புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
62 Posts - 41%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
9 Posts - 6%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
3 Posts - 2%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
21 Posts - 5%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
7 Posts - 2%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 8 of 84 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 46 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 26, 2013 9:39 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (46)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘குறைச் சொற்கள் ’என்று பல சொற்கள் தமிழில் வரும் !

இவை எழுதத் தெரியாமல் தவறாக எழுதப்படுபவை அல்ல ! புலவர்களும் பிறரும் அறிந்தே பயன்படுத்துபவை !

குறைச் சொற்கள் பற்றித் தொல்காப்பியர் இரண்டு நூற்பாக்களை யாத்துள்ளார் !

1. “குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல் ” (எச்சவியல் 57)

2. “குறைத்தன வாயினும் நிறைப்பெயர் இயல” (எச்சவியல் 58)

“வழிவழியாகச் சில சொற்களைப் புலவர்களும் மற்றவர்களும் எவ்வாறு ‘குறைச் சொற்க’ளாக எழுதுகிறார்களோ அந்த வழியை அறிந்து, ‘குறைச் சொற்கள்’ இன்னவை என்று அறிந்துகொள்ளுங்கள் !” – இதுவே முதல் நூற்பாவின் பொருள் .

“குறைச் சொற்களாகச் சொற்கள் பயின்றாலும் அவை முழுச் சொற்கள் போலவே பொருளால் இயங்கும் !” – இதுவே இரண்டாம் நூற்பாவின் பொருள்.

இவ்வளவுதான் தொல்காப்பியர் கூறியவை !

உரையாசிரியர்கள் மூலம் ‘குறைச் சொற்கள் ’ மூன்று வகைப்படும் என அறியவருகிறோம் !

எடுத்துக் காட்டுகள் மூலம் இவற்றை வருமாறு தரலாம் :-

முழுச் சொல் ----- குறைச் சொல் ---- பெயர்

தாமரை --- மரை --- முதற் குறை
ஓந்தி --- ஓதி --- இடைக் குறை
நீலம் --- நீல் --- கடைக் குறை

இந்த மூன்று எடுத்துக் காட்டுகளைத்தான் இளம்பூரணரிலிருந்து நேற்று நூல் எழுதியவர் வரை காலங்காலமாகக் கூறி வருகின்றனர் !

வேறு எடுத்துக் காட்டுகளையும் நாம் காணலாம் :-

முழுச் சொல் ---- குறைச் சொல் ---- பெயர்

இலங்கை --- லங்கை --- முதற் குறை
தின்ன --- தின --- இடைக் குறை
மான் --- மா --- கடைக் குறை

மேல் நூற்பா இரண்டில், ‘பெயர்’ எனும் சொல் வந்துள்ளது அல்லவா ? அதனைக் கொண்டு ‘குறைச் சொற்கள் எல்லாமே பெயர்ச் சொற்களில்தான் வரும் ’ என்று இளம்பூரணர் கருதினார் .

“அது தவறு ; வினைச் சொற்களிலும் குறைச் சொற்கள் வரும் ; இதனைத் ‘தன்னினம் முடித்தல்’ என்ற உத்தியால் கொள்ளலாம் !” – என முதன் முதலிற் கூறியவர் நச்சினார்க்கினியர் !

நச்சினார்க்கினியர் காட்டிய உதாரணம் -

என்பாரிலர் - என்பிலர் (இடைக் குறை)

மேல் எடுத்துக்காட்டில் ‘தின்ன – தின - இடைக்குறை’ என்றோமல்லவா?அது வினைச்சொல்லில் வந்த குறைச்சொல்தானே? ‘உண்ண’ என்பது ‘உண’ என வரின் , அதுவும் வினைச்சொல்லில் வந்த இடைக்குறை அல்லவா?

இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ‘குறைச்சொற்கள்’ செய்யுளில் மட்டும்தான் வரும் என்றார்கள் .

இதுவும் சரியன்று !

கர்ப்பூரத்தைப் ‘பூரம்’ என்றும் , பெருங்காயத்தைக் ‘காயம்’ என்றும் வழக்கில்தானே கூறுகிறோம் ? இவை ‘முதற்குறை’கள் அல்லவா?

‘குறைச் சொற்கள்’ நமக்கு முன்பு கூறப்பட்டவைகள் மட்டுந்தானா ? நாம் புதிதாக உருவாக்கவே முடியாதா ? – அடுத்த வினாக்கள் !

குறைச் சொற்களை நாம் புதிதாக உருவாக்கலாம் ! தடை ஏதும் இல்லை ! ஆனால் மரபறிந்து உருவாக்க வேண்டும் ! செய்யுளாக இருந்தாலும் பேச்சாக இருந்தாலும் நாம் ஒரு குறைச் சொல்லை உருவாக்கினால் அதனைப் பிறர் சட்டென்று விளங்கிக்கொள்ளவேண்டும் ! அவ்வளவுதான் !
= = =




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 02, 2013 11:05 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (47)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

ஒரு பாடலுக்குப் பொருளை எப்படி விளங்கிக் கொள்வது என்று இலக்கண நூற்கள் விளக்கியுள்ளன !

‘பொருள்கோள்’ என்ற தலைப்பில் இவை நவிலப்படுகின்றன !
தொல்காப்பியர் , அடிமறிப் பொருள்கோள் என்பதனை இரு நூற்பாக்களில் விளக்கியுள்ளார் !


“அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே” (எச்சவியல் 11)

- என்ற தொல்காப்பியர் நூற்பாவுக்குச் சேனாவரையர் காட்டிய “மாறாக் காதலர் மலைமறந் தனரே” என்ற அகவற் பாடலையே நச்சினார்க் கினியர் உட்படப் பலரும் காலங்காலமாக எடுத்துக் காட்டாகத் தந்துள்ளனர் !

ஆனால் , தெய்வச் சிலையார், வேறு ஓர் அகவற் பாடலை எடுத்துக்காட்டாக அளித்துள்ளார் ! :-

“சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரல் எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே ” !

இந்த நான்கு அடிகளில் , முதலடியைத் தூக்கி மூன்றாம் அடியில் வைத்துவிட்டு , மூன்றாம் அடியைத் தூக்கி முதல் அடியில் வைத்தாலும் பாடலின் பொருள் மாறாது !

இதுதான் தொல்காப்பியர் மேற் சூத்திரத்தில் காட்டிய அடிமறிப் பொருள்கோள் என்பதன் பொருள் !

ஆனால் அதே நேரத்தில் பாடலின் உள்ளுக்குள்ளே சீர்களை முன்பின்னாக மாற்றிவிடக் கூடாது ! இதைத்தான் , ‘சீர்நிலை திரியாது’ என்றார் தொல்காப்பியர் !

இந்தப் பொருள்கோள் முறையில் பொருள்கொள்ளத் தக்க வகையில் இதோ நமது எளிய சொந்தப் பாடல் ! :-

சென்று தேடுவோம் தமிழ்ச்செல் வத்தை
நன்றே ஆய்வோம் தமிழா ழத்தை
நின்று பரப்புவோம் உலகில் தமிழை
என்றும் உயர்ந்தது இனிய தமிழே !


மேல் இரு எடுத்துக் காட்டுப் பாடல்களும் நான்கடிப் பாடல்களாக இருக்கின்றன !

அப்படியானால் , அடிமறிப் பொருள்கோள் நாலடிப் பாட்டில்தான் செல்லுமா ? –வினா எழுகிறது !

“ஆம்” – என்கின்றனர் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் !

நீண்ட பாடலாயின் அடிகளை முன்பின்னாக மாற்றி வைத்துவிட்டால் குழப்பம்தானே வரும் ?

இன்னொன்று காணவேண்டியது என்னவென்றால் , நான்கு அடிகளிலும் நான்கு தொடர்பற்ற வெவ்வேறு கருத்துகளைப் பாடிவிட்டு ப் , “பார்த்தீர்களா? அடிமறிப் பொருள்கோள்படப் பாடியுள்ளேன் ” என்று கூறக்கூடாது ! நான்கு அடிகளிலும் மொத்தமாக அடிக்கருத்து ஒன்று மட்டும் இருப்பதே நல்லது !

பாடலின் யாப்பு எதுவேண்டுமானாலும் இருக்கலாம் !

‘சூரல் பம்பிய’ என்ற பாடல் அகவல் யாப்பிலும் , ‘சென்று தேடுவோம்’ எனும் பாடல் கலிவிருத்தத்திலும் பாடப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் இப் பொருள்கோள் தொடர்பாக உரைத்த இரண்டாம் நூற்பா :-

“பொருள்தெரி மருங்கின்
ஈற்றடி இறுசீர் எருத்துவயின் திரியும்
தோற்றமும் வரையார் அடிமறியான” (எச்சவியல் 12)

அஃதாவது , பாட்டின் கடைசி அடியின் இரு சீர்கள் முறை மாறி வந்தாலும் அதுவும் அடிமறிப் பாடல்தான் !

மேலே நாம் கண்ட பாடலில் ஈற்றடியில் ‘இனிய தமிழே’ என இரு சீர்கள் வந்துள்ளன அல்லவா ? இவற்றில் , ‘தமிழே’ என்பது ‘ஈற்றுச் சீர்’ , ‘இனிய’ என்பது ‘எருத்துச் சீர்’! (எருத்து – ஈற்றுக்கு முந்தையது).

தொல்காப்பியர் கருத்துப்படி ,‘இனிய தமிழே’ என்பது ‘தமிழ் இனியதே’ என்றும் வரலாம் ; அப்படி மாற்றிப் படிக்கும் வகையில் பாடல் வரினும் அந்தப் பாடலும் அடிமறிப் பாடல்தான் !

ஒரு பாடலை எப்படியெல்லாம் அலசி ஆராய்ந்துள்ளார்கள் பார்த்தீர்களா ?

தொல்காப்பியம் அளவுக்குத் தொன்மையான காலத்தில் உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காத பாட்டியல் (Poetics) ஆய்வு இது !
............................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 02, 2013 9:39 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (48)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

காதலனும் காதலியும் வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போவது என்று முடிவெடுத்துவிட்டனர் !
தோழியும் வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக்கொண்டாள் !

இதோ காதலனும் காதலியும் புறப்படத் தயாராக நிற்கின்றனர்!

அப்போது தோழி என்ன சொன்னாள் ?

தொல்காப்பியர் காட்சிகளை ஓடவிடுகிறார் ! :-

1. ‘தலைவரும் விழும நிலை எடுத்துரைப்பினும்’ - அவர்கள் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்வதால் , வருங்காலத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று விவரிப்பாள் தோழி !
தலைவரும் – இனிமேல் வரும் .
‘தலை + வரும் ’ என்று பிரிக்கக் கூடாது ! (இப்படிப் பிரித்தால் யாருடைய தலை வரும் , யாருடைய தலை உருளும் என்றெல்லாம் கேள்வி வரும் !)
தலைவா + ர் + உம் = தலைவரும் .
தலைவா- பகுதி ; ‘தலைவ’ என ஆனது விகாரம் .
ர் – எழுத்துப் பேறு ; உம் – எச்ச விகுதி .

விழுமம் – துன்பம் . (‘விழுப்பம்’ வேறு , ‘விழுமம்’ வேறு !)

எடுத்துரைப்பினும் = எடுத்துரைப்பு + இன் + உம்
எடுத்துரைப்பு – ‘நடிப்பு’ என்பது போன்ற பெயர்ச் சொல் ! இன் – சாரியை ; உம் – எண்ணும்மை.

2. ‘போக்கற் கண்ணும் ’ – காதலர் இருவரையும் ஓடிப்போக அனுமதிக்கும் போது , “வேறு வழியில்லைதான் ! இப்படிச் செய்யவில்லை எனில் தலைவி இறந்துபோவாளே ?” என்றெல்லாம் பேசுவாள் தோழி !

3. ‘விடுத்தற் கண்ணும்’ – காதலர் இருவரையும் சரியான இடத்திற்கு வரச்சொல்லிச் , “சூதானமாகப் போங்கள் என்று சொல்லவேண்டியவற்றை யெல்லாம் சொல்லி வழி அனுப்புவாள் !

4. ‘நீக்கலில் வந்த தம்முறு விழுமம்’ – தலைவியை இப்படி ஓடிப்போகுமாறு அனுப்பியதால் தோழி தனது குடும்பத்திற்கு வரும் துன்பத்தை நினைத்து வருந்திப் பல கூறுவாள் !

5. ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்’ - ‘நல்லது கெட்டது’ உணர்ந்த பெரியோர் வாக்குகளை முன்னுதாரணம் காட்டித் ,தலைவியைத் தேடிவந்த தாய்க்காரியைச் சமாதானப் படுத்தி , அவளைத் தடுத்து நிறுத்துமுகத்தான் பல கூறுவாள் தோழி !

‘கண்டோர்ச் சுட்டி’ – இங்கு ஒரு ‘ச்’ உள்ளதே கவனித்தீர்களா? அது தேவை ! அஃது இல்லையாயின் , எழுவாய்த் தொடராகிவிடும் ! ‘ச்’ இருந்தால்தான் வேற்றுமைத் தொடராகும் !

தலைப்பெயர்தல் – மீட்டுக் கொள்ளுதல் ; தாய் , தலைவியைத் தேடி மேலும் செல்லாவாறு தடுத்து அவளை மீட்டு அவள் வீட்டுக்கு அனுப்புதல் !

மேலே ஒரு ‘தலை ’ ! இங்கே ஒரு ‘தலை’ !
இங்கேயும் , ‘தலை + பெயர்த்தல்’ என்று பிரிக்கக் கூடாது !
தலைப்பெயர் + த் + த் + அல் = தலைப்பெயர்த்தல் .
தலைப்பெயர் - பகுதி
த்- சந்தி ; த் – எழுத்துச் சாரியை ; அல் – தொழிற் பெயர் விகுதி .

6.‘நோய்மிகப் பெருகித்தன் ……. வந்ததன் திறத்தோடு ’ – தலைவியின் தாய் , “மகள் இப்படி ஓடிவிட்டாளே !” என்று அழும்போது , “நடந்தது நடந்துவிட்டது ! அதைப் பேசி என்ன பயன் ? இனி ஆகவேண்டியதைப் பார்க்கலாம் !” என்றெல்லாம் தாயின் வருத்தத்தைப் போக்கும் வகையில் பல பேசுவாள் தோழி !

கலுழ்ந்தோள் – தாய் ; வினையாலணையும் பெயர் .
கலுழ்தல் – வருந்துதல் .
வன்புறை நெருங்கி – வற்புறுத்தி .

இதுதான் காதலர் ஓடுகையில் , தோழியின் உரையாடல் பங்கு (Role of dialogue)!

இன்றைய திரைப்பட இயக்குநர்கள் படாத பாடுபட்டு அமைக்கும் காட்சிகளை 3000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர் போகிற போக்கில் சொல்லிவிட்டார் பாருங்கள் ! :-

“தலைவரும் விழும நிலைஎடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் நெஞ்சுகலுழ்ந் தோளை
அழிந்தது கழீஇய ஒழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு
என்றிவை யெல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன ” ! (அகத்திணையியல் 39)

]]]]]]]]]]]]]




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 03, 2013 4:57 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (49)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் தீட்டிய சித்திரங்களில் சித்திர வண்ணம் என்பதும் ஒன்று !

அந்த நூற்பா ! :-
“சித்திர வண்ணம்
நெடியவுங் குறியவுங் நேர்ந்துடன் வருமே ” (செய்யுளியல் 222)

நெடியவும் - நெடில் எழுத்துகளும் .

குறியவும் – குறில் எழுத்துகளும் .
நேர்ந்து - கலந்து .
‘கோவிலுக்கு மாட்டை நேர்ந்து விட்டார்கள் ’ - என்றால் , கோயிலோடு , கோயில் சொத்தாகக் கலக்கச் செய்துவிட்டார்கள் என்பது பொருள் ! இந்தச் சொல் ,தொல்காப்பியர் காலச் சொல் என்று இன்று அறியவருகிறோம் !

நெடிலும் குறிலும் கலந்துவரும் பாடலுக்குக் கீழ்வரும் பாட்டை எடுத்துக்காட்டாகத் தருகிறார் நச்சினார்க்கினியர் !:-

“ஊர்வழி யூர்ந்தார் வாசி பேரச்
சேரி சார்வரி தொல்லாதிப்
பீர்தீர் தோழி தோளே ”

“எல்லாப் பாடல்களிலும் நெடில் குறில் வரத்தானே செய்யும் ? இதில் என்ன ‘சித்திர வண்ணம்’ என்று தனியாக ?” - கேள்வி எழலாம் !
மேல் வந்த ‘ஊர்வழி …’ என்ற பாடலைப் பாருங்கள் !

அதில் எல்லா அடிகளிலும் நெடிலும் இருக்கும் , குறிலும் இருக்கும் ! ஓரடியில் குறைந்தது மூன்று நெடிலாவது இருக்கும் ! ‘ ர்வழி யூர்ந்தார் வாசி பேரச் ’ – இதில் ஐந்து நெடில்கள் உள ! மீதிக் குறில்கள் !

அப்படியானால் , நெடில் எழுத்து ஒன்றுகூட வராமல் , வெறும் குறில் எழுத்துகளால் மட்டுமே பாடல் வருமா?
வரும் !

அப்படிக் குறில் எழுத்துகள் மட்டுமே வரக்கூடிய பாடலைக் குறுஞ்சீர் வண்ணம் அமைந்த பாடல் என்பர்!

நச்சினார்க்கினியர் அதற்கும் ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறார் ! :-

“உறுபெய லெழிலி தொகுபெயல் பொழியச்
சிறுகொடி யவரை பொதிதளை யவிழக்
குறிவரு பருவ மிதுவென மறுகுபு
செறிதொடி நறுநுத லழிய
லறியவை யரிவையவர் கருதிய பொருளே ” !

இந்தப் பாடலில் , ஓரிடத்தில் கூட நெடில் எழுத்து என்பதே கிடையாது !

இதனைப் போன்றே , குறில் எழுத்து ஒன்றுகூட வராமல் , முற்றிலும் நெடில் எழுத்துகளாலேயே எழுதப்பட்ட பாடல் நெடுஞ்சீர் வண்ணம் அமைந்த பாடல் எனப்படும் !

நச்சினார்க்கினியர் இதற்குத் தரும் பாடல் ! : -

“நீரூர் பானா யாறே காடே
நீலூர் காயாம் பூவீ யாதே
யூரூர் பாகா தேரே
பீரூர் தோளாள் சீறூ ராளே”

முதற்கண் பார்த்த ‘சித்திர வண்ணம்’ என்ற பெயரில் வந்த ‘சித்திரம்’ என்ற சொல் விசித்திர மானது !
‘ஓவியம்’ என்ற ஒரு பொருளைத்தான் நமக்குத் தெரியும் !

ஆனால் ‘சித்திரம்’ என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன!

‘சித்திரம் – கலப்பு ; பல வகை ’ என்ற பொருளும் உண்டு ! :-

1.சித்திர வதை – பலவித வதைகள் !
2. சித்திரான்னம் – சர்க்கரை ,புளி, எலுமிச்சைச் சாதங்கள் .
சித்திர + அன்னம் = சித்திரான்னம் ( இப் புணர்ச்சி ‘தீர்க்க சந்தி’)

நெடிலும் குறிலும் கலந்து வந்ததால் , அது சித்திர வண்ணம் !

சரிதானே ?
.....................................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 09, 2013 3:44 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (50)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘வசந்தியை அழைத்தான் ’ – இத் தொடரில் வசந்தி அருகே ஓர் ‘ஐ’ உள்ளதல்லவா ? இதனைத்தான் இரண்டாம் வேற்றுமை உருபு என்பர்.

இரண்டாம் வேற்றுமை, ‘ஐ வேற்றுமை’ எனவும் அறியப்படும்.

இரண்டாம் வேற்றுமை என்னென்ன பொருள் நிலைகளில் வரும் ?

தொல்காப்பியர் ஒரு பட்டியல் தருகிறார் ! :-

“காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஓப்பின் புகழின் பழியின் என்றா
பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
செறலின் உவத்தலின் கற்பின் என்றா
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா
அன்ன பிறவும் அம்முதற் பொருள
என்ன கிளவியும் அதன்பால என்மனார்” (வேற்றுமையியல் 11)

காலங் காலமாகப் புலவர்கள் தரும் எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்துப் புதிய எடுத்துக்காட்டுகள் மூலம் மேல் பட்டியலை விளக்கலாம் ! :-

1. ‘காப்பு’ – ‘வீட்டைக் காத்தாள் ’ .

இந்த ஓர் எடுத்துக்காட்டை வைத்துக்கொண்டு எல்லோரும் வீட்டையே கட்டிக் கொண்டிருக்கக் கூடாது !
‘பணத்தைக் காத்தான்’ , ‘முட்டையைக் காத்தது கோழி’ , ‘குட்டியைக் காத்தது யானை’ – என்றெல்லாம் எத்தனையோ தொடர்களைக் ‘காப்பு’ப் பொருளில் உருவாக்கிக் கொள்ளலாம் !

பின்வரும் எடுத்துக்காட்டுகளையும் இவ்வாறே ஒட்டிப் பொருள் கொள்ளவேண்டும் !

2. ‘ஒப்பு’ - ‘முகம் சந்திரனை ஒத்தது ’

3. ‘ஊர்தி’ – ‘பேருந்தை ஓட்டினான்’
‘ஊர்தி’ என்ற தொல்காப்பியர் சொல்லை ஏதோ ‘அமரர் ஊர்தி’ என்பது போல எடுத்துக்கொள்ளக் கூடாது !
ஊர்தல் – செலுத்துதல் ; ஓட்டுதல் .
‘தேரூர்ந்த சோழன் கதை’ – என்று ஒரு கதை உண்டு ! ‘தேரை ஓட்டிய சோழன் கதை’ என்பதே பொருள் !

4 . ‘இழை’ - ‘வீட்டை இழைத்தான்’
இழைத்தல் – கட்டுதல் ; வண்டல் இழைத்தல் – வண்டல் மண்ணால் விளையாட்டுக்கு வீடு கட்டுதல் .

5. ‘ஓப்பு’ – ‘அணிலை ஓப்பினான்’
ஓப்புதல் - விரட்டுதல் .

6. ‘புகழ்’ – ‘தலைவனைப் புகழ்ந்தனர்’

7.‘பழி’ – ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’

8. ‘பெறல்’ – ‘விருதைப் பெற்றான்’

9. ‘இழவு’ – ‘புகழை இழந்தான்’ ; இழவு – இழப்பு .

10 . ‘காதல்’ – ‘அவளைக் காதலித்தான்’

11. ‘வெகுளி’ – ‘ பகைவரை வெகுண்டான்’

12. ‘செறல்’ - ‘ கொலைகாரனைச் செற்றனர்’ ; செறல் – கொல்லுதல்

13. ‘உவத்தல்’ – ‘மகனின் படிப்பை நினைத்து உவந்தார் தந்தை’

உவத்தல் - மகிழ்தல்

தொல்காப்பிய உரையாசிரியர்கள் , ‘நட்டாரை உவக்கும் ’ என்று எடுத்துக்காட்டுத் தந்துள்ளனர் !

அஃதாவது , ‘நண்பர்களை மகிழ்வான்’ என்பது பொருள் ! நண்பர்களை எப்படி மகிழமுடியும் ? அப்படியானால் உரையாசிரியர்கள் தந்த உதாரணங்கள் தவறா ?
அல்ல !

உரையாசிரியர்கள் சுருக்கமாகத்தான் கூறுவார்கள் ! நாம்தான் விரித்துப் பொருள் கொள்ளவேண்டும் !

‘நட்டாரை உவக்கும்’ என்பதை , ‘நண்பர்களை எண்ணி மகிழ்வான்’ என்று விரித்துக் கொள்ளவேண்டும் !

இப்படிச் செய்வதால் தொல்காப்பிய விதி எவ்வகையிலும் பிசகாது !

அஃதாவது , ‘உவக்கும்’ என்ற வினையை ஏதாவது ஒரு தொடரில் நீங்கள் பயன்படுத்தினால் , அத் தொடரில் , உவக்கும் என்ற அச் சொல்முன் அல்லது பின் , வெளிப்பட்டோ மறைந்தோ , நிச்சயம் ஓர் ஐவேற்றுமை வந்திருக்கும் !

இந்த இலக்கண நுட்பத்தை நாம் காணும் எல்லா எடுத்துக்காட்டுகளிலும் ஒட்டிக்கொள்க !

14. ‘கற்பு’ – ‘ குறுந்தொகையைக் கற்றான்’

தொல்காப்பியச் சொல்லான ‘கற்பின்’ என்பதைக் , ‘கற்பு + இன் ’ எனப் பிரிக்கவேண்டும் !

கற்பு – கற்றல் ; பெண்ணின் கற்பு அல்ல !

கற்பு – பகுதி ; இன் – சாரியை ; இங்கே ‘இன்’ , எச்ச விகுதி அல்ல ! அசைநிலையும் அல்ல !

சிலர் ‘அசைநிலை’ என்று எழுதியுள்ளார்கள்; அது பொருந்தாது ! மேல் நூற்பாவில் மொத்தம் 28 இடங்களில் ‘இன்’ வந்துள்ளது ! இருபத்தெட்டு இடங்களிலுமே ‘இன்’ சாரியையாகத்தான் வந்துள்ளது ! நூற்பாவில் சீர்கள் அடுத்தடுத்து ஓடவேண்டும் ; அதற்காகத்தான் சாரியை ! அசைநிலை இந்த ஓட்டத்தைத் தராது ! .

15. ‘அறுத்தல்’ – ‘கயிற்றை அறுத்தான் ’ .

16. ‘குறைத்தல்’ – ‘கம்பத்தின் உயரத்தைக் குறைத்தான்’ .

17. ‘தொகுத்தல்’ – ‘ உவமைகளைத் தொகுத்தான்’ .

18. ‘பிரித்தல்’ – ‘கட்டைப் பிரித்தனர்’ .
19 . ‘நிறுத்தல்’ – ‘புளியை நிறுத்தான்’ .

’நிறுத்தல்’ என்ற இத் தொல்காப்பியச் சொல்லால் , நிறுத்தலளவை (Weighing measurement) கி.மு. 1000க்கு முன்பே தமிழகத்தில் இருந்த ஒரு வரலாறு புலனாகிறது !

20. ‘அளவு’ – ‘நெல்லை அளந்தான்’ .

21. ‘எண்’ – ‘பணத்தை எண்ணினான்’ .

22. ‘ஆக்கல்’ – ‘வளத்தை ஆக்கினார்’ .

23. ‘சார்தல்’ – ‘பொறுப்பு மக்களைச் சார்ந்தது’ .

24 . ‘செலவு’ – ‘பாதையைக் கடந்தான்’

இங்கே ‘செலவு’ என்பது வரவு , செலவு அல்ல !

செலவு – செல்லுதல் ; கடத்தல் . ‘செலவு’ என்றால் , ‘சென்றான்’ என்றுதான் தொடரில் வரவேண்டும் என்பதில்லை !

25 . ‘கன்றல்’ – ‘குடியை நினைத்து வருந்துகிறோம்’ .
கன்றல் – வருந்துதல் .

உரையாசிரியர்கள் அனைவரும் ‘கன்றல்’ என்பதற்குச் ‘சூதைக் கன்றும்’ என்றே உதாரணம் தந்துள்ளனர் !
சூதை எப்படி வருந்தமுடியும் ? சூதை நினைத்துத்தானே வருந்தமுடியும் ? அல்லது சூதை விளையாடி வருந்தலாம் ! இல்லையா ? எனவேதான் , நாம் முன்னே பார்த்தபடி , உரையாசிரியரின் சுருக்க எடுத்துக்காட்டைத் தக்கபடி விரித்துப் பொருள்கொள்ள வேண்டும் !

26. ‘நோக்கல்’ – ‘அண்ணலை நோக்கினாள்’ .

27. ‘அஞ்சல்’ – ‘பாம்பைக் கண்டு அஞ்சினான்’ .

உரையாசிரியர்கள் அனைவரும் ‘கள்ளரை அஞ்சும்’ என்று உதாரணம் தந்துள்ளனர்! ‘திருடனை அஞ்சினான்’ என்று எழுதலாமா? தொடர் இலக்கணம் அமையவில்லையே ? ‘திருடனைக் கண்டு அஞ்சினான்’ ‘, ‘திருடனைப் பார்த்து அஞ்சினான்’ என்பன அல்லவா சரியான தொடர்கள் ? அஞ்சுதலாகிய வினை முன் ‘ஐ வேற்றுமை’ வந்ததா இல்லையா ?

28. ‘சிதைப்பு’ – ‘மருமகள் வீட்டைச் சிதைத்துவிட்டாள் ’.

நூற்பாவில், ‘அன்ன பிறவும்’ என்றதனால் மேல் 28ஐப் போல வேறு வினை அல்லது வினைக் குறிப்பு வந்தாலும் அவற்றுக்கு முன்பும் ஐ வேற்றுமை வரும் என்பது பொருள் !

தமிழின் அளவற்ற பரப்பு தொல்காப்பியருக்கு நன்கு தெரிந்துள்ளது ! அதனால்தான் ‘அன்ன பிறவும்’ என்று கவனமாகப் போடுகிறார் !
vvvvvvv




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 17, 2013 8:26 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (51)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘கமலிக்குப் பணம் தந்தான் ’ – இத் தொடரில் கமலி அருகே ஒட்டிக்கொண்டு ஒரு ‘கு’ உள்ளதல்லவா ? இதனைத்தான் நான்காம் வேற்றுமை உருபு என்பர்.

நான்காம் வேற்றுமை உருபு, ‘குவ்வுருபு’ எனவும் அறியப்படும்.

நான்காம் வேற்றுமை என்னென்ன பொருள் நிலைகளில் வரும் ?

தொல்காப்பியர் தரும் பட்டியல் ! :-

“அதற்குவினை உடைமையின் அதற்குடம் படுதலின்
அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின்
அதற்குயாப் புடைமையின் அதன்பொருட் டாதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பினென்று
அப்பொரொட் கிளவியும் அதன்பால என்மனார்” (வேற்றுமையியல் 15)

புலவர்கள் தரும் ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்துப் ,புதிய எடுத்துக்காட்டுகள் மூலம் மேல் பட்டியலை விளக்கலாம் ! :-
1. ‘அதற்கு வினை உடைமை’ – ‘காசுக்குத் தேங்காய் உரித்தான்’

ஒரு செயலை (வினையை) எதற்குச் செய்கிறான் என்ற கருத்து தொடரில் வரவேண்டும் ! அவ்வளவுதான் !

2 . ‘அதற்கு உடம்படுதல்’ – ‘ காதலனுக்குக் காதலியை உடம்படுத்தினாள்’ .

இதற்கு எடுத்துக்காட்டாகச், ‘சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர்’ எனும் தொடரையே கல்லாடனார் (கி.பி. 15 ஆம் நூ.ஆ.) வரை உரையாசிரியர் பலரும் தந்துளர் !

‘சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் ’– சாத்தனுக்குத் திருமண வகையால் பெண்மகளைச் சேர்த்துவைத்தனர் சான்றோர்!

‘உடன்படுதல்’ வேறு , ‘உடம்படுதல்’ வேறு !

‘ஆயிரம் ரூபாய் தருவதாக உடன்பட்டான்’ – எனில் , சம்மதித்தான் என்பது பொருள் !

உடன்படுதல் – சம்மதித்தல் .

உடம்படுதல் – சேர்த்துவைத்தல் .

உடம்படு மெய் – இரு உயிர் எழுத்துகளைச் சேர்த்துவைக்கும் மெய் !

தலைவனின் கருத்தோடு தலைவி கருத்தும் சேர்வதே மதியுடம்படுதல் !

3 . ‘அதற்குப் படுபொருள்’ – நில ஆவணங்களில் ‘ இந் நான்கு எல்லைக்கு உட்பட்ட மாவடை மரவடை’ என்று எழுதுவார்கள்!

‘படுபொருள்’ – உட்பட்டபொருள் .

உரையாசிரியர்களின் பழைய எடுத்துக்காட்டு – ‘சாத்தற்குப் படுபொருள் கொற்றன்’ .

என்ன பொருள் ?

‘சாத்தனுக்கு உரிமைப்படுபொருள் கொற்றன்’ என்பது பொருள் ! அஃதாவது , ‘சாத்தனுக்கு உறவினன் அல்லது வேலைக்காரன்’ கொற்றன் என்பது பொருள் ! அவ்வளவுதான் !

4 . ‘அதுவாகு கிளவி’ – ‘மருந்துக்கு வேப்பிலை’ .

அஃதாவது , வேப்பிலையே மருந்தாவதால் , ‘அதுவாதல்’ பொருந்துகிறது !

5 . ‘அதற்கு யாப்புடைமை’ – ‘காலுக்குக் கொலுசு’ .
யாப்பு – பிணிப்பு ; இயைபு .

6 . ‘அதன் பொருட்டாதல்’ - ‘வெயிலுக்கு நிழற் குடை’

பொருட்டு – காரணம் .

அதன் பொருட்டு – அதன் காரணம் .

நிழற்குடையானது என்ன காரணத்திற்காக ?

வெயிலுக்காக ! எனவே , ‘அதன் பொருட்டாதல்’ என்ற வாய்பாடு பொருத்தமாதல் காண்க !

7 ‘நட்பு’ - ‘வ.உ.சி.க்கு நண்பர்’

நண்பர் என்றால் யாருக்காவதுதானே அவர் நண்பர் ? எனவே குவ்வுருபு கட்டாயம் வரும் !

8 . ‘பகை’ – ‘புறாவுக்குப் பகை வல்லூறு’ .

9 . ‘காதலி’ – ‘கோவலனுக்குக் காதலி மாதவி’ .

10 . ‘சிறப்பு’ – ‘மோருக்குச் சிறந்தது’ .

‘மோரைவிடச் சிறந்தது தயிர் ’ என்பது பொருள் .

தொல்காப்பிய நூற்பாவின் ஈற்றில் உள்ள ‘அப்பொருட் கிளவியும்’ என்பதிலுள்ள எச்ச உம்மையால் , இன்னும் இவைபோன்ற வாய்பாடுகளையும் (pattern) நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும் !

தொல்காப்பியர் 10 வாய்பாடுகளைக் குவ்வுருபுக்குத் தெரிவித்துவிட்டார் !

அஃதாவது , தொல்காப்பியர் காலத்தில் , பெருவழக்காக , அடிக்கடி பயன்பட்டு வந்தனவாக ,இந்தப் பத்து வாய்பாடுகளும் திகழ்ந்தன என்று நாம் விளங்கிக் கொள்ளவேண்டும் !

தொடர்களைக் காலவாரியாக அடுக்கும் மொழியியலாளர்களுக்கு(Linguists) இஃது அரிய குறிப்பு !

10 வாய்பாடுகளைத் தொல்காப்பியர் கூறினாரல்லவா ? இந்தப் பத்து வாய்பாடுகளையும் சேர்த்து ஒரே வாய்பாட்டில் அடக்கி நம்மால் கூறமுடியுமா ?

முடியாது !

ஆனால் தொல்காப்பியர் அடக்கிக் கூறியுள்ளார் !

அந்த வாய்பாடுதான் – ‘எப்பொருளாயினும் கொள்ளல்’ !

இதோ அந்த நூற்பா :-

“ நான்கா குவதே
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு ளாயினும் கொள்ளும் அதுவே ”
=====




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 23, 2013 9:37 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (52)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

உலகத்துப் பொருட்களைத் தொல்காப்பியர் இரு வகைகளாகப் பகுக்கிறார் ! :-

1 . இயற்கைப் பொருள்

2 . செயற்கைப் பொருள்

1 . இயற்கைப் பொருள்களைக் குறிக்கும்போது , ‘இப்படிப்பட்டது’ என்று எழுதவேண்டும் !

இதனைத் தொல்காப்பியர் ,

“இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் ” (கிளவியாக்கம் 19)

என்றார் .

இற்று = இத்தன்மைத்து - இப்படிப்பட்டது .

தொல்காப்பியர் கருத்துப்படிக் கீழ்வரும் தொடர்கள் சரியானவை :-

1 . பால் வெண்மையது √
2 . பனை உயர்ந்தது √
3 . வேம்பு கசப்புச் சுவை உடையது √
4 . கடல் நீர் உப்புக் கரிக்கும் √
5 . நிலம் வலியது √

‘சரி ! செயற்கைப் பொருளை எப்படிக் கூறுவது ?

தொல்காப்பியர் சொன்னார் ! :-

“செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்” (கிளவியாக்கம் 20)

செயற்கைப் பொருளாக இருந்தால் , ஆக்கச் சொல் சேர்த்துக் கூறவேண்டும் !

மேல் எடுத்துக்காட்டுகளுக்கே வருவோம் ! :-

1 . பால் வெண்மையானது ×
ஏனெனில் , பாலின் இயற்கைப் பண்பே வெள்ளைதானே ? எனவே , ‘ஆனது’ என்ற சொல் (இதுதான் ஆக்கச் சொல்) சேர்க்கக்கூடாது !

பால் நீலமானது √
ஏனெனில் பாலில் ஏதோ நீலப்பொருள் கலந்து அதை நீலமாக ஆக்கியுள்ளனர் ! இதுதான் செயற்கைப் பொருள் ! இத் தொடரில் ‘ஆனது’ என்ற ஒட்டு உள்ளதல்லவா? இதனைத்தான் தொல்காப்பியர் ‘ஆக்கமொடு கூறுக’ என்றார் !

கூறுல் - கூறுக ( ‘அல்’லீற்று வியங்கோள் விகுதி உடன்பாட்டுப் பொருளில் வந்தது ) .

பால் சூடானது √
ஏனெனில் பாலின் தன்மை சுடுவது அல்ல ! ; பாலைச் சூடாக்கி ஒரு செயற்கைப் பொருளை உருவாக்கியுள்ளோம் ; அதனால் , ஆக்கச் சொல் ‘ஆனது’ என்பதைக் கொடுத்துச் ‘சூடானது’ எனக் கூறவேண்டும் !

2 . பனை உயரமானது ×
ஏனெனில் , பனை அதற்கு முன்பு குட்டையாக இருந்ததுபோலவும் , தற்போது ஏதோ ஒரு காரணத்தால் உயரமாகிவிட்டது போலவும் தொடருக்கு ஒரு பொருள் வருகிறது ! எனவே , இத் தொடரில் ஆக்கச் சொல் தரக்கூடாது !

பனை முறிவானது √
எனெனில் , பனையைச் செயற்கையாக முறித்துள்ளனர் ! அங்கே ஒரு செயற்கைப் பொருள் உருவாகியுள்ளதால் , ஆக்கச் சொல் தேவை !

இதே பாங்கில் கீழ்வரும் தொடர்களைப் பாருங்கள் !:-

வேம்பு கசப்பானது ×
வேம்பு மருந்தானது √

கடல் நீர் உப்புச்சுவையானது ×
கடல் நீர் குடிநீரானது √

நிலம் வலிமையானது ×
நிலம் ஆடுகளமானது √

ஆக்கம் பற்றி மேலும் தொல்காப்பியர் ,

“ஆக்கம் தானே காரணம் முதற்றே” (கிளவியாக்கம் 21) என்றார் !

‘ஆக்கம்’ என்று சொன்னால் அது ஏற்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் ! – இதுதான் தொல்காப்பியரின் கருத்து !

குத்தூசி கூரானது √

குத்தூசியைத் தட்டிக் கூராக ஆக்கியுள்ளனர் என்பது பொருள் ! காரணமில்லாமல் ஊசி கூராகுமா ?

தங்கம் நகையானது √
எனெனில் தங்கம் அதுவாக நகை ஆகாது ! தங்கத்தைப் பணி செய்து நகை ஆக்கவேண்டும் !

எனவே , ஏதாவது ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்துத்தான் ‘ஆக்கம்’ தோன்றும் என்பது தொல்காப்பியர் கருத்து ! ஆனால் , அந்தக் காரணத்தைத் தொடரில் எழுதியிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை ! காரணத்தை உய்த்துணரும் படியாகவும் தொடரை எழுதலாம் !

“ ‘நன்கு சப்பிட்டதால் உடல் பருமனானது ’ – இதில் பருமன் என்ற ஆக்கம் , ‘நன்கு சாப்பிட்டது’ என்ற காரணத்தால் நிகழ்ந்தது ; இவ்வாறுதான் காரணத்தை முன்னே சொல்லிப் பின் ஆக்கச் சொல்லை எழுதவேண்டும் ! ” – இவ்வாறு பலர் உரை எழுதியுள்ளனர் !

தவறு இது !

‘உடல் பருமனானது ’ என்றாலே , எதோ ஒரு காரணத்தால்தான் என்பது விளங்கவில்லையா ? அதைத் தொடரில் எழுதத்தான் வேண்டுமென்பதில்லை ! அப்படி எழுதத்தான் வேண்டும் என விதித்தால் நாம் உரைநடையையே எழுதமுடியாதே ?

‘ஆக்கம்’ என்று எதனைக் கூறவேண்டும் ? – என்ற மயக்கம் ஏற்படும்போது , செயலின் பின்னணியில் ஏதாவது காரணம் இருக்கிறதா ? என்று ஒரு கேள்வியை நாம் கேட்கவேண்டும் ! இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !

ஆனால் காரணம் இல்லாமலே, தொல்காப்பியருக்கு முன்பே , ஆக்கச் சொல் போட்டுப் பேசும் முறை வந்துவிட்டது !

‘மயில் அழகானது’ , ‘குயிலின் குரல் இனிமையானது’ , ‘அவள் முகம் அழகானது’ – இவையெல்லாம் ஆக்கச் சொல் பெற்ற தொடர்கள் ! ஆனால் , காரணமில்லாமல் வந்தவை !

மயில் இயற்கையிலேயே அழகுதானே ? குயிலின் குரலைப் பயிற்சி மூலமாகவா இனிமையாக்கினார்கள் ? அவளின் முகம் முன்பு குரூரமாக இருந்து இப்போது அழகாகிவிட்டதா ? இல்லையல்லவா? இதனைத்தான் , தொல்காப்பியர் ,

“ஆக்கக் கிளவி காரண மின்றியும்
போக்கின்று என்ப வழக்கி னுள்ளே” (கிளவியாக்கம் 22)

என்றார் !

தமிழில் ,எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் வேறுபாடு தொல்காப்பியருக்கு மிக முன்பிருந்தே இருந்துவருகிறது ! தொல்காப்பியர் மேலே சொன்ன விதிகள் எழுத்து நடைக்கானவையே ! இம்மாதிரியான விதிகளால்தான் தமிழ் இன்றளவும் தமிழாக இருக்கிறது!

=========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 23, 2013 10:33 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (53)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


தொல்காப்பியர் , “கேள்வி கேட்கும்போதும் சரி , பதில் கூறும்போதும் சரி , கவனமாகக் குளறுபடி இல்லாமல் செய்யவேண்டும்” என்று கண்டிப்புடன் எழுதுகிறார் ! :-

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” (கிளவியாக்கம் 13)

செப்பு – விடை ; வழாஅல் – வழுவாமல் ; ஓம்பல் – ஓம்புதல் .

‘வினாவுக்கு ஏற்ற விடை ’ – என்பது எளிய கருத்தல்ல !

வினாத் தொடுப்பதும் எளிதல்ல ! விடை கூறுவதும் எளிதல்ல ! பெரியவர்கள்கூட இதில் தவறு செய்கின்றனர் !


நீங்கள் ஒன்றைக் கேட்பீர்கள் , அவர் வேறு ஒன்றைக் கூறுவார் ! அவர் வேண்டுமென்று கூறுகிறாரா , இல்லை தெரிந்தலட்சணம் அவ்வளவுதானா என்று நீங்கள் குழம்புவீர்கள் !

இன்றைய நிலையே இப்படியாயின் 3000 ஆண்டுகளுக்கு முன் ?
அதனால்தான் தொல்காப்பியர் விதி கூறவேண்டிய நிலை ஏற்பட்டது !

நச்சினார்க்கினியர் , இந் நூற்பாவுக்கு உரை எழுதும்போது , இருவகை விடைகள் உள்ளன என்கிறார் ! :-

1 . நேரடி விடை ( ‘செவ்வன் இறை’)
2 . மறைமுக விடை ( ‘இறை பயப்பது’)

சட்டைத்துணி நிறம் பிடித்திருக்கிறதா ? – வினா .

“பிடித்திருக்கிறது” – நேரடி விடை .

“அடுத்த கடையில் பார்க்கலாமே ?” – மறைமுக விடை .

நச்சர் மூன்றுவகை வினாக்கள் உள்ளன என்கிறார் ! : -

1 . அறியான் வினா
2 . ஐய வினா
3 . அறிபொருள் வினா

இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் !:-

1 . “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லவேண்டுமானால் அனுமதி வேண்டுமா ?” – அறியான் வினா .

இங்கே கேட்டவன் அறியா நிலையில் உள்ளான் !

2 . “பப்பாளியைச் , சர்க்கரை நோய் உள்ளவரும் உண்ணலாமாமே , சரியா?” –ஐய வினா .
கேட்டவனுக்குச் செய்தி தெரிந்துள்ளது ; ஆனால் ஐயம் இருக்கிறது !

3 . தற்போதைய பிரதமருக்கு முந்தைய பிரதமர் யார் ? – அறிபொருள் வினா .

கேட்டோன் , கேட்கப்பட்டோனைச் சோதிக்கிறான் அல்லது தன் கருத்தைச் சரிபார்க்கிறான் !
மேல் தொல்காப்பியர் நூற்பாவின்படி , வினாவைப் பொருத்தமாக விடுக்கவேண்டும் !

‘குதிரைக்குக் கொம்பு ஒன்றா இரண்டா ? ’ – என்று கேட்கக் கூடாது !

இதைப்போல , விடையும் பொருத்தமாகக் கூறவேண்டும் என்று தொல்காப்பியர் அதே நூற்பாவில் கூறியுள்ளார்!

“பழனிக்கு எப்படிப் போகவேண்டும் ? ” – எனக் கேட்டால் , “என் மாமியாருக்கு வலது காது கேட்காது” என்று பதில் கூறக்கூடாது !

இன்னும் தொல்காப்பியர் தொடர்கிறார் !:-
1 . “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” (கிளவியாக்கம் 14)

“ஹாக்கி விளையாடுவாயா ?” என்று கேட்டால் , “ஏன்? நான் விளையாட மாட்டேனா ?” என்று எதிர்க்கேள்வி கேட்டாலும் அதுவும், தொல்காப்பியர் கருத்துப்படி, ஒரு விடைதான் !

2 . “ செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே
அப்பொருள் புணர்ந்த கிளவி யான“ (கிளவியாக்கம் 15)

விடையை நேரடியாகப் பட்டுக் கத்தரித்ததுபோலக் கூறாதுபோயினும் , ஒரு வகையில் பொருளை உணர்த்துகிற வகையில் இருந்தால் அதைக் கணக்கில் சேர்க்கலாம் ; ஆனால் வினாவைத் தவறாகக் கேட்டால் , அதனால் பயனில்லை !

“கம்பராமாயணம் படித்திருக்கிறீர்களா ?” – வினா .

“நேற்றுக்கூட இருபது பக்கம் கம்பராமயணப் பாடல்கள் பற்றிக் கட்டுரை எழுதினேன் ” – விடை .

நேரடி விடை இங்கு இல்லையெனினும் , மறைமுக விடை உள்ளது ! இதை ஒத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !

“இளங்கோவடிகள் லண்டன் போனது எப்போ ?” – இம்மாதிரியான வினாவை ஏற்க முடியாது என்கிறார் தொல்காப்பியர் ! சரிதானே ?

(3) கடைசியாகச்,

“செப்பினும் வினாவினும் சினைமுதல் கிளவிக்கு
அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே” (கிளவியாக்கம் 16)

என்றார் தொல்காப்பியர் !

எடுத்துக்காட்டுகள் மூலமாக இவற்றை விளக்கலாம் !:-

(அ) ‘இவளின் கை விரல்கள் அவளின் விரல்களைவிட அழகானவை ’
உறுப்போடு (சினையோடு) உறுப்பு ஒப்பிடப்பட்டு , வேறுபாடு (உறழ்ச்சி) காட்டிய விடை !

(ஆ) ‘இவள் கண் , அவள் கண்ணைப் போல அழகானது’
உறுப்போடு உறுப்பு ஒப்பிடப்பட்டு , ஒத்திசைவு (துணை) சுட்டிய விடை !
(இ) ‘உங்க கணவர், என் கணவரைப்போலச் சுறுசுறுப்பு உள்ளவரோ ?’
முதலோடு (கணவர் என்ற முழுப்பொருளோடு ) , முதலை (இன்னொரு ஆளை) ஒப்பிட்டு வேறுபடுத்திக் கேட்ட வினா !

(ஈ) ‘அந்தச் சமையல்காரரும் இந்தச் சமையல்காரரைப் போலச் சுறுசுறுப்பு , அப்படித்தானே ?’

முதலையும் முதலையும் ஒப்பிட்டு ஒத்திசைவுபடக் கேட்கும் வினா !

(உ) ‘அவரின் பேச்சு , என் சுண்டுவிரலைப்போல அழகானதா ?’

முதலும் சினையும் ஒப்பிடப்பட்டு வேறுபாடு (உறழ்ச்சி) காட்டிய வினா ! தவறானது !

இவ்வாறு - செப்பு , வினா , முதல் ,உறுப்பு , உறழ்வு , துணை ஆகியன எவ்வாறு பொருந்தச் செல்லவேண்டும் என்று காட்டியவர் தொல்காப்பியர் !

இந்த விரிவான ஆய்வு , நமக்கு ஒரு பேருண்மையைக் காட்டுகிரது !

அஃதாவது , தொல்காப்பியர் இலக்கணம் போதித்த ஒரு தமிழாசிரியர் ! கையில் பனையோலைச் சுவடியை வைத்துக்கொண்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தியவர் ! அதனால்தான் மாணவர்களுக்கு வினா – விடை பற்றி இவ்வளவு நுணுக்கமாக எழுதியுள்ளார் ! ஆசிரியர் – மாணவர் என்றால் , வினா – விடை இல்லாமலா ?
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 24, 2013 10:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (54)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

குற்றியலுகரம் பற்றிப் பேசிய தொல்காப்பியர் , “அல்வழிப் புணர்ச்சி ஆயினும் சரி , வேற்றுமைப் புணர்ச்சி ஆயினும் சரி , புணர்ச்சியில் ஈடுபட்ட நிலைமொழிச் சொல்லின் ஈற்று உகரமானது முற்றியலுகரமாகவே நிற்கும் ! ” என்று தெளிவுபடுத்துகிறார் ! :-

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா இறுதியும் உகரம் நிலையும் ” (குற்றியலுகரப் புணரியல் 3)

அல்லது கிளப்பினும் – அல்வழிப் புணர்ச்சியாக இருப்பினும் .

காசு + வந்தது = காசு வந்தது

இஃது அல்வழிப் புணர்ச்சி .

எப்படி ?
காசை வந்தது , காசுக்கு வந்தது , காசால் வந்தது – என்றெல்லாம் வேற்றுமை உருபுகளுக்கு இடம் தராத புணர்ச்சிதானே இது? எனவே , வேற்றுமை அல்லாத வழியில் புணர்ந்துள்ளதால் , இஃது அல்வழிப் புணர்ச்சி !


அல்வழி – அல்லாத வழி (= வேற்றுமை அல்லாத வழி)

வேற்றுமைக் கண்ணும் – வேற்றுமைப் புணர்ச்சிக் கண்ணும் .

காசு + பாட்டு = காசுப் பாட்டு

இது வேற்றுமைப் புணர்ச்சி .

‘காசின் மீதோ , காசுக்காகவோ பாடும் பாட்டு ’ என்று பொருள்பட்டு வேற்றுமைப் பொருள் தந்துள்ளதால் , இது வேற்றுமைப் புணர்ச்சி !

‘காசு வந்தது’ – இதிலுள்ள ‘காசு’ என்பதன் ஈற்று உகரம் முற்றியலுகரமே !அல்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டதால் குற்றியலுகரம் , முற்றியலுகரமாக ஆகிவிட்டது !

இதைப் போன்றே , ‘காசுப் பாட்டு’ என்பதிலுள்ள ‘காசு’ என்பதன் ஈற்று உகரமும் முற்றியலுகரமே ! இங்கே வேற்றுமைப் புணர்ச்சியில் ஈடுபட்டதால் , குற்றியலுகரம் முற்றியலுகரமாக மாறிவிட்டது !

இந்த நூற்பாவுக்கு ஒரு நூற்பாவுக்கு முன்பு , ‘உகரம் குறுகிடன்’ என்று குற்றியலுகரத்தைச் சொன்னார் தொல்காப்பியர் ; இங்கு , ‘உகரம் நிலையும்’ என்கிறார் ! அஃதாவது , குறுகாது , முழுமையாக – முற்றுகரமாக- நிலைக்கும் என்பது கருத்து !

‘காசு’ – என்று தனியாக உச்சரிக்கும்போது , ஈற்றுச் ‘சு’வை முழுமையாக( =‘சூ’ ஒலியில் முக்கால் அளவு ) உச்சரிக்க முடியாது ! எனவேதான் இந்த உகரத்தைக் குற்றியலுகரம் என்கிறோம் !

அதேபோன்று , ‘காசு வந்தது’ (இஃது அல்வழிப் புணர்ச்சி) எனச் சொல்லிப் பாருங்கள்? ‘காஸ் வந்தது’ என்றா சொல்கிறோம்? இப்படிச் சொல்ல முடிந்தால்தான் , ‘சு’விலுள்ள உகரத்தைக் குற்றியலுகரம் எனக் கூறமுடியும் ! ஆனால் , நாம் ‘சு’க்குச் , ‘சூ’வின் முக்கால் பங்கு ஒலியைக் கொடுத்து உகரத்தை முழுமையாக உச்சரிக்கிறோம் ! முழுமையாக உச்சரித்தால் அதுதானே முற்றியலுகரம் ?
குற்றியலுகரப் புணரியலின் முதலிரு நூற்பாக்களில் குற்றியலுகரத்தை ஓதினார் தொல்காப்பியர் ! ஆனால் . இதற்காகப் புணர்ச்சிகளின் இடையே வரும் உகரத்தைக் குற்றியலுகரம் எனக் கருதிவிடாதீர்கள் என்று சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு வந்ததால் , மூன்றாம் நூற்பாவில் மேலைக் கருத்துகளை அமைத்தார் !

‘காசு பெரிது’ (அல்வழிப் புணர்ச்சி)
‘நாட்டு வரும்படி’ (வேற்றுமைப் புணர்ச்சி)

இந்த இரு சொற்றொடர்களையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘காஸ் பெரிது’ என்று உச்சரிக்கிறீர்களா? இல்லை , உகரத்தை முழுதாக்கிக் ‘காசு பெரிது’ என்று உச்சரிக்கிறீர்களா ?

நீங்கள் சொல்லும் விடைதான் தொல்காப்பியர் கூறவந்தது !

‘காசு பெரிது’ , ‘நாட்டு வரும்படி’ – இங்கெல்லாம் , ‘சு’ , ‘டு’க்களை முழுமையாகத்தான் உச்சரிக்க வேண்டும் !

உங்களுக்கு இதில் குழப்பம் இருந்தால் மேலும் விளக்கலாம் !

‘வரு ’– இதிலுள்ள உகரம் குற்றியலுகரமா ? முற்றியலுகரமா?

குற்றியலுகரம் !

ஆனால் , இதை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் மலையாளிகள் பேசும்போது கவனியுங்கள் ! ‘இங்ஙோட்டு வரு’ என்று , ‘ரு’வை ‘ரூ’ வின் முக்கால் பங்கு ஒலியில் உச்சரிப்பார்கள் ! அதுதான் சரியான முற்றியலுகரம் !

மிகப் பழந்தமிழின் எச்சங்களை நாம் மலையாள மொழியில் காணலாம் என்பதற்கு இந்த இடம் ஒரு சான்று !

இந்தத் தெளிவுடன் மேலை ஆய்வைப் பார்த்தால் உங்களுக்கு எல்லாமே விளங்கும் !

================




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:35 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 8 of 84 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 46 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக