ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி விளக்கம் - Page 3

+9
ராஜா
காதல் ராஜா
ஹர்ஷித்
Kuzhali
krishnaamma
அசுரன்
ஜலஜா சிவகுமார்
சிவா
ரமணி
13 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Thu Nov 01, 2012 10:38 am

First topic message reminder :

பழமொழி விளக்கம்

001. பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.

விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

*****

002. பழமொழி: குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.

விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.

*****

003. பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.

பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.

விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.

மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.

*****

004. பழமொழி: தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?

விளக்கம்: இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
"God helps those who help themselves."
"God gives every bird its food, but does not throw it into the nest."

*****

005. பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.

விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.

*****

சிவா wrote:
ரமணி wrote:நண்பர் சிவாவுக்கு.

ஆச்சரியம் என்னவென்றாள், நான் என் முதல் அஞ்சலைத் திருத்தவேயில்லை! அந்த ’மாற்றியாச்சி மாற்றியாச்சி’ நான் எழுதியது அல்ல. இந்தச் சொற்றொடரை நான் எழுதியிருந்தால் ’மாத்தியாச்சு’ என்றுதான் எழுதியிருப்பேன். எனவே, அந்தப் மறுமொழியை அப்படியே வைத்துக்கொண்டு என் முதல் அஞ்சலைத் திருத்தியிருக்கிறேன்.

தாங்கள் மாற்றவில்லையா? வேறு யார் மாற்றியது எனப் பார்க்கிறேன் ஐயா! நல்ல வேளை, தனியாக எழுதி வைத்திருந்ததால் மீண்டும் பதிவேற்றிவிட்டீர்கள்!
மாற்றியது நான் தான் சிவா ஆனால் எதையும் அழிக்கவில்லையே! சிரமத்துக்கு மன்னிக்கணும்


Last edited by ரமணி on Fri Nov 09, 2012 7:29 am; edited 3 times in total
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Fri Nov 09, 2012 7:20 am

101. பழமொழி: தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும்.
பொருள்: தேள் போன்ற கொடியவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள்.

விளக்கம்: ஒரு ஊரின் தலையாய அதிகாரிக்கு மணியக்காரர் என்று பெயர். மணியம் என்பது ஊர், கோயில் முதலியவற்றில் மேல்விசாரணை செய்வதாகும்.

*****

102. பழமொழி: ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.
பொருள்: ஊர் மக்களின் அந்தரங்க அவலங்கள் எல்லாம் வண்ணானுக்குத் தெரிந்துவிடும்.

விளக்கம்: ஊர் மக்களுடைய துணிகளை வண்ணான் வெளுப்பதால் அந்தத் துணிகளில் உள்ள அழுக்கு, கறை போன்றவற்றின் மூலம் வண்ணான் ஊர் மக்களின் அந்தரங்க வாழ்வில் உள்ள குறைகள் பற்றித் தெரிந்துகொள்கிறான். இன்று இதே நிலையில் நம் வீட்டு வேலைக்காரி இருக்கிறாள்!

*****

103. பழமொழி: அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
பொருள்: அண்ணாமலையாருக்குச் செய்யும் விரிவான பூசையின் 64 உபசாரங்களைத் தரிசனம் செய்வதற்கு பூசாரிக்கு 74 உபசாரங்கள் செய்து அவர் தயவைப் பெற வேண்டும்.

விளக்கம்: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கவேண்டும் என்று இதுபோன்று இன்னொரு பழமொழி வழக்கில் உள்ளது.

*****

104. பழமொழி: அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
பொருள்: அதிகாரியின் வீட்டில் உள்ள ஒரு சிறு துரும்பும் குடியானவன் போன்ற எளியவர்களை ஆட்டிவைக்கும்.

விளக்கம்: ஒரு பழமொழியின் வசீகரம் அதில் உள்ள செய்தியை அழுத்தமாக, வியப்பூட்டும் உவம-உருவகங்களைப் பயன்படுத்திச் சொல்வதில் இருக்கிறது. கோழிமுட்டையை அதிகாரி வீட்டு அடிமட்ட வேலைக்காரனுக்கும் அம்மியைக் குடியானவன் வீட்டு தினசரி வாழ்வுக்கான முக்கியப் பொருளுக்கும் உவமை கூறியது மெச்சத்தக்கது. ஒரு அதிகாரியின் வேலையாட்கள் தம் யஜமானரின் அதிகாரம் தமக்கே உள்ளதுபோலக் காட்டிக்கொண்டு எளியோரை வதைக்கும் வழக்கம் பழமொழியில் அழகாகச் சுட்டப்படுகிறது.

*****

105. பழமொழி: வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.
பொருள்: எந்தக் குழந்தையும் தன் ஆசிரியரை எப்போதும் புகழ்ந்து பேசுவதில்லை.

விளக்கம்: வாத்தியார் பிள்ளையை மெச்சுவது உண்டு. ஆனால் பிள்ளைக்கு வாத்தியார்மேல் எதாவது குறை இருக்கும். அதுபோல எந்த வேலைக்காரனுக்கும் தன் யஜமானர்மேல் குறை இருக்கும்.

*****

106. பழமொழி: ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?
பொருள்: ஊரில் உள்ள யாசகர்களில் மிகவும் குறைவாக கவனிக்கப்படுகிறவன் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்திருக்கும் ஆண்டி.

விளக்கம்: ஊரின் பெரிய, புகழ்பெற்ற கோவில்களின் வாசலில் யாசகத்துக்காகக் காத்திருக்கும் ஆண்டிகளைப்போல் ஊரின் ஒரு மூலையில் உள்ள ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவிலில் தங்கியிருக்கும் ஆண்டி கவனிக்கப்படுவானா?

*****

107. பழமொழி: ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?
பொருள்: கூடையில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தெய்வாம்சம் கூறப்படுமானால் எந்தக் கல்லைத்தான் வணங்குவது? (எல்லாக் கல்லையும் திருப்தியுடன் வணங்குவது இலயாத காரியமாக இருக்கும்போது).

விளக்கம்: எல்லோரும் இந்னாட்டு மன்னர் ஆனால் யார்தான் சேவகம் செய்வது? ஒரு பெரிய குடும்பத்தில் ஆளாளுக்கு அதிகாரம் பண்ணும்போது அந்தக் குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் வேலைக்காரனின் பாடு இவ்வாறு ஆகிவிடும்.

*****

108. பழமொழி: ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
பொருள்: ஒரு சிறிய விஷயத்தைக் கண் காது மூக்கு வைத்துப் பெரிதாக்கி அதையும் ஒரு கதையாக்கிக் கூறுதல்.

விளக்கம்: ஈர் என்பது பேனின் முட்டையானதால் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளது. ஆனால் பேனுக்கும் பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை இப்படி இருக்கலாமோ? ஒரு புள்ளி அளவுள்ள ஈர் என்ற பேன் முட்டையானது அது பொரிந்தால் கண் வாய் உடல் காலுள்ள பேன் ஆகிறது. அந்தப் பேனையும் பெரிதாக்கினாள் (உதாரணமாக ஒரு நுண்நோக்கியால் பார்த்தால்) அது பெருமாளின் அவதாரம் போலத் தோன்றுமோ என்னவோ? வேறு விளக்கம் தெரிந்தவர் கூறலாம்.

*****

109. பழமொழி: கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.
பொருள்: ஒரு இனிய பொருளை மேலும் மேலும் விரும்பி உபயோகிக்கும்போது அது திகட்டிவிடுகிறது.

விளக்கம்: இது போன்ற பிற பழமொழிகள்:
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
சேரச் சேரச் செடியும் பகை.
நித்தம் போனால் முற்றம் சலிக்கும்.
படுக்கப் படுக்கப் பாயும் பகை.

*****

110. பழமொழி: வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.
பொருள்: ஒரு மருத்துவரின் குழந்தையின் உடல்நலக்குறைவு அவ்வளவு எளிதில் குணமாகாது. அதுபோல ஒரு ஆசிரியரின் குழந்தை அவ்வளவு நன்றாகப் படிக்காது.

விளக்கம்: ஏன் இவ்விதம்? வைத்தியர், வாத்தியார் இருவருமே தம் குழந்தையின் பால் உள்ள பரிவில் விரைவில் குணமாக/முன்னுக்கு வர, வெகுவாக மருந்து/கல்வி ஊட்டுவதால்.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Sat Nov 10, 2012 6:50 am

111. தமிழில் ’அளவு’ என்ற பொருள்பற்றிச் சில பழமொழிகள் உள்ளன. அவை பெரும்பாலும் தரத்தைவிட அளவையே நாடும் மனிதர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பழமொழி: இத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்?
பொருள்: இப்போது உள்ளது நீ விரும்பும் அளவானால் நீ விரும்பும் அளவு எத்தனை?

விளக்கம்: இந்தப் பழமொழி ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும், இதற்கு ஆன்மீக வழியில் பொருள்கூறலாம். இத்தனை என்பது விரல் அளவே உள்ள நம் ஆத்மா. அத்தனை என்பது இதுபோலப் பல ஜீவாத்மாக்கள். இது போன்று விரல் அளவேயுள்ள ஜீவாத்மா பரமாத்மா என்றால் பரமாத்மாவின் அளவு எத்தனை இருக்கும் என்று வியப்பதாகக் கொள்ளலாம்.

இதுபோன்று கீழ்வரும் பழமொழிகளில் முதலாவதுக்கு ஆன்மீக விளக்கம் கூறலாம். மற்றவை மேற்சொன்னவாறு அளவைமட்டுமே விரும்புவோரைக் குறித்தவையே.

விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்?
கழுதைப் புட்டை கை நிரம்பினால் போதும்.
கொசுவு மூத்திரம் குறுணி. [கொசுவு=கொசு, குறுணி=ஒரு மரக்கால் அளவு]
மலிந்த சரக்கு/பண்டம் கடைத்தெருவுக்கு வரும்.

*****

112. அருமை, அதாவது ஒரு பொருள் கிடைபது அரிதாகிவிட்டதைக் குறித்துச் சில பழமொழிகள். இவை தானே விளங்குவன.

பழமொழிகள்:
அத்திப் பூ கண்டது/பூத்தது போல.
அன்னப்பிடி வெல்லப்பிடி ஆச்சுது.
சோறு வெல்லமாய்ப் போச்சுது.
உத்தியோகம் குதிரைக் கொம்பாயிருக்கிறது.
கார்த்திகைப் பிறை கண்டவன் போல.
காற்றிலே கருப்பிலே கண்டதில்லை/நினைக்கவில்லை.
பிண்டம் பெருங்காயம் அன்னம் கஸ்தூரி.

*****

113. அருமையின்மை, அதாவது ஒரு பொருள் அதிகமாக, எளிதாகக் கிடைப்பது பற்றி:

பழமொழிகள்:
அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ, ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ? [ஆண்டிச்சி=பிச்சைக்காரி]
இந்தப் பழமொழி சில துறவிகளின் ’வறுமை’ பற்றி அங்கதமாகச் சொல்லப்படுகிறது.

உரல் பஞ்சம் அறியுமோ?
பெரும்பாலும் எல்லா சமையல் பொருள்களும் உரலில் இடிக்கப்/பொடிக்கப் படுகின்றன. வறுமைக் காலத்தில்கூட பொடிக்க எதேனும் இருக்கும்.

கல்யாணத்திலும் பஞ்சமில்லை, களத்திலும் பஞ்சமில்லை.[களம்=நெற்போர்]
கொல்லன் தெருவிலே ஊசி விற்கிறதா?
தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?
வேடனுக்குத் தேன் பஞ்சமா, மூடனுக்கு அடி பஞ்சமா?

*****

114. அனுபவம், அதாவது பட்டறிவு பற்றிச் சில:

பழமொழிகள்:
அப்பன் அருமை செத்தால் தெரியும், உப்பின் அருமை உப்பில்லாதேபோனால் தெரியும்.
காவடிப் பாரம் சுமக்கறவனுக்குத் தெரியும்.
தலைநோவும்/தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு, கெட்டால் தெரியும் கோமுட்டிக்கு.
பார்த்தால் தெரியுமா, பட்டால் தெரியுமா வருத்தம்?

*****

115. பழமொழி: இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்தாற்போல.
பொருள்: ஒரு குழந்தை பெற்றவள் இரண்டாவது பெறும் வேறு ஒருத்திக்கு மருத்துவம் பார்க்க விரும்பினாளாம்.

விளக்கம்: இடைச்சன்=இரண்டாம் பிள்ளை, தலைச்சன்=முதல் பிள்ளை.

*****

116. பழமொழி: தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
பொருள்: நடைமுறை அனுபவங்களுடன் கற்றுக்கொடுக்கப்படாத கல்வி உடலில் சூடுபோட்டாலும் மனதில் ஏறாது.

விளக்கம்: ஆசிரியர் கல்வி பயிற்றுவிக்கும்போது நடைமுறை உதாரணங்களையும் உலக அனுபவங்களையும் விளக்கிக் காட்டவேண்டும். அப்படி போதிக்கப்படாத கல்வியை உடலில் சூடுபோட்டாலும் அந்த வடுவின் நினைவாக மனதில் ஏற்றமுடியாது.

*****

117. பழமொழி: நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.
பொருள்: கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்?

விளக்கம்: சமீபத்தில் தெரிந்துகொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவனிடம் அங்கதமாகக் கூறுவது.

*****

118. பழமொழி: புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு.
பொருள்: வண்ணான் புதியவனாகவும் நாவிதன் பழகியவனாகவும் இருப்பது நல்லது.

விளக்கம்: ஏன் இப்படி? வண்ணானனிடம் இருக்கவேண்டியது உடல் வலிமை; அது புதிய, இளம் வண்ணானிடம் அதிகம் இருக்கும். நாவிதனிடம் இருக்கவேண்டியது (நமக்கு ஏற்றபடி முடிவெட்டும்) திறமை; அது பழகியவனுக்கே கைவரும். இதுபோன்ற இன்னொரு பழமொழி:
வால ஜோசியனும், விருத்த வைத்தியனும் நன்று. (வால=வாலிப, இளம்; விருத்த=வயதான)

*****

119. பழமொழி: அப்பியாசம் கூசா வித்தை.
பொருள்: அனுபவத்தில் விளையும் கல்வியே நம்பிக்கை தரும்.

விளக்கம்: கூசா என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி கூஜா என்று பொருள் தருகிறது. அப்படியானால் கூசா/கூஜா வித்தை என்பது என்ன? ஆசிரியருக்கு கூஜா தூக்கி அவரைத் தாஜா செய்து அவர் அனுபவங்கள் மூலம் அறிய முயல்வதா? தெரிந்தவர் விளக்கலாம். ’அப்பியாசம் குல விருது’ என்பது இன்னொரு பழமொழி.

*****

120. பழமொழி: எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.
பொருள்: எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும், இறந்தவனை உயிர்பிழைக்க வைக்க உதவுமோ அது?

விளக்கம்: அந்நியர் நம்மை ஆண்ட காலத்தில் ஹிந்துக்கள் ஐரோப்பியர்களைக் குறித்துச் சில சமயம் இவ்வாறு கூறி வந்தனர்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Sun Nov 11, 2012 7:51 am

121. பழமொழி: பங்காளத்து நாய் சிங்காசனம்மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.
பொருள்: வங்காள நாட்டைச் சேர்ந்த நாய் தன் யஜமானனின் சிம்மாசனத்தில் ஏறியதைப் பார்த்த கழுதை, தானும் அதுபோல் செய்ய நினைத்துத் தன் யஜமானனின் வெள்ளாவிப் பானையில் ஏறியதாம்.

விளக்கம்: வங்காளத்தை ஆண்டவர்கள் நாய் வளர்த்தனர் போலும். தனக்கு ஆகாததைச் செய்து மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது செய்தி.

*****

122. பழமொழி: அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாள், வானமுட்டும் போர்; ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.
பொருள்: ஆம்பத்தூரில் அறுவடைக்குப் பின் மிஞ்சும் நெல் தாள்கள் யானையைக் கட்டும் அளவுக்கு வலிமையாம், நெல் போரோ வானம் முட்டும் உயரமாம். இருப்பினும் அங்கு விளைச்சலில் ஆறும் தூறும் பாதிப்பாதி கொண்டுபோய்விட்டனவாம்!

விளக்கம்: பொய் சொன்னது ஏன்? இதுதான் கதை: (வெள்ளையர் ஆட்சியில்?) அம்பத்தூருக்கு வரி வசூல் அதிகாரி வந்தபோது ஊர்த்தலைவர் பழமொழியின் முதல் பாதியைக் கூறினாராம், நல்ல விளச்சல் என்று பொருள்பட. கூடவே அவர் தன் கையை உயர்த்திப் பேசி, விரலில் உள்ள தங்க மோதிரத்தைச் சூசனையாக அதிகாரிக்குக் காட்டினார், வரியைக் குறைத்தால் மோதிரத்தை கையூட்டாகத் தரத் தயார் என்ற சைகையுடன். அதிகாரி மகிழ்ந்து பழமொழியின் இரண்டாவது பாதியைச் சொல்லி அதையே தான் குறித்துக்கொள்வதாகக் கூறினார். அதிகாரிக்குத் தெரியும், தன் கலெக்டருக்குச் சரியான கணக்குக் கட்டுவதைவிட, ஊர் விவசாயிகளைத் திருப்திப்படுத்துவது லாபகரமானது என்று.

*****

123. பழமொழி: உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
பொருள்: உறவினர்களுக்கு உணவிட்டால் வீட்டைச்சுற்றி எறும்புப் புற்றுதான் வளரும். அதுவே ஊரார்குச் சோறிட்டால் அது நமக்கு நல்ல பெயரைத் தரும்.

விளக்கம்: அன்னதானத்தின் சிறப்பைப் பற்றிச் சொன்னது.

*****

124. பழமொழி: வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.
பொருள்: வாழைப்பழங்களை மரியாதை நிமித்தம் வெகுமதியாக வாங்கிக்கொண்டு போன பெண் வாசலில் காத்திருக்க, தன் வாக்கு சாதுரியத்தால் இன்னொரு பெண் உடனே வரவேற்கப்பட்டு வீட்டின் நடுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

விளக்கம்: முகஸ்துதிக்கு மயங்காதவர் உண்டோ?

*****

125. பழமொழி: ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்.
பொருள்: தற்புகழ்ச்சியின் உச்சி இது.

விளக்கம்: இதுபோன்ற பிற பழமொழிகள்: ’வானத்தை வில்லாக வளைப்பேன்’, ’மணலைக் கயிறாகத் திரிப்பேன்’.

*****

126. பழமொழி: துள்ளாதே துள்ளாதே குள்ளா! பக்கத்தில் பள்ளமடா!
பொருள்: குள்ளன் அவனுக்குத் தற்புகழ்ச்சி அதிகம், ரொம்பத் துள்ளினால் பள்ளத்தில் விழுவோம் என்று அறியான்.

விளக்கம்: எப்படிப்பட்ட தற்புகழ்ச்சிக்காரனுக்கும் அவன் சவாலை எதிர்கொள்ள ஒருவன் இருப்பான் என்பது செய்தி.

*****

127. பழமொழி: பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன்.
பொருள்: பல்லில்லாதவன் பொரிமாவைச் சாப்பிட்டு ’ஆஹா, இதுபோல் உணவு உண்டோ?’ என்றானாம்.

விளக்கம்: ஒவ்வொருவரும் அவரால் முடிந்தது மற்ற எதையும்விட உயர்ந்தது என்று மெச்சிப் புகழ்வர்.

*****

128. பழமொழி: ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?
பொருள்: ஆண்டி ஒருவனுக்கு உணவிடும்போது அது அவனுக்காகவா? அல்லது அவன் கையேந்தும் சுரைக் குடுக்கைக்காவா?

விளக்கம்: கொடுப்பதைப் புகழ்ச்சியை எதிர்பாராமல் கொடுக்கவேண்டும் என்பது செய்தி. உணவை ஆண்டியின் சுரைக் குடுக்கையில்தான் இட்டாலும், அவன் முகத்தைப் பார்த்து அதை அவன் மெச்சுகிறானா என்று எதிர் பார்த்தால் கொடுத்ததன் பலன் கிட்டாது.

*****

129. பழமொழி: சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.
பொருள்: இரண்டுமே தண்ணீர்தான் என்றாலும் இருக்கும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும்.

விளக்கம்: கண்ணதாசனின் திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:
பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது: கருடா, சௌக்யமா?
யாரும் இருக்கும் இடம் இருந்துகொண்டால்
எல்லாம் சௌக்யமே, கருடன் சொன்னது.

இது போன்ற இன்னொரு பழமொழி: ’வைத்தியன் கோடுத்தால் மருந்து, இல்லாவிட்டால் மண்ணு.’

*****

130. டம்பம், ஆடம்பரம், ஜம்பம் குறித்த சில பழமொழிகள் (பொருள், விளக்கம் தேவையில்லை):
பழமொழிகள்:
அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
ஆழாக்கு அரிசி, மூவாழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பைப் பார்.
ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.
கறிக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கவோ?
குடிக்கிறது கூழ், கொப்புளிக்கிறது பன்னீர்.
பெருமை ஒரு முறம், புடைத்து எடுத்தால் ஒன்றுமில்லை.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Mon Nov 12, 2012 7:07 am

131. பழமொழி: எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான்.
பொருள்: என் கணவனும் நீதி மன்றத்தில் வேலை செய்கிறார்.

விளக்கம்: இவள் கணவர் கோர்ட்டில் ஒரு பியூனாகவோ குமாஸ்தாவாகவோ இருப்பார். அதைப் பட்டும் பாடாமலும் இவள் ஆடம்பரமாகச் சொல்லிக்கொள்கிறாள். இந்தப் பழமொழி இந்நாளில் சங்கீதக் கச்சேரி செய்யும் ’தேங்காய் மூடி பாடகர்’ குறித்தும் சொல்லப்படுகிறது. [கச்சேரி என்ற சொல்லுக்குத் தமிழில் உத்தியோக சாலை என்று பொருள், அது எந்த உத்தியோகாமானாலும்.]

*****

132. பழமொழி: ஜாண் பண்டாரத்துக்கு முழம் விபூதி/தாடி.
பொருள்: குள்ளப் பண்டாரத்தின் விபூதிப்பட்டை/தாடி அவர் உயரத்தைவிட அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது!

விளக்கம்: தன் நிலைக்குத் தகாத மரியாதையைகளை எதிர்பார்ப்போர்களைக் குறித்துச் சொன்னது.

*****

133. பழமொழி: மடப் பெருமைதான் நீச்சு தண்ணீருக்கு வழியில்லை.
பொருள்: மடத்தின் பெருமை பெரியதுதான், ஆனாலும் அங்கு சோறு-தண்ணீர் கிடைக்காது.

விளக்கம்: நீச்சுத்தண்ணீர் என்பது நீர்+சோறு+தண்ணீர் என்ற சொற்களின் சேர்க்கை. அது நீராகாரத்தைக் குறிக்கும். ’தோப்பு துரவு, நிலம் நீச்சு’ என்று சொல்கிறோம். இங்கு துரவு என்பது மணற்கேணியையும் நீச்சு என்பது நீர் நிறைந்த நெல்வயல்களையும் குறிக்கும்.

*****

134. பழமொழி: வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்.
பொருள்: வீட்டில் காசுக்கு வழியில்லை, அதிகாரமோ வேலூர் நவாப் போல.

விளக்கம்: வீட்டுச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணமே கொடுப்பது வழக்கமாக இருக்க, விருந்துணவு கேட்டு அதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது.

இதுபோன்று அளவுக்கு மீறிய ஆசைகள் குறித்த வேறு சில பழமொழிகள்:

"உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்."
"கிடக்கிறது ஓட்டுத்திண்ணை, கனாக் காண்கிறது மச்சுவீடு."
"காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கவேண்டும்."
"ஏழாயிரம் பொன்பெற்ற குதிரை இறப்பைப் பிடுங்கையில், குருட்டுக் குதிரை கோதுமை ரொட்டிக்கு வீங்கினதாம்." [இறப்பு=தாழ்வாரக் கூறையின் இடுக்கு]

மனிதனின் வறுமை இறைவனையும் தொற்றிக்கொள்கிறது!
"ஆண்டியே அன்னத்துக்கு அலையச்சே தன் லிங்கம் பால்சோற்றுக்கு அழுகிறது."
"ஆவுடயாரையும் (நந்தி) லிங்கத்தையும் ஆறு கொண்டுபோக, சுற்றுக்கோவில் சுவாமி எல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுததுபோல."
"பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறார், அனுமார் தத்தியோன்னம் கேட்கிறார்."

*****

135. பழமொழி: பல்லக்குக்கு மேல்மூடி யில்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.
பொருள்: கவலையும் வருத்தமும் பணக்காரனுக்கும் உண்டு, ஏழைக்கும் உண்டு.

விளக்கம்: பணக்காரன் துணியைப் போர்த்தி பல்லக்கை மூடிக்கொள்ளலாம்; செருப்பில்லாத ஏழை என்ன செய்ய முடியும்? அதாவது, பணக்காரன் தன் மெய்வருத்தம் சரிசெய்துகொள்ளலாம். ஏழைக்கு அது முடியாது.

*****

136. பழமொழி: காலக்ஷேபத்துக்குக் கூலிக்குக் குத்தினாலும், கமுக்கட்டு வெளியே தெரியப் போகாதாம்.
பொருள்: வயிற்றுப் பாட்டுக்காக உரலில் நெல் குத்துவது வேலையானாலும், அந்த ஏழைப்பெண் தன் அக்குள் தெரியுமாறு உடுக்கமாட்டாள்.

விளக்கம்: நெல் குத்தும்போது கைககளைத் தூக்கவேண்டி வரும். இன்றைய கதை வேறு.

*****

137. பழமொழி: கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்கவேண்டும்.
பொருள்: வறுமையானாலும் வெட்கப்படாமல் தன்னிலையில் மானமரியாதையுடன் இருக்கவேண்டும்.

விளக்கம்: குட்டு என்பதற்கு மானம், மரியாதை என்றொரு பொருள் உண்டு. ’கூழாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கி கட்டு’ என்ற பழமொழியும் இதுபோன்று வறுமையிலும் செயல்களில் மானம் மரியாதை வேண்டும் அறிவுறுத்துகிறது.

*****

138. பழமொழி: பசி வந்தால் பத்தும் பறக்கும்.
பொருள்: பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்றும் இந்தப் பழமொழி வழங்குகிறாது.

விளக்கம்: பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி. (வேறு விளக்கம் இருந்தால் தெரிவிக்கலாம்).

*****

139. பழமொழி: வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு.
பொருள்: ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும்.

விளக்கம்: ஒரு ஏழை மற்றொரு ஏழையிடம் யாசித்தபோது, இரண்டாவது ஏழை சொன்னது.

*****

140. பழமொழி: உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.
பொருள்: கஞசம் தரும் விருந்துக்கு இணையானது இல்லை (அங்கதமாகச் சொன்னது).

விளக்கம்: உலுத்தன் என்றால் உலோபி, கஞ்சன் என்று பொருள். இதுபோன்று இன்னும் சில பழமொழிகள்:
"எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான்."
"எட்டி பழுத்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன?"
"கட்டாணித்தன்மாய்க் கலியாணம் செய்தான்." [கட்டாணி=உலோபி]
"தானும் இடாள், இட்டவர்களைப் பார்த்தறியாள்."

"விடாக்கண்டன் கொடாக்கண்டன்" அல்லது "விடாக்கெண்டன், கொடாக்கெண்டன்"
[கென்டன் என்றால் மிண்டன் என்றால் வலியவன்; கண்டன் என்றால் வீரன்.]

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Tue Nov 13, 2012 8:11 am

141. பழமொழி: ஆனால் அச்சிலே வார், ஆகாவிட்டால் மிடாவிலே வார்.
பொருள்: சரியாக இருந்தால் அச்சில் கொட்டு, இல்லாவிட்டால் திரும்ப கொதிக்கும் பானையில் கொட்டு.

விளக்கம்: பொற்கொல்லன் தங்கத்தை உருக்கிப் பரிசோதிக்கும்போது மாசற்று இருந்தால் நகை செய்யும் அச்சில் கொட்டுவான். மாசு இருந்தால் மீண்டும் அதைக் கொதிக்கும் பானையில் கொட்டி உருகவைப்பான். ஏதோ ஒரு வழியில் காரியத்தை முடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

142. பழமொழி: இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்.
பொருள்: ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல.

விளக்கம்: மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது, எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாக, சிக்கனமாக முடிப்பார்கள் என்பது செய்தி.

*****

143. பழமொழி: தண்ணீரில் அடிபிடிக்கிறது.
பொருள்: தண்ணீரிலும் காலடித் தடங்களைக் கண்டறிவது.

விளக்கம்: மிகவும் சாமர்த்திய மானவன் என்று அறியப்பட்ட ஒருவனைக் குறித்து அங்கதமாகச் சொன்னது.

*****

144. பழமொழி: நீண்டது தச்சன், குறைந்தது கருமான்.
பொருள்: தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும்; கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும்.

விளக்கம்: தச்சன் மரத்தைத் துண்டங்களாக அறுத்து வேலை செய்பவன். கொல்லனோ இருபைக் காய்ச்சி அடித்து நீளமாக்கி வேலை செய்பவன். எல்லோர்க்கும் ஒன்றுபோல் ஆகாது என்பது செய்தி.

*****

145. பழமொழி: மழைக்கால இருட்டானாலும், மந்தி கொம்பு இழந்து பாயுமா?
பொருள்: மழை மூட்டத்தால் இருட்டாக உள்ளபோதும் குரங்கு தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா?

விளக்கம்: நீ ஏமாந்து போகலாம் என்றதற்குப் பதிலாக ஒருவன் உரைத்தது.

*****

146. பழமொழி: கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.
பொருள்: சிலம்பம் கற்றவன் தன் ஆட்டத்தில் இடறி விழுந்தால் அதுவும் அவன் ஆட்டக்கலையில் ஒரு வகை என்பான்.

விளக்கம்: கரடி என்ற சொல்லின் திரிபு கெரடி. கரடி என்றால் சிலம்பம் என்று ஒரு பொருள் உண்டு. வரிசை என்றால் முறை, ஒழுங்கு, வகை என்று பொருள். வல்லவன் ஒருவன் தன் தவறை ஒப்பாதது குறித்துச் சொன்னது.

*****

147. பழமொழி: சட்டி சுட்டதும், கை விட்டதும்.
பொருள்: ஏண்டா அடுப்பில் இருந்த மண் கலையத்தை இறக்கும்போது கீழே போட்டாய் என்றால், சட்டி சுட்டுவிட்டது என்றதுபோல.

விளக்கம்: ஒரு நொண்டிச் சாக்கைக் குறித்துச் சொன்னது.

*****

148. பழமொழி: பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
பொருள்: இந்தப் பணத்தை எண்ணிச் சொல் என்றதற்கு, எண்ணிப் பார்த்துவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை அதனால் பணத்தைத் திருப்பித்தற இயலாது என்றானாம்.

விளக்கம்: ஒரு பொதுவான நம்பிக்கையைக் காரணம் காட்டி நொண்டிச் சாக்கு சொன்னது.

*****

149. பழமொழி: ரெட்டியாரே ரெட்டியாரே என்றால், கலப்பையை பளிச்சென்று போட்டதுபோல்.
பொருள்: யாரோ யாரையோ ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இந்த உழவன் கலப்பையைக் கீழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம்.

விளக்கம்: ரெட்டியார் என்றது தெலுங்கு தேச உழவர்களை. யாரையோ குறித்து ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இவன் தன்னைத்தான் கூப்பிடுவதாகச் சொல்லி, உழுவதை நிறுத்திவிட்டுக் கலப்பையைக் கேழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம். சிரத்தை இல்லாமல் சோம்பேறியாக வேலையில் இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

150. பழமொழி: இது சொத்தை, அது புளியங்காய்ப்போல்.
பொருள்: இது புழு அரித்துச் சொத்தையாக உள்ளது, அதுவோ புளியங்காய் போலப் புளிப்பாக உள்ளது என்று நிராகரித்தது.

விளக்கம்: எதை எடுத்தாலும் குறை சொல்லுவனைக் குறித்துச் சொன்னது.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Wed Nov 14, 2012 9:25 am

151. பழமொழி: இந்தப் பூராயத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
பொருள்: நீ தூண்டித் துருவி ஆராய்வதற்கு ஒன்றும் குறைச்சலில்லை.

விளக்கம்: பூராயம் என்றால் ஆராய்ச்சி, இரகசியும், விசித்திரமானது என்று பொருள். உன் ஆராய்ச்சியில் ஒன்றும் குறைவில்லை, ஆனால் விளைவுகள்தான் ஒன்றும் தெரியவில்லை என்று பொருள்படச் சொன்னது.

*****

152. பழமொழி: ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது.
பொருள்: வெங்காயம் புதிதாக, ஈரமாக இருந்தாலும் அவன் அதிலும் இருபத்து நான்கு தோல்கள் உரித்திடுவான்.

விளக்கம்: மிகவும் கெட்டிக்காரத்தனமாக விமரிசனம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது. மரபு வழக்கங்களில் எதையெடுத்தாலும் குறைகாணும் இளைஞர்களைக் குறித்துப் பெரியவர்கள் வழக்கமாகச் சொல்வது.

*****

153. பழமொழி: ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல.
பொருள்: ஊசி வாங்கச் சென்றவன் அதன் எடையை நிறுத்துக் காட்டச் சொன்னானாம்!

விளக்கம்: அற்ப விஷயங்களைக் கூட சந்தேகத்துடன் ஆராய முனைபவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

154. பழமொழி: எச்சில் (இலை) எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?
பொருள்: சாப்பிட்டபின்னர் இலகளை எடுக்கச் சொன்னபோது எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று இலைகளை எண்ணினானாம்.

விளக்கம்: தன் வேலைக்குத் தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம்கொண்டு நேரத்தை விரயம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

155. பழமொழி: குதிரை நல்லதுதான், சுழி கெட்டது.
பொருள்: குதிரை பார்க்க நலமுடன் இருக்கிறது, ஆனால் அதன் சுழி சரியில்லை.

விளக்கம்: குதிரை வாங்கும்போது அதன் உடம்பில் உள்ள மயிரிச்சுழி போன்ற குறிகள் சொந்தக்காரரின் அதிரிஷ்டத்துக்கு அல்லது துரதிரிஷ்டத்துக்கு அறிகுறி என்ற நம்பிக்கையின் பேரில் ஏற்பட்ட பழமொழி.

*****

156. பழமொழி: புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.
பொருள்: இரவலாகக் கொடுத்த எருதினை அது உழுதுமுடித்தபின் பல்லைப் பார்த்து சோதனை செய்ததுபோல.

விளக்கம்: அன்பாக உதவியவர்களிகளின் உதவியில் குற்றம் கண்டுபிடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

157. பழமொழி: நிழல் நல்லதுதான் முசுறு கெட்டது (அல்லது பொல்லாதது).
பொருள்: நிழலில் நிற்பது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் செவ்வெறும்புகளின் கடிதான் தாங்கமுடியவில்லை.

விளக்கம்: முசுறு என்பது முசிறு என்ற சொல்லின் பேச்சுவழக்கு. முசிறு என்பது சிவப்பு எறும்பு வகைகள். நிழல் தரும் மரங்கள் அவற்றின் இருப்பிடமாவதால் மரநிழலில் ஒதுங்குபர்களைப் பதம் பார்த்துவிடும்!

*****

158. பழமொழி: முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?
பொருள்: தலையில் முடி சூட்டியபின் அந்தத் தலையில் சுழியை ஆராய முடியுமா?

விளக்கம்: ஒருவரைப் பதவியில் அமர்த்திய பிறகு நொந்துகொண்டு பயனில்லை என்ற பொருளில் சொன்னது.

*****

159. பழமொழி: ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா?
பொருள்: நூறு ஒரு ரூபாய்கள் உள்ள கட்டின் மதிப்பு ரூபாய்களை எண்ணித்தான் தெரியுமா அல்லது பார்த்த உடனேயே தெரியுமா?

விளக்கம்: சிறிது சிறிதாக முயற்சி செய்தே ஒரு புகழ் தரும் செயலைச் செய்ய முடியும் என்பது பொருள்.

*****

160. பழமொழி: ஒற்றைக் காலில் நிற்கிறான்.
பொருள்: விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது.

விளக்கம்: ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Thu Nov 15, 2012 12:02 pm

161. பழமொழி: மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்.
பொருள்: எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். அல்லது என்னை விட்டுவிடு, நான் தீர்த்த யாத்திரை போகிறேன்.

விளக்கம்: வேறு நல்ல வேலைகள் காத்திருக்க, நீச, அற்ப விஷயங்களிலேயே குறியாக இருப்பவனைக் குறித்த பழமொழி.

*****

162. பழமொழி: கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?
பொருள்: நன்றாகக் கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ?

விளக்கம்: கல்யாணத்துக்கு முன்பு அம்மா அப்பாவை நேசிக்காத பிள்ளை, மணமாகிக் குழந்தைகள் பெற்ற பின்பு நேசிப்பது அரிது.

*****

163. பழமொழி: கோல் ஆட, குரங்கு ஆடும்.
பொருள்: எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும்.

விளக்கம்: ஒழுக்கத்தை வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது; கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும்.

*****

164. பழமொழி: தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
பொருள்: ஒழுக்கம் விழுப்பம் தந்தாலும் அது ஒருவனுக்குத் தானே வரவேண்டும். வாயிலும் கையிலும் கண்டிப்புக் காண்டினால் வராது.

விளக்கம்: முன்னுள்ள பழமொழிக்கு இந்தப் பழமொழியே முரணாகத் தோன்றுகிறதே? ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து. இயற்கையில் ஒழுங்கு இருந்தால் கண்டிப்பால் அது சிறக்கும்.

*****

165. பழமொழி: உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.
பொருள்: சுற்றமும் நட்பும் தாங்கமுடியாத தொல்லைகள் ஆகும்போது பாதிக்கப்பட்டவன் சொன்னது: உங்கள் உறவைவிட மரண்மே மேல்!

விளக்கம்: மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்பது கருத்து.

*****

166. பழமொழி: ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது.
பொருள்: அவர் அடித்தாலும் பரவாயில்லை, ஏசினால் தாங்கமுடியாது.

விளக்கம்: பட்டுக்கொள்ளலாம் என்ற பிரயோகம் இனிமை. அடி வாங்குதல் இன்று வழக்கில் இருந்தாலும், பணிந்து அடி பட்டுக்கொள்ளுதல் என்பதே சரியாகத் தொன்றுகிறது. வாங்குவதைத் திருப்பிக் கொடுக்க முடியுமோ? அல்லது பெற்றுக் கொள்வது அடி என்றால் அது ஒரு யாசகம் ஆகாதோ?

தீயினாற் சுட்டபுண் ஆறும் ஆறாது
நாவினாற் சுட்ட வடு

என்ற குறளினை பழமொழி நினைவூட்டுகிறது.

*****

167. பழமொழி: காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது.
பொருள்: நச்சரிக்கும் ஒருவன் தான் கேட்பதைப் பெறாமல் விடமாட்டான்.

விளக்கம்: விடக்கண்டானிடாம் கொடாக்கண்டனாக இருப்பது கடினம்!

*****

168. பழமொழி: சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
பொருள்: வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான்; பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான்!

விளக்கம்: வைத்தியரின் வருமானம் சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப் படுகிறது.

*****

169. பழமொழி: கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தக்ஷணையா?
பொருள்: ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்குக் குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா?

விளக்கம்: குறுணி என்பது எட்டுப்படி கோண்ட பழைய முகத்தல் அளவை. தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது கருத்து.

இதுபோன்று இன்னும் சில:
செருப்பால் அடித்து, பட்டுப் புடவை கொடுத்தாற்போல.
பாப்பாச்சால அடித்து, பருப்பும் சோறும் போட்டதுபோல. (பாப்பாச்சு = பாப்பாச்சி = செருப்பு)
விளக்குமாற்றால் அடித்து, குதிரையோடு தீவட்டியும் கொடுத்தாற்போல.

*****

170. பழமொழி: கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
பொருள்: கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும்.

விளக்கம்: விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்ச்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும் என்பது கருத்து.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by பாலாஜி Thu Nov 15, 2012 12:23 pm

நல்ல திரி தொடருங்கள் நன்றி நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Fri Nov 16, 2012 8:39 am

171. பழமொழி: இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!
பொருள்: இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா?

விளக்கம்: பசியால் வாடிய சிவனடியார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றபோது அங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்று சென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்று நினைத்து. ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் இந்தப் பழமொழியாகி, இப்போது ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பதைக் கேலி செய்யப் பயன்படுகிறது.

*****

172. பழமொழி: ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?
பொருள்: ஒருநாளைக்கு மட்டும் போடும் பெண் வேஷத்துக்காக நான் என் மீசையை இழக்கவேண்டுமா?

விளக்கம்: பெண் ஆண்வேடம் போட்டால் மீசை வைத்துக்கொள்வது எளிது. ஆனால் ஆண் பெண்வேடம் போட்டால்? மீசை என்பது தமிழ் நாட்டில் ஆண்மையின் அடையாளம். சின்ன லாபத்துக்காக ஒரு அரிய உடைமையை எப்படி இழப்பது என்பது கேள்வி.

*****

173. பழமொழி: கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.
பொருள்: ஒரு உழக்குப் பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு!

விளக்கம்: ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானனக் குறித்து அவன் வேலையாள் சொன்னது.

*****

174. பழமொழி: பட்டும் பாழ், நட்டும் சாவி.
பொருள்: நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. நான் நட்ட பயிரும் நெல்மணிகள் திரளாமல் பதராயிற்று.

விளக்கம்: இது ஒரு மிக அழகான பழமொழி. இன்றைய வழக்கில் சொற்களின் வளமான பொருள்களை நாம் இழந்துவிட்டோம். சாவி என்றால் இன்று நமக்குத் திறவுகோல் என்றுதான் தெரியும். நெல்மணிகள் திரண்டு காய்க்காமல் வெறும் வைக்கோலாகவே உள்ல கதிர்களுக்குச் சாவி என்ற பெயர் எத்தனை வளமானது! chaff என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்திருக்கலாம். சாவி என்றால் வண்டியின் அச்சாணி என்று இன்னொரு பொருள் உண்டு.

அதுபோலப் பட்டு, நட்டு என்ற சொற்களைப் பெயர்ச்சொற்களாக இன்று நம் கவிதைகளிலேனும் பயன்படுத்துகிறோமா? பாடுபட்டு, நாற்று நட்டு என்று சொன்னால்தான் நமக்குத் தெரியும். அல்லது பட்டு என்றால் பட்டுத் துணி, நட்டு என்றால் திருகாணி என்றுதான் புரிந்துகொள்வோம். இந்த வினைச் சொற்களைப் பெயர்ச் சொற்களாக நம் உழவர்கள் பயன்படுத்துவதில் எவ்வளவு நயம் பாருங்கள்!

*****

175. பழமொழி: அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.
பொருள்: அப்பாசுவாமியை விட ஒரு கஞ்சனை நீங்கள் பார்த்ததுண்டா?

விளக்கம்: அந்தக் காலத்தில் கல்யாணத்தில் மொய் எழுதும் வழக்கமில்லை போலிருக்கிறது!

*****

176. பழமொழி: இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.
பொருள்: கொடுத்தவர்கள், உதவியவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கிவிட்டுப் புதிதாக வேலைக்கு வந்தவர்களை நல்லவர்கள் என்று சொல்லுவது.

விளக்கம்: பழைய வேலையாட்களின் மனக்குறையாக வெளிப்படும் சொற்கள். இடுதல் என்றால் கொடுத்தல். இங்கு வேலை செய்துகொடுப்பது என்று பொருள். தொடுதல் என்றால் தொடங்குதல். இங்கு வேல்களைத் தொடங்கி உதவியவர்கள் என்று பொருள்.

*****

177. பழமொழி: இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.
பொருள்: நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான்.

விளக்கம்: ஒரு மாமியாரின் அங்கலாய்ப்பு இது!

*****

178. பழமொழி: ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
பொருள்: இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அதற்கு ஒன்பது குஞ்சுகள் வாய் திறக்கின்றன!

விளக்கம்: நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது.

*****

179. பழமொழி: கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?
பொருள்: ஒரு கலம் மாவினை நான் இடித்துச் சலிக்க, அவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள்.

விளக்கம்: தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறை இது! வீட்டில் கல்யாணம் என்றால் எல்லா வேலைகளையும் செய்வது மருமகளே. ஆனால் மேம்போக்காகத் தளுக்கிவிட்டுத் தன் அம்மாவிடம், அதாவது இவள் மாமியாரிடம் பேர்வாங்கிக் கொள்வதென்னவோ அந்த நாத்திதான்.

*****

180. பழமொழி: உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
பொருள்: வடநாட்டில் இருந்து வந்த பைராகி சந்நியாசி மேசையில் அமரவைக்கப் பட்டு உணவால் நன்கு உபசரிக்கப் பட்டுத் தின்பான். உணைவைத் தயார்செய்து பரிமாறிய வீரமுஷ்டியாகிய நான் வாங்குவதோ வசவும் உதையும்.

விளக்கம்: பைராகி என்பவன் சிவனை வழிபடும் வடநாட்டுத் துறவி. வீரமுஷ்டி என்பவன் வாள் முதலிய ஆயுதங்கள் தரித்துச் செல்லும் மதவைராக்கியம் மிக்க வீரசைவத் துறவி. ’பைராகி’ என்றதற்கு பதில் ’சிவ பிராமணன்’ என்றும் பழமொழியில் வழக்குள்ளது.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by ரமணி Sun Nov 18, 2012 1:12 pm

181. பழமொழி: உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்.
பொருள்: பொதி சுமக்கும் ஓர் எருதுடன் அடை மழையில் கால்கள் இறங்கும் சேறு நிறைந்த சாலையில் செல்வது போன்ற சிரமம் (இதற்குத்தானா)?

விளக்கம்: இந்தப் பழமொழியின் கவிதை தீட்டும் ஓவியம் ஓர் ஆற்புதம்! ஏற்கனவே காலிறங்கும் சேறு நிறைந்த சாலை. மழையோ அடைமழையெனப் பெய்கிறது. இந்த மழையில் அந்தச் சாலை வழியே, தனியே, அதுவும் ஒரு பொதிமாடை இழுத்துக்கொண்டு, இதைவிடச் சிரமம் கிடையாது என்ற அளவுக்கு நடந்து செல்வது போல. எதற்காக இது? இந்தச் சிறு லாபத்திற்காகவா?

*****

182. பழமொழி: எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?
பொருள்: எண்ணை எடுப்பதற்காக எள்ளை நன்கு வெய்யிலில் காயவைப்பர். எள்ளுபோல உடல்வருத்தி எலிப் புழக்கையும் காய்வது எதற்காக?

விளக்கம்: ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.

*****

183. பழமொழி: ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
பொருள்: பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல.

விளக்கம்: இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள்.

*****
காரியம் சின்னது, முயற்சி மிகப் பெரியது
ஒரு சின்னக் காரியத்துக்காகப் பெரும் முயற்சி செய்வது பற்றிய பழமொழிகள் (தாமே விளங்குவன):

01. அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனமா?
02. ஆட்டுக்குட்டிக்கு ஆனையைக் காவு கொடுக்கிறதா?
03. ஆனையை விற்றுப் பூனைக்கு வைத்தியம் பார்க்கிறதா?
04. இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?
05. ஊர்க்குருவிமேல் ராமபாணம் தொடுக்கறதா?
06. எலிவேட்டைக்குத் தவிலடிப்பா?
07. கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?
08. கோழி அடிக்கிறதுக்குக் குறுந்தடியா?
09. கோழி முடத்துக்குக் கிடா வெட்டிக் காவு கொடுக்கிறதா?
10. சுடு கெண்டைக்கு ஏரியை உடைக்கிறதா?
11. மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பதா?

*****

சிறிதாக இருப்பனவற்றின் பெரும் பயன்கள்
அற்பமாகத் தோன்றுவதால் அதை அசட்டை பண்ணாதே பற்றிய பழமொழிகள் (தாமே விளங்குவன):

01. அச்சாணி (அல்லது தேராணி/சுள்ளாணி/கடையாணி) இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
02. அருகம் கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
03. அற்பத் துடைப்பமானாலும் உள்தூசியை அடக்கும்.
04. ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
05. ஆனை வேகம் அங்குசத்தினால் அடங்கும்.
06. நீரச் சிந்தினாயோ சீரைச் சிந்தினாயோ?
07. உப்பச் சிந்தினாயோ துப்பைச் சிந்தினாயோ?
08. பல துளி பெரு வெள்ளம்.

சின்னத் தீமைகள் பெரிய நன்மையை அழித்துவிடும்
01. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
02. ஆயிரம் குணம் ஒரு லோபக் குணத்தால் கெடும்.
03. கலப் பாலுக்குத் துளிப் பிரை.
04. காணி ஆசை, கோடி கேடு.
05. நெருப்பு சிறிது என்றால் முந்தானையில் முடியலாமா?

சின்ன வழிகளால் பெரிய இலக்குகளை அடைய முடியுமா?
01. ஆனை வாலைப் பிடித்துக் கரை ஏறலாம், ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாமா?
02. கப்பல் ஓட்டிப் பட்ட கடன் நொட்டை நூற்றா விடியும்? [நொட்டை=குறை]
03. குள்ளனைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறான்.
04. சீப்பை ஓளித்துவைத்தால் கல்யாணம் நிற்குமா?
05. நரி வாலைக்கொண்டு கடம் ஆழம் பார்க்கிறதுபோல.
06. நாய் குலைத்து நத்தம் பாழாகுமா? [நத்தம்=கிராமம்]
07. மின்மினிப் பூச்சி வெளிச்சத்துக்கு இருள் போகுமா?

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பழமொழி விளக்கம் - Page 3 - Page 4 Empty Re: பழமொழி விளக்கம் - Page 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum