ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதுர் தோஷம் போக்கும் சிவன்

2 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 9:03 pm

First topic message reminder :

பிதுர் தோஷம் போக்கும் சிவன்

ஜனவரி 24,2014,12:10  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_125202201
முன்னோர் கடனை சரிவர தீர்க்காதவர்கள் வணங்க வேண்டிய சிவன், காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர் கோயிலில் இதற்கான பரிகாரம் செய்து கொள்ளலாம். 
தல வரலாறு: சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்திதோஷம் உண்டானது. தந்தையான தசரதருக்கு செய்ய வேண்டிய பிதுர்கடனும் அவருக்கு இருந்தது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிதுர்கடன் நிறைவேற்றாததால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கவும், அவர் சிவபெருமானை வேண்டினார். அதன்பின், காஞ்சிபுரத்தில் இந்திரனால் உருவாக்கப்பட்ட சர்வதீர்த்தக் குளக்கரையில், பிதுர்க்கடனாக தசரதருக்கு தர்ப்பணம் செய்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 
அவருக்கு "ராமநாத சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. ராமனோடு வந்த சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சேநயர் ஆகியோரும் ஆளுக்கு ஒரு சிவலிங்கத்தை காஞ்சியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சீதாதீஸ்வரர், லட்சுமணீஸ்வரர், அனுமந்தீஸ்வரர் என பெயர் சூட்டப்பட்டது. இதன் பின் சிவன் அவர்களுக்கு யோகவடிவில் காட்சியளித்தார். அவரே "யோகலிங்கேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். 
தோஷ நிவர்த்தி தலம்: இக்கோயில் சிறந்த தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. முன்னோருக்கு முறையான திதி, தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் முன்னோர் சாபம், பிதுர்தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு போன்ற சிரமங்கள் வரலாம். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர், ஆஞ்சநேயரை வழிபட இந்தக் குறைபாடு நீங்குவதோடு, முன்னோர் ஆசியால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இங்கு திருப்பணி நடந்து வருகிறது. பிப். 9ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம். 
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரக்கோணம் ரோட்டில் 2 கி.மீ., 
போன்: 97895 27982.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 9:46 pm

அண்ணன் தம்பி பெருமாள்

ஜனவரி 08,2014,11:37  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_114746364
திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் அண்ணனாகவும், திருவஹிந்திரபுரம் பெருமாளின் தம்பியாகவும் கருதப்படும் ராஜகோபாலசுவாமி கடலூர் புதுப்பாளையத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இவரை வைகுண்ட ஏகாதசியன்று தரிசித்தால், பசுதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். 

தல வரலாறு: ஆயர்பாடியில் நடக்க இருந்த இந்திர பூஜையை கிருஷ்ணர் தடுத்தார். கோபம் கொண்ட இந்திரன் அடைமழை பெய்யச் செய்தான். ஏழுநாள் தொடர்ந்து பெய்தமழையால் ஆயர்கள் செய்வதறியாமல் தவித்தனர். உடனே கிருஷ்ணர், கோவர்த்தனகிரி என்ற மலையைத் தூக்கி, அதை குடையாகத் தாங்கி, பசுக்களையும், ஆயர்களையும் அதன் கீழ் வரச்செய்து, மழையிலிருந்து காத்தருளினார். அகந்தை அகன்ற இந்திரன்கிருஷ்ணரைச் சரணடைந்தான். அப்போது, கோகுலத்தின் தலைவனான கிருஷ்ணருக்கு "ராஜகோபாலன்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வின் அடிப்படையில் கடலூர் புதுப்பாளையத்தில் ராஜகோபால சுவாமிக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. 

தரிசித்தால் தானபலன்: மூலவர் ராஜகோபாலசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் செங்கமலவல்லி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இத்தலத்திற்கு ஒரு முறை வந்து தரிசனம் செய்தாலோ, அல்லது ஓரிரவு தங்கினாலோ ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என தலபுராணம் கூறுகிறது. ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், வைராக்கியம் என ஐந்து கல்யாண குணங்களுடன் இங்கு பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை தரிசிக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி வழங்குகிறார். 

திருப்பதி அலங்காரம்: இத்தலத்திற்கு "தமிழக திருப்பதி' என்ற பெயர் உண்டு. திருப்பதி வெங்கடேசப்பெருமாளின் அண்ணனாகவும், திருவஹிந்திரபுரம் பெருமாளின் தம்பியாகவும் இவர் போற்றப்படுகிறார். இங்கு புரட்டாசி முழுவதும் தினம் ஒரு அலங்காரத்தில் காட்சி தரும் இவர், புரட்டாசி சனிவாரத்தில் திருப்பதி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மூர்த்தி, தலம், 
தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு மிக்க இங்கு திருப்பதியில் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை செலுத்தும் வழக்கம் உண்டு. எண்ணிய செயல்கை கூட இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். இங்கு அனுமன் ராமரின் தூதுவனாக தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரங்களில் ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், ஆண்டாள், ராமர் சந்நிதிகள் உள்ளன.

இருப்பிடம் : கடலூர் நகரின் மத்தியிலுள்ள புதுப்பாளையம்.
திருவிழா: வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், பங்குனி உத்திரம், ஆடிப்பூரம்
திறக்கும் நேரம்: காலை7 - 12, மாலை 5- இரவு 9. 
போன்: 94432 03257, 04142- 295 115.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 9:48 pm

பல்லாண்டு வாழ்க!


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_114628672
பெருமாளிடம் போய், ""பெருமாளே! எங்கள் குழந்தைகளுக்கு ஆயுள் அபிவிருத்தியைக் கொடு,'' என்று வேண்டலாம். ஆனால், ""பெருமாளே! நீர் பல்லாண்டு காலம் வாழ்க!'' என்று யாராவது வாழ்த்தியதுண்டா! உண்டே! அவர் தான் பெரியாழ்வார். பெருமாள் கருடன் மீது தாயார்களோடு அவருக்கு காட்சி தந்த போது, அவருக்கு திருஷ்டி பட்டு விடக்கூடாதே என்பதற்காக இப்படி பாடினார் ஆழ்வார். பெருமைக்குரிய இந்த பெருமாளை "கூடல் அழகர்' என்பர். மதுரையிலுள்ள இவரது கோயிலில், வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

தல வரலாறு: பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, மதுரை வந்து, பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்கு காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், தேவசிற்பி, விஸ்வகர்மாவை வரவழைத்து, தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைத்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே "கூடலழகர்' எனப்பட்டார். இந்த தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. நான்கு யுகம் கண்ட இவர், "யுகம் கண்ட பெருமாள்' எனப்படுகிறார்.

மீன் சின்னம்: பாண்டியர்களின் சின்னம் மீன். இது உருவானதற்கு இத்தல பெருமாளே காரணம். ஒரு காலத்தில் இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகையும், கிருதுமால் நதியும் ஓடின. பாண்டிய மன்னன் சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டான்.

தல சிறப்பு : 108 திவ்யதேசங்களுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்ற "திருப்பல்லாண்டு' பாடல் இயற்றப்பட்ட தலம் இதுவே. மார்கழி மாதத்தில் இக்கோயிலை தரிசிப்பது சிறப்பு.

அஷ்டாங்க விமானம் : பெருமாள் கோயில்களில் 96வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகும். 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரமும், இதிலுள்ள கலசம் 10 அடி உயரமும் உடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் "ஓம்நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

மூன்று கோலங்கள் : அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர், தனது தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அஷ்டதிக் பாலகர்கள் ஓவிய வடிவில் அருளுகின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் இங்கு உள்ளன. 

வைகுண்ட ஏகாதசியன்று மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது,
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
நின் சேவடி செவ்வி திருக்காப்பு! என்ற பெரியாழ்வாரின் பாசுரத்தைப் பாடுவதன் மூலம், நாமும் பெருமாளின் அருளால் பல்லாண்டு சுகமாக பூமியில் வாழலாம். 
திறக்கும் நேரம் : காலை6.00-12.00, மாலை 4.00-இரவு 9.00. 
போன் : 98940 63660.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 9:50 pm

மாலை சூடும் மணநாள்!

டிசம்பர் 27,2013,14:25  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_151329632
சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவி புஷ்கலாதேவியுடன் குடும்பஸ்தராக காட்சி தருகிறார். ஐயப்பனைத் தரிசிக்க விரும்பும் பெண்கள் தம்பதி சமேதராக இங்கு சென்று வரலாம். இவருக்கு நாளை திருக்கல்யாணம் நடக்கிறது. தீர்க்க சுமங்கலியாக இருக்க இந்த திருமணத்தை தரிசித்து வரலாம்.

தல வரலாறு: மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, விற்பனைக்கு எடுத்துச் சென்றனர். இவர்களில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே, தனது மகள் புஷ்கலாவுடன் சென்றார். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை ஆரியங்காவு சாஸ்தா (ஐயப்பன்) கோயில் மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்தார். தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார். புஷ்கலா தன்னாலான கைங்கரியங்களைச் சாஸ்தாவுக்கு செய்து வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கினாள்.

சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவெடுத்தார். திருவிதாங்கூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த புஷ்கலாவின் தந்தையை, மத யானை ஒன்று விரட்டியது. அப்போது இளைஞன் ஒருவன் அங்கே தோன்றி, யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார்.அவன், ""உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?'' எனக் கேட்டதும், அவர் சம்மதித்தார். உடனேயே அவன் மறைந்து விட்டான்.

அதிசயித்த அவர், ஆரியங்காவு வந்து சேர்ந்தார். கோயிலுக்குச் சென்றார். அங்கே தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி கொடுப்பதைக் கண்டார். மதகஜ வாகன ரூபனாக அவரைக் கண்ட வியாபாரி, ""நீயே என் மகளை ஆட்கொள்ள வந்தாயா?'' என்று பரசவப்பட்டார். பின்னர், தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தான அதிகாரிகளுடன் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாஸ்தாவும் நேரில் எழுந்தருளி புஷ்கலாவை ஆட்கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சி, ஒவ்வொரு மார்கழி மாதமும் (டிச.25) இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர். திருக்கல்யாணத்திற்கு மறுநாள், சபரிமலையில் நடப்பது போல இங்கும் மண்டல பூஜை நடக்கும். திருமணக்காட்சியைத் தரிக்கும் கன்னியருக்கு, திருமணத்தடை இருந்தால் நீங்கும். திருமணமான பெண்கள், தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.

சிறப்பம்சம்:"சாஸ்தா' என்னும் சொல்லை கிராமத்து மக்கள் "சாத்தன்', சாத்தான், சாஸ்தான்' என்றெல்லாம் பயன்படுத்துவர். "சாத்து' என்றால் "கூட்டம்'. காட்டிற்குள் இருக்கும் இவரை பக்தர்கள் கூட்டமாக வந்து வழிபடுவதால், இப்பெயர் பெற்றார். ஒரு சாரார் இவரை "அய்யனார்' என்பர். "ஐயன்' என்றால் "தலைவன்', "தலைசிறந்தவன்' என்று பொருள்படும். "ஆரியன்' என்ற சொல்லுக்கும் "உயர்ந்தவன்' என்றே பொருள். "காவு' என்றால் "சோலை'. "உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை' என்று இதற்கு பொருள். மூலஸ்தானத்தில் ஐயப்பனின் வலது பக்கம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருப்பா நதிக்கரையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. 

இருப்பிடம்: மதுரையில் இருந்து செங்கோட்டை சென்று (155 கி.மீ.,)அங்கிருந்து புனலூர் ரோட்டில் ஆரியங்காவை (22கி.மீ.,)அடையலாம். 
திறக்கும் நேரம்: காலை 7-11, மாலை 4-7.
போன்: 98421 52328, 0475-221 1566.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 9:52 pm

கல்யாணமாகாத பெண்ஙகளும் மாங்கல்யம் அணியலாம்!

டிசம்பர் 11,2013,14:29  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_155122664
திருமணமாகாத பெண்களுக்கும் மாங்கல்யம் அணிவிக்கும் வித்தியாசமான வழிபாடு மயிலாடுதுறை அருகிலுள்ள கீழையூர் கடைமுடிநாதர் கோயிலிலுள்ள அபிராமியம்மன் சந்நிதியில் நடக்கிறது. 
தல வரலாறு: படைக்கும் தொழிலைச் செய்வதால், எல்லாமே தன்னால் தான் நடக்கிறது என்று ஆணவம் கொண்ட பிரம்மாவை, சிவன் பூலோகத்திற்குச் செல்லும்படி சபித்து விட்டார். பிரம்மா பூலோகம் வந்து, பல இடங்களில் சிவபூஜை செய்தார். இத்தலத்துக்கு அவர் வந்த போது பூஜை செய்வதற்கு லிங்கம் கிடைக்கவில்லை. எனவே, சிவனை மானசீகமாக வழிபட்டார். மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சி தந்தார். இவர் தன்னை வழிபடுவோரை ஆரம்பம் முதல் இறுதிக்காலம் வரை காப்பாற்றுபவராக அருளுவதால் இவருக்கு "கடைமுடிநாதர்' என்று பெயர் ஏற்பட்டது. கண்வமகரிஷி (சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை) இவரை வழிபட்டு முக்தி பெற்றார்.

மேற்கு பார்த்த தலம்: மேற்கு பார்த்த சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. மேற்கு நோக்கிய தலங்களில் சிவன் உக்கிரமாக இருப்பார் என்று சொல்லப்படுவதுண்டு. எனவே, நமக்கு யாராவது அநியாயம் இழைத்தால் அதுபற்றி இத்தல சிவனிடம் முறையிட்டால், நியாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மன்னர்கள் மேற்கு நோக்கிய சிவனை வணங்கியபிறகு, போருக்குச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. காவிரி நதியும் இங்கு மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம். மூலஸ்தானத்தில் சுவாமி 16 பட்டைகளுடன் கூடிய ÷க்ஷாடச லிங்க அமைப்பில் இருக்கிறார். பதினாறு செல்வமும்பெற இவரிடம் வேண்டலாம். திருஞானசம்பந்தர் இத்தலத்து சுவாமி பற்றி பதிகம் பாடியுள்ளார். 

சிறப்பம்சம்: பிரகாரத்தில் உள்ள நவக்கிரக மண்டபம் எண்கோண வடிவ ஆவுடையார் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிவன் சந்நிதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியும், பைரவரும் இடதுகாதில் வளையம் அணிந்துள்ளனர். பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். கடைமுடிவிநாயகர் மற்றும் சுப்பிரமணியருக்கும் சந்நிதிகள் உள்ளன.

கன்னியருக்கு தாலி பிரார்த்தனை: இத்தலத்து அம்பிகை அபிராமி, தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். திருமணத்தடை உள்ள பெண்கள், மஞ்சள் கயிற்றில் மஞ்சளைக் கட்டி அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் அதை அம்பிகைக்கு அணிவித்து பூஜை செய்வார். பின் அதை அப்பெண்ணிடம் தந்து விடுவார். கன்னிப்பெண்கள் அந்த மாங்கல்யத்தை அணிந்த பிறகு உடனடியாக கழற்றிவிட வேண்டும். பின் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று, திருவிளக்கின் முன்னால் வைத்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்திற்காகவும் இதே சடங்கைச் செய்கின்றனர்.

இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் கீழையூர். குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் உண்டு. பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 7- 12, மாலை 4- 8.
போன்: 04364- 283 360, 283 261, 94427 79580.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 9:55 pm

கடந்து போன வழியைப் பாருங்கள்!


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_143821520
திருப்பதி வெங்கடாஜலபதி எப்படிப்பட்ட பக்தரை விரும்புகிறார்? கோயிலின் பிரதான அர்ச்சகரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதைக் கேட்போமே!

ஏழுமலையானை நிம்மதியாக பார்க்க முடியவில்லை என பக்தர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்.1950ல், நீங்கள் திருப்பதி வந்திருந்தால், பத்து நிமிடம் நின்றால் கூட உங்களை போகச்சொல்ல ஆள் கிடையாது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லையே. சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூட, இரண்டு நிமிடம் கூட சுவாமி முன் நின்று பிரார்த்தனை செய்திருக்க மாட்டார். அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று விட்டனர். ஆக, சுவாமியை ஒரு நிமிடம் கூட பார்க்கவில்லையே என்று நினைக்காதீர் கள், மாறாக, பத்து வினாடியாவது பார்த்தேனே என்று திருப்தி அடைந்து கொள்ளுங்கள்.

பக்தி என்பது, நாமம் இட்டு, மந்திரம் சொல்லி, பூஜை செய்து சாமி கும்பிடுவதோடு முடிந்துவிடுவதில்லை. அப்போதுதான் துவங்குகிறது. நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களை பெருமாள் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு மனம்,மெய்,வாக்கு ஆகிய மூன்றாலும் தவறேதும் செய்யாதிருப்பதே பக்தி.

எனக்கு எஜமான் பெருமாள்தான். எங்கேயோ இருந்த என்னை தனக்கு பூஜை செய்யும்படி அருகில் அழைத்து வைத்துக்கொண்டுள்ளார். அந்தகாரியத்தில் கடுகளவும் குறைவின்றி செய்யவேண்டும், செய்துவருகிறேன். அப்படி மனம்விரும்பி என் வேலையை செய்யும் போது ஏற்படும் பரவசம் பக்திக்கு ஈடானது. யாராக இருந்தாலும் மனம் சொன்னதை கேட்டு வேலையை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், அந்த தொழில் பக்தியைதான் பெருமாள் மிகவும் நேசிப்பார்.

காலுக்கு செருப்பு கூட வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுபவன் காலை இல்லாதவனை பார்த்தபிறகு நமது கவலையில் நியாயமில்லை என்பதை உணர்வான். அது போல எல்லோருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப கஷ்ட,நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். இதையே நினைத்துக்கொண்டு இருக்காமல், அதை கடந்து போகும் வழியை பார்க்கவேண்டும்.

உன்னிடம் அதிகாரம் இருந்தால் அதை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தாமல் இருப்பதும் குற்றம். அந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு தப்பான விஷயம் நடக்கும் போது அதை பார்த்துக்கொண்டு தடுத்து நிறுத்தாமல் விட்டாலும் பாவம். முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆரிடம், ஆந்திராவிலுள்ள 34 ஆயிரம் கோவில்களைச் சேர்ந்த ஒரு லட்சம் அர்ச்சகர் குடும்பங்கள் நலம் பெற ஒரே ஒரு உத்தரவு போடுங்கள் என்று கேட்டேன். அப்படியே உத்தரவிட்டார். இன்று அந்த ஒரு லட்சம் குடும்பமும் நிரந்தர வருமானத்துடன் நிம்மதியாக இருக்கிறது. ஆக, பக்தியும் நிம்மதியும் ஆனந்தமும் குலசேகரபடிக்கட்டைத்தாண்டி கர்ப்பக்கிரகத்தில் மட்டும் இல்லை, உங்கள் மனதிலும் இருக்கிறது. வாழ்க்கையை நேசியுங்கள். அது எப்படி இருந்தாலும், அமைந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழப்பழகுங்கள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? அன்றாடம் தன்னை வந்து சந்திக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் வீடு வேண்டும், பணம் வேண்டும், வெளிநாட்டு வேலை வேண்டும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான"வேண்டும்' வேண்டுதலை மட்டுமே கேட்கும் பெருமாள், கோடியில் ஒரு பக்தன் எனக்கு எதுவும் வேண்டாம் "நீதான் வேண்டும் நீ மட்டுமே வேண்டும்' என்று கேட்டுவரமாட்டாரா? அவரை வைகுந்தத்திற்கே அழைத்துச் சென்று அருகே வைத்துக்கொள்வோமே என எண்ணியுள்ளார். அந்த ஒரு பக்தராக மனதார மாற முடியுமா? பாருங்களேன்!''.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 9:59 pm

24 நிமிடத்தில் மோட்சம்

டிசம்பர் 03,2013,14:08  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_143707967
24 நிமிடத்திலேயே மோட்சம் கிடைக்க வேண்டுமா! வேலூர் மாவட்டம் சோளிங்கர், கடிகாசல மலை யோக நரசிம்மர் கோயிலில் அமர்ந்தாலே போதும். மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

தல வரலாறு: இரண்யனின் மகன் பிரகலாதன். திருமால், பக்தனான இவனை, பெற்ற தந்தையே தன்னை வணங்கும்படி கூறி நச்சரித்தான். பல கொடுமைகள் செய்தான். ஒரு கட்டத்தில் மகனைக் கொல்லவும் துணிந்தான். ஆனால், திருமால் அருளால் பிரகலாதன் தப்பினான். ஒருசமயம், ""நீ ஹரி என்று புகழும் திருமால் எங்கிருக்கிறான்?'' என இரணியன் ஆணவத்துடன் கேட்டான். "தூணிலும் இருக்கிறார், தூணிலும் இருக்கிறார்' என்று பிரகலாதன் பதிலளிக்க, அவன் சுட்டிக்காட்டிய தூணை, இரண்யன் உடைத்தான்.

உள்ளிருந்து சிங்கமுகம், மனித உடலுடன் நரசிம்மராய் வெளிப்பட்டார் திருமால். இரண்யனை வதம் செய்தார். இந்த அவதாரத்தை தரிசிக்க விரும்பிய வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் இத்தலத்தில் தவமிருந்தனர். பெருமாளும் அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். அவர்களது விருப்பப்படி அவர் காட்சி தந்த இத்தலத்தில் யோக நரசிம்மராக அருள்பாலித்து வருகிறார். 

உற்சவருக்கு தனி கோயில்: பொதுவாக, பெருமாள் கோயில்களில் மூலவரும் உற்சவரும் ஒரே சந்நிதியில் தான் அருளுவார்கள். ஆனால், இங்கு மூலவர் யோக நரசிம்மர் 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் "சிம்ஹ கோஷ்டாக்ருதி' விமானத்தின் கீழ் அருளுகிறார். இவரைத் தரிசிக்க 1305 படிகள் ஏற வேண்டும். மலையடிவாரத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள சோளிங்கரில், உற்சவர் பக்தவத்சலர், சுதாவல்லிக்கு கோயில் உள்ளது. அமிர்தவல்லி தாயார் தனி சந்நிதியில் அருளுகிறார். 

சங்கு, சக்கர ஆஞ்சநேயர்: பெரிய மலைக்கு எதிரில் 406 படிகள் கொண்ட சிறிய மலையில் ஆஞ்சநேயர் தனி கோயிலில் அருளுகிறார். இவர் யோக நிலையில் முன்னிரண்டு கரத்தில் ஜபமாலையும், பின்னிரண்டு கரத்தில் சங்கு, சக்கரமும் ஏந்தியுள்ளார். "சதுர் புஜ யோக ஆஞ்சநேயர்' என்ற திருநாமம் கொண்ட இவரது கண்கள் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடியை பார்த்தபடி அமைந்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும், திருப்பதிக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பம்சம். 

பவுர்ணமியன்று மலைக்கோயிலை கிரிவலம் வருகிறார்கள். இங்கு ஒரு கடிகை (24நிமிடம்) தங்கினாலே மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். கார்த்திகை மாத வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாட்களிலும் வழிபடுவது சிறப்பு.
திறக்கும் நேரம்: மலைக்கோயில் காலை 8-மாலை 5. 30. கீழ் கோயில் காலை 6-பகல் 12, மாலை 5-இரவு 8.30.
இருப்பிடம்: வேலூரிலிருந்து திருத்தணி வழியில் 60 கி.மீ., தூரத்தில் சோளிங்கர். சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக 125 கி.மீ.,
போன்: 044-2232 1221, 04172-260 255.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 10:01 pm

உத்ர துவார பாலினி!

நவம்பர் 26,2013,16:37  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_164551638
உலகாளும் நாயகியான அம்பிகை, பல திருநாமங்களைப் பெற்றிருக்கிறாள். காவல் தெய்வமான காளி அம்சத்தோடு, உத்ர துவார பாலினி என்னும் வடக்குவாசல் செல்வியம்மன், நீலகண்டேஸ்வரி என்னும் இருவித கோலங்களில் கடையநல்லூரில் அருள்பாலிக்கிறாள். 

தல வரலாறு: தேவர் தலைவனான இந்திரன், கவுதமரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டான். ஒருநாள், நள்ளிரவில் சேவல்வடிவெடுத்து கூவினான். பொழுது புலர்ந்தது என எண்ணிய முனிவர், காலைநேர அனுஷ்டானத்திற்காக கிளம்பினார். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், கவுதமரின் வடிவில் சென்று அகலிகையை ஏமாற்றினான். விஷயமறிந்த முனிவர், இந்திரன் உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்தார். சாபம் தீர இந்திரன் யாத்திரை புறப்பட்டான். பூலோகத்தில் அர்ஜுனபுரி என்னும் (கடையநல்லூர்) தலத்தை அடைந்தான். அங்கு நீலமணிநாதர், அருணாசலேஸ்வரர் என்னும் இரு சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அப்பகுதியின் ஈசானபாகமான வடகிழக்கில் குளம் ஒன்றை வெட்டினான். நீலமணிநாதரின் வடபுறத்தில், அம்பாளை வடக்குவாசல் செல்வி என்னும் பெயரில் நிர்மாணித்து பூஜித்தான். இவர்களை வணங்கி சாப விமோசனம் பெற்றான்.

கோயில் அமைப்பு: வடக்குவாசல் செல்வியம்மன் பெயருக்கேற்றாற் போல் ஊரின் வடபுறத்தில், அமைந்துள்ளது. பத்ரகாளி அம்சத்தோடு செல்வியம்மனும், சக்தி அம்சத்தோடு நீலகண்டேஸ்வரி அம்மனும் வீற்றிருக்கின்றனர். செல்வியம்மனுக்கு
"உத்ரதுவார பாலினி' என்ற பெயரும் உண்டு. எதிரெதிர் சந்நிதிகளில் இரு அம்மன்களும் இருக்கின்றனர். செல்வியம்மன் அசுர சக்தியை அழித்து பக்தர்களைக் காக்கும் விதத்தில் வலக்கையில் திரிசூலம் ஏந்தியிருக்கிறாள். இடக்கரத்தில் விபூதி கொப்பரை உள்ளது. தீராத பழிபாவத்தில் இருந்து பக்தர்களைக் காப்பதில் நிகரற்றவளாகத் திகழ்கிறாள். 

சிறப்பம்சம்: அம்மனுக்கு தை மூன்றாம் செவ்வாயில் திருவிழா நடத்துவர். விழாவிற்கு முதல்நாள் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், குங்கும அபிஷேகமும் நடத்துவர். செவ்வாயன்று மதியம் வரை தொடர் அபிஷேகம் நடக்கும். இரவு 11 மணிக்கு செல்வி அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்வர். அதன்பின், நள்ளிரவு 12மணிக்கு படையல் பூஜை நடக்கும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாவிளக்கு, உருவம் செலுத்துவது போன்ற நேர்ச்சைகளைச் செலுத்துவர். இங்கு விரைவில் திருப்பணி தொடங்க உள்ளது. திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம்.
திறக்கும்நேரம்: காலை9- பகல்11.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 155 கி.மீ., புதுபஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில்.
போன்: 90958 78440, 98439 39715.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 10:03 pm

வளைகாப்பு நடத்தணுமா! உமையாள்புரம் வாருங்க!

நவம்பர் 26,2013,16:32  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_164453735
பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்க, கும்பகோணம் அருகிலுள்ள உமையாள் புரம் காசிவிஸ்வநாதர் கோயில், குங்குமசுந்தரி அம்பாள் சந்நிதியில் வளைகாப்பு நடத்துகின்றனர். 

தல வரலாறு: படைப்புக்கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, "நானே படைப்புக்கடவுள்' என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர் தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே முருகன், தனது தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது. உபதேசம் பெற சிவன் வந்த போது அம்பிகையும் உடன் வந்தாள். சிவன் அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, தான் மட்டும் சென்று உபதேசம் கேட்டார். உமையவளாகிய அம்பாள் தங்கிய தலமென்பதால் இவ்வூர், "உமையாள்புரம்' எனப்பெயர் பெற்றது.
மற்றொரு வரலாறு: விஜயா என்ற கந்தர்வப்பெண், சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். அவள், இங்கு தீர்த்தம் உண்டாக்கி சிவதரிசனம் வேண்டி தவமிருந்தாள். சிவன், அம்பாளுடன் காட்சி தந்து, அவளது வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். மகிழ்ந்த விஜயா இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினாள். சுவாமிக்கு காசிவிஸ்வநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது. 

வளைகாப்பு வைபவம்: குங்குமசுந்தரி அம்பாள் சந்நிதியில் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த கமலா என்ற பெண், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். ஒருசமயம் அவளது கணவன், தீராத நோயால் பாதிக்கப்பட்டான். அவன் குணமாக வேண்டி அப்பெண், இத்தல அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டாள். அம்பாள் அவளது கணவனின் நோயைக் குணப்படுத்தி அருள் புரிந்தாள். இதனால் அம்பிகைக்கு குங்குமசுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. பெண்கள் தங்களது கணவர் ஆரோக்கியமாக இருக்கவும், திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமையவும் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். சந்நிதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர். வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டும். அம்பாள் சந்நிதி எதிரில், ராஜமகா வல்லபகணபதி இருக்கிறார்.

சிறப்பம்சம்: இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர் வில்வ வனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடைமுடிநாதர் கோயில் மற்றும் திவ்யதேசங்களான கபிஸ்தலம், புள்ளபூதங்குடி ஆகியவை உள்ளன. இதன்மூலம், ஒரே நேரத்தில் பல புண்ணியத்தலங்களை தரிசிக்க வசதியிருக்கிறது.
இருப்பிடம்: கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உமையாள்புரம்.
திறக்கும் நேரம்: காலை 5.30- 10.30, மாலை 4.30- இரவு 8.30.
போன்: 0435- 244 1095.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 10:04 pm

டாக்டர் சிவா

நவம்பர் 19,2013,12:42  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_125329589
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். நோய் நொடியைப் போக்கி ஆரோக்கியம் தந்தருளும் மருத்துவராக, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் விளங்குகிறார். 
தல வரலாறு: வசிஷ்டர் செய்த சிவபூஜையின் பயனாக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அவருக்கு பரிசாக அளித்தான். ஒருமுறை, பூஜை நேரத்தில், காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்தது. இதனால், கோபம் கொண்ட வசிஷ்டர், அதைக் காட்டுப்பசுவாக போகும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் அளிக்க முனிவரிடம் வேண்டியது. 

பூலோகத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக (தானாக தோன்றிய லிங்கம்) உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டாகும் என வழிகாட்டினார். அதன்படி, இத்தலம் வந்த காமதேனு, சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினமும் பால் சுரந்து வழிபட்டது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்னும் பெயர் பெற்றார். 

கொள்ளைக்காரராக இருந்த, ராமாயண ஆசிரியர் வால்மீகி, திருந்தும் எண்ணத்துடன் இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது அங்கிருந்த சிவலிங்கத்தை அறியாமல் மிதித்து விட்டது. லிங்கத்தின் மேல் அதன் கால் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது. திருநாவுக்கரசரால் புகழ்ந்து பாடப் பெற்றது இத்தலம். இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. 

வன்னிமரக் காட்சி: தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தின் அடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி சிவனிடம், ""பெருமானே! தாங்கள் என் பெயரால் இந்த தலத்தில் எழுந்தருள வேண்டும்,'' என்றார், அதற்கேற்ப, சுவாமிக்கு "வன்மீகநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. "வன்மீகம்' என்றால் "புற்று'. வால்மீகி, காட்டில் தவம் செய்த போது, அவரைச் சுற்றி புற்று வளர்ந்தது. புற்றின் பெயரால் "வன்மீகர்' எனப்பட்ட அவரது பெயர் "வால்மீகி' என மருவியது. அவரது பெயரிலேயே இத்தலம் திருவான்மியூர் எனப்படுகிறது. 

இங்குள்ள சிவன் "வன்மீகநாதர்' எனப்படுகிறார். பிரகாரத்தில் வால்மீகிக்கும், அகத்தியருக்கும் சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கம், பஞ்ச லிங்கங்கள் உள்ளனர். தினமும் காலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உண்டு. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மனுக்கு திரிபுர சுந்தரி என்பது திருநாமம். மூலவரின் விமானம் "சதுர்வஸ்தம்' என்றஅமைப்பில் கட்டப்பட்டுள்ளது. உற்சவருக்கு தியாகராஜர் என்பது பெயர்.

மருந்தீஸ்வரர்: அகத்தியர் இங்கு சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன், உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகள் குறித்தும், மூலிகைகளின் தன்மை குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார். இவரை "டாக்டர் சிவா' என பக்தர்கள் செல்லப் பெயரிட்டு 
அழைக்கின்றனர். இத்தல விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். இவருக்கு நைவேத்தியமாகப் பொங்கல் படைக்கப்படுகிறது.

மேற்கு பார்த்த சிவன்: அபய தீட்சிதர் என்னும் பக்தர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் சுவாமியை தரிசிக்க முடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை 
மட்டுமே தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், "சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்மன் திரிபுர சுந்தரிக்கு நவராத்திரி ஒன்பது நாளும் ஒன்பது வித அலங்காரம் செய்வர்.
இருப்பிடம் : சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் கோயில் <உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6- பகல் 12, மாலை 4- இரவு 9. 
போன்: 044 - 2441 0477.

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Blank
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by jayaravi Fri Feb 07, 2014 10:10 pm

நீங்களும் குபேரன் ஆகலாம்


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Large_124359139
செல்வச் சீமான்களை "குபேரன்' என்பார்கள். அவன் வெங்கடாஜலபதிக்கே கடன் கொடுத்த பெருமை உடையவன். அந்த குபேரனுக்கு இவ்வளவு வசதியைக் கொடுத்தது யார் தெரியுமா! சிவபெருமான் தான்! அந்தச் சிவன் "குபேரபுரீஸ்வரர்' என்ற பெயரில் தஞ்சாவூரில் வீற்றிருக்கிறார். செல்வத்திருநாளான தீபாவளியை ஒட்டி, இவரைத் தரிசித்து குபேரனாகும் பாக்கியம் பெறுங்கள்.
குபேரன் வரலாறு : பிரம்மாவின் மனதில் இருந்து புலஸ்தியர் என்ற மகன் தோன்றினார். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார். சுமாலி என்ற அரக்கனின் மகள் கேகஸியை, விச்வரஸ் திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயின் குணநலத்துடன் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களே ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர். இதன் பின் விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். இக்குடும்பத்தில் பிறந்த ஆண்மக்களில் ராவணனும், குபேரனும் சிவ பக்தர்கள். கும்பகர்ணன் தன் கொள்ளுத்தாத்தா பிரம்மாவின் பக்தன். விபீஷணன் பெருமாள் பக்தன். சூர்ப்பனகைக்கோ பக்தியும் கிடையாது, பெண்ணுக்குரிய நாணமும் இல்லாமல், ஆணழகர்களையும் தேடித் திரிந்தாள். ராவணன் சிவபக்தனாயினும் பெண் பித்தன். கும்பகர்ணன் சாப்பாட்டு ராமன். விபீஷணனும், குபேரனும் தப்பிப் பிறந்தவர்கள். அசுரகுணங்கள் எதுவும் இவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. ராவணன், சிவபெருமானிடம் மனிதரைத் தவிர பிறரால் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றவன். குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனவன். மேலும் சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு, அவரவர் விதிப்பயனுக்கேற்ப செல்வத்தைக் கொடுத்து வர கட்டளையிட்டார். இந்நிலையில், திருமாலின் மனைவியான மகாலட்சுமி, எட்டுவிதமான சக்திகளைப் பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்று அஷ்டலட்சுமி என்று பெயர் பெற்றாள். இவளது சக்திகள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். அவர்களை தன் கணக்கு பிள்ளைகளாக நியமித்துக் கொண்டார் குபேரன். குபேரன் அரசாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பியான விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். 

இங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இருந்த அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட பட்டு மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினான் குபேரன். கிரீடம், தங்க ஆபரணம் அணிந்து,முத்துக்குடையின் கீழ் அமர்ந்த இவன், கையால் அபயமுத்திரை காட்டுவான். அதாவது, பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன், முற்பிறவியல் பாவம் ஏதும் செய்யாமல் இருந்தால் அவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவனது பணி. இவனது வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பத்மநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பான். இவன் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவன். இவனது கையில் வர முத்திரை இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள்.

தல வரலாறு: குபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக, ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் "தஞ்சபுரீஸ்வரர்' எனப்பட்டார். இந்தப் பெயரால் தான், இந்த ஊருக்கே "தஞ்சை' என்று பெயர் வந்தது. ராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான்.
தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் "தஞ்சபுரீஸ்வரர்' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். குரேபன் வழிபட்டதால் "குபேரபுரீஸ்வரர்' என்ற பெயரும் ஏற்பட்டது.
சிறப்பம்சம்: குபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சந்நிதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் இருக்கிறது. சரஸ்வதி இங்கு இருப்பதால், கல்விச்செல்வமும் பெறலாம். விநாயகர், ஆனந்தவல்லி சந்நிதிகளும் உள்ளன. 

இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் ரோட்டில், ஊர் எல்லையில் கோயில் உள்ளது. 
திறக்கும் நேரம்: காலை 6 -11, மாலை 4- இரவு 8.
போன்: 04362 - 223 384, 85.
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 2 Empty Re: பிதுர் தோஷம் போக்கும் சிவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum