புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10 
68 Posts - 59%
heezulia
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10 
110 Posts - 60%
heezulia
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பிய இலக்கணம் (619)


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 09, 2022 10:14 am

First topic message reminder :

தொல்காப்பிய இலக்கணம் (570)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்ததாகத் தொல்காப்பியர் இடைச்சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகிறார்:-

அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருசெய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை (இடையியல் 2)

‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுநவும்’ – இரு சொற்கள் புணரும்போது, இடையே ஏதேனும் ஒரு பொருளுக்காக வருவனவும்,
‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்’ – வினைச் சொல்லில் காலம் , பால்,இடம் காட்டுபவைகளும்,
‘வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்’- வேற்றுமைப் பொருளைத் தரும் உருபுகளாக நிற்பவையும்,
‘அசைநிலைக் கிளவி யாகி வருநவும்’ – தனக்கெனப் பொருள் இலாது, தான் சார்ந்த பெயர் வினைகளோடு ஒட்டிநின்று அவற்றைச் சிறப்பிக்க உதவுவனவும்,
‘இசைநிறைக் கிளவி யாகி வருநவும்’ – செய்யுளில் இசையை நிறைக்க வருபவைகளும்,
‘தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்’ – கூறுபவர்களின் குறிப்புப் பொருளை வெளிப்படுத்த நிற்பவைகளும்,
‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் என்று’ – வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும், ஏதோ ஒரு ஒப்புமையால் ஒன்றுபட்டு நிற்க உதவுபவைகளும்,
‘அப்பண் பினவே நுவலுங் காலை’ – ஆகத் திகழ்வதே இடைச்சொற்களாம்,உரைக்கப் புகின்!

இப்படி நடக்கும் இடைச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1 . ’ புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுந’

பாட்டு +இன் + இனிமை = பாட்டின் இனிமை
இதில், ‘இன்’ எனும் சாரியை இடைச்சொல் , நடுவே வந்து , பொருளைத் தருகிறது; ‘பாட்டு’, ‘இனிமை’ என்று தனித் தனியாக நின்றால் பொருள் திரளாது என்பதைக் கவனிக்க!

2 . ‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருந’
வாழ்+ வ்+ஆன் = வாழ்வான்
இங்கே, ’வ்’எனும் இடைச்சொல்லாகிய எதிர்கால இடைநிலை வந்ததால்தான் ‘வாழ்வான்’ என்ற வினைச்சொல்லுக்குப் பொருளே ஏற்படுவதைக் காண்கிறோம்.

3 . ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’

குமணனை வாழ்த்தினான் – இங்கே, ‘ஐ’ எனும் இடைச்சொல்லாகிய வேற்றுமை உருபுதான் தொடர்ப் பொருளையே நல்குவதைக் காணலாம்; இல்லையேல், ‘குமணன் வாழ்த்தினான’ என நின்று , வாழ்த்தியவன் குமணன் எனும் தவறான பொருள் அல்லவா ஏற்படும்?

4 . ‘அசைநிலைக் கிளவி யாகி வருந’
சேனாவரையரின் விளக்கம்- “அசைத்தல் – சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை யாயிற்று.அவை ‘அந்தில்’ முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’, ‘உரைத்திசினோரே’ எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின்,அசைநிலைச் சொல்லாயின என்பாரு முளர்”

இங்கே ஒன்றை நான் தெளிவுபடுத்த வேண்டும்!

‘அசைநிலை’ வேறு, ‘அசைச் சொல்’ வேறா?
உரையாசிரியர் சிலரின் நடை இந்த ஐயத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது!

அசைநிலை வேறு, அசைச் சொல் வேறு எனத் தொல்காப்பியர் கருதியிருந்தால், இடைச் சொற்களைப் பாகுபடுத்திக் கூறும் அவரின் பட்டியலில், இரண்டும் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?பட்டியலில் ‘அசைநிலைக் கிளவி’ என்ற ஒன்று மட்டும்தானே உள்ளது?

‘மா’ எனும் சொல், வியங்கோளை அடுத்துவரும் ‘அசைச் சொல்’ எனத் தொல்காப்பியர்(இடை.25) கூறச் ,சேனாவரையர், “அது வியங்கோளைச் சார்ந்து, ‘அசைநிலையாய் வரும்’’என்றார்.
இதனால், அசைநிலையும் அசைச் சொல்லும் ஒன்றுதான் என்பது தெளிவாகிற தல்லவா?
ஆகவே,
அசைநிலைக் கிளவி =அசைநிலைச் சொல் = அசைநிலை= அசைச் சொல் !

மேற் சேனாவரையர் உரையிற் கண்ட இரு அசைநிலைகளை வருமாறு பார்க்கலாம்-

புகழ்ந்திகு மல்லரோ பெரிதே – இதில், ‘இகும்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.
உரைத்திசினோரே - இதில், ‘இசின்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.

5 . ‘ இசைநிறைக் கிளவி யாகி வருந ’

இசையை நிறைக்க வரும் சொல் , இசைநிறை இடைச்சொல் எனப்படும்.
இசையை நிறைக்க – யாப்புக் குறையைப் போக்க
‘கடாஅக் களிற்றின்மேல்’ – இந்த இரு சீர்களில், முதற்சீரிலுள்ள ‘அ’வை எடுத்துவிட்டால், ‘கடாக்’ என்று ஒரே ஒரு நிரைஅசையாக மட்டும் நிற்கும்; சீர் கிடைக்காது;யாப்பிலக்கணம் பிழையாகும். ஆகவே சீர் ஏற்பட்டு, யாப்பிலக்கணம் செம்மையாக, ‘அ’ சேர்க்கப்படுகிறது; இதுவே இசை நிறைக்கப்படுதல்.
இங்கே ‘அ’ , இசைநிறைக்கும் இடைச்சொல்.

இன்னோர் எடுத்துக்காட்டு:
‘காடிறந் தோரே’ – இதில், இரண்டாம் சீரின் ஈற்றில் உள்ள ஏகாரமே இசைநிறைக்க வந்த இடைச்சொல். ஏன்?
ஈற்று ஏகாரத்தை எடுத்துவிட்டால், ‘தோர்’ என்பது மட்டுமே மிஞ்சும்; இஃது ஓர் அசைதானே தவிரச் சீர் ஆகாது; சீர் ஆக்கவேண்டும் என்பதற்காகவே ஈற்றில், ‘ஏ’ சேர்க்கப்படுகிறது; அஃதாவது, யாப்பியல் நோக்கில் சேர்க்கப்படுகிறது; இதனால்தான் ‘இசை நிறை’ எனப்படுகிறது.
6 . தத்தங் குறிப்பிற் பொருள்செய்குந

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம்235)- இதில், ‘மன்’ எனும் இடைச்சொல் வந்துள்ளது. ‘சிறு அளவிலான கள் இருந்தால் அவன் எனக்குத் தந்துவிடுவான்! அப்படிப்பட்ட அரசன் அவன் ! அது ஒரு காலம்!’ எனக் கடந்துபோன (கழிந்துபோன) செயலைக் குறிப்பது எது? ‘மன்’அல்லவா? இதனால், ‘மன்’ எனும் இடைச்சொல், கழிவுப் பொருளைக் குறிப்பால் தருகிறது என்கிறோம்!

7 . ‘ஒப்பில் வழியாற் பொருசெய்குந’

இதற்கும் உரையாசிரியரிடையே வேறுபட்டு கருத்துகள் உண்டு!

நம் விளக்கத்தை வருமாறு வைக்கலாம்.

காளை மாடும் மணி என்ற மனிதனும் ஒன்றா?
வேறு வேறுதானே?
இரண்டையும் ஒன்று எனக் கூற முடியாது என்பதே , ‘ஒப்பில் வழி’!
ஆனால், இப்படிப்பட்ட ‘ஒப்பில்வழி’யாக இருப்பினும் , சில உருபுகளைப் போட்டுப் நாம் விரும்பிய பொருளை வெளிப்படுத்துகிறோம்! இந்த உருபுகளை நாம் உவம உருபுகள் என்கிறோம்! இவைகள் இடைச்சொற்களே!

காளை அன்ன மணி – இங்கே , ‘காளை’ , ‘மணி’ ஆகியன ஒப்பில்வழிச் சொற்கள்; ஆனால், ‘அன்ன’ எனும் இடைச்சொல்லால், நம்மால் ஓர் ஒப்பீட்டைத் தர முடிந்துள்ளது!இதைத்தான் தொல்காப்பியர் தன் நூற்பாவில் குறித்துள்ளார்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 28, 2022 1:49 pm

தொல்காப்பிய இலக்கணம் (606)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த நூற்பா –

அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும் (உரியியல் 19)

நடுக்கம் (trembling) எனும் குறிப்புப் பொருண்மை கொண்டவை , ‘அதிர்வு’, ‘விதிர்ப்பு’ ஆகிய இரு நூற்பாச் சொற்கள்.

‘அதிர்கண் முரசம்’ என்றக்கால், ‘நடுங்குகண் முரசம்’ என்பதாம் (இளம்பூரணர் உரை).
‘அதிர வருவதோர் நோய்’ (குறள் 429)- சேனாவரையர் உரை
அதிர்வு – நூற்பாச் சொல்
‘அதிர்’ , ‘அதிர’ – உரையாசிரியர் காட்டும் வடிவங்கள்
‘அதிர்வு என்பதூஉம், விதிர்வு என்பதூஉம் நடுக்கம் என்பதன் பொருள் உணர்த்தும்’ என்றார் தெய்வச்சிலையார். இவர் உரைப்படி, ‘அதிர்’ , ‘விதிர்’ ஆகியனவே ‘நடுக்க’ப் பொருள் தரும் சரியான உரி வடிவங்கள் என்றாகிறது. இவற்றிலிருந்தே நாம் ‘அதிர’, ‘விதிர’ , ‘அதிர்ச்சி’, ‘விதிர்ச்சி’ , ‘அதிர்ப்பு’ , ‘விதிர்ப்பு’ என்றெல்லாம் உரியடியான சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம், அதே உரிப்பொருள் கிடைக்க.

‘விதிர்ப்பு’ எனும் சொல்லாட்சிக்கு, இளம்பூரணர் காட்டிய மேற்கோள்- ‘விதிர்ப்புற்றுக் கண்ணிமையார் ’.
‘விதிர்ப்பு’ என்பதற்குச், சேனாவரையர் தந்த மேற்கோள்- ‘விதிர்ப்புற லறியா வேமக் காப்பினை ’(புறம். 20)’.
இசை, குறிப்பு, பண்பு – உரிச்சொல் உணர்த்தும் இம் மூன்றில் ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கமாகிய குறிப்பு உணர்த்தும்’ என்றார் நச்சர்.

தொடர்வது –
வார்தல் போக லொழுகன் மூன்றும்
நேர்பு நெடுமையுஞ் செய்யும் பொருள (உரியியல் 20)

இம் மூன்று உரிச்சொற்களுமே பண்பு பற்றி வந்தவை என்றார் இளம்பூரணர்.

நூற்பாச் சொற்கள் ‘வார்தல்’, ‘ஒழுகல்’ - ‘வார்கயிற் றொழுகை’ (அகம். 172)(இளம்பூரணர் மேற்கோள்).
இதற்குப் பொருள் – ‘நேர்கயிற் றொழுகை’ ; ‘நெடுங்கயிற் றொழுகை’ ஆகிய இரு பொருட்கள்(இளம்பூரணர் உரை); இவற்றில், ‘நேர்பு’ எனும் பொருளும், ‘நெடுமை’ என்ற பொருளும், ‘வார்தல்’, ‘ஒழுகல்’ ஆகிய இரு உரிச்சொற்களின் பொருட்களாக வரல் காணலாம்.

நூற்பாச் சொல் ‘போகல்’ – ‘போகு கொடி’ ; ‘ஒழுகு கொடி’ (இளம்பூரணர் மேற்கோள்கள்).
போகு – நேர்பு எனும் பொருள்படும்
ஒழுகு – நெடுமை எனும் பொருள்படும்.

‘வார்தல்’, நமக்குத் தலை வாருதல்தான் தெரியும் ; இதுதான் நேர்ப் பொருள்.
ஆனால், ‘வார்தல்’ என்பதற்கு ‘நீண்ட’ எனும் பொருளும் உள்ளது! இப் பொருள் எப்படி வந்தது? தெரியாவிட்டாலும் ‘நீண்ட’ எனும் பொருளில் வழங்குவதால், இதனை ‘உரிச்சொல்’ என்கிறோம்!

அடுத்தது -
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும் (உரி. 21)

‘தீர்தல்’ – நீங்குதல் ; பிரிதல்
‘ஊரின் தீர்ந்தான்’ – ஊரிற் பற்றுவிட்டான் (இளம்பூரணர் உரை)
ஊரிற் பற்றுவிட்டான் – ஊரிலிருந்து நீங்கினான்

‘தீர்த்தல்’ – நீக்குதல் ; பிரித்தல்
‘பேய் தீர்த்தான்’ – பேய் விடுவித்தான் (இளம்பூரணர் உரை)
பேய் விடுவித்தான் – பேயை ஓடச்செய்தான்

தீர்தல் – தன்வினை (active voice)
தீர்த்தல் – பிறவினை ( passive voice)

தெய்வச்சிலையார் உரை - “ ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற். 108) ;இது தன்வினை. ‘நோய் தீர்த்தான்’ என்பது பிறவினை- விடுத்தான் எனப்படும்”.
நச்சர், ‘இப் பிறவினை ‘தீர்வித்தல்’, ‘தீர்ப்பித்தல்’ என வாய்பாடு வேறுபட்டு இக்காலத்து வழங்குமாறும் காண்க’.
தீர்த்தல் – பிறவினை (பழைய முறை)
தீர்வித்தல் – பிறவினை (தற்கால முறை)
தீர்ப்பித்தல் – பிறவினை (தற்கால முறை)

தற்கால முறையே தெளிவு தருவதாக உள்ளது.

மொழியின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க , அந்த மொழி எளிமையாகும் என்பது மொழி வரலாறு!
வடமொழியின் பயன்பாடு அதிகரிக்காததால், இறுதிவரை அம்மொழி இறுக்கமாகவே நின்றுபோனது!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2022 5:25 pm


மொழியின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க , அந்த மொழி எளிமையாகும் என்பது மொழி வரலாறு!
வடமொழியின் பயன்பாடு அதிகரிக்காததால், இறுதிவரை அம்மொழி இறுக்கமாகவே நின்றுபோனது!
***


அறிவுப்பூர்வமான  கணிப்பு .

[You must be registered and logged in to see this link.]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 29, 2022 1:50 pm

நன்றி இரமணியன் அவர்களே! தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 5 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 29, 2022 1:51 pm

தொல்காப்பிய இலக்கணம் (607)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உரியியல் தொடர்கிறது –
கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு (உரி. 22)

கெடவரல் (உரிச்சொல்) – விளையாட்டு
பண்ணை (உரிச்சொல்) – விளையாட்டு

இளம்பூரணர் உரை – “கெடவரல் என்றக்கால் , விளையாட்டு ஆயம் என்பதாம்”.
விளையாட்டு ஆயம் – விளையாட்டுத் தோழியர் கூட்டம்.

இளம்பூரணர் உரை – “பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்(மெய்ப்பாட்டியல் 1), என்றக்கால்,விளையாட்டுள் தோன்றிய பொருள் என்பதாம் “.
கெடவரல் – இதற்கு நேர்ப்பொருள், ‘கெடுதி வருதல்’; ஆனால், உரிப்பொருளாக வந்தது – விளையாட்டு.

‘கெடவரலும் பண்ணையும் விளையாட்டாகிய குறிப்புணர்த்தும்’என்றார் சேனாவரையர்.

அது சரி!
விளையாட்டைத்தான் பார்க்க முடியுமே, பிறகு ஏன் பண்புப் பொருள் உணர்த்தும் எனக் கூறாமல், குறிப்புப் பொருள் உணர்த்தும் என்கிறார் சேனாவரையர்?

இதற்கு விடை நச்சர் கூறுகிறார்: ‘விளையாட்டு என்றது விளையாட்டுக் கருத்தினை’!
நச்சர், ‘எல்லாம் சரிதான்! விளையாட்டைப் பார்க்கலாம்தான்; ஆனால், இங்கே கூறப்பட்டது விளையாட்டுக் காட்சியை அல்ல! விளையாட்டு எனும் கருத்தினை!’ என்பதாக, அவரின் மேற் சுருக்க விடையை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்!
நச்சர் , சேனாவரையர் எழுதிய தொல்காப்பிய உரை ஓலைச்சுவடியைக் கையில் வைத்துக்கொண்டுதான் உரை எழுதியுள்ளார் எனக் கூற மேற் சுருக்க விடை நம்மை இட்டுச் செல்கிறது.
மேலும், நச்சர் தன் மாணவர்களுக்கு விடை கூறுவதாகவும் அவரின் உரை அமைந்துள்ளது.
தொல்காப்பியம் படிக்கும்போது இம்மாதிரியான ஆசிரியர் – மாணவர் சூழலை நாம் எப்போதும் மறத்தல் ஆகாது.

தொடரும் நூற்பா –
தடவுங் கயவு நளியும் பெருமை (உரி. 23)

இங்கு சுட்டப்படும் மூன்று உரிச்சொற்கள் – ‘தட’ , ‘கய’, ‘நளி’
மூன்று உரிச்சொற்களுக்கும் பொருள் – பெருமை (bigness); இங்கே ‘பெருமை’யை ‘மாட்சிமை’ என்பது போலப் கொள்ளக்கூடாது; ‘பெரிய’ என்றே கொள்ளவேண்டும்.
இம் மூன்று உரிச்சொற்களுக்கும் தெய்வச்சிலையார் தந்த மேற்கோள்களைத் வருமாறு துலக்கி வரையலாம்:
தட – ‘தடக்கை’ (புறம். 294)(தடக்கை – வலிய பெரிய கை)
கய – ‘கயவாய்’ (அகம். 118)(கயவாய் – பெரிய வாய்)
நளி – ‘நளி மலை’ (புறம். 150) (நளி மலை – பெரிய மலை)

இம் மூன்று உரிச்சொற்களுமே பண்புணர்த்தும் உரிச்சொற்களாம்.

மேல் மூன்று உரிச்சொற்களுக்கும் , மேலே குறித்த பொருள் அல்லாமல், வேறு பொருள் இருப்பதையும் அடுத்தடுத்துப் பேசுகிறது தொல்காப்பியம்.

அவற்றுட்
தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும் (உரி. 24)

“தட என்பது பெருமையே அன்றிக், கோட்டப் பொருளினையும் விளக்கும்” – இளம்பூரணர்.
கோட்டம் – வளைவு
இளம்பூரணர் தந்த மேற்கோள் – ‘தடமருப் பெருமை’
தடமருப் பெருமை – வளைந்த கொம்பையுடைய எருமை.

கோட்டம் – இது பண்புப் பொருள்

அடுத்து,
கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும் (உரி. 25)

“கய என்னும் சொல் பெருமையே அன்றி மென்மைப் பொருளும் படும்” – இளம்பூரணர்.
‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137) – மேற்கோள் காட்டியவர் இளம்பூரணர்.
கயந்தலை மடப்பிடி – மென்மையான தலையை உடைய பெண் யானை.

மென்மை – இது பண்புப் பொருள்.

மூன்றாவதாக,
நளியென் கிளவி செறிவு மாகும் (உரி .26)

இளம்பூரணர் , “நளி என்னும் சொல், பெருமையே அன்றிச் செறிவுப் பொருளும் படும்” என்றார்.
“நளியிருள் என்றக்கால் , செறியிருள் என்பதாம்” – இளம்பூரணர்.
செறி இருள் – செறிந்த இருட்டு

செறிவு – குறிப்புப் பொருள்
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 06, 2022 11:44 am

தொல்காப்பிய இலக்கணம் (608)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உரியியலில் அடுத்த நூற்பா-

பழுது பயமின்றே (உரி. 27)

‘பழுது’ எனும் உரிச்சொல்லுக்குப் ‘பயமின்று’ என்பது பொருள்.
‘பயமின்று’- இந்தச் சொல்லுக்குப் ‘பயமே இல்லை’ என்பது பொருள் அல்ல!
பயமின்று – பயனின்று (uselessness)

‘பழுதே வந்தார்’ – பயனின்றியே வந்தார் (இளம்பூரணர் உரையைத் தழுவி).
பழுது – குறிப்பொருள் உணர்த்தும் உரிச்சொல்.
பழுது (பெயர்ச்சொல்) – செயற்பாட்டுக் குறைவு ; ‘வண்டி பழுதானது’.
பழுது (உரிச்சொல்) - பயனின்மை ; ‘பழுதுகழி வாழ்நாள்’ (= பயனற்றுக் கழியும் வாழ்நாள்)

‘பழுது’ என்பது ‘பாழ்’ என்ற அடியிலிருந்து வந்திருக்கும் என்று குறிப்பிட்டு, வேர்விளக்கம் தெரிவதால், இதனைப் பெயர்ச்சொல்லாகக் கருதியுள்ளது தமிழ் லெக்சிகன் ( ‘பழுது paḻutu , n. prob. பாழ்-. 1. Unprofitableness; பயனின்மை. (தொல். சொல். 324.).

தொடரும் உரிச்சொல்-

சாயன் மென்மை (உரி. 28)

பண்புப் பொருள் காட்டும் உரிச்சொல் ‘சாயல்’.
‘சாயல் மார்பு’ (பதிற். 16) – மென்மையான மார்பு

சாயல் (பெயர்ச்சொல்) – தோற்றம்; உருவம்;’அவர் ஒரு சாயலுக்கு மாமா மாதிரியே இருப்பார்’.
சாயல் (உரிச்சொல்) – மென்மை ;’மயில் அல்லவோ சாயல் தந்தது’(திரைப் பாடல்).

உரியியலின் அடுத்த நூற்பா-

முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே (உரி. 29)
முழுது (உரிச்சொல்)– மீதியின்றி
முழுது (பெயர்ச்சொல்) – முழுவதும்; முற்றும்

‘உலக முழுதாண்ட’ (சிலப். அந்தி.1)(தெய்வச்சிலையார் மேற்கோள்)
உலக முழுதாண்ட – உலகத்தை மீதியின்றி ஆட்சி செய்த.
முழுது - குறிப்புப் பொருள் உணர்த்தும் உரிச்சொல்.

நமக்கு ஏன் வம்பு என்று இருக்காதீர் என்பார் போல ‘வம்பு’ எனும் உரிச்சொல்லைக் காட்டுகின்றார் தொல்காப்பியர் –

வம்பு நிலையின்மை (உரி. 30)

வம்பு (உரிச்சொல்) – நிலையற்ற தன்மை.
‘வம்ப மாரி’ (குறுந். 66) = நிலையில்லாத மழை
வம்பு (பெயர்ச்சொல்) – இடுக்கண் விளைத்தல் ; ‘ஊர் வம்பு’

நிலையின்மைப் பொருளாகிய குறிப்புப் பொருள் உணர்த்தும் உரிச்சொல்- வம்பு.

தொடர்வது,
காதல் எனும் குறிப்புப் பொருள் உணர்த்தும் உரிச்சொல் – ‘மாதர்’.

மாதர் காதல் (உரி. 31)

‘மாதர் நோக்கு’ – காதல் நோக்கு
மாதர் (பெயர்ச்சொல்) – பெயர்ச்சொல்
மாதர் (உரிச்சொல்) - காதல்

தொடரும் நூற்பா:

நம்பு மேவு நசையா கும்மே (உரி. 32)

இங்கு கூறப்படும் உரிச்சொற்கள் – ‘நம்பு’ ; ‘மே’
நசை – விருப்பம் ; ஆசை
நசை – இது குறிப்புப் பொருள்
‘நன்மொழி நம்பி’ (அகம். 198) (இளம்பூரணர் மேற்கோள்)
நன்மொழி நம்பி = நன்மொழியில் நம்பிக்கை கொண்டு ×
நன்மொழி நம்பி = நன்மொழியை விரும்பி √

‘மேஎ யுறையும்’ (மலைபடு. 82) (சேனாவரையர் உரை)
‘மேஎ யுறையும்’ – விரும்பி வாழும்
தொல்காப்பிய நூற்பாவில் ‘மே’ என்றுதான் உள்ளது; ஆனால் பாட்டில் அளபெடை பெற்று வந்துள்ளது; இருப்பினும் இஃது உரிச்சொல்லே.

நூற்பாவில் வந்தது ‘மே’யா? ‘மேவு’ என்பதா?

சேனாவரையர், ‘மே - நசையாக’ என்று குறித்துள்ளதால், அவர் ‘மே’ என்ற பாடத்தையே கொண்டார் எனலாம்.

தெய்வச்சிலையார் , ‘மேவு என்னும் சொல்லும்’ என உரையிற் கூறுவதால், அவரின் பாடம் – ‘மேவு’.
வெள்ளைவாரணனார், ‘நன்பு மேவு என்பன இரண்டும் ’ என்பதால், அவர் பாடமும்- ‘மேவு’.
மேல் மலைபடுகடாம் மேற்கோள் ‘மே’எனும் பாடத்திற்கே ஆதரவாக உள்ளது.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி (லெக்சிகன்) , இரண்டு பாடங்களுக்கும் இடமளித்து , தொல்காப்பிய உரிப்பொருளையே தருகிறது; அகராதியியல் (lexicography) நோக்கில் இது சரியானதே. சொல்லாக்க நெறியில், சேனாவரையர் பாடம் பொருந்துவதாகலாம்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 08, 2022 12:36 pm

தொல்காப்பிய இலக்கணம் (609)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது நான்கு குறிப்புப் பொருள் தரும் உரிச்சொற்கள் – ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய்.

ஓய்த லாய்த நிழத்தல் சாஅ
யாவயி னான்கு முள்ளத னுணுக்கம் (உரி.33)

உள்ளதன் நுணுக்கம் – ஒரு பொருளுக்குள்ள அளவின் நுணுக்கம்.

ஓய்தல் (பெயர்ச்சொல்) – ஓய்வில் இருத்தல்
ஓய்தல் (உரிச்சொல்) – உள்ளதன் நுணுக்கம்

‘ஓய்கலை ஒருத்தல் என்றக்கால், நுணுகிய கலை யொருத்தல் என்பதாம்’ – இளம்பூரணர்.
கலை ஒருத்தல் – நுணுகிய கலைமான்
’ஓய்’ என்பதே ‘ஓய்தல்’ என்ற நூற்பாச் சொல்லின் உரி அடி என்பதைக் கவனிக்க.

‘கையும் மெய்யும் ஆய்ந்திருந்தார் என்றக்கால், சுருங்கியிருந்தார் என்பதாம்’ – இளம்பூரணர்.
ஆய்தல் (பெயர்ச்சொல்) – ஆராய்தல்
ஆய்தல் (உரிச்சொல்) – சுருங்குதல்


நிழத்த யானை (மதுரைக். 303) – மெலிந்து நுணுகிய யானை (இளம்பூரணர்)

கடும்புனற் சாஅய் (நெடுநல். 18) – மிகு நீர் சுருங்கி (இளம்பூரணர்)

சாய்தல் (பெயர்ச்சொல்) – சாய்ந்திருத்தல்
சாய்தல் (உரிச்சொல்) - சுருங்குதல்
சாஅய் – சுருங்கி
உரிசொல்லான ‘சாய்’ , அளபெடை பெற்று வந்ததைக் கவனிக்க.
சாய் + தல் = சாய்தல்
சாய்- பகுதி(உரிச்சொல்)
தல் – தொழிற்பெயர் விகுதி

இப்போது ‘புலம்பு’.
உங்களைப் புலம்பச் சொல்லவில்லை ; இதுதான் நாம் பார்க்கப்போகும் உரிச்சொல்!
புலம்பே தனிமை (உரி. 34)
தனிமை என்பது குறிப்புப் பொருள் உணர்த்துவது.

புலம்பு (முன்னிலை வினை) – ‘அழுது புலம்பு’
புலம்பு (உரிச்சொல்) – தனிமை
‘புலம்புவிட் டிருந்தார்’(மலைபடு.) – இளம்பூரணர் தந்த மேற்கோள்.
புலம்பு விட்டிருந்தார் – தனிமையைத் தவிர்த்திருந்தார்.

புலிப்பல் கோத்த புலிம்புமணித் தாலி (அகநா. 7:18) (சேனாவரையர் மேற்கோள்).
புலிப்பல் கோத்த புலிம்புமணித் தாலி – புலிப்பல்லைக் கோத்த , தனிமணித் தாலி.
மணி – கிணுகிணுக்கும் மணி அல்ல; முத்து, பவளம், நீலம் முதலியவை ‘மணி’ என்றே குறிக்கப்பெறும்.

அடுத்த உரிச்சொல் ‘துவன்று’.

துவன்று நிறைவாகும் (உரி. 35)

துவன்று (உரிச்சொல்) – நிறைவு ; குறிப்பொருள் பயப்ப்பது.
‘இளையரும் முதியருங் கிளையுடன் துவன்றி (பெரும்பாண். 268)
இளையோரும் முதியோரும் உறவுகளுடன் நிறைந்து – என்பது பொருள்.

‘துவன்று’ என்பதை உரிச்சொல்லாகத் தொல்காப்பியம் அறிமுகப்படுத்த, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி(லெக்சிகன்) ‘பெயர்ச்சொல்’ எனக் குறிப்பிடுகிறது. குறிப்பிட்டுத், தொல்காப்பயர் தந்த அதே பொருளையே தந்து, உடன் தொல்காப்பிய உரியியல் நூற்பாவையும் (உரி. 35) மேற்கோள் காட்டுகிறது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியும், ‘துவன்று’ என்பதற்குத் தொல்காப்பியர் தந்த பொருளையே கொடுத்துப் , ‘பெயர்ச்சொல்’ எனக் குறிக்கிறது; தொல்காப்பியரின் உரியியல் நூற்பாவையே(உரி. 35) மேற்கோளும் காட்டுகிறது.
சங்க இலக்கியங்களில் பயின்ற ‘துவன்று’ , தொல்காப்பியர் உரிச்சொல்லுக்குத் தந்த அதே பொருளைத் தந்ததும், பெயர்ச்சொல்போல அங்கெல்லாம் வந்ததும் இதற்குக் காரணம் எனலாம்.
இவ்வாறு,தொல்காப்பியர் வகுத்த ‘உரிச்சொற்கள்’ என்ற சொல் வகையையே இல்லாமல் செய்துள்ளன தமிழ் அகராதிகள் – செ.ப.த.பே. அகராதி உட்பட.

‘முரஞ்சன்’ – இது யாருடைய பெயரும் அல்ல; குறிப்புப் பொருண்மை கொண்ட அடுத்த உரிச்சொல்.

முரஞ்சன் முதிர்வே (உரி. 36)

இளம்பூரணர் மேற்கோள்- ‘கோடுபல முரஞ்சிய கோளி யாலம்’ (மலைபடு. 268)
கோடுபல முரஞ்சிய கோளி யாலம்- கிளைகள் பல முதிர்ந்த பெரிய ஆலமரம்.

முதிர்வு – குறிப்புப் பொருள் கொண்டது.

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 12, 2022 2:27 pm

தொல்காப்பிய இலக்கணம் (610)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது – உரிச்சொல், ‘வெம்மை’.

வெம்மை வேண்டல் (உரி. 37)

வெம்மை (பெயர்ச்சொல்) – வெப்பம்
வெம்மை (உரிச்சொல்) – வேண்டல்; விரும்பல் (desire)

‘வெம்மை’ எனும் உரிச்சொல்லுக்கு ‘வேண்டல்’ பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் கொடுத்த தொடர் - ‘நீ வெம்மையள்’ என்றக்கால், ‘நீ வேண்டப்படுபவள்’ என்பதாம்.
இதற்குச் சேனாவரையர் தந்த மேற்கோள் – ‘வெங்காமம்’ (அகம். 15)
வெங்காமம் – விரும்பும் காமம்

இந்த உரிச்சொல்லானது , விரும்புதலாகிய பண்பு உணர்த்தும் என்றார் சேனாவரையர்.
இப்போது, உரிச்சொல் – ‘பொற்பு’.

பொற்பே பொலிவு (உரி. 38)

‘பொற்பு’ எனும் உரிச்சொல், ‘பொலிவு’ எனும் குறிப்புப் பொருள் பயக்கும்.

‘அணிகலம் பொற்ப’ என்றக்கால், பொலிய என்பதாம் – இளம்பூரணர் உரை.
‘பொற்பு’ என்றால், பொன்னால் ஏற்பட்ட ஒன்று என்பது போல்தான் பொருள் வரும் என்பது நம் எதிர்பார்ப்பு; ஆனால், முற்றிலும் வேறானதாகப் ‘பொலிவு’ என்ற பொருள் , பாடல்களில், விழைந்துள்ளதால், ‘பொற்’பை நாம் உரிச்சொல் என்கிறோம்.

குறிப்புப் பொருள்தரும் அடுத்த உரிச்சொல், ‘வறிது’.

வறிது சிறிதாகும் (உரி. 39)

வறிது (பெயர்ச்சொல்) – உள்ளீடற்ற; ‘வறிதாகின்றென் மடங்கெழு நெஞ்சே’ (ஐங்குறுநூறு 17)
வறிது (உரிச்சொல்) – சிறிது
‘வறிது நெறி யொரீஇ’ என்றக்கால், சிறிது நெறி ஒரீஇ என்பதாம் – இளம்பூரணர் உரை.
ஒரீஇ – நீங்கி

‘வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி’(பதிற். 24)- நச்சர் உரை.

வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி – சிறிது வடக்கே தாழ்ந்த சீருடைய வெள்ளிக் கோள்.

அடுத்த குறிப்புப் பொருள் தரும் உரிச்சொல் - ‘ஏற்றம்’

ஏற்ற நினைவுந் துணிவு மாகும் (உரி. 40)

ஏற்றம் (உரிச்சொல்) – நினைவு (குறிப்புப் பொருண்மை); துணிவு (குறிப்புப் பொருண்மை)

ஏற்றத் திருந்தார் என்றக்கால், நினைத்திருந்தார் என்பதூஉம், துணிந்திருந்தார் என்பதூஉம் ஆம் – இளம்பூரணர் உரை.

ஏற்றம் (பெயர்ச்சொல்) – கிணற்றில் நீர் அள்ளப் பயன்படும் நீள் கழி.‘வயலில் ஏற்றம் இறைத்தார்’
ஏற்றம் (உரிச்சொல்) – நினைவு; துணிவு

சேர்ப்பன் கொடுமை யேற்றி (குறுந். 145)- நச்சர் உரையில் மேற்கோள்.
சேர்ப்பன் கொடுமை யேற்றி- நெய்தல் நிலத் தலைவனின் கொடுமையை நினைத்து.

எற்றமி லாட்டியென ஏமுற்றாள் (கலி. 144) - நச்சர் உரை மேற்கோள்.
எற்றமி லாட்டியென் ஏமுற்றாள் - துணிவு இல்லாதவளாகப் பித்துப்பிடித்தவள் ஆனாள்.
எற்றம் + இலாட்டி = எற்றமிலாட்டி
இல் + ஆட்டி = இலாட்டி ; இல் – இல்லாத ; ஆட்டி = பெண்
கலித்தொகையில் , ‘ஆண்’ என்பதற்கு நேர்ப் பெண்பால் ‘ஆட்டி’ என அறியக்கிடக்கிறது.
’ஆளன்’ என்பதற்குப் பெண்பாலும் ‘ஆட்டி’தான்.
மணவாளன் -ஆண்பால்
மணவாட்டி - பெண்பால்

நச்சர், ’ஏற்றி’ என்ற எடுத்துக்காட்டைத் (குறுந். 145) தரும்போது, அவர் உரிச்சொல்லின் வடிவத்தை ‘ஏற்றம்’ எனக் கருதியமை புலனாகிறது; ஆனால், ‘எற்றம்’ என்ற எடுத்துக்காட்டைக் (கலி. 144) காட்டும்போது , அவர் ‘எற்றம்’ என்பதே உரிச்சொல் வடிவம் எனக் கருதியமையும் தெரியவருகிறது.

தொல்காப்பியர் ‘ஏற்றம்’ என்ற உரிச்சொல்லைக் காட்டினாலும் , அது ‘எற்றம்’ எனத் திரியலாம் என்று நச்சர் கருதியிருக்கலாம்.
ஆனால், சுவடியியல் (manuscriptology) நோக்கில் கூறுவதானால், ஓலைகளில் ‘எ’ என்றுதான் அந்தக் காலத்தில் எழுதுவார்கள்; படிப்பவரே இடத்துக்கு ஏற்றாற்போல குறில் நெடில் வேறுபாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சூழல் காரணமாகவும் நச்சரின் இருவேறு நோக்குகள் ஏற்பட்டிருக்கலாம்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 18, 2022 6:52 pm

தொல்காப்பிய இலக்கணம் (611)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது உரிச்சொல் – ‘பெட்பு’

பிணையும் பேணும் பெட்பின் பொருள (உரி. 41)

இதற்குச் சேனாவரையர் உரை – ‘….பிணையும் பேணும் , பெட்பின் பொருளாகிய புறந்தருதல் என்னும் குறிப்புணர்த்தும்’.
பெட்பு (உரிச்சொல்) – புறந்தருதல் ; பேணி வளர்த்தல் ; ‘ஈன்று புறந்தருதல்’ என்ற அடி சான்று.
இளம்பூரணர் உரை- ‘பெட்டல் என்பது புறந்தருதல்’

பெட்பு (பெயர்ச்சொல்) – விருப்பம் (சூடாமணி நிகண்டு)
பெட்பு (உரிச்சொல்) - புறந்தருதல் ; பிணைதல் ; பேணல்

பிணை என்பதற்கு எடுத்துக்காட்டு -

‘அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும்’ – சேனாவரையர் மேற்கோள்
அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும் – அரிய புறந்தருதலை (பாதுகாவலை) நீக்கி, வேள்வி செய்த காலத்திலும்.

பேண் என்பதற்கு எடுத்துக்காட்டு –

‘பேணினன் அல்லனோ மகிழ்ந’ (அகம். 16) – இளம்பூரணர் மேற்கோள்.
பேணினன் அல்லனோ மகிழ்ந – புறந்தந்தேன் அல்லவோ மருதநிலத் தலைவனே.

‘அமரர்ப் பேணி’ (புறம். 99) – சேனாவரையர் மேற்கோள்.
அமரர்ப் பேணி – வானோரைப் பாதுகாத்து

நூற்பாச் சொல்லான ‘பெட்பு’ என்பதற்குப் ‘பெட்டல்’ என்றொரு வடிவத்தைக் காட்டினாரா இளம்பூரணர்? நச்சர் , ‘பெட்டு’ என்ற இன்னொரு வடிவத்தைக் காட்டுகிறார் – ‘பெட்பின் பகுதியாகிய பெட்டு என்னும் உரிச்சொல்லை….’. மூன்று வடிவங்களுமே உரிச்சொல் வடிவங்களே.

அடுத்த உரிச்சொல் – ‘பணை’
குறிப்புப் பொருள் உணர்த்தும் இவ் வுரிச்சொல் பற்றிய நூற்பா:

பணையே பிழைத்தல் பெருப்பு மாகும் (உரி. 42)

பணை (பெயர்ச்சொல்) – மூங்கில்
பணை (உரிச்சொல்) – பிழைத்தல் ; பெருப்பு
பிழைத்தல் – தவறுதல்
பெருப்பு - பெருத்தல் ; பருத்தல்

’பணைத்துப்போய் வீழ்ந்தது’ என்றக்கால், பிழைத்துப்போய் வீழ்ந்தது என்பதாம்- இளம்பூரணர் உரை.
பிழைத்துப்போய் – தவறிப்போய்
‘பணைத்தோள்’ என்றக்கால், பெருந்தோள் என்பதாம் – இளம்பூரணர் உரை.

இப்போது வரும் உரிச்சொல் – ‘படர்’:

படரே யுள்ளல் செலவு மாகும் (உரி. 43)

படர் (பெயர்ச்சொல்) – வருத்தம் ; ‘படர் கூர’ (கலித்.30)- வருத்தம் மேலிட.
படர் (உரிச்சொல்) – உள்ளல் ; செலவு
உள்ளல் – நினைத்தல் (thinking)
செலவு – செல்லுதல் (moving away)

‘படர்மலி வெற்பர்’ என்றக்கால், உள்ளல்மலி வெற்பர் என்பதாம் – இளம்பூரணர்.
உள்ளல்மலி வெற்பர் – நினைப்பு மேலிட்ட மலைநாடன்.

‘ஆறு படர்ந்தார்’ என்றக்கால், சென்றார் என்பதாம் – இளம்பூரணர்.
படர்ந்தார் – சென்றார்

படர் – குறிப்புப் பொருள் உணர்த்திற்று.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 22, 2022 5:20 pm

தொல்காப்பிய இலக்கணம் (612)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உரியியலில் இப்போது , உரிச்சொற்கள் – ‘பையுள்’; ‘சிறுமை’:-

பையுளும் சிறுமையும் நோயின் பொருள (உரி. 44)

பையுள் (பெயர்ச்சொல்) – வறுமை (சூடாமணி நிகண்டு)
பையுள் (உரிச்சொல்) – நோய்; துன்பம்
‘பையுள் நல்யாழ்’ என்றக்கால், நோய்செய்யும் நல்யாழ் என்பதாம் – இளம்பூரணர்.
‘பையுள் மாலை’ (குறுந். 195) – சேனாவரையர்.
பையுள் மாலை – துன்பம் தரும் மாலைப் பொழுது.
பையுள் – குறிப்பொருள் உணர்த்துவது.

சிறுமை (பெயர்ச்சொல்) – சின்னது; சிறியதாயிருத்தல்
சிறுமை (உரிச்சொல்) – நோய்; துன்பம்
‘சிறுமை யுறுபவோ செய்பறி யலரே’ (நற். 1) - (பிரிதல் எனும்) துன்பம் தரும் செயலைச் செய்ய நினைப்பாரோ? அவ்வாறு செய்யத் தெரியாதவர் அவர்!
சிறுமை – குறிப்பொருள் நல்குவது.

இனி, ‘எய்யாமை’ எனும் உரிச்சொல்!

‘எய்யாமை’ என்றதும், நாம் என்ன நினைப்போம்?
ஏதோ ‘அம்பு எய்யாமை’ பற்றியது போல – என்றுதானே நினைப்போம்?
‘அது சரிதான்! ஆனால், வேறு ஒரு பொருளும் இருக்கிறது; இதுவே உரிப்பொருள்’ – என்று கூறவருகிறார் தொல்காப்பியர்:

எய்யாமையே அறியாமையே (உரி. 45)

எய்யாமை (பெயர்ச்சொல்) – அம்பு எய்யாதிருத்தல்
எய்யாமை (உரிச்சொல்) – அறியாமை (ignorance)

எய்யா மையலை (குறிஞ்சிப். 8) என்றக்கால், அறியா மையலை என்றவாறாம்- இளம்பூரணர்.
’எய்யாமை’ எனும் உரிச்சொல், ‘அறியாமை’ எனும் குறிப்புப் பொருள் உணர்த்தியது.

’இது நன்று’ என்கிறீர்களா?
இந்த ‘நன்று’க்கும் ஓர் உரிப்பொருளைக் கண்டுபிடித்துக் கூறுகிறார் தொல்காப்பியர்!:
நன்று பெரிதாகும் (உரி. 46)

நன்றும் அரிதுற்றனையாற் பெரும (அகம் 10)- உரையாசிரியர்தம் மேற்கோள்.
பதிப்புக்குப் பதிப்பு இந்த அடி வேறுபடுகிறது; ‘அரிது உற்றனையால்’ என்றும், ‘அரிது துற்றனையால்’ எனவும் , ‘அரிதுற்றனையால்’ என்றும் அச்சிடப்பட்டுள்ளன.
செம்பதிப்பு நோக்கில் (Critical Edition) இவ்விடம் நோக்கற்பாலது.

நன்றும் அரிது துற்றனையாற் பெரும - நன்றானதும் அருமையானதுமானதை மேற்கொண்டாய் பெருமானே!
அரிது துற்றனை – அரியதை மேற்கொண்டு நடந்தாய்
துற்றுதல் – மேற்கொண்டு நடத்தல் (லெக்சிகன்)
‘நன்று என்பது வினையெச்சமாதல் கொள்க’ – சேனாவரையர் உரை.

‘நல்லது என்னும் பொருள்படும் குறிப்பு வினைமுற்றன்று இது. ‘பெரிதாக’ என வினையெச்சப் பொருளில் வரும் உரிச்சொல் இது’ – சிவலிங்கனார் ‘நன்று’ எனும் உரிச்சொல் பற்றி.

‘பெருமை என்னாது பெரிது என்றதனான் , நன்று என்பது வினையெச்சம் ஆயிற்று’ – நச்சர் விளக்கம்.

நன்று (குறிப்பு வினைமுற்று) – நல்லது
நன்று (உரிச்சொல்) – பெரிது; பெரிதாக
நன்று – குறிப்புப் பொருளுணர்த்தும் உரிச்சொல்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 25, 2022 11:07 am

தொல்காப்பிய இலக்கணம் (613)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இனி, உரிச்சொல் – ‘தெவு’:-

தெவுக் கொளற் பொருட்டே (உரி. 41)

தெவு (உரிச்சொல்) – கொளல்; கொள்ளுதல்(receiving)

நீர்த்தெவு நிரைத்தொழுவர் (மதுரைக். 89)

நீர்த்தெவு – நீர் மொள்ளும் ; நிரைத்தொழுவர் – வரிசையாக நிற்கும் பணியாளர்கள்.
இறைகூடையால் (இடாவால்) நீரை முகந்து (மொண்டு) வரிசையாக ஆட்கள் நின்றுகொண்டு வேறிடம் சேர்ப்பர்.
தெவு – குறிப்புப் பொருள் நல்குவது.

அடுத்த உரிச்சொல்லை நாம் முகப்போம்:

தாவே வலியும் வருத்தமு மாகும்(உரி. 48)

இங்கே உரிச்சொல்- ‘தா’
தா (முன்னிலை வினை) – கொடு
தா (உரிச்சொல்) – 1.வலி 2.வருத்தம்
‘வலி’, ‘வருத்தம்’ – இரண்டும் குறிப்புப் பொருள் உடையன.

‘தா – வலி’ என்பதற்கு எடுத்துக்காட்டு:
தாவில் நன்பொன் (அகம். 212) – இளம்பூரணர்

தாவில் நன்பொன் - வன்மையில்லாது நெகிழும் தன்மையுடைய சிறந்த பொன் (பொ.வே.சோமசுந்தரனார் உரை)
வலி – வலிமை; மூட்டுவலி அல்ல!

‘தா – வருத்தம்’ என்பதற்குக் காட்டு:
கருங்கட் டாக்கலை (குறுந். 69) – இளம்பூரணர் உரை.
கருமை+ கண்+ தா+ கலை = கருங்கட் டாக்கலை
கருங்கட் டாக்கலை – கருமையான கண்களையும் வருத்தத்தையும் உடைய கலைமான்.

பார்க்கப்போகும் உரிச்சொல் – ‘தெவ்வு’ (இது குறிப்புப் பொருள் கொண்டது)

தெவ்வுப் பகையாகும் (உரி. 49)

தெவ்வு (உரிச்சொல்) – பகை
தெவ்வுப் புலம் – பகைப் புலம் ; பகைவர் நிலம்

தொடரும் உரிச்சொற்கள் மூன்று – 1. ‘ விறப்பு’ 2. ‘உறப்பு’ 3. ‘வெறுப்பு’

விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே (உரி. 50)

விறப்பு, உறப்பு, வெறுப்பு – இம் மூன்று உரிச்சொற்களும் ‘செறிவு’ எனும் ஒரே பொருளையே தருவன. மூன்றுமே குறிப்புப் பொருளையே நல்குவன.

விறப்பு (பெயர்ச்சொல்) – திமிர் ; ‘உன் விறப்பை என்னிடம் காட்டாதே’
விறப்பு (உரிச்சொல்) – செறிவு

உறப்பு (பெயர்ச்சொல்) – பிளப்பு (லெக்சிகன்)
உறப்பு (உரிச்சொல்) – செறிவு

வெறுப்பு (பெயர்ச்சொல்) – விருப்பின்மை ; ‘முதியோரை வீட்டில் வெறுக்கிறார்கள்’
வெறுப்பு (உரிச்சொல்) - செறிவு

உரிச்சொல் ‘விறப்பு’க்கு எடுத்துக்காட்டு :
‘விறந்த காப்பொடு என்றக்கால் செறிந்த காப்பொடு என்பதாம்’ – இளம்பூரணர்.

உரிச்சொல் ‘உறப்பு’க்கு எடுத்துக்காட்டு :
‘உறந்த விஞ்சி யுயர்நிலை மாடம் என்புழி, செறிந்த இஞ்சி என்பதாம்’ – இளம்பூரணர்.
உறந்த + இஞ்சி = உறந்த விஞ்சி
இஞ்சி – மதில் (wall);தேநீரில் போடும் இஞ்சி அல்ல!
உறந்த விஞ்சி – செறிந்த சுவர்

உரிச்சொல் ‘வெறுப்பு’க்கு எடுத்துக்காட்டு :
‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் (புறம். 53) – சேனாவரையர் மேற்கோள்.
வெறுத்த கேள்வி – செறிவான கேள்வியறிவு
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக