புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
90 Posts - 71%
heezulia
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
255 Posts - 75%
heezulia
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_m10கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:08 pm

மேலகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள் 'பிராட்வே 'யும் 'எஸ்பிளனேடு 'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். டிராமில் ஏறிச் சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்து விட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரை 'கப் ' காபி குடித்து விட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...

'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.

'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கும். '

இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.

திடாரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, ' 'இந்தா, பிடி வரத்தை ' ' என்று வற்புறுத்தவில்லை.

' 'ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது ? ' ' என்றுதான் கேட்டார்.

' 'டிராமிலும் போகலாம், பஸ்சிலும் போகலாம், கேட்டுக்கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே ' ' என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.

' 'நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி ? ' ' என்றார் கடவுள் இரண்டுபேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சாடி மோதித் தள்ளிக் கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.

மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதி தீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்க வஸ்திரம்.

வழி கேட்டவரைக் கந்தசாமி பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம், அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.

தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக்கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கரேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கவிழ்ந்தது. சிரிப்பு ?-அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.

' 'ரொம்பத் தாகமாக இருக்கிறது ' ' என்றார் கடவுள்.

' 'இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம் ' ' என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.

' 'சரி, வாருங்கள் போவோம் ' ' என்றார், 'பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால் ? ' என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான் ' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.

இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின்தொடர்ந்தார்.

இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங்கொடுக்காமல்,

' 'சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி! ' ' என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.

' 'தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல் ' ' என்றார் கடவுள்.

' 'அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும் ' ' என்று தமிழ்க்கொடி நாட்டினார் பிள்ளை

முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். ' 'நல்ல உயரமான கட்டடமாக இருக்கிறது; வெளுச்சமும் நன்றாக வருகிறது ' ' என்றார்.

' 'பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ ? கோவில் கட்டுகிறதுபோல என்று நினைத்துக்கொண்டாராக்கும்! சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள் ' ' என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.

கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.

' 'அப்படி என்றால்... ? ' ' என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. ' 'சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும் ? ' ' என்று கேட்டார் கடவுள்.

' 'ஓ! அதுவா ? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்யோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துத்தான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டு விட்டதோ என்று சந்தேகித்தார்.

கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தை விட்டு வெளுயே வர முயன்று கொண்டிருந்தது.

' 'இதோ இருக்கிறதே! ' ' என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்து விட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.

' 'என்ன ஐயா, எச்சிலைத் தொட்டு விட்டாரே... இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும் ' ' என்றார் பிள்ளை.

' 'ஈயை வர விடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம் ' ' என்று முனகிக் கொண்டார் கடவுள்.

பையன் இரண்டு 'கப் ' காப்பி கொண்டு வந்து வைத்தான்.

கடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.

' 'நம்முடைய லீலை ' ' என்றார் கடவுள்.

' 'உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே ' ' என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்னையைத் தீர்த்து விட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.



கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:08 pm

' 'சிக்கரிப் பவுடர் என்றால்... ? ' ' என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.

' 'சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சில பேர் தெய்வத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.

பெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.

' 'சில்லறை கேட்டால் தரமாட்டேனா ? அதற்காக மூன்றணா பில் எதற்கு ? கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா ? ' ' என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.

' 'நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம் ' ' என்றார் கடவுள்.

' 'அப்படியானால் சில்லறையை வைத்துக் கொண்டு வந்திருப்பீர்களே ? ' ' என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டு விட்டு வெளுயே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். ' 'தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதிமூன்று சரியா ? பார்த்துக்கொள்ளும் சாமியாரே! ' '

' 'நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது ' ' என்றார் கடவுள்.

ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.

வெளுயே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.

கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுகளில் ஐந்தாவது மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்

.

' 'கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன் ' ' என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.

என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக்கொண்டு வந்திருப்பேனே! ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டாரா இல்லையா ? அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக் கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன் ' ' என்றார் கடவுள்.

வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடை பெற்றுக் கொள்ளுவது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.

' 'திருவல்லிக்கேணிக்குத்தானே ? வாருங்கள் டிராமில் ஏறுவோம் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'அது வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாம் ' ' என்றார் கடவுள்.

' 'ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப்போகலாமே ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை, ' 'நாம்தான் வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன ? ' ' என்பதுதான் அவருடைய கட்சி.

' 'நர வாகனமா ? அதுதான் சிலாக்கியமானது ' ' என்றார் கடவுள். இரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார்கள். ' 'சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன் ' ' என்றான் ரிக்ஷாக்காரன்.

பொழுது மங்கி, மின்சார வெளுச்சம் மிஞ்சியது.

' 'இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகிவிட்டோமே! நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே, இப்படிச் சந்திக்க வேண்டும் என்றால்... ' '

கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. ' 'நான் யார் என்பது இருக்கட்டும், நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன் ' ' என்றார் அவர்.

கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக் கொண்டால் விட்டு வைப்பாரா ? கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.

' 'சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா ? ' ' என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

' 'இல்லை ' ' என்றார் கடவுள்.

' 'அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்று தான் கொள்ள வேண்டும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'பரிச்சயம் உண்டு ' ' என்றார் கடவுள்.

'இதென்னடா சங்கடமாக இருக்கிறது ? ' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. ' 'உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிச்சயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒருமுறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்... ' '

' 'பதினேழு வருஷ இதழ்களா! பதினேழு பன்னிரண்டு இரு நூற்று நாலு. ' ' கடவுள் மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம் ' என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.

' 'தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள்நாட்டுக்கு ரூபாய் ஒன்று; வெளுநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம் ' ' என்று கடவுளைச் சந்தாதாரராகச் சேர்க்கவும் முயன்றார்.

'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓடஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா ? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக்கூடாது ' என்று யோசித்துவிட்டு, ' 'யாருடைய ஜீவியம் ? ' ' என்று கேட்டார் கடவுள்.

' 'உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல. பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக் கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.

வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.

' 'என்னடா திரும்பிப் பாக்கிறே ? மோட்டார் வருது மோதிக்காதே; வேகமாகப் போ ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா ? வண்டிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு ' ' என்றான் ரிக்ஷாக்காரன்.

' 'வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ ' ' என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

' 'தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக் கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு ' ' என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.

'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய் காணோமே ' என்று நினைத்தார் கடவுள். ' 'தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர் ? ' ' என்று கேட்டார்.

' 'பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்று விடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது; அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாதி என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால் தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாய்க் குணமாக வேண்டும்; மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக்கூடாது. இதுதான் வியாபார முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா ? ' ' என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் விஷயம் புரிந்தவர்போலத் தலையை ஆட்டினார்.

' 'இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம் ' ' என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.

' 'ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா ? ' ' என்று சிரித்தார் கடவுள்.

' 'அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். ' 'பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டா ? ' ' என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை.

' 'நீ கெட்டிக்காரன்தான்; வேறும் எத்தனையோ உண்டு ' ' என்று சிரித்தார் கடவுள்.

' 'ஆமாம், நாம் என்னத்தை யெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வெங்கடாசல முதலி சந்து ' ' என்றார் கடவுள்.

' 'அடெடெ! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும் ? ' '

' 'கந்தசாமிப் பிள்ளையை! ' '

' 'சரியாப் போச்சு, போங்க; நான்தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ ? இனம் தெரியவில்லையே ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'நானா ? கடவுள்! ' ' என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.

கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

' 'பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி. ' '

கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். ' 'எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளுயில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக் கூடாது ' ' என்றார்.

' 'அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

' 'நல்லா இருக்கணும் சாமி ' ' என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.

கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!

' 'என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது ? ' ' என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.



கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:09 pm

' 'அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன ? ' ' என்றார் கடவுள்.

' 'அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்! ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா பாக்கணும் ' ' என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.

' 'மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன்தான்! தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல ? கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான் ' ' என்று சொல்லிக் கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.

கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.

' 'இதுதான் பூலோகம் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'இவ்வளவுதானா! ' ' என்றார் கடவுள்.

இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.

கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.

' 'பக்தா! ' ' என்றார் கடவுள்.

எதிரில் கிழவனார் நிற்கவில்லை.

புலித் தோலாடையும், சடா முடியும் மானும் மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.

' 'பக்தா! ' ' என்றார் மறுபடியும்.

கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்து விட்டது.

' 'ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீ வரத்தைக் கொடுத்துவிட்டு உம் பாட்டுக்குப் போவீர். இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டார்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல், வீட்டுக்கு ஒழுங்காக வாரும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் மெளனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்திலே வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப்பட்டது.

கந்தசாமிப் பிள்ளை, வாசலருகில் சற்று நின்றார். ' 'சாமி, உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா ? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா ? ' ' என்றார்.

' 'பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம். ' '

' 'அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன், உடன்பட வேணும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை ' ' என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.

' 'அப்படி உங்கள் சொத்து என்னவோ ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான் ' ' என்றார் கடவுள்.

' 'பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை ' ' என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.

வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ ? ஒரு குழந்தை, அதற்கு நாலு வயது இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை வளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடுபோட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா, அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும்போது அப்பா உள்ளே நுழைந்தார்.

' 'அப்பா! ' ' என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக் கொண்டது. அண்ணாந்து பார்த்து ' 'எனக்கு என்னா கொண்டாந்தே ? ' ' என்று கேட்டது.

' 'என்னைத்தான் கொண்டாந்தேன் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது ? ' ' என்று சிணுங்கியது குழந்தை.

' 'பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'இதுதான் உம்முடைய குழந்தையோ ? ' ' என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.

கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.

' 'சும்மா சொல்லும்; இப்போதெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால், தயிர் கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை ' ' என்று சிரித்தார் கடவுள்.

' 'ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன் ' ' என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார். மனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.

' 'வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே ' ' என்று கைகளை நீட்டினார் கடவுள். ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.

' 'எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா ? ' ' என்று கேட்டது.

அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறுத்தென்பட்டது.

' 'அதென்ன தாத்தா, கன்னங் கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு ? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு ' ' என்று கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிப் பேசிக்கொண்டு மடியில் எழுந்து நின்று கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம்பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

' 'கூச்சமா இருக்கு ' ' என்று உடம்பை நெளுத்தார் கடவுள்.

' 'ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப்பட்டு பொத்துப் போச்சா ? எனக்கும் இந்தா பாரு ' ' என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப்போன கொப்புளத்தைக் காட்டியது.

' 'பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக் கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலே இருந்து அது அங்கியே சிக்கிச்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லையா ? ' ' என்று கேட்டார் கடவுள்.

' 'வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா ? ' ' என்று கூப்பிட்டது.

குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.

' 'தாத்தா, தோத்துப் போனியே ' ' என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.

' 'ஏன் ? ' ' என்று கேட்டார் கடவுள்.

கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.

' 'முந்தியே சொல்லப்படாதா ? ' ' என்றார் கடவுள்.

' 'ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா ? ' ' என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.

அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி, பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளுப்பட்டார்கள்.

' 'இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா; கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குந்தான் கொடுத்திருக்கு. தெரியாதா ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா ? வாருங்க மாமா, சேவிக்கிறேன் ' ' என்று குடத்தை இறக்கி வைத்து விட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.

' 'பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும் ' ' என்று ஆசீர்வதித்தார் கடவுள்.

காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது.

' 'வாசலில் இருக்கிற அரிசி மூட்டை அப்படியே போட்டு வச்சிருந்தா ? ' ' என்று ஞாபகமூட்டினார் கடவுள்.

' 'இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பத்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னு பாக்கணும் ' ' என்றாள், காந்திமதி அம்மாள்.

' 'பாத்துக் கிட்டுத்தான் நிக்காறே ' ' என்றார் கடவுள் கிராமியமாக.

' 'பாத்துச் சிரிக்கணும், அப்பத்தான் புத்தி வரும் ' ' என்றாள் அம்மையார்.

கடவுள் சிரித்தார்.



கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:09 pm

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.

' 'அந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே ' ' என்றார் பிள்ளை காதோடு காதாக.

' 'இனிமேல் இல்லை ' ' என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.

' 'நல்ல இளவட்டம்! ' ' என்று சிரித்துக்கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள்:

' 'நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே! ' ' என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.

' 'நீ சும்மா இரம்மா; எங்கே போடனும்ணு சொல்லுதே ? ' ' என்றார் கடவுள்.

' 'இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க ' ' என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.

கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டு விட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று.

' 'இனிமேல் என்ன யோசனை ? ' ' என்றார் கடவுள்.

' 'தூங்கத்தான் ' ' என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.

' 'தாத்தா, நானும் ஒங் கூடத்தான் படுத்துக்குவேன் ' ' என்று ஓடிவந்தது குழந்தை.

' 'நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர் ? ' ' என்று கேட்டார் கடவுள்.

' 'மனுஷாள் கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான், நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால், பேசாமல் படுத்துக் கொண்டிருங்கள். ராத்திரியில் அபவாதத்துக்கு இடமாகும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்துக் கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.

' 'ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப்பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப் பச்சை என்றும் பாடம்).... ' ' என்று எழுதி விட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, ' 'இன்றைக்கும் பத்திரிகை போகாது ' ' என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.

வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கைநிறைய மிட்டாய்ப் பொட்டலம்.

' 'தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம் ' ' என்று துள்ளியது குழந்தை.

' 'எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது ? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ ? ' ' என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.

' 'அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்து விடுவார்களா ? சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்து விடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆகவேணும் ' ' என்று கையை நீட்டினார் பிள்ளை.

' 'இது யாரை ஏமாற்ற ? யார் நன்மைக்கு ? ' ' என்று சிரித்தார் கடவுள்.

' 'தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால்தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டார்களே! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணைவரையில் எல்லாம் கலப்படந்தான். இது உங்களுக்குத் தெரியாதா ? ' ' என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் யோசனையில் ஆழ்ந்தார்.

' 'அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை உண்டா ? அல்லது கருடப்பிச்சுதானா ? ' ' என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

' 'பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது நியாயமா ? நான் என்னத்தைக் கண்டேன் ? உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான்தான் பழியா ? ' ' என்று வாயை மடக்கினார் கடவுள்.

' 'நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்து விட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கி விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, ' 'ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே ? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனீச்சுக் கெடக்கு ' ' என்று கடவுளை அழைத்தது.

குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டே, ' 'பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு! ' ' என்றார் கடவுள்.

குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.

' 'தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு சொல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா ? ' ' என்று கேட்டது குழந்தை.

கடவுள் விழுந்து விழுந்து சிரித்தார். ' 'அவ்வளவும் உனக்கே உனக்குத்தான் ' ' என்றார்.

' 'அவ்வளவுமா! எனக்கா! ' ' என்று கேட்டது குழந்தை.

' 'ஆமாம். உனக்கே உனக்கு ' ' என்றார் கடவுள்.

' 'அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாகளே! அப்பா லேவியம் குடப்பாகளே! ' என்று கவலைப்பட்டது குழந்தை.

' 'பசிக்கும். பயப்படாதே! ' ' என்றார் கடவுள்.

' 'தாங்கள் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம் இருக்கட்டும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'நான்தான் இருக்கிறேனே! ' ' என்றார் கடவுள்.

' 'நீங்கள் இல்லையென்று நான் எப்பொழுது சொன்னேன் ? ' '

என்றார் கந்தசாமிப் பிள்ளை.

சில விநாடிகள் பொறுத்து, ' 'இன்றைச் செலவு போக, அந்த நூறு ரூபாயில் எவ்வளவு மிச்சம் ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

' 'உமக்கு ரூபாய் இருபத்தைந்து போகக் கையில் ஐம்பது இருக்கிறது ' ' என்று சிரித்தார் கடவுள்.

' 'அதற்குப் பிறகு என்ன யோசனை ? ' '

' 'அதுதான் எனக்கும் புரியவில்லை. ' '

' 'என்னைப்போல வைத்தியம் செய்யலாமே! ' '

' 'உம்முடன் போட்டி போட நமக்கு இஷ்டம் இல்லை. ' '

' 'அப்படி நினைத்துக்கொள்ள வேண்டாம். என்னோடே போட்டி போடல்லே; லோகத்து முட்டாள் தனத்தோடே போட்டி போடுகிறீர்கள்; பிரியமில்லை என்றால், சித்தாந்த உபந்நியாசங்கள் செய்யலாமே ? ' '

' 'நீர் எனக்குப் பிழைக்கிறதற்கா வழி சொல்லுகிறீர்;-அதில் துட்டு வருமா ? ' ' என்று சிரித்தார் கடவுள்.

' 'அப்போ ? ' '

' 'எனக்குத்தான் கூத்து ஆட நன்றாக வருமே; என்ன சொல்லுகிறீர் ? தேவியை வேண்டுமானாலும் தருவிக்கிறேன். ' '

கந்தசாமிப் பிள்ளை சிறிது யோசித்தார். ' 'எனக்கு என்னவோ பிரியமில்லை! என்றார்.

' 'பிறகு பிழைக்கிற வழி ? என்னங்காணும். பிரபஞ்சமே எங்கள் ஆட்டத்தை வைத்துத்தானே பிழைக்கிறது ? ' '

' 'உங்கள் இஷ்டம் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை மறுபடியும் சிறிது நேரம் சிரித்தார்.

' 'வாருங்கள், போவோம் ' ' என்று ஆணியில் கிடந்த மேல் வேட்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டார்.

' 'குழந்தை ' ' என்றார் கடவுள்.

' 'அதுதான் உறங்குகிறதே; வருகிற வரையிலும் உறங்கட்டும் ' ' என்றார் பிள்ளை.

கால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர் பிருகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை; மற்றொருவர் கடவுள்! மூன்றாவது பெண்;-தேவி.

' 'நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால் கேட்பார் ' ' என்று விளக்கிக்கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ளை; இருவரும் பின் தொடர்ந்தனர். தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது.

' 'சாமி இருக்காங்களா; நான் வந்திருக்கேன் என்று சொல்லு ' ' என்று அதிகாரத்தோடு வேலைக்காரனிடம் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை.

' 'பிள்ளையவர்களா! வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப்பட்டேன் ' ' என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான்பகதூர் ஓடிவந்தது. எல்லோரையும் கும்பிட்டுக் கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.

' 'உட்காருங்கள், உட்காருங்கள் ' ' என்றார் திவான் பகதூர். கந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, ' 'பரவாயில்லை; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணிவைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம். உங்கள் நிருத்திய கலாமண்டலியில், வசதி பண்ணினா செளகரியமாக இருக்கும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள் வாங்கின. கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க் கட்டையிலுமாக வைத்துக் கொண்டு ' 'உம் ' ', ' 'உம் ' ' என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.



கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:09 pm

' 'இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள் ' ' என்று உறவைச் சற்று விளக்கி வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.

' 'நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா ? ' ' என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.

கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல், ' 'நாங்கள் ஆடாத இடம் இல்லை ' ' என்றாள் தேவி.

`

' 'என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்றுதான் யோசிக்கிறேன் ' ' என்றார் வர்ணபேத திவான் பகதூர்.

' 'பெண் பார்க்க வந்தீரா, அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ ? ' ' என்று கேட்டாள் தேவி.

' 'அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரெஸிடெண்டா இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள்தான் கறுத்திருக்கும். ' '

' 'உம்ம மண்டலியுமாச்ச, சுண்டெலியுமாச்சு! ' ' என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள்.

' 'அப்படிக் கோவிச்சுக்கப்படாது ' ' என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.

' 'இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்தமாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்கவேணும். ஒருமுறைதான் சற்றுப் பாருங்களேன் ' ' என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.

' 'சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம் ?! ' ' என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். ' 'சரி, நடக்கட்டும்! ' ' என்று சொல்லிக் கொண்டு இமைகளை மூடினார்.

' 'எங்கே இடம் விசாலமாக இருக்கும் ? ' ' என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.

' 'அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே ' ' என்றார் கடவுள். ' 'சரி ' ' என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டார்கள். சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.

' 'மயான ருத்திரனாம்-இவன்

மயான ருத்திரனாம்... ' ' கதவுகள் திறந்தன.

கடவுள் புலித்தோலுடையும், திரிசூலமும், பாம்பும், கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.

மறுபடியும் இசை. மின்னலைச் சிக்கலெடுத்து உதறியதுபோல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில், கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோட, காலைத் தூக்கினார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.

' 'ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும். ' '

' 'சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு ' ' என்று அதட்டினார் திவான் பகதூர்.

ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள்.

' 'ஓய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும் ? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டாரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா ? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும். புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக்கொள்ள வேணும். கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதலிலே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை! ' ' என்றார் திவான் பகதூர்.

ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டு விடவில்லை. ' 'கந்தசாமிப் பிள்ளைவாள்; நீர் ஏதோ மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் பார்க்க முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம் ? ' '

கால் மணி நேரம் கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டுபேர் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

இரண்டுபேரும் மெளனமாக இருந்தார்கள். ' 'தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாதுபோல இருக்கே! ' ' என்றார் கடவுள்.

' 'நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை, வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே! ' '

கடவுள், ' 'ச்சு ' ' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.

' 'அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ! ' '

' 'உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்தது போல் ' ' என்றார் கடவுள்.

' 'உங்களைப் பார்த்தாலோ ? ' ' என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

' 'உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது ' ' என்றார் கடவுள்.

' 'உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை. மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.

' 'கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து ' ' என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.

' 'தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா ? ' ' என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.



கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 11:12 pm

என் சிரம் தாழ்ந்த ந்னறி சிவா.. நீண்ட நாட்கள் ஆயிற்று இந்தக் கதைகள் எல்லாவற்றையும் படித்து.. மீள் வாசிப்புக்கு உதவியமைக்கு மிக்க நன்றி சிவா.. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் 678642



கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Aகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Aகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Tகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Hகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Iகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Rகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Aகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:17 pm

Aathira wrote:என் சிரம் தாழ்ந்த ந்னறி சிவா.. நீண்ட நாட்கள் ஆயிற்று இந்தக் கதைகள் எல்லாவற்றையும் படித்து.. மீள் வாசிப்புக்கு உதவியமைக்கு மிக்க நன்றி சிவா.. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் 678642

அனைத்திற்கும் எங்கள் தங்கத் தலைவியின் (பானுமதி) ஆசீர்வாதமும், தூண்டுகோளும்தான் காரணம்!



கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 11:24 pm

சிவா wrote:
Aathira wrote:என் சிரம் தாழ்ந்த ந்னறி சிவா.. நீண்ட நாட்கள் ஆயிற்று இந்தக் கதைகள் எல்லாவற்றையும் படித்து.. மீள் வாசிப்புக்கு உதவியமைக்கு மிக்க நன்றி சிவா.. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் 678642

அனைத்திற்கும் எங்கள் தங்கத் தலைவியின் (பானுமதி) ஆசீர்வாதமும், தூண்டுகோளும்தான் காரணம்!

இது என்ன கொடுமை..தலையெல்லாம் அடக்கமா இருக்க...

அந்த இரண்டையும் மட்டும்தான் என்னால் செவ்வனே செய்ய முடியும் சிவா.. குன்றா இந்த அன்புக்கு நன்றியுடன்...



கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Aகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Aகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Tகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Hகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Iகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Rகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Aகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 11:42 pm

மீண்டும்படிக்க...இயன்றதற்கு...நன்றி...தல...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக