ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்

+28
வேல்முருகன்
T.N.Balasubramanian
M.Saranya
Dr.S.Soundarapandian
Ponmudi Manohar
bparthasarathi
கிருஷ்ணா
ந.க.துறைவன்
myimamdeen
சின்னக் கண்ணன்
KINGUMAR
சிவா
ayyasamy ram
அப்துல்
முனைவர் ம.ரமேஷ்
M.M.SENTHIL
பாலாஜி
mbalasaravanan
ராஜு சரவணன்
அசுரன்
Ahanya
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
றினா
அச்சலா
சதாசிவம்
ஜாஹீதாபானு
ரமணி
32 posters

Page 6 of 36 Previous  1 ... 5, 6, 7 ... 21 ... 36  Next

Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Fri Jul 19, 2013 5:26 pm

உத்திப் பாக்கள்: நேரிசை வெண்பா
ஒரு சொல் திரிபுறாமல் திரும்புதல்

குழந்தை மிழற்றல் இனிமை; இனிமை
வழக்குத் தமிழ்மொழி வார்த்தை; - அழகான
கண்கள் இனிமை; இனிமை பழங்காலப்
பண்கள்; இனிமையிவ் வாழ்வு!

ஒருசொல் ஒருசொல் ஒருசொல் பெறவே
ஒருநாள் பலநாள் உவந்தேன் - ஒருநாஅள் ... ... (அல்லது ஒருதினம்)
காலையின் அஞ்சலில் காற்றென வந்தது
வேலை யெனவொரு சொல்!

ஒரு சொல் திரிபுடன் திரும்புதல்

தண்ணொளி வெண்ணொளி தண்ணில வின்னொளி
கண்ணொளி சிந்தும் கனவுகள் - திண்ணையில்
சோலையின் சித்திரம் தீட்டும் நிலவொளி
மூலையில் மாயும் வயிறு.

கல்லாமை இன்னாமை சொல்லாமை ஏலாமை
ஒல்லாமை பேசாமை ஒன்றாமை - அல்லாமை
பொல்லாமை நோலாமை பேணாமை யென்றெல்லாம்
பல்லாமை வாழும்நம் நாடு.

[சொல்லாமை=ஆற்றாமை; ஏலாமை=பொருந்தாமை;
ஒல்லாமை=இயலாமை/அவாவினமை; அல்லாமை=மேலும்;
பொல்லாமை=தீது/குற்றம்; நோலாமை=செய்த பாவத்துக்கு வருந்தாமை]

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Mon Jul 22, 2013 6:45 am

ஒரு பா ஒரு பஃது (அந்தாதி மாலை)
அருகிடும் வானுயிர் வாழ்வு


காப்பு
செயற்கையின் போக்கினில் செம்மை அழியும்
இயற்கை உயிர்வகை யேத்தி - இயற்றும்
ஒருமுதற் பாடல் உரைப்பதை யேற்கக்
கரிமுகப் பிள்ளைநீ காப்பு.

அவையடக்கம்
கற்றறிந்தோர் சொற்களிலே சற்றேனும் கற்றதில்
பெற்ற மகிழ்ச்சியில் உற்றபா - விற்பன்னர்
இச்சிறு யாப்பினை ஏற்றிதைச் செப்பனிட
இச்சிறுவன் வேண்டுவா னின்று.

நூல்
புறநகர்ப் பாக்கம் புதுமனை யாக்கம்!
மறத்தில் இயற்கை மறையும் - விறைத்திடும்
தானெனும் எண்ணம் தருக்கள் அழிப்பதால்
ஆனந்த வாழ்வின் அழிவு. ... 1

அழியுமே வானுயிர் ஆக்கமும் பண்ணும்
பழிபடர் மானிடர் பாழில் - விழிமுன்னே
விந்தைகள் காண்பது விண்ணில் அருகியே
கிந்தும்நம் சிந்தை கிளைத்து. ... 2

கிளைவளர் வேம்பினில் கீழ்வரும் ஓசை
துளைத்துச் செவிகளில் தோயும் - திளைக்கும்
குருவித் திரள்கள் துருவும் புரளும்
பருமரம் ஏறும் பறந்து. ... 3

பறந்தும் துரத்தியும் பார்க்கும் குருவி
குறைந்து வருதல் குழப்பம் - உறத்திடும்
நுண்கதிர்க் கூண்டு நுவல்வகை நுண்ணலை
நண்ணும் குருவி நலிவு. ... 4

நலிந்தெழும் ஊதா நிறத்தில்மீன் கொத்தி
அலிமரக் கட்டை அமரும் - வலிந்தும்
உரத்தும் செவிகள் உறுத்திடக் கத்தும்.
கரண்டும் அணிற்கண் கடுகு! ... 5

கடுகன்ன மேனியில் காதுறு சீழ்க்கை
விடுக்கும்தேன் சிட்டு விடாநின் - றொடுங்கியே
பூவினம் தேடிப் புகுந்துதேன் உண்ணுமே.
கோவினம் காலிடைக் கொக்கு. ... 6

கொக்குகள் மாடுகால் கொத்தியே பூச்சிகள்
சிக்கல் விடுவித்துச் சீராக்கும் - பக்கலில்
சேற்றை அளைந்து சிறுமீன் விழுங்கிடும்.
தென்றல் கலைத்தலை தெங்கு. ... 7

தெங்கு நிலத்திடைத் தேங்கும் மழைநீரில்
கங்கில் குருகினக் காணாண்கள் - கங்குல்
குழுமிடும் உன்னும்கால் ஓடி; குரலோ
குழந்தை மிழற்றும் குரல்! ... 8

குரல்கள் ஒலிகள் குறைந்திடும் வண்ணம்
விரல்வழி யோங்கிடும் வீழ்வு - மரங்களும் ... ... (விரல்வழி=digital)
மண்வாழும் விண்வாழும் மாக்களும் புட்களும்
கண்ணிமைப் போதில் கழிப்பு. ... 9

கழிப்பில் அறிவியல் கண்டிடும் மாண்பில்
அழியும் இயற்கையின் ஆட்சி - விழியில்
செவிட்டில் அறைந்திடும் செப்படி வித்தை!
தவிட்டில் நமக்குத் தகவு. ... 10

--ரமணி, 21/07/2013

*****


Last edited by ரமணி on Mon Jul 22, 2013 7:36 pm; edited 1 time in total
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Mon Jul 22, 2013 6:55 pm

அன்புடையீர்!

பொழிப்பு மோனை அமைய மேலுள்ள பாடலைத் திருத்தியிருக்கிறேன். படித்துப் பின்னூட்டம் இடவும்.

அன்புடன்,
ரமணி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Tue Jul 23, 2013 8:23 pm

நகைச்சுவை வெண்பாக்கள்

ஓரடிக்குள் அளபெடைத் தொடை
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

காஅலைப் போஒதில் கால்கள் நடந்திடச் ... 1-2 இணை
சாஅலை யோரத்தில் காஅட்சி இங்ஙனம்: ... 1-3 பொழிப்பு
வேஎலை செல்லும் விழிவழி மாஅதர் ... 1-4 ஒரூஉ
காஅலை மாஅலை சாஅலை ஈர்ப்பரே ... 1-2-3 கூழை
வாஅனம் மீதொரு காஅனம் கேஎட்கும் ... 1-3-4 மேற்கதுவாய்
சாஅலை யோஒரம் சோலையில் பூஉக்கள் ... 1-2-4 கீழ்க்கதுவாய்
காஅனம் காஅலை வாஅனம் யாஅவும் ... 1-2-3-4 முற்று
நாணக் குமரியை நல்வர வேற்குமே!
சிக்கும் அளபெடை வெண்பா எழுதியே
திக்க்கித் திக்க்கிப் பேசு!

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Thu Jul 25, 2013 7:04 am

உண்பொருள் வெண்பா மாலை - 1
ஒரு பா ஒரு பஃது

(இன்னிசை வெண்பா அந்தாதி)

காப்பு
காஞ்சி முனிநீ கருணை உரையாற்றிப்
பூஞ்சை யடியார்க்குப் புத்துயிர் தந்தாற்போல்
என்வாழ்வில் ஆன்மீகம் ஏற்றுநான் முன்னேற
உன்னருள் தாநீ யுவந்து.

அவையடக்கம்
பெரியவர் சொற்களைப் பேணித் தொகுத்தே
அரியார் கணபதி அண்ணா எழுதிய
நூல்களை நான்கொஞ்சம் நோக்கியே செய்ததைப்
பாலென ஏற்பீர் பரிந்து.

சாதம்
சத்துள்ள தாலது சாதம் எனப்படும்
சத்தான வர்களே சாதுக்கள் என்றாற்போல்
சாப்பாட்டில் முக்கிய சத்துத் தருகிற
காப்பீடே சாதமெனும் காப்பு. 1

காப்பெனச் சொன்னாலும் கற்றவர் வேடிக்கை
யாப்பெனச் சொல்வ தியாது? பிரசாதம்
ஆவது பூசைப் படைப்பெனில் சாதமென
ஆவதோ நாமுண்ணும் ஆக்கு. 2

பாயசம்
ஆக்கும் உணவினில் ஆக்கம் பெறநின்று
நாக்கில் மனதினில் நானென்று தித்திக்கும்
பாயசமே வெல்லமும் பாலும் அரிசியும்
வேயவெந் துண்ணும் உணவு. 3

உணவாக்கும் பாயசம் உள்ளே இறுகக்
கணத்தில் உருவாகும் சர்க்கரைப் பொங்கல்
திருமால் அடியார் திருக்கண் ணமுதாம்
திருக்கன்னல் வேய்ந்த அமுது. 4

சாம்பார்-ரசம்-மோர்
அமுதென மூவன்னம் ஆக்குவோம் ஆங்கு
தமதென முக்குணம் தங்குமே! காய்கறித்
தானொன்று தாளிக்கும் சாம்பார் தமோகுணம்
தானெனத் தங்குமது தான். 5

தானற்ற தெள்ளிய சாறாகிக் கையேந்தி
வானோக்கி உட்கொண்டு வாழ்த்தும் ரஸத்துள்ளே
மானிடர் வாழ்வில் மகிழும் ரஜோகுணம்
ஊனின் இயக்க ஓர்ப்பு. 6

ஓர்ப்பாம் ரஸத்தை உவகையில் வைணவர்
ஆர்ப்பில் அழைப்பது சாத்தமுது நாமத்தில்
சாற்றமுது என்பதே சாத்தமு தானது.
சாற்றமுது பின்னேமோர் உப்பு. 7

உப்பிட்ட மோர்சாதம் உண்போம் இறுதியில்
உப்புமோர் சாதத்தின் உள்வெண்மை சத்குணம்
பாயாசம் உண்டபின் பல்நலன் பேணிடக்
காயாத மோர்சாதக் காப்பு. 8

தாம்பூலம்
காப்பாக உண்ணுவோம் காய்கறிகள் மத்தியில்
சாப்பாட் டிறுதியில் தாம்பூலம் மெல்லுவோம்
வெற்றிலைபின் சுண்ணாம்பு வேய்ந்துதூள் பாக்குண்ணும்
சிற்றின்ப மாம்வெற் றிலை. 9

வெற்றிலை யென்றபேர் ஏனென்று கேட்டாலோ
மற்ற செடிகொடி பூகாய் கனியாகும்
சிற்றிலைக் கீரையைச் சேர்ப்போம் சமைத்தபின்
வெற்(று)இலைக்கோ நேர்வர வேற்பு. 10

நூற்சிறப்பு
உணவின் உருவே உயிரின் உறைகள்
உணவாகும் உண்ணுதல் உன்னுதல் யாவும்
உணவின் மகத்துவம் உள்ளியே உய்வோம்
மணமுடன் வாழ்வோம் மகிழ்ந்து.

--ரமணி, 24/07/2013

*****


Last edited by ரமணி on Fri Jul 26, 2013 9:11 am; edited 1 time in total
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Fri Jul 26, 2013 8:48 am

உண்பொருள் வெண்பா மாலை - 2
ஒரு பா ஒரு பஃது

(இன்னிசை வெண்பா அந்தாதி)

காப்பு
நானிலம் நல்வாழ நாளும் தவம்செய்து
மாநிலங்கள் கால்நடந்து மக்கள் குறைதீர்த்து
தெய்வமாய் நின்றிடும் தேவரீர் காஞ்சிமுனி!
உய்விக்க வேண்டும் குரு.

அவையடக்கம்
உணவின் மகத்துவம் கூறிய பின்னர்
மணமிகு சிற்றுண்டி மாட்சிமை மேய்வோமா?
அண்ணா கணபதி பண்ணிய செய்தியென்
வெண்பாவில் ஏற்பீர் விழைந்து.

இட்டிலி
இட்டதும் அஃதே இலையில் மறைந்திடும்
இட்டு இலியாக இட்டிலியென் றாரொருவர்
வாக்குச் சமர்த்தராய் வார்த்தைகள் சொன்னதன்
நோக்குவோம் உண்மை நுவன்று. 1

நுவன்றால் வெளிவரும் உண்மை இதுதான்
எவரேனும் மாண்டால் இடுகாடு செல்வர்
இடுதங்கம் என்றால் நெருப்பிடும் தங்கம்
இடுமருந்து பண்ணுமே ஈர்ப்பு! 2

ஈர்த்திடும் இட்டிலி இட்டபடி வேகுமே
பேர்க்கும் வரையில்நாம் பேசா தமருவோம்
இட்டலி யென்பதே பேச்சு வழக்கினில்
இட்டிலி யானதே இன்று. 3

இடியாப்பம்
இன்றும் இடியாப்பம் செய்வ(து) இடுதலில்;
நன்மை தரும்பண்டம் ஆப்பமே, அப்பமல்ல;
ஆப்பம் எனச்சொன்னால் ஆவியில் வேகுதல்
ஆபம் வடமொழி நீர். 4

உப்புமா
நீருண்ணும் உப்புமா ஏனிந்தப் பேராகும்?
ஓர்வகையில் சொல்லுவார் உப்பினால் அப்பெயர்;
உப்பிட்டே செய்கிறோம் தோசைவடை இட்டிலி
உப்புமாவில் கொஞ்சமே உப்பு! 5

உப்புமா அன்றிதுவே உப்புமா! வாணலியில்
உப்புமே நீருண்ட உப்புமா வின்ரவை!
நெய்சோற் றரிசியும் நீருண்டால் உப்புமே
நொய்யுப்பு மாவோ விரைந்து. 6

அப்பம்-வடை
விரைத்திடும் அப்பமே வீங்கிப் பழுக்கும்!
உரைத்திடும் பேரினில் உள்ளதே ஆபூபம்
ஆபூப்யம் மாவாகும் அப்பம் பணியாரம்
ஆபூபம் ஆகும் வடை! 7

வடநாடு தந்ததால் ஆகும் வடையென்(று)
இடம்கண்டு சொன்னவர் ஈங்கொரு வித்தகர்
மாஷம் உளுந்தாக ஆபூபம் அப்பமாம்
மாஷாஅ பூபம் வடை. 8

அப்பளம்
வடைவந்தால் அப்பளம் வாளா விருக்கும்?
இடையில் நொறுக்கியே தின்ன இனியதாம்
அப்பளாம் என்பது அப்பளம் என்றசொல்
அப்பம்போல் அப்பள வட்டு. 9

வட்டைக் குழவியால் அப்பளித்துப் பூசியே
வட்டமான அப்பளக் கட்டுகள் செய்து
பலவகை அப்பளம் பார்த்துச் சுவைத்து
நலமென உண்டிடும் நாக்கு! 10

நூற்சிறப்பு
சிற்றுண்டி தந்திடும் சிற்றின்பம் நாவிலே
சற்றே அளவுடன் ஏற்றால் செரித்திடும்
நாவினைக் கட்டாது நாடினால் நம்முள்ளே
பாவாது தந்திடும் பாடு!

--ரமணி, 26/07/2013

ஆதாரம்:
ரா.கணபதி எழுதிய புத்தகம்
’சொல்லின் செல்வர் ஶ்ரீ காஞ்சி முனிவர்’
பதிப்பு: திவ்ய வித்யா ட்ரஸ்ட், சென்னை

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Tue Jul 30, 2013 6:55 am

வசன ரூபக வெண்பா: வட்டார வகுப்பு வழக்கில்

அந்தணர்
என்னவோய் சொன்னதெலாம் ஏறிச்சா உம்தலைல?
என்னசொன்னீர்? ஞாபகம் எங்கயோ! - மின்னநீர்
சொன்னதும் இப்பநீர் சொல்வதும் ஒண்ணுமே
என்தலைல ஏறலயே ஓய்!

ஏன்னா? எதிர்த்தாத்து சீமாச்சு வந்திருந்தார்...
ஏன்தான் உயிரை எடுக்கறானோ? - பேன்-னா
பெருமாள்னு சொல்ற பிரகிருதி யாச்சே?
வருமான்னு கேட்டார் அவர்!

செட்டியார்
அப்பச்சி உள்ளயா ஆச்சி? எதுக்காக?
இப்பத்தான் போனாக எங்கயோ! - அப்பத்தா?
என்னவோ உள்ளாற பேசிட் டிருக்காக...
என்ன விசயம் கதிரு?

பழனியப்பன் வள்ளி பகட்டுக்கல் யாணம்
விழாபோல கூட்டம்நீ பாத்தே? - அழகப்பா,
அத்தான்நான் போகாம? ஆறுநாள் தங்கினேன்.
அத்தனையும் முத்தையா சொத்து.

சென்னைத் தமிழ்
காலீல போணியே சாவு கிராக்கிபா!
வேலீல பச்சோந்தி கீறமாரி! - சோலியப்
பாக்கலாம்னு இஸ்தா கலாய்க்கறான் சோமாரி!
சாக்கடப் பன்னிமாரி கப்பு!

திருநெல்வேலி தமிழ்
வல்லம் கிராமம் வருதியளோ அண்ணாச்சி?
இல்லமா இங்கனயே நிக்கேன்நான் - சொல்லுதேன்
கேளுநீ, சேக்காளி சோலி இருக்கில்ல
ஏளிநீ பையக் கிளம்பு!

[வருதியளோ=வருகிறீர்களா; நிக்கேன்=இருக்கேன்; சொல்லுதேன்=சொல்கிறேன்;
சேக்காளி=நண்பன்; சோலி=வேலை; ஏளி=ஏ பிள்ளை]

கொங்குத் தமிழ்
தண்ணியச் சேந்தி தலைலநல்லா ஊத்துடா
இண்டம் பிடிச்ச பெருக்கானே! - தண்ணிவார்த்து
சாப்டுபோட்டு இக்கட்ல அந்திக்குத் தங்கிக்க!
கூப்டுட்டு வர்றேன் மளார்னு.

[சேந்தி=இறைத்து; இண்டம்பிடிச்சவன்=கஞ்சன்; பெருக்கான்=பெருச்சாளி;
தண்ணிவார்த்து=குளித்துவிட்டு; இக்கட்டு=இந்த இடம்; அந்தி=இரவு; மளார்னு=விரைவாக]

மதுரைத் தமிழ்
அக்கப்போர் பண்ணாமப் பையக் கெளம்பிநீ
பக்கத்தூர் போய்ட்டுவா பஸ்புடிச்சு - எக்காளம்
பண்ணினே, குண்டக்க மண்டக்க பேசினே,
கொண்டுபோடு வேன்மவ னே!

[அக்கப்போர்=தகராறு; பைய=மெதுவாக; குண்டக்க மண்டக்க=விதண்டாவாதம்; கோண்டுபோடுதல்=கொன்றுபோடுதல்]

--ரமணி 29/07/2013

Ref:
[url]http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தமிழின்_வட்டார_வழக்குகள்[/url]

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Tue Aug 06, 2013 9:38 am

புள்ளின வழிபாடு

நாகாக்காப் பேராசை மாந்தரிடை நானுழல்வேன்
காவாக்கால் நீயென்னைக் கார்த்திகேயா ஆறுமுகா!
காண்பதெல்லாம் ஓயாமல் காயாமல் கொள்வாழ்வில்
மாண்பேது மால்மருகா கா!

குருவிடம் கற்பர் குருவோ குறுணை!
உருவை விரும்பித் துருவும் திரள்கள்
அரளும் புரளும் சளசள வாழ்வில்
கரையேற்று வேள்முரு கா!

கொக்கரித்துக் கொத்தியே முட்டை பலவிக்கி
எக்காள மாந்தர்க் கிறையாகி - நெக்குண்டு
மீண்டும் பிறந்தால் மனிதருணாப் புள்ளென
ஈண்டு அருள்முருக வேள்!

இதுபோல் அனபர்கள் மற்ற பறவைகள் குறித்து எழுதலாமே!

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Tue Aug 06, 2013 10:44 pm

புள்ளின வழிபாடு

அன்புறாது பண்புறாது எல்லோரும் இன்புறாது
தன்மையாய் வன்மையும் இன்மையும் பெற்று
எனக்கும் உனக்கும் கணக்கும் வழக்கும்
எனவாழும் மாந்தர் விரல்கொடுக்க எத்தனைநாள்
வானில் சிறகடித்து வாழ்வேன் படபடத்து?
நானோ மனிதரின் ஆன்மாக் குறியீடு?
நானோ அவர்காணா சாந்தியின் சின்னமென?
ஏனுனக் கென்குரல் என்முரல் கேட்டிலை?
வான்புகழ் சக்தியெனைக் கா!

--ரமணி, 06/08/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி Thu Aug 15, 2013 10:56 am

சஹதர்மிணி
(குறளடிச் சமனிலைச் சிந்து)

அகமுடை யாளே - பெரும்
. அன்புடைப் பெண்ணே
முகமெழி லாளே - நல்
. மொழியுரைப் பெண்ணே
பகலிர வாகப் - பணி
. யாற்றிடு வாயே.
இகமதி லுன்னை - நான்
. பெற்றதென் பேறே. 1

சமமெனும் பாவம் - நீ
. காட்டுவ தெங்ஙன்
விமர்சனம் வீணாய் - நீ
. செய்வது மில்லை
தமதெனும் எண்ணம் - நீ
. தாங்குவ தில்லை
மமதையென் றுனக்கு - ஒன்றும்
. அதிகமு மில்லை. 2

பற்றுகள் யாவும் - மிகப்
. பற்றிய தில்லை
சுற்றமுண் டுனக்கு - எனில்
. சுற்றமொன் றில்லை
மற்றவர் நட்பும் - நீ
. சற்றெனக் கொள்வாய்
உற்றதுன் வாழ்வை - நீ
. உவகையில் வாழ்வாய். 3

பொழுதுகள் போகும் - உனக்குப்
. பொழுதுகள் போதா
தொழுவது என்றும் - நீ
. பொழுதினிற் செய்வாய்
அழுவது உண்டு - எனில்
. அரற்றுவ தில்லை
நழுவிடும் கணத்தில் - நீ
. நன்மையே விழைவாய். 4

கருத்தொரு மித்தும் - நம்
. கருத்தினை மறுத்தும்
குறைகளைக் குறைத்தும் - நாம்
. நிறைகணே சித்தும்
வருடங்கள் ஓட்டில் - நாம்
. வாழ்வது கற்றோம்
இருமனம் ஒன்றாய் - நம்
. திருமண வாழ்வு. 5

வருமினி வாழ்வில் - நம்
. மரமது வளர
ஒருமக னுக்கே - வதுவை
. உற்றதின் பின்னவர்
திருமண வாழ்வில் - நாம்
. இனியன செய்தே
உரியது பேணி - வரும்
. உறவுகள் வளர்ப்போம். 6

வருமினி வாழ்வில் - நம்முள்
. ஒருவரே இருத்தல்
வருமொரு நாளே - என்று
. வருவதை யறிந்து
விருப்புடன் வாழ்வோம் - நாம்
. இருப்பது போற்றி
பெருவகைக் கனவு - ஏதும்
. வருவது தவிர்த்து. 7

உணவுகள் செய்வோம் - நமக்
. கேற்பதை உண்போம்
பிணக்குகள் உண்டு - நம்முள்
. இணக்கமும் உண்டு
கணக்குகள் இல்லை - என்று
. பணத்தினை வென்றோம்
மணக்குள நாதன் - நம்மைக்
. காத்தரு ளட்டும்! 8

--ரமணி 15/08/2013, கலி.30/04/5114

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 6 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 36 Previous  1 ... 5, 6, 7 ... 21 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum