பயன்படுத்தி வந்த வெண்தாமரை சூரணத்துக்கு, இதயத்தில் இருந்து வெளியாகும் 'கரோடிட் நாடி’யின் திடத்தன்மையைச் சீராக்கி ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் குணம் இருப்பதை முதல்கட்ட ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இன்னும் பலகட்ட ஆய்வுகளைக் கடந்து உண்மை ஊர்ஜிதமாகும்பட்சத்தில், வெண்தாமரை உலகெங்கும் உற்றுப் பார்க்கப்படும். இந்த உள்ளூர் பூக்களை சரஸ்வதிக்கு மட்டும் சமர்ப்பித்துவிட்டுப் போகாமல், அதைக் கொஞ்சம் தேநீராக்கிக் குடித்தோ, சித்த மருத்துவர்களிடம் அதன் மூலிகை சூரணத்தைப் பெற்றோ ஆரம்பக்கட்ட லேசான ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம். பார்த்த முதல் நாளே பற்றிக்கொள்ளும் காதல்போல, முதல் அளவீட்டின்போதே எக்குத்தப்பாக எகிறி இருக்கும் கொதிப்புக்கு, முலிகை மருந்துகள் மட்டும் நிச்சயம் போதாது. நவீன மருத்துவமும் மிக மிக அவசியம்.

சீனாவில் ரத்தக் கொதிப்பு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் போனால், அங்கே அவரை பரிசோதிக்கும் மருத்துவர், அவர் அறையிலேயே அதை உடனே குறைக்க நவீன மருந்தும், கொஞ்சம்கொஞ்சமாக அதைக் கட்டுப்படுத்த சீன மூலிகையும், வாழ்வியல் பழக்கமாக 'தாய்சீ’ நடனமும் கூட்டாகப் பரிந்துரைக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலோ, நவீன மருத்துவ மாலிக்யூலும், பாரம்பரிய மூலிகையும் ஒரே சமயத்தில் பரிந்துரைக்கப்படும்போது, ஒரு மருந்தின் உயிர்செயல்தன்மையை (bio availability) மற்றது மாற்றுமா என்ற ஆய்வுகள் முடுக்கிவிடப்படுகின்றன. இரு துறைகளிலும் பன்னெடுங்காலமாக ஜாம்பவான்களைக் கொண்டிருக்கும் நம் ஊரிலோ, 'எனக்கு அதைப் பத்தி எல்லாம் தெரியாது. அது உங்க இஷ்டம். உங்களுக்கு விருப்பம் இருந்தா என்கிட்ட பாருங்க’ எனப் பாரம்பரியமும் மேற்கத்தியமும் எந்தப் புள்ளியிலும் ஒருங்கிணைய மறுப்பதில், இந்திய இதயங்கள் மெள்ள மெள்ள துடிப்பைத் தவறவிட்டுக்கொண்டிருக்கின்றன!

உறக்கத்தைத் தொலைக்கும் பழக்கம் உள்ள நகரவாசிகளுக்கு 40 சதவிகிதமும், கிராமங்களில் எதிர்பாராத அளவாக 17 சதவிகிதமுமாக ரத்தக் கொதிப்பு நோயாளிகள் இருக்கிறார்கள் என்கிறது பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் கணக்கு. இரு தரப்பிலும் எக்குத்தப்பாக எகிறும் இதன் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், மது. 'கொஞ்சமா குடிச்சா தப்பு இல்லை, வொயின் நல்லதாமே, இது பொம்பளைங்க குடிப்பதாமே..!’ என முழுவீச்சில் நடைபெறும் பொய்ப் பிரசாரமும், 'இந்த வருஷம் இன்னும் அதிகமா வித்துக் காட்டணும்’ என அரசாங்கமே அட்டகாசமாக நடத்தும் மது வணிகமும் இந்தப் புள்ளிவிவரம் பொங்கி எழ ஊர்ஜிதமான காரணங்கள்.

தனியே நடக்க முடியாமல், கையில் உருட்டி ஒரு வாய் சாப்பிட முடியாமல் முடங்கி இருக்கும் எத்தனையோ அம்மாக்களுக்கு, ஜேசுதாஸ் பாடல் பின்னணியுடன் தூக்கிச்செல்ல 'சூப்பர் ஸ்டார்’ பிள்ளைகள் கிடையாது. வாரம் மூன்று நாள் டயாலிசிஸ் செய்ய வசதி இல்லாத மகனின் மீது கரிசனம் கொண்டு, 'அவனுக்கு எதுக்குச் செலவு?’ என முக வீக்கத்துடன், 'இருக்கிற வரை இருந்துட்டுப் போறேன்!’ எனச் சொல்லும் பெற்றோர்கள்தான் இங்கு ஏராளம். 'நாளைக்கு கண்டிப்பா தீம் பார்க் போலாம்டா செல்லம். இப்போ சமத்தா தூங்கு’ என மகளை உறங்க வைத்துவிட்டு, மகள் விழித்துப் பார்க்கையில், மருத்துவமனைப் படுக்கையில் குழாய்களுக்கு நடுவில் மாரடைப்புக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்தப்படாததுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். ஆரம்பத்தில் இருந்தே முறையான வாழ்வியலும், சரிவிகித உணவும், வருமுன் காக்கும் மருத்துவமும் இருந்துவிட்டால் இத்தனையும் பெரும்பாலும் தவிர்க்கக்கூடியதே!

ரத்தக் கொதிப்புக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனால், வேலை முடிந்து களைத்து வீட்டுக்குச் சென்றதும் எதிர்கொள்ளும் மனைவியை, 'அற்றைத் திங்கள் அந்நிலவில், நெற்றித்தரள நீர்வடிய, கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?...’ எனச் சிலாகிக்க வேண்டாம். 'என்னடா செல்லம்... கண்ணு மின்னுது. என்ன விசேஷம்?’ என்ற சின்ன விசாரிப்புகூட அவளுக்கு ரத்தக் கொதிப்பு அபாயத்தைத் தடுக்கும். பதிலுக்கு, 'வெண்ணிறப் புரவியில் வந்தவனே! வேல்விழி மொழிகள் கேளாய்...’ என மனைவி இசைப்பாட்டு பாட வேண்டாம். கண்களால் சிரித்து, 'உங்களைப் பார்த்தாலே உள்ளே ஆயிரம் வாட்ஸ் பாயுதுல்ல... அதனாலயா இருக்கும்!’ என்று சிரித்துக் கைபற்றினால், ரத்தக் கொதிப்பு வருகை நிறையவே தள்ளிப்போகும். அப்படியான தருணங்களே ரத்தத்தில் கொதிப்பு தித்திப்பாக மாறும் ரசவாதம் நிகழும்!

- நலம் பரவும்...

ரத்தக் கொதிப்பைத் தவிர்க்கும் உணவு வகைகள்!

முருங்கைக் கீரையை நீர் நிறைய விட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோல செய்து, காலை உணவுடன் பருகலாம்.

மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி, வெள்ளரிப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம்.

கொதிப்புக்குக் காரணமாக ரத்தக் கொழுப்பைக் குறைக்க/கரைக்க, புளியை உபயோகத்துக்கு ஏற்ப எடை குறைக்கும் தன்மையுடைய கோக்கம் புளி அல்லது குடம் புளியைப் பயன்படுத்தலாம்.

வெந்தயத் தூள், கறிவேப்பிலை பொடியை சுடுசோற்றில், முதல் உருண்டையில் பிசைந்து சாப்பிடலாம்.

பச்சைத் தேநீர் (கிரீன் டீ) ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது என்பதால், ரத்தக் கொதிப்பு நோயாளிக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவுமாம்.

மஞ்சள் தூள், லவங்கப்பட்டை மணம்ஊட்டிகள் இதயம் காக்கும் என வெள்ளைக்கார விஞ்ஞானிகள் இப்போது ஆமோதிக்கிறார்கள்!

வேகவைக்காத சின்ன வெங்காயம், வெந்த வெள்ளைப் பூண்டு இல்லாமல் உங்கள் அன்றாட உணவு இருக்க வேண்டாம்!

ரத்தக் கொதிப்பு நோயாளிகள் அவசியம் பின்பற்றவேண்டியவை!

45 நிமிடங்களில் 3 கி.மீ நடைப்பயிற்சி.

30 நிமிட உடற்பயிற்சி/சைக்கிள் ஓட்டல்.

25 நிமிடங்கள், யோகாவில் சூரிய வணக்கமும் ஆசனங்களும்.

15 நிமிடங்கள் பிராணாயாமம். அதிலும் குறிப்பாக, சீதளி பிராணாயாமம்.

20 நிமிடங்கள் தியானம்.

6-7 மணி நேரத் தூக்கம்.

மேலே சொன்னவற்றில் கடைசி பாயின்ட் கட்டாயம். சாய்ஸில் விடவே கூடாது. முந்தைய பயிற்சிகளில் நீங்கள் எத்தனை பின்பற்ற முடியுமோ, அத்தனை நல்லது!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 29, 2014 10:30 pm

நலம் 360’ - 8
மருத்துவர் கு.சிவராமன்,


நல்வாழ்வை நம்முள் பத்திரப்படுத்த குலேபகாவலி மூலிகை, நானோ துகள் மருந்து, எட்டுக் கை அம்மன் ஆசி... இவை மட்டும் போதாது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஐந்து முதலாளிகளும் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) நன்றாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வதே, இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதை. இயற்கையைச் சீண்டுவது எப்படி நமது சுற்றுச்சூழலைச் சிதைக்கிறதோ, அதேபோல நம் உடலின் உயிர்ச்சூழல் கடிகாரத்தைச் சிதைப்பதும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கியமானது, வயிற்று வலி!

வயிற்று வலியைப்போல் மண்டையைப் பிராண்டும் விஷயம் வேறு இல்லை. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்... என இருக்கும்போது அது 'வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா, இல்லை வேறு ஏதேனுமா?’ என, நம்மில் பலர் குழம்புவோம். 'அலுவலகத்தில் போன வாரம் வரை ஆரோக்கியமாக இருந்த சீதாராமன், 'நெஞ்சு கரிக்குது’னு சொல்லிக்கிட்டே சரிஞ்சு விழுந்து, மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே செத்துப்போனானே...’ என்று நினைக்கும்போதே, நெஞ்சு படபடத்து முகம், உச்சந்தலை எல்லாம் வியர்த்து, மருத்துவமனைக்கு ஓடும் இளைஞர்கள் இப்போது அதிகம்.

அங்கே, 'எவ்வளவு நாளா இப்படி இருக்கு? நெஞ்சு எலும்புக்குக் கீழா, மார்பின் மையப்பகுதியிலா... எங்கே எரிச்சல் இருக்கு? சாப்பிட நேரமாகும்போது, பசி வரும்போது... வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, வேலை, சாப்பாட்டுப் பழக்கம், இன்ஷூரன்ஸ் சங்கதிகள் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு, 'இது வயிற்றுப்புண் மாதிரி தெரியலை. பித்தப்பை கல்லா இருக்குமோ... எதுக்கும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமே!’ என்பார்கள். 'ஸ்கேனா..? இது கல்லுக்கா, 'கல்லா’வுக்கா?’ என நம்மில் பலர் துப்பறியும் சாம்பு ஆவோம்.

முன்பெல்லாம், 'இது பித்தப்பை வீக்கமா இருக்குமோ?’ எனச் சந்தேகம் வந்தவுடன், டாக்டர் முதலில் நமது வயிற்றைக் கைகளால் அழுத்தி பரிசோதனை செய்வார். நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக (அங்கேதான் ஈரல், பித்தப்பை எல்லாம் இருக்கின்றன) மருத்துவர் தனது விரல்களை அழுத்தமாக வைத்துவிட்டு, நோயாளியை மூச்சை நன்கு இழுத்து நிறுத்தச் சொல்வார். அப்போது பித்தப்பை வீக்கத்துடன் இருந்தால், அது முன்வந்து... கருவில் இருக்கும் குழந்தையின் தலைப்பகுதி தாயின் வயிற்றில் உணரப்படுவது போன்ற மெல்லிய உணர்வை மருத்துவர் விரலுக்குத் தரும். ஜான் பெஞ்சமின் மர்ஃபி என்கிற அமெரிக்க விஞ்ஞானி கண்டறிந்த இந்தச் சோதனைக்கு 'மர்ஃபி சோதனை’ என்று பெயர்.

மருத்துவப் படிப்பில் மர்ஃபி சோதனை செய்யத் தெரியாவிட்டால், கண்டிப்பாக பாஸ் கிடையாது. ஆனால், நாம் மர்ஃபி ரேடியோவை ஓரங்கட்டியதுபோல, நம் மருத்துவர்களில் பலர் மர்ஃபி சோதனையையும் ஓரங்கட்டிவிட்டார்கள். 'அதான் ஸ்கேனும் சி.டி-யும் இன்னும் துல்லியமாச் சொல்லுதே...’ என்ற நினைப்பு, கூட்டம், நேரமின்மை எனப் பல காரணங்கள்.

ஆனால், பித்தக்கல்லுக்கான காரணம் என்ன என்று இன்னும் மிகச் சரியாக, துல்லியமாக நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. எதைத் தின்றால், எந்த என்சைமை, எவ்வளவு சுரந்து, ஜீரணிக்க வேண்டும் என்ற புரோகிராம், பல மில்லியன் ஆண்டுகளாக நம் மரபில் பொதிந்துவைத்திருக்கிறது நம் ஜீரண மண்டலம். ஆனால், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனப் புதுபுதுசாகப் பல பூச்சாண்டிகள் சாப்பாடு மூலம் வருவதால், அந்த மரபு புரோகிராம் குழம்புகிறது. தவிர, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டி சாப்பிடாமல் அடம்பிடித்து மெலிவது, நார்ச்சத்து, மேக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்கள் ஆகிய முக்கியமான சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்ச்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, எல்லா சாமிக்கும் ஏதாச்சும் சுயநல அப்ளிகேஷன் போட்டு வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவு... எனப் பல காரணங்களை, பித்தப்பை அழற்சிக்கும் கல்லுக்கும் காரணங்களாகக் கூறுகிறது நவீன மருத்துவம்.

'நோய் முதல் நாடி’ பார்ப்பதுதான் வைத்தியம் என்பதில் வள்ளுவனுக்கு மட்டுமல்ல... யூகி முனிக்கும் ஹாரிசனுக்கும்கூட வேறுபட்ட கருத்துகள் கிடையாது. 'தொடர்வாத பந்தமிலாது குன்மம் வராது’ என வயிற்றுப்புண்ணுக்கு வாதத்தையும், விலாவுக்குக் கீழ் வலி தரும் இந்தப் பித்தக்கல் பிரச்னைக்குப் பித்தத்தையும் காரணமாகச் சொல்கிறது தமிழ் மருத்துவம். முதலில் மலச்சிக்கலை நீக்கி, உடலில் வாதத்தைக் குறையுங்கள். எண்ணெய் பலகாரங்களை அதிகம் எடுக்க வேண்டாம் என்பதோடு, பட்டினி முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்கவும் என்பதே நம் தமிழ் மருத்துவம் சொல்லும் பிரதானமான பரிந்துரைகள். கொஞ்சம் உற்றுப் பார்த்தால், யூகி முனியும் ஹாரிசனும் ஒரே புள்ளியில் நிற்பது புரியும்.

பித்தக்கல்லில் வகைகள் உண்டு. 'நிறையக் கொழுப்பு + கொஞ்சம் உப்பு’ அல்லது 'கொஞ்சம் கொழுப்பு + நிறைய உப்பு’ எனக் கல் ஆக்கம் இருக்கக்கூடும். சிறுநீரகக் கல்லையும் பித்தக்கல்லையும் நிறையப் பேர் குழப்பிக்கொள்வது உண்டு. பித்தப்பைக்குள் இருக்கும் இந்தக் கல்லை, சிறுநீரகக்கல்போல கரைப்பது மிகக் கடினம். பித்தப்பைக்கல்லை மட்டும் உடைத்து துகளாகும் ஒலிக்கதிர் சிகிச்சை பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. மொத்தமாக பித்தப்பையையே எடுப்பதுதான் அதிகம் நடக்கிறது. எந்தப் பிரச்னையும் கொடுக்காமல் 1 செ.மீ-க்குக் குறைவாக 'தேமே’ என ஓரமாக இருக்கும் கல்லை அகற்றுகிறேன் என்று பித்தப்பையையே அகற்றுவது, பல நேரங்களில் அவசியம் இல்லாதது. 'அந்தப் பக்கமா குடல் ஆபரேஷன் பண்றோமே... கல் உள்ள இந்தப் பையையும் சேர்த்து எடுத்திடலாமே!’ என்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அதே சமயம், கல் கொஞ்சம் பெரிதாக இருக்கும்போதோ, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளியாக இருக்கும்போதோ, பித்தப்பை நாளப் பகுதியில் (DUCT) கல் சிக்கி அடைத்திருக்கும்போதோ, குடும்பத்தில் புற்றின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்போதோ அல்லது ஈரல் நொதிகள் பெரிதாக மாற்றம் பெற்றிருக்கும்போதோ, குடும்ப மருத்துவர் ஆலோசனைக்குப் பின்னர் கல்லை அகற்றுவதில் தவறும் இல்லை. 'அய்யோ... பித்தப்பையை எடுத்துட்டா, பித்தம் சுரக்காமல் போய்விடுமே!’ என்ற அச்சமும் தேவை இல்லை. ஏனென்றால், பித்தப்பை என்பது, பித்தம் சுரக்கும் பை அல்ல; ஈரல் சுரக்கும் பித்தத்தைச் சேகரித்து வைத்து, செரிமானத்துக்குத் தேவையானபோது குடலுக்குத் தள்ளிவிடும் அமைப்பு.

ஒருபக்கம் அப்பெண்டிக்ஸ், அடினாய்டு, கருப்பை, பித்தப்பை போன்றவை, அதில் ஏற்படும் சிறு சிரமங்களுக்கு எல்லாம் 'என்னத்துக்கு பிரச்னை?’ என்றோ, 'அதான் இன்ஷூரன்ஸ் இருக்கே... எடுத்துடுவோம்’ என்ற மேதாவித்தனத்திலோ அறுவைசிகிச்சையில் நீக்கும் போக்குகள் அதிகரித்திருக்கின்றன. இன்னொரு பக்கம் வளர்ச்சியடைந்த புற்று முதலான அறுவைசிகிச்சை அவசியம் தேவைப்படும் நிலையில் தாமதித்து வருந்தும் சம்பவங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. எனவே, உடல் நலம் பராமரிப்பு விஷயத்தில் நிறைய அக்கறையும், விசாலமான பார்வையும் கொண்டிருப்பதே புத்திசாலித்தனம்.

சில நேரம் ஆதரவாகக் கட்டிப்பிடிப்பதன் மூலம் நோயைக் குணமாக்க முடியும். கைப்பற்றி அழுத்தி, தோள் சாய்த்துத் தட்டிக்கொடுத்தும் குணமாக்க முடியும். மடியில் உட்காரவைத்து வானம் காட்டி வாய் பிளக்கவைத்து அளிக்கும் ஒரு வாய் உணவின் மூலமும் குணமாக்குவது சாத்தியம். நெடுநாள் அனுபவ மூலிகை மருந்தின் மூலம் முற்றிலுமாகத் துடைப்பதும் சாத்தியம். நேற்றைய விஞ்ஞானம் ஆய்ந்து சொன்ன நவீனத்தின் மூலம் வீழ்த்துவதும் சாத்தியம். என்ன... 'என் நோய் இதில் எப்படிக் குணமாகும்?’ என்றெல்லாம் ஆய்வு செய்ய நேரம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் நிற்கும் சாமானியனின் நோயைத் துல்லியமாகக் கணித்து, கட்டிப்பிடிக்கணுமா... கத்தியை எடுக்கணுமா என்பதை புத்தியுடன் கொஞ்சம் அறத்தையும் தீட்டி தீர்மானிக்க வேண்டும் மருத்துவ உலகம். அவ்வளவே!

- நலம் பரவும்...

வயிற்று வலிக்கான காரணங்கள்!

நடுவயிற்றிலும், வலதுபக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப்புண்ணாகவோ, பித்தக்கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.

இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலி உண்டாக்கலாம்.

நடுவயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப்புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.

விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம்.

பெண்களுக்கு அடிவயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடிவயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.

இதைத் தாண்டி அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வலிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிக்கும் 'ஒரு சோடா குடிச்சா, சரியாப் போயிடப்போகுது’ என்ற அலட்சியமும், 'ஓ பகவான் கூப்பிட்டுட்டார்’ என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம்!

வருமுன் காக்க...

பித்தப்பைக் கல் வராது தடுக்கவும், சிறிய கல்லாக இருந்தால் சிரமம் அளிக்காது இருக்கவும், பின்வரும் உபாயங்கள் உதவும்.

கரிசலாங்கண்ணி, மலச்சிக்கலை நீக்கி, பித்தத்தைத் தணிக்கும் மூலிகை. இதில் மஞ்சள் பூ, வெள்ளைப் பூ என இரண்டு வகை உண்டு. வெள்ளைப் பூ வகைதான் இதற்குச் சிறப்பு. இந்தக் கீரையை விழுதாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து, ஒரு மாத காலம் சாப்பிடலாம்.

ஒரு சாண் அளவு வளர்ந்திருக்கும் கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, அரைத்து மோரில் இரண்டு சுண்டைக்காய் அளவு கலந்து சாப்பிடலாம்.

சீரகத்தை கரும்புச் சாறு, கீழாநெல்லிச் சாறு, எலுமிச்சை சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் ஊறவைத்து (ஒவ்வொரு நாள் ஒவ்வொன்றாக ஊறவைத்து) வெயிலில் நன்கு உலர வைக்கவும். பின் மிக்ஸியில் பொடித்து காலையில் இரண்டு டீஸ்பூன், மாலை இரண்டு டீஸ்பூன் என உணவுக்கு முன்னதாகச் சாப்பிடலாம்.

வாரம் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடலில் பித்தம் தணித்து கல் வராது தடுக்க உதவும். கல் வந்தவர்கள் தலைக்குக் குளிர்தாமரைத் தைலம், கீழாநெல்லித் தைலம், காயத்திருமேனித் தைலம்... என இவற்றில் ஒன்றைத் தேய்த்துக் குளிப்பது நலம்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Sat Aug 30, 2014 1:32 pm

நலம் 360’ - 9
மருத்துவர் கு.சிவராமன்
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P30c
அலர்ஜி... சமீபமாக உடல்நலம் குறித்த உரையாடலில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம்! 'எனக்குக் கத்திரிக்காய் அலர்ஜி... கருவாடு அலர்ஜி... கடலை அலர்ஜி...’ என ஆரம்பித்து, மாடிக் காற்று அலர்ஜி, பருவ மழை அலர்ஜி என ஒவ்வாமைக்கான காரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 'குழந்தைக்கு பால் அலர்ஜியாம். அதனால் நான் இப்போ தாய்ப்பால் கொடுக்கிறதே இல்லை..’ என்பது இந்தப் பட்டியலில் பதறவைக்கும் பயங்கரம். உலக அளவில் இந்த அலர்ஜி பிரச்னை குழந்தைகளை அதிகம் படுத்துவதாக, குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய தேசங்கள் புலம்புகின்றன.

சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமைக் கசக்கல் எனத் தொடங்கி, சில நேரங்களில் தடாலடியாக உதடு, முகம் வீங்குவது, சிறுநீர் தடைபடுவது, மூச்சிரைப்பு... என நபருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவர் சாப்பிட்ட, முகர்ந்த பொருளைப் பொறுத்தும் அவதாரம் எடுக்கும் இந்த அலர்ஜி, சில நேரங்களில் Anaphylactic shock எனும் தடாலடி மரணத்தைக்கூட தரும் அபாயம் உடையது. இந்த ஒவ்வாமையால், பின்னாளில் ஆஸ்துமா, சைனசைடிஸ், எக்சிமா போன்ற பல நோய்களை வரவழைக்கும் வாய்ப்பும் உண்டு. ஒவ்வாமையால் வரும் தோல் நோயான ATOPIC DERMATITIS, வெளிநாட்டில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளை வாட்டும் மிக முக்கியமான தோல் அலர்ஜி தொந்தரவு. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நோய்க்கூட்டம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

துடைப்பத்தை வைத்துப் பெருக்கி, தூசி தட்டிய காலத்தில் இந்த அலர்ஜி பிரச்னை அவ்வளவாக இல்லை. 'குனியாமல் நிமிராமல் வீட்டுக் குப்பையை உறிஞ்சி சுத்தம் செய்யலாம்’ என மோட்டார் துடைப்பத்தை வாங்கிய பின், 'எங்க மிஸ் சொன்னாங்க’ என, குழந்தைகள் மணிக்கு ஒரு தடவை கைகளை சானிடைசர் வைத்துக் கழுவ ஆரம்பித்த பின், சாணம் கரைத்து முற்றம் கழுவித் துடைத்ததை மறந்து, தொலைக்காட்சி சேனல் விளம்பரங்கள் பரிந்துரைத்த கலர் கலர் ரசாயனக் கலவைகளால் தரையை மெழுகத் தொடங்கிய பின், 'நாங்க உலகத் தரக்கட்டுப்பாடுகளில் ஒன்றுவிடாமல் பின்பற்றுகிறோமாக்கும்’ என உதார்விட்டு விற்கப்படும் உணவுப் பண்டங்களால் சந்தையை நிரப்பிய பின்... 'அலர்ஜி’ அதீதப் பயம் காட்டுகிறது. ஏன்?
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P30d
'சுத்தம் சோறு போடும்’ என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு 'அதிதீவிர சுத்தம் சொறி, சிரங்கை உண்டாக்கும்’ என்பதும் உண்மையோ என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறது மேலை நாட்டு அறிவியல். செயல்திறன் முடக்கப்பட்ட கிருமிகளை தடுப்பூசிகளாக உடலுக்குள் செலுத்தி, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை எப்படி உருவாக்குகிறார்களோ, அதேபோல நம்மைச் சுற்றி இருக்கும் நுண்ணுயிரிகளில் சேட்டைக்காரருக்கு எதிராக மட்டும் வேலி கட்டும் வேலையை, நம் உடல் தானாகவே செய்துவிடும். ஆனால், அது புரியாமல் நுண்ணுயிரிகளின் வாசம் படாமல், 'இன்குபேட்டர் கவனிப்பில்’ குழந்தைகளை வளர்க்கும்போது, அவர்களது நோய் எதிர்ப்பாற்றல், யார் எதிரி எனத் தெரியாமல் கன்னாபின்னாவென வாள் சுழற்றத் தொடங்குவதே அலர்ஜி பெருக்கத்துக்கான அடிப்படைக் காரணம். அதனால்தான், அமோனியாவைப் பார்த்தால் மூச்சை இறுக்கி அதனை உடம்புக்குள் நுழையாது தடுக்கவேண்டிய நோய் எதிர்ப்பாற்றல், ஆற்று மீனுக்கும், கடலை உருண்டைக்கும், காற்று, தூசிக்கும்கூட மூச்சை இறுக்கத் தொடங்குகிறது.

'அது சரி... 'அதிசுத்தமாக’ இல்லாதவர்களுக்கும் அலர்ஜி வருகிறதே’ என்று கேட்கிறீர்களா? சரிவிகித உணவு சரியாகக் கிடைக்காதவருக்கும், சாப்பிடாதவருக்கும் அலர்ஜி அட்டூழியம் அதிகம். அதற்கு மிக முக்கியமான காரணம், 'எங்கள் நாட்டுக் குப்பைகள், உங்கள் நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் கொட்டப்படும்’ என வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் போடும் வணிக ஒப்பந்தங்களும் ஒரு காரணம். சூழல் சிதைவைத் தரும் கண்ணாடி கம்பெனி, கார் கம்பெனி, கலர் கலரான சாயப்பூச்சைப் பயன்படுத்தும் உள்ளாடை தயாரிப்பு கம்பெனி, துருப்பிடிக்காமல் இருக்க இயந்திரங்களுக்குப் பூச்சு போடும் கம்பெனி, அணுவைப் பிளக்கும் கம்பெனி, அணுவை அளக்கும் கம்பெனி... என அத்தனை கம்பெனிகளையும், 'வேலைவாய்ப்பு வருது; அந்நிய செலாவணி வருது; அழகழகான கட்டடம் வருது’ என்று சொல்லி இங்கே செயல்பட அனுமதிப்பதும் பிரதான காரணம். விவசாய நிலங்களைப் பறித்து அவர்களுக்குக் கொடுத்து, 'இங்கே வரி கட்டாமல் நீங்க ஆட்டம் போடுங்க. காலத்துக்கும் உங்களுக்குக் கூலிக்கு வேலை பார்க்க அழுக்கு வேட்டிப் பாமரனில் இருந்து, ஆடி கார் அறிவாளி வரை நாங்கள் தருகிறோம்’ என்று சொல்லி சிவப்புக் கம்பளம் விரிக்கிறோம். அவர்களும் சத்தமே இல்லாமல் நம் தாய் மண்ணில், காற்றில், நீரில் நச்சுக்களைக் கலக்க, அது அலர்ஜியை பல வடிவங்களில் பரிசளிக்கிறது.

ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லியையும் அள்ளித் தெளித்ததில் உணவு, காய்-கனி கூட்டம் அத்தனையிலும் நச்சுத்துணுக்குகள். போதாக்குறைக்கு வாசம் தர, வேஷம் கட்ட, வணிகப் போட்டியில் பிற சின்ன வணிகர்களை நசுக்க என, ரசாயனம் கலந்த நச்சு உணவுகளை வீதிவீதியாக விற்கும் பன்னாட்டுத் துரித உணவகங்கள் வேறு. விளைவு..? அத்தனை காய்-கனிகளிலும் அலர்ஜி அளிக்கும் சாத்தான்கள்.
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P30e
சூழல் அழுத்தத்தில் கடைசிக் குரங்கில் இருந்து முதல் மனிதன் வருவதற்கு, 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆனதாம். இத்தனைக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மரபணுக்களே. ஆனால், இன்று தவளையின் மரபணுவை தக்காளியிலும், விஷம் கக்கும் நுண்ணுயிரியின் மரபணுவை கத்திரியின் மரபணுவிலும் சில ஆண்டு ஆய்விலேயே ஒட்டி வெட்டி, 'புது ஜந்து’ படைக்கிறார்கள் கலியுக பிரம்மாக்கள். 'லேசாத்தான்யா அரிக்கும்... வேற ஒண்ணும் செய்யாது’ என எதிர்ப்பு எச்சரிக்கைகளையும் மீறி, 'ஓர் உலகம்... ஒரு கம்பெனி... ஒரே விதை’ என்ற கனவுடன் உழைக்கிறார்கள். வருங்காலத்தில் மரபணு பயிர்கள் என்னவிதமான அலர்ஜியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்து (இருந்தால்..?) கவனிக்க வேண்டும்.

இப்போதைக்கு அலர்ஜியின் பிடிகளில் இருந்து விலகி இருக்க ஒரே வழி, கொடூரத் தொழில்நுட்பத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் விலகி, இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் முடிந்த வரை பசியாற்றிக் கொள்வதுதான். எந்தக் காரணம்கொண்டும், லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர் தெரியாத ரசாயனப் பெயர்களைப் படித்துவிட்டு, 'டி.வி-யில இதைக் குடினு சொல்றவுக வெள்ளையா இருக்காங்க. சூட், கோட்லாம் போட்டிருக்காங்க. அவுக சொன்னா, சரியாத்தான் இருக்கும்’ என, பழக்கம் இல்லாத புதிய கலவை உணவை உள்ளே அனுப்பாதீர்கள். ரசாயனம் செறிந்த துரித உணவுகளும், கெமிக்கல் பூச்சுத் தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் 'லைன் வீடு’ அமைத்து சந்தோஷமாகக் குடியிருக்கும் நுண்ணுயிர் கூட்டத்துக்குக் குண்டு வைக்கும். அதுவரை உடம்பின் பாதுகாவலனாக இருந்த அவை, குழம்பித் தெறித்து ஓடுவதில், ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை முகத்தின் எலும்புப் பதிவுகளில் கேம்ப் அடிக்கும்போது சைனசைடிஸ்; மூச்சுக்குழல் பாதையில் மணல் குன்றமைத்து குத்தவைக்கும்போது ஆஸ்துமா, தோலுக்கு அடியில் 'கொடி நடை’ நடத்தும்போது எக்சிமாவோ, அடோபிக் டெர்மடைடிஸோ?
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P30
காரத்துக்கு மிளகு இருந்த வரை, இனிப்புக்குப் பனை வெல்லமும் தேனும் இருந்த வரை, புளிப்புக்கு என நம் பாரம்பரியப் பழம்புளியான குடம் புளி இருந்த வரை அலர்ஜி இருந்ததாக மருத்துவ இலக்கியச் சான்றுகள் இல்லை. 'பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என மிளகைப் பாடியது அதன் நச்சு அகற்றும் உச்சவீரியத்தால்தான். எந்த அலர்ஜியாக இருந்தாலும் நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். அலர்ஜியை தடாலடியாக ஒருசில நிமிடங்களில் நசுக்கும் ஸ்டீராய்டுகள்போல் இல்லாமல், மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சீந்தில் கொடி, வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. ஆனால், அசாதாரண அளவில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி அலர்ஜி சைனசைடிஸை அறுத்தெரிகிறது என்று கண்டுபிடித்திருக்கிறது நவீன அறிவியல். அருகம்புல், நச்சு நீக்கி அலர்ஜியைப் போக்கும் எளிய புல். இது, கரப்பான் எனும் எக்சிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் 'அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமான மருந்து. ATOPIC DERMATITIS எனும் அலர்ஜியில் சருமத்தின் நிறம் மிகக் கறுத்து அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து.

அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்போ, வஞ்சிர மீன் குழம்போ ஆகாது. நார்ச்சத்தைக் நடுவில் குவித்து, விதவிதமான நிறமிச் சத்தை தோலில் சேகரித்து, சதைப்பற்றின் ஊடே சாமர்த்தியமாக பல உயிர்ச்சத்தை ஒளித்துவைத்திருக்கும் பழங்கள் அலர்ஜியில் கறுத்தத் தோலை மீட்கும் மீட்பர்கள். அதே சமயம் புளிப்பான ஆரஞ்சு, திராட்சையை தும்மல் உள்ளோர், கரப்பான் உள்ளோர் தவிர்க்கவும். நம் ஆயா அறிந்திராத சோயா, நம் பாட்டன் பார்த்திராத காளான் சில குழந்தைகளுக்கு அலர்ஜி தரக்கூடியன. அலர்ஜி உள்ளோர் இவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நலம். 'மிஸ் வேர்ல்டு’கள் மாறும்போதெல்லாம் குளிக்கும் சோப்பை மாற்றுவது உங்கள் சருமத்தின் இயல்பையும் மாற்றிவிடும்.

இன்றைக்கு சோயா, நிலக்கடலை, மீன், பால்கூட அலர்ஜியாகப் பார்க்கப்படுவதுபோல, நாளை நாம் அருந்தும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும்கூட அலர்ஜியாகக்கூடும். அப்போது தண்ணீர் தொட்டியை கையில் வைத்துக்கொண்டும், ஆக்சிஜன் புட்டியை முதுகில் கட்டிக்கொண்டும் திரியவேண்டி இருக்கும். அந்தத் தருணங்களில் கணக்குப் பார்த்து மூச்சுவிட முடியாது; காதல் களிப்பும் செய்ய முடியாது. 'இந்த உலகம் எனக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிர்களுக்குமானது. அவை அனைத்தையும் போற்றி மகிழவே மனிதனுக்கு ஆறாம் அறிவை இயற்கை வழங்கி இருக்கிறது’ என்ற சிந்தனையே ஒவ்வாமையை ஓரங்கட்டுவதற்கான முதல் செயல்!

- நலம் பரவும்...

சிறுதானியங்கள் அலர்ஜியை உண்டாக்குமா?

சிறுதானியங்களைச் சாப்பிட்டால் அலர்ஜி வருமா.. அரிப்பு வருமா.. தோல் நோய் தருமா? எனக் கேள்விகள் அதிகரிக்கின்றன.

சருமத்தில் உண்டாகும் ஒவ்வாமை நோயில் ஒரு வகையை 'கரப்பான்’ என்பார்கள். கரப்பான் இருந்தால் சோளம், கம்பு, திணை ஆகியவற்றை நோய் நீங்கும் வரை தவிர்க்கலாம். சித்த மருத்துவ நூல்கள்... சோளம், கம்பு, வரகு ஆகிய தானியங்களை, கரப்பான் நோய் உடையோரும், அரிப்பைத் தரும் பிற தோல் நோயினரும் தவிர்ப்பது நலம் என்கின்றன. நவீன உணவு அறிவியல், இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நில உடைமைக்காரர்கள், 'புஞ்சை நில தானியம் உசத்தி கிடையாது’ என்று விதைத்த நெடுநாள் பொய்யை எடுத்துக்கொண்ட, இடைக்காலச் செய்தியாகவும்கூட இது இருக்கலாம். குளூட்டன் சத்து உள்ள கோதுமையையும் கோதுமை சேர்ந்த பேக்கரி உணவுகளையும் தோல் நோயினர் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அலர்ஜி பிரச்னை உள்ளோர் பொதுவாக புளிப்பு சுவை உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. முட்டை, மீன், கருவாடு, நண்டு, இறால் கூடாது. இறால், தடாலடி அலர்ஜியை சிலருக்கு வரவைக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் அப்படி ஓர் அலர்ஜி போக்கு இருந்தால், மேற்படி வகையறாக்களை அடுத்த தலைமுறை, கூடுதல் கவனத்துடன் நிறைய மிளகு தூவி பயன்படுத்திப் பழகலாம்.

அலர்ஜியைப் போக்க சில கைப்பக்குவங்கள்

 மேலுக்கு சோப்பு தேய்த்துக் குளிக்காமல், 'நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது சருமத்தை அலர்ஜியில் இருந்து காக்க உதவும்.

 வேப்பங்கொழுந்து (1 ஸ்பூன்), ஓமம் (1/4 ஸ்பூன்), மஞ்சள்தூள் (1/2 ஸ்பூன்), கருஞ்சீரகம் (1/2 ஸ்பூன்) சேர்த்து நீர்விட்டு அரைத்து உருட்டி, சுண்டைக்காய் அளவுக்கு, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஓரு நாள் என மூன்று முறை கொடுக்க, வயிற்றுப் பூச்சி நீங்கி அரிப்பு குறையும்.

 அருகம்புல்லை (1 கைப்பிடி) ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலையைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அரை டம்ளராக வற்றவைத்து, பின் வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், 'அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Sat Aug 30, 2014 1:34 pm

நலம் 360’ - 10
மருத்துவர் கு.சிவராமன்
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P68c
தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள். அதனால்தான் தலைவலிக்கான காரணம் தேடுவது, மருத்துவருக்கு தலைவலி தரும் விஷயம் என்பார்கள். 'இளங்கலை மருத்துவப் படிப்புகளில் 4 மணி நேரம்தான் தலைவலியைப் பற்றி படிக்கிறார்கள். இன்னும் அதைப் பற்றி ஆழமாகப் படித்தால், உலகத்தில் 47 சதவிகிதம் பேருக்கு வருடத்தில் ஒருமுறையேனும் வதைக்கும் தலைவலியை விரட்ட உதவும். நண்பகல் 1 மணி ஷோவுக்குச் சென்று, செம போர் படம் பார்த்துவிட்டு வியர்வை கசிய, தியேட்டர் இருட்டில் இருந்து சுள்ளென அடிக்கும் வெயிலில் தலைகாட்டும்போது தலை வலிக்கும். கொஞ்சம் மோர் குடித்து ஒரு மணி நேரம் உறங்கினால், அந்தத் தலைவலி நீங்கும். 'கொஞ்ச நாளாவே தலை வலிச்சுட்டே இருக்கு டாக்டர்’ என மருத்துவரிடம் சொன்னால், முழங்கையில் துணி கட்டி, பிரஷர் பார்ப்பார். அது லேசாக எகிறி இருக்க, அதற்குப் பின்னதான ரத்த சோதனையில் உப்புக்கள் ஓரவஞ்சனை காட்டியது புரியும். பிறகு, சிறுநீரக டாப்ளர் ஸ்கேன் செய்கையில் தலைவலிக்குக் காரணம், சிறுநீரகத்துக்குப் போகும் ரத்தக்குழாய் சுருக்கம் எனத் தெரியவரும். அப்போதுதான் நீண்ட மருத்துவம் அவசியப்படும்.

'காதலிச்சப்போ 'சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா மாதிரி இருந்த பொண்ணு, இப்போ 'முதல் மரியாதை’ வடிவுக்கரசி மாதிரி ஆகிட்டாளே’ என எப்போதும் மனைவி பற்றி பொருமுவார்கள் ஆண்கள். அதே சமயம், 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா மாதிரி நம்மைச் சுத்திச் சுத்திக் காதலிச்சானே... இப்போ

'நான் கடவுள்’ ஆர்யா மாதிரி ஆகிட்டானே’ எனக் குழம்பிப் புலம்புவார்கள் மனைவிகள். 'ஒண்ணு... உங்களுக்குக் கொடுத்த டார்கெட்டை முடிங்க. இல்லைனா பேப்பரைப் போட்டுட்டு ஒரேயடியாக் கிளம்புங்க!’ என்று அலுவலகத்தில் அல்லோலகல்லோலப்படுவார்கள் ஊழியர்கள், 'அதுக்குள்ள ஒரு மாசம் ஆயிடுச்சா? இன்னும் ரெண்டு நாள்... வலியில செத்தேன்’ என மாதவிடாய் சமயத்தில் பதறும் பெண்கள்... என சமூகத்தின் பல தரப்புக்கும், தலைவலி என்பது அவர்களின் அன்றாடங்களைச் சிதைக்கும் பிரச்னை.

சாதாரண தலைவலிக்கு தேவை இல்லாமல் எடுக்கப்படும் சோதனைகள் இப்போது ஏராளம்.இது சாமான்யனின் புலம்பல் அல்ல. JAMA INTERNAL MEDICINE எனும் பிரபல மருத்துவ இதழும் இதே கருத்தைச் சொல்கிறது. தலைவலிக்காக எடுக்கப்படும் ஸ்கேன்களில் 13 சதவிகிதம் மட்டுமே, ஏதேனும் அசாதாரண முடிவுகளைக் காட்டுகின்றன. அந்த அசாதாரணங்களும்கூட பெரும்பாலும் மூளைக்கட்டி அல்லது மூளை ரத்தக்கசிவு போன்ற அபாயங்களைக் காட்டுவது இல்லை. சமயங்களில் தலைவலிக்குப் பார்த்த ஸ்கேனில், கொஞ்சம் சைனசைட்டிஸ் தெரியும். கொடுத்த காசுக்கு இதாவது தெரியவந்ததே எனத் திருப்தியடைகிறார்கள் அப்பாவிகள். விபத்துகளின்போது எடுக்கப்படும் மூளை ஸ்கேன்களைத் தவிர, தலைவலிக்கு என எடுக்கப்படும் ஸ்கேன்களால் பெரும்பாலும் பிரயோஜனம் கிடையாது.

'தலைவலிக்கான காரணிகளைச் சரியாகக் கணித்து மருத்துவம் செய்ய வேண்டுமே தவிர, ஸ்கேனிங் செய்வது சரியான தீர்வு அல்ல’ என்கிறார் Headaches: Relieving and preventing migraine and other headachesஎனும் மருத்துவ நூலின் ஆசிரியரும் பிரபல நரம்பியல் மருத்துவருமான ஸ்பெய்ரிங்க்ஸ். ஆதலால், இனியேனும் 'ஆடித் தள்ளுபடி விலையில் அட்டகாச ஸ்கேனிங்’ விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம். உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ஸ்கேன் செய்வது பற்றி தீர்மானியுங்கள். ஏனெனில், தேவையற்ற ஸ்கேன் விடும் எக்ஸ்ரே கதிர்கள் அநாவசியமாக மூளைக்குள் ஊடுருவது அவ்வளவு நல்லது அல்ல. ஒரு எக்ஸ்ரேயின் ஓரிரு விநாடி கதிர்வீச்சுக்கும், மூன்று நிமிட சி.டி ஸ்கேன் கதிர்வீச்சுக்கும் பெரும் அளவு வேறுபாடு உண்டு. உங்களைச் சுற்றி இருக்கும் மின்னணுப் பொருட்களின் மூலம் நீங்கள் இரண்டு வருட காலத்தில் சராசரியாக எதிர்கொள்ளும் கதிர்வீச்சின் அளவை, ஒற்றை சி.டி ஸ்கேன் தரக்கூடும்.

ரொம்பவே மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் யுவதிகளுக்கும் அதிகம். முக எலும்பின் சைனஸ் பகுதிகளில் நீர் கோத்து, கொஞ்ச நாளில் சீழ் கோத்து வரும் இந்த சைனசைடிஸ் தலைவலியைப் போக்க, நீர்க்கோர்வை மாத்திரையை நம்மவர்கள் பயன்படுத்திய வரலாறும் உண்டு. மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய அந்த மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால், தலைவலி காணாமல்போகும். கூடவே நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகு கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும் வாழ்வியல் கலாசாரம். கூடவே, சீந்தில் சூரணம் முதலான சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சித்த மருந்துகள் ஏராளம் நம்மிடம் உண்டு. சீந்தில் கொடியை, சித்த மருத்துவத்தின் மகுடம் எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகம் வீங்கவைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, சும்மாங்காட்டி அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது.

தலைவலி வராதிருக்க நம் வாழ்வியல் சொன்ன மிக முக்கியப் பக்குவம் எண்ணெய்க் குளியல். 'அட... தலைக்குச் சும்மாவே குளிக்க முடியலை. இதுல எண்ணெய்க் குளியல் வேறயா?’ என்போருக்கு ஒரு சேதி. சைனசைட்டிஸோ, மைக்ரேனோ வாரம் இரு முறை சுக்கு தைலம் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். வலி மெள்ள மெள்ள மறைவது புரியும். பொதுவாக, வலிக்கு என மாத்திரைகள் அதிகம் எடுப்பது வயிற்றையும் குடலையும் புண்ணாக்கி, பின்னாளில் ஈரலும் சிறுநீரகமும் பாதிக்கும். குண்டூசியாகக் குத்தும் மைக்ரேன் தலைவலியைத் தீர்க்க முடியாமல் தற்கொலை வரை சிந்திப்போரும் உண்டு. அந்த நேரத்தில் வெளியில் கொஞ்சம் சத்தமாக அடிக்கும் ஹாரன், செல்லக் குழந்தையின் சின்னச் சிணுங்கல், கணவரின் அகஸ்மாத்தானக் கேள்வி, ஜன்னல் வழி பளீர் வெளிச்சம் எல்லாமே அவர்களை ஆங்கார ரூபி ஆக்கும்.

மைக்ரேன் எனும் இந்தப் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. சில நேரங்களில் நவீன வலிநிவாரணிகளைக் காட்டிலும் சிறந்த தேர்வாக இருக்கும் இஞ்சி, மைக்ரேனைக் கொஞ்சிக் குணமாக்குகிறது என, பல மருத்துவக் கட்டுரைகள் சான்று அளிக்கின்றன. சனிக்கிழமையானால் சுக்கு வெந்நீர் சாப்பிட்டு வந்தவர்கள் நாம். இப்போது சனிக்கிழமையானால் புதுசாகத் திறந்த ஹோட்டலில், பழசாகச் செய்த உணவைத் தின்றுவிட்டு வருபவர்கள் ஆகிவிட்டோம். விளைவு... பித்தம் கூடி, அது மைக்ரேன் தலைவலியில் கொண்டுவிடுகிறது. இது வராதிருக்க சாதாரண இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டிகள் பேட்டன்ட் செய்யாத பொக்கிஷம் நம் கைவசம் இருக்கிறது! (செய்முறை விவரம் பெட்டிச் செய்தியில்)

மூன்று வயசு பாப்பா, 'லைட்டா தலைவலிக்குது மிஸ்’ எனப் பள்ளியில் சொல்ல, அங்கு இருந்து வந்த தகவலில் அலுவலக வேலையைப் பாதியில் போட்டுவிட்டு அரக்கபரக்க ஓடி, குழந்தையை வீட்டுக்குக் கூட்டிவந்தால், 'அப்பா... உன் செல்போன் குடு. கேம்ஸ் விளையாடணும்’ எனச் சொல்லும் குழந்தையைப் பார்க்கையில் நமக்கு தலைவலிக்கும். பொதுவாக குழந்தைகள் அன்பான அரவணைப்பை எதிர்பார்த்து தலைவலி, வயிற்றுவலி எனச் சாக்கு சொல்வதும் உண்டு. 'அடடா... உன்னை தீம் பார்க் கூட்டிட்டுப் போகலாம்னு இருந்தேனே... தலை வலிச்சா வேண்டாம்’ எனச் சொல்லிப் பாருங்கள். குழந்தைகளின் தலைவலி சட்டெனக் காணாமல்போகும். ஆனால், இந்த மாதிரியான காரணங்கள் இல்லாமல் குழந்தைகளுக்கு அடிக்கடி தலை வலித்தால், பார்வைத்திறன், வயிற்றுப்பூச்சிகள், காது-தொண்டைப் பகுதிகளில் சளி என அவற்றை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி சரிசெய்ய வேண்டியிருக்கும். இருசக்கர வாகனத்தில் அதிகம் பயணிக்கும் நபருக்கு, கழுத்து எலும்பின் தேய்வில் அல்லது அந்தப் பகுதி முதுகுத்தண்டுவடத் தட்டின் மிக லேசான விலகல் அல்லது வீக்கத்தில்கூட பின் மண்டை வலிக்கலாம். இதற்கு சரியான இயன்முறை சிகிச்சை, வர்ம சிகிச்சை, எண்ணெய்ப் பிழிச்சல் என்ற புற மருத்துவ முறைகளே போதும்.

வயதானவருக்கு வரும் நாள்பட்ட மைக்ரேன் தலைவலியை அலட்சியப்படுத்தக் கூடாது. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ரத்தக்கொழுப்பு பாதித்தவர்களுக்கு வரும் தலைவலி குறித்தும் கூடுதல் எச்சரிக்கை தேவை. மிகச் சாதாரணமாகத் தலைவலியை நாம் அலட்சியப்படுத்துவது, ரத்தக்கொதிப்பு நோயில்தான். காலையில் எழுந்தவுடன் தலை வலித்தால் ரத்த அழுத்த அளவைத்தான் முதலில் பரிசோதிக்க வேண்டும். நிறையப் பேர், வலியாகக் காட்டும் இந்த உடல்மொழியைக் கவனிக்கத் தவறவிட்டு, தடாலடியாக பக்கவாதம் வரும்போதோ, மாரடைப்பு தாக்கும்போதோதான், 'அடடா... அப்போ அதுக்குத்தான் தலை வலிச்சதா?’ என யோசிப்பது உண்டு.

தூசி, புகை, காற்றோட்டம் இல்லாத புழுக்கம், அதிக வெளிச்சம், பசி, தண்ணீர் குறைவு, தாழ் சர்க்கரை, சோர்வு, சரியான இருக்கையில் உட்காரத் தவறுவது, மனப் பதற்றம், மன அழுத்தம், கவலை... என, தலைவலிக்குப் பல பின்னணிகள் உண்டு. ஆனால், அத்தனையும் பெரும்பாலும் முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை. தலைவலி என்றவுடன் கூகுள் டாக்டரிடம் குசலம் விசாரித்தால், அது அஸ்ட்ரோசைட்டோமா, கிளையோமா போன்ற புற்றுத்தலைவலி விவரங்களைத் தந்து கலவரப்படுத்தும். பயப்படாதீர்கள். 'போன மாசம் ப்ளஸ் டூ எழுதினானே பையன்... என்ன மார்க் வாங்கினான்? பொண்ணுக்கு எப்போ கல்யாணம்? வேலை... வேலைனு அலைஞ்சது போதும்... வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு நாலு ஊருக்குப் போயிட்டு வாங்க!’ எனக் கொஞ்சம் மருந்தோடு கூடுதல் கரிசனம் காட்டும் உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரிடம், வலியை விவரியுங்கள். உங்களின் எந்தத் தலைவலிக்கும் பூரண குணம் நிச்சயம்!

- நலம் பரவும்...

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்!

* 6-7 மணி நேரமாவது தடை இல்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது...

* 'இன்னைக்கு மதியம் 12 மணி முதல் சாயங்காலம் 6 மணி வரை தூங்குங்க. நாளைக்கு காலையில 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தூங்கலாம்’ என, பன்னாட் டுக் கணினி கம்பெனி சொல்பேச்சுக் கேட்டு, மாறி மாறித் தூங்கும் போது...

* காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது...

* தொல்பொருள் ஆய்வாளரிடம் சிக்கிய ஓலைச்சுவடிபோல, பர்ஸில் வைத்திருக்கும் 15 வருடங்களுக்கு முந்தைய பிரிஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது...

* சிங்கப்பூரில் சீப்பாகக் கிடைக்கும் என வாங்கிவந்து பரிசளிக்கப்பட்ட 'சென்ட்’டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது...

* ஊட்டி, கொடைக்கானலில், ஊர்சுற்றலில், பொட்டிக்கடையில் விற்கும் குளிர் கண்ணாடிகளை வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது...

* பாராட்டாகக் கொஞ்சம் புன்னகை, பரவசப்படுத்தும் உச்சி முத்தம், பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தும் அரவணைப்பு... இவை எதுவும் எப்போதுமே இல்லாதபோது...

தலைவலிக்கான தீர்வுகள்...

*அடிக்கடி வரும் மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹைட்ரேஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும்.

* சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, 'திருவள்ளுவ மாலை’ எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது... சாப்பிடவும் செய்ய வேண்டும்.
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P68a
* அஜீரணத் தலைவலி, இரவு எல்லாம் 'மப்பேறி’ மறுநாள் வரும் ஹேங்-ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து தலைவலி போகும்.

* இஞ்சியை மேல் தோல் சீவி சிறுதுண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து தினமும் காலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல்.

* இஞ்சி, சீரகம் இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை ஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Sat Aug 30, 2014 1:38 pm

நலம் 360’ - 11
மருத்துவர் கு.சிவராமன்

எபோலா... உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் புதிய தொற்றுநோய். மரணித்த காட்டு வெளவால்களிடம் இருந்தும், சிம்பன்சி யிடம் இருந்தும் மனிதனுக்குள் எபோலா நுழைந்ததாகக் கருதப்படுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எனக் கடந்த சில வருடங்களில் கொத்துக்கொத்தாக மரணங்களைத் தந்துவிட்டுப்போன, தொற்றுநோய்களைப்போல இந்த வைரஸால் வரும் நோயும் அதிக மரணங்களைத் தரும் என, உலக சுகாதார நிறுவனம் கடுமையாக எச்சரிக்கிறது.

உலகை ஆள்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் மனிதனுக்கு, இதுபோன்ற தொற்றுநோய்கள்தான் அவ்வப்போது மரண பயத்தைக் காட்டிவிட்டுச் செல்கின்றன. இதற்கு முன் வரலாற்றின் பதிவுகளில் மிக மோசமாகப் பதிவுசெய்யப்பட்ட தொற்றுநோய் பிளேக். 14-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே 450 மில்லியனாக இருந்தபோது, 75 மில்லியன் சீன, ஐரோப்பிய மக்களை பிளேக் நோய் வாரிச்சுருட்டிக் கொண்டுபோனது. அதை 'கறுப்பு மரணம்’ என்கின்றனர். அந்த பிளேக்தான், உலகில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்றுநோய். அதன் பிறகு காலரா, எய்ட்ஸ்... என ஏகப்பட்ட தொற்றுநோய்கள் மனிதனை மிரட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும், மனிதன் அடங்குவதாக இல்லை.

சரி, வெடித்துக் கிளம்பினால் வீரியமாகப் பரவும் இந்தத் தொற்றுநோய்களை எப்படி எதிர்கொள்வது? அதை அந்தந்தச் சூழ்நிலைகள்தான் முடிவுசெய்யும் என்றாலும், பொதுவாக நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை எப்போதும் உச்சத்திலேயே வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். சூழல் சிதைவு, மருந்து விற்பனை உத்திகள் என தொற்றுக்குப் பின்புறம் அரசியல், இன்னும் பிற இத்யாதிகள் இருக்கட்டும். நம் தினசரி வாழ்வியலையே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை 'ரீசார்ஜ்’ செய்தபடியே இருக்கும் வகையில் அமைத்துக்கொள்வதே நல்லது. பெருவாரியாக உடல் உழைப்பு குறைந்த நிலையில், ஒவ்வோர் உணவோடும் வணிக ரசாயனம் ஒட்டிக்கொண்ட இன்றைய நவீன வாழ்வியலில், நோய் எதிர்ப்பு ஆற்றல் வீரியம் இழக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. அதை மீட்டு எடுக்க சில சின்னச் சின்ன அக்கறைகளே போதும்.

அனைவருக்குமான அக்கறை:


அறுசுவைகள் சேர்ந்த உணவு, அன்றாடம் அளவாக இருப்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. பாரம்பர்ய உணவு அப்படித்தான் பரிமாறப்பட்டது. காளமேகப் புலவர் பதிவில் வரும், 'கரிக்காய் பெரித்தாள், கன்னிக்காய் வாட்டினாள், பரிக்காய் கூட்டினாள், அப்பக்காய் துவட்டினாள்’ என்ற செய்தியில் சொல்லப்பட்டவை வெறும் காய்கறிகள் பெயர் மட்டும் அல்ல. அன்றைய உணவில், துவர்ப்பான அத்தி, புளிப்பும் துவர்ப்புமான மாங்காய், துவர்ப்பும் இனிப்புமான வாழைக்கச்சல், கசப்பும் துவர்ப்புமான கத்திரிக்காய், இவற்றை சமைக்கையில் துளி கடல் உப்பு... என அனைத்து சுவைகளும் கலவையாக இருந்தன என்பது தெரியவருகிறது. ஆனால், இன்று அதே உணவு, 'கேவண்டிஷ்’ வாழை, 'கார்பைடு கல்’லால் பழுத்த அல்போன்சா மாம்பழம், 'பி.டி’ கத்திரி, 'அயோடைஸ்டு’ உப்பு என உருமாறிவிட்டது. இதை நாம் உண்ணும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் வருமா... அல்லது நோய் வருமா... என அவற்றைப் படைத்தவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.

உணவில் கசப்பும் துவர்ப்புமான சுவைகளை நம்மில் பலர் மறந்தேவிட்டோம். இவை இரண்டும் அன்றாடம் ஏதேனும் ஓர் உணவில் இருப்பது, நோய்க்கு எதிரான இயற்கைக் கேடயத்தை எந்த நேரமும் அணிந்திருப்பதற்குச் சமம். அதிக கசப்பைத் தரும் நிலவேம்புக்குள் டெங்கு ஜுரத்தை மட்டுப்படுத்தும் கூறு ஒளிந்து இருக்கிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இன்றளவில் ஒரே மருந்தான டாமிஃப்ளூ தயாரிக்கப் பயன்படும் SAI அமிலம், பிரியாணிக்குப் போடும் அன்னாசிப் பூவின் கசப்புக்குள் ஒளிந்திருக்கிறது. புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பும் துவர்ப்புமான ஃபீனால்கள், பால் சேர்க்காத பச்சைத் தேநீரில் கலந்திருக்கிறது. காச நோய்க்கும், ஹெச்.ஐ.வி-க்கும் எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு... கலந்த சத்துக்கள் நெல்லிக்காயில் நிரம்பி இருக்கின்றன. சாதாரண வைரஸ் ஜுரத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றல் துளசியின் கசப்புக்கும் துவர்ப்புக்கும் இடையே இருக்கிறது.

குழந்தைகளுக்கான அக்கறை:

எந்த வெளித்தீண்டலும் இல்லாமல் ஒவ்வோர் அணுக்குள்ளும் இயல்பாகவே ஒளிந்திருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை 'Cell mediated immunity’ என்பார்கள். அந்த எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தால் தொற்றுகள் தரும் நுண்ணுயிரிகள், உடலைத் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால், அந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் வெள்ளை சர்க்கரை சாப்பிடும்போது, ரசாயனக்கூறுகள் சேர்க்கப்பட்ட துரித உணவுகளைச் சாப்பிடும்போது, டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய பேக்கரி, பஃப்ஸ், ஃபிங்கர் ஃப்ரைஸ் சாப்பிடும்போது செம்மையாகப் பராமரிக்கப்படுவது இல்லை என்கிறது இன்றைய அறிவியல். ஆக, குழந்தைகளை அப்படியான உணவுகளில் இருந்து விலக்கிவைப்பது தொற்றில் இருந்து காக்கும் உன்னத வழி. இயல்பிலேயே மருத்துவக் குணமுள்ள தேனில், மருத்துவக் குணமுள்ள கசப்பான, காரமான மூலிகைகளைக் கலந்துகொடுத்து குழந்தைகளை வளர்த்தவர்கள் நாம். தூதுவளைப் பழத் தேன், மாதுளைப் பழத் தேன், மிளகுத் தேன், நெல்லித் தேன்... ஆகியவை சில உதாரணங்கள். அதேபோல் குழந்தைகளுக்கு சுரசம் என மூலிகை இலைச்சாறைக் கொடுக்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு. கற்பூரவல்லி இலைச் சாற்றை தேனில் குழைத்து, லேசாக அனலில் காட்டி, தேன் பொங்கும்போது எடுத்து, ஆறவைத்து, அதை அவ்வப்போது அடிக்கடி சளித்தொற்று வரும் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதேபோல் துளசி, தூதுவளை இலையையும் கொடுக்கலாம்.

சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவோருக்கான அக்கறை:

சர்க்கரை/புற்று வியாதிக்காரர், சமீபமாக நோயில் இருந்து மீண்டவர்கள், கர்ப்பிணிப் பெண், குழந்தைப் பெற்ற பெண், வயோதிகர் இவர்கள்தான் தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகக்கூடிய 'vulnerable group’ என்கிறது மருத்துவ உலகம். காலை/மாலை தேன் சேர்த்த, பால் சேர்க்காத தேநீர், லக்டோபாசில்லஸ் எனும் புரோபயாட்டிக் சேர்ந்த இட்லி/கம்பங்கூழ், ஆப்பத்துக்குத் தொட்டுக்கொள்ள... நோய் எதிர்ப்பு ஆற்றலை தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் தரக்கூடிய, தேங்காய்ப்பால், மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரை... ஆகிய உணவுப்பழக்கம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்புக் கவசம் ஆகும். சர்க்கரை வியாதி உள்ளவர் தவிர பிறர் இனிப்புக்குப் பதில் பனைவெல்லம், தேன் அல்லது ஆர்கானிக் நாட்டுவெல்லம் இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். காரம் தேவைப்படும் தருணங்களில் மிளகைச் சேர்த்துக்கொள்வது, சுவையுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் சேர்த்துக்கொள்வதற்கு ஒப்பானது.

வெந்தயத்தில் இருந்து 4-hydroxy isoleucine-ம், தக்காலத்தில் (அன்னாசிப் பூவுக்கான வேறு பெயர்) இருந்து SAI அமிலத்தையும், மஞ்சளில் இருந்து குர்குமினையும், தேங்காயில் இருந்து மோனாலாரினையும் உறிஞ்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் மாத்திரைகள், மருந்துகளாக மாற்றி கூவிக்கூவி டாலரில் விற்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் பேச்சிலும் மூச்சிலும் வைத்திருந்த நாம், 'பீட்சா ரொம்ப ஹைஜீனிக்கா தயாரிக்கிறாங்க. ரோட்டுக்கடை ஆப்பம், வடை எல்லாம் அப்படியா இருக்கு?’ எனப் பேசிக்கொண்டிருக்கின்றோம்.

அரை இடுக்கில் அரிப்பைத் தரும் பூஞ்சைத் தொற்றில் இருந்தும், அண்ட வந்த ஐந்தாறு நாட்களில் நம்மைக் கொன்றுகுவித்த பல பாக்டீரியா, வைரஸ்களில் இருந்தும் நம்மை மீட்டு எடுத்தது நவீன அறிவியலின் தடுப்பு மருந்துகளும், உயிர் எதிர் நுண்ணுயிரிகளும்தான். ஆனால், அதே எதிர் நுண்ணுயிரியை அளவு இல்லாமல், மருந்திலும் உணவிலும் தடுப்பிலும் நாம் பயன்படுத்துவது எதிர்விளைவை உண்டாக்கிவிட்டது. இன்றைக்கு காசம் முதலான நோய் தரும் பல பாக்டீரியாக்களுக்கு எதிராக எந்த ஆன்ட்டிபயாட்டிக்கும் வேலை செய்யாத DRUG RESISTANCE நிலை இந்தியா முதலான வளர்ந்த நாடுகளில் உருவாகிவருவது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

ஒரு இன்ச்சில் ஒரு மில்லியனுக்கும் குறைவான அளவில் உள்ள வைரஸும் சரி, கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவும் சரி, இரை தேடித் தானாக நம்மை அணுகுவது இல்லை. சக இனத்தை அழித்து, தனது நாளைய கொண்டாட்டத்துக்கு கர்ச்சீப் போட்டுவைக்கும் காட்டுமிராண்டிக் குணமும் அவற்றுக்கு உரித்தானது அல்ல. லாபவெறிக்காக இயற்கையைச் சிதைக்கும் மனிதனின் விபரீத முயற்சிகளே அந்தக் கிருமிகளை, நுண்ணுயிரிகளைத் தீண்டித் தூண்டுகின்றன. கொள்ளை நோய் பரப்பும் கிருமிகளிடம், 'ஏன் இந்தப் பேரழிவை உண்டாக்கு கிறீர்கள்?’ என்று கேட்டால், 'அவனை நிறுத்தச் சொல்... நான் நிறுத்துகிறேன்’ என்று மனிதனைச் சுட்டிக்காட்டுமோ என்னவோ!?

- நலம் பரவும்...

எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க...

1. ஏழு மணி நேரக் கும்மிருட்டுத் தூக்கத்துக்குப் பின், இளங்காலை மொட்டைமாடி வெயிலில் 20 நிமிட உலாவல், தோட்டத்து வேப்பங்காற்றில் கபாலபாதி பிராணாயாமம், பின்னர் நலுங்கு மாவு தேய்த்துக் குளியல், காலையில் கரிசாலை முசுமுசுக்கைத் தேநீர், மத்தியானம் தூய மல்லிச்சம்பா சோறு, அதற்கு மிளகுவேப்பம்பூ ரசம், 'தொட்டுக்கா’வாக நெல்லிக்காய்த் துவையல், இரவில் சிவப்பு அரிசி அவலுடன் சிவப்புக் கொய்யா சாப்பிட்டு வந்தால், எந்தத் தொற்றும் நெருங்க நிச்சயம் யோசிக்கும்!

2. வெள்ளிக் கலனில் குழந்தைக்கு உணவு ஊட்டுவது நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும் என்கிறது நவீன மருத்துவம். அதன் எதிர்நுண்ணுயிர் ஆற்றலைக் கண்டறிந்துள்ள நாசா முதலான பல ஆய்வு அமைப்புகள், வெள்ளி இழையில் சாக்ஸ், ஜட்டி, பனியன்களை உருவாக்கி, குளிக்க இயலாத விண்வெளி வீரர்களுக்கு உடுத்தி அனுப்புகிறது. வெள்ளிப் பாலாடை, வெள்ளித் தட்டு பயன்படுத்த வாய்ப்பு உள்ளோர் இதனை உணவுக் கலனாகப் பயன்படுத்தலாம். வெள்ளிக்கு மாற்று மண்பாத்திரம். மண்பாத்திரத்தில் சமைத்து, மண்கலனில் நீர் வைத்து அருந்துவது நோய் எதிர்ப்பு ஆற்றலை உயர்த்தும்!

3. எண்ணெய்க் குளியல், உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயர உபாயம் செய்யும். நிணநீர் ஓட்டத்தைச் (Lymphatic drainage) சீராக்கி, உடலின் செல்களுக்கு இடையிலான வெப்பப் பரிமாற்றத்தைச் சூழலுக்கு ஏற்றபடி சீராக்கும் இந்த நல்வாழ்வியலை மீட்டு எடுப்பது, இப்போது காலத்தின் கட்டாயம்.

சீந்தில் அன்னப்பால் கஞ்சி செய்முறை!

ஹெச்.ஐ.வி., காச நோய்க்கு எப்போதும் நாள்பட்ட சிகிச்சை தேவை. இன்று அதற்கான மருந்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயர வழங்கப்படும் டானிக்குகளில் மிக முக்கியமாகச் சேர்க்கப்படும் தாவரம் சீந்தில். அமிர்தவல்லி என மருத்துவ இலக்கியங்களில் போற்றிப் பேசப்படும் இந்தச் சீந்தில் சேர்ந்த அன்னப்பால் கஞ்சி, வர்ம சிகிச்சை செய்பவர்களிடமும் பாரம்பர்ய மருத்துவர்களிடமும் மிகப் பிரசத்திபெற்ற ஒரு மருத்துவ உணவு. கசப்பாக இருந்து உடலுக்கு உரம் அளிக்கும் இந்தக் கஞ்சியைத் தயாரிப்பது மிக எளிது.

சோற்றுக் கஞ்சி செய்யும்போது ஒரு துணித்துண்டில் சீந்தில் பொடியைப் பொட்டலமாகக் கட்டி, அரிசியோடு சேர்த்துப் போட்டு வேகவைக்க வேண்டும். கஞ்சி வெந்து எடுத்த பின், துணிப்பொட்டலத்தை அகற்றிவிடலாம். சீந்திலின் சத்துக்கள் கஞ்சியில் கலந்துவிடும். சீந்தில் அன்னப்பால் கஞ்சி, நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்து, வர்மத்தில் அடிபட்ட வலி, கணச்சூடு, காசம், மேகச் சூடு (பெண்களுக்கு வெள்ளைப் படுதலுக்கான தூண்டுதல்), அலர்ஜி... எனப் பல நோய்க்கூட்டத்தை தனி ஆளாக நின்று வெல்லும். அருகில் ஏதேனும் தொற்று நோய்கள் இருந்தால், உங்கள் வீட்டில் இது உணவாக ஓரிரு கரண்டி நிச்சயம் பரிமாறப்பட வேண்டும்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Sat Aug 30, 2014 1:42 pm

நலம் 360’ - 12
மருத்துவர் கு.சிவராமன்

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P46a
முன்புபோல இளவட்டக்கல் தூக்கி, நான்கைந்து மாடுகளை விரட்டி, குதிரையில் போய் குறுக்கு சிறுத்தவளைக் கவர்ந்துவரும் கஷ்டம் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு இல்லைதான். ஆனாலும், சிக்ஸ்பேக் சித்ரவதை, 'செல்லம்... தங்கம்... புஜ்ஜிம்மா’ கொஞ்சல்களுக்காக நித்திரை வதை... எனக் காதலுக்கான ஆண்களின் மெனக்கெடல்கள் இன்றும் தொடரத்தான் செய்கின்றன.

'எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்;
உனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் உருகும் சத்தம்’

போன்ற வைரமுத்து வரிகளை 'காப்பி-பேஸ்ட்’ செய்து, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்களில் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காதலின் சாஃப்ட்வேர் இப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப தரம் உயர்ந்தாலும், ஹார்டுவேர் நிறையவே பழுதாகி வருவதாக மருத்துவ ஆய்வுகள் பலமாக எச்சரிக்கின்றன.

குடும்பக் கட்டுப்பாடு பிரிவு, ஐந்து கிலோ அரிசி, 500 ரூபாய் இனாம் எல்லாம் தேவை இல்லாமலே, இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்துவருகிறதாம். 1 மில்லி விந்துவில் 60-120 மில்லியன் உயிர் அணுக்கள் இருந்த காலம் மலையேறி, 15 மில்லியன் இருந்தாலே பரவாயில்லை என மருத்துவம் ஆதரவு ஆறுதல் சொல்கிறது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் அணுக்களில் 10 சதவிகிதம் மட்டுமே உயிர்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறதாம். நமக்கு முன்னால் இந்தப் பூவுலகில் பிறந்த எலி, எருமை, குரங்குகளுக்கு எல்லாம் இந்த எண்ணிக்கையும் சதவிகிதமும் பல மடங்கு அதிகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. 31-40 வயதையொட்டிய தம்பதிகளில், 46 சதவிகிதம் பேருக்குக் கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை என்கிறது இந்திய ஆய்வு ஒன்று. விளைவு... தெருவுக்கு இரண்டு அண்ணாச்சிக் கடைகள் மாதிரி, ஊருக்கு ஊர் செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகிவருகின்றன. என்ன ஆச்சு நமக்கு மட்டும்?

பல்வேறு காரணங்கள்... வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்களில் பிறக்கும் டயாக்ஸின், இன்னும் பல காற்று மாசுக்களை கருத்தரித்த பெண் சுவாசிப்பது, அவள் வயிற்று ஆண் குழந்தையின் செர்டோலி செல்களை (பின்னாளில் அதுதான் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும்) கருவில் இருக்கும்போதே சிதைக்கிறதாம். 'உணவு உற்பத்தியைப் பெருக்குகிறேன்’ என மண்ணில் நாம் தூவிய ரசாயன உர நச்சுக்களின் படிமங்கள், இப்போது நம் உயிர் அணுக்களுக்கு உலை வைக்கின்றன. பெண்கள் ஸ்ட்ராபெர்ரி இதழ் அழகு வேண்டி, தாலேட் கலந்த உதட்டுப்பூச்சு தடவுவது, முத்தமிடுவோருக்கு காதல் தந்து, கூடவே கருத்தடையும் செய்துவிடுகிறதாம்.

மறுபுறம்... சைக்கிள்ஸ்டாண்டில், குட்டைச்சுவரில், கடைசி பெஞ்சில், நண்பர்களால் நடத்தப்படும் ஆண்மை குறித்த ரகசிய டியூஷன்களில், மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும் விந்து குறித்த தப்பான புரிதல்களால் நொந்துதிரியும் ஆண்கள் ஏராளம்... தாராளம். ஆறரை அடி உயர ஆப்பிரிக்க 'போர்னோ’ நடிகர்களைப் பார்த்து, 'அவனை மாதிரி இல்லையே... எனக்கு சிறுசா இருக்கே!’ என உள்ளுக்குள் குமுறும் ஆண்மகன்கள் ஏராளம். இதுபோன்ற உளவியல் ஆண்மைக் குறைவு ஆர்ப்பரித்து வளர்வதற்கு, பாலியல் அறியாமை மிக முக்கியக் காரணம்.

இளங்காலை எதிர்பாராத முத்தத்தில் தொடங்கி, எள்ளலும், கொஞ்சலும், திமிறலும், குதூகலமும் சேர்ந்து முடிவாக நான்கைந்து நிமிடங்களில் உறவுகொள்ளும் உயிர்வித்தையை உணராது, 'நீலப்படத்தில் அவங்க 0.45 மணி நேரமா முனகிட்டு இருக்காங்களே... நமக்குத் துரித ஸ்கலிதம் சிக்கல் இருக்கோ?!’ எனக் குமைகிறார்கள் இளைஞர்கள். போதாததற்கு 'சுய இன்பத்தால் சுருங்கிப்போச்சா?’ எனும் விஷ விதைகளை நள்ளிரவு டாக்டர்கள் நட்டுவைக்க, 'அப்போ... நான் அப்பாவாகவே முடியாதா?’ என்ற கேள்விக்குள் உறைகிறார்கள். 'ஆண்களில் சுய இன்பம் செய்பவர்கள் 99 சதவிகிதத்தினர்; மீதி 1சதவிகிதத்தினர் பொய்யர்கள்’ என்று ஆங்கிலப் பழமொழி இங்கே உங்கள் கவனத்துக்கு.

நாம் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவும் சாரம், செந்நீர், ஊன் கொழுப்பு, எலும்பு, மஞ்சை... எனப் படிப்படியாக ஆறு தாதுக்களைக் கடந்தே, ஏழாம் உயிர்த்தாதுவான சுக்கிலத்தை அடையும். அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி சேகரிக்கப்படும் உயிர்துளியை அநாவசியமாக வீணாக்க வேண்டாம் என்பது சித்தர்களின் கருத்து. மற்றபடி சுய இன்பம் என்பது, கொலை பாதகம் அல்ல; அன்றாட அவசியமும் அல்ல!

நள்ளிரவு தாண்டியும் மடியில் மடிக் கணினியைக் கட்டிக்கொண்டு அழும் ஐ.டி 'இணையர்களின்’ எண்ணிக்கை எகிறிக்கொண்டேயிருக்கிறது. எப்போதுமே நெருக் கடியிலும் பயத்திலும் வாழும் அவர்களுக்கு, இரவு கண் விழிப்பால் உடலின் பித்தம் கூடி விந்து அணு உற்பத்தியைக் குறைக்கிறது. மடிக்கணினி, விதைப்பகுதிச் சூட்டை அதிகரித்து உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதையும் அவர்கள் உணர்வது இல்லை... அல்லது உதாசீனப்படுத்துகிறார்கள்.

உடலில் இதயம், மூளை போன்ற அத்தியாவசிய உறுப்புகளை எலும்புகளும் தசைகளும் பொத்திப் பாதுகாக்க, விந்து உற்பத்தி ஸ்தலமான விதைப்பையை மட்டும் உடலுக்கு வெளியே தொங்கவிட்டிருப்பதற்கு முக்கியமான காரணம், உடல் வெப்பத்தில் இருந்து 3-4 டிகிரி அது உஷ்ணம் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், விஷயம் புரியாமல் இறுக்கமான உள்ளாடை, சருமத்தோடு ஒட்டித் தைத்ததுபோல இறுக்கமான ஜீன்ஸ்... என இயற்கையின் செட்டிங்ஸை மாற்றுவது சரியா? எள்ளு, கொள்ளுத் தாத்தாக்களின் வீரிய விருத்திக்கு, காத்தாடிய 'பட்டாபட்டி’ உள்டவுசரும், பட்டும்படாத எட்டு முழ வேட்டியும் எந்த அளவுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது என்பது புரிகிறதா?

விதைப்பையில் உருவாகும் நாள அடைப்பு, சொந்த விந்துவையே பாக்டீரியாவாகப் பார்க்கும் பழுதாகிப்போன உடல் எதிர்ப்பாற்றல், பிட்யூட்டரி, ஹைபோதாலமஸ் கோளங்களின் செயல்பாட்டுக் குறைவால் நிகழும் ஹார்மோன் குறைவு... என விதவிதமான மருத்துவக் காரணங்களும் ஆண்மைக்குறைவை அதிகரிக்கின்றன.

'அட... பிரச்னையா அடுக்காதீங்க. சிக்கல் தீர என்ன வழி? அதைச் சொல்லுங்க!’ எனப் பொங்கி எழுவோருக்கு, பாரம்பர்ய வாழ்க்கைமுறையே பதில்! அதற்காக 'காண்டாமிருகக் கொம்பு தர்றேன், சிட்டுக்குருவி லேகியம் கை மேல் பலன் கொடுக்கும், தங்கபஸ்பம் ரெடி பண்ணிரலாம்’ என உட்டாலக்கடி வியாபாரிகளிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது. போலிகளிடம் சிக்காமல், ஒழுங்காக கீரை, காய்கறி சாப்பிட்டாலே, உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்!

உயிர்ச்சத்து... விதைகளிலும், மொட்டுக்களிலும், வேர்களிலும் பொதிந்து இருக்கும் என கருதியதாலோ என்னவோ, சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதனகாமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என அதன் பட்டியல் நீளும். வளம் குன்றிய தேரி நிலத்தில் வளரும் நெருஞ்சில் முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். அதேபோல் பூனைக்காலி விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களை உயர்த்த, டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள் செய்வதை, நவீன உலகம் உற்றுப் பார்க்கிறது. உடனே, 'ஒவ்வொன்றிலும் தலா 100 கிராம் வாங்கி ஒரு கலக்குக் கலக்கி...’ என ஆரம்பித்துவிட வேண்டாம். பிரச்னை உற்பத்தியிலா, பாதையிலா, மனதிலா என்பதை, உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசி யுங்கள். அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உங்கள் உணவுப் பழக்கத்தைத் தீர்மானியுங்கள்.

மிக முக்கியமாக, புரிதலிலும் விட்டுக்கொடுத்தலிலும் மட்டுமே தாம்பத்ய பயிர் வீரியமாக விளையும். கருத்தரிப்பைச் சாத்தியப்படுத்துவதில், உறுப்பின் அளவைக் காட்டிலும் மனதின் அளவுக்குத்தான் ஆண்மை அதிகம் உண்டு. ஆதலால் காதல் செய்வீர்... ஆரோக்கியமாக!

- நலம் பரவும்...

உயிர் அணுவைப் பெருக்கும் மெனு!

மாதுளை வெல்கம் ட்ரிங்க், முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளைச் சம்பா சோற்றுடன் முருங்கைக் காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய்ப் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு... முடிவில் தாம்பூலம்... இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.

நாட்டுக்கோழியும் சிவப்பு இறைச்சிகளும் காமம் பெருக்கும் காம்போ உணவுகள்.

உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (zinc) பங்கு அதிகம். துத்தநாகச் சத்தை விலை உயர்ந்த பாதாம் மூலம்தான் பெற வேண்டும் என்பது இல்லை. திணையும் கம்பும் நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசியைவிட, துத்தநாகச் சத்து அதிகம் உள்ள தானியங்கள்.

மாப்பிள்ளைச் சம்பா சிவப்பு அரிசி அவல், முளைகட்டிய பாசிப் பயறு, நாட்டு வெல்லம், தேங்காய்த் துருவல் கலந்த காலை உணவுடன் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிடலாம்.

சித்த மருத்துவம் 'காமம் பெருக்கிக் கீரைகள்’ எனப் பட்டியலிட்டுச் சொன்ன முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை, பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும்.

5-6 முருங்கைப் பூக்களுடன், பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிடுவது, உயிர் அணுக்கள் உற்பத்தியையும் இயக்கத்தையும் சேர்த்துப் பெருக்கும்.

'மரத்தில் காய்க்கும் வயாகரா’ எனச் சீனர்கள் மாதுளையையும், ஐரோப்பியர்கள் ஸ்ட்ராபெர்ரியையும், நம்மவர்கள் வாழைப்பழத்தையும் நெடுங்காலமாகச் சொல்லிவந்துள்ளனர். பிற்காலத்தில் சோதித்ததில், செரடோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம்கொண்ட ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள் நிறைந்த மாதுளைகள் காமம் கக்கும் கனிகள் என்பது புரிந்தது!

கவனம்!

நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.

'குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தை யின்மையைக் கொடுக்கும்’ என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

உடல் எடை அதிகரிப்பில் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும் நோய்ச் சிக்கல்கள். இரண்டுமே முறையான சிகிச்சையால் சரிசெய்யலாம்.

நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும் பாரம்பர்ய உத்தி!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by ராஜா on Sat Aug 30, 2014 2:25 pm

சிறந்த பகிர்வு தமிழ்நேசன் , நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Sep 04, 2014 7:46 am

நலம் 360’ - 13
மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்


நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் P54
சீன மருத்துவ, சித்த, ஆயுர்வேத மருத்துவ இலக்கியங்களில் பன்னெடுங்காலத்துக்கு முன்பே தைராய்டு கோளத்தின் நோய்கள் பேசப்பட்டுள்ளன. தைராய்டு கோளத்தில் வரும் முன் கழுத்து வீக்கத்தை (Goitre) லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற 'Madonna of the Carnation’ ஓவியம் சித்திரித்திருக்கிறது. தைராய்டு என்பது, முன் கழுத்தில் மூச்சுக்குழலில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவக் கோளம். அந்த வடிவம் 'தைராய்டு’ என்ற பழங்காலப் போர் ஆயுதம்போல இருந்ததாக உணர்ந்த தாமஸ் வார்ட்டன் என்கிற விஞ்ஞானி, அந்தக் கோளத்துக்கு 'தைராய்டு’ எனப் பெயர் சூட்டினார். இந்தக் கோளம் சுரக்கும் சுரப்பு குறைந்தால்... ஹைப்போதைராய்டு, அளவு அதிகமானால்... ஹைப்பர்தைராய்டு, முன் கழுத்து வீங்கியிருந்தால்... 'காய்ட்டர்’ என்கிற கோளவீக்கம் என நோய்களாக அறியப்படுகின்றன. இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட இந்த நோயை, இன்றளவிலும் முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. காலை எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக தைராக்சின் மருந்தை விழுங்குவோர் இப்போது அநேகர்.

தைராய்டு தொடர்பான நோய்கள், பெண்களைத்தான் அதிகம் தாக்குகின்றன. எனினும், அது பெண்களுக்கான பிரத்யேக நோய் அல்ல. ஆண்களுக்கு 'அந்த’ விஷயத்தில் நாட்டம் குறைவது, ஆண்மை குறைவது, முதியவர்களின் மறதி... போன்ற குறைபாடுகளுக்கு தைராய்டு சுரப்பு குறைவதும் ஒரு காரணம். பெண்களின் மாதவிடாய் சீர்கேடு, பாலிசிஸ்ட்டிக் ஓவரி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உருவாவது, கருத்தரிப்பு தாமதம் ஆவது, கருமுட்டை வெடிக்காமல் இருப்பது போன்றவற்றுக்கு முக்கியமான காரணம் இந்த தைராய்டு சுரப்பு குறைவே. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கி, 14 அல்லது 15-வது நாளில் கருமுட்டை வெடிப்பு கட்டாயம் நிகழ வேண்டும். அந்த வெடிப்பை நிகழ்த்த ஹார்மோனைத் தூண்டுவது தைராய்டு சுரப்பிதான். மாதவிடாய், 30 நாட்களுக்கு ஒருமுறை நிகழாமல், அல்லது கருத்தரிப்பு, தாமதம் ஆகும் சமயத்தில், முதலில் தைராக்சின் சுரப்பு சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

மாதவிடாய் சீர்கேடு மட்டும் அல்ல, உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாடு, எடை அதிகரிப்பு, அறிவாற்றல் குறைவு, முடி உதிர்தல், சரும உலர்வு... எனப் பல நோய்கள் தோற்றுவாய்க்கும் தைராய்டு சுரப்பு குறைவே காரணம். 'இதற்குத் தீர்வே கிடையாதா? எப்போ... எப்படிக் கேட்டாலும், மாத்திரையை நிறுத்தக் கூடாது என்று டாக்டர் சொல்றாரே?’ என்று வருத்தத்துடன் கேட்போர், இந்தியாவில் மட்டும் சுமார் 4.2 கோடி பேர்!

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 மைக்ரோ கிராம் அயோடின்தான் நமக்குத் தேவை. அயோடின் உப்பு அதிகம் உள்ள கடலோர மண்ணின் நிலத்தடி நீரில் இருந்தும், கடல் மீன்களில் இருந்தும் இந்த உப்பு நமக்கு எளிதாகவே கிடைக்கும். ஆனால், இதுவே நன்னீர் மீன்களில் அயோடின் சத்து 20-30 மைக்ரோகிராம்தான் கிடைக்கும். தவிர, பால், முட்டை, காய்கறிகளில் இருந்தும் அயோடினை எடுத்துக்கொள்ள வேண்டும். மண்ணின் அயோடைடு சத்தைப் பொறுத்தே, அதில் வேர்விட்டு வளரும் காய்கறிகளில் அயோடின் அளவு கிடைக்கும்.

சுமார் 15 வருடங்களுக்கு முன், இந்தியாவின் கடல் ஓரத்தைவிட்டு விலகியுள்ள ஏறத்தாழ 226 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அயோடின் சேர்க்கையையும், தைராக்சின் சுரப்பு அளவையும் இந்திய மருத்துவக்கழகம் ஆய்வு செய்தது. முடிவு, ஏராளமானோர் அயோடின் குறைவுடன் இருப்பதை உறுதிசெய்தது. இப்படியேவிட்டால், பெருவாரியான மக்கள் ஹைப்போதைராய்டு நோயால் பீடிக்கப்பட்டு சாதாரண உடல்சோர்வில் தொடங்கி, உடல் வளர்ச்சிக் குறைவு, மூளை செயல்திறன் குறைவு வரை ஏற்படக்கூடும் எனக் கருதினார்கள். உடனே அவசர அவசரமாக, இந்தியர் அனைவருக்கும் அயோடினை உணவில் அன்றாடம் கொடுக்க முடிவு செய்தது அரசு. உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி அன்றாடம் நாம் சாப்பிடும் உப்பில் அயோடினைச் செறிவூட்டிக் கொடுப்பதைக் கட்டாயம் ஆக்கினார்கள். விளைவு, உப்பை உப்பளத்தில் காய்ச்சி பல கடல்சார் கனிமங்களின் தாவர நுண்கூறு கலவையாகத் தந்த காலம் மலையேறி, செறிவூட்டப்பட்ட சோடியம் குளோரைடை சோற்றில் போட்டுச் சாப்பிடும் நிலைக்கு வந்தோம்.

அயோடினை அதிகம் பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அறுசுவையில் ஒரு பிரதான சுவையான உப்புச் சுவையை அதன் இயல்பான கடல் கனிமங்களில் இருந்து பெற்றபோதுதான், நாம் உப்பின் தேவையற்ற குணங்களைத் தவிர்த்தும், தேவையானவற்றை சரியான அளவில் பெற்றும் வந்தோம். அந்த உணவுக் கூட்டமைப்பை செயற்கை உப்பு நிச்சயம் அளிக்காது.

சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற எண்டோகிரைனாலஜி பேராசிரியர் ஒருவர், 'இந்த அயோடைஸ்டு உப்பு, மருந்து என்பதே சரி. அது எப்படி எல்லோருக்குமான உணவாகும்? முழுமையான ஆய்வுகள் நடத்தப்படாமல், அவசரகதியில் உட்கொள்ளவைக்கப்பட்ட இந்த உப்பே, நல்ல நிலையில் இயங்கும் தைராய்டுகளையும் நோய்வாய்ப்படுத்துகிறது’ என்றார். அயோடின் அதிகரித்தால் அது பெரிதாக நச்சு இல்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால், சில சமயம் அதுவே காய்ட்டர் நோய்க்கு காரணமாகிவிடும் என மருத்துவ உலகின் ஓர் அச்சம் உண்டு.

சரி... இந்த நோயைத் தவிர்க்க என்னதான் வழி? கடல்மீன் உணவுகள்தான் முதல் தேர்வு. வாரம் ஓரிரு நாள் மீன் உணவு சாப்பிடுவது அயோடினை சரியான அளவில் வைத்திருக்க உதவும். 'மீனா... வாட் யூ மீன்?’ என அலறும் சைவர்கள், அதற்குப் பதிலாக ஊட்ட உணவாக கடல் பாசிகளை உணவில் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில உணவுகளே தைராய்டு கோளத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் (GOITROGENIC) எனக் குறிப்பிடுகிறார்கள். அந்த உணவுப் பட்டியலில் நம் ஊர் கடுகும் முட்டைக்கோஸும் இடம் பிடித்திருக்கின்றன. லேசாக முன் கழுத்து வீக்கமோ, ஹைப்போதைராய்டு நோயோ இருக்கும்பட்சத்தில், தாளிப்பதற்கு கடுகு, தடாலடி பொரியலாக முட்டைக்கோஸ் சமைப்பதைத் தவிர்க்கவும்.

இன்னொரு முக்கியமான விஷயம்... சந்தையில் உள்ள ஊட்டச்சத்துப் பானங்களில் அதிகமாகச் சேர்க்கப்படுவது சோயா புரதம். 'அட... பிள்ளை போஷாக்கா தேறி வரட்டும்’ எனக் காரணம் சொல்லி, நேரடிச் சந்தை மற்றும் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் மூலமோ அவற்றை மருத்துவர் ஆலோசனை பெறாமல் கொடுப்பது நிச்சயம் நல்லது அல்ல. ஏனென்றால், 'புற்றைக் கட்டுப்படுத்தும்’, 'இது மெனொபாஸ் பருவப் பெண்களுக்கு நல்லது’, 'நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும்’, 'உடல் எடையைக் கூட்டும்’ எனக் கூவிக்கூவி விற்கப்படும் இந்தப் புரதம், சில நேரங்களில் தைராய்டு கோள வீக்கத்தையும் தரும். 'மாதவிடாய் சரியாக வரவில்லை, மந்த புத்தியாக இருக்கிறாள், இவனுக்குப் படிப்பு ஏறவே மாட்டேங்குது’ என்போருக்கு கடல் கடந்து விற்பனைக்கு வரும் டானிக்குகளைவிட, கடல் மீன்தான் நன்மை பயக்கும். கடல் மீன் தைராய்டு சுரக்க அயோடினைத் தரும். தைராய்டு நோயில் வலுவிழக்கும் எலும்புக்கு வைட்டமின் - டி தரும். மந்தம் ஆகும் மூளை குதூகலித்து உத்வேகம் பெற டி.ஹெச்.ஏ அமிலம், ஒமேகா கொழுப்பு எல்லாமும் பரிமாறும். கடையில் விற்கப்படும் புரத உணவுகளைக் காட்டிலும், பட்டை தீட்டாத தானியங்கள், பயிறுகளைச் சேர்த்து அரைத்து வீட்டில் செய்யப்படும் சத்துமாவு போன்றவை புரதச்சத்தைக் கொடுப்பதோடு, தைராய்டு நோயை மட்டுப்படுத்தும் கால்சியம், செலினியம் போன்றவற்றையும் அளிக்கும்.

தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால், சரியான சிகிச்சை மிகவும் அவசியம். தைராக்சின் சத்துக் குறைவு உள்ளோருக்கு நேரடியாகவே அந்தச் சத்தைக் கொடுத்து வருகிறது நவீன மருத்துவம். எந்தக் காரணம்கொண்டும் மருத்துவர் அனுமதி இல்லாமல் இந்தச் சத்து மாத்திரைகளை நிறுத்துவதும், அளவைக் குறைப்பதும் கூடாது. பாரம்பர்ய பிற மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்கள், அந்த மருத்துவ முறை மூலம் தைராய்டு கோளத்தைத் தூண்டியோ, அல்லது உடல் இயக்க ஆற்றலைச் சீராக்கியோ தைராய்டு கோளம் இயல்பு நிலைக்கு வரும் வரை, அதற்கான சத்து மருந்துகளை ஒருங்கிணைந்து எடுத்துக்கொள்வதுதான் நல்லது. தடாலடியாக நிறுத்துவது பெரும் நோய்ச் சிக்கலை ஏற்படுத்தும்.

சித்த, ஆயுர்வேதப் புரிதலில் கபத் தன்மையையும், பித்தத் தன்மையையும் சீராக்கும் மூலிகைகளை, மருந்துகளை இந்தத் தைராய்டு நோய்க்குப் பரிந்துரைப்பர். 'அன்னபவழச் செந்தூரம்’ என்கிற பாரம்பர்ய சித்த மருந்தும், மந்தாரை அல்லது 'கான்சனார்’ இலைகளால் செய்யப்படும் 'காஞ்சனார் குக்குலு’ என்கிற ஆயுர்வேத மருந்தும் இந்த நோய்களில் அதிகம் ஆராயப்பட்ட பாரம்பர்ய மருந்துகள். நவீன மருந்து அறிவியல் ஆய்வும், இந்த மருந்துகள் தைராய்டு சத்தை நேரடியாகத் தராமல், தைராய்டு கோளத்தைத் தூண்டி, அதன் செயல்திறனை ஊக்குவிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடவே உடல் எடை குறைவு, மாதவிடாய் கோளாறு போன்றவற்றைச் சீர்செய்வது இந்த மருந்துகளின் தனிச்சிறப்பு.

யோகாசனமும் மூச்சுப் பயிற்சியும் தைராய்டு கோளம் சரியாக இயங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய வணக்கம், கபாலபாதி பிராணாயாம மூச்சுப் பயிற்சி, விபரீதகரணி யோகப் பயிற்சி... ஆகியவை உடல் இயக்க ஆற்றலை வலுப்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள்.

ஒரு தைராய்டு சுரப்பு குறைவு நோயாளி காலையில் ஒரு மாத்திரை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூட்டாக இந்த யோகாசனப் பயிற்சி, ஏதேனும் பாரம்பர்ய மருந்து, கூடவே அடிக்கடி கடல்மீன் உணவு/கடற்பாசி உணவு சாப்பிடுவது போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே, மெள்ள மெள்ள இந்த நோயின் பிடியில் இருந்து விலக முடியும். ஆனால், என்று வரும் இந்த ஒருங்கிணைப்பு?

- நலம் பரவும்...

கடல் உணவுகள் சில...

அயோடினும் புரதமும் நிறைந்த கடல் மீன்கள், தைராய்டு குறைவு நோய்க்கான சிறப்பு உணவுகள். கூடுதல் புரதமும் வைட்டமின் - டி சத்தும் இவற்றின் ஸ்பெஷல். அதிலும் குறிப்பாக வஞ்சிர மீன் குழம்பு, மிக அதிகப் புரதம் கொண்டது. இதை குடம்புளிக் கரைசலில் செய்தால், உடல் எடையையும் குறைக்கும்!

சுறா புட்டு, பாலூட்டும் பெண்ணுக்கு தைராய்டு குறைவைச் சரியாக்குவதுடன், பால் சுரப்பை மிக அதிகமாக்கும்!

பொரித்த சீலா மீனில், புரதச்சத்தும் அயோடினும் மிக அதிகம்!

'அகர் அகர்’ என்கிற கடற்பாசியில் வட இந்தியர்கள் செய்யும் இனிப்பு, குழந்தைகளுக்கு நலம் தரும் உணவு. பால், வெல்லம், அகர் அகர், ஏலக்காய்த் தூள் சேர்த்து இதைச் செய்யலாம்!

ஸ்பைரூலினா என்கிற சுருள்பாசி மாத்திரைகள், ஊட்ட உணவு வகைகளில் மிகப் பிரபலம். மீன் சாப்பிடாதோர் இதைச் சாப்பிடலாம்!

புற்றுநோய்... உஷார்!

ஒட்டுமொத்த சூழல் சிதைவு, மனம் வெதும்பிய வாழ்வியல்... போன்ற காரணிகளால் பல புற்றுநோய்க் கூட்டம் பெருகிவரும் சூழலில் தைராய்டு கோளப் புற்றும் அதிகரிக்கிறது. PAPPILLARY, FOLLICULAR, MEDULLARY, ANAPLASTIC... என நான்கு வகையில் இந்தப் புற்று வரலாம். இதில் வெகுசாதாரணமாக வரக்கூடியது PAPPILLARY. தைராய்டு கோள வீக்கத்தை எப்போதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், எளிய அல்ட்ரா சவுண்டு மற்றும் FNAC பரிசோதனைகள் மூலம் தொடக்கத்திலேயே பரிசோதித்து, இந்த வீக்கத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை புற்றுநோயாக இருக்கும்பட்சத்தில், ANAPLASTIC பிரிவைத் தவிர்த்து மற்றவற்றை அறுவைசிகிச்சை போன்ற சரியான ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம், முழுமையாக நலம்பெற வாய்ப்பு அதிகம். புற்றாக இல்லாதபட்சத்தில், வெறும் வீக்கத்தைக் கண்டு கலவரப்படத் தேவை இல்லை!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum