புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
113 Posts - 75%
heezulia
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
278 Posts - 76%
heezulia
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_m10உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 5:49 pm

சோளக்கொல்லை பொம்மை

தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத்திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை எல்லாம் மறுக்காமல் வாங்கித்தந்து, மிகவும் செல்லமாக அவளை வளர்த்துவந்தார்.

இளவரசிக்கு சிறு வயதில் இருந்தே சோளப் பொரி என்றால் உயிர். அரண்மனை யின் சமையலறையில், இளவரசிக்காகச் சுடச்சுட சோளப் பொரி அன்றாடம் பொரிக்கப்படும். இதை மனதில்கொண்டு, இளவரசியின் 17-வது பிறந்தநாள் அன்று, அரசர் அவளுக்கு சோளக்கொல்லையுடன் கூடிய ஒரு தனி மாளிகையைப் பரிசாக அளித்தார். இளவரசி இளவேனிலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்றிலிருந்து வேலையாட்கள், தோழிகள், காவல் வீரர்கள் புடைசூழ, அந்த மாளிகையிலேயே தங்கிக்கொண்டாள். கதிர்கள் விளைந்து முற்றியதும் அறுவடை நடந்தது. முத்து முத்தான வெள்ளைச் சோளத்தைப் பொரித்து, இளவரசி ஆசை தீர உண்டாள்.

எவ்வளவு சோளப்பொரியைத்தான் இளவரசியால் உண்டுவிட முடியும்? இளவரசிக்கு ஒரு திட்டம் தோன்றியது. பனை ஓலையில் அழகிய பெட்டிகள் செய்து, அவற்றில் சோளப் பொரியை அடைத்துச் சந்தையிலே விற்க ஏற்பாடு செய்தாள். சோளத் தட்டையில் கை வேலைப்பாடுகள் மிகுந்த பொம்மைகளைச் செய்து, அவற்றையும் விற்பனைக்கு அனுப்பினாள். இரண்டையும் மக்கள் விரும்பி வாங்கினார்கள்.

இவ்வாறாக இளவரசியும் அவளது சோளக் கொல்லையும் பிரிக்க முடியாதவர்களாக ஆகிப் போனார்கள். அந்த ஆண்டு முழுவதும் விதைப்பது, வளர்ப்பது, அறுப்பது, விற்பது என விதம் விதமாக இளவரசிக்குச் சோளக்கொல்லையால் பொழுது போயிற்று.

சந்தைக்கு வரும் அயல்நாட்டு வணிகர்கள் மூலம் இளவரசியின் சோளப் பொரியும், சோளத் தட்டைப் பொம்மைகளும் பக்கத்து நாடுகளுக்கும் சென்றன. கூடவே, 'ஓர் இளவரசி இவ்வாறு வணிகம் செய்கிறாள்’ என்ற விந்தைச் செய்தியும் அந்த நாடுகளுக்குப் பரவின.
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Solakkaattupommai4
மதுரை நாட்டின் இளவரசன் இளமாறனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். முகம் தெரியாத இளவரசி மேல் அவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. உடனே, ஓவியம் வரைவதில் திறமை சாலியான ஒற்றன் ஒருவனை அங்கு அனுப்பிவைத்தான் இளமாறன். அந்த ஒற்றன், வணிகன் வேடமிட்டு இளவரசி இளவேனிலின் மாளிகைக்குச் சென்றான். அவளுடைய அழகிய தோற்றத்தை மனதில் நன்கு பதிய வைத்துக்கொண்டு, அழகிய ஓவியமாக அவளைத் தீட்டி, மதுரைக்குத் திரும்பினான்.

இளவரசியின் 18-வது பிறந்தநாளன்று, ஒரு பெரிய பெட்டியுடன் அவளது மாளிகைக்குள் தூதுவனாக நுழைந்தான், மதுரை நாட்டு ஒற்றன். இளவரசியை வணங்கிய அவன், ''இளவரசி, எங்கள் மதுரை நாட்டின் இளவரசர் இளமாறன், தம்முடைய நட்பைத் தங்களுக்குத் தெரிவிக்க இந்த அரிய பரிசைத் தங்களுக்கு அனுப்பியிருக்கிறார். சோளக்கொல்லையால் புகழ் பெற்ற தங்களுக்கு ஏற்ற பரிசு இது. இது ஒரு சோளக்கொல்லை பொம்மை. உங்கள் சோளக்கொல்லை மேல் படையெடுக்கும் குருவிகளையும், பறவைகளையும் விரட்டியடிக்கும் பொம்மை இது. இது, சராசரி பொம்மையல்ல. இது ஒரு பேசும் பொம்மை! உங்களுக்காக இது பாட்டுப் பாடும், பழங்கதைகள் கூறும், நகைச்சுவையாகப் பேசும்!'' என்று சோளக்கொல்லைப் பொம்மையின் புகழை அடுக்கிக்கொண்டே போனான் அந்தத் தூதன்.

இளவரசிக்கு ஆவல் தாங்க முடியவில்லை. ''ம்ம், சரி சரி, பொம்மையை வெளியே எடுங்கள் முதலில்!'' என்றாள் பொறுமை இழந்து.

தூதுவன் சிளீத்தபடியே பெட்டியைத் திறந்து, அந்த ஆறடி உயரச் சோளக்கொல்லைப் பொம்மையை எடுத்து அவையிலே நிறுத்திவைத்தான். கைகளை அகல விரித்துக்கொண்டு, கந்தல் உடை அணிந்துகொண்டு, ஒரு கூத்தாடியைப் போல் வேடிக்கையாகக் காட்சியளித்தது அந்தப் பொம்மை. அதைப் பார்த்ததுமே இளவரசிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.

தூதுவன், ''ஏய் சோளக்கொல்லைப் பொம்மையே, இளவரசிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உன் திறமையைக் காட்டு!'' என்று கூறியவுடன் அந்தப் பொம்மையிலிருந்து ஒரு மிடுக்கான ஆண் குரல் வெளிப்பட்டது.

அந்தக் குரல், இளவரசிக்கு வணக்கம் கூறியது. அவளைப் புகழ்ந்து பாடல்கள் பாடியது. ''ஓய், ஓய் பறவைகளே ஓடிப்போங்கள்!'' என்று மிரட்டும் குரலில் கூச்சலிட்டது. பிறகு, கதை சொன்னது. நகைச்சுவையாக, நையாண்டியாகப் பேசியது.
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Solakkaattupommai2
இளவரசி இளவேனில் விழுந்து விழுந்து சிரித்தாள். அவை, கைதட்டலால் அதிர்ந்தது. இப்படி ஒரு பேசும் பொம்மையை இது வரை யாருமே பார்த்ததில்லை.

இளவரசி, தான் கழுத்தில் அணிந்திருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலையைத் தூதுவனுக்குப் பரிசாக அளித்தாள். தன் கைப்பட ஓர் ஓலையில் மதுரை இளவரசனுக்கு நன்றி தெரிவித்து மடல் எழுதி, ஓலையைத் தூதுவனிடம் கொடுத்தாள்.

பிறகு இளவரசி, அந்த சோளக்கொல்லைப் பொம்மையைத் தூக்கிவரச் செய்து, தன் சோளக்கொல்லையின் நடுவே நிறுத்திவைத்தாள். அது, கூச்சலிட்டுப் பறவைகளை விரட்டி யடித்தது.

அன்றிலிருந்து இளவரசி இளவேனிலுக்கு அந்தச் சோளக்கொல்லைப் பொம்மை உற்ற தோழனாக மாறிவிட்டது. நாள்தோறும் மணிக்கணக்காக அதோடு பேசி மகிழ்ந்தாள் இளவரசி. ஆனால், அந்த சோளக்கொல்லைப் பொம்மை எப்படி இந்த மாதிரி பேசுகிறது என்ற ரகசியத்தை மட்டும் இளவரசியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவும் சொல்ல மறுத்துவிட்டது. ஆனால், இளவரசன் இளமாறனின் அறிவு, ஆற்றல், அழகைப் பற்றியெல்லாம் பெருமை பொங்க எடுத்துக் கூறியது. இதையெல்லாம் கேட்கக் கேட்க இளவரசிக்கு இளமாறனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.

ஒருநாள், சோளக்கொல்லைப் பொம்மையால் விரட்டியடிக்கப்பட்ட பறவைகளின் தலைவனாகிய சிட்டுக்குருவி, சோளக்கொல்லை பொம்மையிடம் வந்தது.

அருகே வந்த சிட்டுக்குருவி, ''வணக்கம் சோளக்கொல்லைப் பொம்மையே! நீ இங்கே வராத வரை எங்களுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இப்போது, எங்கள் குஞ்சுகளெல்லாம் பட்டினி கிடக்கின்றன. எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும்!'' என்று வேண்டியது.

சிட்டுக் குருவியின் வேண்டுகோளால் மனம் இரங்கிய சோளக்கொல்லை பொம்மை, இளவரசியோடு பேசி, கொல்லையில் கீழே உதிர்ந்து கிடக்கும் சோள முத்துக்களை மட்டும் பொறுக்கிக்கொள்ள ஏற்பாடு செய்தது. கதிர்களைக் கண்டபடி வேட்டையாடக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டது. பறவைகளும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டன.

இதற்கிடையில், தஞ்சை வளநாட்டின் பக்கத்து நாடான கும்பகோணத்தில், ஒரு கொடிய மந்திரவாதி இருந்தான். அவனுக்குத் தலைமட்டும் யானைத் தலை போல இருக்கும். யானைத் தலை மந்திரவாதி என்றுதான் அவனை எல்லோரும் அழைப்பார்கள்.
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Solakkaattupommai3
அவன், தன் மந்திரக் கண்ணாடியில் இளவரசி இளவேனிலைப் பார்த்து, அவளைக் கவர்ந்து செல்ல முடிவு செய்தான். எனவே, ஒரு நாள் நள்ளிரவு, பத்து பறக்கும் யானைகளோடு வந்து இளவரசியின் சோளக்கொல்லையில் இறங்கினான்.

இதைக் கண்ட சோளக்கொல்லைப் பொம்மை, ''இளவரசி... இளவரசி, ஆபத்து! எதிரிகள் வருகிறார்கள், எச்சரிக்கை!'' என்று கத்தி, அனைவரையும் எழுப்பியது.

விழித்துக்கொண்ட வீரர்கள், வாட்களை உருவிக்கொண்டு ஓடி வந்தார்கள். ஆனால், மந்திரவாதியின் யானைப் படைக்கு அவர்களால் ஈடு கொடுக்க இயலவில்லை. இளவரசியின் சோளக்கொல்லை, யானைகளால் முற்றிலும் அழிக்கப்பட்டது. சோளக்கொல்லை பொம்மை பிடுங்கி வீசப்பட்டு, மிதித்துத் துவைக்கப்பட்டது. மாளிகைக்குள் நுழைந்த யானைத் தலை மந்திரவாதி, இளவரசியைத் தூக்கிச் சென்றான்.

மறுநாள் பொழுது விடிந்தபோது, இரை தேடி வந்த பறவைக் கூட்டம், சோளக்கொல்லையின் அழிவைக் கண்டு திகைத்தது. அப்போது, யானைகளால் மிதிக்கப்பட்டுச் சிதைந்து கிடைந்த சோளக்கொல்லைப் பொம்மை, பறவைகளை அருகே அழைத்தது.

''பறவைகளே... நான்தான் மதுரை இளவரசன் இளமாறனின் ஆவி! இளவரசி இளவேனிலின் மனம் கவரவே இந்தப் பொம்மையின் உடலுக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, என் உயிரைச் செலுத்தி இங்கே வந்தேன். என் உடல், நாட்டின் எல்லையில் இருக்கும் காட்டிலே என் நண்பனால் பாதுகாக்கப்பட்டுவருகிறது. நீங்கள் பறந்து சென்று, அவனிடம் செய்தியைக் கூறி என் உடலோடு அவனை இங்கே அழைத்து வாருங்கள்.'' என்று வேண்டுகோள் விடுத்தது.

பறவைகள் மூலம் செய்தியைக் கேள்விப்பட்ட இளவரசனின் நண்பனாகிய தூதுவன், இளமாறனின் உடலோடு விரைந்து வந்தான். பொம்மையிலிருந்த இளவரசனின் உயிர் அவன் உடலுக்குத் தாவியது.

இதற்குள் பெரும் படையோடு வந்து சேர்ந்திருந்தார்கள் தஞ்சை அரசரும், மதுரை அரசரும்.

இரு நாட்டுப் படைகளுக்கும் தலைமையேற்ற இளவரசன், கும்பகோணம் சென்று யானைத் தலை மந்திரவாதியின் மாளிகையைத் தாக்கினான். பெரும் போருக்குப் பின், மந்திரவாதியைக் கொன்று, இளவரசியை மீட்டு தஞ்சைக்குத் திரும்பினான் இளவரசன்.

இருவருக்கும் திருமணம் நடந்தது.

தஞ்சையில், இளவரசியின் அழிந்துபோன சோளக்கொல்லை மறுபடியும் உயிர் பெற்றது. அதன் நடுவே இப்போது அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது, பழுதுபார்க்கப்பட்ட ஊமை சோளக்கொல்லைப் பொம்மை.

இப்போதெல்லாம் அது பறவைகளை விரட்டுவதே இல்லை. ஏனென்றால், அந்தச் சோளக்கொல்லை முழுவதையும் பறவைகளுக்கே பரிசாக அளித்துவிட்டாள் இளவரசி.

- குறும்பலாப்பேரிபாண்டியன்

ஓவியம்: சேகர்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 5:51 pm

டூர் போன குமார்

குமார், ஐந்தாம் வகுப்புக்குச் செல்கிறான். முதல் நாளில் இருந்தே அவன் கனவு, அந்த வருட சுற்றுலாவுக்குப் போவதுதான். அப்பா, ஆட்டோ ஓட்டுனர். அம்மா, வீட்டின் அருகே இருக்கும் துணிக்கடையில் வேலை செய்கிறார். குமார், முத்தையா மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறான். முத்தையா என்கின்ற பெரியவர் ஒருவர், இந்தப் பள்ளியை நிர்வகிக்கிறார். நல்ல மனம் படைத்தவர். குமார் போன்ற ஏழை மாணவர்களுக்கு புத்தகத்திற்கான கட்டணம் மட்டும் வாங்கிக்கொள்வார். குமார், சுமாராகத்தான் படிப்பான்.

பள்ளியிலிருந்து வருடா வருடம் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது, சுற்றுலா செல்லும் சமயம் அப்பா கையில் சுத்தமாகக் காசே இல்லாமல் போய்விட்டது. குமாரால் சுற்றுலா போக முடியவில்லை.

நண்பர்கள் சென்று வந்து, தாங்கள் பார்த்ததை எல்லாம் கதை கதையாகச் சொன்னபோது ஏக்கமாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் அழுதான். அடுத்த வருடம் எப்படியும் தானும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான். சின்ன உண்டியல் தயார் செய்தான். காசு கிடைக்கும்போது எல்லாம் அதில் சேமித்துவந்தான். ஊரில் இருந்து அத்தை, பாட்டி வரும் போது காசு கொடுப்பார்கள். அதையும் போட்டுவைத்தான். கடைக்குப் போய் வரும்போது மீதம் இருக்கும் ஒரு ரூபாய், 50 காசுகளை அம்மாவின் அனுமதியோடு உண்டியலில் போட்டு சேமித்துவந்தான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. ஒரு நாள் ஆசிரியர், 'அடுத்த வாரம் நாம் சென்னைக்குச் சுற்றுலா செல்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.

கட்டணம் இருநூறு ரூபாய். குமாருக்கு உண்டியலில் அவ்வளவு பணம் சேர்ந்து இருக்குமா என்ற சந்தேகம். வீட்டுக்குப் போனதும் உண்டியலை உடைத்து, எண்ணிப் பார்த்தான். நூற்றி இருபத்தெட்டு ரூபாய் இருந்தது. அப்பாவிடம் தனக்கு இன்னும் எழுபத்திரெண்டு ரூபாய் வேண்டும் என்று கேட்டான். ஆசிரியரிடம் பெயரும் கொடுத்துவிட்டான். சுற்றுலாக் கட்டணத்தை குமார் மட்டும் கட்டவில்லை. மற்றவர்கள் எல்லோரும் கட்டிவிட்டார்கள். அவன் அப்பா, கடைசி நாள்தான் தர முடியும் என்றார். ஆசிரியரிடம் பேசி, பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் தர வேண்டும் என்ற ஒப்புதல் பெற்றான். அன்றிலிருந்து தினமும் சுற்றுலா பற்றிய கனவுதான்.

மறுநாள் சுற்றுலா. அன்றிரவு தூக்கமே வரவில்லை. அம்மாவிடம் தனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று சொல்லிவிட்டான். பேருந்தில் யார் பக்கத்தில் உட்கார வேண்டும் என முடிவு செய்துவிட்டான். புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவேயில்லை. சென்னை எப்படி இருக்கும்? படத்தில் காண்பிப்பது போல அழகாக இருக்குமா? நிறைய மக்கள் இருப்பார்களா? மெரினா கடற்கரையில் குளிக்கலாம். யாராவது கதாநாயகனைப் பார்க்கலாம். முதலமைச்சரை வழியில் காணலாம்... என்று ஏதேதோ யோசனைகள் குமாருக்கு.
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Tourstorya
காலை சரியாக ஐந்தரை மணிக்கு பேருந்து கிளம்பும். ஐந்து மணிக்கே பள்ளிக்கு வந்துவிட வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். குமார் நான்கு மணிக்கெல்லாம் தயாராகிவிட்டான்.அம்மாவை எழுப்பி காலை, மதிய உணவைச் செய்து தரச் சொன்னான். அப்பா இரவு வரவில்லை. இந்த வாரம் இரவில் வண்டி ஓட்டுகின்றார். முடிந்தால் வந்து பள்ளியில் விடுவதாகவும், இல்லையெனில் குமாரே பள்ளிக்குச் செல்லுமாறும் சொல்லிவிட்டுச் சென்றார் அப்பா. அவர் நாலரை மணியாகியும் வரவில்லை. அதனால், தானே கிளம்பி பள்ளிக்குச் சென்றான் குமார்.

விடியற்காலை என்பதால், இன்னும் இருட்டாகத்தான் இருந்தது. பள்ளி நெருங்கும் தெரு முனையில், ஏதோ முனகல் சத்தம் கேட்டது. முதலில் பயந்துவிட்டான். பிறகு, சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையைத் திருப்பினான். பாட்டி ஒருத்தியின் முனகல்தான் அது. கூனிக்குறுகி தெரு ஓரத்தில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் படுத்திருந்தாள். வாடிய முகம். இரவெல்லாம் கத்திக் கத்தி தொண்டை வறண்ட சத்தம்.

'என்ன பாட்டி... என்னாச்சு?'

'இரண்டு நாளா சாப்பிடல' பாட்டியிடம் இருந்து ஒரு பெருமூச்சு வந்தது. 'உடம்புக்கு முடியலை. டாக்டர்கிட்டே போகக் காசில்லே, அம்மா...' மீண்டும் முனகல்.

தன் சுற்றுலா முக்கியமா, இந்தப் பாட்டி முக்கியமா என்று யோசித்தான் குமார். தன் கையில் இருந்த 200 ரூபாயும் உணவுப் பொட்டலங்களையும் கொடுத்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான்.

அழுதுகொண்டே அம்மாவிடம் நடந்ததைச் சொன்னான் குமார். அம்மா, அவனை வாரி அணைத்துக்கொண்டாள். வாசலில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா சென்று திறந்தாள். அங்கே குமாரின் ஆசிரியர். பயந்துவிட்டான் குமார். அவன் வீட்டு வாசலில் பள்ளிப் பேருந்து. மாணவர்கள் 'ஹோ’ என்ற கூச்சலோடு ஜாலியாக இருந்தார்கள்.

'நான் வரலை சார். பணம் இல்லை' அழுதுகொண்டே சொன்னான் குமார்.

'குமார் நீ செஞ்ச காரியத்தை நம் பள்ளி முதல்வர் முத்தையா தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அந்தப் பாட்டியை அவர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டார். உனக்கு தன் பாராட்டைத் தெரிவித்து, உன்னைச் சுற்றுலாவுக்கு அழைத்து வரச் சொன்னார். நீ என் மாணவன் என்று சொல்லிக்கொள்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது குமார்' என்றார்.

தன் மகன், கன்றுக்குட்டிபோல் துள்ளிக்கொண்டு பஸ்ஸில் ஏறுவதைப் பார்த்து, சந்தோஷமாகக் கையசைத்தாள், குமாரின் அம்மா.

- விழியன்

ஓவியம்: ஆர்செ


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 5:52 pm

சீச்சி... திராட்சை

ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தைப் பறிக்க முயன்று முடியாமல்போனதால், ''சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்!'' என்று கூறி, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நரியை உங்களுக்கு நினைவிருக்கும். திராட்சைப் பழத்தின் மீது தீராத ஆசை கொண்டு அலைந்த அந்த நரி, அது கிடைக்காத ஏக்கத்தால் நோயில் விழுந்தது. நோய் முற்றி இறக்கும் நிலைக்குப் போன அந்த நரி, தன் மகனை அருகே அழைத்தது.

''அன்பு மகனே! திராட்சைக் கனிகளை வயிறார உண்ண வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறாமலேயே நான் இறக்கப்போகிறேன். என் நிறைவேறாத ஆசையை ஈடுசெய்யும் விதமாக, நான் கேட்பதை நீ செய்ய வேண்டும். இந்தக் காட்டிலேயே ஒரு பெரிய திராட்சைத் தோட்டத்தை உருவாக்கு. நம் இனத்தவருக்கும் பிற விலங்குகளுக்கும் வேண்டிய அளவுக்கு திராட்சைப் பழங்களை நீ வழங்க வேண்டும்! இதைச் செய்வாயா?'' என்றது.

''உறுதியாகச் செய்வேன் அப்பா! உங்கள் இறுதி ஆசையை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன்!'' என்று குட்டி நரி கண்ணீரோடு சொன்னது.

மகனின் கைகளைப் பிடித்தபடி அப்பா நரி இறந்து போனது.

தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற குட்டிநரி கடுமையாக உழைத்தது. அது வளர்ந்து இளைஞனானபோது, ஒரு பெரிய திராட்சைத் தோட்டத்துக்குச் சொந்தக்காரனாக இருந்தது. பன்னீர் திராட்சை, பச்சைத் திராட்சை, கருப்புத் திராட்சை, ஐதராபாத் திராட்சை, விதையில்லாத் திராட்சை என அத்தனை வகை திராட்சைகளும் அந்தத் தோட்டத்தில் பழுத்துக் தொங்கின.
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் 11a
அப்பாவைப்போல் இந்த நரியும் குள்ளம்தான். என்றாலும், எட்டாத திராட்சைக் கனிகளை அறுவடை செய்வதற்காக அணில்களை வேலைக்கு வைத்திருந்தது இந்த நரி. எனவே, திராட்சைப் பழங்களைப் பறிப்பதற்கு அப்பா நரி பட்ட தொல்லையை இந்த நரி படவில்லை. அணில்களின் உதவியோடு அறுவடை செய்து, பழங்களை மலை மலையாய்க் குவித்தது இந்த நரி.

திராட்சைத் தோட்டத்தின் புகழ், காடு முழுக்கப் பரவியது. முயல், மான், யானை, கரடி, நரி, என அனைத்து விலங்குகளும் கூட்டம் கூட்டமாக நரியின் தோட்டத்துக்கு வந்து, திராட்சைப் பழங்களை வாங்கிச் சென்றன.

இவ்படியாக, அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய நரி மகிழ்ச்சியோடு வாழ்ந்துவந்தபோது, அந்தக் காட்டுக்குப் பக்கத்துக் காட்டிலிருந்து ஒரு திருட்டு ஓநாய் வந்து சேர்ந்தது.

திராட்சைத் தோட்டத்து நரியின் புகழையும் செல்வச் செழிப்பையும் கண்ட அந்த ஓநாய், நரியைப் பயன்படுத்திக் குறுக்கு வழியில் பணம் சேர்க்க முடிவு செய்தது.

எனவே அந்த ஓநாய், நரியோடு நட்புக்கொண்டு பழகியது. எப்போது பார்த்தாலும் நரியைப் புகழ்ந்து பேசியது. அதில் மயங்கிய நரி, ஓநாயை உண்மை நண்பன் என்றே நம்பியது.

ஒரு நாள் நரியைத் தேடி வந்த ஓநாய், ''நண்பா! நீ வெறும் திராட்சைப் பழங்களை விற்பதைவிட, திராட்சைப் பழச்சாற்றிலிருந்து 'ஒயின்’ எனப்படும் பானத்தைத் தயாரித்து விற்றால், அதிக லாபம் கிடைக்கும். எனக்கு, இத்தாலி நாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒயின் தயாரிக்கும் முறை தெரியும். நாம் கூட்டாகத் தொழில் செய்வோமா?'' என்று ஆசை காட்டியது.
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் 11b
நரி, அதன் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஓநாய், நரியிடம் பணம் வாங்கிக்கொண்டு பீப்பாய் பீப்பாயாக ஒயின் தயாரித்து வைத்தது.

பிறகு நரியிடம், '' முதலில் நமது ஒயினை விலங்குகளுக்கு இலவசமாக அறிமுகப்படுத்துவோம். அதன் சுவைக்கு அவர்கள் அடிமையானதும் நம் விருப்பப்படி விலை வைத்து விற்கலாம். கொள்ளை லாபம் பார்க்கலாம்!'' என்றது ஓநாய்.

அதிகப் பணத்துக்கு ஆசைப்பட்டு நரியும் தலையாட்டியது. ஓநாய் நரியின் திராட்சைத் தோட்டத்தில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தது.

'இலவசம்... இலவசம்! முற்றிலும் இலவசம்! தேவாமிர்தம் போன்ற புதிய பானம் அறிமுகம்! அனைவரும் வாரீர்! அள்ளி அள்ளிப் பருகுவீர்!’ என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தது. நரி, பாடுபட்டுச் சேர்த்த காசை எல்லாம் தன் விருப்பப்படி வாரி இறைத்தது ஓநாய்.

விருந்து நாளன்று மாலை, நரியின் திராட்சைத் தோட்டம் விலங்குகளால் நிரம்பி வழிந்தது. ஒயினை சுவைத்த விலங்குகள், ''ஆகா! மிகவும் இனிமை! இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்!'' என்று கேட்டுக் கேட்டு வாங்கிக் குடித்தன.

அளவுக்கு மீறி ஒயின் அருந்தியதால், அன்று இரவு விலங்குகள் அனைத்தும் மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தன. திருட்டு ஓநாயின் தலைமையில் வந்த கொள்ளைக்கார ஓநாய்க் கும்பல் விலங்குகளின் வீடுகளில் புகுந்தது. நகை, பணம் என்று கொள்ளையடித்துக் கொண்டு ஓடி மறைந்தது.

காலையில் கண் விழித்த விலங்குகள், கொள்ளை நடந்ததை அறிந்து திடுக்கிட்டன. எங்கும் ஒரே கூச்சல், குழப்பம். ஒயின் கொடுத்து மயக்கித் தங்களைக் கொள்ளையடித்தது நரியின் சூழ்ச்சிதான் என்று நினைத்தன.

கையில் கிடைத்த ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு நரியின் திராட்சைத் தோட்டத்தை நோக்கி எல்லா விலங்குகளும் ஓடின. அதற்குள் நடந்ததையெல்லாம் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட காட்டு அரசர் சிங்கம், வீரர்களை அனுப்பினார். அரசு வீரர்கள் நரியின் தோட்டத்தை முற்றுகை இட்டார்கள். நரியைக் கைது செய்தார்கள்.

தோட்டத்தை அழிக்க வந்த விலங்குகளை எல்லாம் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார்கள். நரியை நீதி விசாரணைக்காக அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள். சிங்க அரசர் விசாரணை செய்தார். நரி கதறி அழுதபடியே, நடந்த உண்மைகளைக் கூறியது. நரியின் கூற்றில் உண்மை இருப்பதை உணர்ந்தார் சிங்க அரசர்.

ஓநாய்க் கும்பலைத் தேடிப்பிடிக்கும்படி சிங்க அரசர் ஆணையிட்டார். அரசுப் படை வீரர்கள் சீறிப் பாய்ந்தார்கள். அன்று இரவுக்குள் பக்கத்துக் காட்டில் பதுங்கியிருந்த ஓநாய்க் கும்பல் பிடிபட்டது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. ஓநாய்க் கும்பல் பாதாளச்சிறையில் அடைக்கப்பட்டது.

மக்களை மயக்கி, அறிவை இழக்கச் செய்யும் ஒயினைத் தடை செய்தார் சிங்க அரசர். தெரிந்தோ தெரியாமலோ மதுவைத் தயாரிக்க உடந்தையாக இருந்த நரிக்கு, மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்தார். நரியின் தோட்டத்தில் மிச்சமிருந்த ஒயின் பீப்பாய்கள் அழிக்கப்பட்டன.

இப்போதெல்லாம் யாராவது ஒயினைப் பற்றிப் பேச்செடுத்தாலே, ''சீச்சீ இந்த ஒயின் கசக்கும்!'' என்று சொல்லிவிட்டு வாலைச் சுருட்டிக் கொண்டு அது ஓடிவிடுவதாகக் கேள்வி.

- குறும்பலாப்பேரிப் பாண்டியன்

ஓவியம்: சீதாராம்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 5:56 pm

யார் முக்கியம்?

அந்தக் காலத்தில் வேப்ப மரத்துக்கும், ஆலமரத்துக்கும் மட்டும் அடிக்கடி சண்டை வருவதுண்டு.

விளையாட்டுப் போக்கில் ஒரு நாள், ஆலமரத்திலிருந்து வேப்ப மரத்துக்குத் தாவியது அணில். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆலமரத்தை சீண்டியது வேப்பமரம். ''இவ்வளவு இடத்தை வளைத்துப் பிடித்து வாழ்கிறாயே, கேவலம்! ஒரு அணில்குட்டிகூட உன்னிடத்தில் இருக்க விரும்பாமல் இங்கு வந்துவிட்டது பார்.''

ஆலமரம் அசரவில்லை. ''மரங்களிலேயே மிகச் சிறந்தவன் நான்தான். என்னிடத்தைத் தங்குமிடமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் வசிக்கின்றன. வழிப்போக்கர்களுக்கு நிழல்தரும் ஓய்விடமாக நான் திகழ்கிறேன். எனது இலைகளும், பழங்களும் எத்தனையோ உயிர்களுக்கு உணவாகின்றன. மதச் சடங்குகளுக்குக் கூட என் இலைகளை எடுத்துச் செல்கிறார்கள். நீ பிறந்தபோது எனக்கு 170 வயது. உன்னுடைய 50 வயதில் நீ என்ன செய்து கிழித்திருக்கிறாய்?''

வேப்பமரமும் விட்டுவிடவில்லை. ''நீ வயதான கிழம்தான்! அதற்காக ஒன்றும் நீ பெருமையடைய முடியாது. நீ இத்தனை ஆண்டுகள் செய்ததை நான் குறுகிய காலத்திலேயே செய்து முடித்துவிட்டேன். முக்கியமாக, நான் நோயாளிகளுக்கு உதவுகிறேன். எனது இலைகளும், குச்சிகளும் மூலிகை மருந்தாகப் பயன்படுகின்றன. நீ என்னை விட பெரியவனாக இருக்கலாம். ஆனால், நான்தான் அதிகப் பயன்தருகிறேன்.''

ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த ஒரு தவளை இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தது. இரண்டு மரங்களையும் பார்த்துச் சொன்னது. 'எதற்காக வீண் சண்டையிடுகிறீர்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இந்த உலகத்துக்குப் பயன்படுகிறீர்கள். 'யார் மிக முக்கியம்?’ என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. இதோ, இந்த நதியில் ஓடும் நீரைப் பாருங்கள். இந்த நீரில்லாமல் நீங்களோ, நானோ உயிர் வாழ்ந்துவிட முடியாது. ஆனாலும் அந்த நதி, ஒருபோதும் தன்னை உயர்த்திப் பேசி தம்பட்டம் அடிப்பதில்லை''

தண்ணீர் இல்லாமல் எந்த உயிரும் சாத்தியமில்லை என்று புரிந்துகொண்ட இரு மரங்களும் இதுவரை போட்ட வீண் சண்டைக்காக வருந்தின.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 5:59 pm

மொச்சைக் கொட்டையின் வாய்


ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார். அவர் ஒருநாள் சாப்பாடு சமைக்க ஆரம்பித்தார். மூன்று கல் வைத்த அடுப்பை மூட்டி, அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து நீர் ஊற்றினார். பாட்டி அடுப்பை மூட்டும்போது, அவர் விரல் இடுக்கில் இருந்து ஒரு வைக்கோல் நழுவிக் கீழே விழுந்தது. பாத்திரத்தில் இருந்து ஒரு மொச்சைக் கொட்டை, தண்ணீரின் சூட்டால் தெறித்து விழுந்தது, இதே போல அடுப்பில் இருந்து ஒரு கரித் துண்டும் துள்ளி வெளியே வந்து விழுந்தது.

கரித்துண்டு, வைக்கோல், மொச்சைக் கொட்டை மூன்றும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தன. ''நாம் மூன்று பேரும் செத்துப் போகாமல் தப்பித்துவிட்டோம். எங்கேயாவது வெளியூர் போகலாமா?'' என்று கேட்டது கரித்துண்டு. வைக்கோலும் மொச்சைக் கொட்டையும் அதற்கு ஒப்புக்கொண்டன.

அடுத்த ஊரை நோக்கிப் போகும்போது நடுவில் ஒர் ஆறு வந்தது. ''ஐயையோ எனக்கு நீச்சல் தெரியாதே...'' என்று வருத்தப்பட்டது கரித்துண்டு. ''எனக்கும்தான்'' என்றது மொச்சைக் கொட்டை. ''கவலைப்படாதீர்கள். என்னால் மிதக்க முடியும். நான் படுத்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் என் மீது ஏறிக்கொள்ளுங்கள், நாம் ஆற்றைத் தாண்டிவிடலாம்'' என்றது வைக்கோல்.

ஒப்புக்கொண்ட மொச்சைக் கொட்டையும் கரித்துண்டும் வைக்கோல் மீது ஏறிக் கொண்டன. மொச்சைக் கொட்டை ஏறியதில் ஒரு தொல்லையும் இல்லை. ஆனால் கரித் துண்டு, வைக்கோல் மீது ஏறியதும் ஒரு பிரச்னை வந்துவிட்டது. கரித் துண்டில் கொஞ்சூண்டு நெருப்பும் இருந்து தொலைத்துவிட்டது. அந்த நெருப்பு பட்டதும் வைக்கோல் கருகியது. இதைப் பார்த்த மொச்சைக் கொட்டை, நடந்த எல்லாவற்றையும் மறந்து சிரித்துவிட்டது. ஒருவன் கஷ்டப்படும்போது கெட்டமனசுக்காரன் சிரிக்கும் கேலிச் சிரிப்பு அது.

அளவுக்கு அதிகமாக மொச்சைக் கொட்டை சிரித்ததும் அதன் வாய் கிழிந்துவிட்டது. திமிர் அடங்கிய மொச்சை, வாய் கிழிந்த வலி தாங்காமல் அழத் தொடங்கியது. அந்த வழியே போய்க்கொண்டிருந்த ஒரு தையல்காரர், மொச்சையின் அழுகுரலைக் கேட்டு பக்கத்தில் வந்து பார்த்தார். மொச்சையின் வாய் கிழிந்திருப்பதைப் பார்த்ததும் தன்னிடம் இருந்த கறுப்பு நூலால் மொச்சையின் வாயைத் தைத்தார். அன்றில் இருந்துதான் மொச்சைக் கொட்டையின் வாய் கறுப்பாகவே இருந்துவருகிறது.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 6:00 pm

நரியப்பா...

''ராஜாதி ராஜ... ராஜ கம்பீர... வீர பராக்கிரம சிங்கராஜா வருகிறார்... வருகிறார்... வருகிறார்...'' என்று ஏவல் குரங்குகள் சொல்லி முடிக்கும் முன்பே, சிங்கராஜா கம்பீர நடையில் வந்து அரியணையில் அமர்ந்தது. சிங்கம் அமர்ந்த பிறகு அமைச்சர்களான புலி, சிறுத்தை, ஓநாய்கள் எல்லாம் அமர்ந்தன.

சிங்கம் ஓங்கி கர்ஜனை செய்துவிட்டு, ''இன்று எனக்கு உணவு தேடும் பொறுப்பு யாருடையது?'' என்று கேட்டது. நரியப்பா மெதுவாக எழுந்து, ''அடியேனுடையது'' என்றது.

''நரியப்பா... இன்று மாலைக்குள் எனக்கு உணவாக வேண்டிய மிருகத்தை நீ கொண்டுவந்தாக வேண்டும். இல்லை என்றால், உன்னையே சாப்பிட்டுவிடுவேன்!'' என்று சிங்கம் கடும் குரலில் சொன்னது.

''இதோ...'' என்று விரைந்து ஓடியது நரி. அன்று மாலை வரை அலைந்தது. ஒரு விலங்கும் கிடைக்கவில்லை. 'நம்மை சிங்கம் கொன்னுடுமே’ என்கிற பயம் வேறு.

அலைந்துகொண்டிருந்த நரி, ஓர் ஓடையில் குளித்துக்கொண்டிருந்த முனிவர் ஒருவரைப் பார்த்தது. அவர் தன்னுடைய காவித் துணியை அலசி, கரையில் உலர்த்தினார்.
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Chuttilibrar(2)
ஒரு யோசனை தோன்றவே, முனிவரின் காவித் துணியை எடுத்து நரியப்பா போட்டுக்கொண்டது. இப்போது யாராவது பார்த்தால், 'நரியப்பா’ என்று சொல்ல முடியாத அளவுக்கு அதன் தோற்றம் மாறியது. தந்திரானந்தா என்று பெயரையும் மாற்றிக்கொண்டு காட்டில் சுதந்திரமாக உலா வந்தது.



சில விலங்குகள், 'சுவாமி தந்திரானந்தா’விடம் அருள்வாக்கு பார்க்கத் தொடங்கின. சுவாமி தந்திரானந்தாவுக்கு ஏகக் கொண்டாட்டம். ஏமாளி முயல்கள் ஜோசியம் என்று வந்தால், 'இரவில் சுடுகாட்டுக்கு வா... பூஜை செய்ய வேண்டும்’ என்று அழைத்து, உணவாக்கிக்கொள்ளும். சிங்கராஜாவின் தொல்லையும் இல்லை. உணவுக்கும் அலைச்சல் இல்லை. இவ்வாறு சில காலம் கவலையின்றி காலத்தைக் கழித்தது நரி.

ஒருநாள் சுவாமி தந்திரானந்தாவைச் சந்திக்க ஓர் ஓநாய் வந்தது. ''சுவாமி உங்கள் புகழைக் கேள்விப்பட்டு, உங்களை அழைத்துவர சிங்கராஜா ஆணையிட்டுள்ளார்'' என்றது ஓநாய்.

சுவாமி தந்திரானந்தாவுக்கு இதயமே நின்றுவிட்டது போல உணர்வு. தான் தவம் செய்துகொண்டு இருப்பதாகவும் தற்சமயம் எங்கும் வரமுடியாது என்றும் சொல்லிப் பார்த்தது. ஆனால், ஓநாய் விடுவதாக இல்லை. ''வரமுடியாதென்றால், இழுத்து வரவும் என்பது சிங்கராஜாவின் உத்தரவு'' என்று சொல்லியது.

இனிமேலும் ஓநாயை ஏமாற்றமுடியாது என்று உணர்ந்த நரியப்பா, சம்மதித்தது. இரண்டும் அரண்மனைக்குச் சென்றன. சிங்கராஜா சுவாமி தந்திரானந்தாவை வரவேற்றது.

''சுவாமி என்னை ஏமாற்றிவிட்டு, நரியப்பா என்பவன் எங்கோ ஓடிவிட்டான். அவன் எங்கிருக்கிறான் என்பதைக் கூற வேண்டும். உங்களுக்கு மூன்று நாள் அவகாசம்'' என்று ஆணையிட்டது சிங்கராஜா.

மூன்று நாட்கள் கழிந்தன. சுவாமி தந்திரானந்தா அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டது. அங்கே, அமைச்சர் முதல் அடியவர் வரை அனைவரும் தயாராக இருந்தார்கள். ''நரியப்பா எங்கிருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்தீர்களா? இல்லையா?'' என்று கேட்டது சிங்கராஜா.

சுவாமி தந்திரானந்தா கண்களை மூடி, ஏதோ மந்திரம் சொல்வதுபோல பாவனை செய்தது. பிறகு மெள்ள கண்களைத் திறந்து, ''நரியப்பா உங்களுக்காக உணவுத் தேடியபோது, மூழிமலைப் பள்ளத்தில் விழுந்து இறந்துவிட்டான். அவன் உடலைக் காகமும் கழுகும் தின்றுவிட்டன. எலும்பைக்கூட நாய்கள் எடுத்துச் சென்றுவிட்டன'' என்று கூறியது.

''இதை நம்புவதற்கு நான் தயாராக இல்லை! நீங்கள் மகாயோகிதானே!'' என்றது சிங்கம்.

ஒருபுறம் பயம் இருந்தாலும் கொஞ்சம் துணிவுடன் ''ஆமாம்... அதில் என்ன சந்தேகம்?'' என்றது தந்திரானந்தா.

''அப்படியானால், இறந்துபோன நரியப்பா உயிரோடு வருவதற்கு என்ன மந்திரம் சொல்ல முடியுமோ... அதைச் செய்யுங்கள்'' என்றது சிங்கம்.

நரியப்பா அதன் மனதில் ஒரு யோசனை உதித்தது. ''சிங்கராஜா அவர்களே! இறந்துபோன உயிரை மறுபடியும் உயிர்ப்பிக்கும் அளவுக்கு நான் பெரிய யோகி இல்லை. ஆனால், இறந்துபோன நரியப்பாவை கொஞ்ச நேரம் உங்கள் கண்களுக்குக் காட்ட முடியும்'' என்றது.

''நிஜமாகவா?'' எல்லோரும் வியந்தார்கள்.

''ஆனால் ஒரு நிபந்தனை!''

''என்ன?''

''இறந்துபோன உயிரை என் தவ வலிமையால் என்னுடைய ஞானக் கண்களுக்குக் கொண்டுவருவேன். அதன்பிறகு உங்கள் கண்களுக்கு அதை மாற்றுவேன். அவ்வாறு மாற்றும்போது, உண்மையான அறிவுடையவர் கண்களுக்கு மட்டுமே அந்த உயிர்க் காட்சி தரும். மற்றவர்களுக்குத் தெரியாது. உங்களில் யார் அறிவுடையவரோ, அவர்கள் மட்டும் வாருங்கள். நான் அந்த உயிரைக் காண்பிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றது சுவாமி தந்திரானந்தா.

சிங்கராஜா, தான் உண்மையான அறிவாளி என்றது. சிங்கராஜாவுக்கு முன் மற்றவர் அறிவாளி என்று கூறுவதற்குப் பயந்து, பேசாமல் இருந்தார்கள். சுவாமி தந்திரானந்தாவுக்கு அது வசதியாகிவிட்டது.

ஏதோ... மந்திரம் உச்சரிப்பதுபோல நடித்தது. சிங்கத்தின் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனால், 'தெரியவில்லை என்று கூறினால், மற்றவர் முன் முட்டாளாகி விடுவோமே’ என்று பயந்து, ''ஆமாம்... நரியப்பா தெரிகிறான், அதோ வருகிறான்'' என்று பொய்யாகக் கூறியது.

சுவாமி தந்திரானந்தா மனதுக்குள் சிரித்தது. ''என் வேலை முடிந்துவிட்டது. நான் வரலாமா?'' என்று கேட்டது. சிங்கராஜா வேறு வழியில்லாமல் அனுப்பிவிட்டது.

- இரா.கை.சங்கர்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 6:02 pm

காது நிறைய கூலி
- கம்பீரன்

கிராமப்புறங்களில் தாத்தா - பாட்டி, தங்கள் பேரன் - பேத்திகளுக்குக் கதை சொல்வார்கள். கதை இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் வளரும். ஒரு முயலிடம் யானை சண்டையில் தோற்கும். நடக்க முடியாத ஒருவன், திடீரென்று பறக்கவே ஆரம்பிப்பான். அந்த மாதிரி கதைகளின் விசித்திரங்களுக்குக் கணக்கே இல்லை! 'அம்மம்மா, கதைக்குக் காலும் உண்டோடி? அப்பப்பா, கதைக்குக் கையும் உண்டோடி?’ என்று சிறுவர்கள் பாடி ஆடுவார்கள். கையும் காலும் இல்லாவிட்டாலும் சுவாரஸ்யத்துக்குக் குறைவே இருக்காது. இதோ, அது மாதிரி ஒரு கதை. படித்துப் பாருங்கள், பிடிக்கிறதா என்று சொல்லுங்கள்.

ஒரு அப்பா, அம்மா இருந்தாங்க. அவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு பையன். அவன் தம்மாத்துண்டா (ஏறகுறைய ஜான் உயரம்) இருந்தான். அதுக்குமேல வளரலை. ஒரே பிள்ளைனு செல்லமா வளர்த்துட்டு வந்தாங்க.

ஒரு நாள் அப்பா, அம்மா எப்பவும் போல வேலைக்குப் புறப்பட்டாங்க. போகும்போது, ''யப்பா, வீட்டைப் பத்திரமா பார்த்துக்க. கஞ்சி காய்ச்சி, மேல உறியில வெச்சிருக்கோம். பசியெடுத்தாம் யாரையாவது எடுத்துத் தரச்சொல்லி ஊத்திக் குடி..’ன்னு சொல்லிட்டுப் போனாங்க.

அவங்க போனப்பறம், இவன் தெருவுல விளையாடிட்டு இருந்தான். மத்தியானமாச்சு. இவனுக்குப் பசியின்னா பசி. உறியிலே இருக்கிற கஞ்சியை எடுத்துக் குடுக்க ஒருத்தரும் கிடைக்கவில்லை. கூட விளையாடுற பிள்ளைங்களும் சின்னதுங்க.

இவனுக்குப் பசி தாங்கமுடியல. பார்த்தான். ஒரு கல்லை எடுத்து உறியைக் குறிப்பார்த்து அடிச்சான். உறியில இருந்த கஞ்சிப் பானை ஓட்டையாயிடுச்சு. ஓட்டையில கஞ்சி ஊத்துது. ஊத்துற கஞ்சியை ரெண்டு கையிலயும் புடிச்சு, வாயை வெச்சுக் குடிச்சான்.

ஊத்த ஊத்த குடிச்சிட்டு இருந்தவன், அப்பா - அம்மா வந்தா எதைக் குடிப்பாங்கன்னு நினைச்சு, ''எங்கப்பாவுக்குக் கொஞ்சம் வை! எங்கம்மாவுக்குக் கொஞ்சம் வை! எங்கப்பாவுக்குக் கொஞ்ம் வை! எங்கம்மாவுக்குக் கொஞ்சம் வை!''னு கத்தினான்.

ஓட்டைப் பானை மீத்துவைக்குமா? வைக்கவில்லை. இவன் குடிச்சது போக, மீதிக் கஞ்சியெல்லாம் ஒழுகி, வீடெல்லாம் தெறிச்சு விழுந்துச்சு. இவனுக்கு வயிறு முட்டக் குடிச்சது, தூக்கம் கண்ணைப் பிடுங்கிச்சு. திண்ணைமேல படுத்து நல்லாத் தூங்கிட்டான்.

அப்பாவும் அம்மாவும் வேலை முடிஞ்சு, விளக்கு வைக்க வீட்டுக்கு வந்தாங்க, வந்து வீடு இருக்கிற கதியைப் பார்த்தாங்க. விளையாடிட்டு இருந்தவனைக் கூப்பிட்டுக் கேட்டாங்க. இப்படி, இப்படின்னு சொன்னான். ரெண்டு பேருக்கும் கோபம்னா கோபம்...

''புத்தியிருக்குதா உனக்கு? இப்படியா பண்றது? அலுத்துப்போய் வீட்டுக்கு வந்தா... ஒரு வாய் கஞ்சி வெச்சிருக்கியா, குடிக்க..? நாசமாப் போனவனேனு திட்டுனாங்க. இவனுக்குத் தூக்கம் கலையவில்லை. மாட்டுக்குப் போட்டு வெச்சிருக்கிற வைக்கோல் போர்ல போய் படுத்துக் கிட்டான்.
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Library_story_5b
இவங்க பசியில் நெல்லு குத்தி, ஒலை வெச்சு சோறு, குழம்பு ஆக்கி, அடுப்பு வேலையை முடிச்சுட்டு, சாப்பிட பிள்ளையைத் தேடினாங்க. பிள்ளையைக் காணோம்!

இவனுக்குக் கோபம் வந்தா, முறுக்கிட்டுப் போய் வீட்டுல இருக்கிற எலிப் பொந்துல ஒளிஞ்சுக்குவான். அப்புறம் கோபம் தீர்ந்தா, அவனா வெளியே வருவான். இப்பவும் அப்படித்தான் ஒளிஞ்சுக்கிட்டு இருப்பான். பசியெடுத்தா தானா வந்து சாப்பிடுவான்னு படுக்கையைப் போட்டாங்க. அவங்க அப்பா படுத்துட்டாரு.

அம்மா என்ன பண்ணாங்க..? படுக்குறதுக்கு முன்னால, மாட்டுக்குக் கொஞ்சம் வைக்கோல் புல்லைப் போட்டுட்டுப் படுக்கலாமேன்னு வந்தாங்க. மகன் வைக்கோல் புல்லுல படுத்துத் தூங்கிட்டிருந்தான். இருட்டுல தெரியலை. புல்லோட மகனையும் சுருட்டி மாட்டுக்குப் போட்டுட்டுப் போய்க் கதவைச் சாத்திக்கிட்டுப் படுத்துட்டாங்க.

புல்லோட சேர்ந்து இவனும் மாட்டு வயித்துக்குள்ள போயிட்டான். நடுராத்திரியில... தூக்கம் முழிச்சு, அம்மா, அம்மானு கத்தினான்.

இவங்க, 'பிள்ளை எங்கிருக்கான்?’னு பார்த்தாங்க. எங்கேயும் கண்ணுல படலை. ''என்னடாது.. சத்தம் கேட்டுச்சு, பிள்ளையைக் காணோமே. எங்கிருந்து சத்தம் போட்டான்?'' என்று சுத்திச் சுத்திப் பார்த்தாங்க. இருக்கிற இடம் தெரியவில்லை.

''மகனே... எங்கேடா இருக்கே..?''னு கேட்டாங்க.

''நான் மாட்டு வயித்துல இருக்கேன்''னான்.

''எப்படிடா மாட்டு வயித்துக்குள்ள போனே?''ன்னாங்க..

''நான் கோவிச்சுக்கிட்டு வந்து வைக்கப்போர்ல படுத்திருந்தேன். அம்மா புல்லு போடுறப்ப, என்னையும் சுருட்டி மாட்டுக்குப் போட்டுட்டாங்க. புல்லோட சேர்ந்து, மாட்டு வயித்துக்குள்ள போயிட்டேன்''னான்.

''சரி, எப்படா வருவே..?''ன்னாங்க.

''காத்தால மாடு சாணி போடுறப்ப வருவேன்''னான்.

மாடு சாணி போடுற வரைக்கும் இருந்து, மகனை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க..கூப்பிட்டுப் போய் மூணு எண்ணெய் தேய்ச்சுத் தலைக்குத் தண்ணி ஊத்திச் சாப்பாடு போட்டாங்க.

சாப்பிட்டுவிட்டு, ''அம்மா... இன்னிலேர்ந்து நீங்க எங்கேயும் வேலைவெட்டிக்குப் போய்க் கஷ்டப்படாதீங்க... இனிமே நான் சம்பாதிச்சுட்டு வந்து உங்களைக் காப்பாத்துறேன்..னு சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அந்த ஊர் பெரிய பண்ணையார் முன்னே போய் நின்றான்.

''என்னடா?''ன்னார்.

''அறுப்பறுக்க ஆள் வேணும்னீங்களாம்... அதான் வந்தேன்’னான்.

''நீ வந்து என்னடா பண்ணப்போறே? ஊருக்குள்ள ஆள் போயிருக்கு. ஊரு ஜனம் வந்தா, அறுத்துப் போடுவாங்க...''என்றார்.

'இல்லைங்க , யாரையும் அறுவடைக்கு எறக்காதீங்க... ஒரே நாள்ல நான் ஒண்டியே அறுத்துக் களத்துல சேர்த்துடுறேன்னான்.

''ஏண்டா..? ஊரு ஜனமே அறுத்தாலும் ஏழு நாள், எட்டு நாளாகும். நீ ஒரே நாள்ல எல்லாத்தையும் அறுத்துக் களத்துல சேர்க்க முடியுமா? போய், வேற வேலை இருந்தாப் பார்றா’ன்னார்.

இவன் பிடிவாதமாக நின்றான்.

''சரி வேலையில இறங்குடா''ன்னார்.

''என்ன கூலி தருவீங்க?''ன்னான்.

''உன் கூலி எவ்ளோ? நீயே கேளு''ன்னார்.

''அதிகமாகவெல்லாம் கேக்கலை... என் காது நிறைய நெல் அளந்துடுங்க அதுபோதும்''ன்னான்.

''சரி, அப்படித்தான் ஆகட்டும். வேலையை முடிடா''ன்னுட்டுப் போயிட்டார்.

இவன், விளைச்சலுக்கு முன்னே போய் நின்றுகொண்டு, ஒரு தலைமுடியைப் பிடுங்கி விட்டான். அது எல்லாத்தையும் அறுத்துத் தள்ளிடுச்சு. இன்னொரு தலைமுடியைப் பிடுங்கி விட்டான். அது எல்லாத்தையும் கட்டு, கட்டாக் கட்டிடுச்சு. இன்னொரு தலைமுடியைப் பிடுங்கி விட்டான். அது கட்டி வெச்சிருந்த செமையையெல்லாம் களத்துல கொண்டுபோய்ச் சேர்த்துடுச்சு!''

பண்ணையார் முன்னே போய்க் இவன் கூலிக்கு நிக்கிறான். அவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.

''நீ பெரிய வேலைக்காரன்தான்டா!''னு ஆள்காரனைக் கூப்பிட்டு, ''இவன் காது நிறைய நெல் போட்டு அனுப்பு''ன்னார். ஆள்காரன் ஒரு நெல்லை எடுத்து, இவன் காதுல போட்டான். காது நிறையவில்லை. இன்னும் நாலு நெல்லு எடுத்துப் போட்டான். காது நிறையவில்லை! ஒரு கைப்பிடி நெல்லை எடுத்துப் போட்டான். அப்பவும் காது நிறையவில்லை!

'என்னடா இது..?''னு ஒரு படி நெல் போட்டான். காது நிறையவில்லை. மேலே ஒரு மரக்கா நெல் போட்டான். அப்பக்கூட நிறையவில்லை. பண்ணையாருக்கு ஒண்ணும் விளங்கவில்லை. ''சரி, ஒத்துக்கிட்டோமே! என்ன பண்றது..? போட்டுத்தானே ஆகணும்..''னு 'ஒரு மூட்டை நெல் எடுத்துக் கொட்டுங்க...''ன்னார்.

அதைக்கொட்டியும் காது நிறையவில்லை! வீட்டுல இருக்கிற மூட்டையையெல்லாம் கொட்டச் சொன்னார். கொட்டிக் கொட்டி, வீட்டுல இருந்த மூட்டையெல்லாம் காலியாயிடுச்சு. அப்பத்தான் அவன் காது நிறைஞ்சுச்சு!

வீட்டுக்கு வந்தான். ''அம்மா, நான் வேலைக்குப் போய்க் கூலி வாங்கிட்டு வந்திருக்கேன் வீட்டுல கொட்டணும்..''னான்.

''எங்கடா கூலி...''ன்னாங்க அம்மா.

''காதுல இருக்குது''னு காதைக் காட்டினான்.

''அப்படியா.. அந்த மூலையில போடு''ன்னாங்க.

''இல்லேம்மா! காதுல மூட்டை மூட்டையா நெல் இருக்குது. அப்பாவைக் கூப்பிடு. கூரைமேல ஏறி முகட்டைக் கொஞ்சம் பிரிக்கட்டும். நான் காதைச் சாய்ச்சுக் கொட்டுறேன்''னான்.

அவன் சொன்ன மாதிரியே, அவன் அப்பா கூரைமேல ஏறி முகட்டைக் கொஞ்சம் பிரிச்சார். இவன் மேலேறி, ஓட்டையில காதைச் சாய்ச்சான். வீட்டுக்குள்ளே நெல்லாக் கொட்டுச்சு!

கொட்டக் கொட்ட, வீடு நிறைஞ்சிடுச்சு. அவங்களுக்கு ஒரே ஆச்சர்யம்னா ஆச்சர்யம்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 6:03 pm

நாம எல்லாம் ஒண்ணு!
- ரமேஷ் வைத்யா

ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நீண்ட காலமாக கண்ணில் வலி இருந்து வந்தது. என்ன சிகிச்சை செய்தும் பயனில்லை. இரவு முழுக்க தாங்க முடியாமல் கஷ்டப்பட்டான். 'எவ்வளவு பணம் இருந்து என்ன செய்ய? கண்வலியைத் தீர்க்க வழியில்லையே’ என்று ஏங்கினான்.

அதே ஊரில் கடலை மிட்டாய் விற்பவன் ஒருவனும் இருந்தான். வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே செலவு செய்துவிடுவான். இதனால் அவன் எப்போது ஏழையாகவே இருந்தான்.

பணக்காரனின் கண்வலி பற்றி நம் கடலை மிட்டாய் வியாபாரி கேள்விப்பட்டான். கண்வலியைத் தீர்க்கும் ஒரு மந்திர மூலிகையைப் பற்றி அம்மா சொன்னது அவனுடைய நினைவுக்கு வந்தது. பணக்காரனின் கண்வலியைத் தீர்க்க மூலிகையைத் தேடிப்போவதாக மனைவியிடம் சொன்னான்.
உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் Chuttilibrary_sep11
கடலை மிட்டாய் வித்தாத்தான்
காசு கெடைக்கும்... நீ
மூலிகை தேடிப் போயிட்டா
என்ன கெடைக்கும்?''

என்று கணவனிடம் ராகத்துடன் கோபப்பட்டாள் மனைவி.

''ரெண்டு மூட்டை மிட்டாயை
நீயும் வச்சிக்கோ ... அதைக்
கொண்டு வித்து அரிசி வாங்கி
நீயும் பொழைச்சிக்கோ''

என்று பாடியபடியே சொல்லிவிட்டுப் புறப்பட்டான் கணவன்.

மறுநாள் அதிகாலையில் ஊரின் எல்லைக் கதவுகள் திறந்ததும், முதல் ஆளாக வெளியேறினான். ஊரை அடுத்திருந்த, மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் புகுந்தான். அவன் சின்ன வயசில் ஓடித்திரிந்த காடுதான் அது. அப்போதெல்லாம் காடு ஒரு பெரிய கடல் என்றும், தான் அதில் நீந்தித்திரியும் ஒரு மீன் என்றும் நினைத்துக்கொள்வான் அவன்.

போகும்போது அங்கே ஓடிக்கொண்டிருந்த ஓடை ஒன்றில் ஒரு பாறை உருண்டு விழுந்தது. ஓடை திசை மாறி அங்கே இருந்த பெரிய எறும்புப் புற்றை நோக்கி தண்ணீர் வந்தது. இரக்க குணம் உள்ள கடலை மிட்டாய், மரக்கட்டை ஒன்றால் தண்ணீரின் பாதையை மாற்றி, எறும்புகளைக் காப்பாற்றினான்.

''எறும்பு உசிரும் என் உசிரும் ஒண்ணு... எறும்பு
கஷ்டப்பட்டா கண்ணீர்விடும் என்னோட கண்ணு''

என்று பாடியபடியே மூலிகையைத் தேடித் தொடர்ந்து நடந்தான் கடலை மிட்டாய்.

ரொம்ப தூரம் நடந்தான். காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டதால் கடலை மிட்டாய்க்குத் தூக்கம் தூக்கமாக வந்தது. ஒரு மரத்தின் கீழே படுத்துத் தூக்கம் போட்டான்.

தூக்கத்தில் ஒரு கனவு வந்தது. ஏகப்பட்ட வீரர்கள் கடலை மிட்டாயை ஆயுதங்களோடு சூழ்ந்துகொள்கின்றனர். அவர்கள் எல்லாருமே எறும்பு வீரர்கள். ''எங்கள் இளவரசி உன்னைப் பார்க்க விரும்புகிறார்’' என்கிறார்கள்.

கடலை மிட்டாய் அவர்களுடன் செல்கிறன். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த இளவரசி இவனைப் பார்த்து...

''வெள்ளத்தை நீ தடுத்தாய் - எறும்புக்கு
வாழ்க்கையை நீ கொடுத்தாய் - நிறைய
நல்ல காரியம் பண்ணு - அட
நாம எல்லாம் ஒண்ணு''

என்றாள். அதோடு, கடலை மிட்டாய்க்கு ஏதாவது தேவை என்றால் தானும் தன்னுடைய கூட்டத்தாரும் உதவத் தயாராக இருப்பதாகச் சொன்னாள்.

''மருந்துக்காகத் தேடி வந்தேன்
எங்கேயுமே கெடைக்கலை - என்
காலுகையி ஓஞ்சபிறகும்
மூலிகையைக் காணலை''

என்றான். இளவரசிக்கும் அந்த மூலிகை எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. விடாமல் தேடிப்பார்த்தால் கிடைக்கும் என்று வாழ்த்தி வழியனுப்பினாள். அதோடு கடலை மிட்டாயின் கனவு கலைந்தது.

நல்ல கனவுதான் என்று நினைத்துக்கொண்டு மூலிகையைத் தேடிக் கிளம்பினான் அவன். ஒரே குறியாகப் போய்க்கொண்டே இருந்ததில் காட்டுக்குள் ரொம்ப தூரம் வந்துவிட்டான். எங்கே பார்த்தாலும் மரங்கள்தான். மாலை ஆக ஆகக் குளிர் வாட்ட ஆரம்பித்தது. ஒண்டிக்கொள்ள ஓர் இடம் தேடினான்.

அங்கே ஒரு பாழடைந்த கோவில் இருப்பது தெரிந்தது. அதை நெருங்கினான். இவனைப் போலவே குளிரால் வாடிய மரவட்டை ஒன்றும் கோவிலை நோக்கிப் போய்கொண்டிருந்தது. அந்த மரவட்டையைக் கொத்திக்கொண்டு போக பறவை ஒன்று பறந்து வந்தது. 'ஹோ... ஹோ’ என்று கத்தி, பறவையை விரட்டிய கடலை மிட்டாய், மரவட்டையைப் பார்த்து...

''பறவைக்கென்ன, பழம் கிடைக்கும்
எவ்வளவும் திங்கலாம்
பூச்சியைப்போய்த் தின்னாக்க
நரகத்தில் போய்த் தொங்கலாம் - அட
மரவட்டைப் பொண்ணு
நீயும் நானும் ஒண்ணு''

என்றான்.

மரவட்டைக்குப் பக்கத்தில் தன் விரலை வைத்தான். அது கடலை மிட்டாயின் விரலில் ஏறிக்கொண்டது. இருவரும் கோவிலுக்குள்ளே போனார்கள். உலர்ந்த இலைகளைப் பொறுக்கி தனது படுக்கையாக்கிக் கொண்டான். பசித்தது. உடனே மரவட்டைக்கும் பசிக்குமே என்பது நினைவுக்கு வந்தது. வெளியில் போய் கொஞ்சம் பச்சை இலைகளைப் பறித்துவந்து மரவட்டைக்குப் போட்டான். வயிற்றைத் தடவிக்கொண்டே தூங்கிப்போனான்.

திடீரென்று ஒரு சத்தம் கேட்டது.

''தேடி வந்த காட்டுக்குள்ளே
தென் கிழக்கு மூலையிலே
ரெட்டைக் கிளை பனைமரம் நின்னிருக்கு.
ஓடிப்போயி அதுக்குக் கீழே
தோண்டிப்பாரு வலியைத் தீர்க்கும்
மூலிகை ஒண்ணே ஒண்ணு அங்கிருக்குது''

என்று யாரோ சொல்கிற சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தான் கடலை மிட்டாய். அவனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. குட்டியூண்டு மரவட்டை ஓர் அடி உயரத்துக்கு அவன் முன்னால் நின்றுகொண்டிருந்தது. இவன் பார்த்ததுமே காற்றோடு மறைந்துவிட்டது. கடலை மிட்டாய்க்கு தூக்கம் கலைந்துவிட்டது. தென் கிழக்கு திசை நோக்கி கடமையே கண்ணாக் கடக்கத் தொடங்கினான்.

நடந்து நடந்து மதிய நேரமாகிவிட்டது. அப்போதான் இரண்டு கிளைகள் உள்ள ஒரு பனைமரத்தைப் பார்த்தான் கடலை மிட்டாய். மனம் சந்தோஷத்தில் துள்ளியது. பனைமரத்தை நோக்கி வேகவேகமாக நடந்தான். ஆனால், மரத்தின் கீழே ஏராளமான முள்புதர் இருந்தது. எப்படிப் போனாலும் முள் குத்தியது. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் கடலை மிட்டாய். அப்போது கனவில் கண்ட எறும்பு, ராணியின் நினைவு வந்தது.

''வெள்ளம் தடுத்ததாலே - என்னை
தட்டிக் குடித்த ராணி
முள்ளைத் தாண்டிப் போக - எனக்கு
உதவி செய்வியா நீ?''

என்று கத்திப் பாடினான்.

எங்கே இருந்து வந்தன என்றே தெரியவில்லை. சாரிசாரியாக எறும்புகள் ஊர ஆரம்பித்தன. பனைமரத்தின் கீழே இருந்த மூலிகையைக் கடித்து தங்கள் குட்டி வாயில் கவ்விவந்தன. அத்தனையும் பத்திரமாகச் சேகரித்துக்கொண்டான் கடலை மிட்டாய்.

கண்வலிப் பணக்காரனின் வீட்டு வாசலில் வேலைக்காரன் நின்றிருந்தான். இந்தப் பிச்சைக்காரனா தன் முதலாளிக்கு மருந்து கொண்டுவந்திருக்கப் போகிறான் என்று அவனுக்குத் தோன்றியது.

''பணக்காரனுக்கும் ஏழைக்கும்
வியாதி ஒண்ணுதான்
ராஜாவுக்கும் பிச்சையப்பனுக்கும்
மருந்து ஒண்ணுதான்''

என்று கடலை மிட்டாய் சொல்வதைக் கேட்டுக்கொண்டே அங்கே வந்த பணக்காரனின் கண்களில் மூலிகைச் சாற்றை ஊற்றினான் கடலை மிட்டாய்.

சிறிது நேரத்தில் கண்வலி மெள்ள மெள்ளக் குறைந்து சரியாகிவிட்டது.

பணக்காரன், கடலை மிட்டாயைக் கட்டிப் பிடித்துக்கொண்டான்.

''அடுத்தவர் வேதனை தீக்கணுமுன்னு
ஒருசிலருக்கே தோணும் - தூக்கம்
கெடுத்த வலியை தீத்தியே நண்பா,
என்ன பரிசு வேணும்?''

என்று கேட்டான். அவன் கண்களில் இருந்து சந்தோஷக் கண்ணீர் வழிந்தது.

அப்போது கடலை மிட்டாய் சொன்னான்:

''பரிசுக்காகவோ பணத்துக்காகவோ
வேலை செய்யலை கண்ணு - அட
சரிசமமாக எல்லாரும் இருக்கணும்
நானும் நீயும் ஒண்ணு''

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 26, 2014 2:21 pm

உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் 3838410834


உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் 103459460 உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் 1571444738



M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக