by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
வட இந்தியத் தொழிலாளர்களின் வருகை: வரமா, சாபமா?
சமீபத்தில் ஒரு மருந்துக் கடைக்குச் சென்றிருந்தபோது, வட இந்தியத் தொழிலாளர்கள் சிலர் அங்கு வந்ததைப் பார்த்தேன். அவர்களைக் கண்டதும் மருந்தாளுநர், வலிநிவாரணிகளை அவர்கள் கேட்காமலேயே எடுத்துக்கொடுத்தார்.
தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அந்த ஆபத்தான மருந்துகளை அவர்கள் ஏன் வாங்குகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாள் முழுவதும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டதால் ஏற்படும் உடல் வலியைப் போக்கவும், நிம்மதியான உறக்கத்தைப் பெறவும் அவர்கள் அந்த வலிநிவாரணிகளை வாங்கிச் செல்வதாகப் பின்னர் அறிய முடிந்தது.
ஆனால், அந்த மருந்துகளால் ஏற்படப் போகும் பிரச்சினைகளை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பொருட்படுத்தவும் அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களைத்தான் ‘வடக்கன்ஸ்’ என நம்மவர்கள் விளிக்கிறார்கள். நம் தொழிலாளர்களின் வாய்ப்பை அவர்கள் தட்டிப்பறிப்பதாகவும் விமர்சிக்கிறார்கள்.
வரவின் பின்னணி:
வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மேலதிக சமூக, பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு மட்டுமே 8.8% பங்களிக்கிறது. இது தேசியப் பங்களிப்பில் இரண்டாமிடம். நாட்டிலேயே அதிக அளவு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.
சமூக வளர்ச்சியிலும் நமது மாநிலம் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் சேர்வோர் விகிதம் (GER), தேசிய விகிதத்தைவிட இரண்டு மடங்கு. இந்தியாவிலேயே அதிக அளவு முனைவர் படிப்புகளை (PhD) முடிப்போர் விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள சிறந்த 100 கல்லூரிகளில் 32 தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறுகிறது, தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (NIRF). அதேபோல சுகாதாரக் குறியீடுகள், தனிநபர் வருமானம் ஆகியவற்றிலும் நம் மாநிலம் முன்னேறியுள்ளது.
உயர் கல்வி பெற்று மற்ற மாநிலங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் குடிபெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை தோராயமாக 50 லட்சம் என மதிப்பிடப்படுகிறது. ‘அயலகத் தமிழர்கள் நல மாநாடு’ ஒன்றைத் தமிழ்நாடு அரசு சமீபத்தில் நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் உயர் கல்விக்காக ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இப்போதும் பயணிக்கின்றனர். மறுபுறம், குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (NFHS-5) பிறப்பு விகிதத்துக்கான தேசியச் சராசரி 2.0 என்று உள்ளபோது, தமிழ்நாட்டில் அது 1.7 ஆகக் குறைந்துள்ளது.
இவ்வாறு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார வளர்ச்சி, குறைந்த பிறப்பு விகிதத்தை ஒட்டிய மக்கள்தொகை குறைவு போன்றவை, உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தட்டுப்பாடு, வட இந்தியத் தொழிலாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி நகர்த்தியுள்ளது.
அதிகரிக்கும் வெறுப்பு:
வளர்ந்த பிரதேசங்களை நோக்கிய மக்களின் நகர்வு உலகம் முழுவதும் வழக்கமானதுதான். மனிதவளக் குறியீட்டில் தொடர்ந்து முதல் வரிசையில் உள்ள கனடா, வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் வெளிநாட்டவரைத் தங்கள் நாட்டில் குடியேற்ற முடிவுசெய்துள்ளது.
இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 4% ஆகும். ஏனெனில், அங்கும் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதன் காரணமாகத் தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதை நிவர்த்திசெய்யவில்லை எனில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பது அந்நாட்டின் கவலை.
அதேபோல், வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவதும் சமூக, பொருளாதார அளவீடுகளின்படி தவிர்க்க இயலாத ஒன்றுதான். மாதம் ரூ.10,000 ஊதியத்துக்கு அவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கிறார்கள். பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு இல்லாமல் குடும்பத்தைப் பிரிந்து, மோசமான வாழிடத்தில் தங்கி வேலை செய்கின்றனர்.
இவ்வாறான சாதாரண கூலித் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. உண்மையில், இந்தப் போக்கு இந்திய அரசமைப்பின் பாகுபாட்டுக்கு எதிரான 15ஆவது கூறு, வாழ்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் 21ஆவது கூறு ஆகியவற்றுக்கு எதிரானது.
யேல் பல்கலைகழகப் பேராசிரியர் ஜேசன் ஸ்டேன்லி, ‘பாசிசம் எவ்வாறு இயங்குகிறது?’ (How Fascism Works: The Politics of Us and Them) எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். அதில், ‘சிறுபான்மையினரால் நமது உரிமை / பொருளாதாரம் / கல்வி / வேலைவாய்ப்பு ஆகியவை பாதிக்கப்படுகின்றன என்று பெரும்பான்மையினரிடையே நடத்தப்படும் பிரச்சாரமும் அதையொட்டிப் பரப்பப்படும் அச்சவுணர்வுமே பாசிசத்தின் அடிப்படை’ என்று அவர் வரையறுக்கிறார். ஆ
கவே, தமிழ்நாட்டினரின் உரிமைக்காகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, வட இந்தியக் கூலித் தொழிலாளர்களை எதிரிகள் எனச் சமூக ஊடகங்களில் சித்தரித்துச் சிலர் பரப்பும் கருத்துகளைப் பாசிசத்தின் தோற்றுவாய் என்றே கருத வேண்டியிருக்கிறது.
தமிழர்களின் குடியேற்றங்கள்:
திரைகடலோடியவர்கள் தமிழர்கள். இங்கிருந்து புலம்பெயர்ந்தோர் பல்வேறு நாடுகளில், மாநிலங்களில் வாழ்கின்றனர். அமெரிக்கத் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இந்திய வம்சாவளியினர். தமிழர்கள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் உலகம் முழுவதும் உள்ளனர். இந்தியாவின் வருவாயில் வெளிநாட்டில் வசிக்கும் நமது மக்கள் அனுப்பும் பணமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, உடல் வலியைப் போக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டு உழைத்துக்கொண்டிருக்கும் எளிய வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்புவது இனவாத வெறுப்பில்தான் முடியும். தமிழ்நாட்டில் கட்டப்படும் பெரும் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில்கள், சிறு, குறு நிறுவனங்கள் ஆகிய அனைத்திலும் அவர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.
அரசு செய்ய வேண்டியவை:
அதே நேரத்தில், மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால் தமிழ்நாட்டின் அரசு வேலைகளில், ரயில்வே பணிகளில், வங்கிப் பணிகளில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற பலவற்றிலும் தமிழரல்லாத அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதை இத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்வது தேவையற்றது.
தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரக் கனவோடு நகர்ந்துகொண்டிருக்கும்போது, இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்கே பெருமளவு வருவதைத் தடுப்பது சரியல்ல. உடலுழைப்பு செய்யும் தொழிலாளர்கள் குறைந்தது, உயர் கல்வியறிவு விகிதம் அதிகரித்தது ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை நாம் நிரப்பாவிடில், தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிந்து வீழ்ந்துவிடும்.
எவ்வித முறைப்படுத்துதலும் இல்லாமல் இங்கே உழைக்கும் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு மாநில அரசு நலவாரியம் அமைக்க வேண்டும். அவர்களின் தொழில் முறையை ஒழுங்குபடுத்தி, வருங்கால வைப்பு நிதி, விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடுகள், பணிப் பாதுகாப்பு முதலியவற்றை உறுதிசெய்ய வேண்டும். அது சமூகநீதி வரலாற்றில் ஒரு மணிமகுடமாக அமையும்!
யார் இந்த 'வட மாநில தொழிலாளர்கள்'? எங்கிருந்து எதற்காக தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்?
தமிழ்நாட்டில் வேலை செய்யும் பிற மாநில தொழிலாளர்கள் குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது.
சென்னை போன்ற மாநகரங்களில் முதலில் காணப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவி, தெற்கே கன்னியாகுமரி மீன்பிடி தொழில் வரையிலான எல்லா தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன என்ற பேச்சுகளை அதிகம் கேட்க முடிகிறது.
பொதுவாக வட இந்தியத் தொழிலாளர்கள் என்று சொல்லப்பட்டாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள் இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்? எதற்காக வருகின்றனர்? உண்மை நிலவரம் என்ன என்று பார்ப்போம்.
தற்போதைய சூழலில் புலம்பெயர் தொழிலாளிகள் ஒரிசா, பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் என பொதுவாக பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாநிலங்களிலிருந்து அதிகம் வருகிறார்கள்.
இவர்களை பொதுவாக "வட இந்திய தொழிலாளர்கள்" என்ற பெயரில் அழைத்தாலும் அதிகம் கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே இவர்கள் உள்ளனர்.
காரணம் என்ன?
புலம்பெயர்தலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன அதில் முக்கிய காரணம் வேலை வாய்ப்பு. மேலும் சில இடங்களில் இயற்கை பேரழிவு, சாதிய பாகுபாடு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளற்ற நிலை ஆகிய காரணங்களுக்காக வெளி மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பணி செய்கின்றனர்.
தனியாக வருவது, பழகியவர்கள் தெரிந்தவர்கள் மூலமாக வருவது, முகவர்கள், நிறுவனங்களால் பணியமர்த்தப்படுவது என பல்வேறு வழிகளில் இத்தொழிலாளர்கள் வருகின்றனர்.
பெரும்பாலும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுவந்த வெளி மாநில தொழிலாளிகள் தற்போது பெரிய உணவகங்கள் தொடங்கி சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வண்டி, நட்சத்திர விடுதிகள், சலூன் கடைகள் பல்வேறு சிறு வணிக நிறுவனங்களிலும் வேலைக்கு அமர்ந்துவிட்டனர். சிற்றுண்டிக் கடை போன்ற சிறுவணிகங்களில் அவர்களே ஈடுபடுவதும் உண்டு. மாநகராட்சி தூய்மை பணியில்கூட அவர்களைப் பார்க்கமுடிகிறது. பாரம்பரிய தொழிலாக சொல்லப்பட்ட மீன்பிடி தொழில் வரையிலும், அவர்கள் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் உள்ளனர்.
இதற்கான காரணம் என்பது இருதரப்பிலும் ஏற்பட்ட சூழ்நிலைகளாக உள்ளது. அதாவது ஒருபுறம் வாய்ப்பு தேடி வரும் வெளி மாநில தொழிலாளிகள், மறுபுறம் தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட பணிகள். அதனால் ஏற்பட்ட காலியிடங்கள். இவைகளே தமிழ்நாட்டுக்குள் வடமாநிலத் தொழிலாளிகளின் இந்தப் பரவலுக்குக் காரணம்.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, கன்னியாகுமரி மீன்பிடி தொழில் என அனைத்திலும் தமிழ்நாட்டுத் தொழிலாளிகளின் போதாமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை தற்போது வெளி மாநிலத் தொழிலாளர்கள் நிரப்பி வருகின்றனர்.
"தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்ட மக்கள் திருப்பூருக்கு வந்து தங்கி இங்கே பணி செய்தார்கள். ஆனால் இப்போது அடுத்த தலைமுறை மக்கள் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர். திருப்பூரில் தற்போது 50 சதவீத அளவில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.
திருப்பூர் ஆடை தயாரிப்பு துறையில் சுமார் 3 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் இருக்கின்றனர். தையல், செக்கிங், ப்ராசசிங் என பல்வேறு துறைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்" என தெரிவிக்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம்.
மீன்பிடி தொழிலில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபடும் நிலை ஏற்பட்டதற்கும் கிட்டதட்ட இதே காரணத்தைதான் முன்வைக்கிறார் தெற்காசிய மீனவர் தோழமையின் பொதுச் செயலாளர் சர்ச்சில்.
"மீன்பிடி தொழில்களில் இருக்கும் கடினங்களையும் ஆபத்துக்களையும் கருதி அடுத்த தலைமுறையினர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க சென்றனர். படித்து அதற்கேற்ப வேலை வாய்ப்புகளை தேடிச் சென்றனர். மீன்பிடி தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது அந்த நேரத்தில்தான் வட இந்திய தொழிலாளர்கள் இங்கே வந்தனர். முதலில் அவர்கள் உதவியாளர்களாக வந்தனர். பின் பயிற்சிப் பெற்று மீனவர்களாக தொழில் செய்ய தொடங்கினர்," என்கிறார் சர்ச்சில்.
தமிழ்நாட்டு மக்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறதா?
வட இந்திய தொழிலாளர்கள் எங்கும் உள்ளனர். அவர்களால் தமிழ்நாட்டு மக்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன என்ற கூற்றுகளை சமீபமாக நாம் பார்க்க முடிகிறது. புலம்பெயர் தொழிலாளிகள் குறித்தான விவாதம் திருப்பூரில் நடந்த தொழிலாளர் மோதல் சம்பவத்திற்குப் பிறகு மேலும் அதிகரித்தன.
ஆனால் பல்வேறு இடங்களில் ஏற்படும் ஆட் பற்றாக்குறை காரணமாகவே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதாக நிறுவனங்களின் தரப்பில் சொல்லப்படுகிறது. மறுபுறம் இவர்களுக்கான ஊதியம் என்பது குறைவே. அதுவே நிறுவனங்கள் இவர்கள் பணியில் அமர்த்துவதன் முக்கிய காரணம் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்.
"வட இந்திய தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலியில் பெரும் வித்தியாசம் உள்ளது. அவர்களுக்கு கிட்டதட்ட உள்ளூர் பணியாளர்கள் பெறும் ஊதியத்தில் பாதியளவே ஊதியமாக கிடைக்கிறது. முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை பணியமர்த்துவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது," என்கிறார் அமைப்புச்சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலோசகர் கீதா.
ஆனால், வேறுபலரும் ஊதிய வேறுபாடு, கேலி வீடியோக்களில் பரப்பப்படுவது போல அவ்வளவு அதிகம் இல்லை என்கிறார்கள்.
மறுபுறம் பல இடங்களில் இவர்களுக்கான பணி குறித்த போதிய தகவல்கள் கொடுக்கப்பட்டு அழைத்து வரப்படுவதில்லை என்கின்றார் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பணியாற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த பால முருகன்.
"பல புலம்பெயர் தொழிலாளிகள் ஏமாற்றித்தான் அழைத்து வரப்படுகிறார்கள். பெரும்பாலனவர்களுக்கு இவர்களை அழைத்து வரும் முகவர்கள் சரியான தகவல்களை சொல்லி அழைத்து வருவதில்லை," என்கிறார் அவர்.
வெளி மாநிலத்தவர்களை பணியமர்த்துவதன் காரணம் என்ன?
விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருவது, கடின உழைப்பு போன்ற காரணங்களால் வடமாநிலத்தவரை வேலைக்கு எடுப்பதாக நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகின்றன.
அதேபோல வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழில்கள் முடங்கும் நிலையும் ஏற்படுகிறது என்கின்றனர்.
"தமிழ் ஊழியர்கள் வாரம் நான்கு நாட்களுக்கு மட்டுமே வேலை செய்கின்றனர். ஆனால் எங்களுக்கு மாதம் 26 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் உண்டு.
50 சதவீத வேலையாட்கள் தட்டுப்பாடு என்பதால் ஊதியம் கொடுப்பதில் பெரிய வித்தியாசம் இல்லை. வெளிமாநில தொழிலாளர்களை நம்பிதான் நாங்கள் உள்ளோம். அவர்கள் மாதம் பூராவும் வேலை செய்கின்றனர். அவர்களால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவது இல்லை. திருப்பூருக்கு வரும் வட இந்திய தொழிலாளிகள் ஒரு மாதத்தில் தொழிலை கற்று கொள்கின்றனர். அவர்கள் அதிகம் வேலை செய்கின்றனர் அதற்கேற்ப அவர்கள் சம்பாதித்துக் கொள்கின்றனர்.
வட இந்திய தொழிலாளர்கள் இல்லை என்றால் திருப்பூர் இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஆனால் இது ஏதோ ஒரு நாளில் நடந்தது இல்லை. 10 வருடங்களுக்கும் மேல் நடந்த மாற்றம் இது" என்கிறார் முத்துரத்தினம்.
"வட இந்தியர்கள் மீன் பிடிக்க வராத பட்சத்தில் இங்கே பல படகுகள் மீன்பிடிக்க செல்ல முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கிட்டதட்ட ஒவ்வொரு மீன்பிடி படகிலும் 5 முதல் 7 வட இந்தியர்கள் வரை இருப்பார்கள்," என்கிறார் சர்ச்சில்.
ஒரு தொழிலாளி மாநிலம்விட்டு மாநிலம் செல்லும்போது அவரின் உழைப்பு அதிகமாகிறது. முழுத்திறனையும் வெளிப்படுத்துகின்றனர். ஒருவர் அவரின் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது அவரின் பணித்திறன் அதிகரிக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது இந்தியாவுக்கான ஒரு நேர்மறையான விஷயம் என்கிறார் முன்னாள் அமைச்சரும் மனித வள நிறுவனத்தை நடத்தியவருமான மாஃபாய் பாண்டியராஜன்.
மனித உரிமை மீறல்கள்
இவர்களுக்கான வாய்ப்புகள் இங்கே வழங்கப்பட்டாலும் இவர்களுக்கான குறைந்த ஊதியம், அதிக பணி நேரம், பணிபுரியும் இடத்தின் சூழ்நிலை மற்றும் குடியிருப்பு வசதி குறைபாடுகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து புலம்பெயர் தொழிலாளார்கள் நலனுக்காக செயல்படும் செயற்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.
"பிகார் போன்ற மாநிலங்களில் 60 லிருந்து 100 ரூபாய் வரை கூலி தரப்படுகிறது. இங்குள்ள ஊதியம் அவர்களுக்கு சொர்க்கம். ஆனால் இங்கு கேள்வி என்ன வென்றால் அங்கு பெறுவதைக் காட்டிலும் அதிகம் பெறுகிறார்களா என்பது இல்லை. அவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அது கொடுக்கப்படுகிறதா என்பதுதான்," என்கிறார் பால முருகன்
ஊதிய வேறுபாடு சிக்கல் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்னைகளை களைய "கட்டுமான வேலைகளில் பெரிய முதலாளிகளாக இருந்தாலும் சிறிய முதலாளிகளாக இருந்தாலும் 50 சதவீத அளவில் உள்ளூர் பணியாளர்களுக்கு அதில் வேலை கொடுக்க வேண்டும். அந்த வகையில் உள்ளூர் தொழிலாளிக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் தொழிலாளிகளுக்கும் நியாயமான ஊதியம் கிடைக்கும்," என்கிறார் கீதா
இதில் என்ன சிக்கல்?
வேலைவாய்ப்பு என்ற கோணத்தை தவிர பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டுக்கு இது வேறொரு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் பால முருகன்.
"ஐந்து ஆண்டு கழித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டு பெறுவார்கள். ஆனால் இவர்கள் சம்பாதிக்கும் பணம் ஊருக்கு அனுப்பப் படும். இங்கிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு பெரிதாக செலவு செய்வதில்லை. இவர்கள் சம்பாதிப்பது ஊருக்கு அனுப்பப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் பெரிதாக பணப்புழக்கம் இருக்காது. அப்போது இங்குள்ள சிறு வியாபாரங்கள் பெரிதும் அடி வாங்கும். பல கோடி ரூபாய் பணப்புழக்கம் இங்கு குறையும். உடனடியாக அதன் தாக்கம் தெரியாது. மிக மோசமாக உள்ளூர் வியாபாரம் பாதிக்கப்படும். பொருளாதாரம் புத்தாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். எனவே அதற்கு உண்டான விஷயங்களை இப்போதே கவனிக்க வேண்டும்." என்கிறார் அவர்.
தீர்வு என்ன?
"தமிழ்நாட்டிலும் மக்களுக்கு வேலை தேவைப்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் ஏன் வருவதில்லை என்றால், இங்கு படித்தவர்களுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இருந்து வருகிறவர்களுக்கு இங்கு கிடைக்கும் ஊதியமே ஒப்பீட்டளவில் அதிகமாகத் தெரிகிறது," என்கிறார் பாலமுருகன்.
"அரசுப் பணிகளிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகின்றனர் என்பதே தற்போது முக்கிய கவலையாக இருக்கிறது. அரசுப் பணிகளில் உள்ளூர் ஆள்களுக்கே 90 சதவீதம் வாய்ப்பு தரவேண்டும் என்ற அரசாணை முந்தைய அரசாங்கம் கைவிட்டது. மாநில மக்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது ஒரு நியாயமான விஷயம்," என்கிறார் கீதா.
தமிழ்நாட்டில் தற்போது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் தகவல்களை பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர அவர்களுக்கான நான்கு சேவை மையங்களும் இயங்கி வருவதாக தெரிவிக்கிறார் பால முருகன்.
ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரியும் மாநிலத்தோடு சமூக ரீதியாக ஒன்றிணைய மாநில அரசு மற்றும் மத்திய அரசு பயிற்சிகளை வழங்க வேண்டும், மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் மாஃபாய் பாண்டியராஜன்.
"தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி கட்டாயமாக 200 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் தினக்கூலிக்காக தொழிலாளர்கள் புலம்பெயர்கின்றனர். எனவே இந்த பிரச்னையை அதன் வேரிலிருந்து நாம் அணுக வேண்டும்,"என்கிறார் கீதா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்வதை தரக்குறைவாக நினைக்கிறார்கள்.
சிறிய சிறிய ஹோட்டல்களில் இருந்து பெரிய பெரிய மால்களிலும் வேலை செய்கிறார்கள்.
வேலை செய்வதற்கு அஞ்சுவதில்லை.
நம்மாட்கள் நல்ல வேலைக்காரர்கள்தான் --மாலை 6 மணி வரை . பிறகு டாஸ்மாக் தான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாகும் தமிழர்கள்
மதுரையிலிருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்தோம்.
டீக்கடை வைத்திருப்பவர் பரத்ராஜ். அவர் நம்மிடம், “நான் மதுரைக்கு வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது. கூலி வேலைக்குத்தான் வந்தேன். இங்கு குஜராத்தைச் சேர்ந்தவரின் கடையில் வேலை பார்த்தேன். அதன்பின் சொந்தமாகக் கடையைப் பிடித்தேன். பொருட்கள் எல்லாம் குஜராத்திலிருந்து வந்திறங்கியது. அதை வைத்து வியாபாரம் செய்கிறேன். முதலில் வேலைக்கு இங்கிருக்கும் தமிழ் ஆட்களைத் தான் நம்பியிருந்தேன். இப்போது அப்படி இல்லை. எங்கள் சங்கத்திலிருந்து ஒன்றிய அரசின் அனுமதியோடு ஈ-ஷ்ரம் கார்டு போட்டு எங்க ஆட்களே வந்துவிட்டனர். இனி எந்த பிரச்சனையும் இல்லை. முழுப் பாதுகாப்பு கிடைத்துவிடும்” என்றார்.
நாம் அவரிடம், “அது என்ன ஈ-ஷ்ரம் கார்டு?” என்றோம்.
“அது எங்களுக்கு முழுப் பாதுகாப்பு. இப்பெல்லாம் கார்டு போட்டுத்தான் இங்கு அனுப்புகிறார்கள். வந்திறங்கியதும் கார்டை வைத்து பேங்க் அக்கவுண்ட் தொடங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை வாங்கிக்கொள்ளலாம்” என்று தன்னிடமுள்ள வாக்காளர் அட்டையைக் காண்பித்தார். “எனக்காவது 7 வருடம் ஆகிவிட்டது. என் கடையில் வேலை பார்ப்பவர்கள் வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. எல்லோருக்கும் ரேஷன் கார்டு முதல் வாக்காளர் அட்டை வரை கிடைத்துவிட்டது. வடநாட்டில் வேலை செய்யும் ஒரிசாவைச் சேர்ந்தவர்களுக்காக ஒரிசாவில் தூதரகம் போல் ஒரிசா பவன் தொடங்கியிருக்கிறார்கள். அதுபோல் தமிழகமெங்கும் பணிபுரியும் வட இந்தியர்களுக்காக ‘உத்தர்பாரத் பவன்’ என்று தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். அது வந்தால் இன்னும் தைரியமாக தொழில் செய்யலாம்” என்றார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்த சில சம்பவங்களைப் பார்ப்போம்...
கடந்த மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில், நீலகிரி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை தொடர்பாக சரவணன் என்பவரின் வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி இருவரும், “தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் இந்தியில் தேர்ச்சி பெறாத நிலையில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்று எப்படி தேர்ச்சியாகிறார்கள்?” என்ற கேள்வியை எழுப்பினார்கள்.
அடுத்து, கள்ளக்குறிச்சி பகுதியில் வங்கி மேலாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் வடமாநிலத்தவர்கள் பணியாற்றியதால், சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல் பொதுமக்களே அந்த வங்கியைப் பூட்டி சீல் வைத்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 7 ஆம் தேதி தஞ்சை அதிராம்பட்டினத்தில் தமிழக கூலித் தொழிலாளர்கள் தங்களின் வேலையை வடமாநிலத் தொழிலாளர்கள் பறிப்பதாக சாலைமறியலில் ஈடுபட்டுக் கைதாகினர்.
மதுரையில் பிப்ரவரி 10 ஆம் தேதி செல்போன் உதிரிப்பாகங்கள் மற்றும் செல்போன் சர்வீஸ் செய்யும் தமிழக இளைஞர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், “எங்களை அடியாட்களை வைத்து மார்வாடிகள் மிரட்டுகிறார்கள். நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியிருக்கும் நான்கு மாசி வீதிகளிலும், பெரியார் பேருந்து நிலையம் போன்ற இடங்களிலும் செல்போன் விற்பனை மற்றும் உதிரிப்பாக சர்வீஸ் கடைகள் வைத்துள்ளோம். அங்கிருக்கும் வடமாநில மார்வாடிகள் பெரும்பாலும் செல்போன் உதிரிப்பாகக் கடை வைத்துள்ளார்கள். அனைத்துமே டூப்ளிகேட் ஐய்ட்டங்கள் தான். விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று மார்வாடிகளிடம் முதலில் போவார்கள். பின் அது டூப்ளிகெட் என்று தெரிந்ததும் எங்களிடம் வந்தார்கள். இதில் போட்டி இருந்து வந்தது.
தற்போது அதிகளவில் மார்வாடிகள் வந்து குவியத் தொடங்கி அவர்களே சர்வீஸும் செய்கிறார்கள். எங்களை நசியச் செய்ய, அங்கிருக்கும் கடைகளின் வாடகையை வேண்டுமென்றே கூட்டிக் கொடுக்கிறார்கள். இதனால் இங்கிருக்கும் நம்மவர்களே எங்களிடமிருந்து மார்வாடிகளுக்கு கடையைப் பிடுங்கிக் கொடுக்கிறார்கள். கொடுக்க மறுத்தால் ஆட்களை வைத்து மிரட்டுகிறார்கள். நாங்கள் ஜி.எஸ்.டி. பில் போட்டு கொடுக்கிறோம். அவர்கள் எல்லாமே இரண்டாம் பில்லுதான். ஜி.எஸ்.டி. கட்டுவதில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் மூர்த்தியிடம் கொண்டு சென்றோம். அவர் உடனடியாக ஆக்ஷன் எடுத்து மார்வாடிகள் 90% ஜி.எஸ்.டி கட்டுவதில்லை என்று அறிக்கை விட்டார். இந்த மோதலில் கடைகளை காலி பண்ணச் சொல்லி மிரட்டத் தொடங்கியுள்ளனர். எனவே, மதுரை ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்தோம்” என்றார் செல்போன் கடை வைத்திருக்கும் சிவா.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், சுற்றியுள்ள அனைத்துக் கடைகளின் பெயர்ப்பலகைகளும் பெரும்பாலும் இந்தி எழுத்துகளில் இருந்ததால் அதிர்ச்சியாகி, நாம் தமிழகத்தில் இருக்கிறோமா? இல்லை, உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறோமா? என்று கோபமாகி அங்கிருக்கும் பஜன்லால் சேட் வைத்திருந்த ஹோட்டலுக்குப் போனவர், அங்கிருக்கும் உரிமையாளரிடம், "ஏன் இந்தியில் பெயர்ப்பலகை வைத்துள்ளீர்கள்? தமிழகத்தில் அதுவும் தமிழ் வளர்த்த மதுரையில் கடை வைத்துக்கொண்டு ஏன் தமிழில் பெயர்ப்பலகை வைக்கவில்லை'' என்று கேள்வி கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதை யாரோ வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட வைரலாகியது.
வழக்கறிஞர் தீரன் மேலும் கூறுகையில், “தமிழக நிலங்கள் அதிகாரப்பூர்வமாக வடஇந்திய மக்களின் நிலமாக மாறி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் வெளிமாநில மக்கள் நிலங்களை வாங்க முடியாது. காரணம், 370வது பிரிவு நில உரிமை சிறப்பு சட்டம் அங்கு இருந்தது. ஆனால் தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம் என்ற நிலையில் மிகவேகமாக நிலங்கள் தமிழர்களை விட்டு பறிபோய்க் கொண்டுள்ளது.
குஜராத், ராஜஸ்தான் மற்றும் அனைத்து இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள சட்டத்தின் படி, இந்தி மொழி தெரியாதோர் அம்மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேரமுடியாது. கிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, கோவா போன்ற மாநிலங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்திற்கு மட்டுமே முன்னுரிமை. ஆந்திராவில் அரசமைப்புச் சட்டம் 371-டி மற்றும் 371-இ ஆகியவற்றின் படி, தெலுங்கானா பகுதிகளுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் 90% அம்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
1983-ல் கர்நாடக அரசு நியமித்த சரோஜினி அறிக்கையின்படி அரசு வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை மற்றும் வெளிமாநிலத்தவர்கள் வீடு வாங்கிக் குடியேற, விளைநிலங்கள் வாங்கத் தடை உள்ளது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வந்து குடியேறலாம், நிலம் வாங்கலாம். அடிமட்ட வேலைகள் முதல் அரசு வேலைகள் வரை தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என்று குமுறினார்.
வரும் வழியில், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், ‘இந்திக்காரர்களை வெளியேற்று!… தமிழ்நாட்டில் திட்டம் போட்டு வடமாநிலத்தவரை குடியமர்த்தும் ஒன்றிய அரசின் திட்டங்களைத் தடுக்க சட்டம் கொண்டு வா!’ என்று போராட்டம் நடத்திய தமிழ்த்தேசிய பேரியக்கத்தினரின் கோஷம் விண்ணைப் பிளந்தது.
அதன் மாவட்டத் தலைவர் ஆனந்தன் நம்மிடம், “தமிழ்நாட்டிலுள்ள இந்திய அஞ்சல் துறையில் 946 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழர் ஒருவர் கூட இல்லை. இரயில்வே துறையில் 5000 பேர் நியமனத்தில் வெறும் 65 பேர்தான் தமிழர்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 60% இந்திக்காரர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது. இப்படி வேலைவாய்ப்புகளில் திட்டமிட்டு வடநாட்டவர்களைப் புகுத்துவதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. முழுக்க வடக்கர்மயமாகி, தமிழர்கள் இரண்டாம் குடியாகும் முன் தமிழ்நாடு அரசும் தமிழர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது” என்று முடித்துக் கொண்டார்.
கடைசியாக நாம் விஷாலைச் சந்தித்தோம். “நான் இப்போது பா.ஜ.க.வில் பகுதிச் செயலாளராக இருக்கிறேன். மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி 20 ஆயிரம் பேர் எங்க ஆட்கள் இருக்கிறார்கள். வாக்காளருக்கான ஜாபீதா புத்தகத்தைப் பாருங்கள். இந்த 10 வார்டுகளில் எல்லாம் எங்க ஆளுக தான். அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிக் கொடுத்துள்ளேன். நான் ஈ-சேவை மையம் வைத்துள்ளேன். இங்கிருக்கும் பெரும்பாலான ஈ-சேவை மையம் வடநாட்டுக்காரர்கள் நடத்துவதுதான். உத்தர்பாரத் பவன் வந்தால், இனி இந்திக்காரர்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார் விஷால் லால்.
வட இந்தியர் வெறுப்பு நியாயமா?
புலம்பெயர் வாழ்க்கை என்பது எல்லா இனக்குழுக்களுக்கும் பொதுவானதுதான். பஞ்ச காலங்களில் மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம்கூட தமிழர்கள் புலம் பெயர்ந்திருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு நடந்தது அந்தச் சம்பவம். ரயிலில் அமைதியாகப் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, `வட இந்தியாவுல இருந்து ஏண்டா எங்க ஊருக்கு வந்து எங்க வேலையைப் பிடுங்கறீங்க' என்று தாக்குகிறார் ஒருவர். அடி வாங்கியபடி அமைதியாக விலகிப்போகிறார்கள் அந்த இளைஞர்கள்.
கோவை, கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி உணவுவிடுதியில் பணிபுரிந்த வடமாநிலத் தொழிலாளர்களும் மாணவர்களும் கட்டைகள் கொண்டு தாக்கிக் கொள்ளும் வீடியோ பெரும் பதைபதைப்பை உருவாக்கியது.
திருப்பூரில் வடஇந்தியத் தொழிலாளர்கள் சேர்ந்து தமிழகத் தொழிலாளர்களைக் கடுமையாகத் தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. உடனடியாக, அது தவறான வீடியோ என்று அறிவித்தது திருப்பூர்க் காவல்துறை.
வடஇந்தியத் தொழிலாளர்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அதிராம்பட்டினத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தார்கள்.
சென்னை, கேளம்பாக்கம் அருகே வழிதெரியாமல் தவித்து நின்ற வடமாநிலக் கட்டடத் தொழிலாளி ஒருவரைச் சந்தேகப்பட்டு ஆறு இளைஞர்கள் தாக்கினார்கள். அதில் அந்தத் தொழிலாளி உயிரிழந்தார்.
டீக்கடை தொடங்கி விவசாய வேலைகள் வரை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளனர் வடஇந்தியத் தொழிலாளர்கள். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பாலங்கள், பெரும் திட்டங்கள் அனைத்திலும் வடஇந்தியத் தொழிலாளர்களின் பங்களிப்பு நிறைந்திருக்கிறது. எனினும், சமீபகாலமாக தமிழகத்தில் வடஇந்தியத் தொழிலாளர்கள்மீதான தாக்குதல்களும் கருத்தாக்கங்களும் அதிகரித்துவருகின்றன. வடஇந்தியத் தொழிலாளர்கள்மீது வன்மமும் வெறுப்பும் பரப்பும் வீடியோக்களும் ‘வடக்கன்ஸ்', ‘பானிபூரிக்காரன்' என்ற கேலி கிண்டல் நிறைந்த சொல்லாடல்களும் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தவறு செய்தால், ‘வேட்டையாடி புலித்தோல் வைத்திருந்தவர்கள் கைது’ என்று செய்தி வரும். அதையே வட இந்திய இளைஞர் செய்தால், ‘புலித்தோல் வைத்திருந்த வட இந்திய இளைஞர்கள் கைது’ என்று செய்தி வரும். இதுபோன்ற அடையாளப்படுத்தல்கள் மூலமாக வெறுப்புணர்வு இன்னும் தூண்டப்படுகிறது.
வடமாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முன் நிற்கிறது. இந்திய அளவில் அதிக தொழில் நிறுவனங்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். உயர்கல்வி பயில்வோர் அடிப்படையிலும் தமிழகமே தேசிய அளவில் முன்னணியில் இருக்கிறது. இதனால் கடினமான உடலுழைப்பு தேவைப்படும் தொழில்களில் ஆள் பற்றாக்குறை உள்ளது. அதனால்தான் உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் பிறமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகத் தமிழகத்தைத் தேர்வு செய்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் வடமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு தொழிலாளர்களை அழைத்துவரும் முகவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிட்டது.
புலம்பெயர் வாழ்க்கை என்பது எல்லா இனக்குழுக்களுக்கும் பொதுவானதுதான். பஞ்ச காலங்களில் மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம்கூட தமிழர்கள் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். பர்மா, மலேசியா, மொரீஷியஸ் எனப் பல நாடுகளிலும் பெரு நிறுவனங்கள் நடத்துபவர்களாகவும் கடைநிலைத் தொழிலாளர்களாகவும் தமிழர் அடையாளத் தோடு இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள் தொழில் நிறுவனங்களை நடத்துகிறார்கள். ஆயினும் கடந்த பத்தாண்டுகளில் வட இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், வேலையின்மை காரணமாகத் தென்னிந்தியாவுக்குப் புலம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் உருவாக்கப்படும் பிரமாண்ட திட்டங்கள் தொடங்கி அமைப்புசாரா தொழில்கள் வரை பலவற்றிலும் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
இங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு ‘புளூ காலர் ஜாப்’ எனப்படும் தொழில் சார்ந்த பணிகளுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போயுள்ளனர். பிறந்த மண்ணை விட்டு மொழி தெரியாத வேறிடத்தில் பிழைக்கும் அவர்களின் துயரங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது வட இந்தியத் தொழிலாளர்களின் துயரம்.
கடந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவுக்குள் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6 கோடி. இப்போது அது இரண்டு மடங்கைத் தாண்டி உயர்ந்திருக்கலாம். உத்தரப்பிரதேசத்திலிருந்து மட்டும் 83 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். அதுவும் பீகாருமே அதிகம் பேரை வெளி மாநிலங்களுக்கு அனுப்பியவை. மகாராஷ்டிரா, டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்துக்கே அதிகம் பேர் பிழைப்பு தேடி வருகிறார்கள்.
வடஇந்தியத் தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், “பிற மாநிலத் தொழிலாளர்களால் தமிழர்கள் கையேந்தும் நிலை உருவாகியுள்ளது. அதனால் நாங்கள் வெளியார் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். வெளிமாநிலத்திலிருந்து வருவோரை இங்கு வேலைகளில் சேர்க்கக்கூடாது; கடைகள் தொடங்கவிடக்கூடாது; அவர்களிடம் யாரும் பொருள் வாங்கவோ விற்கவோ கூடாது என்னும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறோம். இது இனவாதமல்ல; இனப் பாதுகாப்பு...’’ என்கிறார்.
நகரமயமாதல் விரைவடைந்து கிராமியத் தொழில்கள் நசிந்துவரும் சூழலில் இடம்பெயர்ந்து சென்று வாழ்வாதாரம் தேடும் நிலை எல்லா நாடுகளிலுமே அதிகரித்துவருகிறது. தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் பல்வேறு நாடுகளில் ஆட்சி நிர்வாகத்தில்கூட முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். உலகில் எந்த நாடும் பிழைப்புக்காக வரும் தொழிலாளர்களை வராதே என்று சொல்வதில்லை. சில அரசியல் கட்சிகள் ‘மண்ணின் மைந்தர்கள்' கோஷம் எழுப்புவதுண்டு. மகாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் இப்படித் தமிழர்களுக்கு எதிராக முன்பு எழுந்த குரல்கள்கூட இப்போது மங்கிவிட்டன.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.8% தமிழ்நாட்டிலிருந்து தரப்படுகிறது. உயர்கல்வி படிப்பதற்காகவும், படித்து முடித்துப் பணியாற்றுவதற்காகவும் அதிகம் வெளிநாடு செல்வோரும் தமிழர்கள்தான். உடலுழைப்புத் தொழிலாளர்களின் தேவை அதிகரித்துவரும் நிலையில் அந்த வெற்றிடத்தை வட இந்தியத் தொழிலாளர்களே நிரப்புகிறார்கள். அவர்கள் தமிழர்களின் பணிவாய்ப்பைப் பறிக்கவில்லை என்பதே எதார்த்தம் என்கிறார்கள் நிபுணர்கள்.
“வட இந்தியர்களின் வருகையால் தமிழர் உரிமை பறிபோகிறது என்று புலம்புபவர்கள், அவர்களைப் பணி அமர்த்துவது யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்களைப் பணியமர்த்துவது தமிழ் முதலாளிகளும், ஒப்பந்ததாரர்களும்தான். அந்தத் தொழிலாளர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கிக் குறைவான சம்பளத்தைக் கொடுத்து ஏமாற்றுகின்றனர். இதை இன அடிப்படைப் பிரச்னையாகப் பார்ப்பதே தவறு. உண்மையைச் சொல்லப்போனால் அமெரிக்க நாட்டில் இருக்கும் இந்தியர்கள் அமெரிக்கர்களின் சம்பளத்தை விடக் குறைவான சம்பளத்திற்குத்தான் வேலைக்குச் செல்கின்றனர். எப்படிப் பார்த்தாலும் இதில் முதலாளிகளுக்குத்தான் அதிக பலன். நியாயமாகத் தமிழர்களுக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் ஒரே ஊதியம் என்று கொண்டு வந்தாலே நிலைமை சரியாகிவிடும்’’ என்கிறார் சி.பி.எம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா.
வட இந்தியத் தொழிலாளர்கள் மீது வெறுப்பு பரப்புபவர்கள், அவர்கள் எந்தச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. வட இந்தியர்கள் அதிகம் பணியாற்றும் சில பணியிடங்களுக்கு ஒரு மாலை நேரத்தில் சென்றேன். மாலை 6 மணி கடந்தும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை வேலை. கிட்டத்தட்ட 12 மணி நேரம். இந்த உழைப்புக்கு மாதம் 10,000 முதல் 12,000 ரூபாய் வரைதான் சம்பளம். டீகூட நிறுவனம் வாங்கித்தராது. தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில்தான் குடிக்கவேண்டும். 3 ஷிப்ட் செய்யவேண்டிய வேலையை, இந்தத் தொழிலாளர்களைக்கொண்டு இரண்டே ஷிப்ட்களில் முடிக்கிறது ஒப்பந்த நிறுவனம். பலருக்கு இ.எஸ்.ஐ, பி.எப் போன்ற எந்தப் பணிப் பலன்களும் இல்லை.
ஊரடங்கின் போது ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திருப்பிச் சென்றார்கள். பேரிடர்ச் சூழல் சீரானதும் பல மாநிலங்களின் அரசு நிறுவனங்களே இந்தத் தொழிலாளர்களை விரும்பி அழைத்திருக்கின்றன.
கொரோனா காலகட்டத்தில் வெளியான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே வேலை உத்தரவாதம் வழங்க ரூ.50,000 கோடி ஒதுக்கினார். அந்தத் திட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. அந்த நிதியால் புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை சிறிதும் மாறவில்லை.
இன்னொரு விஷயமும் கவனத்தில் கொள்ளத்தக்கது. தமிழகத்தில் செயல்படும் என்.எல்.சி நிறுவனத்தில் வட இந்தியர்களை அதிகம் பணியமர்த்துவதோ, ரயில்வே மற்றும் பெல் போன்ற நிறுவனங்களில் அதைச் செய்வதோ, உடலுழைப்புத் தொழில் செய்யும் எளியவர்கள் மீது கோபம் கொள்ள நியாயமான காரணமல்ல.
சிலர் தவறு செய்யலாம். சிலர் அத்துமீறலாம். எல்லா சமூகங்களிலும் இருக்கும் பிரச்னையே அது! அதற்கான தண்டனையை ‘வட இந்தியர்’ என முத்திரை குத்தி எல்லோருக்கும் அளிப்பது நீதியல்ல. பழைய துணிகளையும், அழுகிய காய்கறிகளையும் வாங்கி வாழ்க்கையை ஓட்டி மிஞ்சும் காசைத் தம் உறவுகளுக்கு அனுப்பி அவர்களின் பசியாற்றுகிறார்கள் பெரும்பாலான வட இந்திய சகோதரர்கள். கடும் உடல் உழைப்பினால் ஏற்படும் உடல் வலிக்கு மருத்துவ ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் கொடூரமானவை. சொல்லப்போனால் வட இந்தியத் தொழிலாளர்களின் ஆன்மாக்களின் மேல்தான் சென்னை மெட்ரோ கட்டடங்களின் தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. மெட்ரோ பணியின்போது விபத்தில் தவறி விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கைகூட சரியாக இல்லை. அவர்களின் மரணம்கூட மதிப்புக்குரியதாக இருப்பதில்லை.
‘‘தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு மிகப்பெரிது’’ என்கிறார் தமிழக அரசின் தொழில் துறைச் செயலாளரான எஸ்.கிருஷ்ணன். அவர்களுக்கு நியாயமான கூலி வழங்க வேண்டும் என்று குரல் கொடுப்பதே நியாயம். உலகமயமாக்கலுக்குப் பிறகு புலம்பெயர் வாழ்க்கை தவிர்க்க முடியாதது. நம் சுமையை, நம் வலியை, நம் தேவையைச் சுமப்பவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சகோதரர்கள். அவர்களை மதிப்போம். அதுதான் அடிப்படை அறம்!
****
இந்தியப் பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, புலம்பெயர்பவர்கள் அதிகம் செல்லும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற சரியான தரவுகள் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. அந்தத் தரவுகளை எடுக்கும் பணி கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தோராயமாக 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கலாம் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாதம் முறைப்படியான ஆய்வுகள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதில் இந்த எண்ணிக்கை உயரவே வாய்ப்புள்ளது.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்