ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

3 posters

Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by aeroboy2000 Wed Jan 10, 2018 12:37 pm

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து


தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து
Published on : 08th January 2018 10:39 AM  

மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது.
புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.
மார்கழியின் அதிகாலை மனோகரமானது.
தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது;
தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது;
இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது;
கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது.
தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது.
"இன்னுமா உறக்கம்!
எல்லே இளங்கிளியே!
எழுந்து வா வெளியே' என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது.
"மார்கழி நீராட வாரீரோ மங்கையரே' என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது.

அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம்.
இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை.
இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.
பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.
கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு.
"எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.
"நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
திங்கள் மும்மாரி பெய்யும்;
நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்;
வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும்,
ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்'
- இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.
வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது
அல்லது
திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.
தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.
இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது.
அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.
சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.
கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற "மெய்ஞ்ஞானம்' வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.
யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் - காருண்யம் - சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது.
எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள்.
எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள்.
"இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து' என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள்.
"இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்' -என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார்.
வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை.
இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது;
கொண்டு செலுத்தியது.
வைணவம் என்னும் திருமாலியம் தமிழர்க்குப் புதியதன்று.
"மாயோன் மேய காடுறை உலகமும்' என்ற வரையறை தொல்காப்பியத்திலே சுட்டப்பெறுகிறது.
கண்ணன் பலராமன் என்ற தொன்மங்கள் புறநானூற்றிலேயே புழங்கி வந்திருக்கின்றன.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும்,
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த காட்சி கண்ட காரிக்கண்ணனார் -
பால்நிற உருவிற் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமியோனுமென்று
இருபெருந் தெய்வமும்
உடன்நின் றாங்கு
உருகெழு தோற்றம் (புறம் 58)
- என்று பாடுகிறார்.
கண்ணனும் பலராமனும் இணைந்திருந்த தோற்றம்போல் சோழனையும் பாண்டியனையும் காட்சிப்படுத்துகிற காரிக்கண்ணனார், தெளிந்த சொல்லாட்சியில்
"தெய்வம்' என்கிறார்.
சங்க இலக்கியத்தில் தெய்வமென்று கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் கடவுள் உயரத்தில் காட்சி தருகிறார்கள்.
தெய்வம் - கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடுண்டு. தெய்வம் என்பது பழம்பொருள்;
பழகிய பொருள்.
கடவுள் என்பது பரம்பொருள்;
பழகாத பொருள்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்துள் வைக்கப்படலாம்'. தெய்வம் என்பது வழித்துணைப் பொருள்;
கடவுள் என்பது வழிபடுபொருள்.
அது எட்ட முடியாதது.
எல்லார்க்கும் வாய்க்காதது.
அந்த எட்ட முடியாத கடவுளையும் எட்டமுடியும்;
கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும்.
இடையறாது நினைந்து காதலுற்றுக் கனிவதொன்றே கடவுளை எட்டும் வழி என்று குறியீட்டு முறையில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது.
பிறப்பு முதல் சீரங்கத்து மாயனோடு மாயமான நாள் வரையிலான ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன.
ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?
அடுத்த வினா. ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது?
குரு பரம்பரைக் குறிப்புகள் கொண்டு கி.பி 776 என்று கணிக்கிறார் சாமிக்கண்ணுப்பிள்ளை.
"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' என்ற திருப்பாவை வரிகொண்டு
கி.பி 731 டிசம்பர் 18 என்று கணிக்கிறார்கள் வானூல் அறிஞர்கள்.
ஆழ்வார்களின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்த மு.ராகவையங்காரின் கூற்று மெய்யாயின் ஆண்டாளின் காலம் 8ஆம் நூற்றாண்டின் மையம் என்று கொள்வதில் ஐயம் இல்லை.
பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி?
மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது.
பெருமாள் திருப்பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்;
தெய்வக் காதலில் திளைக்கிறாள்.
தன் உடலென்ற அழகும் உயிரென்ற பொருளும் கண்ணனுக்கு மட்டுமே காணிக்கை என்று கருதுகிறாள். வடபெருங்கோயிலான் ஆகிய வடபத்ரசாயிக்குப் பெரியாழ்வார் தொடுத்துவைத்த துய்ய மலர் மாலைகளைத் தனக்குத்தானே சூடிச்சூடிச் சுகப்படுகிறாள். பெரியாழ்வார் திகைக்கிறார்.
அவர் தேகத் திசுக்கள் தனித்தனியே துடிக்கின்றன.
எல்லை மீறிய செயல் இதுவென்று உள்ளம் உடைகிறார்.
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணக்கடவுள்
"அவள் சூடிக்கொடுத்த மாலைகளைச் சூடுவதே சுகம்' என்று சொல்லி மறைகிறார்.
கோதையின் பெருமை கண்டு பித்துப்பிடித்து நிற்கிறார் பெரியாழ்வார்.
மகள் மங்கைப் பருவமுறுகிறாள். எடுத்து வளர்த்த பிறை பாற்கடல் குளித்தெழுந்து பௌர்ணமியாய் நிற்கிறது.
மகளுக்கு மணாளன் தேட எத்தனிக்கும்போதுதான் இன்னோர் எதிர்வினை நிகழ்கிறது.
"மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதா? மாட்டேன் தந்தையே!'
என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின்மீது படர்ந்த நெஞ்சினள்.
"உன்னித்தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்கிறாள். "மாலிருஞ்சோலை
எம் மாயற்கல்லால் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன்'
என்று உறுதி உரைக்கிறாள்.
தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது.
இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?
ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார்.
ஆனால் மொழியின் குழைவிலும், தமிழின் அழகிலும், உணர்ச்சியின் நெகிழ்விலும்,
உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே! யாது காரணம்?
"தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே'
என்ற குலசேகர ஆழ்வார் குரலில்,
ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
என்ற பூதத்தாழ்வார் பாசுரத்தில் ஒரு தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய் நிற்கிறது.
வண்டூர் உறையும் பெருமாளுக்குக் குருகினங்களைத் தூதுவிடும் நம்மாழ்வாரின் நாயகன் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை. திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது.
ஆனால் ஆண்டாள் உணர்ச்சி என்பது வெள்ளம்;
மலை உச்சியிலிருந்து பள்ளம் தேடித் தாவும் வெள்ளம்.
அது கட்டற்ற காட்டாறு.
இதனால்தான் வைணவ ஆச்சாரியார்கள்
"ஆழ்வார்களின் பக்திநெறி மேட்டுமடை ஒக்கும்;
ஆண்டாளுடையதோ பள்ளத்துமடை ஒக்கும்'
என்று திளைத்துத் தெளிந்து தெரிவிக்கிறார்கள்.
ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது. ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுவது. ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையன.
ஒருத்தியால் பாடப்பெற்றதென்றாலும் திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் அடிப்படை வேறுபாடு ஒன்றுண்டு.
நாச்சியார் திருமொழி காதல் லயத்தில் கனன்ற பாடல்கள்.
அவை பெரும்பாலும் தன்னுணர்ச்சியில் விளைந்தவை. திருப்பாவையோ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பொது உணர்ச்சியில் பூத்தவை.
"மல்லாண்ட திண்டோள் மணிவண்ணனுக்கென்றே சில்லாண்டு வளர்ந்த செல்வி கண்ணனையே கணவனாய் வரிப்பேன்'
என்று கனவு கண்டாள்.
"அவரைப் பிராயம் தொட்டு ஆர்த்தெழுந்த தடமுலைகள் துவரைப் பிரானுக்கே' என்று காதல் வஞ்சினம் கண்டாள்.
அவன் தோள்சேர என்ன வழி என்று எண்ணிக்கிடந்தவள் ஆயர்மங்கையர் கைக்கொள்ளும் பாவை நோன்புற்றாள். அவளுக்குத் திருவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆயிற்று.
தன்னையும் தம் தோழியரையும் ஆயர் பாவையர் ஆக்கினள். வடபெருங்கோயிலான் திருக்கோயிலே நந்தகோபன் குடிலாயிற்று.
கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள்.
"நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டுநாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளை சென்றோதோம்'
-என்று பெண்மைக்கெல்லாம் பொதுவாகத் தன்மைப் பன்மையில் பாடிக்கொள்கிறாள்.
ஆனால் திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்?
கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா?
உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள்.
"குத்துவிளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள்.
மெத்தென்ற பஞ்சசயனமாவது
தேவ, திர்யக், மனுஷ்ய, ஸ்தாவர, அப்ராண ரூபமான ஜீவர்கள்.
மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்'
என்று பிரபந்த ரட்சையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும் அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது.
இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து.
கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில்கால். பஞ்ச சயனம் என்பது
அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிற்றூவி என்ற ஐந்தும். தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டுமென்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.
"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக்' கனாக்காணும் கோதையாள் பாசுரத்தில் தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது. கொழுந்தமிழும் - செழுந்தமிழும், பழந்தமிழும் - இளந்தமிழும் வசந்த காலக் கிளைகளில் கொழுந்தெழுந்து வருவதுபோல் குழைந்தெழுந்து வருகின்றன.
மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள்.
கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள்.
எவரிடம் கேட்பது?
அவனோடு உறவாடிய உயர்திணைப் பெண்கள் உண்மை சொல்லார்.
ஆகவே அவன் இதழோடு உறவாடிய அஃறிணைப் பொருள் ஒன்றை அவாவுகிறாள்.
அதுதான் அவன் ஊதுகின்ற வெண்சங்காகிய பாஞ்ச சன்யம்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
ஆண்டாள் பாடல்களின் உச்சம் என்று சொல்லலாம் இந்தப் பரவசப் பாசுரத்தை.
கண்ணன் வாய்வைத்த சங்கே சொல்! அவன் இதழில் கற்பூரம் மணக்குமா? தாமரையின் வாசம் வருமா? இனிக்குமா? அதன் சுவையென்ன? மணமென்ன? என்பது பொருள்.
"சங்கே நீ உப்புக்கடலில் பிறந்தாய். இனிக்கும் இடம் கிட்டிற்று உனக்கு. திருத்துழாய்ப் பாத்தியில் மணத்தோடு பிறந்தவள் நான்.
எனக்கேன் இக்கண்ணீர் உப்பு?' என்ற உள்ளார்ந்த தமிழ் நயம் இதில் ஊடாடிக் கிடக்கிறது.
ஆண்டாள் இறைத்த நீர் கண்ணன் என்ற கழனி சேர்வதற்கு முன்னால் தமிழ் என்ற வாழையைத் தழைக்க வைத்திருக்கிறது.
"காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை' என்ற மரபு சங்க இலக்கியத்திலேயே மீறப்பட்டிருக்கிறது.
"என் உயவுநோய் அறியாது இந்த ஊர் துஞ்சுகிறதே என் செய்குவேன்? முட்டிக்கொள்ளவோ எவரையேனும் தாக்கவோ வாய்விட்டுக் கதறவோ' என்ற பொருளில் இயங்கும் "முட்டுவேன்கொல், தாக்குவேன்கொல்' என்ற ஒளவையார் பாடல் அந்த மரபை உடைத்ததுதான்.
கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின்பால் நிலத்தினிழிந்து வீணாவதுபோல் எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன்படாமல் என் அழகைப் பசலை உண்டு போகிறதே என்ற பொருளில் எழுதப்பட்ட
"கன்று முண்ணாது கலத்தினும் படாது' என்ற வெள்ளிவீதியார் பாடலும் மரபு மீறல்தான்.
ஆனால் மணமான பெண்களின் குரல்களாக அவை கேட்கின்றன. ஆண்டாளுடையது கன்னிக்குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக்குரல்.
"கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்'
என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல்.
கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது.
ஒரு மனிதனோடு எனக்கு மணவினை இல்லை என்று உறுதிப்பட்ட பெண்ணை என்செய்வது என்று பெரியாழ்வார் கலக்கமுற்றபோது, கண்ணன் அவர் கனவில் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறது. "ஆழ்வீர்! நின்மகளை யாமே மணக்கிறோம்;
உங்கள் திருச்செல்வியை திருவரங்கம் அழைத்து வாரும்'
என்று பெரியாழ்வார்க்கு ஆணையிட்ட பெருமாள்,
பாண்டிய மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றித் "திருவில்லிப்புத்தூர் சென்று முத்துச்சிவிகை ஏற்றி ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வாரும்'
என்று ஆணையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பல்லியம் முழங்க மறையவர்கூடி வாழ்த்தொலி வழங்க,
போகும் வழியெங்கும் பூச்சிதற, நாற்படையும் ஊர்ந்துவர,
பேரங்கம் முழுக்க அழகுற்ற பெண்ணாள் சீரங்கம் வந்து சேருகிறாள்.
திருவரங்கக் கோயில் புகுந்து,
வளர் தந்தையை வணங்கி வழிபட்டு, காதல் நடைநடந்து ஆதிசேடன் கடந்து, திருமால் திருவடி வருடி அவனோடு கலந்தாள்;
ஐக்கியமுற்றாள்.
இங்கும் சில வினாக்கள் விளைகின்றன.
கடவுள் மனித வடிவில் வந்து மனிதப் பெண்ணை மணந்து போவது உண்டு; வள்ளியும் முருகனும் போல.
மனித வடிவத்திலேயே கடவுள் காதல் உண்டு;
கண்ணனும் ராதையும் போல.
ஆனால் கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது.
ஆனால்,
அர்ச்சாவதாரமாகிய விக்கிரகத்தோடு குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்ற கேள்விக்கு விடைசொல்ல ஓர் ஆவணமும் இருக்கிறது.
"குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை அழகிய மணவாளப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்துத் தமது சொத்தை ஸ்ரீதனமாகக் கொடுத்துத் திருமண்டபம் கட்டிய செய்தியும்'
- என்ற குறிப்பு எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிப்பித்த
"கோயிலொழுகு' நூலில் காணப்படுகிறது.
ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும்,
ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட
Indian Movement: some aspects of dissent, protest and reform  
என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :
Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple.
- பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள்.
ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.
சமண - பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம். ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது. "எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்' என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்துகொள்ளலாம்.
"கண்ணன் புரிந்துகொள்ள முடியாத ஒரு கடவுள் தத்துவம்.
தன் காலத்திற்கு முன்கூட்டியே பிறந்துவிட்டவன் கண்ணன்.
இன்னும் சொல்லப் போனால் மிகமிக முன்கூட்டி. அதனால் அவனைப் புரிந்துகொள்வது வருங்காலத்தின் சாத்தியமே தவிர நிகழ்காலத்தினதன்று'
என்ற ஓஷோவின் கூற்று உண்மையாயின் கண்ணனைப் புரிந்துகொண்ட இறந்த காலத்தின் எதிர்காலம் என்றே ஆண்டாளைச் சொல்லத் தோன்றுகிறது.
ஒன்றையே நினை
- ஒருமுகப்படு
- ஒப்புக்கொடு
- நம்பு
- கருதியதில் உறுதிகொள்
- வினைப்படு
- வெற்றியுறு என்ற தத்துவம் ஆண்டாளுக்கும் கண்ணனுக்கும் மட்டும் உரியதன்று.
தலைவனுக்கும் தொண்டனுக்கும், நண்பனுக்கும் நண்பனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், தந்தைக்கும் மகனுக்கும், சத்தியத்திற்கும் வாழ்வுக்கும் இதுவே உரியது.
எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும்,
மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்.
இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்த பிறகும் ஆண்டாள் அருளிச்
செல்லும் அருஞ்செய்தி இதுதான்.




**********

நன்றி - தினமணி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by aeroboy2000 Wed Jan 10, 2018 12:38 pm

வைரமுத்து வாகு தெரியாமல்,
தான் வாழும் லோகு (உலகு) தெரியாமல்
இண்டியானா பல்கலைக்கழகம்
இதுகாறும் இருட்டில்
இடுக்கி இருந்த
இருட்டுச் சிந்தனையை
முரட்டுச் சிந்தனை என்று
முடிவு செய்து
முன் யோசனையை
பின் ஜோபியில் இட்டு  
கொள்ளிக் கட்டையைக் கொண்டு முதுகு சொறிந்து கொண்டார்...
இன்று எச்.ராசாக்களால் ஏசப்படுகிறார்.
ஆணைக்கும் அடி சறுக்கி விட்டது...
இது அடியேன் கருத்து
மற்றோர் மனக்கூற்றை
மறுதலிக்க மாட்டேன் ...
கற்றோர்
கவி புனையக் கற்றோர்
கவிக்கு துணை நிற்பரோ
இல்லை
வசை கீற்று எழுதி
வாய்வலிக்க
இசைப்பரோ ...
யாமறியோம் ...


ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by T.N.Balasubramanian Wed Jan 10, 2018 5:18 pm

வைரமுத்து வரிகள்
தைரியமிக்க வரிகள்
மனதில் பட்டதை
மறைக்காதுரைக்கும்
மாமனிதரென்பேன்
பழகு தமிழில்
அழகுடன் பகிரும்
நன்னடை, தகுமே    
பொன்னாடை போற்றவே !  

நடனமாடும்  தமிழ்
அவர் நாவினிலே
அசைந்தாடும் தமிழ்
தென்றலென பேசுகையிலே
அவர்தம் கைகள் அசைவினிலே  

எடுத்துக்காட்டை
தொடுத்த பாட்டெனெ
எள்குதல்  அறியாமையன்றோ!!

ஏசுவோர் ஏசட்டும்
புரிந்துகொண்டு
போற்றுவோர்
போற்றட்டும்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Jan 10, 2018 5:21 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by M.Jagadeesan Wed Jan 10, 2018 5:19 pm

வைரமுத்துவின் கெழுதகை நண்பரும் , பழுத்த நாத்திகவாதியுமான கலைஞரே , ஆண்டாளை இழிவுசெய்தால் பொறுக்கமாட்டார் . இராமானுஜ காவியம் எழுதியவராயிற்றே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by T.N.Balasubramanian Wed Jan 10, 2018 5:23 pm

தினமணி செய்திக்கு நன்றி aeroboy 2000 அவர்களே.
வி பொ பா

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by T.N.Balasubramanian Wed Jan 10, 2018 5:26 pm

M.Jagadeesan wrote:வைரமுத்துவின் கெழுதகை நண்பரும் , பழுத்த நாத்திகவாதியுமான கலைஞரே , ஆண்டாளை இழிவுசெய்தால் பொறுக்கமாட்டார் . இராமானுஜ காவியம் எழுதியவராயிற்றே !
மேற்கோள் செய்த பதிவு: 1256401

ஆமாம் Jagadeesan அவர்களே.
நலமா ? அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நீண்ட நாட்களாக காணவில்லையே.
வீட்டில் யாவரும் நலமா?

ரமணியன்
@MJagadeesan


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by M.Jagadeesan Wed Jan 10, 2018 5:36 pm

அனைவரும் நலமே ! தாங்கள் நலமா ?

உடல்நலமின்மை , மனச்சோர்வு ஆகியவை காரணமாக அக்கரையிலே இருந்துவிட்டேன் ; இக்கரைக்கு ( ஈகரைக்கு ) வரமுடியவில்லை , இனி வருவேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by T.N.Balasubramanian Wed Jan 10, 2018 5:49 pm

M.Jagadeesan wrote:அனைவரும் நலமே ! தாங்கள் நலமா ?

உடல்நலமின்மை , மனச்சோர்வு ஆகியவை காரணமாக அக்கரையிலே இருந்துவிட்டேன் ; இக்கரைக்கு ( ஈகரைக்கு ) வரமுடியவில்லை , இனி வருவேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1256404

அக்கறையுடன் உடல் நலம் பேணவும்.
மனச்சோர்வு தவிர்க்கவும் .
அப்பக்கம் வந்தால் சந்திக்கிறேன்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by aeroboy2000 Wed Jan 10, 2018 10:19 pm

T.N.Balasubramanian wrote:தினமணி செய்திக்கு நன்றி aeroboy 2000 அவர்களே.
வி பொ பா

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1256402

தாங்களும்
கவிநடை யில்
கவின்நடை
பயிலும்
கவி
என்று அறிந்து
இன்புற்றேன் ...

நன்றிகளுடன்

கே எல் என்
(Aeroboy2000)
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by T.N.Balasubramanian Thu Jan 11, 2018 10:37 am

மனது இருக்கு கவி புனைய
இடமோ இருக்கு ஈகரையிலே,
ஊக்குவிக்க aeroboy இருக்க
குவிக்க வேண்டாமோ கவிதைகளை !

ரமணியன்
@aeroboy2000


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து Empty Re: தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum