Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
+11
poovizhi
கண்ணன்
சிவா
பிரபாகரன் ஒற்றன்
kram
Dr.S.Soundarapandian
heezulia
T.N.Balasubramanian
aeroboy2000
தமிழ்நேசன்1981
ரா.ரமேஷ்குமார்
15 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 1 of 19
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
"வீரயுக நாயகன் வேள் பாரி"
ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை) ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...
"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..
ஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்
முன்னுரை
இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.
மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.
வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்
வீரயுக நாயகன் வேள் பாரி - 1
குலப்பாடல்
மூக்கை விடைத்தபடி பாய்ந்துகொண்டிருந்தன குதிரைகள். மேடு பள்ளமற்ற பாதை இன்னும் விரைந்து, `வா...’ என்று தேரோட்டியை அழைத்தது. தேரை ஓட்டும் ஆதன், குதிரையின் கடிவாளத்தைச் சுண்டியபடி வேகத்தை மேலும் அதிகப்படுத்தினான்.
அதிகாலையில் இருள் கலையத் தொடங்கியபோது இவர்கள் புறப்பட்டனர். அறுக நாட்டை ஆளும் சிறுகுடி மன்னன் செம்பனின் தென்திசை மாளிகை அது. அங்குதான் நேற்றிரவுத் தங்கல். அதுவரை தேரை ஓட்டிவந்தவன் நாகு.
“இனி அடர் காட்டுப்பகுதியில் பயணம் இருக்கும். இந்த நிலப்பாதையை நன்கு அறிந்த தேரோட்டி இவன். இவனது பெயர் ஆதன். நாளை இவன்தான் உங்களை அழைத்துச் செல்வான்” என்று கூறி வணங்கி விடைபெற்றான்.
புறப்படும்போது, நாகுவிடம் ஆதன் கேட்டான், ‘‘இவர் யார்... மன்னரின் சுற்றத்தாரா?”
“இல்லை... ‘இவரின் அடிமை நான்!’ என்று மன்னர் என்னிடம் கூறினார்.”
பதில் கேட்டு ஆதன் நடுக்குற்றான். சற்று நிதானித்து, “அப்படியென்றால் ஏன் தனியாக வந்திருக்கிறார். உடன் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லையா?”
“பெரும் படையே புறப்பட்டது” என்று சொன்ன நாகு, சற்றுக் குரல் தாழ்த்தி, “முதலில் தேரை ஓட்ட, வளவனின் இருக்கையில் ஏறி அமர்ந்ததே மன்னர்தான். இவர் ஒற்றைச் சொல்தான் சொன்னார்.
எல்லோரும் நின்றுகொண்டார்கள். நான் மட்டும் அவரை அழைத்துக்கொண்டுவந்தேன்” - சொல்லிவிட்டு புறப்படத் தயாராகும்போது, ஆதன் மீண்டும் கேட்டான்...
“மன்னர்களை ஆளும் இந்தத் தெய்வத்துக்குத் தனித்த பெயர் எதுவும் இருக்கிறதா?”
“பெரும்புலவர் கபிலர்.”
ஆதன் இரவு முழுவதும் தூங்கவில்லை. பதற்றத்திலேயே இருந்தான். பொழுது விடிந்தது. தூக்கமின்மையைக் காட்டிக்கொள்ளாமல், உற்சாகமாகக் குதிரையைப் பூட்டி தேரைத் தயார்செய்தான். மாளிகையில் இருந்து கபிலர் வெளியேறி வந்தார். நரை முழுமைகொள்ளாத தாடி, வேந்தனைப்போல தலைமுடியை உச்சியில் முடிச்சிட்டு, சிறுகோள் ஒன்றைச் செருகியிருந்தார். பேரறிவின் இறுமாப்பு கண்ணொளியில் மின்னியது. பார்த்ததும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான் ஆதன்.
அவரது வாழ்த்துச்சொல் காதில் கேட்க எழுந்து திரும்பியபோது, அவர் குதிரையின் கழுத்தைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தார். குதிரைகள் புதிய மனிதர்களைத் தொடவிடாது. ஆனாலும் தேரில் பூட்டப்பட்டிருந்ததால், ஓர் அளவுக்கு மேல் அதனால் விலகவோ, முகத்தைத் திருப்பவோ முடியவில்லை.
“மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது” என்று சொன்னவர், சிரித்த முகத்தோடு தேரில் ஏறினார்.
ஆதன், மிகத் திறமையான தேரோட்டி. பயணத்தின் அதிர்வு பசுந்தூள் மெத்தையைக் கடந்து உடலில் உணர முடியாதபடி, தேரைச் செலுத்துவான். அவன் நினைத்ததைவிட வேகமாகவே வேட்டுவன் பாறைக்கு வந்துவிட்டான். அருகில் வந்ததும் வேகத்தைக் குறைக்க, கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். கடிவாளத்தில் இருக்கும் பூண் எழுப்பிய உலோக ஒலி தனித்து மேலெழும்பியது.
தலைதூக்கிப் பார்த்தார் கபிலர். எதிரில் இரு சிறுகுன்றுகள். அதற்குப் பின்னால் அடுக்கடுக்காக மலைத்தொடர்கள். அதன் உச்சி, வெண்மேகத்துக்குள் மறைந்திருந்தது. மேலெழும்பிய உலோக ஒலி, மலையோடு மறைந்தது.
“அய்யா... இதுதான் பச்சை மலைத்தொடரின் முன்னால் இருக்கும் வேட்டுவன் பாறை. இந்த வழியாகத்தான் பாரியின் பறம்பு மலைக்குப் போக வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.”
கபிலர் வண்டியைவிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தார். கண்ணுக்கெட்டும் தூரம் வரை மலை விரிந்துகிடந்தது. நீர் வற்றிய காட்டாற்றைக் கடந்து வேட்டுவன் பாறையில் பாதி ஏறுவது வரை, ஆதன் நின்று பார்த்துக்கொண்டே இருந்தான்.
“இதற்கு முன்னால் பறம்பு நாட்டுக்குப் போனது கிடையாது. பாதை எவ்வளவு தூரம் இருக்கும். துணைக்கு யாராவது வருவார்களா? போய்ச் சேர எத்தனை நாளாகும் என எதுவும் தெரியாது. தன்னந்தனியாக எந்தத் தைரியத்தில் இந்த அடர்வனத்துக்குள் இவர் போய்க் கொண்டிருக்கிறார்?” - ஆதனுக்கு வியப்பு குறையவே இல்லை. வேறு வழியின்றி அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான்.
உச்சிவெயிலிலும் ஈரக்காற்று வீசியது. குன்றின் சரிவில் போய்க்கொண்டிருந்த பாதை சற்றே வளைந்து மேல் நோக்கி ஏறியது. பாறையில் இருந்து சரிந்துகிடக்கும் வேர்கள், கைபிடிக்க வாகாக இருந்தன. கபிலர் வேரை இறுகப் பிடித்து விசைகொடுத்து மேலேறியபோது, தனக்கு வயதாகிவிட்டதை உணர்ந்தார். உடல் வேர்த்தது, மூச்சுவாங்கியது, நடையின் வேகத்தைச் சற்றே குறைக்கலாமா என்று யோசிக்கையில், கால்கள் நின்றுகொண்டுதான் இருந்தன. சிறிது இளைப்பாரி மீண்டும் நடந்தார்.
இடப்புறம் கீழே நீர் வற்றிக்கிடக்கும் காட்டாற்றின் அழகைப் பார்த்தபடி, ஒற்றையடிப் பாதையை நோக்கி கண்களைத் திருப்பினார். செடிகளுக்கு இடையில் ஏதோ உருவம் தெரிகிறதே என்பதை உணர்ந்தவர், மீண்டும் கீழே உற்றுப்பார்த்தார். இவர் நடக்கும் பாதையை நோக்கி ஓர் இளைஞன் கையில் வேல் கம்போடு சரசரவென மேலேறி வந்தான்.
கபிலருக்கு அவனது உருவம் பதியவில்லை... அவன் வந்த வேகம்தான் பதிந்தது. மேலே ஏறியவன் கபிலரைக் கடந்து முன்னால் போய்க்கொண்டிருந்தான். நின்று பேச அவனுக்குப் பொழுது இல்லை. நடந்துகொண்டே கேட்டான்.
“நீங்கள் யார் எனத் தெரிந்துகொள்ளலாமா?”
கபிலர், கண்ணிமைத்து அவனைப் பார்த்தார். பதில் சொல்லுவதற்குள் மறைந்துவிடுவானோ என்று தோன்றியது. குரல் உயர்த்திச் சொன்னார்.
“கபிலர்.”
“நான் பெயரைக் கேட்கவில்லை. யார் எனக் கேட்டேன்?”
எதிர்காற்றில் சற்றே தடுமாறினார் கபிலர். தடுமாற்றத்துக்குக் காற்று காரணம் அல்ல என்பதை, அவரது மனம் சொல்லியது.
“நான் புலவன்.”
“பாணர் குலமா?” - கேட்டபடி நடந்து போய்க்கொண்டே இருந்தான். அவனைப் பார்ப்பது, பாதையில் கவனம்கொள்வது, பதில் சொல்வது என்ற மூன்று வேலைகளை கபிலர் செய்யவேண்டி இருந்தது.
“இல்லை... பாணர்கள் பாடல் பாடுபவர்கள். இசைஞர்கள், கலைஞர்கள். நான் அவர்கள் இல்லை. நான் புலவன்; எழுதக் கற்றவன்.”
பதில் சொல்லி முடிக்கும்போது, கேள்வி வந்தது...
“எழுத்து என்றால்..?”
மலையேறும் ஒரு பாதையில், இவ்வளவு தூர இடைவெளியில் ஓர் உரையாடலா?
உரத்தக் குரலில் பதில் சொல்வதற்கு மூச்சுக்காற்று ஒத்துழைக்க மறுத்தது. ஆனாலும் கபிலர் உரத்தே சொன்னார்...
``மரத்தை ஓவியமாக வரைந்து பார்த்திருக்கிறாயா?”
“பார்த்திருக்கிறேன்... குகைப் பாறையில் நிறைய மரங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன.”
“அதேபோல, நாம் பேசும் ஒலியை ஓவியமாக வரைவதுதான் எழுத்து” - அவனது நடையின் வேகம் கொஞ்சம் குறைந்தது. யோசிக்கிறான் என்று புரிந்தது. அவனைக் கொஞ்சம் உள்ளிழுக்க முடியும் என்ற நம்பிக்கை கபிலருக்கு வந்தது.
“உனது பெயர் என்ன?”
“நீலன்.”
“இங்கே வா... வரைந்து காட்டுகிறேன்” என்று சொன்ன கபிலர், கீழே கிடந்த காய்ந்த குச்சியைக் குனிந்து எடுத்தார். அவன் சட்டென அருகில் வந்தான். அதைக் கவனித்தபடியே, குச்சியால் கீறி அவனது பெயரை மண்ணில் எழுதினார்.
அதைப் பார்த்ததும் உதட்டோரத்தில் ஓர் இளஞ்சிரிப்பு. மீண்டும் நடக்கத் தொடங்கியவன், “நான் என்ன யானையின் சாணத்தில் செரிக்காமல் கிடக்கும் ஈக்கியைப்போலவா இருக்கிறேன்?”
“இல்லை... விரைவில் நடக்கும்” - சற்று இடைவெளிவிட்டுச் சொன்னான், “என்னவளைத்தான் பார்த்துவிட்டு வருகிறேன்.”
“எங்கே இருக்கிறாள்?”
“அதோ... அந்த மலையின் பின்புறம் இருக்கிறது அவளது குடில்.”
“அந்த மலைக்குப் பின்புறமா?’’ - ஓசையின் நீளமே உணர்வைச் சொன்னது.
“நாள்தோறும் இவ்வளவு தூரம் போய் வருவாயா?”
“நாளும் இருமுறை போய் வருவேன். சில நாட்களில் இருமுறை இங்கு வந்து செல்வேன்.”
கபிலருக்கு அவன் மீதான ஈர்ப்பு இன்னும் கூடியது. ஓர் ஊஞ்சலைப்போல இரு குன்றுகளுக்கும் இடையில் தினமும் ஆடுகிறவன் என்று, மனதில் ஒரு சித்திரம் உருவாகிக்கொண்டிருக்கையில், கேள்வியை அவன் தொடுத்தான்.
“பெண்ணின் இதழ் இவ்வளவு சுவையேறி இருக்கிறதே, எப்படி?”
அந்த இளஞ்சிரிப்பு கபிலரின் உதட்டோரத்தில் வந்து உட்கார்ந்தது. ஊஞ்சலில் தன்னையும் ஏற்ற நினைக்கிறான். சரி... அவனது வேகத்தைக் குறைத்தால் போதும் என நினைத்தவர், பதில் சொல்லும் முன் அடுத்த கேள்வியை அவனே கேட்டான்.
“உங்களுக்கு மணமாகிவிட்டதா?”
“இல்லை.”
“அப்படியென்றால் நான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது அல்லவா?”
ஏதாவது ஓர் இடத்தில் நின்றால்தானே பதில் சொல்வதற்கு, கணப்பொழுதில் மூன்று கொப்பு தாவுகிறான். இவனை எப்படி அடைத்து நிறுத்துவது என யோசித்த கபிலர், “உனக்கும்தான் மணமாகவில்லை” என்றார்.
“நான் வீரன்.”
கபிலர் திகைத்துப்போனார். இவன் என்னை என்ன சொல்ல வருகிறான் என யோசிக்கையில் அவன் பதிலைத் தொடர்ந்தான்...
“எப்போது போர் மூளும் எனத் தெரியாது. பறம்பு நாட்டுக்குச் சூழவும் எதிரிகள். போர்க்களத்தில் நான் சாயும்போது எனது ஈட்டியை இறுகப் பற்றி முன்னேற, என் மகன் வந்து நிற்கவேண்டும்.
வீரர்களின் வாழ்வு மிகக் குறுகியது, நிதானமாக வாழ்ந்து, எழுத்துக்கள் எல்லாம் கற்று, நாடுதோறும் பயணம்போய், ஒரு காத தூரத்தை மூன்று நாழிகை நடந்து கடக்க எங்களுக்கு அவகாசம் இல்லை புலவரே!”
ஊஞ்சல் அறுபட்டு தான் மட்டும் விழுவதுபோல் உணர்ந்தார் கபிலர்.
ட்டுவன் பாறையின் இரண்டாவது குன்றில் கால் பதிக்கும் வரை, கபிலர் அவனிடம் பேச்சுக் கொடுக்க வில்லை. அவனைப் பற்றிய ஒரு கணிப்பை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. எதை உருவாக்கினாலும் அடுத்த கணமே அதைக் குழைத்துவிடுகிறான். அவன் கையில் வைத்திருக்கும் வேல்முனையைவிடக் கூர்மையானதாக இருக்கிறது அவன் அளிக்கும் பதில்கள். அவனைக் கணிக்க முடியவில்லை என்பதை மனம் ஏற்கவில்லை. ஆனால், ஒன்று புரிந்தது. அவனது நடைவேகத்துக்கு எங்கோ போயிருக்க வேண்டும். அவ்வாறு போகாததில் இருந்து, அவன் தன்னை அழைத்துக்கொண்டு போகிறான் என ஊகித்தார் கபிலர்.
சிறிது நேரத்துக்குப் பின்னர் மெளனம் கலைத்துப் பேசத் தொடங்கினார், “பாரியின் பறம்பு மலை எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
“இந்த நாட்டின் பெயர்தான் பறம்புநாடு; பாரி இருக்கும் மலையின் பெயர் ஆதிமலை. அந்த மலையில்தான் வேளீர் குலத்தைத் தோற்றுவித்த மாவீரன் `எவ்வி’, தலைநகரை உருவாக்கினான்.”
நிலப்பகுதிக்கு வந்து பாணர்கள் பாடிய பாடல்களில் இருந்தே பலவற்றை நாம் ஊகித்துக்கொள்கிறோம். ஆனால், உண்மை எவ்வளவு விரிவுடையதாக இருக்கிறது என யோசித்தபடி கபிலர் கேட்டார், “அங்கு இருந்துதான் பாரியின் அரசாட்சி நடக்கிறதா?”
கேள்வி, நீலனுக்குச் சிரிப்பை உண்டாக்கியது. “பாரி அரசன் அல்ல… வேளீர் குலத் தலைவன். நாட்டை ஆள்வதைப்போல காடும் ஆளப்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள். காட்டை யாராலும் ஆளமுடியாது. சின்னஞ்சிறு மனிதனால் என்ன செய்ய முடியும்? பகை, துரோகம், வீரம், சாவு, அவ்வளவுதான். ஆனால், காட்டைப் பாருங்கள் எண்ணிலடங்கா உயிர்கள், ஒவ்வொன்றும் அளவில்லா ஆற்றல்கொண்டது. ஒரு பச்சிலையை வாயில் வைத்தால், அந்தக் கணமே நீங்கள் செத்து மடிவீர்கள். துளிர்விடும் ஒற்றை இலை உங்களின் வாழ்வை முடித்துவைக்கப் போதுமானது. உங்களால் முடிவுசெய்ய முடியுமா, காடு இலைகளால் ஆனதா, மரங்களால் ஆனதா, மிருகங்களால் ஆனதா, பாறைகளால் ஆனதா, பறவைகளால் ஆனதா, கொம்புகளால் ஆனதா?”
அவன் பேசிக்கொண்டேபோனான். கபிலரால் ஒருகட்டத்தில் அவனது பேச்சைப் பின்தொடர முடியவில்லை. பாறைகள் உருள்வதைப்போல வார்த்தைகள் உருண்டு கொண்டிருந்தன.
மூச்சுவிட அவகாசம் எடுத்துக் கொண்டார். அவர் நின்றுவிட்டதை உணர்ந்த அவன் திரும்பிப் பார்த்துச் சொன்னான், ``எங்களின் பாதங்கள் மண்ணைப் பிடித்து நடந்து பழகியவை. சமவெளியில் வாழும் உங்களின் பாதங்கள் மண்ணில் தேய்த்து நடந்து பழகியவை. பாதடியைக் கழட்டிவிட்டு பாதத்தை முன்னெடுத்து வையுங்கள். பற்களைப்போல விரல்களுக்கும் கவ்விப்பிடிக்கத் தெரியும்.”
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு ஒருவன் நடைபயிலச் சொல்லிக்கொடுக்கிறான். இளம்பருவத்தில் இப்படித்தான் ஏமாற்றி நடை பழக்கினார்களா?
சீறூர் மன்னன், முதுகுடி மன்னன், குறுநில மன்னன், சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள், கல்வியில் சிறந்த சான்றோர்கள், அறவோர், `எட்டி’ பட்டம் சூடிய பெருங்குடி வணிகர்கள் என எத்தனையோ பேரோடு கழிந்துபோன இந்தக் காலங்களில், மொழியும் அறிவும் ஞானமுமே என்னுள் எப்போதும் நிலைகொண்டது. ஆனால், ஒருபோதும் எனது தாயின் நினைவு தோன்றியது இல்லை. கணப்பொழுதில் என்னை எனது தாயின் மடியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டானே, முன்னால் போகும் இவன் யார்?”
கபிலர் ஒருவித உணர்ச்சி மேலிட்ட வராக பாதடியைக் கழட்டிவிட்டு, அவனை நோக்கி நடந்தார். அவன் குன்றின் உச்சியை அடைந்து, அவரது வருகைக்காகக் காத்திருந்தான். அவர் மூச்சு வாங்கியபடி உச்சியை நெருங்கினார். எதிரில் பெரும் மலைத்தொடரின் அடுக்குகள் தெரிந்தன.
நீலன் சொன்னான்... “முதல் அடுக்குக்கு ‘காரமலை’ என்று பெயர். அதன் மேல் நின்று பார்த்தால்தான், மூன்றாம் அடுக்கைப் பார்க்க முடியும்... அதுதான் ஆதிமலை.”
உச்சிக்கு வந்ததும், அதுவரை இல்லாத வேகத்தோடு காற்று வந்து அவரைத் தள்ளியது. உடலைச் சற்றுத் திருப்பி காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நின்றபடி, எதிர்திசையைப் பார்த்தார். நீண்டுகிடக்கும் மலைத்தொடர் தனது இரு கரங்களையும் விரித்து அவரை அழைப்பதுபோல் இருந்தது.
நீலன் சரிவில் இறங்கத் தொடங்கினான். “இனி வேகமாக நடக்க வேண்டும். பொழுதுசாய சிறிது நேரம்தான் இருக்கிறது. மலையின் விளிம்பை சூரியன் கடந்துவிட்டால், ஒரு பனை தூரத்தைக் கடப்பதற்குள் இருள் நம்மை அடைத்துவிடும். அதன் பிறகு நீங்கள் நடப்பது கடினம். விரைவில் வாருங்கள்” என்று சொல்லியபடி தாவிச் சரிந்தான்.
கபிலர் வேகமாக இறங்கத் தொடங்கினார், அவன் நடக்கவில்லை தாவிக் கடந்துகொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்தவாறு, சிறு புதர்களை விலக்கி, வேகமாக நடக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். ஏறும்போது முன்னால் செல்பவன் எவ்வளவு உயரம் போனாலும், ஆளைப் பார்த்துவிட முடியும். இறங்கும்போது அப்படி அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவனது உருவம் மறைந்து தெரிந்தது. பேச்சுக் கொடுத்தால் மட்டுமே அவனைப் பின்தொடர முடியும் என்பதை உணர்ந்த கபிலர், கவனமாக நடந்தபடி கேட்டார்.
“ `காடுகள் கொம்புகளால் ஆனதா?’ என்று எப்படிக் கேட்டாய்?” என்றார்.
“கொம்புகள் என்றால் மிருகங்களின் கொம்புகள் என்று நினைத்துவிட்டீர்களா? நான் மரங்களின் கொம்புகளைச் சொன்னேன்.”
கபிலருக்கு விளங்கவில்லை. கழுத்தை நீட்டிப்பார்த்தார். அவன் எந்தப் புதர் தாண்டி போய்க் கொண்டிருக்கிறான் எனத் தெரிய வில்லை. சத்தமாகக் குரல்கொடுத்தார்...
“கொப்புகளைத்தான் கொம்புகள் என்று சொல்கிறாயா?”
“இல்லை... நாங்கள் மரத்தின் வேர்களை மரக்கொம்புகள் என்றுதான் சொல்வோம். மரம் மேல் நோக்கி வளருவது அல்ல... கீழ் நோக்கி வளருவது. இறுகிய மண்ணையும் கரும்பாறையும் தனது கொம்புகளால் பிளந்துகொண்டு அது உள்செல்கிறது. மரத்தின் முழு ஆற்றலும் அதன் கொம்புகளில்தான் இருக்கிறது. உடலைவிட நீளமானவை அதன் கொம்புகள்.”
தான் கற்றவற்றை ஒருவன் தலைகீழாகப் புரட்டிக் கொண்டிருக்கிறான் எனத் தோன்றியபோது, முன்வைத்த வலதுகால் இடறியது. சிறுபாறையில் பாதம் நழுவிச் சரிந்தது. பக்கத்தில் இருந்த செடியைப் பிடித்து, கீழே விழுந்துவிடாமல் நின்றார் கபிலர்.
கால் இடறி கற்கள் உருளும் சத்தம் கேட்டதும், நீலன் வேகமாக மேலேறிவந்தான், பக்கத்தில் இருந்த வேம்பின் மீது கை சாய்த்து நின்றார் கபிலர். `சிறிது நேரம் உட்காருங்கள்’ என்று சொன்னவன், பாதங்களை உள்ளங்கையால் பிடித்து, தசைகளை இழுத்துவிட்டான். அவரது முகத்தைப் பார்த்தபடி, “நடக்கலாமா?” என்றான். கொஞ்சம் பொறுப்பா என்பதுபோல அவரது பார்வை இறைஞ்சியது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். வேப்பம் பூக்கள் சுற்றிலும் உதிர்ந்துகிடந்தன. பூக்களை எடுத்து உள்ளங்கையில் வைத்து உற்றுப்பார்த்தார். மூச்சுக்காற்றில் பூக்கள் அசைந்தன. பேச்சுக் கொடுத்தால் உட்கார்ந்திருக்கும் நேரத்தைச் சிறிது நீட்டிக்கலாம் என யோசித்த கபிலர் “வேப்பம் பூ, யாருக்கு உரியது தெரியுமா?” என்றார்.
“சிற்றெறும்புக்கு உரியது.”
கபிலர் பதற்றம் அடைந்தார்.
“நான் அதைக் கேட்கவில்லை. வேப்பம் பூ மாலை யார் சூடுவதற்கு உரியது தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, ஏதாவது பதிலைச் சொல்லிவிடுவானோ என்ற பதற்றத்தில் அவரே பதிலையும் சொன்னார்...
“பாண்டிய மன்னனுக்கு உரியது.”
“சரி... அப்படியே நடக்கத் தொடங்குங்கள். நான் அருகிருந்து அழைத்துச் செல்கிறேன்” என்றான்.
கபிலர் நடக்கத் தொடங்கினார். எட்டுவைக்கும்போது கால் நரம்பு சுண்டுவது போல் இருந்தது. சூரியனின் அடிவிளிம்பு காரமலையின் தலையைத் தொட்டது.
முன்னால் நடந்தபடியே கேட்டான்... “வயல் நண்டைப் பார்த்திருக்கிறீர்களா?”
சம்பந்தம் இல்லாமல் கேட்கிறானே என எண்ணியபடி, “பார்த்திருக்கிறேன்” என்றார்.
“வயல் நண்டின் கண்கள் வேப்பம்பூவைப் போலத்தான் இருக்கும். உங்கள் பாண்டியன் வயல் நண்டை மாலையாக அணிந்துகொள்வானா?” - கேட்டபடி நமட்டுச் சிரிப்போடு நாலு எட்டு முன் தாவிச் சென்றான்.
கபிலர் நிலைகுலைந்துபோனார். பெரும் வேந்தனை சாதாரண வீரன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தி தன்னிடம் பேசுகிறானே. இதைக் கேட்டுக்கொண்டிருப்பது அறம் அல்ல என்று தோன்றியது. இந்த எண்ணம் முழுமை அடையும் முன்னர், அவருக்குள் இருந்த கவிஞன் விழித்துக்கொண்டு வெளியில் வந்தான். என்ன அழகான ஓர் உவமை? கணநேரத்தில் எப்படி இவ்வளவு பொருத்தமான ஓர் ஒப்பீட்டைச் செய்தான். காதலுக்குள் சூழ்கொண்டு கிடக்கிற ஒருவனுக்கு உவமைகள் வராதா என்ன? மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, கபிலர் கேட்டார்... “வயல் நண்டின் கண்கள்தான் அப்படி இருக்குமா... கடல் நண்டின் கண்கள் அப்படி இருக்காதா?”
“எனக்குத் தெரியாது. நான் கடல் பார்த்தது இல்லை. ஆனால் நீரும் நிலமும் மாறுபடுகையில், வடிவமும் மாறுபடத்தான் செய்யும்.”
“மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கடல் பார்க்க வேண்டும்.”
“ஏன்?”
“அது அவ்வளவு விரிந்து பரந்தது... அளவற்றது.”
முன்னால் போய்க்கொண்டிருந்த நீலன், சட்டெனத் திரும்பி கபிலரை நேர்கொண்டு பார்த்துக் கேட்டான்...
“எங்கள் பாரியின் கருணையை விடவா?”
கபிலர், மனதுக்குள் சுருங்கிப் போனார்!
- பாரி வருவான்..
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
மிக அருமையான தமிழ்நடை, இதை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மூன்று பாகங்களை கடந்து நான்காம் பாகம் ஆரம்பித்து விட்டது. எங்கும் தொய்வில்லை. வாசிக்கும் போது ஏற்படும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.. நாவல் வாசிக்கும் வழக்கமுடையோர் அனைவரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய நூல் இது என்பது எனது சிபாரிசு... தொடர் முடிவடைந்த உடன் இதை ஈகரை நண்பர்களுக்கு மின்நூலாக தர முயற்சிக்கிறேன்... நல்ல பதிவுக்கு நன்றிகள்.. தொடருங்கள்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வீரயுக நாயகன் வேள் பாரி - 2
இது சுமார் முன்னூறு ஆண்டுகாலக் கதை, அப்போது வடவேங்கடம், தென்குமரி என்று தமிழ் நிலத்துக்கு எல்லையோ, பெயரோகூட உருவாகிவிடவில்லை. அடர்ந்த வனத்தில், ஆற்றுப்படுகையில், வண்டல் பூமியில், வற்றிய பாலையில், கடலோரத்தில், மலைமுகட்டில் என வெவ்வேறு வகையான நிலங்கள்தோறும் இனக்குழுக்களாகச் சேர்ந்து வாழ்ந்த மக்கள், தங்களின் குலமுறைப்படியான வாழ்வை நடத்திக்கொண்டிருந்தனர். அரசோ, அரசனோ உருவாகவில்லை. குலத் தலைவன் மட்டுமே இருந்தான். அவனே குலங்களை வழிநடத்திக் கொண்டிருந்தான்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதக் கூட்டங்கள் தங்களின் தனித்த அடையாளங்கோடு செழித்திருந்தன. இயற்கையோடு இயந்த வாழ்வு. தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. உழைப்பும் விளைச்சலும் பொதுச் சொத்து. கொண்டாட்டமும் குதூகலமும் இயல்பின் பிரதிபலிப்பு. எல்லா மனிதனும் சரிநிகராக இருந்தனர். இயற்கையான பிரிவினையான ஆண், பெண் என்ற பாலினப் பிரிவினை மட்டுமே இருந்தது.
வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு தின்றுகொண்டிருந்தபோது, குகையில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரைக் கொதிக்கவைத்து இறைச்சியை அதில் வேகவைத்தனர். மாமிசத்தையும் கிழங்குகளையும் நெருப்பில் சுடாமலே உண்ணக்கூடிய பக்குவத்துக்கு அவர்கள் மாறினர். வேகவைத்த உணவு என்ற புதியதொரு வகையை உருவாக்கினர்.
அன்றில் இருந்து நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு `ஆண் உணவு' என்று பெயர் ஆயிற்று. நீரில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு `பெண் உணவு' என்று பெயர் ஆயிற்று. ஆண், அவசரத்தின் அடையாளம் ஆனான். பெண், பக்குவத்தின் அடையாளம் ஆனாள். உணவு, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மலைகள், நதிகள் என எல்லாமே தம்மைப்போலவே ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.
இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது. எல்லாவிதமான புதிய ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக அவையே இருக்கின்றன. காதலுக்குள்தான் இயற்கையின் இயங்குசக்தி பொதிந்துகிடக்கிறது. ஆண், பெண் என்ற இரு சக்திகள். ஒருபோதும் ஒன்றை ஒன்று முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை தன்னுள்கொண்டுள்ளது. நீரும் மண்ணும்போலத்தான் ஆணும் பெண்ணும். நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்; மறுநொடியில் ஒன்றைவிட்டு மற்றொன்று கழலவும் முடியும். அதுவே அதன் இயல்பு.
உயிரினங்களில் இயற்கை உருவாக்கியது இந்த ஒரு பிரிவினை மட்டுமே. இதுவன்றி வேறு பிரிவினைகள் இல்லாமல் அழகாகவும் அமைதி யாகவும் இருந்தது அந்தக் காலம். ஆனால், அந்த அமைதி நீண்டு நிலைக்கவில்லை. மெள்ளக் குலைய ஆரம்பித்தது.
பெரும் மாளிகை சரியக் காரணமான ஒற்றைச் செங்கல்லைப் போலத்தான் சொத்தும், சொத்தின் மீதான ஆசையும். தனக்கான உடமை, தனது சந்ததிக்கான சேமிப்பு என ஆரம்பித்தபோது, குலங்களின் அமைதி குலைய ஆரம்பித்தது; ஏற்றத் தாழ்வுகள் உருவாகின; குலங்களில் வலுத்தவனின் கை ஓங்கியது; வல்லமை பொருந்தியவனின் கைகளில் அதிகாரம் நிலைகொண்டது. வலிமையடைந்த குலம் பிற குலங்களை அடக்கியாள நினைத்தது. தமிழ் நிலம் எங்கும் இருந்த நூற்றுக் கணக்கான குலங்கள் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின. அடர்ந்த காட்டில் விடாது கேட்கும் இடியோசை போல, அந்த மோதல்களின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. நூற்றாண்டுகளாகக் குருதி ஆறு நிற்காமல் ஓடியது.
ஆரம்ப காலத்தில் மனிதனுக்குத் தேவையான பெரும் செல்வமாக கால்நடைகளே இருந்தன. எனவே, கால்நடைகளை அதிகப்படுத்தவே எல்லா குலங்களும் ஆசைப்பட்டன. அடுத்த இனக் குழுவின் கால்நடைகள் இரவோடு இரவாகக் களவாடப்பட்டன. களவு கொடுத்தவன் ஆயுதங்களோடு குறுக்கே பாய்ந்தான். ஓட்டிச் செல்லப்படும் கால்நடைக்கும், மீட்டுத்திரும்பும் கால்நடைக்கும் இடையில் மனிதன் செத்து விழுந்துகொண்டே இருந்தான்.
அடுத்தகட்டமாக, நல்ல விளைநிலங்களைக் கைப்பற்ற குலங்கள் மோதிக்கொண்டன. செழிப்பான விளைநிலங்கள் எங்கிருக்கிறதோ, அங்கே மனித ரத்தம் ஆண்டு முழுவதும் உலரவில்லை. கால்நடைகளைப் பறிக்கும்போது மோதலாக இருந்த செயல், இப்போது போர்களாகப் பரிணமித்தது. ஒரு போர் இன்னொரு போரை உற்பத்திசெய்தது. தொடக்க காலத்தில் தோல்வியடைந்த நாட்டின் வீரர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஆனால், இப்போது அப்படி அல்ல, அவர்களின் கைகளும் உழைப்பும் புதிய அரசுக்குத் தேவையாக இருந்தன. எனவே, அவர்கள் அடிமைகளாக்கப்பட்டு நுகத்தடியில் பூட்டப்பட்டனர். வீழ்ந்தவனின் நிலத்தை வென்றவன் வாள்கொண்டு உழுது பயிரிட்டான். `பிறர் மண் உண்ணும் செம்மலே’ என்று அவர்கள் போற்றப்பட்டனர்.
பெருகிவந்த தேவையும் கடல்வழி வணிகமும் எண்ணற்ற அடிமைகளை அனுதினமும் கோரின. நிலத்துக்காகத் தொடங்கிய போர் இப்போது அடிமைகளைப் பெறுவதற்கானதாக மாறியது. போர் எனும் நிரந்தரமான கொதிநீர்க் கொப்பரைக்குள் எண்ணிலடங்கா இனக் குழுக்கள் விழுந்து, ஒன்றோடு ஒன்று மோதி, அழித்து, கொன்று, செரித்து, மிஞ்சியவை மேலேறின.
மேலேறியவர்கள் தாங்கள் இனி குலத்தலைவர்கள் அல்ல, வேந்தர்கள் என்று அறிவித்தனர். `வம்ப வேந்தர்கள் (புதிய வேந்தர்கள்) வாழ்க வாழ்க' என்ற முழக்கம் மூன்றில் இரு பங்கு நிலப்பகுதியில் ஒலித்தது. வேந்தனுக்கு என்று தனித்த அடையாளங் களை சான்றோர்கள் உருவாக்கினர். மணிமுடி, அரச முரசு, வெண் கொற்றக்குடை, ஆணைச்சக்கரம் இவை வேந்தர்களுக்கு உரியன. வேந்தர்கள் என்றால் அது சேர, சோழ, பாண்டியராகிய மூவர் மட்டுமே. மற்ற எல்லோரும் குறுநில மன்னர்கள் என்று அறிவித்தனர்.
எந்த ஓர் அறிவிப்பும் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதிக்குத்தான் பொருந்தும். மூவேந்தர்களின் நிலப்பகுதிக்கு வெளியே இருந்த ஆட்சியாளர்கள் இந்த அறிவிப்பை காலிலே மிதித்து, காறி உமிழ்ந்தனர். குடவர், அதியர், மலையர், வேளீர் என இருபதுக்கும் மேற்பட்ட குலத் தலைவர்கள் வாளேந்தி வஞ்சினம் உரைத்தனர். காவிரி, வைகை, பேரியாறு என ஆற்றங் கரையில் மூவேந்தர்களின் நாடுகள் அமைந்தன. இவர்களின் தலைமையை ஏற்காத சுதந்திர இனக் குழுக்களாகச் செயல்பட்டவர்கள் பெரும்பாலும், மலை மற்றும் காடு சார்ந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்தனர்.
ஐவகை நிலத்தில் அமைந்த அனைத்து நாடுகளுக்குள்ளும் ஊடுருவி ரத்தநாளங்களாக, குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தவர்கள் பாணர் சமூகத்தைச் சார்ந்த கலைஞர்கள். அவர்கள் பாடிய பாடல்களும், கூறிச்சென்ற கதைகளும் நிலம் எங்கும் பரவிக்கிடந்தன. அவர்கள் யாழெடுத்து மீட்டி, பீறிடும் குரலில் பாடியபோதுதான், போர்க்களத்தில் மரணத்தைத் தழுவியவன் வரலாற்றில் உயிர்கொண்டு உலவினான். அவர்கள் தங்களின் நைந்துபோன மேலாடைக்குள் புகழை விதைக்கும் அபூர்வத்தை வைத்திருந்தனர். எல்லோருக்கும் தேவை, புகழ். தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட வேண்டிய வீர கதையின் நாயகனாக நிலைபெற வேண்டிய புகழ். அதை விதைப்பவர்களாக பாணர்கள் இருந்தனர்.
குலத் தலைவர்களும் சிற்றரசர்களும் பாணர் சமூகத்தை அரவணைத்து அள்ளித்தந்தனர். அவர்களின் ஆற்றலையும் வள்ளல்தன்மையையும் பாணர்கள் விடாமல் பாடினர். இந்த வறிய கலைஞர்களின் வற்றாத குரல், தமிழ் நிலம் எங்கும் மிதந்துகொண்டே இருந்தது.
இப்போது வள்ளல்களின் தலைநாயகனாக பறம்பு நாட்டை ஆளும் வேள்பாரி இருந்தான். அவனது ஆளுகையும் ஆற்றலும் வாரிக்கொடுக்கும் வள்ளல்தன்மையும் நிலம் எங்கும் பரவின. நாடுகள்தோறும் பாணர்கள் பாரியைப் பற்றிய பாடலைப் பாடிக்கொண்டே இருந்தனர். தங்களின் பசியைப் போக்க யாரும் இல்லாத காட்டுப் பகுதியில்கூட, காலில் சலங்கை கட்டி துடிப்பறை முழங்க பாரியைப் பற்றி பாடினால் பசி மறந்துபோவதாக, அவர்கள் ஊருக்குள் வந்து சொல்லிவிட்டுப் போயினர். பசித்தவரின் குரலாக பாரி மாறியதால், எல்லா நாட்டுக் குள்ளும் நிறைந்திருந்தான். அதோடு நிற்காமல் அவனது புகழை உச்சத்துக்குக் கொண்டு போனது, முல்லைக் கொடிக்குத் தேரைத் தந்தான் என்பது. இந்தக் கதையைக் கேட்கும் ஒவ்வொரு வனின் மனதுக்குள்ளும் ஒரு பச்சிளங்கொடி துளிர்விடுகிறது. இது உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், இந்தக் கதை என் குழந்தைக்கு, என் சுற்றத்துக்கு, என் சமூகத்துக்கு, என் வேந்தனுக்கு மிக அவசியம் என மக்கள் நினைத்தனர்.
விளைந்த நெல்லை அறுக்கும் முன்னர், வரி வாங்க கூரிய வாளோடு வந்து நிற்கும் வேந்தனு டைய வீரர்களிடம், மக்கள் வரியோடு சேர்த்து ஒரு முல்லைக்கொடியையும் கொடுத்து அனுப்பு வதாக பக்கத்து நாடுகளில் பேசிக்கொண்டார்கள்.
தமிழ் நிலம் முழுவதும் சுற்றி அலையும் பாணர் குழுக்கள், ஒருமுறையாவது பறம்புநாடு சென்று திரும்பினர். எல்லா மன்னர்களிடமும் பரிசல் பெற்ற பாணர்கள் பாரியிடம்தான் கருணையைப் பெற்றனர். கருணை வற்றப்போவதே இல்லை. அது அவர்களின் நினைவுகளில் சுரந்துகொண்டே இருந்தது.
பாணர்கள் தங்களின் நினைவில் இருந்து மட்டும் அல்ல, நினைவு மறந்தும் பாடும் பாடலாக பாரியின் பாடலே இருந்தது. புகார் நகரில் நாளங்காடியில் காவல் புரிந்த ஒரு வீரன், கடைவீதியில் அலைந்துகொண்டிருந்த பாணர் குழு ஒன்றைப் பார்த்துக் கேட்டான், ``பாரி பறம்பை ஆள்கிறானா... அல்லது பாணர்களை ஆள்கிறானா?’'
நாளங்காடிக்கு மிக அருகில்தான் பட்டினப்பாக்கம் இருக்கிறது. அதுதான் சோழ நாட்டு வேந்தனும் உயர்குடிகளும் வாழும் பகுதி. காவல் வீரன் கேட்ட கேள்வி விரைவிலேயே பட்டினப் பாக்கத்துக்கு வந்து சேர்ந்தது. சிறிது காலத்திலேயே மூவேந்தர்களின் அரண்மனை களிலும் அந்தக் கேள்வி எதிரொலித்தது. இந்தக் கேள்வி தனக்குள் ஒரு பதிலையும் கொண்டிருந்தது. அந்தப் பதில் மூவேந்தர்களின் உறக்கத்தைக் குலைத்தது.
மூவேந்தர்கள் எனும் பேரரசர்களையும் மீறி நிலைபெற்றிருந்தது பாரியின் புகழ். அவர்களால் பாரியை ஒன்றும் செய்துவிட முடிய வில்லை. காரணம், பாரியின் மாவீரம், பறம்பு நாட்டின் நிலவியல் அமைப்பு, படை வலிமை இவை எல்லாம்தான். ஆனாலும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த நிலையில்தான் கபிலர், அறுக நாட்டை ஆளும் சிறுகுடி மன்னன் செம்பனின் மாளிகைக்கு தற்செயலாக வந்து சேர்ந்தார்.
அன்றைய தமிழ் நிலத்தின் பெரும் புலவராக விளங்கியவர் கபிலர். கபிலரைப் போன்ற புலவர்களே, மாற்றரசுக்குள் நுழையவும், அரசனுக்கு அறிவுரை சொல்லவும், போரைத் தடுக்கவும், அவசியம் எனக் கருதப்பட்ட தாக்குதலை நடத்தவும் காரணமாக இருந்தார்கள். அவர்கள் நிலம் எங்கும் சுற்றி அலைந்தபடி இருந்தனர். கடற்கரையில் காய்ந்த மீனும், ஆயர்குடியின் தயிர் மத்தும் இவர்களின் பாடலில் சுவையைக் கூட்டின. பாலை நிலத்தின் ஊன் சோறும், குறிஞ்சி நிலத்தின் புளித்த கள்ளும் தமிழ்க் கவிதைகளைச் செழிப்புறச்செய்தன.
கபிலர், பறம்பு நாட்டுக்கும் போனது இல்லை; வேள்பாரியைச் சந்தித்ததும் இல்லை. ஆனால், பாரியைப் பற்றி பாணர்கள் மீண்டும் மீண்டும் பாடியபோது அவருக்கு ஆச்சர்யத்தைவிட சந்தேகமே வலுப்பெற்றது. எல்லோராலும் அதிகம் புகழப்படும் ஓர் இடத்தில் பிழைகள் மலிந்திருக்கும். யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகாதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர். எனவே, புகழால் நிலைபெற்றுள்ள ஒன்றின் மீது இயல்பான கசப்பு கபிலருக்கு உருவாகியிருந்தது.
நடுநாட்டு அரசன் வேண்மானைக் காணச் சென்றுகொண்டிருந்த கபிலர், பயணக் களைப்பு மிகுதியால், சற்று ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தார். வாலியாற்றங் கரையில் அமைந்த செம்பனின் அரண்மனையை நோக்கி தேரை ஓட்டச் சொன்னார். பாணர்களின் கூத்தை பகல் எல்லாம் பார்த்திருந்த செம்பனுக்கு, மாலையில் திடீரென கபிலர் வந்தது பெரும் மகிழ்வைத் தந்தது.
பச்சை நிறக் குப்பியில் நிறைந்து வழியும் கள்ளோடு தொடங்கியது அன்றைய இரவு. கள்ளைப் பருகத் தொடங்கியதும் அதன் புளிப்புச் சுவை சற்றே மாறுபட்டதாக இருக்கிறதே என்று உணர்ந்த கபிலர், “இது என்ன கள்?” என்று கேட்டார்.
“தேனில் இருந்து தயாரித்து, மூங்கில் குழாயில் இட்டு நன்கு புளிக்கவைத்த முற்றிய கள். நாங்கள் இதை `தேங்கள்' என்போம். உங்களைப் போல் புலவர்கள் `தேறல்' என்று சொல்வீர்கள்” என்றான் செம்பன். அப்போது வீரன் ஒருவன், உண்பதற்கான கறித்துண்டங்களை குழிசி பானை நிறையக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான். அந்தப் பானையை கபிலர் எடுத்து உண்ண ஏதுவாக அவரை நோக்கித் தள்ளிவைக்க முயன்றான் செம்பன், பானையை ஒரு கையால் தள்ள முடியவில்லை. இன்னொரு கையில் இருந்த குப்பியைக் கீழே வைத்துவிட்டு இரு கைகளாலும் தள்ளினான். அதைக் கவனித்த கபிலர் கள்ளைப் பருகியபடியே கேட்டார், “பகல் எல்லாம் பாணர்களுக்கு அள்ளி வழங்கியதால், உனது கரம் சோர்ந்துபோய்விட்டதா?”
“இல்லை, பெரும் புலவரே... அவர்களுக்கு அள்ளி வழங்கும் நல்வாய்ப்பு எதுவும் இன்று எனக்குக் கிடைக்கவில்லை.”
“ஏன்?”
“அவர்கள் பறம்பு மலையில் பாரியைப் பார்த்துவிட்டு வருபவர்கள், எடுத்துச் செல்ல முடியாத அளவு பொருட்களோடுதான் இங்கு வந்தார்கள். என்னை நன்கு அறிந்த கீழ்க்குடி பாணர் கூட்டம் அது. எனவே என்னோடு விருந்துண்டு ஆடிக்களித்துவிட்டுப் போனார்கள்.”
நெய்யிலே வறுத்தெடுத்த மான் கறியின் கால்சப்பையைக் கடித்து இழுத்தபடி கபிலர் கேட்டார், “பறம்பு நாட்டுக்குப் போய்த் திரும்புபவர்கள், இந்தப் பக்கம் ஏன் வந்தார்கள்?”
``அறுக நாட்டின் தென் திசை எல்லை, பச்சை மலைத் தொடரில்தான் முடிகிறது. அந்தப் பக்கம் இருக்கும் வேட்டுவன் பாறையின் வழியாக பறம்பு மலைக்குப் போகும் பாதை ஒன்று உண்டு. ஆனால், அது முறையான பாதை அல்ல. அதில் எப்படி இவர்கள் இறங்கிவந்தார்கள் என்று தெரியவில்லை” என்று சொல்லியபடி தனக்கான கறித்துண்டை எடுத்துக் கடித்தான்.
“பாதையை முறையற்று வைத்திருப்பது அரச குற்றம்” என்றார் கபிலர்.
“மலைப்பாதையைப் பாதுகாப்பது கடினம் அல்லவா?” எனக் கேட்டான் செம்பன்.
“அவன் தேருக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், பாதையைப் பாதுகாத்திருப்பான். முல்லைக்குக் கனிவு காட்டியவன் பாதையைக் கைவிடத்தான் வேண்டும். கைவிடப்பட்ட பாதையால், வணிகம் வளராது. வணிகம் பெருகாத நாட்டில், வளம் கூடாது. வளமற்ற நாட்டில் நிறைந்திருப்பது மக்களின் கண்ணீர்த் துளிகளே.”
“பறம்பு நாடு வளமிக்கது. அது மட்டும் அல்ல, பாரியைப் பார்க்கப்போன யாருமே பாதை தவறியோ, வனமிருகங்களிடம் சிக்கிக்கொண்டோ, வழி தெரியாமல் இடர்பட்டதாகவோ நான் கேள்விப்பட்டது இல்லை” என்றான் செம்பன்.
“பாதை சரியில்லாத வழியில் பயணம் மட்டும் எப்படிச் சரியாக இருக்க முடியும்?” - கபிலரின் திடமான கேள்விக்கு செம்பனிடம் பதில் இல்லை. குப்பியில் இருந்த கள் தீர்ந்துகொண்டே இருந்தது.
“பாரி, விருந்தினரை நிர்வகிப்பதில் தேர்ந்தவன் என்று நினைக்கிறேன். ஆனால், வள்ளல்தன்மை என்பது நிர்வாகத்திறமை அல்ல. அது குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது.”
“நீங்கள் பாரியை வள்ளல் இல்லை என்கிறீர்களா?”
“பாரியை வள்ளல் என்றோ, சிறந்த அரசன் என்றோ, என்னால் இப்போது சொல்லிவிட முடியாது” - தான் பேசும் வார்த்தைகளை உணர்ந்த வாறே கபிலர் சொன்னார், “நாளை காலை நான் வேட்டுவன் பாறை வழியாக பாரியின் பறம்பு நாட்டுக்குள் நுழைவேன்.”
செம்பன் அதிர்ந்து பார்த்தான்.
“நடுநாட்டுக்கு அல்லவா போவதாகச் சொன்னீர்கள்?”
“நாம் தீர்மானித்தபடி எல்லாம் நடந்துவிடுவது இல்லை. வார்த்தைதான் நம்மை வழிநடத்துகிறது. ஒரு குப்பி கள் பல நேரம் வரலாற்றையே மாற்றியிருக்கிறது. யார் அறிவார், ஒரு கையால் நீ பானையைத் தள்ளாமல் போனதால் இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ!” - கபிலரின் வார்த்தையைக் கேட்டு செம்பன் ரசித்துச் சிரித்தான்.
மறுநாள் காலை கபிலரை, பறம்பு நாட்டுக்குப் பாதுகாப் போடு அழைத்துச் செல்ல ஒரு படையோடு செம்பன் தயாராக இருந்தான். “நான் பரிசோதிக்க நினைப்பது பாரியை, உனது படைபலத்தை அல்ல” - கபிலரின் குரல், படையுடன் சேர்த்து செம்பனையும் சாய்த்தது. தனித்த தேரில் கபிலர் புறப்பட்டார்.
கபிலர் தனது துணிச்சல் கொண்டு பாரியை அளவிட முடிவுசெய்து, வேட்டுவன் பாறையின் வழியே மேலே ஏறினார். எங்கு இருந்தோ வந்த நீலன், அவருடன் இணைந்துகொண்டான். இப்போது வரை அவருக்குப் பிடிபடவில்லை, அவன் வந்து இணைந்தது தற்செயலா... அல்லது நிலைத்த ஏற்பாடா?
ஆனால், நீலனுக்குப் பிடிபட்டிருந்தது. கபிலர் காலில் ஏற்பட்டுள்ளது தசைப்பிடிப்பு. அது நேரம் ஆக ஆக வலியைக் கூட்டும். இந்த இடத்தில் ஆபத்து அதிகம். எனவே பேச்சுக் கொடுத்தபடி விரைவாக தனது குடிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவோடு வேகவேகமாக முன்நகர்த்திச் சென்றான்.
வானில் பறவைக் கூட்டங்கள் வலசை வலசையாக கூடு திரும்பிக்கொண்டிருந்தன. இரவின் வாசல் கதவு திறக்கப்போகிறது. பசுவின் மடுவில் இரவுப்பால் சுரக்கத் தொடங்கியிருக்கும். மண்ணைப் பார்க்க முடிகிற வெளிச்சம் இன்னும் எவ்வளவு பொழுது நீடிக்கும் என்று யோசித்தபடி நீலன் விரைவுகொண்டு நடந்தான். கபிலர் ஏதோ கூப்பிடுவதுபோல் இருந்தது, திரும்பிப் பார்த்தான். அவர் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால், அவரது முகக்குறியை அவனால் உணர முடிந்தது.
“மலை இறக்கம் இன்னும் சிறிது தொலைவுதான், அதன் பிறகு சமதரைதான்” என்று சொல்லி ஒரு கையைப் பிடித்து அவருக்கு உதவினான்.
“நான் சிறிது நேரம் உட்கார்ந்துகொள்ளவா?” -குரல் தளர்ந்து, ஒரு குழந்தையைப்போல கேட்டார் கபிலர்.
அவனோ ``கீழே இருக்கும் அந்தப் பனையடிவாரம் போய்விடலாம்” என்று சொல்லி உட்காரவிடாமல் கீழிறக்கிக் கொண்டிருந்தான். அவருக்கு வலி அதிகமாகிக்கொண்டே இருந்தது.
சமதரைக்கு வந்தவுடன், பனைமரத்தின் அடிவாரத்தில் அவரை அமரவைத்துவிட்டு, ``சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்'' என்று சொல்லி. தெற்குப் பக்கமாக ஓடத் தொடங்கினான்.
கபிலருக்கு வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. `இவ்வளவு வேகமாக எதற்கு ஓடுகிறான்?’ என்று யோசனை தோன்றியது. ஆனால், `இப்போதாவது உட்காரவிட்டானே...’ என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நேரமாகிக்கொண்டிருந்தது. பனைமட்டைகளும் பனந்தாழ்களும் எங்கும் கிடந்தன. அதைப் பார்த்துக்கொண்டிருந்தவருக்குத் திடீரென சந்தேகம் வந்தது. `ஒருவேளை அவளைப் பார்க்கப் போய்விட்டானோ? அடுத்த குன்றைத் தாண்ட வேண்டுமே. எப்படி இருட்டுவதற்குள் வந்து சேருவான்? பெண்ணின் இதழ் சுவை பற்றி நாம் கொஞ்சம் சொல்லியிருந்தால் போகாமல் இருந்திருப்பானோ? இல்லை... இல்லை... சொல்லியிருந்தால் அப்போதே புறப்பட்டுப் போயிருப்பான், எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, அதே வேகத்தோடு வந்து நின்றான். கைகளில் பச்சிலைகள் இருந்தன.
“இதை வாயில் போட்டு மெல்லுங்கள்” என்றான்.
“என்ன இலை இது?”
“முதலில் இலையை வாயில் போட்டு மெல்லுங்கள். கால் வலி நின்ற பிறகு கேளுங்கள்... சொல்கிறேன்” என்றான். கபிலர் பச்சிலையை மென்றார். சிறிது நேரம் கழித்து இருவரும் நடக்கத் தொடங்கினர்.
“பச்சிலை பறிக்கப்போவதாக இருந்தால் என்னை முதலிலேயே உட்காரவிட்டிருக்கலாமே, ஏன் வலுக்கட்டாயமாக பனைமரம் வரை கீழே இறக்கினாய்?”
“பனைமரம் எங்களின் குலச் சின்னம், மனிதனுக்கு மட்டும் அல்ல, பறம்பு மலையின் எல்லா உயிர்களுக்கும் அது தெரியும். அதனிடம் ஒப்படைத்துவிட்டுப் போனால், எந்த ஆபத்தும் வராது. அதனால்தான் பனை அடிவாரத்தில் உங்களை உட்காரவைத்தேன்.”
தனது எண்ணத்துக்கும் அவனது எண்ணத் துக்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்ந்தபோது கால் வலியைத் தாண்டிய ஒரு வலியை உணர்ந்தார் கபிலர்.
தென்னை எத்திசையும் வளைந்து வளரக்கூடிய தன்மையுடையது. பனையோ தன் இயல்பிலேயே செங்குத்தாக வளரக்கூடியது. இயல்புதான் ஒன்றின் குணத்தைத் தீர்மானிக்கிறது. வளைந்து கொடுக்காத பறம்பு நாட்டின் இயல்பு பனையிலும், பனைமரத்தின் இயல்பு பறம்பு நாட்டிலும் நிலைகொண்டுள்ளது. முள்ளம்பன்றியைப் போல அடி முதல் நுனி வரை உடல் சிலிர்த்தபடி வளரும் பனைமரம், பறம்பு நாட்டின் ஆவேச அடையாளம். அதன் நிழலிலேதான் பாதுகாக்கப்பட்டிருந்தோம் என்ற உண்மை கபிலருக்கு விளங்கியபோதுதான் இன்னொன்றும் விளங்கியது, நீண்ட பொழுதுக்கு முன்பே பாரியின் பாதுகாப்புக்குள் தான் வந்துவிட்டோம் என்பது.
- பாரி வருவான்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 3
வள்ளியைத் தேடி...
செழித்து வளர்ந்திருந்த புற்கள், தோள் அளவுக்கு இருந்தன. அதற்கு நடுவில் மெல்லிய கோடுபோல இருக்கும் ஒற்றையடிப் பாதையை கவனமாகப் பார்த்து, நீலன் முன் நடந்தான். சிறிது நேரம் எந்தப் பேச்சும் எழாமல் இருந்தது. சூரியன், காரமலையின் பின்புறம் இடுப்பு அளவுக்கு இறங்கியிருந்தான். வலி சற்றுக் குறைந்ததுபோல் இருந்தது. கபிலர் பேச்சைத் தொடங்கினார்.

“இந்தக் காட்டில் எவ்வளவோ அழகான, வடிவுகொண்ட வாசனைப் பூக்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, பனம் பூவை ஏன் பறம்பு நாட்டின் குலச் சின்னமாக ஆக்கினார்கள்?”
“பனம் பூ வெறும் அழகு அல்ல; ஆயுதம். அது ஆயுதம் மட்டும் அல்ல; பேரழகு. இந்த மலைத்தொடர் எங்கும் அலைந்து திரியும் வேளீர் மக்கள், பனம் பூவின் குருத்து ஒன்றை எப்போதும் தங்களின் இடுப்பில் செருகிவைத்திருப்பார்கள். குட்டையில் தேங்கிக்கிடக்கும் நீரில் விஷம் ஏறியிருக்கும். அலைந்து திரிபவர்களுக்குத் தாகம் எடுத்தால், எந்தக் குட்டை நீரிலும் பனங்குருத்தைப் போட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரை அருந்துவார்கள். எவ்வித விஷமும் தாக்காது. அது ஒரு விஷமுறி. பனம் பூ அழகு, ஆயுதம், அருமருந்து... இன்னும் எவ்வளவோ இருக்கின்றன”- பேசிக்கொண்டே நடையின் வேகத்தைக் கூட்டினான் நீலன். கதை சொல்ல ஆரம்பித்தால், கபிலர் பசுவின் பின்னால் வரும் கன்றைப்போல வருவார் என்பதை அவன் கண்டறிந்து நீண்ட நேரமாகிவிட்டது.
“பறம்பு மலையின் பனைமரத்துக் கள்ளை அருந்தியிருக்கிறீர்களா?”
“இல்லை.”
“இன்னும் சற்று விரைவாக நடந்தால், இன்றே அருந்தலாம்.”
கபிலர், நீண்ட நேரம் கழித்து வலி மறந்து சிரித்தார். கள்ளைச் சொல்லி இழுக்கிறான் எனத் தெரிந்தது.
“ஏன்... நேரம் கழித்துப் போனால், கள் தீர்ந்துவிடுமா?”
“இறக்கப்பட்ட கள்ளுக்கு ஒரு நேரம் இருக்கிறது. கள் மதப்பேறித் திரண்டிருக்கும்போது அருந்த வேண்டும். அப்போதுதான் கீழ் நாக்கில் இருந்து உச்சந்தலைக்குப் பாய்ந்தோடி கிறங்கச்செய்யும். நேரம் தவறினால், அந்த ஆட்டம் தவறும்.”
“உன் பேச்சே கள்ளூறிக்கிடக்கிறதே?”
“நான் சிறுவன். நீங்கள் பாரியோடு அமர்ந்து கள் அருந்த வேண்டும். மஞ்சள் கொடியில் இருந்து இறங்கும் சாற்றைத் துளித்துளியாக இறக்கி, சுண்ணத்தின் அளவைக் கூட்டிக் குறைத்து, கள்ளுக்குள் இருக்கும் போதைக்கு வித்தைகாட்டுவான் பாரி. அவனோடு அமர்ந்து கள் அருந்தும் நாள்தான் வாழ்வின் திருநாள்.”
கபிலர், வாஞ்சையோடு அவனைப் பார்த்தார். `கள்ளையும் மிஞ்சிய இடத்தில் பாரியை வைத்திருக்கிறானே!’ என யோசிக்கையில், நீலன் தொடர்ந்தான்... “பெருங்குடி பாணன் ஒருவன், பாரியை `பனையன் மகனே..!’ என வர்ணித்துப் பாடியுள்ள பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?”
“இல்லை.”
“முழுநிலா நாளில் அந்த அரிய காட்சியைக் காணவேண்டுமே! ஆதிமலை அடிவாரம், ஊர் மன்றலில் எல்லோரும் திரண்டிருக்க, பேரியாழ் மீட்டி, பறை முழங்கி, `பனையன் மகனே...பனையன் மகனே!’ எனப் பாடலைப் பாடத் தொடங்கினால், பறம்பு நாடே எழுந்து ஆடும்” - சொல்லும்போதே துள்ளிக் குதித்தான் நீலன்.
`தனி ஒரு வீரன், நாட்டை ஆளும் தலைவனை இவ்வளவு நேசிப்பதா!' - பிற நாட்டில், அரசனுக்கும் அரசத் தொழில் செய்யும் வீரர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையே இல்லாமல்போன அன்புமயமான ஓர் அடிச்சரடு பறம்பு நாட்டில் இருப்பதைப் பார்த்தார் கபிலர். `இதுதான் குலவழியில் நடக்கும் ஆட்சிக்கும், பிற அரசாட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு' என நினைத்தபடி கபிலர் கேட்டார். “பனம் பூ வெறும் அழகு அல்ல; ஆயுதம். அது ஆயுதம் மட்டும் அல்ல; பேரழகு. இந்த மலைத்தொடர் எங்கும் அலைந்து திரியும் வேளீர் மக்கள், பனம் பூவின் குருத்து ஒன்றை எப்போதும் தங்களின் இடுப்பில் செருகிவைத்திருப்பார்கள். குட்டையில் தேங்கிக்கிடக்கும் நீரில் விஷம் ஏறியிருக்கும். அலைந்து திரிபவர்களுக்குத் தாகம் எடுத்தால், எந்தக் குட்டை நீரிலும் பனங்குருத்தைப் போட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரை அருந்துவார்கள். எவ்வித விஷமும் தாக்காது. அது ஒரு விஷமுறி. பனம் பூ அழகு, ஆயுதம், அருமருந்து... இன்னும் எவ்வளவோ இருக்கின்றன”- பேசிக்கொண்டே நடையின் வேகத்தைக் கூட்டினான் நீலன். கதை சொல்ல ஆரம்பித்தால், கபிலர் பசுவின் பின்னால் வரும் கன்றைப்போல வருவார் என்பதை அவன் கண்டறிந்து நீண்ட நேரமாகிவிட்டது.
“பறம்பு மலையின் பனைமரத்துக் கள்ளை அருந்தியிருக்கிறீர்களா?”
“இல்லை.”
“இன்னும் சற்று விரைவாக நடந்தால், இன்றே அருந்தலாம்.”
கபிலர், நீண்ட நேரம் கழித்து வலி மறந்து சிரித்தார். கள்ளைச் சொல்லி இழுக்கிறான் எனத் தெரிந்தது.
“ஏன்... நேரம் கழித்துப் போனால், கள் தீர்ந்துவிடுமா?”
“இறக்கப்பட்ட கள்ளுக்கு ஒரு நேரம் இருக்கிறது. கள் மதப்பேறித் திரண்டிருக்கும்போது அருந்த வேண்டும். அப்போதுதான் கீழ் நாக்கில் இருந்து உச்சந்தலைக்குப் பாய்ந்தோடி கிறங்கச்செய்யும். நேரம் தவறினால், அந்த ஆட்டம் தவறும்.”
“உன் பேச்சே கள்ளூறிக்கிடக்கிறதே?”
“நான் சிறுவன். நீங்கள் பாரியோடு அமர்ந்து கள் அருந்த வேண்டும். மஞ்சள் கொடியில் இருந்து இறங்கும் சாற்றைத் துளித்துளியாக இறக்கி, சுண்ணத்தின் அளவைக் கூட்டிக் குறைத்து, கள்ளுக்குள் இருக்கும் போதைக்கு வித்தைகாட்டுவான் பாரி. அவனோடு அமர்ந்து கள் அருந்தும் நாள்தான் வாழ்வின் திருநாள்.”
கபிலர், வாஞ்சையோடு அவனைப் பார்த்தார். `கள்ளையும் மிஞ்சிய இடத்தில் பாரியை வைத்திருக்கிறானே!’ என யோசிக்கையில், நீலன் தொடர்ந்தான்... “பெருங்குடி பாணன் ஒருவன், பாரியை `பனையன் மகனே..!’ என வர்ணித்துப் பாடியுள்ள பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?”
“இல்லை.”
“முழுநிலா நாளில் அந்த அரிய காட்சியைக் காணவேண்டுமே! ஆதிமலை அடிவாரம், ஊர் மன்றலில் எல்லோரும் திரண்டிருக்க, பேரியாழ் மீட்டி, பறை முழங்கி, `பனையன் மகனே...பனையன் மகனே!’ எனப் பாடலைப் பாடத் தொடங்கினால், பறம்பு நாடே எழுந்து ஆடும்” - சொல்லும்போதே துள்ளிக் குதித்தான் நீலன்.
“உனக்குப் பாடத் தெரியுமா?”
“பறம்பைப் பற்றியும் பாரியைப் பற்றியும் இன்று முழுவதும் பாடிக்கொண்டே இருப்பேன். அது மட்டும் அல்ல... எங்கள் குலப்பாடலும் எனக்குத் தெரியும்.”
“உனது குலப்பாடல் இருக்கட்டும். பாரியின் குலப்பாடல் உனக்குத் தெரியுமா?”
“தெரியும். மாவீரன் `எவ்வி’யிடம் இருந்து அது ஆரம்பிக்கிறது.”
“அதைப் பாடுவாயா?”
“நான், பாணனும் அல்ல; பாரியின் குலத்தவனும் அல்ல. எனவே, நான் அதைப் பாடுவது முறையும் அல்ல.”
இவ்வளவு நேரம் பேசிவந்த நீலனிடம் இருந்து முதன்முறையாக ஒரு தகவல் கபிலருக்குக் கிடைத்தது. பறம்பு மலையில் பாரியின் குலமக்கள் மட்டும் அல்ல, வேறு குலத்தவரும் இருக்கிறார்கள் என்று. குலத் தலைவன் ஆளும் நாட்டில் வேறு குலத்தவர்கள் இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும், மரத்துக்குள் நெருப்பு மறைந்து இருப்பதைப் போல, ஆள்வோருக்கான ஆபத்து அதற்குள் மறைந்திருக்கும். யோசித்தபடி வந்து கொண்டிருந்த கபிலரின் நடை, சற்றே பின்தங்கியது.
“விரைந்து வாருங்கள்” என்றான் நீலன்.
“இந்தத் தர்ப்பைப் புற்களின் சுனை மேலெல்லாம் அறுக்கிறது. அதுதான்...” என்று சமாளிக்க ஒரு காரணத்தைச் சொன்னார்.
“இந்தப் புற்களுக்கு என்ன பெயர் சொன்னீர்கள்?”
“தர்ப்பைப் புற்கள். சேரன் வேள்வி நடத்தியபோது, அந்தணர்கள் இதுபோன்ற தர்ப்பைப் புல்கொண்டுதான் சடங்குகளைச் செய்தார்கள்.”
“நாங்கள் இதை `நாக்கறுத் தான் புல்' எனச் சொல்வோம்.”
“அப்படியா? இது யாருடைய நாக்கை அறுத்தது... ஏன் இந்தப் பெயர்?”
“அது முருகன் காதலித்த போது நடந்த நிகழ்வு.”
“கள்ளின் சுவையைவிடக் களிப்பூட்டக்கூடியது அல்லவா காதலின் சுவை! அதுவும் முருகனின் காதல் கதையை காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாமே... சொல்” என்றார் ஆர்வத்துடன்.
“எனது காதலியைப் பார்க்க, ஒரு குன்று தாண்டிப் போவதையே, `இவ்வளவு தொலைவா?’ எனக் கேட்டவர் ஆயிற்றே. முருகனின் கதையைக் கேட்டால், இங்கேயே மயக்கம் அடைந்துவிடுவீர்கள்.”
“ஏற்கெனவே எனக்கு சற்று மயக்கமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் காதலின் ஆற்றலே, மயக்கம் நீங்காமல் வைத்திருப்பதுதானே!”
“முருகனாவது பரவாயில்லை. ஆறு குன்றுகள் தாண்டிப் போனான். ஆனால் வள்ளியோ, அவனைப் பார்க்க பதினொரு குன்றுகள் தாண்டி வந்தாள். என்ன இருந்தாலும் வள்ளி நிலமகள் அல்லவா? அவளின் ஆற்றல் சற்றே அதிகம்.”
`குறிஞ்சி நிலத் தலைவன் முருகனைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவன் முற்றிலும் புதியதோர் இடத்தில் இருந்து கதையைத் தொடங்குகிறானே!’ என்று கபிலர் ஆச்சர்யப்பட்ட கணத்தில் இருந்து அவன் கதையைத் தொடங்கினான்.
“இந்தக் காரமலையின் அடிவாரத்தில் குடில் அமைத்து, குலம் தொடங்கியதொரு காலம். இந்தக் காலத்தில் பயிர்கள் விளையவைத்து தினையை அறுத்தும், கிழங்குகளைப் பிடுங்கியும், கொண்டுவந்து சேர்ப்பதும் இவ்வளவு கடினமாக இருக்கின்றன. அப்போது எப்படி இருந்திருக்கும்? காவலுக்குப் போய் பறவைகளிடம் இருந்தும், விலங்குகளிடம் இருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவது பெரும்பாடு.
விளைச்சல் காலம் தொடங்கி விட்டால், முருகனும் எவ்வியும் தினைப்புலம் காக்கப் போவார்கள். வயதிலே இளையவனான `எவ்வி’தான், முருகனுடன் எந்நேரமும் இருக்கும் தோழன். கீழ்மலையின் விளைச்சலைப் பாதுகாத்துக் கொண்டுவந்து சேர்ப்பது அவர்களின் வேலை. அந்த ஆண்டு பயிர்கள் மிகவும் செழித்து வளர்ந்திருக்கின்றன. பயிர்கள் முற்றத் தொடங்கும் போதுதான் வேலையின் கடினம் தெரிய ஆரம்பிக்கும். மானும் மிளாவும் கிளியும் குருவிகளும் இன்னும் பிற உயிரினங்கள் எல்லாம் பயிர்களை மேய, பகலிலே வரும்; யானைகளும் பன்றிகளும் இரவு வரும். இவற்றிடம் இருந்து விளைச்சலைக் காக்க வேண்டும். வயலுக்கு நடுவே புன்னைமரத்தில் பரண் அமைத்து தட்டை, தழல், கவண் எனப் பல கருவிகளை வைத்து விதவிதமாக ஓசை எழுப்பி, விளைச்சலைப் பாதுகாத்தனர். இரவு-பகலாகக் கண்விழிப்போடு இருக்க வேண்டும். காட்டிலே கிடைக்கும் தேனையும் கிழங்கையும் தின்றுகொண்டு, பல நாட்கள் இருவரும் பரணிலே தங்கியிருந்தனர்.
ஒருநாள் காலை, காட்டுப்பன்றிக் கூட்டம் ஒன்று உள்நுழைந்துவிட்டது. காட்டுப்பன்றி, பயிர்களை அழிப்பதில் மிக வேகமாகச் செயல்படக்கூடியது. மிக வலுவான பற்களை உடைய அது, புலியுடனும் போர் புரியும் வல்லமை உடையது. பரணில் இருந்து இறங்கி வந்து இருவரும் விரட்டியிருக்கின்றனர். அது ஓடுவதுபோல் சிறிது தூரம் ஓடி புதரில் மறைந்துகொண்டு, இவர்கள் மீண்டும் பரண் ஏறியதும் விளைச்சலைத் தின்ன உள்ளே நுழைந்துவிடும். மறுபடியும் விரட்டி இருக்கின்றனர். இப்படியே பலமுறை நடந்திருக்கிறது. அந்தப் பன்றிக்கூட்டம் போவதாக இல்லை.
``எவ்வி... நீ பரணிலேயே காவலுக்கு நின்றுகொள். நான் இந்தப் பன்றிக் கூட்டத்தை காரமலைக்கு அப்பால் விரட்டிவிட்டு வருகிறேன்” என, வில்லோடு புறப்பட்டுப் போனான் முருகன்.
யானைக் கூட்டத்தைக்கூட எளிதில் விரட்டிவிடலாம். ஆனால், பன்றிக்கூட்டத்தை விரட்டிச் செல்வது எளிது அல்ல. புதருக்குள் ஒளிந்துகொள்ளும்; திசை மாற்றி நம்மை ஏமாற்றும்; எளிதில் ஓடாது. தனது உயிருக்கு ஆபத்து என அது உணர்ந்தால் மட்டுமே தப்பி ஓட ஆரம்பிக்கும். இல்லை என்றால், அதை நகர்த்த முடியாது. முருகன் அதை நகர்த்தப் பெரும்பாடுபட்டான். அவனுடைய தோல் உறையில் இருந்த அம்புகள் ஒவ்வொன்றாகத் தீர்ந்தன. முருகன், வேட்டையாடுவதில் மிக வல்லவன். அவன் அம்பு எறியும் எந்த இலக்கும் தப்பாது. ஆனால், அன்று அவனுடைய எந்த வித்தையும் பலன் அளிக்கவில்லை. பன்றிக் கூட்டத்தைக் கண்டால், புலியே பின்வாங்கும். ஒற்றை வீரனால் என்ன செய்ய முடியும்? எல்லா அம்புகளும் தீர, கடைசியில் ஓர் அம்பு மட்டுமே மிஞ்சியது. அதைக் குறிபார்த்து எறிய நீண்ட நேரம் எடுத்தான். அந்தப் பன்றிக்கூட்டத்தின் தலைவன் யார் என்பதை அவன் கண்டறிந்து, அதற்குக் குறிவைத்து அடித்தான். அவை புதருக்குள் ஓடிய வேகத்தில் அம்பு தைத்ததா... இல்லையா எனத் தெரியாத நிலையில், உள்ளே இருந்து காதைக் கிழிப்பதுபோல ஒரு சத்தம் வந்தது. பன்றிகளின் ஓட்டம் என்ன என்பது அதன் பிறகுதான் தெரிந்தது. மலையைக் கடக்கும் வரை அவை நிற்கவில்லை.
அவற்றை விரட்டிவிட்டு தனது பரண் நோக்கி நடக்கத் தொடங்கினான் முருகன். கை, கால்கள் எல்லாம் குச்சிகளால் கீறி, ரத்தம் வழிந்தது. உச்சிப்பொழுது ஆகிவிட்டது. முருகனுக்கு நா வறண்டு உள்ளிழுத்தது. அந்தத் திசையில் வேங்கை முடுக்குக்கு அருகில் ஓர் அருவி இருப்பது தெரியும். நீர் அருந்த அந்த இடத்துக்குப் போனான். பெரும் ஓசையுடன் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. கையில் இருந்த வில்லையும் தோல் பையையும் சிறு பாறையில் வைத்துவிட்டு, நீரை நோக்கி நடந்தான். நீர்த்துளிகள் காற்றில் மிதந்துவந்து அவன் மீது படிந்தன. குளிர்ச்சியை உணர்ந்தபடி நீர் பருகக் குனிந்தான். பாறையின் பின்புறம் இருந்து சிரிப்பொலி கேட்டது. அருவியில் யாரோ குளித்துக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. யார் என உற்றுப்பார்த்தான் தெரியவில்லை. `சற்று அருகில் போய்ப் பார்ப்போம்' என நகர்ந்து முன்னே சென்றான். அவனது கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. கொட்டும் அருவிக்குள் இருந்து சற்றே விலகி அவள் வெளியே வந்தாள். தான் வாழ்வில் இதுவரை பார்த்திராத பேரழகு. முருகன் இமை மூடாமல் பார்த்தான். நீர் வடியும் கூந்தலைச் சிலுப்பியபடி இந்தப் பக்கம் திரும்பினாள். இவ்வளவு நேரம் அவன் எறிந்த மொத்த அம்புகளும் கூந்தலுக்குள் இருந்து பாய்ந்து வந்து அவன் மீது எகிறின.
எவ்வி, எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தான், ``தினைக்கதிர் பரிந்து நிற்கிறது. அறுப்பு முடிந்ததும் அவளைத் தேடிப் போவோம்’' என்று. ஆனால் முருகனோ, ஒருநாள்கூடத் தாமதிக்கத் தயாராக இல்லை. அப்புறம் கதிரை எங்கே காப்பாற்றுவது? எல்லா பறவைகளும் விலங்குகளும் அவர்கள் காவல்காத்த நிலத்துக்கு வந்து சேர்ந்தன. பறவைகள் எல்லாம் தினைக்கதிரைத் தின்றுவிட்டு பரண் மேல் உட்கார்ந்து ஓய்வெடுத்தன. விலங்குகள் பரணின் அடிவார நிழலில் இளைப்பாறின.
பல நாட்கள் அலைந்து, பச்சைமலைத்தொடரின் இரண்டாவது அடுக்கில் இருக்கும் வள்ளியின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். அந்த இடத்தைப் பார்த்ததும் எவ்வி சொன்னான், “இவர்கள் நம்மை ஏற்க மாட்டார்கள்.”
“ஏன்?”
“இவர்கள் கொடிக் குலம். நாமோ வேடர் குலம். எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?”
“ஏற்றுக்கொள்ளவேண்டியது வள்ளி மட்டும்தான். மற்றவர்களைப் பற்றி ஏன் யோசிக்கிறாய்? அவளது சம்மதம் பெற வழி சொல்.”
பேசிக்கொண்டிருந்தபோது, வள்ளி தன் தோழிகளோடு போவதைப் பார்த்ததும் எவ்வி சொன்னான், “இந்த மலைத் தொடரிலேயே அழகான மனிதன் நீதான் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிந்தது.”
“என்ன?”
“அழகு என்றால் என்னவென்று?”
எவ்வி சொன்னபோது முருகன் மகிழ்ந்து சிரித்தான். இதுவரை இல்லாத ஒரு பேரழகாக அந்தச் சிரிப்பு இருந்தது. அதன் பிறகு அவளைச் சந்தித்துப் பேசி, அவளின் சம்மதம் பெற நடந்த முயற்சிகள் எத்தனையோ. ஆனால், ஒன்றும் கைகூடவில்லை. இந்தக் காட்டில் அவள் அறியாதது எதுவும் இல்லை. எனவே, எதைக்கொண்டும் அவளின் மனதில் தனித்த இடத்தைப் பெற முடியவில்லை. முருகன் என்ன முயற்சி செய்தாலும், வள்ளி ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதாக இல்லை. தினைப்புலம் காப்பதும் பறவைகளைக் கவன்கல் கொண்டு விரட்டுவதும், மான்கள் வந்தால் தப்பையால் ஒலி எழுப்பித் துரத்துவதுமாக வள்ளி வழக்கம்போல தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
முருகனுக்குத்தான் வழியே பிறக்கவில்லை. ஒருநாள் எவ்வி ஓர் ஆலோசனை சொன்னான். “அவள் தினைப்புலம் காத்து வீடு திரும்பும் வழியில், அருவி கடந்து சிறிது தூரத்தில் சரக்கொன்றை மரம் ஒன்று இருக்கிறது. அந்த இடம் அவள் போகும்போது, நீ அவளின் எதிர்ப்பட்டு நின்று பேசு. உன் காதலைச் சொல்.அவள் ஏற்றுக்கொள்வாள்.”
“அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது?” என்று முருகன் கேட்டான்.
“அந்த இடம் முழுக்க முல்லைக்கொடி படர்ந்துகிடக்கிறது. அவள் மாலை நேரம்தான் வருவாள். அப்போதுதான் முல்லை மலரத் தொடங்கும். அந்த மனம் யாவரையும் மயக்கும். காற்று எங்கும் சுகந்தம் வீசும். உன் காதல் அங்கே கைகூடும்” என்று சொல்லி அனுப்பினான்.
முருகனும் அவன் சொன்ன இடத்தில் அவளை எதிர்கொண்டு பேசினான். முதல் முறையாக அவள் அவனிடம் பேசத் தொடங்கினாள். ஆனால், அந்தப் பேச்சில் காதல் இருப்பதுபோல தெரியவில்லை. காட்டுக்குள் தப்பிப்போன ஆட்டுக்குட்டியை விசாரிப்பதைப் போலத்தான் அந்த விசாரிப்பு இருந்தது.
எவ்வி, இன்னொரு யோசனை சொல்ல முன்வந்தபோது, முருகன் தடுத்துவிட்டான். “காதல், சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். வழக்கம்போல வள்ளி செல்லும் வழியில் எதிர்ப்பட்டான்.
“உன்னை ஓர் இடத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நீ என்னோடு வா” என்று அழைத்தான்.
அவளோ, ``தினைப்புலத்துக்குப் போக வேண்டும். தோழிகள் காத்திருப்பார்கள்'’ என்று காரணம் சொல்லி மறுத்தாள்.
“அதிக நேரம் இல்லை. சிறிது நாழிகை வந்தால் போதும்” என வலியுறுத்தினான்.
வள்ளியும் வேறு வழியின்றி, “சரி” எனத் தலையாட்டினாள்.
முருகன், அவளை அழைத்துக்கொண்டு சென்றான். இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. கூச்சம் தவிர்த்து முருகன் பேச்சைத் தொடங்கினான்...
“உன் தாய் வள்ளிக்கிழங்கு எடுக்கப் போன இடத்தில் இடுப்பு வலி கண்டு உன்னை ஈன்றெடுத்ததால், `வள்ளி' எனப் பெயர் வைத்தார்களாமே?”
“அது ஊரார் சொல்லும் காரணம். உண்மைக் காரணம் வேறு” என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டாள், என்னவென்று சொல்லவில்லை.
சிற்றோடையில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. கல் மேல் கால் பதித்து அதைத் தாவிக் கடந்தனர். அந்த இடத்தில் தனியாக ஒற்றை மரம் இருந்தது. முருகன், வள்ளியை அந்த மர அடிவாரத்தில் போய் சிறிது நேரம் நிற்கச் சொன்னான். அவளும் மரத்தின் அருகே போனாள். முருகனோ, நீரோடையின் அருகில் இருக்கும் சிறு பாறையில் அமர்ந்துகொண்டு அவளைப் பார்த்தபடி இருந்தான்.
`எதற்கு இங்கே நிற்கச் சொல்கிறான்?' என்ற யோசனையிலேயே அவள் நின்றுகொண்டிருந்தாள். மேலே பார்த்தாள். மரம் முழுக்கக் காயும் மொட்டுமாக இருந்தன. ஒரு பூகூட இல்லை. `இது என்ன மரம்? இதுவரை பார்த்ததில்லையே...’ என யோசித்தாள். மரத்தின் மீது கை வைத்து, பட்டையைச் சிறிது உரித்து நுகர்ந்துபார்த்தாள். என்ன மணம் என்பதை அவளால் அனுமானிக்க முடியவில்லை.
“நின்றது போதுமா?” என்று கேட்டாள்.
முருகனோ, “இன்னும் சிறிது நேரம்” என்றான்.
மரப்பட்டைகளுனூடே எறும்பின் வரிசை ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதை உற்றுப்பார்த்தபடி விரல்களால் பட்டைகளை மெள்ள வருடினாள். அவளுக்கு, ஏதோ ஓர் உள்ளுணர்வு தோன்றியது. என்னவென்று தெரியவில்லை.
“புறப்படலாம்” என்றான் முருகன்.
அவளும் புறப்பட்டாள். நடந்துவரும்போது அந்த மரத்தை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். ஆனால், முருகனிடம் எதுவும் கேட்கவில்லை. இவளை எதிர்பார்த்து தோழிகள் காத்திருந்தனர். வந்ததும், சற்றே கோபித்துக்கொண்டனர்.
மறுநாள் பொழுது விடியவும் முருகன் புறப்பட்டான். “எங்கே?” என்று எவ்வி கேட்டான்.
“நேற்று வள்ளியை அழைத்துச் சென்ற இடத்துக்கு” என்றான்.
“மீண்டும் அதே இடத்துக்கா?”
“ஆம்... காரணத்தை வந்து சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டவன், “புதிய பரண் ஒன்று அமைத்துவை. நான் திரும்பி வரும்போது வள்ளியும் உடன் வருவாள்” என்று சொல்லிச் சென்றான்.
எவ்வி ஆச்சர்யத்தோடு பார்த்தான். முருகன் வழக்கத்தைவிட உற்சாகத்தோடு சென்றான்.
நேற்று சந்தித்த இடத்திலேயே வள்ளியைச் சந்தித்தான். ``சிறிது நேரம் என்னுடன் வா'’ என்று அழைத்தான். அவள் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி மறுத்தாள். முருகன் மீண்டும் அழைத்தான். வள்ளியோ, “மரங்களில் எறும்பூறுவது ஒன்றும் அதிசயம் அல்ல” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.
“இந்த ஒருமுறை மட்டும் வா. இனி நான் உன்னை அழைக்க மாட்டேன்” என்றான் முருகன்.
அந்தக் குரலை மறுக்க முடியவில்லை.
“சரி... இந்த முறை மட்டும் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டாள். இருவரும் நேற்று சென்ற வழியில் நடந்தனர்.
வள்ளி கேட்டாள்... “முருகு என்று ஏன் உனக்குப் பெயர் வைத்தார்கள்?”
“நான் மிக அழகாக இருந்ததால், இந்தப் பெயர் வைத்ததாக எனது தாய் சொன்னாள்” - பதிலைச் சொல்கையில் முருகனின் முகம் எல்லாம் வெட்கம் பூரித்தது.
“எங்கள் ஊரில் எட்டு வகை கள் உண்டு. அதில் ஒரு வகை கள்ளுக்கு `முருகு' எனப் பெயர்” என்றாள் வள்ளி.
“கள்ளுக்கு எதற்கு இந்தப் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டான் முருகன்.
“தெரியவில்லை. மயக்கும் தன்மை இருப்பதால் இந்தப் பெயர் வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றாள் வள்ளி.
முருகன் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் தலை குனிந்திருந்தாள். ஆனாலும் அவளது முகத்தில் படர்ந்த வெட்கத்தை மறைக்க முடியவில்லை.
பேசியபடியே அந்த நீரோடை அருகில் வந்தார்கள். முருகன் வழக்கம்போல் அந்த இடத்தில் இருந்த சிறு பாறையின் மீது ஏறி அமர்ந்தான். வள்ளி, மரத்துக்கு அருகே போக ஓடையைத் தாண்டிக் குதித்து, தலைதூக்கிப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து நின்றாள். அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. உறைந்துபோனவளாக, கண்ணிமை கொட்டாமல் பார்த்தாள். எதிரில் இருந்த அந்த மரம் முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கின. மஞ்சளும் நீலமும் ஒன்றுகலந்த வண்ணத்தில் முயல் காதைப்போல நீண்டு விரிந்த மலர்கள். மரமே நிரம்பி வழியும் பூக்கூடையாக நின்று ஆடியது. ஒரு சிற்றிலைகூட தெரியவில்லை. மலரின் மனம் காற்று எங்கும் பரவ, அந்த வெளியே மணத்துக்கிடந்தது. நம்பவே முடியாத அதிசயத்தைப் பார்த்தபடி இருந்த வள்ளி, திரும்பி முருகனைப் பார்த்தாள்.
“நேற்று ஒரு பூ கூட இல்லாத மரத்தில், இன்று மரம் எங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றனவே எப்படி?”
முருகன் சொன்னான், “பெண்ணுடைய அணுக்கத்தால் மலரும் மரம் இது. நேற்று நீ இதைத் தொட்டுத் தழுவினாய். உன் மூச்சுக்காற்றை அதன் பட்டைகளும் கணுக்களும் நுகர்ந்தன. இதன் அத்தனை மொட்டுக்களுக்குள்ளும் உன் பெண்மை பாய்ந்தோடியது. பல ஆண்டுக் காத்திருப்புக்குப் பிறகு அது பூப்பெய்தியுள்ளது. இதன் பெயர் ஏழிலைப் பாலை. இந்த வனத்தில் இருக்கும் பத்து பேரதிசயங்களில் இதுவும் ஒன்று.”
அந்த மொத்தப் பூக்களும் தனக்குள் இருந்து மலர்ந்தனவா? வள்ளிக்கு உடல் சிலிர்த்தது. ஓடிச்சென்று அந்த மரத்தைக் கட்டித் தழுவினாள். பட்டைகளின் மீது இதழ் குவித்து முத்தமிட்டு, இறுகத் தழுவினாள். கண்களில் நீர் வழிந்தது. அவளது மார்பகங்களை கணுக்கள் குத்தி அழுத்தின. மெய்மறந்து கண்கள் செருகினாள். மரம் குலுங்கி பூக்களை உதிர்த்தது.
அவளது அணைப்புக்குள் இப்போது முருகன் இருந்தான். அவளது கரங்கள் இணைந்து முருகன் கழுத்தை இறுக்கின. அவளது கீழ் உதடு நடுங்கியது. அதன் விளிம்பில் இருந்த சிறு மச்சத்தில் இருந்து முருகனின் பார்வை நகரவே இல்லை. இருவரது மூச்சுக்காற்றும் மோதித் திரும்பின. காதல் அனல் அடிக்க, ஏழிலைப் பாலையும் சூடேறியது. பூக்கள் சொரிந்து அவர்களது உடல்களை மூடின. ஆனாலும் உள்ளுக்குள் மலர்ந்துகொண்டே இருந்தன.
- பாரி வருவான்...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வீரயுக நாயகன் வேள் பாரி - 4
பச்சைமலையில் யானைப்பள்ளத்தின் தென்திசையில் இருந்த முகட்டில், ஒரு வேங்கைமரம் தனித்து நின்றிருந்தது. இப்படி ஓர் இடத்தில், தனித்த வேங்கை மரத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
எவ்வி, அதன் மீது ஏறி அதன் உச்சியை அடைந்தான். மேற்கொப்பில் நின்று நான்கு புறமும் பார்த்தான். மொத்த மலையும் அந்த வேங்கைமரத்துக்குக் கீழ்ப்பணிந்து இருந்தது. காற்று, எல்லா திசைகளில் இருந்தும் சுழன்று வந்தது. தனது வேகத்துக்கு ஏற்ப வேங்கை மரத்தை விரல்களால் கோதி இசை கூட்டிச் சென்றது காற்று.
இன்று முருகனுக்கும் வள்ளிக்கும் தலைநாள் இரவு. குறிஞ்சி நிலத்தின் பேரழகே இந்த நாளுக்காக வடிவமைக்கப்பட்டதுதான். கைக்கு எட்டும் தூரத்தில் வெள்ளிகள் பூத்துக்கிடக்க, கால்களுக்கு அடியில் காடு மிதக்க, காமம் பெருத்து, காதல் தழைக்க இதுவே ஏற்ற இடம் என எண்ணியபடி கீழ் இறங்கினான்.
அன்று பகல் முழுவதும் காட்டின் ஒவ்வொரு திசைக்கும் ஓடினான். செவ்வருவிக்குப் பக்கத்தில் விளைந்த சந்தனமரம் ஒன்று இருப்பது அவனுக்கு தெரியும். நண்பகல் கடந்தபோது சந்தனமரக் கிளைகளோடு வேங்கைமர அடிவாரம் வந்தடைந்தான். வரும்போதே சிலாக்கொடியை அறுத்து வந்திருந்தான்.
வேங்கைமரத்தின் உச்சியில், நாற்கிளைகளுக்கு நடுவில் சந்தனமரக் கட்டைகளைக் குறுக்கிட்டு அடுக்கி, சிலாக்கொடியால் இறுகக் கட்டினான். கொடிகளிலே மிக உறுதியானது சிலாக்கொடி. இவ்வளவு உயரத்தில், பரணை உலையவிடாமல் இறுகப்பிடித்திருக்கும் ஆற்றல் அதற்குத்தான் உண்டு. அதன் இன்னொரு சிறந்த குணம், கொடியை அறுத்த மூன்று நாட்கள் வரை அதன் சாறு கசிந்து வெளிவந்தபடியே இருக்கும். அதில் இருந்து வரும் நறுமணத்துக்கு ஈடே கிடையாது. சந்தனமர வாசத்தில், சிலாக்கொடியின் நறுமணத்தோடு வேங்கைமர உச்சியில் திரும்பும் திசை எல்லாம் பச்சைமலைக் காற்றை அள்ளி அணைத்து எம் குறிஞ்சித் தலைவனும் தலைவியும் நடத்தும் ஆதிக்கூத்து, எம் குலத்தைப் பெருக்கி, காதலைத் தழைக்கச்செய்யும்.
பெருமிதத்தோடு வேலையை முடித்த எவ்வி, தினைப்புனம் காக்கும் இடத்துக்கு வந்தபோது மாலை மயங்கி, கருக்கத் தொடங்கியது. அவன் எதிர்பார்த்ததுபோலவே வள்ளியோடு முருகன் வந்தான். காதலிக்கத் தொடங்கியதும் கைகூடும் ஓர் அழகு இருக்கிறதே, மனிதர்களைக் கண்டு மலர்களும் மயங்கும் காலம் அதுதான்.
முருகன் கேட்கும் முன்னரே மேல் திசை நோக்கி கையைக் காட்டினான் எவ்வி. தலையை உயர்த்தி மேலே பார்த்தான் முருகன். ‘நிலவிலே பரண் அமைத்துவிட்டானா?’ என்பதுபோல இருந்தது அவன் பார்வை. ‘நான் அதை நோக்கி படி அமைத்திருக்கிறேன். அங்கு போவது உன் வேலை' எனப் பதிலளிப்பது போன்று இருந்தது எவ்வியின் பார்வை.
முருகனும் வள்ளியும் பின்தொடர, தீப்பந்தம் ஏந்தியபடி முன் நடந்தான் எவ்வி. தனக்குப் பின்னால் இருளுக்குள்தான் எவ்வளவு விளையாட்டு? `சின்னச்சின்னச் சிரிப்புகளுக்கு என்ன அர்த்தம்?, இது பதிலா... கேள்வியா?, இவ்வளவு மெதுவாகப் பேச முடியுமா? பின்தொடரும் ஓசையே கேட்காமல் இருக்கிறதே! அவன் வள்ளியை அழைத்து வருகிறானா... அல்லது சுமந்து வருகிறானா? திரும்பிப் பார்த்தால் அவர்களின் நெருக்கம் குலைந்துவிடும். வேண்டாம்' என யோசித்தபடியே, வேங்கைமர அடிவாரம் வந்தான் எவ்வி. பந்தம் ஒளி அந்த இடம் படரும்போதுதான் தெரிந்தது, முருகனும் வள்ளியும் ஏற்கெனவே அங்கு வந்து அமர்ந்து இருந்தது. எவ்வி அதிர்ந்துபோனான்.
“என்னைப் பின்தொடர்ந்து வருகிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்!”
“மனிதனால் காதலை அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதரை அழைத்துவரும்.”
எவ்வியிடம், பேச வார்த்தைகள் இல்லை. வணங்கி விடைபெற்றான். அப்போது எவ்வியின் கையில் ஒரு பொருளைக் கொடுத்தான் முருகன்.
“எம் காதலின் பரிசு” என்றாள் வள்ளி.
அவர்கள் மர ஏணியில் ஏறிச்சென்று பரணில் அமர்ந்தனர். எங்கும் சூழ்ந்திருந்த இருளுக்குள் இருந்து, காற்று இசையைச் சுரந்தது. அசையும் இலைகளுக்கு இடையில் விண்மீன்கள் கண்சிமிட்டின.
“இத்தனை கண்களுக்கு இடையில் நாம் வெட்கம் களைவது எப்படி?” என்று கேட்டபடி வள்ளி நாணினாள்.
முருகன் சொன்னான், “வெட்கம் களைகையில் இவற்றைப் பார்க்க கண்கள் ஏது நமக்கு?”
சுடர் அணைவதுபோல பேச்சுக்குரல் மெள்ள அணைந்தது. வேங்கைமரம் தனது கிளைகளை அசைக்கத் தொடங்கியது. சந்தன வாசத்துக்குள் சிலாக்கொடியின் நறுமணம் இறங்கியபோது, காற்று எங்கும் சுகந்தம் பரவி மேலெழுந்தது. மரத்தின் கொப்பொன்றில் இருந்த ஆண் பல்லி குரலெழுப்பி, தனது துணையை அழைத்தது. ஓசை கேட்ட திசை நோக்கி முருகன் திரும்பியபோது, அவன் கன்னம் தடுத்து வள்ளி சொன்னாள், “அடுத்தவர் காதல் காண்பது பிழை.”
“முதலில் அதனிடம் சொல்” என்றான் முருகன். சிதறித் தெறித்த வள்ளியின் சிரிப்பொலியை, காடு எங்கும் அள்ளிக்கொண்டு போனது காற்று.
எவ்வி, காரமலையின் அடிவாரத்தில் இருக்கும் தனது ஊருக்கு வந்துசேர்ந்தான்.
“முருகன் எங்கே?” என்று கேட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு பதிலைச் சொன்னான். இதுவரை அடையாத ஒரு மகிழ்வை இப்போது அடைந்திருப்பதாக அவனது மனம் துள்ளிக்குதித்தது. முருகன் தந்த காதல் பரிசைப் பார்த்தான். அது ஒரு பூண்டுபோல் இருந்தது. `இதை என்ன செய்வது?' என யோசித்தபடி பூண்டைத் தட்டி, பக்கத்தில் நீர் நிறைந்திருந்த பைங்குடத்தில் போட்டான். நீருக்குள் இருந்து குமிழ்கள் இடைவிடாது வந்தன. அந்த நீர், பழச்சாறுபோல மாறிக்கொண்டிருந்தது.
அதை மூங்கில் குடுவையில் ஊற்றி ஒரு மிடறு குடித்தான். அதன் சுவைக்கு ஈடு சொல்ல வார்த்தைகளே இல்லை. மனிதர்கள் யாரும் இதுவரை இப்படி ஒரு சுவையை அனுபவித்திருக்க மாட்டார்கள். குடத்தில் இருந்த மொத்தத்தையும் குடித்து முடித்தான். குடத்தின் கீழ் பூண்டு அப்படியே இருந்தது. மீண்டும் குடம் நிறையத் தண்ணீரை ஊற்றினான். நீர், பழச்சாறாக உருமாறியது. மீண்டும் அதைக் குடிக்கத் துணிந்தபோது, காட்டின் கீழ்ப்புறம் இருந்து பெரும் ஓசை கேட்டது. குடத்தை அப்படியே வைத்துவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தான்.
கையில் தீப்பந்தங்களோடு மனிதக் கூட்டம். வேட்டுவன் பாறைக்குப் பின்புறமாக நடந்து, காட்டின் தென்திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். `யார் இவர்கள்?' `இந்த நள்ளிரவில் பந்தம் ஏந்தி எங்கே சென்று கொண்டிருக்கின்றனர்?' என, ஊரில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. முதுகிழவன் சொன்னான், “நாம் கீழே இறங்கிப்போய், அவர்கள் யார்... எங்கே போகின்றனர்... என்ன இடர் நேர்ந்தது என்று கேட்போம்” என்றார்.
“நம் மீது தாக்குதல் தொடுத்துவிட்டால்?”
“இது நம் இடம். நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது”
“சரி'' என்று சிலர் மட்டும் புறப்பட்டுச் சென்றனர். மற்றவர்கள் குடிலைக் காத்தபடி மேலேயே நின்றனர்.
முதுகிழவனும் எவ்வியும் முன்னால் நடக்க, இளைஞர் சிலர் பின்தொடர்ந்தனர். மலைச்சரிவில் வேகமாக இறங்கினர். எங்கு இருந்தோ வந்த பலத்த காற்று அவர் மீது மோதிச் சென்றது. எவ்விக்கு, பரணை நோக்கி நினைவு சென்றது. `இந்தக் காற்றுக்கு பரண் தாங்குமா?' என, மனதுக்குள் சின்னதாக அச்சம் உருவானது. அவன் தென்திசை உச்சியை அண்ணாந்து பார்த்தான். மறுகணமே அடுத்த சந்தேகம் உருக்கொண்டது, `ஒருவேளை வேங்கைமரம் உந்தித் தள்ளியதில் இருந்துதான் இந்தக் காற்றே உருவாகியிருக்குமோ?'
பெருங்கடல் நடுவே மிதக்கும் சிறு தெப்பம்போல், உச்சிக்காட்டின் உள்ளங்கையில் ஆடிக்கொண்டிருந்தது பரண். வெகுதூரத்தில் பெண் யானையின் பிளிறல் கேட்டது. யானைகள் முயங்கிக் கூடுகின்றன. நிலவைப் பார்த்தபடி இருந்த வள்ளி சொன்னாள், “இன்னும் சிறிது நேரத்தில் இரவுப் பூக்கள் மலரத் தொடங்கும்.”
“எப்படிச் சொல்கிறாய்?” - மெல்லியதாகக் கேட்டது முருகனின் குரல்.
“பூவின் மேலிதழ் விலகத் தொடங்கி, மூன்றாம் நாழிகை முடியப்போகிறது.”
“நாம் பரண் ஏறத் தொடங்கும் போதேவா?”
“இல்லை, நீங்கள் ஆண் பல்லியின் அழைப்பைக் கேட்டுத் திரும்பியபோது.”
“நீ எந்த மலரைச் சொல்கிறாய்?”
“மலர்களில் ஏது வேறுபாடு? எல்லா மலர்களும் ஒரே இனம்தான்… பெண் இனம்.”
இரவு மலர்கள் மலரத் தொடங்கின. திசை எங்கும் புதிய நறுமணம் படர்ந்தது. மூங்கில் அடர்ந்த கீழ்த் திசையில் இருந்து குழலிசையைக் காற்று அள்ளிவந்தபோது, அதனுடன் காதலின் உயிரோசையும் இணைந்தது. வேங்கைமரம் நிலைகொள்ளாமல் ஆடியது.
தீப்பந்தம் ஏந்தி, கடுங்குரலோடு சென்றுகொண்டிருந் தவர்களை, வேடர் குல முதுகிழவன் மறித்துக் கேட்டான்...
“எங்கே போகிறீர்கள்?”
முதுகிழவனின் கேள்விக்குப் பெருங்குரலில் பதில் சொன்னான் ஒருவன், ``நாங்கள் கொடி குலத்தைச் சேர்ந்தவர்கள். பச்சைமலையின் ஈரடுக்கின் கீழ் இருக்கிறோம். எங்களின் குலமகள் வள்ளியைக் காணவில்லை. நேற்று காலை குடில் விலகி, தினைப்புனம் காக்கச் சென்றாள். ஆனால், அவள் பரணுக்குப் போகவில்லை. எங்கே போனாள் என அவள் தோழிகளுக்கும் தெரியவில்லை. அவர்களாகத் தேடிப்பார்த்துவிட்டு, மாலையில்தான் எங்களிடம் வந்து சொன்னார்கள். அப்போது முதல் நாங்கள் தேடிவருகிறோம். எங்கேயும் காணவில்லை. கீழ்த்திசைக்கு ஒரு குழு சென்றுள்ளது. நாங்கள் யானைப்பள்ளம் நோக்கிப் போகிறோம்” என்றான்.
எவ்விக்கு, அப்போதுதான் ஆபத்து புரிந்தது. `இவர்களை அந்தப் பக்கம் போகவிடக் கூடாது' எனச் யோசிக்கையில், முதுகிழவன், “இந்தப் பெருங்காட்டில் நீங்கள் மட்டும் எப்படித் தேடுவீர்கள்? நாங்களும் உடன் வருகிறோம். ஆளுக்கு ஒரு பக்கமாகத் தேடுவோம்” என்றார்.
ஆபத்து, பேராபத்தாக மாறியதை எவ்வி உணர்ந்தான். `என்ன செய்யலாம்?' என யோசிப்பதற்குள் முதுகிழவன், “ஏன் நிற்கிறீர்கள்... புறப்படுங்கள்” என்று சொல்லி, அவர்களோடு நடக்கத் தொடங்கினார்.
“சற்று நில்லுங்கள். நான் மற்றவர்களையும் அழைத்துவருகிறேன்” என்று சொன்ன எவ்வி, அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் குடிலை நோக்கி விரைந்து ஓடினான். `சரி, இன்னும் கூடுதல் ஆட்களோடு சென்று தேடுவது நல்லதுதான்' என யோசித்த அவர்கள், அவன் வரும் வரை பொறுத்திருக்க முடிவுசெய்தனர். கொடி குலத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் மட்டும் சொன்னார், “அடுத்த குலப்பெண்களுக்கு ஆபத்து என்றால், உங்களைப்போல் உதவிசெய்ய இன்னொருவர் இந்தக் காட்டில் இல்லை” என. முதுகிழவன் சற்றே பெருமிதத்தோடு தலையசைத்தான்.
அதே வேகத்தில் எவ்வி மலை மேல் இருந்து இறங்கி வந்தான். அவனுக்குப் பின்னால் ஒருவன் பைங்குடத்தைத் தலையில் வைத்துத் தூக்கிவந்தான். வேறு ஆட்கள் யாரும் வரவில்லை. ‘என்ன... இவன் யாரையும் அழைக்காமல், பானையோடு ஒருவனை மட்டும் அழைத்து வருகிறான்!’ என யோசிக்கையில், ‘`மற்றவர்கள் எல்லாம் ஆயுதங்களோடு வருகிறார்கள். அவர்கள் வருவதற்குள் நீங்கள் இந்தப் பழச்சாறை அருந்தி இளைப்பாருங்கள்” என்று சொல்லி, மூங்கில் குவளையில் ஆளுக்கு ஒரு குவளையாக அந்தப் பூண்டுச்சாற்றைக் கொடுத்தான். பழச்சாற்றின் சுவையாலும் அது தந்த எல்லையற்ற மயக்கத்தாலும், ‘`இதற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை'’ என ஆளாளுக்கு அதைப் புகழத் தொடங்கினர்.
பானை, முழுவதும் தீர்ந்தது. அதற்குள் இன்னொருவன் தலையில் பானையோடு வந்து சேர்ந்தான். பூண்டை எடுத்து அந்தப் பானையில் போட்டான் எவ்வி. அடுத்த சுற்று எல்லோரும் குடித்தனர். முதுகிழவன் மட்டும் புலம்பினான்,
“ `நிலமகள்... குலமகள்' என என்னென்னமோ சொன்னார்கள். இப்போது பழச்சாற்றைக் குடிக்க முந்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லிக்கொண்டே மூன்றாம் குவளையை அருந்தியவன், மயங்கிச் சாய்ந்தான். எல்லோரும் விடாமல் குடித்து அதிமதுரச் சுவையில் மூழ்கினர்.
அவர்கள் குடிக்கும்போது சிந்திய துளிகள் இந்தப் புற்கள் எங்கும் சிதறின. அதன் வாசனை காற்றில் கலந்து எங்கும் பரவியது. நுகர்வுச்சக்தியை அதிகம்கொண்டிருந்த பாம்புகள், காடு முழுவதும் இருந்து பெரும்வேகம்கொண்டு இங்கு வந்தன. பாம்புகளின் எண்ணிக்கை, கணக்கில் அடங்காமல் இருந்தது. ஒவ்வொரு புல்லுக்கும் ஒரு பாம்பு வந்து சேர்ந்தது. புற்களில் இருந்த பழச்சாற்றுத் துளியை அவற்றை தம் நாவால் நக்கின. புல்லின் ஓரம் இருந்த சுனைஈக்கிகள் அவற்றின் நாவுகளை இரு கூறுகளாக அறுத்தன. ஆனால், பழச்சாற்றின் சுவை அவற்றை விடுவதாக இல்லை. மீண்டும் நக்கின. அடித்தொண்டை வரை நாக்கு இரு கூறுகளாகப் பிளந்தது. எல்லா பாம்புகளுக்கும் நாக்குகள் இரு கூறுகளாயின. அன்றில் இருந்து இந்தப் புற்கள் `நாக்கறுத்தான் புற்கள்' ஆயின.
கதையைச் சொல்லியபடி, நீலன் முன் நோக்கி நடந்துகொண்டிருந்தான். பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த கபிலருக்கு, கண்கட்டுவதுபோல் இருந்தது. எங்கும் இருள் அடர்ந்தது. நீலன், இருளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தான்.
கபிலருக்கு மீண்டும் நினைவு திரும்பிய போது மறுநாள் பிற்பகலாகியிருந்தது. நடந்த களைப்பை மீறி, பசி அவரை எழுப்பியது. சாணத்தால் மெழுகப்பட்ட ஒரு குடிலில் இருந்த மரப் படுக்கையின் மேல் அவர் படுக்க வைக்கப் பட்டிருந்தார். கண்விழித்து எழுந்தவருக்கு, தான் எங்கு இருக்கிறோம் என்பது குழப்பமாக இருந்தது. ‘இது எந்த இடம்? இங்கே எப்படி நான் வந்தேன்?' என்று கேள்விகள் எழுந்தபடி இருந்தன. அவரது வலதுகாலில் பச்சிலைகொண்டு கட்டு போடப்பட்டிருந்தது. வீட்டுத் திண்ணையின் ஓரம் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்; சிறு பறை ஒன்றை கோலால் அடித்து ஒளியெழுப்பியபடி, குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தனர்.
“நேற்று தள்ளாடித் தடுமாறி வந்தது இவர்தானா?” என்று ஒரு சிறுவன் கபிலரைப் பார்த்து கேட்டுவிட்டு ஓடினான்.
`நான் எப்போது தள்ளாடி வந்தேன்?' என யோசிக்கையில், சற்று குழப்பமாகவே இருந்தது. கபிலர் எழுந்துவிட்ட தகவல் கிடைத்ததும் நீலன் அந்த இடம் வந்து சேர்ந்தான்.
“இது என்ன ஊர்? நான் எங்கே இருக்கிறேன்?”
“நீங்கள் வரவேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஆனால், வந்தது தெரியாமல் வந்தீர்கள்.”
“புரியும்படியாகச் சொல்” என்றார் கபிலர்.
“உங்களின் வலதுகால் தசை பிறண்டுவிட்டது. அந்த நிலையில் உங்களால் அதிகத் தொலைவு நடக்க முடியாது. நடக்க, நடக்க வலி கூடத்தான் செய்யும். பொழுது வேறு மறைந்துகொண்டிருந்தது. இருட்டுவதற்குள் இந்த இடம் வந்து சேர வேண்டும். இடையில் நாகக் கிடங்கு வேறு. இந்தக் காட்டில் எத்தனை வகை பாம்புகள் இருக்கின்றனவோ, அத்தனை வகையான பாம்புகளும் அங்கு உண்டு. நாங்கள் வெளியில் இருந்து வரும் யாரையும், அந்தப் பக்கமாக அழைத்துவர மாட்டோம்; ஆற்றைச் சுற்றிதான் அழைத்து வருவோம். ஆனால், உங்களுக்கு அடிபட்டதால் ஆற்றைச் சுற்ற முடியாது எனத் தெரிந்துவிட்டது. சரி, நாகக் கிடங்கின் வழியே வேகமாக அழைத்துச் செல்லலாம் என்றால், நீங்கள் பனைமரத்தைக் கடப்பதற்குள் உட்கார்ந்துவிட்டீர்கள். எனவே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களுக்கு `தனைமயக்கி’ மூலிகையைக் கொடுத்தேன்” என்றான்.
“அது என்ன மூலிகை? நான் கேள்விப்பட்டதே இல்லையே!” என்றார் கபிலர்.
“அது உங்களின் நினைவை மயக்கும். அதனால் நீங்கள் வலியை மறப்பீர்கள். அதே நேரத்தில் உங்களின் இயக்கத்தை நிறுத்தாது. அதனால்தான் உங்களின் தோளைத் தாங்கிப்பிடித்து என்னால் அழைத்துவர முடிந்தது. நீங்களும் தள்ளாடித் தடுமாறி நடந்து வந்தீர்கள்.”
கபிலர், வியப்பில் உறைந்துபோனார். “என்னை மயக்கவைத்து நடக்கவைத்தாயா! இது எப்படிக் கைகூடியது?”
“கைகூடியதால்தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள், வந்தது தெரியாமல்.”
பெண் ஒருத்தி மண் கலயத்தில் கூழ் கொண்டுவந்து கொடுத்தாள்.
“குடியுங்கள், நீங்கள் உணவருந்தி நாளாகப்போகிறது” என்றான் நீலன்.
கூழ் முழுவதையும் குடித்த பிறகுதான் தெளிச்சி ஏற்பட்டது.
“அது என்ன பழச்சாறு? நேற்று ஒன்று சொன்னாயே. பெயர் மறந்துவிட்டேன்” என்றார் கபிலர்.
“அது உங்களுக்கு நினைவு இருக்கிறதா?” எனக் கேட்டான் நீலன்.
“நன்றாக நினைவு இருக்கிறது. `புல்லில் சிந்திய அந்தப் பழச்சாற்றைப் பாம்புகள் வந்து நக்கியதால், அவற்றின் நாக்குகள் இரு கூறுகளாகி விட்டன' எனச் சொன்னது வரை நினைவு இருக்கிறது.”
“அதன் பிறகுதானே கதையின் முக்கியமான பகுதியே இருக்கிறது” என்றான் நீலன்.
“எனக்கு முற்றிலும் நினைவில்லை. அதன் பிறகு முருகனும் வள்ளியும் என்ன ஆனார்கள்? என்னதான் நடந்தது?”
“மொத்தக் கதையையும் என்னால் திருப்பிச் சொல்ல முடியாது. பழச்சாற்றைக் குடித்தவர்கள் மயக்கம் தெளிய பல நாட்கள் ஆனதாம். அதிகம் குடித்தது எவ்விதான். எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை. மயக்கம் கலைந்து மரத்தடிக்குப் போனானாம். வேங்கைமரத்தில் கட்டப்பட்டிருந்த சந்தனக்கட்டைகள் தழைத்து, காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்த்தும் எவ்விக்குப் புரிந்தது. புன்னகையோடு ஊர் திரும்பிவிட்டான்.
“முருகன் எங்கே... ஏன் அழைத்துவரவில்லை?'' என்று கேட்டதற்கு, “காதலை மனிதனால் அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதனை அழைத்துவரும்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பூண்டுச்சாற்றை அருந்தப் போய்விட்டான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, காட்டுக்குள் சந்தனவேங்கை மரங்கள் புதிதாகத் தழைத்திருப்பதாகச் சொன்னார்கள். அதன் பக்கத்திலேயே சிலாக்கொடியும் படர்ந்திருந்தது. எங்கு சந்தனவேங்கை இருக்கிறதோ, அங்கு முருகனும் வள்ளியும் இருப்பதாக எங்கள் நம்பிக்கை. அதன் பிறகு, இந்தப் பெருங்காட்டில் காதலின் அடையாளமாக சந்தனவேங்கை மாறியது.
முருகனுக்குப் பிறகு, குலத்தலைவன் ஆனான் எவ்வி. கொடி குலமும் வேடர் குலமும் இணைந்தன. இருவரும் தங்களது இடங்களை விட்டு அகன்று, மூன்றாம் மலையான ஆதிமலையை அடைந்தனர். அங்கு புதுநகர் ஒன்றை அமைத்தான் எவ்வி. அதன் பிறகு அவனது வம்சாவழிகள் தலைமை தாங்க, வேளீர் குலம் தழைத்தது. அந்த வம்சத்தின் நாற்பத்திரண்டாவது தலைவன்தான் வேள்பாரி.
இதுதான் வேல்முருகனில் தொடங்கி வேள்பாரி வரையிலான கதை.”
கதையைக் கேட்ட கபிலர், கூழ் குடித்த கலயத்தை நீண்ட நேரம் கையில் வைத்தபடியே அமர்ந்து இருந்தார்.
“நான் இப்போது தனைமயக்கி மூலிகை எதுவும் தரவில்லை” என்று நீலன் சொன்ன போதுதான், ஆச்சர்யம் அகன்றார். கலயத்தை அந்தப் பெண்ணிடம் திருப்பித் தரும்போது கபிலரின் வாய் முணுமுணுத்தது,
“தனைமயக்கி மூலிகை, இலைகளில் மட்டும் அல்ல; கதைகளிலும் இருக்கிறது.”
- பாரி வருவான்...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வீரயுக நாயகன் வேள் பாரி - 5
தனது நினைவில் இல்லாத ஒரு நாளைப் பற்றி கேள்விப்பட்ட கணத்தில் இருந்து, கபிலர் சற்றே அதிர்ந்துபோயிருந்தார். நீலன், அவர் அருகில்தான் உட்கார்ந்திருந்தான். அவனிடம் பேச கபிலரின் மனம் விரும்பினாலும், அவரது எண்ணங்கள் முழுவதும் கைதவறிப்போன நினைவுக்குள்தான் இருந்தன.
நீலன் எழுந்தான்.
“ஊர்ப் பழையன் உங்களைப் பார்க்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார். அவரை அழைத்துவருகிறேன்” என்று சொல்லிச் சென்றான். ஊரின் மிக வயதான ஆணை `பழையன்' என்றும், பெண்ணை `பழைச்சி' என்றும் அழைப்பது வழக்கம்.
அதே யோசனையில் இருந்த கபிலர், தான் உட்கார்ந்திருக்கும் மரப்பலகையை விரலால் கீறிக்கொண்டிருந்தார். `எவ்வளவு அகலமான பலகையாக இருக்கிறது. இது என்ன மரம்?' என்று அதை உற்றுப்பார்த்தார். அவரால் கண்டறிய முடியவில்லை. அந்தப் பெண், சிறு மூங்கில் கூடையில் நாவற்பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்ட கபிலர் “இது என்ன மரம்?” என்று கேட்டார்.
“திறளி மரம்” என்று சொன்னாள்.
“திறளி மரம் இவ்வளவு அகலமாக இருக்குமா!”
“இது நடுப்பாகம்தான். அடிப்பாகம் இன்னும் அகலமானது. எங்களது குடிலில் இருக்கிறது. வந்து பார்க்கிறீர்களா?”
கபிலர், பதில் ஏதும் சொல்லவில்லை. திறளி மரம் பற்றிய பழம்பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. `தன் மனைவி உடன் இருந்தாலும் அழகியை நேசிக்க எந்த ஆணும் தவறுவது இல்லை. அதேபோல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் மூவரும் தங்களுக்கு எனத் தனித்த மரங்களை அரசச் சின்னங்களாகக் கொண்டிருந்தாலும், மூவருக்கும் பிடித்த மரமாக திறளி மரமே இருக்கிறது' என்று சொல்கிறது அந்தப் பாடல். அதற்குக் காரணம், யவன வணிகத்தின் திறவுகோலாகத் திறளி இருப்பதுதான்.
யவன நாட்டோடு வணிகத்தொடர்பு உருவாகி, பல தலைமுறைகள் உருண்டோடிவிட்டன. இன்று அது உச்சத்தில் இருக்கிறது. இந்த வணிகத்தில் பெரும்செல்வமாக யவனர்கள் கருதுவது மிளகைத்தான். கறுத்து, சிறுத்த அந்தத் தானியத்துக்காக, யவனர்கள் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர். யவனக் கப்பல்களை தமிழ் நிலத்தின் துறைமுகங்களை நோக்கி இழுத்துவருவது மிளகுதான்.
பெரும் மதில்போல் கடலில் மிதந்துகொண் டிருக்கும் யவனக் கப்பல்களில் மிளகை ஏற்ற, கரையில் இருந்து ஒற்றை அடிமரத்தாலான தோணியில் எடுத்துச் செல்வார்கள். அந்தத் தோணி, திறளி மரத்தால் ஆனது. துறைமுகங்களில் நிற்கும் திறளி மரத் தோணிகளே மிளகு வணிகத்தின் குறியீடாக மாறின. வணிகர்கள் கடலில் மிதக்கும் கப்பல்களை எண்ணுவதைவிட, கரையில் மிதக்கும் திறளி மரத் தோணிகளை எண்ணியே செல்வச்செழிப்பை மதிப்பிடுகின் றனர். பெரும்பானையில் இருக்கும் உணவை அள்ளிப் போடும் அகப்பையைக்கொண்டு அளவிடுவதைப்போல.
யவன வணிகர்களுக்கு, இப்போது எல்லா கணக்குகளும் மிகத்தெளிவு. நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறந்து விளங்கும் இந்த வணிகத்தை, அவர்கள் துல்லியமான கணக்குகளின் மூலமே அளவிட்டனர். `தேர்ந்த மாலுமிகளால் செலுத்தப்படும் கப்பல்கள், 40 இரவுகளும் 40 பகல்களும் கடக்கும் தொலைவைக் கொண்டுள்ளது மேலைக் கடற்கரை' என்பது அவர்களின் கணக்கு. திறளியை `டிரோசி' என்றே அவர்கள் உச்சரித்தனர்.
பேரியாறு, காவிரி, பொருநை என மூன்று நதிகளின் முகத்துவாரத்தில் இருந்த மூவேந்தர்களின் துறைமுகங்களில் எத்தனை டிரோசிகள் நிற்கின்றன என்ற கணக்குகள் நைல்நதிக்கரை நகரத்தில் எழுதிப் பாதுகாக்கப் பட்டன.
நீலக் கடலுக்கு அப்பால் விரிந்துகிடக்கும் நாடுகளை வணிகமே இணைத்தது. அதுவே வரலாற்றை உந்தித் தள்ளியது. யவனர்கள் தங்களுக்குத் தேவையான முத்தும் மிளகும் நவரத்தினங்களும் செழித்துக்கிடக்கும் பூமியாக தமிழ் நிலத்தைக் கண்டனர். அழகின் பித்தர்கள் கூடிவாழும் செல்வவளம்மிக்க நாடாக யவன தேசத்தை தமிழ் வணிகர்கள் அறிந்துவைத் திருந்தனர். இருநாட்டு வணிகர்களும் அரசியல் சதுரங்கத்தில் முன்பின் காய்கள் நகர்வதற்குக் காரணமாக இருந்தனர்.
வணிகமே வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கிறது. இந்தக் கருத்தோடு தொடக்கக் காலத்தில் கபிலருக்கு உடன்பாடு இல்லை. ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக தனது கண் முன்னால் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை அறிந்த பிறகு, அவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டார். கடல் கடந்து நடக்கும் இந்தப் பெரும் வணிகம்தான் பேரரசுகளை விடாமல் இயக்குகிறது. அறுபது வயதைக் கடந்துவிட்ட குலசேகரபாண்டியனுக்கு தேறலை ஊற்றிக்கொடுக்க ஒரு `கிளாசரினா' தேவைப்படு கிறாள்.
கடற்பயணத்தின் தொலைவும் கப்பல்களில் ஏற்றப்படும் பொருட்களும் பெருக்கெடுக்கும் லாபமும் கணக்குகளால் கண்டறியப்பட்டபடி இருக்க, வணிகமும் கணிதமும் பேரரசுகளின் இரு கண்களாகின.
மழை கொட்டி முடித்த ஒரு நண்பகல் நேரத்தில் கொற்கைத் துறையில் நின்ற கபிலர், கொந்தளிக்கும் கடல் அலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து போன யவன வணிகர்கள், டிரோசியைப் பற்றி பேசியபடி சென்றனர். திறளியை யவனர்கள் இப்படித்தான் உச்சரிக்கின்றனர் என்பதை கபிலர் அன்றுதான் கேட்டு அறிந்தார்.
பெரும்வணிகத்தின் திறவுகோலாக இருக்கும் திறளி, இங்கு படுத்து உறங்கும் பலகையாகக் கிடக்கிறது. அதுவும் இவ்வளவு அகலமான திறளி மரம், செல்வத்தின் பெரும்குறியீடு அல்லவா! எண்ணங்கள் எங்கெங்கோ ஓடியபடி இருக்க, விரல் நகத்தால் திறளி மரத்தின் மீது அழுத்திக் கோடு போட முயற்சித்துக்கொண்டிருந்தார் கபிலர். அப்போது நீலன், ஊர்ப் பழையனை அழைத்து வந்தான்.
அவரது உயரமே கபிலரை ஆச்சர்யப்பட வைத்தது. சுருங்கி மடிந்திருக்கும் தோல்தான் வயோதிகத்தைச் சொன்னது. மற்றபடி நெடும் உயரம்கொண்ட அந்த மனிதரின் கை எலும்புகள், உருட்டுக்கட்டைகளைப்போல இருந்தன. அடர்த்தியற்ற நரைமுடியை பின்னால் முடிச்சிட்டிருந்தார். அவரது உடல் முழுவதும் தழும்புகள் திட்டுத்திட்டாக இருந்தன. எத்தனை ஈட்டிகளுக்கும் அம்புமுனைகளுக்கும் தப்பிப் பிழைத்த உடல் இது. இவ்வளவு வயதான ஆண்களை இப்போது எல்லாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது.
பழையன் வந்து, திறளி மரப் பலகையில் கபிலருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். நீலன் நின்றுகொண்டிருந்தான்.
“தசைப்பிடிப்பு இன்று சரியாகிவிடும். நாளை நீங்கள் நடக்கலாம்” என்றார் பழையன்.
கபிலருக்கு அப்போதுதான் தசைப்பிடிப்பு நினைவுக்கு வந்தது.
“நீலன், என்னைப் பாதுகாப்பாக அழைத்துவந்துவிட்டான்” என்றார் கபிலர்.
“சிறுவன். இன்னும் பக்குவம் போதாது. நாகக்கிடங்கின் ஆபத்தை அவன் உணரவில்லை” என்றார் பழையன்.
“ஆற்றைச் சுற்றிவந்து சேர்வது முடியாது என்பதால், அப்படிச் செய்ததாகச் சொன்னான்” என்றார் கபிலர்.
“சுற்றிவந்து சேர முடியாமல் போகலாம், ஆனால், உயிரோடு வந்து சேர வேண்டும் அல்லவா?’’
கபிலர், நீலனைப் பார்த்தார். இளைஞர்களின் துணிவை பெரியவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை. அதற்காக இளைஞர்கள் கவலைகொள்வது இல்லை. நீலன் கவலைப் படாமல்தான் நின்றுகொண்டிருந்தான். ஆனாலும் பழையனின் வார்த்தைகளுக்கு முன் பணிவுகொண்டு நின்றான். நாவற்பழம், பழையனுக்கு மிகவும் பிடிக்கும். எனவே, இந்த வசவு வேகமாக முடிவுக்கு வரும் என அவனுக்குத் தெரியும்.
“ஏன் பழத்தை எடுக்காமல் இருக்கிறீர்கள்? எடுத்து உண்ணுங்கள்” என்று கபிலருக்கு அருகில் கூடையை நகர்த்தினார் பழையன்.
கூடையில் இருப்பது, காட்டில் பல்வேறு நாவல்மரங்களில் இருந்து பறித்த பழங்கள். ஒவ்வொரு நாவற்பழத்துக்கும் ஒவ்வொரு வகையான சுவை உண்டு. எந்த நாவற்பழத்தை முதலில் எடுத்து உண்ண வேண்டும் என்பதில் இருந்து தொடங்குகிறது காடு பற்றிய அறிவு. புதிதாக எவராவது வந்தால், அவர்களுக்குக் கூடை நிறைய நாவற்பழத்தைத் தருவது விருந்தோம்பல் மட்டும் அல்ல; காடு பற்றிய அவர்களது அறிதலை அளத்தலும்தான்.
“எடுத்துச் சாப்பிடுங்கள்” என்று பழையன் கூடையை கபிலரிடம் தள்ளியபோது, கபிலர் முதற்பழத்தை எடுத்து வாயில் போட்டார். அதில் இருந்தே தெரிந்துவிட்டது, காடு பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று. ‘காடற்ற மனிதனைக் காட்டுக்குள் அழைத்து வந்திருக்கிறாய்' என்று நீலனை முறைப்பதைப்போல் இருந்தது பழையனின் பார்வை.
`சரி, இனி நாம் விளையாடவேண்டியதுதான்' என்று முடிவுசெய்தார் பழையன். நீலனின் கண்கள், அவர் தேர்ந்தெடுக்கப்போகும் பழத்தின் மீது இருந்தது. அவர் உட்கார்ந்த கணத்தில் தனக்கான பழத்தைத் தேர்வுசெய்திருப்பார் என நீலனுக்குத் தெரியும். ஆனாலும், அவர் இன்றைய விளையாட்டை எதில் இருந்து தொடங்கப் போகிறார் என்பதை அறிய ஆவலோடு இருந்தான். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் பழையன் முதற்பழத்தை எடுத்து வாயில் போட்டுவிட்டார். நீலனால் அவர் எந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டார் என்பதைக் கவனிக்க முடியவில்லை.
கபிலரின் கண்களும் பழையனின் விரல்கள் மீதுதான் இருந்தன. மடிப்புகள் அலையலையாக இறங்கி கருமையேறியிருக்கும் விரல்கள். நகம் பிளவுண்டு உலர்ந்திருந்தது. தோலின் வழியே கனிந்து வழிந்துகொண்டிருந்தது வயோதிகம்.
கபிலர் கேட்டார், “உங்களின் வயது என்ன பெரியவரே?”
மென்ற நாவற்பழக் கொட்டையை இடது உள்ளங்கையில் துப்பியபடி பழையன் சொன்னார், “தொண்ணூற்று ஏழு”.
கபிலர் ஆச்சர்யத்தோடு அவரைப் பார்த்தார். நீலனின் கண்கள் அதைவிடக் கவனமாக அவரது விரல்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவர் பதில் சொல்வதற்குள் அடுத்த பழத்தை எடுத்து வாயில் போட்டார். இப்போது அவன் கண்டுபிடித்தான். அவர் கையில் எடுத்தது நரிநாவல். இது துவர்ப்பை உச்சத்துக்குக் கொண்டுபோகும். அப்படியென்றால், இதற்கு முன்னால் அவர் எடுத்து வாயில் போட்டது வெண்நாவலாகத்தான் இருக்கும். அதற்குத்தான் புளிப்பு அதிகம். மொத்த வாயையும் உச்சுக்கொட்டவைத்து விழுங்கும் எச்சிலின் வழியே பேராவலை அது தூண்டும். அதற்கு அடுத்து நரிநாவலை எடுத்துத் தின்றால், தூக்கலான துவர்ப்பு முற்றிலும் வேறு ஒரு சுவையைக் கொடுக்கும். ஆனால், இதில் முக்கியமானது அடுத்து எடுக்கப்போவதில்தான் இருக்கிறது. பழையன் எந்தப் பழத்தை எடுத்து சுவையின் பாதையை எப்படி அமைத்துக் கொள்ளப்போகிறார் என்பதை அறிய ஆர்வத்தோடு இருந்தான் நீலன்.
கபிலர் விடுபடாத ஆச்சர்யத்தின் வழியே கேட்டார் “எப்படி இவ்வளவு துல்லியமாக வயதைச் சொல்கிறீர்கள்?”
நரிநாவலில் சதையைவிட அதன் கொட்டையை அசைபோட்டு மெல்லுவதில்தான் சுவை இருக்கிறது. அதன் மேல்தோல் கழறக் கழற, சுவை உச்சத்துக்குச் செல்லும். தப்பித் தவறி சற்றே அழுத்திக் கடித்து கொட்டையை உடைத்துவிட்டால் அவ்வளவுதான்! உள்ளே இருக்கும் பச்சை நிறப் பருப்பின் கசப்பு இருக்கிறதே, அது நாக்கையே கழற்றிப் போட்டாலும் போகாது. குறைந்தது மூன்று மாதங்களுக்காவது காறிக்காறித் துப்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். எனவே, நரிநாவலைத் தின்னும்போது மிகக் கவனமாகத் தின்னவேண்டும். தந்திரத்தோடு அதன் கொட்டையின் மேல்பகுதியைக் கடித்துச் சுவைக்க வேண்டும், பழையன் வாயில் நரிநாவலை ஒதுக்கிவைத்திருக்கும்போது, கபிலர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். எப்படிப் பதில் சொல்கிறார் பார்ப்போம் என்று ஆவலோடு இருந்தான் நீலன்.
எத்தனை கேள்விகளைப் பார்த்தவர் பழையன், அவருக்குத் தெரியாதா நரிநாவலை என்ன செய்ய வேண்டும் என்று! தாடையின் ஒரு பக்கவாட்டில் இருந்து மறு பக்கவாட்டுக்கு நரியைப் பக்குவமாக அணைத்து ஓடவிட்டுக்கொண்டிருந்தார். துவர்ப்பின் சாறு உள்நாக்கில் இறங்கிக்கொண்டிருந்தது. கண்களாலேயே கபிலரைப் பொறுத்திருக்கச் சொன்னார். `என்னென்ன வித்தைகளைக் காட்டுகிறான் கிழவன்!' என ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் நீலன்.
நன்றாக மென்ற கொட்டையை இடது உள்ளங்கையில் துப்பிவிட்டு, கபிலரைப் பார்த்து “என்ன கேட்டீர்கள்?” என்றார் பழையன்.
“வயது தொண்ணூற்று ஏழு என்று எப்படி துல்லியமாகச் சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டார் கபிலர்.
பழையனின் கைவிரல்கள், கூடையில் இருக்கும் பழங்களைக் கிளறி மூன்று பழங்களை எடுத்தன. நீலன் அவர் எதை எடுத்திருக்கிறார் என உற்றுப்பார்த்தான். உள்ளங்கை சற்றே மூடியிருந்ததால், சரியாகத் தெரியவில்லை. பழையன், கபிலரைப் பார்த்து “மேல் மலையில் இருக்கும் குறிஞ்சிச் செடியில் இரண்டாவது கணுவில் பூ பூத்திருக்கும்போது, நான் பிறந்ததாக என் தாய் சொன்னாள். கடந்த ஆண்டு அந்தச் செடியில் பத்தாவது கணுவில் பூ பூத்திருந்தது” என்றார்.
சொல்லி முடித்ததும் தனது கையில் உள்ள பழங்களை வாயில் போட்டார். அப்போதுதான் நீலன் கவனித்தான், இரண்டு நீர்நாவலும் ஒரு கொடிநாவலும் அதில் இருந்தன. துவர்ப்பேறிய வெற்றிலையில் சுண்ணமும் தெக்கம்பாக்கையும் சேர்ப்பதைப்போலத்தான் இது. இந்தச் சேர்மானம் தரும் சுவைக்கு அளவு இல்லை. துவர்ப்பை அதன் முனையில் தட்டிவிட்டு வேறு ஒன்றாக்கும்.
கனிகளின் சுவையை நாம் எந்த வழியில், எந்தச் சேர்மானத்தோடு அழைத்துச் செல்கிறோம் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு வழிக்கும் ஒவ்வொரு விதமான வாசமும் வண்ணமும் உண்டு. `பழையன், துவர்ப்புக்கு அடுத்து சிறுநாவலை எடுத்து இளங்காரத்தோடு முடிப்பார்' என்றுதான் நீலன் நினைத்தான். ஆனால், அவரோ சட்டென வேறு ஒரு சுவைக்குத் தவ்விக் குதித்துவிட்டார். அதுவரை நீலம் ஏறியிருந்த அவரது நாக்கு, செவல் நிறத்துக்கு மாறத் தொடங்கியது. நீலன் அதிர்ந்துபோய்தான் நின்றான். பழையன் தனது நாக்கால் மேல் உதட்டைத் தடவியபடி பேசியதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. நெல்லிக்கனிக்கு அடுத்து குடிக்கும் முதல் மிடறு நீர், நெல்லியால் அறியப்படாத சுவையை நாக்குக்குத் தந்து முடிப்பதைப்போல்தான் இதுவும்.
நாவற்பழத்தின் அடர்கருநீலத்துக்குள் இருப்பது ஒரு சுவை அல்ல, சுவைகளின் பேருலகம். கணக்கில்லாக் கனிகள் தொங்கும் மரத்தில் தனக்கான கனியைத் தேர்வுசெய்யும் பறவையைப்போலத்தான் பழையனும்.
நீலன் ஆச்சர்யப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. கபிலருக்கு ஏற்பட்டது ஆச்சர்யம் அல்ல, அதிர்ச்சி. அவர் மனதுக்குள் பழையன் சொன்ன கணக்கு சரிதானா என்பதை எண்ணிக்கொண்டிருந்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ. இரண்டாவது கணுவுக்கும் பத்தாவது கணுவுக்கும் இடையில் இருக்கும் கணுக்களின் எண்ணிக்கை, முன்னும் பின்னும் மீதி இருக்கும் ஆண்டுகள் என எல்லாவற்றையும் மனதுக்குள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.
தொண்ணூற்று ஏழு என்று பழையன் சொன்ன கணக்கு மிகச் சரியானது என அறிந்த போது, கபிலர் ஏறக்குறைய உறைந்துபோனார். கணிதம் கடலிலும் கப்பலிலும் மட்டும் அல்ல, காட்டிலும் கணுக்களிலும் இருக்கிறது என்பதை ஒற்றைச் செய்தியில் விளங்கவைத்தான் பழையன்.
ஆனால், கபிலரால் விளங்கிக்கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் அங்கு நடந்துகொண்டிருந்தன. தான் எடுக்கப்போகும் நாவற்பழம் கொண்டு தனது காட்டு அறிவு கணிக்கப்படும் என்பது, அவரால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாத ஒன்று. எடுத்த உடனே பூநாவலை எடுக்கும் ஒருவரைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?
“இரவு கஞ்சி குடிக்கும் முன் இவருக்கு தும்முச்சிச் சாறு கொடுங்கப்பா” என்று சொல்லிவிட்டுப் போனார் பழையன்.
“அது என்ன சாறு? எனக்குத்தான் கால் வலி சரியாகிவிட்டதே. பிறகு ஏன் தரவேண்டும்?” என்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.
நீலன் சொன்னான், “நீங்கள் காட்டுக்குப் புதியவர் அல்லவா, அதனால்தான்.”
“நானா காட்டுக்குப் புதியவன்? குறிஞ்சி நிலத்திலேயேதான் எனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்திருக்கிறேன். அந்தத் துணிவில்தான் நான் பாரியைப் பார்க்கத் தன்னந்தனியாக மலையேறத் தொடங்கினேன்” என்றார்.
``மனித வழித்தடங்களின் வழியாக நீங்கள் காட்டை அறிந்திருப்பீர்கள். இது மனிதவாசனை படாத காடு. ஒளி விழாத இடத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும். பலவகையான பூச்சிகள் இருக்கின்றன. அவை எல்லாம் கடித்த பிறகுதான் உங்களால் உணர முடியும். அதன் பின்னரும் உணர முடியாத பூச்சிகள்தான் இந்தக் காட்டில் அதிகம். எனவே, இதைக் குடித்தால் மட்டுமே நல்ல உடல்நிலையோடு மலைக்கு மேல் செல்ல முடியும். தற்காப்புக்கு மிகத் தேவை.”
நீலன் சொல்லிவிட்டுப் போன சிறிது நேரத்தில், அந்தப் பெண் சிறு குவளையில் சாறு கொண்டு வந்தாள். அதைக் குடிக்கும்போதுதான் கபிலருக்குத் தோன்றியது, மூவேந்தர்களாலும் பாரியை நெருங்க முடியாது என்று பாணர்கள் மீண்டும் மீண்டும் பாடுவதன் அர்த்தம்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 6
குடிலின் தாழ்வாரம் முழுக்க விளக்கின் வெளிச்சம் படர்ந்திருந்தது. பெருங்கலயத்தில் கஞ்சியும் இலையில் சுருட்டப்பட்ட துவையலும் கொண்டுவந்து கொடுத்தாள் அந்தப் பெண். துவையலைத் தொட்டு வழிப்பதற்கு ஏற்ப சுருட்டப்பட்ட இலையை விரித்துவைத்து, கலயத்தை வாங்கிக் குடிக்கத் தொடங்கினார் கபிலர். கஞ்சி தொண்டைக்குள் இறங்கும்போதே குளிர்ச்சி உடல் எங்கும் பரவியது.
புளிப்பேறிய அருஞ்சுவையாக இருந்தது. ‘சுவைத்துச் சிறிது சிறிதாகக் குடிக்கவேண்டும்’ என்று எண்ணிய கபிலர், ஆட்காட்டி விரலால் துவையலை எடுத்து, நடுநாக்கில் வைத்து விரலை எடுப்பதற்குள், அதன் காரம் உச்சந்தலைக்குப் போய் முட்டியது. கண்கள் பிதுங்கின. விழுங்கிய துவையல் தொண்டையில் நின்றது. விழுங்குவதா... துப்புவதா என யோசிக்கும் முன்னர் காரம் சுழன்று பரவிக்கொண்டிருந்தது. கணநேரத்துக்குள் முழுக் கலயத்தையும் வாய்க்குள் கொட்டி முடித்தார். மூச்சு வாங்கியது. நாக்கு, காற்றைத் துழாவியது. சற்றே ஆசுவாசப்பட்டார். கண்கலங்கிய கபிலரைப் பார்த்து, வாய் பொத்திச் சிரித்தாள் அவள்.
தலையை உலுப்பி, காரத்தைக் கீழிறக்கினார் கபிலர். மறுகலயத்தைக் கொடுத்தாள். அணில்வால்தினை கொண்டு காய்ச்சப்பட்ட கஞ்சி.
``புளிப்பிரண்டையை வால்மிளகோடு பிசைந்து செய்யப்பட்ட துவையல்’’ என்றாள்.
கபிலருக்கு இப்போதுதான் நிதானம் வந்தது.
“வால்மிளகு இவ்வளவு காரமாகவா இருக்கும்?” என்று கேட்டார்.
“காரத்துக்குக் காரணம், துவையல் சுருட்டப்பட்ட மகரவாழையின் கொழுந்து இலைதான். முதல்நாள் இரவே அதில் சுருட்டி வைத்துவிடுவோம், நாள் செல்லச் செல்ல காரம் கட்டிநிற்கும். இதுவே மூன்றாம் நாளாக இருந்திருந்தால்…” என்று சொல்லி மீண்டும் வாய் பொத்திச் சிரித்தாள்.
கபிலர் சற்றே நிதானமாக மறுகலயத்தை வாங்கிக் குடித்தார். கண்களின் ஓரம் நீர் வழிந்தது. அவள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இடது பக்கமாகத் தலையைத் திருப்பிக்கொண்டார். துவையலை கண்கள் பார்த்தன. ஆனால், விரல்கள் கிட்ட நெருங்கவில்லை. எரிந்துகொண்டிருக்கும் விளக்கின் இலுப்பை எண்ணெய் வாசனை அவருக்குப் பிடிபட்டது. ஆனால், அந்த விளக்கின் வடிவம்தான் வித்தியாசமாக இருந்தது. இது எதனால் செய்யப்பட்ட விளக்கு என யோசித்துக்கொண்டிருக்கும்போது பழக்கத்தில் துவையலை விரல் வழித்து எடுத்துவிட்டது. உடனே அவருக்குப் பொறிதட்டியது. சட்டெனத் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தார். அவளோ வெடித்துச் சிரிக்கத் தயாராக இருந்தாள்.
துவையலை எடுத்த விரலை அவளுக்கு நேரே நீட்டி, “காரமலை என்று இந்த மலைக்கு இதனால்தான் பெயர் வந்ததா?” எனக் கேட்டார்.
“எனக்குத் தெரியாது” என்றாள் அவள்.
‘ஒருவழியாகச் சமாளித்துவிட்டோம்’ என்று மனதுக்குள் நினைத்தபடி, விரலை இலையின் ஓரத்தில் தேய்த்துவிட்டு, மீதிக்கஞ்சியைக் குடித்து முடித்தார்.
கலயத்தை அவரிடம் வாங்கும்போதும் அவள் முகத்தில் இருந்த சிரிப்பு அடங்கவில்லை.
“நான் உன்னிடம் விளக்கம் கேட்கத்தான் இரண்டாம் முறை துவையலை எடுத்தேன்” என்றார்.
“நான் அதற்காகச் சிரிக்கவில்லை” என்றாள்.
“பின்னர் எதற்குச் சிரிக்கிறாய்?”
“மாலையில் நான் நாவற்பழங்கள் கொண்டுவந்து கொடுத்தபோது, நீங்கள் முதலில் பூநாவலை எடுத்துத் தின்றீர்களாமே?”
கபிலருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தான் எடுத்துத் தின்ற நாவலுக்கு அதுதான் பெயரா என்றும், அவருக்குத் தெரியவில்லை. மெள்ளத் தலையை ஆட்டி “ஆம்” என்றார்.
அவள் வாய்விட்டுச் சிரித்தபடி, இலையோடு சேர்த்துத் துவையலை மடித்து எடுத்துவிட்டுச் சொன்னாள், “உதிரப்போக்கு நிற்காத பெண்கள்தான் பூநாவலைச் சாப்பிட வேண்டும்.''
பழையனும் நீலனும் மீண்டும் குடிலுக்குள் நுழைய, அவள் சிரித்தபடி வெளியேறினாள்.
“என்ன சொல்லிச் சிரித்துக்கொண்டு போகிறாள்” எனக் கேட்டார் பழையன்.
கபிலரோ ‘எதைச் சொல்ல?’ என்ற திகைப்பும் வியப்பும் மிரட்சியும் கலந்தவராக இருந்தார்.
“இவளிடம் பேச்சு கொடுத்தால் மீளமுடியாது, என்னையவே வந்து பார் என்பாள். விருந்தினர் என்பதால் உங்களிடம் சற்று பக்குவமாக நடந்துகொள்கிறாள்” என்றார் பழையன்.
“ஆம்” என்று அவளது பக்குவத்தை ஆமோதிப்பதைத் தவிர, அவருக்கு முன் வேறு எந்த வழியும் இல்லை. காட்டின் இருளுக்குள் இருந்து குளிர்க்காற்று அவ்வப்போது வீசியது. விளக்கு நிலைகொள்ளாமல் ஆடிக்கொண்டே இருந்தது. மகரவாழையில் இருந்து பேச்சைத் தொடங்கிய கபிலர், நெடுநேரம் பழையனோடு பேசிக்கொண்டிருந்தார். நீலன் அங்கும் இங்குமாகப் போய் வந்தபடி இருந்தான். பகலில் வேட்டைக்குப் போயிருந்த நாய்கள் குடில் திரும்பியிருந்தன. குரைப்பொலி விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. தனது கண் முன்னால் கடந்துபோன ஒரு நாயின் உயரத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த கபிலரிடம் பழையன் கேட்டார், “பாரியைப் பார்த்துவிட்டு எப்போது திரும்பப் போகிறீர்கள்?”
“மழைக்காலம் தொடங்குவதற்குள் கீழிறங்க வேண்டும். எனவே ஒரு மாதம்தான் எனது திட்டம்.”
“அப்படி என்றால் நீங்கள் கொற்றவைக் கூத்தைப் பார்க்கத்தான் வந்திருக்கிறீர்களா?”
“இல்லையே, அப்படி ஒரு கூத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே” என்றார் கபிலர்.
“நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கூத்து இது. பறம்பு நாட்டின் உக்கிரம் ஏறிய விழா. நாடே திரண்டிருக்கும். பழைமையான பாணர் கூட்டம் எந்த நாட்டில் இருந்தாலும் இந்த விழாவில் வந்து பங்கெடுக்கும். நீங்கள் அதைக் கேள்விப்பட்டு வந்திருப்பதாகத்தான் நான் நினைத்தேன்” என்றார் பழையன்.
மறுநாள் அதிகாலை கபிலரை அழைத்துக் கொண்டு பழையன், நீலன் உள்பட பத்துக்கு மேற்பட்டோர் ஆதிமலைக்குப் புறப்பட்டனர்.
“நேற்று முன்தினம் ஊரே புறப்பட்டுப் போய்விட்டது. உங்களை அழைத்துச் செல்லத்தான் நாங்கள் இருந்தோம்” என்று சொல்லிக்கொண்டே பழையன் முன்நடந்து சென்றார்.
இரண்டு பகல் ஓர் இரவு நீடிக்கும் பயணம் அது. பயணம் முழுவதும் கபிலர் கொற்றவைக் கூத்து பற்றித்தான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே வந்தார்.
மற்றவர்கள் கபிலருக்காக வேகம் குறைத்தே நடந்தனர். ஆனாலும் கபிலரால் ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை. நீலன் அவருக்கு அவ்வப்போது உதவிகள் செய்தான். பாதை சில இடங்களில் மிகக் கடினமாக இருந்தது. சிறு பிசகு ஏற்பட்டாலும் பெரும்பள்ளத்தில் விழும் அபாயம் இருந்தது. விலங்குகளின் தடயங்களைப் பார்த்தபடி அனேக இடங்களைக் கடந்தனர். யானைக் கூட்டங்கள் கடந்து செல்லட்டும் என்று சில இடங்களில் பொறுத்திருந்தனர். கிழங்குகளைத் தின்றுவிட்டு, சிறுத்தோடும் சுனைநீர் அருந்தினர்.
பின்கோடை காலமாதலால் செடிகொடிகள் சற்றே துவண்டுபோய்க் கிடந்தன. ஆனாலும் தொலைவு செல்லச் செல்ல காட்டின் உள் அடர்த்தி அதிகமானபடியே இருந்தது. எல்லா மரங்களும் கொடிகளைப்போல ஒன்றை ஒன்று பின்னிக்கிடந்தன. நீலனின் வயதொத்த மூன்று `இளைஞர்கள்’ உடன் வந்துகொண்டிருந்தனர்.
நீண்டு திரும்பும் பாறையைக் கைபிடித்து கடக்கும்போது சற்றே கீழ்ப்பக்கம் குனிந்து பார்த்தார் கபிலர். அந்தக் காட்சியின் அற்புதம் பெரும்பரவசத்தை ஏற்படுத்தியது. அது காரமலையின் உச்சிப்பகுதி. பெரும்மலைச்சரிவு காலுக்குக் கீழ் பரந்துகிடக்கிறது. ஒளியின் தகதகப்பில் இலைகள் சுடரேற்ற, காடே தீப நாக்கால் சீழ்கை அடிப்பதைப்போல இருக்கிறது. நின்ற இடம்விட்டு கபிலரின் கால் நகரவில்லை.
“காட்டின் பேரழகுக்கு ஈடில்லை” என்றார் கபிலர்.
“சரி வாருங்கள்” என்று பக்குவமாய் அவரைக் கைபிடித்து அழைத்தபடி நீலன் சொன்னான், “புலியின் மீசைமயிரின் மீது உட்கார்ந்திருக்கும் சிறு தும்பி போலத்தான் நாம்”, நீலன் பேச்சை முடிப்பதற்குள், முன்னால் நடந்துகொண்டிருந்த இளைஞன் சொன்னான், “பாதையில் மட்டும் கவனம்கொள்ளுங்கள், பார்வையை ஓடவிடாதீர்கள்”.
‘அப்படி இருக்கத்தான் விரும்புகிறேன். ஆனால், இந்த அழகில் கரையவில்லை என்றால் நான் கவிஞனா?’ என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டார் கபிலர். உச்சியில் இருந்த குறுகலான பாறையைக் கடந்ததும் காரமலையின் பின்புற இறக்கத்தில் இறங்கத் தொடங்கினர்.
கபிலர் கேட்டார்...
“பறம்பு நாட்டின் தலைநகரான எவ்வியூருக்குச் செல்லும் எல்லா பாதைகளும் இதுபோன்ற ஒற்றையடிப் பாதைகள்தானா அல்லது வண்டிகள் செல்லும் சாலைகள் இருக்கின்றனவா?”
“பறம்பு நாடு நானூறுக்கும் மேற்பட்ட ஊர்களைக்கொண்டது. எல்லா ஊரில் இருந்தும் இதுபோன்ற பாதைகள் உண்டு. இதுதவிர எட்டுத்திசை எல்லைகளுக்கும் குதிரைகள் போய்த் திரும்பும் பாதைகள் உண்டு. அதைக் காவல்வீரர்கள் மட்டுமே அறிவர்” - சொல்லிவிட்டு அவன் நீலனைப் பார்த்ததை கபிலர் கவனித்தார்.
அவன் பேச்சைத் தொடர்ந்தான் “வண்டிச்சாலை ஒன்று உண்டு. வட திசையில் இருக்கும் தண்டலை ஆற்றின் கரை வழியாக அது காரமலைக்கு ஏறுகிறது. ஆனால், மலையின் பாதித்தொலைவில் இருக்கும் பள்ளத்தூர் வரைதான் அந்தச் சாலை இருக்கும். அதன் பிறகு இதுபோன்ற ஒற்றையடிப் பாதைதான்.
கடற்கரையில் இருந்து உப்பு கொண்டுவரும் உமணரின் வண்டிகள் பள்ளத்தூர் வரை வரும். அங்கு வந்து உப்பைக் கொடுத்துவிட்டு, மலைப்பொருட்களை வாங்கிக்கொண்டு உமணர் திரும்பிவிடுவர். அங்கு இருந்து பறம்பு நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களுக்குமான உப்பை பள்ளத்தூரைச் சேர்ந்தவர்கள் பிரித்துக் கொடுத்துவிடுவர்” என்றான்.
நீலன் குறிக்கிட்டுச் சொன்னான், “வெளியில் இருந்து பறம்பு நாட்டுக்குள் வரும் ஒரே பொருள் உப்பு மட்டும்தான்.”
பேசியபடி நடந்துகொண்டிருக்கும்போது மரங்களின் மீது பறவைகள் படபடத்துக் கலைவதுபோல் இருந்தது. மனிதச் சத்தத்தைக் கேட்டு அவை கலைகின்றன என்று நினைத்தார்கள். அடுத்த சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் பறவைகள் கத்தத் தொடங்கின. ஒன்று இரண்டு பறவைகளின் சத்தம்தான் முதலில் கேட்டது, கணநேரத்துக்குள் மொத்தப் பறவைகளும் காது கிழிவதைப்போல, `க்கீ… க்கீ…க்கீ…’ எனக் கத்தி, இங்கும் அங்கும் அலைமோதின. மரக்கொப்புகள் மோதி இலைகள் சிதறி உதிர்ந்தன. மேலே என்ன நடக்கிறது என்று தெரியாமல், மரக்கொப்புகளை அண்ணாந்து பார்த்தபடி அவர்கள் இருந்தனர். கொப்புக்குள் பறவைகள் அம்பைப்போல காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தன. பெரும்பருந்து ஒன்று இவர்களின் தலையை உரசிக்கொண்டு போனது. கூட்டம் மொத்தமும் என்ன எனத் தெரியாமல் முழித்தபோது, திடீரென பழையன் பெரும்குரலெடுத்துக் கத்தினார்...
“காக்காவிரிச்சிடா...”
மொத்தக் கூட்டமும் கண்ணிமைக்கும் நேரத்தில் சிதறி பாறைகளின் ஓரம் விழுந்து சரிந்தனர். கரும்பாறையை ஒட்டி கீழே சரிந்து, பாறையோடு பாறையாக ஒண்டினான் நீலன். மற்றவர்கள் இங்கும் அங்குமாக இடுக்குகளில் புதைந்தனர். பாறையின் இடுக்கில் இருந்த நீலன் சட்டெனத் திரும்பிப் பார்த்தான். கபிலர் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தார். அவருக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. மின்னல் வேகத்தில் கபிலரின் மீது பாய்ந்தான் நீலன். அவர் நிலைகுலைந்து மண்ணில் சரிந்தார். அவரைக் கீழே போட்டு அமுக்கியபடி கிடந்த நீலன், தலையை மட்டும் தூக்கி மேலே பார்த்தான். பறவைகளின் வேகம் மொத்த மரத்தையும் உலுக்கிக்கொண்டிருந்தது. `க்கீ... க்கீ...க்கீ…’ எனக் காடே நடுங்குவதுபோல் ஓசை வந்துகொண்டிருந்தது. புதருக்குள் இருந்த ஒரு பெரும்விலங்கு தாவி வெளியேறியது. பாறை ஓரத்தில் இருந்த மற்ற இரு இளைஞர்களும் நீலனை நோக்கிப் பாய்ந்து புரண்டனர். மண்ணில் சரிந்து குத்தீட்டிகளைக் கையில் பிடித்தபடி அண்ணாந்து மரத்தைப் பார்த்தனர்.
அவர்களின் கண்கள் அலைமோதின. அவர்கள் யாராலும் காக்காவிரிச்சியைப் பார்க்க முடியவில்லை. பாறையோடு பாறையாகக் குத்தவைத்தபடி அமர்ந்திருந்த பழையனின் கண்கள் மட்டும், அதைத் துல்லியமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. நின்று நிதானமாக அது வேட்டையாடியது. அங்கும் இங்குமாகப் பறவைகளின் உடல் துண்டுதுண்டாகச் சிதறின. ஒரு பெரும்பருந்தின் தலையை, வாள்கொண்டு சீவுவதைப்போல அதன் கூர்மூக்கால் வெட்டி எறிவதை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் பழையன். துடிக்கும் அதன் கழுத்துக்குள் காக்காவிரிச்சியின் அலகு இருந்தது. அதன் இறக்கைகள் மெள்ள அசைய, காற்றில் பறந்தபடியே அது பருந்தின் ரத்தத்தைக் குடித்துக்கொண்டே சென்றது.
நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கிழவனின் குரல் வெளியே கேட்டது.
“போயிருச்சுடா...”
கீழே கிடந்தவர்கள் மெள்ள எழுந்தார்கள். கிழவன் பார்த்த திசைநோக்கிப் பார்த்தபடி இருந்தன மற்றவர்களின் கண்கள். ஆனால், அவர்கள் கிடந்த இடத்தில் இருந்து அதைப் பார்க்க முடியவில்லை. மரங்களின் அசைவுகளும் பறவைகளின் ஓசையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின.
கபிலர் கையை ஊன்றி மெள்ள எழுந்தார். உடம்பு எங்கும் சிராய்ப்புகள். பாறை ஓரத்திலும் செடிகளுக்குள்ளும் பதுங்கிக் கிடந்தவர்கள் எழுந்து வந்தனர். அவர்களின் கண்கள் இங்கும் அங்குமாக அலைமோதிக்கொண்டுதான் இருந்தன. அது கொன்றுபோட்ட பருந்தின் உடல், சரிவில் இருந்த செடிகளுக்குள் கிடந்தது. ஒருவன் அதை எட்டிப்பார்க்க முயன்றான்.
“அதைப் பார்க்க வேண்டாம்” என்று கத்தினார் பழையன்.
அவன் திரும்பிவிட்டான். கிளைகளின் ஆட்டம் நிற்கவில்லை. பழுத்த இலைகள் உதிர்ந்துகொண்டே இருந்தன.
கபிலர் கேட்டார் “என்ன பெயர் சொன்னீர்கள்?”
பழையன் சொன்னார், “காக்காவிரிச்சி. வெளவால் இனத்தைச் சேர்ந்த ரத்தம் குடிக்கும் பறவை.”
“இதைக் கேள்விதான்பட்டிருக்கிறேன். இன்றுதான் இதன் தாக்குதலைப் பார்க்கிறேன். ஆனாலும் அதைப் பார்க்க முடியவில்லை” என்றான் நீலன்.
“அது மரங்களில் இருக்கும் சிறுபறவைகளை வேட்டையாடாது. பாறைகளின் பொந்துகளில் இருக்கும் பருந்து இனங்களைத்தான் வேட்டையாடும். பருந்துகள் வானில் பறந்து இதனிடம் இருந்து தப்பிக்க முடியாது. அதனால்தான் இந்தப் பருந்து மரங்களுக்குள் நுழைந்து தப்பிக்க இங்கும் அங்குமாக அலைமோதியது. பருந்தின் இந்தக் கூச்சலால் மற்ற பறவைகள் எல்லாம் அலறியடித்தன. இனி உங்களுக்கு எப்போதாவது சந்தேகம் ஏற்பட்டால் மரங்களைப் பார்க்காதீர்கள். பக்கத்தில் இருக்கும் மலைப்பாறைகளை அண்ணாந்து பாருங்கள். பருந்தோ, கழுகோ சிதறிப் பறந்தால் அது காக்காவிரிச்சிதான் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று இளைஞர்களுக்குக் குறிப்பு சொன்னார் பழையன்.
“இதற்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று பழையனைப் பார்த்துக் கேட்டார் கபிலர்.
“பார்த்திருக்கிறேன். கைக்கெட்டும் தொலைவில் உட்கார்ந்திருந்த என் மனைவியின் பிடறியை தனது அலகால் தட்டிவிட்டுப் பறந்தது. பின்மண்டையில் இருந்து ரத்தம் பீறிட அவள் என் உள்ளங்கையில் சரிந்தபடி செத்துப்போனாள்.”
அதன் பிறகு யாரும் பேசிக்கொள்ளவில்லை. கால்கள் மட்டும் நடந்துகொண்டிருந்தன. ஊர் பழைச்சியின் அறுந்த பின்மண்டை நரம்பு நீலனுக்கு ஞாபகம் இருந்தது.
அப்போது அவன் மிகச் சிறுவனாக இருந்தான். ஆனாலும் பழையன் அழுத கண்ணீர் அவனுள் வற்றாமல் தேங்கியிருந்தது.
நீண்ட நேரத்துக்குப் பிறகு மெளனம் கலைத்து பழையன் சொன்னார், “கொற்றவை விழாவுக்கு முன்னர் பறவைகளின் ரத்தம் காற்றில் தூவப்படுவது நல்ல நிமித்தம்.”
பள்ளத்தில் சரிந்துகொண்டிருக்கும் மனிதனின் கையில் அகப்படும் கொப்புபோல இருந்தது இந்த வார்த்தை. தீமையைக் கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு. வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை. மனிதன் முதிரும்போதுதான் மனங்களைக் கையாளக் கற்றுக்கொள்கிறான். மனம் விழுந்த பின்னர் எழவைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், வீழ்ந்து கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்துவதுதான் மிக முக்கியம். வாழ்வின் சாரமேறிக் கிடக்கும் அனுபவ அறிவால்தான் அதைச் செய்ய முடியும். அதிர்ச்சி குலையாமல் இருக்கும் இந்தக் கணத்தில் பழையனின் வார்த்தைகள், அடர் காட்டுக்குள் துணிந்து கால்களை முன்நகர்த்தும் மனதைரியத்தைக் கொடுத்தன.
ஆனாலும் தயக்கத்தை உடைக்கவேண்டி யிருந்தது. யார் முகத்தையும் பார்த்து பழையன் இந்த முடிவுக்கு வரவில்லை. உறைந்த மெளனமே எல்லாவற்றையும் சொன்னது. பின்திரும்பாமலே பழையன் சொன்னார்...
“மின்னலைப்போல வாளை வீசி காக்காவிரிச்சியின் இறக்கைகளை வெட்டித் தள்ளியவன் வேள்பாரி.”
வார்த்தைகள், முதுகுத்தண்டை முறுக்கேற்றும் வல்லமைகொண்டவை என்பதை கபிலர் உணர்ந்த தருணம் அது. உள்ளுக்குள் உறைந்து கிடந்த அதிர்ச்சியை கிழவன் பொடிப்பொடியாக் கினான். எல்லோருக்குள்ளும் ஆவேசமிக்க ஆர்வத்தைத் தூண்டினான். பாரி வாள் சுழற்றிய கணத்தில் சரிந்த காக்காவிரிச்சியின் இடப்புற இறக்கையைப் பற்றி, காதுநரம்பு விடைக்கச் சொல்லிக்கொண்டு நடந்தான் பழையன். கபிலரின் கண்களுக்கு முன்னர் ஒரு வீரக் கதை அரங்கேறிக்கொண்டிருந்தது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 7
ஆணும் பெண்ணுமாக, பெருங்கூட்டம் கூடியிருந்தது. தாங்கள் கொண்டுவந்த உணவுகளைப் பறிமாறிக்கொண்டனர். அவித்த பன்றிக்கறியை உப்பு போட்டுப் பிசைந்து, பெருங்கூடையில் தூக்கி வந்திருந்தது ஒரு கூட்டம். மூன்று மலைகளை ஏறி இறங்கியவர்களின் பசியை அதுதான் தாங்கும். விரல்களுக்கு இடையில் பன்றியின் ஊண் ஒழுகக் கடித்து இழுத்தனர்.
மிகவும் களைத்துப்போயிருந்த கபிலருக்கு, பனையோலை நிறையத் துண்டங்களை எடுத்துவந்து நீலன் கொடுத்தான். உப்புக்கறியின் சுவை மிகவும் பிடித்திருந்தது. விரும்பிச் சாப்பிட்டார் கபிலர். இன்னும் சாப்பிட வேண்டும்போல் இருந்தது. அரை இருட்டில் நீலனை அடையாளம் காண முடியவில்லை. மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுத்துக்கொண்டிருப்பான். சத்தம்போட்டு அவனை அழைக்கத் தயங்கியபடி இருந்தார் கபிலர். பச்சிளங்குழந்தை ஒன்று, பசித்து அழுதது. அப்போதுதான் கை நிறையக் கறித்துண்டங்களை வாங்கிய அந்தத் தாய், அப்படியே பக்கத்தில் இருந்த கபிலரின் கையில் அவற்றைக் கொடுத்துவிட்டு, சேலைத்துணியில் கையைத் துடைத்தபடியே ஓடிப்போய், மூலையில் தோல்விரித்துப் படுக்கப்போட்டிருந்த குழந்தையைத் தூக்கி பால் கொடுத்தாள்.
கபிலர், கையில் கறித்துண்டங்களோடு உட்கார்ந்திருந்தார். அவள் மறுமுலை தாங்கி குழந்தையை அணைத்தாள். அது வயிறு நிறைந்ததும் உதடு பிதுக்கி மறுத்தது. அதை மீண்டும் படுக்கப்போட்டு, அழகிய சிரிப்போடு கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சிவிட்டு எழுந்தாள். இந்தக் கூட்டத்தில் யாரிடம் கறித்துண்டங்களைக் கொடுத்தோம் என்பது அவளுக்கு நினைவில் இல்லை. எல்லோரும் கறியைக் கடித்து இழுத்துக்கொண்டிருந்தனர். பனங்கூடையின் அருகில் போனாள். கறி தீர்ந்துவிட்டது. அவள் மிகவும் சோர்ந்துபோனாள். அந்த அரை இருட்டில், அவளின் தவிப்பு யார் கண்ணிலும்படாமல் இருந்தது. சற்றே கலங்கியபடி அவள் திரும்பும்போது, “மகளே... உனக்கான உணவு எனது கையில் இருக்கிறது” என்றது கபிலரின் குரல்.
அவள், குரல் கேட்ட இடம் நோக்கி வந்தாள். கை தாழ்த்தாமல் அப்படியே பிடித்திருந்தார் கபிலர். வாங்கிய அவள், கனிந்த சிரிப்பில் நன்றி சொல்லியபடி கறித்துண்டங்களைக் கடித்தாள்.
“கடும் பசி. சுவை வேறு இழுத்தது. கையில் இருப்பதில் ஒரு துண்டையாவது சாப்பிடலாமா என, பலமுறை தோன்றியது. ஆனால் கைநிறையக் கறித்துண்டங்களை வாங்கிய நீ, குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் மொத்தத்தையும் உதறிவிட்டு ஓடினாயே! தாய்மைக்கு முன்பு ஆண்களாகிய நாங்கள் அற்பப்புழுவம்மா” என்றார் கபிலர்.
“பெரிய சொல் சொல்கிறீர்கள். இருட்டில் உங்களின் முகம் தெரியவில்லை. ஆனாலும் தந்தையை முகத்தைப் பார்த்துதான் அடையாளம் காண வேண்டுமா என்ன?” - சாப்பிட்டுக்கொண்டே பேசினாள்.
ஈச்சமதுவுக்கு வறுத்த கறிதான் சரியான ஈடு. ஆனாலும் வெப்பத்தை அடைகாத்திருக்கும் கற்குகைக்குள் உப்புக்கறித்துண்டுகள் எல்லாவற்றையும் விஞ்சும். அலுப்புத்தீர எடுத்து முடித்தது அந்தக் கூட்டம். வலி பொறுக்க இன்னொரு குவளையும் சேர்த்துக் கொடுத்தான் நீலன். குடித்த கபிலர், ஓர் ஓரமாகப் படுத்துச் சமாளிப்போம் என முயற்சி செய்தார்.
எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாலும், ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவத்தைத் தரவல்லது காடு. அன்றைய அனுபவத்தின் கதை காக்காவிரிச்சியைப் பற்றியதாக இருந்தது. இளம்வயது, எந்த விலங்கையும் வீழ்த்தும் துணிவோடு வேல்கம்பைத் தூக்கி நிற்கும். வயோதிகம், எவ்வளவு கொடும்விலங்கிடம் இருந்தும், எளிதில் தப்பிக்கும் வித்தையைக் கக்கத்தில் வைத்துக் காத்திருக்கும். பழையனின் கம்புக்கூட்டுக்குள், அவன் மரணத்தை வென்ற பல கதைகள் இடுக்கிக் கிடந்தன. அதில் இன்னொன்றாக இன்றைய கதையும் சேர்ந்துகொண்டது.
கபிலர், தூக்கமின்றி எழுந்து உட்கார்ந்தார். தாகம் எடுத்தது. `சுனை நோக்கிப் போகலாம்!' என நினைத்து எழுந்தார். அதைப் பார்த்த நீலன், உடன் வந்து அவரை அழைத்துச் சென்றான்.
“மடிப்புப் பாறைகள், கால்களைக் கவனமாகத் தூக்கிவையுங்கள்” என்றான். அவர் பதில் ஏதும் சொல்லாமல் தலையாட்டியபடி வலது கையை மெள்ள உயர்த்தி, நீலனின் தோள்பட்டையைப் பிடித்தார். அவரது கையின் உள்நடுக்கத்தை நீலனால் உணர முடிந்தது. பந்த வெளிச்சத்தைவிட்டு விலகி, நீரின் சத்தத்தை நோக்கி அவர்கள் நடந்தனர்.
“நான் உங்களை எதிர்பாராமல் கீழே தள்ளியதால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுவிட்டது. என்னை மன்னியுங்கள்” என்றான் நீலன்.
``எனது உயிரைக் காப்பாற்றிய உனக்கு, நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்” என்றார் கபிலர்.
“உங்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டிருக்காது!” என்று நீலன் சொல்லிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட கபிலர், “முதலில் அது என்னைத்தான் நேர்கொண்டு பார்த்தது.”
நீலன் அதிர்ச்சியடைந்தான்.
“அதை நீங்கள் பார்த்தீர்களா?”
“ஆம், கருவேங்கை போல… மரக்கொப்புகளில் தாவி உட்காரும் ஏதோ ஒரு விலங்கு என்றுதான் நினைத்தேன். இறக்கைகளை விரித்த பிறகுதான் அது பறவை எனப் புரிந்தது. நீ என்னைக் கீழே தள்ளியபோதுதான், நம்மைக் கடந்துபோன பருந்தை அது அடித்தது. பழையன் முன்னால் இருந்ததைத்தான் பார்த்தார். வந்தது ஒன்று அல்ல, இரண்டு.”
நீலன் நடுக்கமுற்றான்.
“எங்களின் கண்களுக்கு மட்டும் எப்படி அது தெரியாமல்போனது?”
“அதைப் பற்றி நீங்கள் அறிந்திருந்ததால், அதனிடம் இருந்து தப்பிக்கவே முதலில் முயன்றீர்கள். நீங்கள் பதுங்க இடம் தேடிப் பாய்ந்தபோது என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த நான், அண்ணாந்து பார்த்து அதைக் கண்டறிந்தேன். இவை எல்லாம் அறியாமை ஏற்படுத்திக்கொடுக்கும் வாய்ப்புகள்; அறிந்தவர்களுக்குக் கிடைக்காது.”
நீலனுக்கு அவர் சொல்லவருவது புரியவில்லை. விளக்கமாகக் கேட்பதற்குள் நீரூற்றை அடைந்தனர். கபிலர் குனிந்து இரு கைகளாலும் நீரை அள்ளினார். நீரின் குளிர்ச்சி, உடல் முழுவதும் பரவியது. நீலன், முகத்தை நீரால் அடித்து மயக்கம் கலைத்தான்.
“ஆதிமலையின் வடமேற்கு மூலை, மிகவும் செங்குத்தான பாறைகளும் அடர்ந்த மரங்களும் நிறைந்த பகுதி. அதை `ஆளிக்காடு' என்று நாங்கள் சொல்வோம். அங்கே இரு கடவுகள் உண்டு. ஆதிகால மாந்தர் அவற்றைப் பயன்படுத்தினராம். அந்தக் குத்துப்பாறைகளுக்கு இடையில்தான் காக்காவிரிச்சிகள் தங்குவதாகச் சொல்வார்கள். அந்தத் திசையில் மலையைவிட்டு மிகத் தள்ளி குட்டநாட்டு எல்லை தொடங்குகிறது” என்றான் நீலன்.
“காக்காவிரிச்சி பற்றி நீண்டகாலமாகவே மலைமக்கள் அறிவார்களா?” என்று கேட்டார் கபிலர்.
“ஆதிகாலத்தில் இருந்தே அதைப் பற்றிய கதைகள் உண்டு. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிகச் சிலரே. இப்போது பறம்புநாட்டில் உயிரோடு இருப்பவர்களில் அதைப் பார்த்தவர்கள் பத்துபேர்தான் இருக்கும்”
“இப்படி ஒரு பறவையைப் பற்றி சமவெளியில் வாழும் மக்களுக்கு எதுவும் தெரியவில்லையே. நாடு எல்லாம் சுற்றும் எனக்கே இன்றுதான் இப்படி ஒரு பறவை இருப்பது தெரியும்.”
“காட்டில் நமக்குத் தெரியாதவை எத்தனையோ உண்டு. நாம் ஆச்சர்யப்பட ஆரம்பித்தால், அதற்கு எல்லையே கிடையாது.”
பேசியபடியே குகைக்குள் நுழைந்தனர். சிறிது நேரத்தில் கபிலர் படுக்கப்போனார். உடல் எங்கும் வலி திரண்டிருந்தது. எந்தப் பக்கம் திரும்பிப் படுத்தாலும் வலித்தது. வேறு வழியின்றி சமாளித்துக்கொண்டு படுத்தார்.
வேட்டூர் கூட்டத்தோடு வந்திருக்கும் புதிய மனிதரைப் பற்றி நள்ளிரவுக்குப் பின் பேச்சுத் தொடங்கியது.
“எழுத்து கற்ற புலவர் என்று சொன்னார். பாரியைப் பார்க்கவேண்டுமாம். அழைத்து வருகிறோம்” என்றார் பழையன்.
அப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்துக்குப்போன கபிலருக்கு, தன்னைப் பற்றி பேசுவது காதில் அரைகுறையாகக் கேட்டது. தொலைவில் படுத்துக்கிடந்த இன்னொருவர் கேட்ட கேள்வி காதில் சரியாக விழவில்லை. அதற்கு பழையன் பதில் சொன்னார் “ஒற்றனுக்கு உரிய திறன் எதுவும் அவரிடம் இல்லை.”
கபிலருக்கு கேள்வி விளங்கியது.
“அப்படி நம்பவைப்பதுதானே சிறந்த ஒற்றனின் தகுதி” என்றது இன்னொரு குரல்.
பழையனின் பேச்சை மடக்கிப் பேசுவது யார் என, குரல் வந்த திசையை எல்லோரும் பார்த்தனர். இருட்டுக்குள் இருந்த அந்த மனிதனை மற்றவர்கள் பார்த்து அறியும் முன் குரல் கேட்டே பழையன் கேட்டார்...
“வந்திருப்பது கூழையனா?”
“கிழவா... கண்ணும் காதும் அப்படியே இருக்கடா உனக்கு” - அருகில் வந்து பழையனைக் கட்டி அணைத்தான் பறம்புநாட்டு தென்பகுதி எல்லைக்காவலன் கூழையன். உயரத்தில் மிகக் குள்ளனாக இருந்தாலும், வீரத்திலும் பலத்திலும் யாராலும் விஞ்ச முடியாதவன் என பெயர் எடுத்தவன்.
படுத்துறங்கும் கபிலரைவிட்டு இருவரும் சற்று தூரம் நகர்ந்தனர்.
“காலம் மாறிவிட்டது கிழவா. எண்ணற்றக் குலங்களை அழித்து வலுக்கொண்டிருக்கின்றனர் வேந்தர் மூவரும். எல்லோரின் கண்களுக்கும் உறுத்தலாக இருப்பது பாரிதான். பறம்பின் செல்வத்தைச் சூறையாட பாரியே தடை எனக் கருதுகின்றனர். மூவரும் தனித்தனியாக எத்தனையோ திட்டங்களைத் தீட்டுகின்றனர். ஒற்றர் படை இல்லாத நம் காதுகளுக்கே இவ்வளவு செய்திகள் வந்து சேர்கின்றன. அப்படியென்றால், எவ்வளவு திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பதை எண்ணிப்பார்.”
“ஆகட்டும்... அவர்கள் என்ன திட்டம் தீட்டினாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது” - கிழவனின் நம்பிக்கையின் மீது அச்சத்தை ஏற்றும் வல்லமை, கூழையனுக்கு இல்லை. ஆனாலும், காலமாற்றத்தை பழையனுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்பினான்.
``உங்களின் காலம் அல்ல இது. சேரனின் மிளகைப் பின் தள்ளி, வணிகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன கொற்கை முத்துக்கள். யவன வணிகத்தில் தனக்கு இருக்கும் முதல் இடத்தைத் தக்கவைக்க உதியஞ்சேரல் எதையும் செய்வான். மிளகுச்செடி தழைத்துச் செழிக்கும் எண்ணற்றக் குன்றுகள் நம்மிடம் உண்டு. அதுமட்டும் அல்ல, ஏற்கெனவே பறம்பு நாட்டிடம் அடைந்த தோல்விக்குப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறான். இதுபற்றி பாரியிடம் பேசிவிட்டுத்தான் திரும்புகிறேன்.”
“என்ன சொல்கிறாய், நீ கொற்றவைக் கூத்தில் பங்கெடுக்கவில்லையா?”
“இல்லை கிழவா. எல்லைக்குத் திரும்பியாக வேண்டும்.”
“கொற்றவைக் கூத்தில் பங்கெடுக்காமல் திரும்பும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதா?”
“நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால், உண்மை அதுதான்.”
கிழவன் குறுகுறுவென கூழையனையே பார்த்தான்.
``எதை வைத்துச் சொல்கிறாய்?”
“எல்லைப்புற ஊர்களில் புதிய மனிதர்கள் நடமாடுகின்றனர். நாம் அறியாத வேட்டை நாய்கள் காடுகளுக்குள் அலைகின்றன. பள்ளத்தூருக்கு வரும் உப்பு வணிகர் முன்புபோல் உடனுக்குடன் புறப்படுவது இல்லை. தேவைக்கு அதிகமாகத் தங்கிவிட்டுப் போகின்றனர். பறம்பு நாட்டுக்கு வந்த எந்த ஒரு பாணர் குழுவும் கடந்த ஆண்டில் ஒருமுறைகூட, வரும் வழியில் உள்ள முல்லை நிலக் காடுகளில் கொள்ளையர்களிடம் அகப்படவில்லை. இவை எல்லாம் நமது ஐயத்தை வலுப்படுத்தவே செய்கின்றன.”
“கொள்ளையரிடம் சிக்காமல் இருப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?”
“காடுகளில் வேந்தர்களின் படைகள் நிலைகொண்டுள்ளன எனப் பொருள். படைகள் இருக்கும் காடுகளில் கொள்ளையர் இருக்க மாட்டார் அல்லவா! நம்மை, பலரும் நெருங்கியுள்ளனர். வழக்கத்துக்கு அதிகமாக இந்த ஆண்டு அதிக விருந்தினர் வந்துள்ளனர். போருக்கு முன்னர் விருந்தினரின் எண்ணிக்கை பெருகும் எனக் கேள்விப்பட்டது இல்லையா?”
“அதற்காக, விருந்தினரை எல்லாம் சந்தேகப்பட முடியுமா?”
“சந்தேகப்பட முடியாது. ஆனால், கண்டறிய முடியும். அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல்தான் நீங்கள் இவரை அழைத்துக்கொண்டு போகிறீர்கள்.”
“என்ன செய்திருக்க வேண்டும்?”
“பாணருக்குத்தான் வறுமை காரணமாக பரிசல் பெறவேண்டிய தேவை இருக்கிறது. புலவனுக்கு இங்கு என்ன வேலை? எழுத்து கற்றவனுக்கு உதவத்தான் மூவேந்தரும் போட்டிபோடுகின்றனரே! அவரிடம் கிடைக்காத பொன்னா... பொருளா? அப்படியிருக்க, இவ்வளவு கடினமான ஒரு மலைப்பயணத்தைச் செய்யவேண்டிய தேவை என்ன? இவை எல்லாவற்றையும் பற்றிகூட நீ அவரிடம் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், தனித்த தேரில் வந்து இறங்கி காட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இறக்கிவிட்டுப் போனது யாருடைய தேர்? தேரில் வந்து இறங்கும் வளம்கொண்டவன், காட்டின் கடுமையை அனுபவிப்பது எதனால்?”
பழையனின் கண்கள் நீலனைத் தேடின. அவன் கூழையனுக்குப் பின்னால் நின்றிருந்தான்.
“ஆகட்டும்... நாளை காலையில் அவரிடம் பேச்சுக்கொடுத்துப் பார்க்கிறேன்” என்றார் பழையன்.
கூழையனின் முகத்தில் சிரிப்புப் படர்ந்தது.
“ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டார் பழையன்.
“நம்பிய பிறகு ஒருவனைச் சந்தேகப்படுவது எளிது அல்ல. அதுவும் உன்னால் உறுதியாக முடியாது. நானே காலையில் அவருடன் பேசுகிறேன். உங்களோடு அனுப்பிவைப்பதா, என்னோடு அழைத்துச் செல்வதா என்பதை அவர் அளிக்கும் பதில்கள் முடிவுசெய்யட்டும்” என்றான் கூழையன்.
பழையனும் நீலனும் அதன் பிறகு பேசிக்கொள்ளவில்லை. நீலன், திசைக்காவல் வீரன்; கூழையனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவன். நிச்சயமாக அவனுக்கு அதிகமான வசவு கிடைத்திருக்கும் என்பது பழையனுக்குத் தெரியும். வீரர்களின் கட்டளை ஒழுங்குகளில் பழையனுக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. ஒரு மனிதனின் முகத்தையும் சொல்லையும் பார்த்துக் கணிக்க முடியாதது எதுவும் இல்லை என்று நம்புகிறவர் பழையன். ‘காடு, மிகவும் தூய்மையான இடம் மட்டும் அல்ல; மனித இதயத்துக்கு மிக நெருக்கமான இடமும்கூட. ஒருவனுக்குள் இருக்கும் உண்மைகளை எளிதில் உதிர்க்கச் செய்யும் ஆற்றல் காட்டுக்கு உண்டு. காட்டின் ஊடே பயணப்படும் ஒருவனால் கபடத்தனத்தை மறைத்து இவ்வளவு தொலைவு எடுத்து வர முடியாது. இதை உணர முடியாத அளவுக்கு கூழையனைப் பதற்றம் தொற்றியுள்ளது. காலையில் என்னதான் நடக்கிறது பார்ப்போம், என்ற முடிவோடு தலை சாய்த்தான் பழையன்.
காலையில் பறவைகளின் ஒலியால் காடு நிரம்பி இருந்தது. கபிலரின் தூக்கம் கலைந்தது. உடல் முறுக்கி எழுந்தார். முடிச்சுகள் பிரிவதைப்போல தசைநார்கள் பிரிந்து அவிழ்ந்தன. வலி இலகுவாகிறதா...விட்டுப்பிடிக்கிறதா எனத் தெரியவில்லை. இரவு முழுவதும் கேட்டுக்கொண்டேயிருந்த பேச்சுச் சத்தம் எதுவும் இப்போது இல்லை. மெள்ள கண்கள் விழித்துப் பார்த்தார். குகைக்குள் யாரும் இருப்பதுபோலத் தெரியவில்லை. ‘அதிகாலையிலே எழுந்து போய்விட்டனரா! மற்றவர் போயிருந்தாலும் அழைத்துச் செல்ல நீலன் இருப்பானே, எங்கே அவனைக் காணோம்' என்று நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தார்.
குகை முகப்பின் வழியே சூரிய ஒளி பாய்ந்து வந்துகொண்டிருந்தது. அப்போது ஓரத்தில் இருந்த பாறையின் மீது ஒருவர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார் கபிலர். முகம் தெரியவில்லை. நெடு உயரம். திரண்டு விரிந்திருந்த தோள்கள், உடல் அமைப்பின் கம்பீரத்தைச் சொல்லின.
கபிலர் எழுந்துவிட்டதைப் பார்த்த அந்த மனிதர், முன்னோக்கி நடந்துவந்தார். முழு சூரியனையும் அவரது முதுகு அடைத்திருக்க, பின்புறம் இருந்து சூரிய ஒளி பீச்சியடித்துக் கொண்டிருந்தது. தோள்பட்டையில் விழுந்து சுருண்டிருக்கும் தலைமுடியின் வழியே பாய்ந்துவரும் ஒளி மேல்படர, கபிலர் கையூன்றி எழுந்தார். மஞ்சள் ஒளியால் கண்கள் கூசின. ஆனாலும் காட்சியின் அபூர்வம் அவரை இமை கொட்டாமல் பார்க்கவைத்தது.
குகைக்கு முன்புறம் இருந்த மலைச்சரிவில் மொத்தக் கூட்டமும் நின்றுகொண்டிருப்பது அரைகுறையாகத் தெரிந்தது. எட்டிப்பார்க்கும் போது முன்நகர்ந்து வருபவரின் குரல் குகை எங்கும் ஒலித்தது.
“முதல் நாளே கால் தசை பிறண்டுவிட்டது. நாக்கறுத்தான் புற்கள் உடல் எங்கும் கீறியுள்ளன. காக்காவிரிச்சி நிலைகுலையவைத்துள்ளது. நீலன், எதிர்பாராமல் தூக்கி அடித்திருக்கிறான். இவ்வளவு தாக்குதல்களையும் வலியையும் தாங்கியபடி விடாமல் மலைகள் கடந்து வந்திருக்கிறீர்களே, இனியாவது உங்களை எனது தோளிலே தூக்கிச்செல்ல அனுமதிப்பீர்களா?”
திகைப்பில் இருந்து மீளாத கபிலர், நெருங்கிவரும் அந்த மாமனிதனைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் யார்?”
``வேள்பாரி!’’
- பாரி வருவான்...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வீரயுக நாயகன் வேள்பாரி - 8
`கபிலரைத் தோளிலே சுமந்து வந்தான் பாரி' என்ற செய்தி, நாடு எங்கும் பரவியது. கபிலர் யார் என, பறம்பு மக்களுக்கு நேற்று வரை தெரியாது. ஆனால், தங்களின் தலைவன் தோளிலே சுமந்த ஒரு மாமனிதனைப் பற்றித்தான் இப்போது காடு எங்கும் பேச்சு.
ஒரே நாளில் கபிலர், காட்டின் கதையாக மாறினார். அவரை அழைத்து வந்த நீலனும் வேட்டூர் பழையனும் இப்போது எல்லோராலும் தேடப்படும் மனிதராக இருக்கின்றனர். வேட்டுவன் குன்றில் கால் பதித்ததில் இருந்து, எவ்வியூருக்குள் நுழையும் வரையிலான கபிலரின் ஒவ்வோர் அடியும் இப்போது பழையனின் கதைக்குள் மிதந்துகொண்டிருக்கின்றன.
தனது வீரத்தால் பேர் எடுத்த நீலனின் புகழ், கபிலரால் இன்னும் உச்சத்துக்குப்போனது. எந்நேரமும் இளம்பெண்கள் சூழ இருக்கும் நீலனைக் கண்டு, அவனது நண்பர்கள் சற்றே பொறாமைகொள்கின்றனர். காலிலே தசைப்பிடிப்பு ஏற்பட்டவுடன் திருப்பி அனுப்பாமல் அழைத்து வந்த நீலனைக் கட்டி அணைத்தான் பாரி.
`கண நேரத்துக்குள் அவருக்குத் தனைமயக்கி மூலிகை கொடுக்க வேண்டும் என நீ துணிந்ததுதான் மிக முக்கியம். சிறந்த வீரனால் மட்டுமே அந்நிலையில் நாகக் கிடங்குக்குள் நுழைய முடியும்' - பாரி சொன்ன சொற்களை இப்போது எல்லோரும் சொல்கின்றனர்.
கொற்றவை விழா தொடங்க ஒரு வார காலம் இருக்க, இப்போது கபிலருக்கான விழா தொடங்கியது. “கபிலரின் வருகை, காட்டின் திருவிழா” என்று பாரி சொன்ன சொல்லில் இருந்து அது தொடங்கியது. காட்டின் விழா என்றால், அதன் முதல் வெளிப்பாடு வேட்டைதான். பெரும் உற்சாகத்தோடு பல குழுக்கள் வேட்டைக்குப் புறப்பட்டுப் போகும். சொல்லிவைத்த பொழுதுக்குள் ஊர்வந்து சேர வேண்டும். வேட்டையில் சிக்கும் முக்கியமான விலங்கு எதுவோ, அதுதான் அன்றைய விருந்தைத் தீர்மானிக்கும்.
ஒவ்வொரு விலங்கின் ருசிக்கும் ஏற்ற மதுவகை உண்டு. மதுவின் தன்மைக்கு ஏற்றபடியே இசை முழங்கும். இசைக்கு ஏற்பவே ஆட்டம். அன்றைய ஆட்டத்தின் ஆரம்பம் வேட்டையாடப்படும் விலங்கில் இருந்தே தொடங்குகிறது. அது மானாட்டமா, மயிலாட்டமா, மிளா கூத்தா, காட்டு எருமையின் கொம்பாட்டமா என்பது மதுவோடும் உணவோடும் இசையோடும் ஆட்டத்தோடும் கலந்தது.
மான்கறிக்கு ஈச்சங்கள் எடுபடாது. பறவைகளின் கறிக்கு தென்னங்கள் பொருந்தாது. ஈனா கெடாரிக்கு மூன்றாம் நாள் பனங்கள்தான் சிறந்தது. அத்தி மதுவுக்கும் அறுபதாங்கோழியின் கறிக்கும் ஈடு இவ்வுலகில் கிடையாது. `அறுபதாங்கோழி அகப்படாதா!' என ஏக்கத்தோடு இருந்தான் பாரி. `வேட்டைக்குப் போன ஒரு குழுவாவது அறுபதாங்கோழியைப் பிடித்துவரும்' என, மூன்று நாட்களாக பாரி ஆசையோடு காத்திருக்கிறான். கபிலர் எனும் பெரும்புலவர் வந்திருக்கிறார். அந்த வருகையைக் கொண்டாட அறுபதாங்கோழியே பொருத்தமானது. பாரியின் ஆசை இன்றாவது நிறைவேற வேண்டும் என, எவ்வியூரில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றனர். முதல் நாளும் கிடைக்கவில்லை, அடுத்த நாளும் கிடைக்கவில்லை. இந்தச் செய்தி எங்கும் பரவ, பறம்பு நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களும் காட்டுக்குள் அறுபதாங்கோழியைத் தேடி தினமும் அலைகின்றன.
`காட்டின் பிரமாண்டத் துக்குள் சின்னஞ்சிறு கோழியைக் கண்டுபிடிப்பது என்ன சாதாரணச் செயலா? அறுபதாங்கோழி, தான் பிடிபடுவதை அதுதான் முடிவுசெய்யும்' என்பார்கள். பாரி, அதன்மீதுதான் நம்பிக்கைகொண்டிருக்கிறான். “எனக்காகவா கேட்கிறேன்? கபிலருக்காக அது இந்நேரம் வந்து அகப்பட்டிருக்க வேண்டாமா!” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஒரு குழந்தையைப்போல அடம்பிடிக்கும் பாரியின் ஆசையை நிறைவேற்ற, ஒவ்வொருவரும் துடியாகத் துடிக்கின்றனர். “இந்நேரம் ஆயிரம் யானைகளைக்கூட ஓட்டிவந்திருக்கலாம். ஆனால், காட்டுக்குள் கோழி பிடிப்பது எளிதான செயலா? இது பாரிக்கு ஏன் புரியவில்லை? பச்சிளம் பிள்ளையைப்போல அடம்பிடிக்கிறானே!'' என்று புலம்பியபடியே காட்டின் இண்டு இடுக்கு எல்லாம் நுழைந்து தேடுகின்றனர் பறம்பு மக்கள். விவரம் தெரிந்தவர்கள், புலிகளின் நடமாட்டப் பகுதியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றனர்.
கபிலர் திகைத்துப்போய் இருந்தார். ஒவ்வொரு நாளும் பெரும் விருந்துகளோடுதான் தொடங்குகிறது. மறுநாள் அதைவிடச் சிறந்த விருந்து அரங்கேறுகிறது. அவர் யவனத்தேறலை பாண்டியக் கிழவனோடு உட்கார்ந்து நாட்கணக்கில் குடித்திருக்கிறார். சேரனோடு பெருவிருந்து உண்டு மகிழ்ந்திருக்கிறார். ரசனையில் சோழனே சிறந்தவன் எனக் கருதுபவர் கபிலர். அவனது உபசரிப்பும் ஏற்பாடுகளும் அவ்வளவு எழில் வாய்ந்தவையாக இருக்கும். அவை எல்லாம் அதிகாரத்தாலும் ஆடம்பரத்தாலும் நடப்பவை; செல்வத்தின் திளைப்பில் நடப்பவை. ஆனால், இங்கு நடப்பது முற்றிலும் வேறானது. பாவனைகளும் அலங்காரமும் படியாத மானுட அன்பின் தூய வடிவம். அதே தூய்மையுடன் இருக்கும் ஒருவனால்தான் இதை அனுபவிக்க முடியும்.
மனதின் ஓரத்தில் இருக்கும் அழுக்குகூட நம்மை வெட்கித் தலைகுனியச் செய்யும் அளவுக்கு உக்கிரம் ஏறிய பேரன்பு இது. கபிலர் திணறிப்போனார். அறுகநாட்டுச் சிறுகுடி மன்னன் செம்பனிடம், தான் சொல்லிவந்த வார்த்தைகள் உள்ளத்தை அறுத்துக் கொண்டிருந்தன. ‘பாரியின் தூய்மையான அன்புக்கு முன் நான் கூனிக்குறுகியே நிற்கிறேன். நான் அதற்குத் தகுதியானவன் அல்ல. அவனது புகழ் மீது ஐயங்கொண்டு அதைக் கண்டறியவே, நான் இங்கு வந்தேன். இதை அவனிடம் சொல்ல வேண்டும்' என்று கபிலரின் மனம் தவித்தது.
பாரியின் நிழல்போல் எந்நேரமும் உடன்நிற்பவன் முடியன். வேகமும் வீரமும்கொண்ட இளைஞன். அவனது இடுப்பில் ஒரு பக்கம் வாளும் இன்னொரு பக்கம் மாட்டுக்கொம்பும் தொங்கிக்கொண்டிருந்தன. பழைமையும் புதுமையுமான இரண்டு ஆயுதங்களை ஒருசேர வைத்திருந்தான். ‘முடியன்’ என்பது அவனது பெயர் என்றுதான் கபிலர் முதலில் நினைத்தார். ஆனால், அது `தளபதி'போல ஒரு பட்டம் என்பது பின்னர்தான் கபிலருக்குத் தெரியவந்தது.
அதேபோல் எவ்வியூரில் எல்லோரும் வணங்கும் மனிதராக, பெரியவர் தேக்கன் இருக்கிறார். அதுவும் பட்டமா அல்லது பெயரா என கபிலருக்குத் தெரியவில்லை. இருவரிடமும் தனது நிலையை விளக்க வேண்டும் என கபிலர் முயற்சிசெய்ய, அவர்களோ அறுபதாங்கோழி கிடைக்கும் வரை எதையும் காதுகொடுத்துக் கேட்கவே தயாராக இல்லை. கபிலர் என்ன செய்வது எனத் தெரியாமல் திக்கித்திணறிக் கிடந்தார்.
ஆனால், கபிலரைவிட திணறிக் கிடப்பது பறம்பு மக்கள்தான். அறுபதாம்கோழிக்காக அவர்கள் இப்போது காடு எங்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர், பாரியின் குடும்பம் உள்பட. ஆசைப்பட்டது பாரி என்பதால், அதை நிறைவேற்றுவதை கடமையாகவே எல்லோரும் கருதுகின்றனர். அறுபதாம்கோழி, காட்டின் அதிசயங்களில் ஒன்று. கோழியைப்போல் உடலும் சேவலைப்போல் வாலும் கொண்டிருக்கும். வண்ணமயமான வாங்கருவாள் போல் வாலின் இறகுகள் சிலிர்த்து நிற்கும். அது அறுபது நாட்களுக்கு ஒருமுறைதான் முட்டையிடும். அன்னப்பறவை சாவதற்கு முன், ஒரே ஒருமுறை பெருங்குரல் எழுப்பிக் கூவிவிட்டு செத்துப்போவதைப் போலத்தான் இதுவும். சாவதற்கு முன் பகற்பொழுதில் சேவலைப்போல் பெருங்குரல் எடுத்துக் கூவிவிட்டு செத்துப்போகும்.
அந்த ஓசைதான் அதை `அறுபதாங்கோழி' என்று அடையாளப்படுத்துவது. ஓசை வந்த பகுதியில் தேடினால், ஏதேனும் ஓர் இண்டுஇடுக்குக்குள் செத்துக்கிடக்கும். அறுபதாங்கோழியைத்தான் முருகன் தனது கொடியில் வைத்திருந்தான். முன்புறம் கோழி போன்றும், பின்புறம் சேவல் போன்றும் அது காட்சியளித்தது.
`அது முருகனின் மாயவித்தை' என, பின்னால் வந்தவர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது `எவ்வி'தான் ஒருநாள் அறுபதாங்கோழியைக் கண்டறிந்தான். முருகன் கொடியாக வைத்திருந்தது இதுதான் என்பது அவன் சொல்லித்தான் மற்றவர்களுக்குத் தெரியும். அந்தக் கோழியின் பெரும் அதிசயம் என்ன என்றால், அதன் கழிவில் இருந்துதான் `தீப்புல்' முளைக்கும். அதன் கறியின் சுவைக்கு ஈடுஇணை இல்லை. முருகனிடம் இருக்கும் ஒன்றின் சுவையைப் பற்றி தனித்துச் சொல்லவேண்டியது இல்லை.
அறுபது நாட்களுக்கு ஒருமுறை முட்டையிடும். அது காட்டுக்குள் எந்த விலங்கின் உணவாகவும் மாறாமல், மண்ணுக்குள் பாதுகாப்பாக இருந்து பொறிக்க வேண்டும். அதன் சுவை வேட்டை விலங்குகளுக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், அதை வேட்டையாடுவது எளிது அல்ல. புலி போன்ற வேட்டை விலங்கு அதன் சுவைக்கு மயங்கி அதன் வாசனையை நுகர்ந்தபடி, காட்டின் குறிப்பிட்ட பகுதியில் அலைந்துகொண்டே இருக்கும். புலியால் எளிதில் அறுபதாங்கோழியைப் பிடிக்க முடியாது, அதே நேரம் அதன் வாசனையைவிட்டு விலகவும் முடியாது. எந்நேரமும் புதருக்குள் பதுங்கியபடியே நகர்ந்துகொண்டு கிடக்கும். தன்னைக் கடந்துபோகும் மான் கூட்டத்தைக் கண்டும் புலி அமைதியாக இருக்கிறது என்றால், அங்கு அறுபதாங்கோழி இருக்கிறது என அர்த்தம். புலியின் இந்த மயக்கச் செயலின் வழியே அங்கு அறுபதாங்கோழி இருப்பதை, காடு அறிந்தவர்கள் அறிவார்கள்.
நான்காம் நாள் அதிகாலை, தென்புறக் காட்டுக்குள் சரசரவெனக் கீழ் இறங்கினான் பாரி. உடன் வீரர்கள் சிலரும் சென்றுகொண்டி ருந்தனர். புலியின் நடமாட்டம் பற்றிய தகவல் வந்திருக்கலாம். எனவே, `அறுபதாங்கோழி இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. நாமே செல்வோம்' என முடிவெடுத்து பாரி போய்க்கொண்டிருக்கிறான் என்று மற்றவர் நினைத்தனர். சிற்றோடையைத் தாண்டிய சிறிது தொலைவில் செழித்து வளர்ந்திருந்த கடம்பமரத்தின் முன் நின்றான் பாரி. குறி சொல்லும் வேலன் பூசாரி முன்னரே அங்கு வந்திருந்தார். வீரருக்கு அப்போதுதான் புரிந்தது. சற்று தொலைவில் நின்று முருகனை நோக்கிக் கைதொழு தனர்.
தமிழ் நிலத்தில் எஞ்சியிருக்கும் மலைமக்களின் அரசுகள் இருபத்திரண்டு மட்டுமே. அவற்றுள் முதன்மையாக அறியப்படுவது பறம்புநாடு. அதன் தலைவன் பாரி. இந்த நாட்டைப் பற்றி மூவேந்தருக்கும் சமவெளியில் வாழும் மக்களுக்கும் இதுவரை தெரிந்த உண்மைகள் பாணர் பலரால் சொல்லப்பட் டவையே! தமது வறிய நிலையைப் போக்க வரும் பாணர், பாரியின் அள்ளித் தரும் வள்ளல் தன்மையையே மீண்டும் மீண்டும் பாடினர்.
ஆனால், வேளீர்களின் பறம்புநாடு எத்தகைய வளத்தைக்கொண்டுள்ளது, அந்த மக்கள் தமது வாழ்வை எப்படி அமைத்துக்கொண்டுள்ளனர், பாரி நடத்தும் ஆட்சியின் தனித்துவம் என்ன என்று, எதுவும் வெளி உலகில் இருப்பவர்களுக்குத் தெரியாது. ‘மலைமகன் ஒருவன் ஆளுகிறான்; இல்லாதவர்கள் போனால் `இல்லை' எனச் சொல்லாமல் அள்ளித் தருகிறான்' என்றுதான் நினைத்திருந்தனர்.
முதன்முறையாக வயிற்றுப்பாட்டுக்காக அல்லாமல், பாரியையும் அவனது பறம்புநாட்டையும் அளந்து பார்க்க வேண்டும் என்று முடிவோடு ஒருவர் வந்திருக்கிறார். வெளி உலகின் கண்கொண்டு இந்த நாடு இப்போதுதான் பார்க்கப்படுகிறது.
இவர்கள் காட்டின் பழைமையான மைந்தர்கள்தான். ஆனால், காலமாற்றத்தின் கரங்களை இறுகப் பற்றியுள்ளனர். இந்த மண்ணில் இருந்து அழிக்கப்பட்ட எத்தனையோ குலங்களின் கண்ணீரும் ரத்தமும் இவர்களை உருமாற்றியபடி இருக்கின்றன. பத்து ஆண்டுகளாக இந்தக் குலத்தின் தலைவனாக இருக்கிறான் வேள்பாரி. வேளீர்குல வீரன் ஒருவன் எறியும் ஈட்டியைக் கண்டு, வேந்தனே ஆனாலும் விலகி நிற்கும் மனநிலையை உருவாக்கிய மாவீரன் வேள்பாரி.
`நாடு என்பது அரசும் அரச நியதியும்தான்' என விதி செய்பவர்களுக்கு மத்தியில், `நாடு என்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்' என நிலைநிறுத்தி உள்ளான். இந்த நிலத்தில் நடந்துவரும் கபிலருக்கு, கண்ணில் படுபவை எல்லாம் ஆச்சர்யத்தையே உண்டு பண்ணின. அதிகாரம் உயிர்பெறாத இடத்தில் அன்பு மட்டுமே தழைத்திருக்கும். ஆசை, கோபம், சோகம் எல்லாமே அன்புமயமாக நிகழும் ஓர் உலகின் நிகழ்வைக் கனவில்கூட காண முடியாதே! நிஜத்தில் என்ன செய்வார் கபிலர்? நிலைகுலைந்துபோனார்.
கபிலரின் கண்களில் முதலில் பட்டது பறம்பின் தலைநகரான `எவ்வியூர்'. வேட்டூரில் இருந்து நடந்து வரும்போது நீலன் சொன்னான், ``பாம்புத் தச்சன்தான் எவ்வியூருக்கு வடிவம் கொடுத்தவன்'' என்று.
“பாம்புத் தச்சனா, அது யார்?” எனக் கேட்டார் கபிலர்.
“பாம்புக்கு வீடு கட்டும் தச்சன் யார்? எனத் திருப்பிக் கேட்டான் நீலன்.
“கறையான்” என்றார் கபிலர்.
“கறையான் கட்டியுள்ள புற்றைப்போல, ஆதிமலையின் நடுவில் உள்ள கரும்பாறையைச் சுற்றி பாறையோடு பாறையாகச் சற்றே குடைந்து, முன்னால் புற்றுமண்ணால் சுவர் எடுத்து மரச்சட்டகங்களால் வடிவமைக்கப்பட்ட வீடுகளைக்கொண்டது எவ்வியூர். கார்காலத்தில் மழை கொட்டித்தீர்க்கும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் உச்சியில் இருந்து கீழ்நோக்கிப் பாய்ந்தோடும் நீர், சிறு துளிகூடத் தேங்கி நிற்காது. கோடையில் கொடுங்காட்டுத் தீ பரவினாலும் உள்ளுக்குள் ஏறாது. சுட்டமண், மழைக்கு உறுதியானது; நெருப்பை உள்வாங்கும்; அனல் தாங்காமல் இளகி உருகும். ஆனால், புற்றுமண் நெருப்பை ஒட்டவிடாது, விலக்கிக் கொடுக்கும். நீரும் நெருப்பும் ஒன்றும் செய்துவிட முடியாத ஒரு கட்டுமானம். இவற்றுள் மிக வியக்கவைப்பது எவ்வி கட்டியுள்ள அரண்மனை. அதை நேரில் பார்த்தால்தான் உமக்குப் புரியும்” என்றான் நீலன்.
எவ்வியூரைக் காணும் வரை இதன் வடிவம் கபிலருக்குப் பிடிபடவில்லை. உண்மையில் ஆச்சர்யம் நிரம்பிய கட்டுமானம்தான் இது. இன்னும் அரண்மனையைப் பார்க்கவில்லை. அதைப் பற்றி ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான் நீலன். பார்த்ததன் வியப்பு பார்க்காததன் மீதே படிகிறது. அவருக்கு அரண்மனையைப் பார்க்க ஆசைதான். ஆனால், இந்த ஊரில் எந்தத் தெருவுக்குள் போனாலும் ஆச்சர்யத்தின் வழியாகத்தான் கடக்க வேண்டியிருக்கிறது.
பறம்புநாட்டில் மனிதன் உழைத்து விளைவிக்கக்கூடிய எந்த ஒரு பொருளும் இல்லை. தினை வகைகள், பழ வகைகள், காய்கறி வகைகள் எல்லாம் இயற்கையில் தாமாக விளைகின்றன. உணவு என்பது சேகரிப்புதானே தவிர, உற்பத்தி அல்ல. பிறநாடுகளைப்போல் உணவு உற்பத்திக்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தவேண்டிய தேவை இல்லை. பிறநாடுகளில் பெரும்பகுதி மக்கள் செய்யும் வேலைக்கு, இங்கு சிறு பொழுது மட்டுமே செலவழிக்கப்படுகிறது.
ஆண்களின் வாழ்வு முழுவதும் ஆயுதங்களோடுதான் கழிகிறது. வேட்டை தொடங்கி போர் வரை எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தும் அசாதாரணமான கலையை ஒவ்வொருவரும் கற்றிருக்கின்றனர். எட்டு வயதில் காடு அறிந்துவர வீட்டைவிட்டு வனத்துக்குள் அனுப்பப்படும் சிறுவர், அதன் பிறகு மாவீரராகத்தான் குடில் திரும்புகின்றனர். இவரின் முயற்சிக்கு இணையான முயற்சிகள் வேறு எங்கும் இல்லை.
இரண்டாவது, இயற்கையை அறிதல். தாவரங்கள், விலங்குகள், பறவைகள், காலநிலைகள் ஆகியவற்றைப் பற்றி இவருக்கு இருக்கும் பேரறிவுக்கு இணை சொல்லும் அறிவு வேறு எவருக்கும் இல்லை. அதனாலேயே இவர்கள் மருத்துவத்தில் அற்புதங்களைக் கைவரப்பெற்றவராக இருக்கின்றனர். மருத்துவம் கைவரப்பெற்றதாலேயே வீரத்தின் எல்லையை இன்னும் கூட்டுகின்றனர்.
பயிற்சியின்போது வாள்முனை நெஞ்சைக் கீறிப்போனாலும் கவலைகொள்ளும் வீரன் எவனும் இல்லை. `அத்தாப்பொறுத்தி' மூலிகையைக் கண்டறிந்த பிறகு, சதையை அறுத்துக்கொண்டுபோனாலும் அறுத்ததைப் பொறுத்திக்கொடுக்கிறான் மருத்துவன். பறம்பு நாடு அபரிமிதமான ஆற்றலோடு இருக்கிறது.
வெளிஉலகுக்குப் பெரிதாகத் தெரிவது பாரியின் புகழ்தான். ஆனால், அதைவிட பெரிய ஆற்றலும் அறிவும் ஆச்சர்யங்களும் இங்கு இருக்கின்றன. ஆனால், இவை எல்லாவற்றையும்விட கபிலர் அதிசயித்தது இந்த மக்களின் வாழ்முறையைத்தான்.
ஒவ்வொருவருக்கு எனத் தனித்த சொத்தும், எப்பாடுபட்டாயினும் அதைச் சேமித்துப் பெருக்க வேண்டும் என்ற பெருந்தாகமும் இங்கு இல்லை. இயற்கை பிற உயிரினங்களுக்கு வடிவமைத்த குண எல்லைகளைக் கடந்து மனிதன் போகவில்லை. மழை வந்ததும் செழிப்புறத் தழைத்து, வெயில் காலத்தில் வாடித் துவண்டு, மலரும்போது நறுமணம் வீசி, கனியும்போது அள்ளி வழங்கி, உதிரும்போது சத்தம் இல்லாமல் மண்ணில் மக்கி தம்மை உரமாக்கியபடி பயணத்தை முடித்துக்கொள்ளும் இந்த வாழ்க்கை, கபிலரை மண்டியிட்டு வணங்கவைத்தது.
கடம்ப மரத்தின் முன் மண்டியிட்டு வணங்கிய பாரி, நீண்ட நேரம் கழித்தே எழுந்தான். வேலன்பூசாரி குறி சொன்ன வார்த்தைகள் எவையும் அவனது காதுகளில் விழவில்லை. அவன் முருகனை வணங்கி நின்றான். ஆனால், அவன் மனம் வணங்கவில்லை. அவனுக்கு இருந்தது கோபம். அதைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இறங்கி வந்தான். காற்றின் அசைவின்றி இறுகி நின்றது கடம்ப மரம். பாரியும் கோபம் தளர்த்தாமலே திரும்பினான். எதிரில் செய்தி சொல்ல ஒருவன் வேகமாக இறங்கி வருவது தெரிந்தது. பாரிக்கு ஆவல் மேலிட்டது. ‘அறுபதாங்கோழியைப் பற்றிய செய்தி வருகிறதோ!' என எண்ணினான். வந்தவன் வணங்கிவிட்டுச் சொன்னான், “குடநாட்டு அமைச்சர் கோளூர் சாத்தன் தங்களைக் காண வந்திருக்கிறார்.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
Similar topics
» வீரயுக நாயகன் வேள் பாரி மின்நூல் இருந்தால் பகிரவும்
» வீரயுக நாயகன் வேள்பாரி - ஆசிரியர்: சு.வெங்கடேசன்
» ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது
» சரித்திர நாயகன் சாண்டில்யன்
» சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
» வீரயுக நாயகன் வேள்பாரி - ஆசிரியர்: சு.வெங்கடேசன்
» ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது
» சரித்திர நாயகன் சாண்டில்யன்
» சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 1 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|