ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


தொல்காப்பிய இலக்கணம் (619)

2 posters

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 09, 2022 10:14 am

First topic message reminder :

தொல்காப்பிய இலக்கணம் (570)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்ததாகத் தொல்காப்பியர் இடைச்சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகிறார்:-

அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருசெய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை (இடையியல் 2)

‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுநவும்’ – இரு சொற்கள் புணரும்போது, இடையே ஏதேனும் ஒரு பொருளுக்காக வருவனவும்,
‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்’ – வினைச் சொல்லில் காலம் , பால்,இடம் காட்டுபவைகளும்,
‘வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்’- வேற்றுமைப் பொருளைத் தரும் உருபுகளாக நிற்பவையும்,
‘அசைநிலைக் கிளவி யாகி வருநவும்’ – தனக்கெனப் பொருள் இலாது, தான் சார்ந்த பெயர் வினைகளோடு ஒட்டிநின்று அவற்றைச் சிறப்பிக்க உதவுவனவும்,
‘இசைநிறைக் கிளவி யாகி வருநவும்’ – செய்யுளில் இசையை நிறைக்க வருபவைகளும்,
‘தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்’ – கூறுபவர்களின் குறிப்புப் பொருளை வெளிப்படுத்த நிற்பவைகளும்,
‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் என்று’ – வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும், ஏதோ ஒரு ஒப்புமையால் ஒன்றுபட்டு நிற்க உதவுபவைகளும்,
‘அப்பண் பினவே நுவலுங் காலை’ – ஆகத் திகழ்வதே இடைச்சொற்களாம்,உரைக்கப் புகின்!

இப்படி நடக்கும் இடைச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1 . ’ புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுந’

பாட்டு +இன் + இனிமை = பாட்டின் இனிமை
இதில், ‘இன்’ எனும் சாரியை இடைச்சொல் , நடுவே வந்து , பொருளைத் தருகிறது; ‘பாட்டு’, ‘இனிமை’ என்று தனித் தனியாக நின்றால் பொருள் திரளாது என்பதைக் கவனிக்க!

2 . ‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருந’
வாழ்+ வ்+ஆன் = வாழ்வான்
இங்கே, ’வ்’எனும் இடைச்சொல்லாகிய எதிர்கால இடைநிலை வந்ததால்தான் ‘வாழ்வான்’ என்ற வினைச்சொல்லுக்குப் பொருளே ஏற்படுவதைக் காண்கிறோம்.

3 . ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’

குமணனை வாழ்த்தினான் – இங்கே, ‘ஐ’ எனும் இடைச்சொல்லாகிய வேற்றுமை உருபுதான் தொடர்ப் பொருளையே நல்குவதைக் காணலாம்; இல்லையேல், ‘குமணன் வாழ்த்தினான’ என நின்று , வாழ்த்தியவன் குமணன் எனும் தவறான பொருள் அல்லவா ஏற்படும்?

4 . ‘அசைநிலைக் கிளவி யாகி வருந’
சேனாவரையரின் விளக்கம்- “அசைத்தல் – சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை யாயிற்று.அவை ‘அந்தில்’ முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’, ‘உரைத்திசினோரே’ எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின்,அசைநிலைச் சொல்லாயின என்பாரு முளர்”

இங்கே ஒன்றை நான் தெளிவுபடுத்த வேண்டும்!

‘அசைநிலை’ வேறு, ‘அசைச் சொல்’ வேறா?
உரையாசிரியர் சிலரின் நடை இந்த ஐயத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது!

அசைநிலை வேறு, அசைச் சொல் வேறு எனத் தொல்காப்பியர் கருதியிருந்தால், இடைச் சொற்களைப் பாகுபடுத்திக் கூறும் அவரின் பட்டியலில், இரண்டும் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?பட்டியலில் ‘அசைநிலைக் கிளவி’ என்ற ஒன்று மட்டும்தானே உள்ளது?

‘மா’ எனும் சொல், வியங்கோளை அடுத்துவரும் ‘அசைச் சொல்’ எனத் தொல்காப்பியர்(இடை.25) கூறச் ,சேனாவரையர், “அது வியங்கோளைச் சார்ந்து, ‘அசைநிலையாய் வரும்’’என்றார்.
இதனால், அசைநிலையும் அசைச் சொல்லும் ஒன்றுதான் என்பது தெளிவாகிற தல்லவா?
ஆகவே,
அசைநிலைக் கிளவி =அசைநிலைச் சொல் = அசைநிலை= அசைச் சொல் !

மேற் சேனாவரையர் உரையிற் கண்ட இரு அசைநிலைகளை வருமாறு பார்க்கலாம்-

புகழ்ந்திகு மல்லரோ பெரிதே – இதில், ‘இகும்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.
உரைத்திசினோரே - இதில், ‘இசின்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.

5 . ‘ இசைநிறைக் கிளவி யாகி வருந ’

இசையை நிறைக்க வரும் சொல் , இசைநிறை இடைச்சொல் எனப்படும்.
இசையை நிறைக்க – யாப்புக் குறையைப் போக்க
‘கடாஅக் களிற்றின்மேல்’ – இந்த இரு சீர்களில், முதற்சீரிலுள்ள ‘அ’வை எடுத்துவிட்டால், ‘கடாக்’ என்று ஒரே ஒரு நிரைஅசையாக மட்டும் நிற்கும்; சீர் கிடைக்காது;யாப்பிலக்கணம் பிழையாகும். ஆகவே சீர் ஏற்பட்டு, யாப்பிலக்கணம் செம்மையாக, ‘அ’ சேர்க்கப்படுகிறது; இதுவே இசை நிறைக்கப்படுதல்.
இங்கே ‘அ’ , இசைநிறைக்கும் இடைச்சொல்.

இன்னோர் எடுத்துக்காட்டு:
‘காடிறந் தோரே’ – இதில், இரண்டாம் சீரின் ஈற்றில் உள்ள ஏகாரமே இசைநிறைக்க வந்த இடைச்சொல். ஏன்?
ஈற்று ஏகாரத்தை எடுத்துவிட்டால், ‘தோர்’ என்பது மட்டுமே மிஞ்சும்; இஃது ஓர் அசைதானே தவிரச் சீர் ஆகாது; சீர் ஆக்கவேண்டும் என்பதற்காகவே ஈற்றில், ‘ஏ’ சேர்க்கப்படுகிறது; அஃதாவது, யாப்பியல் நோக்கில் சேர்க்கப்படுகிறது; இதனால்தான் ‘இசை நிறை’ எனப்படுகிறது.
6 . தத்தங் குறிப்பிற் பொருள்செய்குந

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம்235)- இதில், ‘மன்’ எனும் இடைச்சொல் வந்துள்ளது. ‘சிறு அளவிலான கள் இருந்தால் அவன் எனக்குத் தந்துவிடுவான்! அப்படிப்பட்ட அரசன் அவன் ! அது ஒரு காலம்!’ எனக் கடந்துபோன (கழிந்துபோன) செயலைக் குறிப்பது எது? ‘மன்’அல்லவா? இதனால், ‘மன்’ எனும் இடைச்சொல், கழிவுப் பொருளைக் குறிப்பால் தருகிறது என்கிறோம்!

7 . ‘ஒப்பில் வழியாற் பொருசெய்குந’

இதற்கும் உரையாசிரியரிடையே வேறுபட்டு கருத்துகள் உண்டு!

நம் விளக்கத்தை வருமாறு வைக்கலாம்.

காளை மாடும் மணி என்ற மனிதனும் ஒன்றா?
வேறு வேறுதானே?
இரண்டையும் ஒன்று எனக் கூற முடியாது என்பதே , ‘ஒப்பில் வழி’!
ஆனால், இப்படிப்பட்ட ‘ஒப்பில்வழி’யாக இருப்பினும் , சில உருபுகளைப் போட்டுப் நாம் விரும்பிய பொருளை வெளிப்படுத்துகிறோம்! இந்த உருபுகளை நாம் உவம உருபுகள் என்கிறோம்! இவைகள் இடைச்சொற்களே!

காளை அன்ன மணி – இங்கே , ‘காளை’ , ‘மணி’ ஆகியன ஒப்பில்வழிச் சொற்கள்; ஆனால், ‘அன்ன’ எனும் இடைச்சொல்லால், நம்மால் ஓர் ஒப்பீட்டைத் தர முடிந்துள்ளது!இதைத்தான் தொல்காப்பியர் தன் நூற்பாவில் குறித்துள்ளார்!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (585)

Post by Dr.S.Soundarapandian Sat Feb 19, 2022 7:39 pm

தொல்காப்பிய இலக்கணம் (585)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாம் பார்க்கப்போவது , ‘அம்ம’!:

‘அம்ம’ என்பதும் ஓர் இடைச்சொல்தான்; ஆனால் அசைச்சொல் அல்ல! ‘ஒருவரை விளித்து ,இதைக் கேள்’ என்று கூறும் பொருளைத் தாங்கி வருவது இந்த இடைச்சொல்!தொல்காப்பியம் :

அம்ம கேட்பிக்கும் (இடையியல் 28 )

ஆனால், ‘அம்ம’ மேலே சொல்லப்பட்ட பொருளைத் தவிர வேறு பொருளில் வராது!

‘அம்ம வாழி தோழி’ (ஐங்.21)
’அம்ம வாழி தோழி’ (குறுந். 77)
- இந்த இரு இடங்களிலுமே ‘அம்ம’, கேட்பிக்கும் பொருளில் வந்த இடைச்சொல்தான்!

‘அம்ம’ வேறு, ‘அம்மா’ வேறு!
‘அம்மா’ எனும் பெயர்ச்சொல், தாயைக் குறிக்கும்; இஃது, இடைச்சொல் அல்ல.

அடுத்து நமக்கு அறிமுகமாக்கும் இடைச்சொல் – ‘ஆங்க’!:

ஆங்க உரையசை (இடையியல் 29)

ஆங்க – ‘ஆங்க’ எனும் இடைச்சொல்லானது,
உரையசைச் சொல்லாக வரும்.

சேனாவரையர் காட்டு - ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி’

இங்கே , ‘ஆங்க’வுக்குப் பொருள் ஏதுமில்லை; வெறும் அசையாகவே நிற்கிறது;ஆனால் இந்த அசை, ‘உரையசை’ எனக் குறிக்கப்படுகிறது.

உரை – கட்டுரை; புனைந்துரை; புனைவு செய்து உரைப்பது.
உரையாசிரியன்மார் கருத்துப்படி , அசைத்தல் = சேர்த்தல்; பிற சொல்லுடன் ஒரு சேர்க்கை
யாக ஒட்டி வருவது.
மேல் ‘ஆங்கே’, ‘அங்ஙகனே எனப் புனைந்துரைத்து நின்றது’ என்று விளக்கம் தந்தவர் நச்சர்.

நச்சர் உரையை முழுமையாகத் தருகிறேன்; இதில் இன்னொரு இலகண நுணுக்கமும் உங்களுக்குக் கிட்டும்!:
“ ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக், கேள்வனை விடுத்துப் போகியோளே’ என்புழி, ‘அங்ஙனே’ எனப் புனைந்துரைத்து நின்றது.சிறிது பொருள் உணர்த்துவனவற்றை ‘உரையசை’ என்றும் , பொருள் உணர்த்தாது சொற்களை அசைத்து நிற்பனவற்றை ‘அசைநிலை’ என்றுங் கூறுதல் ஆசிரியர் கருத்தாதலை இரண்டு அதிகாரத்துங் கண்டுகொள்க!”

அங்ஙனே – அவ்விதமாக; அந்த வண்ணமே; அப்படியாக

இவ்விடத்தில், ‘உரையசை’த் தலைப்பின் கீழ்த் தமிழ் லெக்சிகன் தருவது அறியத் தக்கது – “Word which has lost much ot its original signification and is almost an expletive as ஆங்க; தன்னாற்றலைப் பெரும்பான்மையு மிழந்து சிறிது பொருளுணர்த்தி வரும் இடைச்சொல்.(தொல்.சொ.279,உரை) ” (Tamil Lexicon, Vol I.Part I, p.452, University of madras, Reprint, 1982)
லெக்சிகன் கருத்து நச்சர் உரையின் மேல் எழுந்தது. ‘சிறிது பொருள்’ என்ற நச்சர் கருத்தைத்தான், ‘தன்னாற்றலைப் பெரும்பான்மையும் இழந்து’ என லெக்சிகன் எழுதுகிறது.
அஃதாவது , ‘ஆங்க’வுக்கு இங்கே தனிப்பொருளில்லை; தனிப்பொருளை இழந்துவிட்டது; ஆனால், ‘ஆங்ஙனே’ என்ற யூகப் பொருள் , புனைவுப் பொருள், ’சிறிது பொருள்’ மட்டுமே தெரியவருகிறது; இதனால் இஃது ‘உரையசை’ ஆயிற்று.

அடுத்தது ‘ஒப்பில் போலி’!:

ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும் (இடையியல் 30)

காலையில் இருபது இட்லி சாப்பிட்டிருப்பான் போல, அதுதான் கத்தறான்! – இதில், ‘போல’ என்று எதையும் எதனோடும் ஒப்புமை கூறவில்லை; ஆனால், ‘போல’ எனும் சொல் (இதுதான் ‘போலி’) மட்டும் வந்துள்ளது; இதுவே ‘ஒப்பில் போலி’!
சேனவரையர் எடுத்துக்காட்டு – ‘மங்கலம் என்பதோர் ஊர் உண்டு போலும்’

‘போலும்’ என்ற உவமைச் சொல் வந்தாலும், தொடரில் எதையும் எதனோடும் ஒப்புமை கூறவில்லை! ஒப்புமை கூறாத ‘போலி’ , ஒப்பில் போலி!
இந்த ஒப்பில் போலிகளாகிய ‘போல’ , ‘போலும்’ ஆகியன ‘உரையசை’களே!ஏனெனில், இவை தம் பொருளாகிய உவமைப் பொருளில் வராமல் , ஒரு புனைவுப் பொருளில் வந்துள.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (586)

Post by Dr.S.Soundarapandian Sun Feb 20, 2022 4:57 pm

தொல்காப்பிய இலக்கணம் (586)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரே மூச்சில் , ஏழு இடைச்சொற்களாம் அசைநிலைச் சொற்களை அடுக்கித் தருகிறார் தொல்காப்பியர்:

யாகா
பிறபிறக் கரோபோ மாதென வரூஉம்
ஆயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி (இடையியல்31)

சேனாவரையர் முதலானோர் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கித் தரலாம்:

1 . யா – அசைநிலையாக வரல்
‘யா பன்னிருவர் மாணாக்கருளர் அகத்தியனார்க்கு’- இங்கே, ‘யா’ எனும் இடைச்சொல்லானது(Particle), அசைநிலையாக (Expletive) வந்துநிற்கக் காண்கிறோம். எடுத்துக்காட்டுத் தொடருக்குப் ‘ பன்னிருவர் மாணாக்கருளர் அகத்தியனார்க்கு’ என்பது மட்டுமே பொருள்; ‘யா’வுக்குப் பொருளில்லை.
‘யா’ எனும் அசைநிலை நமக்கு விநோதமாக உள்ளது!
ஆனால், இது வழக்கில் இன்றும் தமிழகத்தில் உள்ளது! நெல்லைப் பகுதியில் , ‘யா அவன் ஏமாத்துக்காரன்யா!’; ‘யா வாங்கின கடனைக் கொடுக்கணும்ல!’ என்றாங்கு தொடர்களில் ‘யா’வருகிறது; திரைப்பட வசனங்களிலும் இது கையாளப்பட்டுள்ளது!
இவ்வாறு நாம் தொல்காப்பியத்தை இன்றைய தமிழோடு ஒப்பிட்டு ஆய்வது நம் கடமை!
2 . கா – அசைநிலையாக வரல்
‘புறநிழற் பட்டாளோ இவளிவட் காண்டிகா’ (கலி.99:9) – இதற்கு, ‘உன் வெள்ளைக் கொற்றக் குடை அறநெறியை நிழலாகக் கொடுக்கிறது; அத்தகு குடையின் நிழலுக்குப் புறம்பே இவள் கிடக்கிறாளோ? இவளைப் பார்.’ என்பது பொருளாம்.
காண்டிகா = காண்டி= காண் = பார்
காண்டி + கா= காண்டிகா; கா – அசைநிலை ; பொருள் ஏதுமில்லை.

இலங்கை மட்டக்கிளப்புப் பகுதியில் , இன்றும், ‘வாகா = வா; போகா = போ’ என்றே வழங்குகிறது எனக் குறித்துளர்; இங்கெல்லாம், ‘கா’வானது பொருளற்ற அசைச்சொல்லாகவே நிற்பதைக் காண்கிறோம்.
3 . பிற– அசைநிலையாக வரல்
‘தான்பிற, வரிசை யறிதலில் தன்னுந் தூக்கி’ (புறம். 140:5,6)
(தான் – அரசன்; பிற – அசை; வரிசை – இரவலர்க்குக் கொடுத்தல்; அறிதலில் – அறிந்துள்ளதால்; தன்னும் – தனது உயர்வை ; தூக்கி – எண்ணி)
‘பிற ’ , இங்கே பொருளின்றி வந்தை அசைச்சொல்.

4 . பிறக்கு – அசைநிலையாக வரல்
‘நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய’ (புறம். 15:15)
‘உன்னை வெல்லலாம் என்ற ஆசையுடன் வந்தோரின் ஆசை ஒழிய’ என்பது இவ்வடியின் பொருள்; இங்கு, ‘பிறக்கு’ , அசைநிலை; பொருளற்றது.
இன்றைய வழக்கில், ‘பொறவு’ , ‘பின்னே’ ஆகியன இதற்கு இணையான அசைகளாக வருகின்றன!
‘அவன் விரட்டப்போறான் பொறவு’; ‘பொறவு அவன் வந்து உன்னைக் கேட்பான்’- இங்கெல்லாம் ‘பிறகு’ என்ற பொருள் மறைந்து, ஓர் அசைநிலையாகப் ‘பொறவு’ நின்றிடக் காண்கிறோம்.
‘போயிட்டு வந்துவிடு பின்னே’; ‘சரி பின்னே நான் வந்துடறேன்’- இங்கும் ‘பிறகு’ என்ற பொருள் மறைந்து, ஓர் அசைநிலையாகப் ‘பின்னே’ நின்றிடக் காண்கிறோம்.

‘தொல்காப்பிய நோக்கில் தற்கால அசைச்சொற்கள்’ (Expletives in present day Usage Under the Light of Tholkappiyam) – என்பதே தனி ஆய்வுத் தலைப்பு(Research Topic)!

5 . அரோ – அசைநிலையாக வரல்
‘நோதக இருங்குயில் ஆலுமரோ’ (கலி.33: 24,25)
‘நோவு செய்யும் குயில் பாடும்’ என்பதே பொருள்; ‘அரோ’வுக்குப் பொருளில்லை; அசையே.
6 . போ - அசைநிலையாக வரல்
‘பிரியின் வாழா தென்போ தெய்ய’
‘பிரிந்தால் வாழாது ’ என்பதே திரள் கருத்து; ‘போ’ , அசைச்சொல்லே.
இன்றைய வழக்கில் , ‘மாட்டிக்கிட்டான்; செத்தான் போ’ ; ‘பத்துமணிக்குச் சாப்பாடு போட்டிடலாம் போ’ என்றெல்லாம் கூறுவர்; இங்கெல்லாம் யாரையும் ‘போ’ என விரட்டவில்லை! ‘போ’ , பொருளற்ற அசையாகவே வருகிறது.

7 . மாது - அசைநிலையாக வரல்
‘விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் நெஞ்சே’ (நற். 178)
’அவரை நம்பிய என் நெஞ்சுக்கு இப்படித்தான் தோன்றுகிறது’ என்பதே பொருள் ; ‘மாது’ என்பதற்குப் பொருள் ஏதுமில்லை ; அசையே!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (587)

Post by Dr.S.Soundarapandian Mon Feb 21, 2022 12:17 pm


தொல்காப்பிய இலக்கணம் (587)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சில அசைச் சொற்கள் இரட்டை இரட்டையாகவே வரும் ; தனியாக வராது!:

ஆக ஆகல் என்பது என்னும்
ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை (இடையியல் 32)

‘ஆக, ஆகல்,என்பது – இம் மூன்றும் தனித்து நின்று அசைநிலை ஆகமாட்டா’ – இது சேனாவரையர் உரை.

இவற்றை விளக்கிச் சேனாவரையர் நுவல்வதை நாம் வருமாறு எளிமைப்படுத்திக் காண்போம்:

1 . “நான் இப்படிப்பட்டவன்” என் ஒருவன் கூறியபோது, கேட்டவன், “ஆக ஆக” என்றால், கேட்டவன், சொன்னவனின் கருத்தை ஏற்கவிலை என்பது பொருள்; சொன்னவன் மீது , கேட்டவனுக்கு அன்பில்லை (இதுவே ‘ஆதரமில்வழி’) என்பது பொருள்.
கேட்டவன், “ஆக ஆக” என்பதற்குப் பதில், “ஆகல் ஆகல்” என்றாலும் இதே பொருள்தான்.

2 . “நீ இப்படிப்பட்டவன்” என் ஒருவன் கூறியபோது, கேட்டவன், “ஆக ஆக” என்றால், கேட்டவன், சொன்னவனின் கருத்தை ஏற்கவிலை என்பது பொருள்; சொன்னவன் மீது , கேட்டவனுக்கு அன்பில்லை என்று கொள்ளலாம்.
கேட்டவன், “ஆக ஆக” என்பதற்குப் பதில், “ஆகல் ஆகல்” என்றாலும் இதே பொருள்தான்.

3 . “அவன் இப்படிப்பட்டவன்” என் ஒருவன் கூறியபோது, கேட்டவன், “ஆக ஆக” என்றால், கேட்டவன், சொன்னவனின் கருத்தை ஏற்கவிலை என்பது பொருள்; சொன்னவன் மீது , கேட்டவனுக்கு அன்பில்லை என்பது கருத்து.
கேட்டவன், “ஆக ஆக” என்பதற்குப் பதில், “ஆகல் ஆகல்” என்றாலும் இதே பொருள் கொள்ளவேண்டும்.
4 . ஒருவன் ஒன்றைச் சொன்னபோது, கேட்டவன் , ‘என்பது என்பது’ என்றால், சொன்னவனின் கருத்தை ஆதரிக்கிறான் என்பது கருத்து; சிலபோழ்து, சொன்னவனின் கருத்தை எதிர்ப்பதற்கும், கேலி பேசுவதற்கும் இதே ‘என்பது என்பது’ வரும்.

ஏறத் தாழ இதுவே இளம்பூரணர் கருத்தும் தெய்வச்சிலையார் கருத்தும் ஆகும்;வெள்ளைவாரணர் சேனாவரையரின் கருத்தையே தந்துள்ளார். ஆனால், நச்சினார்க்கினியர் முற்றிலும் மாறுபடுகிறார்!
நச்சர், “ஆக ஆக என அடுக்கி வந்து, உடம்படாமையும் ஆதரமின்மையுமாகிய பொருள் தந்து நிற்கும் என்றல், அசைநிலைக்கு ஆகாமையின், அவ்வாறு கூறுதல் பொருளன்மை உணர்க!” என்கின்றார்!
‘பிரிவில் அசைநிலை’ என்பதற்கு நச்சர் கருத்து யாது?
நச்சர் கருத்து இதுதான் : “ ‘காரெதிர் கானம் பாடினேம் ஆக’ (புறம் 144:3) ……எனச் செயவென் எச்சம் முற்றாய்த் திரிவுழி, ஆக என்னும் இடைச்சொல் வந்து, அவற்றின் பொருளே உணர்த்திச் செயவென் எச்சமாய் நின்றது”.
சொற்கள் இரட்டித்து வந்து பொருள் தருவதை நமக்கு ஏற்கனவே ‘இரட்டைக் கிளவி’ கோடி காட்டியுள்ளது!ஆனால், இஃது, அசைச்சொல்லுக்கு ஆனதல்ல;இரட்டிப்பதற்கு மட்டுமே.
வழக்கில் இரட்டித்து அசைச்சொற்கள் வந்து பொருள் சொல்வதற்கான வேறு எடுத்துக்காட்டை நாம் காணவேண்டியவர்களாக இருக்கிறோம்; மேலாய்வுக்கு இடம் தருவது இது.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (588)

Post by Dr.S.Soundarapandian Mon Feb 21, 2022 6:29 pm


தொல்காப்பிய இலக்கணம் (588)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இடையியலில் நிற்கிறோம்!
இப்போது சிக்கலான ‘ஔ’!:-

ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே
ஆயியல் நிலையுங் காலத் தானும்
அளபெடை யின்றித் தான்வருங் காலையும்
உளவென மொழிப பொருள்வேறு படுதல்
குறிப்பின் இசையால் நெறிப்படத் தோன்றும் (இடையியல் 33)

‘ஈரள பிசைக்கும்’ – இரண்டு மாத்திரை ஓசையில் ஒலிக்கும்,
‘இறுதியில் உயிரே’- சொல்லின் ஈற்றில் வராத ஔகாரம்,
‘ஆயியல் நிலையும் காலத்தானும்’ – பிரிவில் அசைநிலை என மேலே கூறப்பட்டவை போல இரட்டித்து நிற்கும் இடத்தும்,
‘அளபெடை இன்றித் தான் வரும் காலையும்’ – இரட்டிக்காமல் அளபெடையாக நிற்கும் இடத்தும், அளபெடை இன்றித் தான் வரும் இடத்தும்,
‘உளவென மொழிப பொருள்வேறு படுதல்’ - பொருளானது வேறுபடுதல் உண்டென்று கூறுவார்கள்;
‘குறிப்பின் இசையால் நெறிப்படத் தோன்றும்’ – அந்த வேறுபாடானது, சொல்பவனின் குறிப்பை ஒட்டி வரும் ஓசை வேறுபாட்டால் அறியப்படும்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கினால்தான் புரியும்!:

1 . ஔஔ – இரட்டித்தல் (சிறப்புப் பொருளில்)
‘ஔஔ’ எனப் பிரிவில் அசையாக நின்று பொருள்படும்போது, கூறுவான் மதிப்புப்படக் கூறுகிறான் என்பது தெரியவரும் தொடர், தமிழிற் பண்டு இருந்துள்ளது!
‘ஔஔ அகத்தியர் தவம் செய்ததை அறிவீரா?’- இத் தொடரில், சொல்வான் அகத்தியரை மதித்து உயர்வாகக் கூறியுள்ளது எதனால் விளங்குகிறது? ‘ஔஔ’ என்ற பிரிவில் அசைநிலையாலும், அவனுடைய ஓசைக் குறிப்பாலும்!

தொல்தமிழில் இருந்த ‘ஔஔ’தான் , வெளிநாடு பரவி, ‘வாவ்’ ஆகியுள்ளது என மதிப்பிட இடம் உள்ளது! இதுபோன்ற பல சான்றுகளால்தான் ‘உலகின் முதன்மொழி தமிழ்’ என நம்மால் கூறமுடிகிறது!

2 . ஔஔ – இரட்டித்தல் (சிறப்பற்ற பொருளில்)

‘ஔஔ’ எனப் பிரிவில் அசையாக நிற்கும்போது, கூறுவான் மதிப்புக் குறைவாகக் கூறுகிறான் என்பது தெரியவரும் தொடரும் இருந்தது!
‘ஔஔ அவள் பாடியது போதும்’ – என்றால், அவள் பாடியது சரியில்லை என்பது பொருள்; இந்தக் குறிப்புப் பொருளைத்தரும் வகையில் வந்ததே ‘ஔஔ’ எனும் பிரிவில் அசைநிலை!
3 . ஔஉ – சிறப்புப் பொருளில்

‘ஔஉ குமணன் கொடை யாருக்கு வரும்?’- என்பது போன்ற தொடர் அந்தக் காலத்தில்- தொல்காப்பியர் காலத்தில் – இருந்துள்ளது! இங்கே ‘ஔஉ’ பேசப்படுபவரின் சிறப்புப் பற்றியதாக இருப்பதை நோக்கலாம்.

இங்கே ஒரு திராவிடமொழி ஆராய்ச்சி!
இன்றைய கன்னடத்தில், ‘ஔது = ஆமாம்’.
‘ஔது’ , கன்னடத்திற்கு எங்கிருந்து போனது?
தமிழிலிருந்து!
இதற்குச் சான்றுதான் நாம் இப்போது பார்த்தது! மேலோட்டமாக ஆய்ந்தால் இது நமக்குத் தெரியவராது! தொல்காப்பியத்தை நுணுக்கமாக ஆய்ந்தால்தான் தெரியவரும்! திராவிட மொழிகளின் ஆய்வுக்கு ஆடுகளமாக இருப்பது தொல்காப்பியம்!
’ஔஉ’, சிறப்புப் பற்றிய அசை எனக் கண்டோம்; இப் பொருளே ‘ஆமோதித்தல்’, அல்லது ‘ஏற்றுக்கொள்ளல்’ என விரிந்து , நடுவே ‘த்’ சேர்ந்து, ‘ஔது’ எனக் கன்னட மக்கள் நாவிற் புரண்டுள்ளது!
ஔ +த்+உ= ஔது (இதுவே ‘ஹவுது’)

4 . ஔ – சிறப்பு அற்ற பொருளில்
‘ஔ போதும் உன் கோபம்!’ என்ற மறைந்து போன பழந்தமிழ்த் தொடரில், அளபெடை இல்லாது ‘ஔ’க்குச் சிறப்புக் குறைவான பொருட் குறிப்பு இருந்துள்ளது!

‘ஔஔ’ – பிரிவில் அசைநிலை
‘ஔஉ’ – அளபெடை பெற்ற அசைநிலை எனும் இடைச்சொல்
‘ஔ’ - அளபெடை பெறாத இடைசொல்லாகிய அசைநிலை

மேலை ஆய்வால், ‘மறைந்து போன பழந்தமிழ்த் தொடர்கள்’ (Vanished Ancient Tamil Sentence Patterns )என்பதையே ஓர் ஆய்வுத் தலைப்பாகக் கொண்டு, உயர் ஆய்வு (High Level Research) செய்யலாம் என்பது தெரியவருகிறது!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (589)

Post by Dr.S.Soundarapandian Tue Feb 22, 2022 4:53 pm


தொல்காப்பிய இலக்கணம் (589)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொல்பவனது ஓசைக்குறிப்பால் ,பொருளானது தெளிவுறும் அமையும் பிரிவில் அசைகளையும், பிரிந்து தனியாக வரக்கூடிய அசைகளையும் பற்றியதே அடுத்த நூற்பா:

நன்றீற்று ஏயும் அன்றீற்று ஏயும்
அந்தீற்று ஓவும் அன்னீற்று ஓவும்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் (இடையியல் 34)

‘நன்றீற்று ஏயும்’ – ‘நன்றே’ எனும் சொல்லும்,
‘அன்றீற்று ஏயும்’ – ‘அன்றே’ என்னும் சொல்லும்,
‘அந்தீற்று ஓவும்’ – ‘அந்தோ’ என்பதும்,
‘அன்னீற்று ஓவும்’ – ‘அன்னோ’ எனும் சொல்லும்,
‘அன்ன பிறவும்’ – அப்படிப்பட்ட பிற சொற்களும்,
‘குறிப்பொடு கொள்ளும்’ – பேசுவானது குறிப்பை ஏற்று வரும்.

உரையாசிரியன்மார் உரைகளைத் தழுவி, மேலனவற்றை வருமாறு விளக்கலாம்.

1 . நன்றீற்று ஏ
‘நன்று’ எனும் சொல்லின் ஈற்றில் ‘ஏ’ பெற்ற சொல்.
நன்று + ஏ= நன்றே
‘நன்றே’ என்று அசையாக, முழுச் சொல்லாகக் கொள்ளவேண்டும்; ஏனெனில், பிரித்துப் பொருள் காண முற்பட்டால், ‘நன்று’ என்பது , குறிப்பு வினைமுற்றாக அமையும்; இடைச்சொல்லாக அமையாது; ஈற்று ‘ஏ’ மட்டுமே இடைச்சொல்லாக வரும்.
‘நன்றே’ என்பது , ‘நன்றே நன்றே’ எனப் பிரியாத அசைகளாகவும் வரும்; ஒன்று மட்டும் தனியாக ‘நன்றே’ என்றும் வரும். எப்படி வந்தாலும் , பேசுவானின் குறிப்பை ஏற்று வரத் தக்கதே.
‘நான் முயல் ஓவியம் வரைந்திருக்கிறேன் பாருங்கள்’ என ஒருவன் கூறினால், நீங்கள் அந்த ஓவியத்தை விரும்பவில்லை எனில் , அப்போது ‘நன்றே நன்றே’ என உங்களின் வெறுப்பைக் குறிப்பாகத் தெரிவிக்கலாம்; இதற்கு ‘நன்றே நன்றே’ என்ற பிரிவில் அசைநிலை தமிழில் இடம் தரும் என்பதே தொல்காப்பியம். உங்களுடைய அந்த வெறுப்புக் குறிப்பையே உரையாசிரியர்கள் ‘மேவாமைக் குறிப்பு’ என்கின்றனர்.
2 . அன்றீற்று ஏ

‘அன்று’ எனும் சொல்லின் ஈற்றில் ‘ஏ’ பெற்ற சொல்.
அன்று + ஏ= அன்றே
‘அன்றே’ என்று அசையாக, முழுச் சொல்லாகக் கொள்ளவேண்டும்; ஏனெனில், பிரித்துப் பொருள் காண முற்பட்டால், ‘அன்று’ என்பது , குறிப்பு வினைமுற்றாக அமையும்; இடைச்சொல்லாக அமையாது; ஈற்று ‘ஏ’ மட்டுமே இடைச்சொல்லாக வரும்.

முன் முயல் ஓவிய எடுத்துக்காட்டில், ‘நன்றே நன்றே’ என்பதற்குப் பதிலாக ‘அன்றே அன்றே’ எனக் கூறினாலும் அதே மேவாமைக் குறிப்பே.

‘அன்றீற்று ஏ’வுக்கு , மேவாமைக் குறிப்பு தவிர , தெளிவுப் பொருள் தரும் இடமும் தமிழில் உண்டு என்பார் சேனாவரையர்.

‘குமரன் அன்றே கம்பியை நிமிர்த்தியது’ - இதில், ‘அன்றே’ , தெளிவுப் பொருளில் வந்துள்ளதைக் காணலாம்.

3 .அந்தீற்று ஓ
அந்தீற்று ஓ - அந்தோ

‘அந்தோ’ எனும் அசை, ‘அந்தோ சுவர் இடிந்ததே!’ என்றபடி அடுக்காது தனியாக வந்தும், ‘அந்தோ அந்தோ வீடு தீப்பற்றியதே’ என அடுக்கியும் வந்து இரங்கற் குறிப்பை நல்கும்.

4 .அன்னீற்று ஓ
அன்னீற்று ஓ - அன்னோ
‘அன்னோ’ எனும் அசை, ‘அன்னோ தேர்வில் தோற்றானே!’ என்றபடி அடுக்காது தனியாக வந்தும், ‘அன்னோ அன்னோ மகன் இறந்தானே!’ என அடுக்கியும் வந்து இரங்கற் குறிப்பை நல்கும்.

5 . ‘அன்ன பிற’
சேனாவரையர், “அன்ன பிறவு மென்றதனான், ‘அதோ அதோ’ , ‘சோ சோ’ , ‘ஒக்கும் ஒக்கும்’ என்னுந் தொடக்கத்தன கொள்க” என்றார். இவை அடுக்கி வந்த அசைநிலைகள் !
நச்சர், இரக்கக் குறிப்புத் தரும் வேறு சில இடைச்சொற்களையும் எடுத்துக்காட்டுகளுடன் தருகிறார்:

1 . ‘அந்தோ’ – இடைச்சொல்
’அந்தோ எந்தை அடையாப் பேரில்’ (புறம். 261:1)

2 . ‘அன்னா’ - இடைச்சொல்
‘அன்னா அலமரும் ஆருயிரும்’

3 . ‘ஆ’ – இடைச்சொல்
ஆவம்மா அம்மாவென் அம்மா அகன்றனையே!(சீவக.1804)
ஆ+ அம்மா = ஆவம்மா; வ- உடம்படு மெய்; இடைச்சொல் , ‘ஆ’ .
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (590)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 23, 2022 8:20 pm


தொல்காப்பிய இலக்கணம் (590)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இடையியலில் அடுத்த நூற்பா ‘உம்’ பற்றியது:

எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுள் மயங்கும் உடனிலை யிலவே (இடையியல் 35)

ஒரே தொடரில், எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் வரக்கூடாது!

சேனாவரையரின் எடுத்துக்காட்டுத் தொடர் – ‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலும் உரியன்’ ; இத் தொடரில் பொருள் இயைபு இல்லை என அவர் காட்டுகிறார்.
சாத்தனும் வந்தான் – இங்கு வந்த உம்மை , எச்ச உம்மை. ‘இன்னொருவனும் வந்தான்’ என்பதைத் தெரிவிக்கும் உம்மை.
கொற்றனும் வரலும் உரியன் – ’வரலும்’ என்பதில் உள்ள உம்மை எதிர்மறை உம்மை; ‘கொற்றன் வராமலும் இருப்பான்’ என்ற எதிர்மறைப் பொருளைச் சுட்டுவது.
இன்னொருவனாகிய கொற்றன் வந்தானா என்ற தெளிவு தொடரில் இலது! ஆகவேதான் தொடரானது பொருள் இயைபு அற்றது என்றார் சேனாவரையர்.

அடுத்த நூற்பாவில் என்ன வருகிறது எனப் பார்ப்போம்!:
எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல் (இடையியல் 36)

‘எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின்’ – எச்ச உம்மையால் தழுவப்படும் எஞ்சுபொருட் கிளவி, உம்மை இல்லாத சொல்லானால்,
‘பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்’ – அவ் வும்மை இல்லாத சொல்லை அவ் வும்மைத் தொடர்க்குப் பின்னே சொல்லாது, முன்னே சொல்லுக!

சேனாவரையர் எடுத்துக்காட்டை வருமாறு விளக்கினால் புரிந்துவிடும்:

சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் √
கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான் ×

செஞ்சொல்- ‘உம்மை அடாதே’ தானே நிற்கும் சொல்; உம்மை சேராது தானே நிற்கும் சொல்; இங்கே , ‘சாத்தன் வந்தான்’; இது, சரியான தொடரின் முற் பகுதியில் வந்துள்ளதைக் காண்க.

காளையன் பேசினான் ஆதவனும் பேசினான் √
ஆதவனும் பேசினான் காளையன் பேசினான் ×
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (591)

Post by Dr.S.Soundarapandian Thu Feb 24, 2022 11:02 am


தொல்காப்பிய இலக்கணம் (591)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியரிடத்திலிருந்து அடுத்து என்ன வருகிறது எனக் காண்போம்!:

முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின்
எச்சக் கிளவி யுரித்தும் ஆகும் (இடையியல் 37 )

‘முற்றிய உம்மைத் தொகைச்சொல்’- ‘உம்’எனும் முற்றும்மை பெற்றுவந்த தொகைச்சொல்,
‘மருங்கின்’ – உடன்,
‘எச்சக் கிளவி யுரித்தும் ஆகும்’- எச்சச் சொல் உரித்தும் ஆகும்!

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் விளக்கம் காணலாம்.

‘பத்தும் கொடால்’- பத்தையும் கொடுக்காதே
- இத் தொடரில் உள்ள ‘உம்’ மையே முற்றும்மை; ‘பத்தையும்’ என்ற பொருளில் வந்துள்ளதைக் கவனிக்க.
’பத்தையும் கொடுக்காதே’ என்று சொன்னால், ‘கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியைக் கொடு’ என்பதுதானே பொருள்? இதைத்தான் தொல்காப்பியமும் மேல் நூற்பாவிலும் நுவல்கிறது!
‘பத்தையும்’ என ‘முற்றும்மை’ வந்துள்ளதே , அப்படியானால், பத்தையும்தானே கொடுக்கவேண்டும்? - என்று நினைத்துவிடாதீர்கள் என்று தொல்காப்பியம் எச்சரிக்கிறது!அவ்வளவுதான்!
‘பத்தும்’ என்பது முற்றும்மைச் சொல்லானாலும் , அதுவே ‘எச்சச்சொல்லாக ஆகி’ , ‘வைத்துக்கொண்டது போக மீதி’ என்பதை உணர்த்தக்கூடிய ஓர் எச்சச் சொல்லாக நிற்றலும் உண்டு என்பதே தொல்காப்பியம் கூறவந்தது.

ஏகார இடைச்சொல் பற்றி முன்பே பார்த்துள்ளோம்; இப்போது அதற்கு மேலும் ஒரு முடிபைத் தருகிறார் தொல்காப்பியர்:

ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி
கூற்றுவயின் ஓரளபு ஆகலும் உரித்தே (இடையியல் 38)

‘ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி’ – செய்யுளின் கடைசிச் சீரின் இறுதியில் நிற்கும் ‘ஏ’,
‘கூற்றுவயின்’ – பாடலின் பிற பகுதிகளில் வந்த செய்யுள் உறுப்புகளோடு பொருந்தக் கூறுகையில்,
‘ஓரளபு ஆகலும் உரித்தே’ – ஒரு மாத்திரையாக ஆதலும் உண்டு!

‘காடிறந் தோரே’ (அகம் 1) – இதில், ஈற்று ஏகாரத்திற்கு என்ன மாத்திரை எனக் கேட்டால், “ஏன்? நெடிலுக்கு இரண்டு மாத்திரைதானே? ‘ஏ’ நெடில்தானே? அப்படியானால் , இங்கும் ‘ஏ’வுக்கு இரண்டு மாத்திரைதான்” என்போம்.
ஆனால், சில இடங்களில் அப்படி வராமல், ஒரு மாத்திரையானது குறைந்து, மீதி ஒரு மாத்திரை மட்டும் பெறுவதும் உண்டு என்கிறார் தொல்காப்பியர். இதற்கு எடுத்துக்காட்டாகச் சேனாவரையம் கண்டதுதான் ‘காடிறந் தோரே’. இவர் காட்டிய ஒலியை எழுத்தில் காட்டுவதானால், ‘காடிறந்தோரெ’ என எழுதிக்காட்டலாம்.
ஏன் ஈற்று ‘ஏ’யானது, ‘எ’ எனக் குறைவாக ஒலிக்க வேண்டும்?

பொதுவாக அகவல் ஓசையில், ஈற்றில் நீள் ஒலியே வரும்; ஆனால், பாடல் முடிப்பில் ஒரு சோகக் கருத்து வரும்போது நீள் ஒலி அவ்வளவாகப் பொருந்தாது! குற்றொலியே சோகம் தாங்கி வர ஏற்றது; இதன் தேவையே தொல்காப்பியரை நூற்பா எழுத வைத்துள்ளது என மதிக்க இடம் உள்ளது.
மேல் சேனாவரையர் எடுத்துக்காட்டில் , ஈற்றில் சோக ஒலியே வந்துள்ளதைக் கேட்கலாம்.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (592)

Post by Dr.S.Soundarapandian Sun Feb 27, 2022 7:03 pm


தொல்காப்பிய இலக்கணம் (592)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்து எண்ணிடைச் சொற்களைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர்!:

உம்மை எண்ணும் எனவென் எண்ணும்
தம்வயின் தொகுதி கடப்பா டிலவே (இடையியல் 39)

‘உம்மை எண்ணும்’ – எண்ணிடைச் சொல்லாக வரும் ‘உம்’ பெற்று அடுக்கி வரினும்,
‘எனவென் எண்ணும்’ – எண்ணிடைச் சொல்லாக வரும் ‘என்’ பெற்று அடுக்கி வரினும்,
‘தம் வயின்’- தொடரின்கண்,
‘தொகுதி’ – மொத்தம் இத்தனை எனக் குறிப்பது,
‘கடப்பா டிலவே’ – கட்டாயம் இல்லை.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை கீழே விளக்கி உணரலாம்:

1 . ‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ (உரியியல் 1)
இதில், வரிசையாக மூன்று சொற்களின் ஈற்றில் ‘உம்’மை இடைச்சொல் வந்துள்ளது. ஆனால் , இவற்றைத் தொகுத்து ‘நான்கினும்’ தோன்றி என மொத்தம் குறிப்பிட்டு வரவில்லை; இதைத்தான் ‘தொகுதி கடப்பாடிலவே’ என்றார் தொல்காப்பியர்.

2 . ‘நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்’
இங்கே, ‘என’ எனும் எண்ணிடைச்சொல் முதல் நான்கு இடங்களில் வந்து, ஐந்தாவதாக, ‘நான்கும்’ என்று மொத்தம் இவ்வளவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

3 . ‘உயிரென உடலென இன்றி அமையா’
இதில், ‘என’ எனும் எண்ணிடைச்சொல் முதல் இரு இடங்களில் வந்து, பிறகு மொத்தம் இவ்வளவு எனத் தெரிவிக்கப்படவில்லை.

ஆக, ‘உம்’ , ‘என’ ஆகிய எண்ணிடைச் சொற்கள், தொடரிற் பயின்றால், அதே தொடரில் மொத்தம் இத்தனை எனக் குறிக்கவும் செய்யலாம்; குறிக்காமலும் இருக்கலாம் .

எண்ணேகாரம் பற்றி , இடையியலில் முன்பே (நூ.9) பார்த்துள்ளோம். அது பற்றி மேலும் ஒரு விளக்கத்தை வரும் நூற்பாவிற் பேசுகிறார் தொல்காப்பியர்:

எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும்
எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர் (இடையியல் 40)

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் –

1 . ‘மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர்’
இங்கே, ‘மலையே நிலமே பூவே துலாக்கோலே என்று இன்னர்’
என ஒவ்வொரு சொல்லின் ஈற்றிலும் ‘ஏ’இடைச்சொல் சேர்க்கப்படவில்லை என்பதைக் கவனிக்க; இப்படிச் சில சொற்களில் மட்டும் எண்ணேகாரம் வந்து ,வேறு சில சொற்களில் வராமலும் இருக்கலாம் என்பதே மேல் நூற்பாவின் (இடை.40)கருத்து.

2 . ‘தோற்ற மிசையே நாற்றஞ் சுவையே’
இது, ‘தோற்றமே இசையே நாற்றமே சுவையே ’ என வரவில்லை பாருங்கள்; மாறாக , இரண்டாம் சீரும் நான்காம் சீரும் மட்டுமே ‘ஏ’ பெற்றுள்ளதை நோக்கலாம்; இதற்கு அனுமதியே நாம் பார்த்துவரும் நூற்பா.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (593)

Post by Dr.S.Soundarapandian Tue Mar 01, 2022 6:52 pm


தொல்காப்பிய இலக்கணம் (593)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்து, ‘எனா’ , ‘என்றா’ ஆகிய இரு இடைச்சொற்களைப் பேசுகிறார் :

உம்மை தொக்க எனாவென் கிளவியும்
ஆவீ றாகிய என்றென் கிளவியும்
ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன (இடையியல் 41)

‘உம்மை தொக்க எனாவென் கிளவியும்’ – ‘எனாவும்’ என்பதன் ஈற்று ‘உம்’ மறைந்தால் கிடைக்கும் ‘எனா’ எனும் சொல்லும்,
‘ஆ ஈறாகிய என்றென் கிளவியும்’ – ‘என்று’ எனும் சொல்லோடு ‘ஆ’ சேர்த்தால் வரக்கூடிய ‘என்றா’ எனும் சொல்லும்,
‘ஆ இரு கிளவியும்’- அந்த இரண்டு சொற்களும்,
‘எண்ணுவழிப் பட்டன’ – எண்ணுவதற்கு வருவதற்கு ஆனவைகளாம்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள்-
1 . நிலனெனா நீரெனா
நிலன் + எனா = நிலனெனா ; நீர் + எனா = நீரெனா
‘எனா’ எனும் இடைச்சொல்லானது இரு சீர்களின் ஒட்டுகளாக வந்துள்ளதைப் பார்க்கலாம். இது வரிசையாக எண்ணுவதற்குப் பயன்பட்டுள்ளதால், இந்த இடைச்சொல்லை ‘எண்ணுவழிப் பட்டது’ என்கிறார் தொல்காப்பியர்.

2 . நிலனென்றா நீரென்றா

நிலன் + என்றா = நிலனென்றா; நீர் + என்றா = நீரென்றா
‘என்றா’ எனும் இடைச்சொல்லானது இரு சீர்களின் ஒட்டுகளாக வந்துள்ளதைப் பார்க்கலாம். இது வரிசையாக எண்ணுவதற்குப் பயன்பட்டுள்ளதால், இந்த இடைச்சொல்லையும் ‘எண்ணுவழிப் பட்டது’ என்கிறார் தொல்காப்பியர்.

தொடரின் ஒவ்வொரு சொல்லின் பின்னேயும் இந்த எண்ணும் இடைச்சொற்கள் வரவேண்டு மென்பதில்லை; ஆங்காங்கே வந்தாலும் போதும் என்பது சேனாவரையரின் விளக்கம்; இது சென்ற நூற்பாவில் (இடை. 40) சுட்டப்பட்டதன் நீட்சி; இவ்வாறு வருவதற்குச் சேனாவரையர் காட்டிய தொல்காப்பிய நூற்பா எடுத்துக்காட்டுகள்-
1. பின்சா ரயல்புடை தேவகை எனா (வேற்றுமையியல் 21)
‘எனா’ என்ற இடைச்சொல் ஒன்று மட்டுமே அடி ஈற்றில் வந்து, அதற்கு முன் வந்தவற்றுக்கு எண்ணுப் பொருண்மை தந்துள்ளதை நோக்கலாம்.

2 . ஒப்பிற் புகழிற் பழியி னென்றா (வேற்றுமையியல் 11)
‘என்றா’ எனும் இடைச்சொல் ஒன்று மட்டுமே அடி ஈற்றில் வந்து, அதற்கு முன் வந்தவற்றுக்கு எண்ணுப் பொருண்மை தந்துள்ளதைக் காண்க.

மேலே ‘எனா’ , ‘என்றா’ ஆகிய இடைச்சொற்களைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? தொடர்ந்து அவற்றின் பயன்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய வெறொன்றையும் கற்பிக்கிறார் ஆசிரியர்:

அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்
பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும்
ஏயி னாகிய எண்ணின் இறுதியும்
யாவயின் வரினுந் தொகையின் றியலா (இடையியல் 42)

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் கொண்டு இதனை விளக்கலாம்:

1. நிலனெனா நீரெனா இரண்டும்

நூற்பாவில் ‘அவற்றின்’ என்றாரல்லவா, அவற்றில் ஒன்று, நாம் சென்ற நூற்பாவிற் (இடை.41)பார்த்த ’எனா’.
இந்த இடைசொல்லாகிய ‘எனா’வானது சொற்களின் ஈறுகளிற் பயின்று வந்து எண்ணுப் பொருண்மை தரும்போது, தொடரின் கடைசியில், எண்ணிவந்த மொத்தத் தொகையைக் குறிக்க வேண்டும்.
நாம் பார்த்துவரும் இந்த எடுத்துக்காட்டில், ‘இரண்டும்’ என வந்துள்ளதல்லவா? இதுவே ‘தொகை குறிப்பிடல்’.

3 . நிலனென்றா நீரென்றா இரண்டும்

மேலே ‘அவற்றின்’ என்பதில் அடங்கிய ‘எனா’ எனும் இடைச்சொல்லை இப்போது பார்த்தோம்; தொடர்ந்து, ‘அவற்றின்’ என்பதில் அடங்கிய ‘என்றா’ எனும் மற்றொரு இடைச்சொல்லைப் பற்றிக் காட்டுகிறார் ஆசிரியர். ‘நிலனென்றா…’ என்ற இந்த எடுத்துக்காட்டுத் தொடரில், ‘என்றா என்றா ’ என அடுக்கி வந்து, மூன்றாம் சீரில் முடியும் போது, ‘இரண்டும்’ என்ற தொகை குறிக்கப்பட்டுள்ளதைக் காண்க.

4 . நிலம் நீர் என இரண்டும்

‘நிலமும் நீரும்’ என வராததைக் கவனிக்க; ‘நிலனென நீரென’ என்றோ ‘நிலனென்றா நீரென்றா’ என்றும் வராததையும் நோக்குக. இவ்வாறு ஒட்டுகள் இல்லாது, பெயர்ச்சொற்கள் மட்டும் அடுக்கி வருவதையே ‘செவ்வெண்’ என்கின்றனர்.இப்படிப்பட்ட செவ்வெண் வந்தாலும் , கடைசியில் தொகை குறிப்பிடவேண்டும். இந்த எடுத்துக்காட்டில் ‘இரண்டும்’ எனத் தொகை உள்ளதைக் கவனிக்கலாம்.

4 . நிலனே நீரே என இரண்டும்

‘நிலனே நீரே’ என எண்ணேகார இடைசொல் வந்துள்ளதைக் காணலாம்;இறுதியில், ‘இரண்டும்’ என மொத்தக் கணக்கு உள்ளதைக் கவனிக்க. இந்த மொத்தக் கணக்கையே தொல்காப்பியர் ‘தொகை’ என்றார்; இது தேவையானது என்கிறார் அவர்.

இந்த மொத்தக் கணக்கு வேண்டும் என்பதை முதலிலேயே, எண்ணேகாரம் கூறும்போதே சொல்லியிருக்கக் கூடாதா?
நல்ல கேள்வி!
தொல்காப்பியம், அந்தக் காலத்து மாணவர்களுக்காக எழுதப்பட்டது; இப்போது போல விருதைக் குறிவைத்து எழுதப்பட்ட தல்ல! ஆதலால், இலக்கணத்தைக் குவியலாகக் கொட்டாமல் , நேர்த்தியாகக், காரண காரியத்தோடு, அளவாக, எதை எடுத்த எடுப்பில் கூறுவது, மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை முதலில் சொல்லிவிட்டுப், பிறகு மீதியைச் சொல்வது என்றெல்லாம் ஆயிரம் கணக்கு தொல்காப்பியரிடம் இருந்தது! இதுவே தொல்காப்பிய நூற்பா வரிசைக்கு அடிப்படை!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (594)

Post by Dr.S.Soundarapandian Wed Mar 02, 2022 11:05 am


தொல்காப்பிய இலக்கணம் (594)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எண்ணும்மை இன்னும் நம்மை விடவில்லை! இப்போது:

உம்மை எண்ணின் உருபுதொகல் வரையார் (இடையியல் 43)

‘உம்மை எண்ணின்’ – எண்ணும்மையின்,
‘உருபு தொகல்’ – வேற்றுமை உருபு மறைந்து வரலை,
‘வரையார்’ – நீக்க மாட்டார்கள்.

தமிழண்ணல் எடுத்துக்காட்டு –
‘யாழும் குழலும் முழவும் இசைத்தனர்’
இதனை, ‘யாழையும் குழலையும் முழவையும் இசைத்தனர்’ என்றுதானே நாம் பொருள் கொள்கிறோம்? அஃதாவது,
யாழையும் = யாழ் +ஐ +உம்; ஐ – வேற்றுமை உருபு; உம் – எண்ணும்மை; ‘யாழும்’ என்பதில், ‘ஐ’ மறைந்து வருவதைக் கவனிக்க. ‘உருபு தொகல் வரையார்’ என்று ஆசிரியர் சொன்னது இதையே. ‘குழலும்’ , ‘முழவும்’ என்பதற்கும் இதனையே கொள்ளவேண்டும்.

யாழும் குழலும் முழவும் இசைத்தனர் √ (ஐ உருபு தொக்கது)
யாழையும் குழலையும் முழவையும் இசைத்தனர் √(ஐ உருபு தொகாதது)

இவற்றின் பின்னே, இடையியலில் , சில புறனடைச் சூத்திரங்களை எழுதுகிறார் தொல்காப்பியர்.
இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

‘உம்’ எனும் இடைச்சொல்லை முன்பே பார்த்தோம்(இடையியல் 7,41,43).
இப்போது புதிதாக என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்:

உம்உந் தாகும் இடனுமார் உண்டே (இடையியல் 44)

‘உம்’ எனும் இடைச்சொல்லானது பாடல்களில் ‘உந்து’ எனத் திரிபு அடைதலும் உண்டு.
அஃதாவது, பாட்டில், ‘உந்து’ என வந்தால், எச்சரிக்கையாக வேண்டும்; அது ‘உம்’மின் திரிபா எனப் பார்க்கவேண்டும் .

பல இடங்களிலும் வரும் ‘உம்’ எல்லாமே, ‘உந்து’ ஆகாது!

சேனாவரையர் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார்; ‘வினைசெயல் மருங்கிற் காலமொடு வருவனவற்றுள் உம்மீறு உந்தாய்த் திரிதலும் உடைத்து ’ என்பதே அது.

காலத்தைக் காட்டி வரக்கூடிய வினைச்சொற்களின் ஈற்றில்தான் ‘உம்’மானது, ‘உந்து’ என ஆகும்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள்-
1 . நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து (புறம்.395:11)
நீர்க்கோழி (waterfowl) கூப்பிடுதலைச் செய்யும் - இதுவே பொருள்.
‘பெயர்க்கும்’ என்பதே பாடலில் ‘பெயர்க்குந்து’ !
‘உம்’ என்பது, ‘உந்து’ ஆகியுள்ளதை நோக்கலாம்.

2 . நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து (புறம். 400:14)
‘மகிழ்தூங்கும்’ என்பதே ‘மகிழ்தூங்குந்து’ ஆகியுள்ளது.
மகிழ்தூங்குந்து = மகிழ்ச்சி மிகும் ( அரசன்) ; ‘உம்’, பெயர் எச்சமாக உள்ளதைக் கவனிக்க.
இங்கும் ‘உம்’ என்பது, ‘உந்து’ ஆகியுள்ளதைக் காணலாம்.
(நார் – பன்னாடை; நறவு- கள்)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (595)

Post by Dr.S.Soundarapandian Thu Mar 03, 2022 2:00 pm

தொல்காப்பிய இலக்கணம் (595)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இதுவரை பார்த்தவற்றின் அடிப்படையில், ‘யானை குதிரை புலிகள் வந்தன ’ என்பதை , எளிதாக, ‘யானையும் குதிரையும் புலிகளும்’ என்று , ‘உம்’மை விரித்துப் பொருள் கொள்வோம்.
இங்கே ஓர் ஐயம்!
மேல் ‘யானை’ முதலான மூன்றும் பெயர்ச்சொற்கள்; இப்படிப் பெயர்ச்சொற்கள் அடுக்கி வந்தால்தான் ‘உம்’மை இடைச்சொல்லைப் போட முடியுமா?
இதற்குத் தொல்கப்பிய விடை:

வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா
நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே (இடையியல் 45)

அஃதாவது, அடுக்கி வரக்கூடிய சொற்கள் வினையெச்சச் சொற்களாக இருந்தாலும், அச் சொற்கள் எண்ணிடைசொல் பெறலாம் என்பது கருத்து.

’உண்டும் தின்றும் பாடியும் வந்தான்’ – இதில், ‘உம்’ எனும் எண்ணிடைச்சொல் பயின்றதைக் காண்கிறோம்.
‘உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான்’- இங்கே ‘என’ என்னும் எண்ணிடைச்சொல் மூன்று சொற்களில் வந்துள்ளதைக் காணலாம்.
‘நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே’ என்பதைக் கொண்டு, வினைமுற்றுகள் அடுக்கி வந்தாலும், பெயரெச்சங்கள் அடுக்கி வந்தாலும் எண்ணிடைச்சொல் இடம்பெறாது என்ற கருத்தைச் சேனாவரையர் வெளிப்படுத்துகிறார்.

இதன்படி,
1 . உண்டானும் தின்றானும் பாடினானும் வந்தான் ×
‘உம்’ என்பது எண்ணிடைச்சொல்தான் என்றாலும், இக் குறிப்பிட்ட தொடரில், ‘உண்டான்’, ‘தின்றான்’, ‘பாடினான்’ எனும் வினைமுற்றுகளின் ஈறுகளில் வந்துள்ளதால் , இது பிழையான தொடர்.

2 . வந்தவே ஆடினவே சினந்தவே குமரன் ×
‘ஏ’ என்பது எண்ணிடைச்சொல்தான் என்றாலும், இத் தொடரில், ‘வந்த’, ‘ஆடின’, ‘சினந்த’ எனும் பெயரெச்சங்களின் ஈறுகளில் வந்துள்ளதால் , இதுவும் பிழையான தொடர்.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (596)

Post by Dr.S.Soundarapandian Fri Mar 04, 2022 9:17 pm


தொல்காப்பிய இலக்கணம் (596)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது, ‘எண்ணிடைச் சொற்கள் பிரிந்து சென்று ஒன்றுதல்’ என்ற கிரியை பற்றிக் கூறலுறுகிறார் தொல்காப்பியர். அக் கிரியை:

என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி
ஒன்றுவழி உடைய எண்ணினுட் பிரிந்தே (இடையியல் 46)

‘என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி’ – ‘என்று’, ‘என’, ‘ஒடு’ ஆகியன ஓரிடத்தில் வந்து,
‘ஒன்றுவழி உடைய எண்ணினுட் பிரிந்தே’ – எண்ணலுறும் எல்லா இடங்களுக்கும் தனித் தனியாகச் சென்று பொருளை நல்கும்.

சேனாவரையரின் காட்டுகள்-
1 . வினைபகை என்றிரண்டின் எச்சம் (குறள் 874)

மேல் அடியில், ‘வினை’ , ‘பகை’ ஆகிய சொற்களின் ஈற்றில் எந்த இடைச்சொல்லும் ஒட்டிநிற்கவில்லை ; அஃதாவது ‘வினையென்று’, ‘பகையென்று’ என் வரவில்லை; ‘வினை பகை’ என்ற இரு சொற்களை அடுத்தே ‘என்று’ எனும் இடைச்சொல் வந்துள்ளது;ஓர் இடத்தில் உள்ள ‘என்று’, வினை, பகை என எண்ணிவரும் இரு சொற்களோடும் சென்று சேர்ந்து, எண்ணிடைச் சொல்லாகப் பணி செய்கிறது.

2 . கண்ணிமை நொடியென (நூன் மரபு 7)

இங்கு, ‘என’ எனும் இடைச்சொல்லானது, மேல் ‘என்று’ செய்த அதே பணியையே , அதே முறையிலேயே செய்யக் காணலாம்.

3 . பொருள் கருவிகாலம் வினையினொடு ஐந்தும் (குறள் 375)

மேல் அடியில், ‘பொருள்’ , ‘கருவி’, ‘காலம்’, ‘வினை’ ஆகிய சொற்களின் ஈற்றில் எந்த இடைச்சொல்லும் சேர்ந்து நிற்கவில்லை ; அஃதாவது ‘பொருளொடு’, ‘கருவியொடு’, ‘காலமொடு’, ‘வினையினொடு’ என வரவில்லை; ‘பொருள் கருவி காலம் வினை’ என்ற நான்கு சொற்களை அடுத்தே ‘ஒடு’ எனும் இடைச்சொல் வந்துள்ளது;ஓர் இடத்தில் உள்ள ‘ஒடு’வானது, பொருள், கருவி, காலம், வினை என எண்ணிவரும் நன்கு சொற்களோடும் சென்று சேர்ந்து, எண்ணிடைச் சொல்லாகப் பணி ஆற்றுகிறது.

இடையியலின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம்.

இதில், இடைச்சொற்களின் பொருள் பற்றிய சில ஐயங்களைக் களைகிறார் தொல்காப்பியர்:

அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென
மெய்பெறக் கிளந்த இயல ஆயினும்
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்
திரிந்துவேறு படினுந் தெரிந்தனர் கொளலே (இடையியல் 47)

இதில் என்ன சொல்கிறார் தொல்காப்பியர்?
‘அப்பா! இதுவரை இன்ன இடைச்சொல்லுக்கு இன்ன பொருள் எனப் பார்த்தீர்கள்;ஆனால் உடன்வரும் சொல் , கருத்துகளால் நாம் பார்த்துள்ளதற்கு மாறுபட்டும் வரும்; பொருள் ஏதுமின்றியும் வரும்; திரிபு அடைந்தும் வரும்; இவற்றை ஆராய்ந்து நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்!’ என்கிறார்!
நல்ல இலக்கண ஆசிரியர் தொல்காப்பியர்!
தமிழ் வளர்ச்சிக்கு இதுதான் தேவை!
எவ்வளவு திறந்த மனத்துடனும் , தன்முனைப்பற்ற பெருந்தன்மையுடனும் தொல்காப்பியர் இருந்துள்ளார்!
இவ் வகையில், தற்கால ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடி யார் என்று கேட்டால், தொல்காப்பியரே எனல்வேண்டும்!

நூற்பாவுக்குச் சேனாவரையர் என்ன எடுத்துக்காட்டுகள் தருகிறார் பார்ப்போம்.

1 . ஓ – ஈற்றசையாக வருதல்

ஏ – ஈற்றசையையே நாம் கண்டோம்; ‘ஓ’வும் ஈற்றசையாக வந்துள்ளதைக் காட்டுபவர் சேனாவரையர்- ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம். 49); இங்கு, ‘ஓ’ , ஈற்றில் வந்துள்ளதைக் காண்கிறோம்.

2 . ஓ – எண்ணுப் பொருளில்

‘ஏ’ , ‘உம்’, ‘எனா’, ‘என்றா’ முதலியவற்றை என்ணிடைச் சொற்களாக நாம் அறிந்தோம்; ஆனால், ‘ஓ’வும் எண்ணிடைச் சொல்லாக வந்துள்ளதைக் காட்டினார் சேனாவரையர் – ‘கலக்கொண்டன கள்ளென்கோ காழ்க்கொண்டன சூடென்கோ’ ; இதில், ‘ஓ’, எண்ணிடைச் சொல்லாதல் தெளிவு.

3 . மா – முன்னிலை அசையாதல்

‘மியா’ , ‘இக’, ‘மோ’, ‘மதி’ முதலியன முன்னிலை அசைச்சொல் ஆதலைப் படித்தோம்;’மா’வும் முன்னிலை அசையாதலைச் சுட்டுகிறார் சேனாவரையர் – ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ (அகம் 273); இதில், ‘மா’ முன்னிலை அசைச் சொல்லாதலைப் பார்க்கிறோம்; தோழியை முன்னிலைப் படுத்தித்தானே கூற்று உள்ளது?

4 . மன் – அசைநிலை ஆதல்
‘மன்’ எனும் இடைச்சொல்லுக்குரிய பொருள்களை நாம் முன்பே (இடையியல் 4) பார்த்தோம்; இங்கே அது , அசைநிலையாக வரும் அழகைச் சேனாவரையர் காட்டுகிறார்- ‘அதுமன் கொண்கன் தேரே’ (கொண்கன் – நெய்தல் நிலத் தலைவன்).
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (597)

Post by Dr.S.Soundarapandian Sat Mar 05, 2022 2:48 pm


தொல்காப்பிய இலக்கணம் (597)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது, இடையியலின் கடைசி நூற்பா! :

கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே (இடையியல் 48)

என்ன கூறுகிறார் கடைசியில்?

நாம் மேலே இதுவரை பார்த்தவை போக , அதே முறையில் பிற இடைச்சொற்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் நாம் பார்த்த அதே வழிச் சென்று உணர்ந்துகொள்வீர்! – இதுவே நூற்பாக் கருத்து.

இந் நூற்பா உரையில், சேனாவரையர் சில இடைச்சொற்களைத் தந்து, ‘இவற்றையெல்லாம் வருமுறை நோக்கி அறிக’ என்று சொல்கிறார்.அவை:

1 . ‘மாள’ இடைச்சொல், அசைநிலையாக
‘சிறிது தவிர்ந்தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார்’ – இங்கு ‘மாள’ , வெறும் அசைநிலையாகவே வந்துள்ளதைக் காண்கிறோம்.

2 . ‘தெய்ய’இடைச்சொல், அசைநிலையாக
‘சொல்லென் தெய்ய நின்னொடு பெயர்ந்தே’ - இங்கும் ‘தெய்ய’ அசையாகவே பயிலுகிறது.

3 . ‘என’ இடைச்சொல், அசைநிலையாக
‘அறிவார் யாரஃ திறுவழி யிறுகென’- இவண் ‘என’வென் இடைச்சொல்லானது அசைநிலையாக வந்துள்ளது.

4 . ‘ஆம்’ இடைச்சொல், அசைநிலையாக
‘பணியுமாம் என்றும் பெருமை’ (குறள் 978)- இதில், ‘ஆம்’ இடைச்சொல்லானது, அசையாகவே வந்து இன்பம் பயக்கிறது.

5 . ‘ஆல்’ இடைச்சொல் அசைநிலையாக
‘ஈங்கா யினவா லென்றிசின் யானே’ (நற்.55) ; ‘ஈங்காயின’என்பதே கூறவந்த கருத்து; செய்யுள் இன்பத்திற்காக ‘ஆல்’ சேர்க்கப்பட்டு ‘ஈங்காயினவால்’ எழுதப்பட்டுள்ளது.

6 . ‘தொறு’ இடைச்சொல் , பொருள் உணர்த்தல்
‘தொறு ’ இடைசொல்லைப் பொறுத்தவரை, மயிலைநாதர் உரையை நான் இங்கு தரவேண்டும் – “தான் புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பனபட நிற்கும் ஓரிடைச்சொல்” . நவிறொறும் நூணயம் போலும்(குறள் 783).
மயிலைநாதருக்கு முன்பு இதே கருத்தை எழுதியவர் சேனாவரையர் – “குன்றுதோ றாடலு நின்றதன் பண்பே” (திருமுருகா. 217). ‘தொறு’ வே, ‘தோறு’வாக ஆதிநீழலாக வந்துள்ளது.

’தொறு’ , இங்கே அசைநிலை அல்ல என்பதைக் கவனிக்க.

இவற்றின் பின்னே சேனாவரையர் வரைந்துள்ளது அய்வுக் களம் அமைப்பது - “ ஆனம் , ஏனம்,ஓனம் என்பன எழுத்துச் சாரியை”.

எழுத்துச் சாரியை என்றால் என்ன?

‘அ’ வை, ‘அகரம்’ என்று சுட்டுகிறோம்; இங்கே வந்த ‘கரம்’தான் எழுத்துச் சாரியை.

எழுத்தை உச்சரித்துச் சொல்வதற்குப் பயன்படும் சாரியை எழுத்துச் சாரியை; இத் தொடரில் முன்பே இதுபற்றிப் பார்த்துவிட்டோம்.

இப்போது , ஆனம்,ஏனம்,ஓனம்!
1 . ஆனம்
‘ஆனம்’ எங்ஙனம் எழுத்துச் சாரியையாக வரும் என ஒருவரும் காட்டவில்லை.
தி.வே.கோபாலையர்,ந.அரணமுறுவல் பதிப்பான சொல்லதிகார நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பில்(தமிழ்மண் பதிப்பகம்,முதற் பதிப்பு 2003, ப. 255), ‘ஆனம்(தேவாரம் 6537)’ எனக் குறிக்கப்பட்டுள்ளது.
அத் தேவாரப் பாடல் அடி – “ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்” என்பதாகும் (அப்பரின் திருவாரூர்த் திருத்தாண்டகம், பாடல் 5).
ஆனால் , இத் தேவாரத்தில் வந்த ‘ஆனம்’ என்பதைச் சைவ நூற்கள் ‘ஆன்+ அம்’ எனப் பிரித்து, ஆன்= எருது என்றே பொருள் கூறுகின்றன. எழுத்துச் சாரியை பற்றி எதுவும் கூறவில்லை. ‘முன்னெழுத்தாய்’ என்பதற்கும் ‘எழுத்துக்களுக்கு முதலாகிய அகரம் போன்றாய்’ என்றே பொருள் எழுதப்படுகிறது.
ஆகவே, எழுத்துச் சாரியையான ‘ஆனம்’ என்பதற்கும் தேவாரப் பாடலுக்கும் தொடர்பு இல்லை எனத் தெரிகிறது.
இதுபற்றிச் சிந்திக்கையில், ‘ஐயானம்’ என ‘ஐ’ எனும் எழுத்தை, ‘ஆனம்’ எனும் எழுத்துச் சரியையுடன் கூறியிருக்கலாமா? – எனக் கருத இடம் ஏற்படுகிறது.
ஐ + ய் + ஆனம் = ஐயானம்; ய் – இன எழுத்துச் சந்தி; ஆனம் – எழுத்துச் சாரியை. ‘ஐகாரம்’ என்பதுபோல , ‘ஐயானம்’ எனவும் ஒருபகுதித் தமிழகத்தில் வழங்கியிருக்கலாமா?

2 . ஏனம்

‘அஃகேனம்’ என்பதிலிருந்து, ‘அக்கேனம்’ வந்தது எனவும், இது ஆய்த (ஃ) எழுத்தைக் குறிக்கும் என்றும் லெக்சிகன் () தெரிவிக்கிறது; இங்கு வந்த ‘ஏனம்’தான் எழுத்துச் சரியை.
‘அக்கன்னா’ , ‘அஃகேனம்’, ‘அக்கேனம்’ – மூன்றும் ஆய்த எழுத்தையே சுட்டும்.

3 . ஓனம்

‘ஔ’வைக் குறிக்க , ‘ஓனம்’ எனும் எழுத்துச் சாரியையைப் பயன்படுத்தி, ‘ஔவோனம்’ என்று கூறியிருக்கலாமா?
ஔ + வ்+ ஓனம் = ஔவோனம்; ‘ஔவன்னா’ என்பதன் ஒலிக்கு அருகில் ‘ஔவோனம்’ உள்ளதைக் காண்கிறோம்.

மேல் நூற்பாவுக்கு நச்சர் மேலும் சில இடைச்சொற்களை எடுத்துக்காட்டுகளாகச் சேர்த்துத் தருகிறார்:

1. என – விரைவு உணர்த்தும் இடைச்சொல்
பொள்ளென, பொம்மென, கதுமென – என்பனவற்றை நச்சர் காட்டுகிறார்.

2. என – பெருக்கக் குறிப்பு இடைச்சொல்
“ கொம்மென என்பது பெருக்கம் என்னுங் குறிப்பு உணர்த்திற்று” என்பது நச்சர் தொடர். இற்றை நாளில் ‘கொம்மென’ என்று கூறும் ,எழுதும் பழக்கம் இல்லை. இதுபோன்ற இடங்கள் எல்லாம் தமிழின் தொன்மையை நமக்குத் தெரிவிப்பன.

3 . எ – வினாப் பொருள் இடைச்சொல்
‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும்’ (குறள் 355) என நச்சர் காட்டும் அடியில், ‘எ’ , வினாப் பொருளில் நிற்கிறது.

4 . அ, இ, உ, எ – இடப்பொருள் தரும் இடைச்சொற்கள்
அங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘அ’
ஆங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘ஆ’
இங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘இ’
ஈங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘ஈ’
உங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘உ’
ஊங்கு – இடப்பொருள் சுட்டும் இடைச்சொல், ‘ஊ’

இத்துடன் இடையியல் முடிவுறுகிறது.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (598)

Post by Dr.S.Soundarapandian Wed Mar 09, 2022 12:50 pm

தொல்காப்பிய இலக்கணம் (598)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இடையியலை அடுத்து நாம் பார்க்கப்போவது, உரியியல்!

உரியியலை இப்படி அமைக்கிறார் தொல்காப்பியர்:
1 . உரிச்சொல்லின் பொது இலக்கணம் … (நூ.1) …… 1
2 .கூறவுள்ள உரிச்சொற்களின் வகை (நூ.2)…… 1
3. உரிச்சொற்களின் பொருள் … (நூ.3-92)……90
4 . தொடரில், உரிச்சொல் பிற சொற்களுடன்
ஒத்திசைவு … (நூ.93-99)……7
5 . புறனடை … (நூ.100) …… 1
…………………
100
………………….

முதலாம் நூற்பாவில், உரிச்சொல்லின் இயல்புகளைக் கூறி, உரிச்சொல் இன்னது என நிலைப்படுத்துகிறார் தொல்காப்பியர்:

உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்
பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் (உரியியல் 1)

‘உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை’ – உரிச்சொல்லை விளக்கும் போது,
‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி’ – ஓசை கொண்டும், குறிப்பு கொண்டும், பண்பு கொண்டும் உருவாகி,
‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’ – பெயர்ச்சொல்லோடும் , வினைச்சொல்லோடும் தான் சேர்வதாகிய தடுமாற்றம் அடையும் சொல்லானடு,
‘ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்’ – ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் காணப்பட்டாலும்,
‘பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்’ – பல சொற்கள் ஒரே ஒரு பொருளுக்கு ஆகி வந்தாலும்,
‘பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தி’ – பயிற்சி இல்லாதவற்றைப், பயிற்சி உள்ள பிற சொற்களோடு தொடர்புபடுத்தி,
‘தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்’ – தத்தமக்கு உரிய முறைமையாற் சென்று நிற்கும் இடங்களால்,
‘எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’- எப்படிப்பட்ட சொல்லாக இருப்பினும் அதற்கு வேறு பொருளைக் கொள்க.
விளக்கத்தை நிரலே காண்போம்.
1. ‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்’
இசை – ஓசை
‘கம்பலை மூதூர்’ – இதில், ‘கம்பலை’ உரிச்சொல்;கம்பலை – அரவம்; ‘கம்பலை’ , ஓசைக்காகத் தோன்றிய சொல். ‘உரிச்சொல்’ என்ற தனிவகைச் சொல் உருவானதற்கான காரணங்களில் ‘இசை’யும் ஒன்று.

குறிப்பு – மனக் குறிப்பு ; மனத்தில் தோன்றும் எண்ணம் ; சொல்லைச் சொல்பவன் என்ன நினைக்கிறானோ அது.

‘உறுபுகழ்’ – இதில் உள்ள ‘உறு’ , உரிச்சொல்’; உறு – மிகுதி; இந்த ‘மிகுதி’யைக் காட்டுங்கள் என்றால் காட்ட முடியாது! சொல்வான் மனத்தில் புகழின் அளவு, மற்றவர் மனங்களில் உள்ள புகழின் அளவு ஆகியவற்றைக் குறிப்பால் தெரிவிப்பது எது? ‘உறு’ என்ற உரிச்சொல்!

பண்பு – புலன்களால் உணரத்தக்கது
‘குருமணி’ – இதில் உள்ள ‘குரு’வானது, மணியின் நிறத்திற்கு அடையாக (Adjective) நிற்கிறது. அந்த நிறத்தை, நாம் சிவப்பு என்றோ, கறுப்பு என்றோ கூற முடியும்; அந் நிறத்தைக் கண் எனும் புலனால் (பொறியால்)பார்க்கவும் முடியும்; பிறருக்குக் காட்டவும் முடியும். உரிச்சொல் தோன்றும் முறைகளில் இதுவும் ஒன்று.

2 . ‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’

உரிச்சொல்லானது, பெயரோடு சேர்ந்துவரும் ;அல்லது, வினையோடு சேர்ந்துவரும்; அல்லது பெயர்ச்சொல்லுக்கு உறுப்பாய் வரும் ; அல்லது வினைச்சொல்லுக்கு உறுப்பாய் வரும்.
மெய் – உரு ; உருபு;வடிவம் ; அஃதாவது உரிச்சொல்.
தெய்வச்சிலையார் எடுத்துக்காட்டுகள் இதனை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன-

உறுவளி – இங்கு, ‘உறு’ எனும் உரிச்சொல்லானது, ‘வளி’ எனும் பெயர்ச்சொல்லை அடுத்து வந்துள்ளது. வளி - காற்று
உறக்கொண்டான் – இங்கு, ‘உறு’ எனும் உரிச்சொல்லானது, ‘கொண்டான்’ எனும் வினைச்சொல்லை அடுத்து வந்துள்ளது.
உறுவன் – இங்கு, ‘உறு’ எனும் உரிச்சொல்லானது, ‘அன்’ ஈற்றுப் பெயர்ச்சொல்லுக்கு உறுப்பாக வந்துள்ளது.
உற்றான் – இங்கு, ‘உறு’ எனும் உரிச்சொல்லானது, ‘ஆன்’ எனும் வினைசொல்லுக்கு உறுப்பய் வந்துள்ளது.

தடுமாற்றம் இல்லாமல் பாருங்கள், உரிச்சொல்லின் இடம் தடுமாற்றம் கொள்வதைக் காணலாம்!
3 . ‘ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்’
ஒரு சொல் – ஓர் உரிச்சொல்
‘கடி’ என்ற ஓர் உரிச்சொல்லை எடுத்துக்கொள்வோம்; இது தரும் பொருளை நல்கும் பல சொற்கள் – நன்கு அறியப்பட்ட சொற்கள்: காவல்,நீக்கு, புதுமை, பயம், கூர்மை
,விளக்கம். ஓர் உரிச்சொல்லானது, பல பொருட்கு உரிமையாதல் என்பது இதுதான். உரிச்சொல்லின் இயல்புகளில் இதுவும் ஒன்று.

4. ‘பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்’ -
பல சொல் – பல உரிச்சொற்கள்
உறு , தவ,நனி,கூர்,கழி – ஆகிய உரிச்சொற்களை எடுத்துக்கொள்வோம்; இவை அனைத்துக்குமே பொருள் ‘மிகுதி’ என்ற் ஒன்றுதான்.
ஒரே பொருளுக்குப் பல உரிச்சொற்கள் உரிமை கொள்வதைக் காண்கிறோம்.

இப்படிப் பொருள் உரிமை கொள்வதால் ‘உரிச்சொல்’ என்று பெயராயிற்று!

5 . ‘பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தி’
பயிலாதவை = பொருள் அறியப்படாத உரிச்சொற்கள்
பயின்றவை = பொருள் அறியப்பட்ட சொற்கள்
சார்த்தி = ஒப்பிட்டு

‘பொருள் அறியப்படாத உரிச்சொல் ஒன்றை எடுத்துக்கொண்டு, பொருள் அறியப்பட்ட அதே உருவுள்ள (வடிவுள்ள) இன்னொரு சொல் ஒன்றோடு ஒப்பிட்டு’ என்பது பொருள்.

ஆதித்தர் உரையிற் காணப்படும் ஒப்பீட்டுச் சொற்களை இங்கு வருமாறு விளக்கலாம்:

‘கருவி’ என்ற சொல்லுக்கு ‘ஆயுதம்’ என்பது பொருள்; இதுவே ‘அறியப்பட்ட பொருள்’; இங்கே ‘கருவி’ பெயர்ச்சொல். ஆனால் இதனினும் வேறான ‘தொகுதி’ என்ற பொருளிலும் இது ஆளப்படும்போதுதான், இஃது ‘உரிச்சொல்’ ஆகிறது.

‘மாதர்’ எனும் சொல்லுக்குப் ‘பெண்’ என்பது பொருள்; இது ‘அறியப்பட்ட பொருள்’; இங்கு ‘மாதர்’ பெயர்ச்சொல். ஆயின் இதனினும் வேறான ‘காதல்’ எனும் பொருளிலும் இதே சொல் பயிலுகிறது தமிழில்; இந்த நிலையில்தான் இதனை ‘உரிச்சொல்’ என்கிறோம்.

“சரி! இருக்கட்டுமே! ஒரு பெயர்ச்சொல்லுக்குப் பல பொருட்கள் இருக்கலாமே? அப்படி ‘மற்றொரு பெயர்ச்சொல்’ என்று சொல்லாமல் ஏன் ‘உரிச்சொல்’ எனச் சொல்லவேண்டும்?”
நல்ல வினா!
‘மற்றொரு பெயர்ச்சொல்’ என்று ஒதுக்க முடியாததற்குக் காரணங்கள்தாம், மேல் நூற்பாவில் நாம் பார்த்தவை! அஃதாவது, பெயருக்கும் அடையாதல், வினைக்கும் அடையாதல், பெயருக்கும் உறுப்பாதல், வினைக்கும் உறுப்பாதல், பெயரின் உள் உறுப்பாதல், வினையின் உள் உறுப்பாதல், வேர்ச்சொல் அறியப்படாமை,பெரும்பாலும் செய்யுளில் மட்டும் பயிலுதல் முதலிய வலுவான காரணங்களால் ‘உரிச்சொல்’ என்ற பிரிவை ஏற்படுத்தும் நிலையைச் சொன்னது தமிழின் அமைப்புதானே அல்லாமல் வேறில்லை!
6 . ‘ தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்’
உரிச்சொல்லின் பொது மரபுக்கு ஏற்பத், அது சென்று அமரப்போகும் இடத்தைக் கருத்திற் கொண்டு,

7 . ‘எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’
முன்பு ஒப்பிட்ட அப் பிற சொல்லின் பொருள் அல்லாத வேறு பொருளைக் கொள்ளவேண்டும்.

தொல்காப்பியர் நவின்ற உரிச்சொல் இயல்புகளில், ‘செய்யுளுக்கு உரிமை பூண்டதால் உரிச்சொல்’ என்பது போன்ற இலக்கணம் இல்லை.
ஆனால், நன்னூலில், ‘செய்யுட் குரியன உரிச்சொல்’ (442) என்ற விதி காணப்படுகிறது. மாணவர்களுக்கு விளங்குவதற்காகப் ,பெரும்பான்மை பற்றி இப்படிக் கூறினார் போலும்.
உரிச்சொல்லுக்குக் ‘குறைச்சொல்’ என்ற பெயரும் உளது.
இங்கு, ஆ. சிவலிங்கனார் கருத்து காணத் தக்கது – “பெயரிலும் வினையிலும் சேராக் குறைபாடு அவற்றுக்கு உண்டு. எனவேதான் உரிச்சொல் , குறைச்சொல் எனப்பட்டது.”
தொல்காப்பியக் குற்றுயலுகரப் புணரியல் நூற்பா77இல், ‘நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி’ என்றது இங்கு சுட்டத் தக்கது.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty தொல்காப்பிய இலக்கணம் (599)

Post by Dr.S.Soundarapandian Thu Mar 10, 2022 12:29 pm

தொல்காப்பிய இலக்கணம் (599)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உரியியலில் நாம் காணும் இரண்டாம் நூற்பா:

வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (உரியியல் 2)

தொல்காப்பியர் , இந்த நூற்பாவின் பின்னே பல உரிச்சொற்களுக்குப் பொருள் எழுதப் போகிறார்; அப்படி எழுதுமுன், ‘நான் எல்லோருக்கும் தெரிந்த உரிச்சொற்களுக்குப் பொருள் எழுதப்போவதில்லை; எல்லோருக்கும் அரிதான உரிச்சொற்களுக்கே பொருள் எழுதவுள்ளேன்” என்று ஒரு சிறு முன்னுரையே இந்த நூற்பா!
தொல்காப்பியக் கட்டமைப்பு என்பது எண்ணி மகிழத் தக்கது!
‘வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா’ – வெளிப்பட்டு நிற்கும் உரிச்சொற்களையே மீண்டும் சொல்லவேண்டாம்;
‘வெளிப்பட வாரா உரிச்சொல் மேன’ - வெளிப்படையாகத் தெரியவராத உரிச்சொற்களைப் பற்றியே கூறப்படும்.
‘மேல’ என்பதே ‘மேன’ என்று வந்ததாகக் காட்டுபவர் சேனாவரையர்.
மேல,மேன – குறிப்பு வினைமுற்றுகள் (Appellative Finite Verbs)

வெளிப்பட வந்த உரிச்சொற்கள் யாவை?

தெய்வச்சிலையார் கூறுகிறார் – “வெளிப்படு சொல்லாவன, உண்டல் என்பதற்கு அயிறல், மிசைதல் எனவும், உறங்குதல் என்பதற்குத் துஞ்சல் எனவும், இணைவிழைச்சு என்பதற்குப் புணர்தல், கலத்தல், கூடல் எனவும், அச்சம் என்பதற்கு வெரூஉதல் எனவும் இவ்வாறு வருவன.”

ஆதித்தர் சில வெளிப்படையான உரிச்சொற்களைக் கூறுகிறார்; அவற்றைப் பட்டியலாக வருமாறு விளக்கத்துடன் தரலாம்:

1 . புலி அறப்பசித்தும் புல் தின்னாது - இங்கு உரிச்சொல், ‘அற’; அற – முற்றும்
2 . அவள் இறை நாணி நின்றாள் – இங்கு உரிச்சொல்,’இறை’; இறை – சிறிது
3 . துவரப் பசித்தாலும் – இங்கு உரிச்சொல், ‘துவர’; துவர – முற்றும்
5 . வான்கோழி – இங்கு உரிச்சொல், ‘வான்’; வான் - பெரிய
6 . வால்எயிறு – இங்கு உரிச்சொல், ‘வால்’; வால்- வெண்ணிற
7 . கோடித் துணி – இங்கு உரிச்சொல், ‘கோடி’; கோடி- புதிய
8 . மட அன்னம் – இங்கு உரிச்சொல், ‘மட’; மட- இளமை
9 . ஆற்றவும் கற்றார் – இங்கு உரிச்சொல், ‘ஆற்ற’; ஆற்ற - முற்றும்
10 . படுகுழி – இங்கு உரிச்சொல், ‘படு’; படு- பெரிய

வாருங்கள், அடுத்த நூற்பாவில் தொல்காப்பியர் கூறப்போகும் உரிச்சொற்களைப் பார்ப்போம்!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Empty Re: தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை