Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

அன்பு காட்டினால் ஆரோக்கியம் வளரும்

சிவா | Published on the wed May 24, 2023 6:25 am | 585 Views

பிறருக்கு உதவி செய்தல் அல்லது அறச்செயல்களுக்கு சிறிது நேரத்தை செலவிடுதலில் நம் எல்லோருக்கும் மன திருப்தி கிடைக்கும் என்பதுடன், உடல் ரீதியாகவும் சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன.


பெட்டி லோவேக்கு 96 வயதாக இருந்தபோது அவரைப் பற்றி பத்திரிகைகள் எழுதின. ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், பிரிட்டனில் கிரேட்டர் மான்செஸ்டரில் சால்போர்டு ராயல் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சேவை செய்து வந்தார்.

காபி நிலையத்தில் இருந்த அவர், காபி பரிமாறுதல், பாத்திரங்கள் கழுவுதல், நோயாளிகளுடன் உரையாடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தார். பிறகு லோவே 100 வயதை எட்டினார்.

அப்போது அவரை ``இன்னும் மருத்துவமனையில் சேவை செய்கிறார்'' என்று பத்திரிகைகள் தலைப்பிட்டன. பிறகு அவர் 102 வயதை எட்டினார். ``சேவையை இன்னும் செய்கிறார்'' என்று தலைப்புச் செய்திகள் வந்தன. அவர் 104 வயதான போதும் இதே போல தான் நடந்தது. 106 வயதிலும் இதே நிலைதான். அப்போது பார்வைத் திறன் குறைந்துவிட்ட நிலையில், வாரத்தில் ஒரு நாள் காபி நிலையத்தில் சேவை செய்கிறார் என செய்தி வெளியானது.

பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க விரும்பும்போது நீங்கள் மட்டும் ஏன் வேலைக்கு செல்கிறீர்கள் என நேர்காணலின் போது நிருபர்கள் கேட்டதற்கு, "சேவை செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருப்பதே அதற்குக் காரணம்" என்று அவர் பதில் அளித்தார்.

அவர் கூறியது சரிதான். பொது சேவை செய்தல், பணமாக நன்கொடை அளித்தல், தினமும் அன்பு காட்டும் செயல்களில் ஈடுபடக் கூடிய செயல்பாடுகள் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிக்கிறது என அறிவியல்பூர்வமாக இப்போது தெரிய வந்துள்ளது.

பொது நல சேவையில் ஈடுபடுவதால், சிறிய வயதில் மரணம் அடையும் வாய்ப்பு 24 சதவீதம் குறைகிறது. ஒரு நாளுக்கு பழங்கள் அல்லது காய்கறிகள் ஆறு அல்லது அதிகமான கப்கள் சாப்பிடுவதற்கான பலன் இதில் கிடைக்கிறது என்று சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

தன்னார்வலராக சேவை செய்பவர்களுக்கு ரத்தத்தில் குளுகோஸ் அதிகரிக்கும் ஆபத்து குறையும் மற்றும் இருதய நோய் தொடர்பான அழற்சி பாதிப்புகள் குறையும் என்பதும் கூடுதல் விஷயங்கள்.

பொது நல விஷயங்களில் ஈடுபடாதவர்களை விட, சேவையில் ஈடுபடுவோர் 38 சதவீத அளவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூழலைத் தவிர்க்கிறார்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தன்னார்வ சேவையின் இந்த ஆரோக்கிய பயன், உலகின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. ஸ்பெயின், எகிப்து முதல் உகாண்டா, ஜமைக்கா வரை இதே நிலைதான் இருக்கிறது என்று Gallup World Poll-ன் தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தன்னார்வ சேவைக்குப் பதிவு செய்ய முன்வரக் கூடும். மூட்டுவலி போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள், தன்னார்வ சேவைக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு குறைவுதான்.

``நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தன்னார்வ சேவைக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம் என ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. விஞ்ஞானிகள் அதை அறிந்துள்ள காரணத்தால், தகவல் தொகுப்பில் அதற்கு கட்டுப்பாடுகள் வைத்துள்ளனர்'' என்று இண்டியானா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர் மற்றும் பொது சேவை செயல்பாடு குறித்த ஆராய்ச்சியாளராக இருக்கும் சாரா கொன்ராத் தெரிவித்தார்.

ஏற்கெனவே இருந்த ஆரோக்கிய குறைபாடுகளை விஞ்ஞானிகள் நீக்கிவிட்டாலும், தன்னார்வ சேவையால் கிடைக்கும் ஆரோக்கியத்தின் பயன்கள் அதிகமாக இருக்கின்றன. தன்னியல்பாக தேர்வு செய்த ஆய்வகப் பரிசோதனைகளின் போது, பிறருக்கு உதவி செய்வதால் நமது ஆரோக்கியம் எப்படி மேம்படுகிறது என்பதற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் கிடைத்தன.

அப்படி நடந்த ஓர் பரிசோதனையில் கனடாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு 2 மாதங்களுக்கு வகுப்புகள் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் அல்லது காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

நான்கு மாதங்கள் கழித்து, பயிற்சி வகுப்பு எடுப்பது முடிந்த பிறகு, இரு குழுவினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் ரத்தத்தில் தெளிவான மாறுபாடு இருப்பது அப்போது தெரிய வந்தது. காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்களைக் காட்டிலும், சிறுவயது குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்பு எடுத்த மாணவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைவாக இருந்தது. அழற்சி அறிகுறிகளும் குறைவாக இருந்தன. இருதய ஆரோக்கிய பாதிப்பு, வைரஸ் நோய் பாதிப்புக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது தெரிந்தது.

அறிமுகம் இல்லாதவருக்கு காபி வாங்கித் தருதல் போன்ற, எளிமையான அன்பு காட்டும் நேர்வுகளால் அழற்சி ஏற்படுத்தும் மரபணு செயல்பாடுகள் குறைந்தன.

பெருந்தொற்று காலத்தில் தன்னார்வ சேவை என்பது அதிக சவால் நிறைந்ததாக இருந்தது. இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதல் நமக்கு இருந்தால், ஆன்லைனில் அதைச் செய்வதாலும் நம் ஆரோக்கியம் பெருகும் என்று கொன்ராத் தெரிவித்தார். நண்பர்களுடன் சமூக தன்னார்வ சேவை செய்வது ஆரோக்கியம் அதிகரிப்பதற்கான முக்கிய வாய்ப்பாக இருக்கும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

நேரம் ஒதுக்கி சேவையில் ஈடுபட்டால் தான் ரத்தத்தில் வித்தியாசம் தெரியும் என்பது கிடையாது - எப்போதாவது கனிவாக நடந்து கொண்டாலும் இதே பலன்கள் கிடைக்கும். கலிபோர்னியாவில் நடந்த ஓர் ஆய்வில், அறிமுகம் இல்லாதவர்களுக்கு காபி வாங்கித் தருதல் போன்ற எளிதான அன்பான செயல்பாடுகளில் ஈடுபடுமாறு சிலர் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன் மூலம் அழற்சி தொடர்பான லூக்கோசைட் மரபணுகள் செயல்பாடு குறைவாக இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அழற்சி இருந்தால் மூட்டு வலி, புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும், என்பதால் அதன் செயல்பாடு குறைவது நல்ல விஷயம்.

எப்.எம்.ஆர்.ஐ. கருவியில் ஒருவரை வைத்து, பொது நல சேவை எண்ணத்தை உருவாக்கினால், வலியின் போது அவருடைய மூளையின் செயல்பாடு எப்படி மாறுகிறது என்பதைப் பார்க்கலாம். சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில், அவருடைய கைகளில் மிக லேசான மின்சார ஷாக் கொடுத்தபடி, பணம் நன்கொடை செய்வது போன்ற முடிவுகள் எடுக்க சொல்லப்பட்டது. முடிவுகள் தெளிவாக இருந்தன. நன்கொடை தந்தவர்கள் மூளையில் வலி குறித்த உணர்வு குறைவாக இருந்தது. தங்கள் செயல்பாடுகள் பயன் தருவதாக அவர்கள் எந்த அளவுக்கு அதிகமாக கருதுகிறார்களோ அதற்கு ஏற்ப வலி தாங்கும் திறனும் அதிகமாகிறது. அதேபோல, ரத்த தானம் செய்யும் போது ஏற்படும் வலி, மருத்துவ பரிசோதனைக்கு ரத்தம் எடுக்கும்போது ஏற்படும் வலியைவிட குறைவாகவே இருக்கிறது. ரத்த தானத்தில் பயன்படுத்தும் ஊசி, மருத்துவப் பரிசோதனைக்கு ரத்தம் எடுப்பதற்கான ஊசியைவிட 2 மடங்கு தடிமன் அதிகம் என்றாலும், அதில் அதிக வலி இல்லை.

அன்பான செயல்பாடு மற்றும் பண நன்கொடை செய்வதன் நேர்மறை ஆரோக்கிய பயன்களுக்கு இன்னும் நிறைய உதாரணங்கள் உள்ளன. உதாரணமாக, பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் தாத்தா, பாட்டிகளுக்கு, அந்த வாய்ப்பு கிடைக்காத தாத்தா பாட்டிகளைக் காட்டிலும், மரணத்துக்கான ஆபத்து 37 சதவீதம் குறைவாக இருக்கிறது.

வழக்கமான உடற்பயிற்சி மூலம் கிடைப்பதைவிட அதிகமானதாக இது இருக்கும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதற்காக பெற்றோரின் கடமைகளை தாத்தா பாட்டிகள் செய்ய வேண்டும் என்பது கிடையாது (பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் நிறைய உடல் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக நடைதளர்ந்த காலத்தில் அவ்வளவு செயல்பாடு தேவைப்படும்.)

அதேசமயத்தில், சொந்த மகிழ்ச்சிக்காக அல்லாமல் பிறருக்காக பணம் செலவு செய்வது, காது கேட்கும் திறன் அதிகரிப்பு, நல்ல தூக்கம் மற்றும் ரத்த அழுத்தம் குறைவு ஆகிய பயன்களைத் தருகிறது. புதிதாக உயர் ரத்த அழுத்தத்திற்கு சாப்பிடும் மருந்து அளிக்கும் பயனைவிட இதனால் அதிக பயன் கிடைக்கும்.

இதற்கிடையில் நன்கொடைக்கான காசோலை எழுதி கையெழுத்திடுவது, உங்கள் தசையின் சக்தியை மேம்படுத்துவதற்கான நல்ல உத்தியாக இருக்கிறது. கை பிடிமானத்தின் பலத்தை அறிவதற்கு நடந்த ஒரு பரிசோதனையில், யுனிசெப் அமைப்புக்கு நன்கொடை அளித்தவர்கள், அவ்வாறு பணம் தராதவர்களைக் காட்டிலும் 20 நொடிகள் கூடுதலாக (பிழிவது போல) உள்ளங்கையை அழுத்தும் பயிற்சியை செய்ய முடிகிறது என கண்டறியப்பட்டது. எனவே அடுத்த முறை மல்யுத்தம் செய்யப் போவதாக இருந்தால், முதலில் காசோலை புத்தகத்தை தேடுங்கள்.

பொது நல சேவை மற்றும் அன்பான செயல்பாடு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்று சாண்டியாகோ அரசு பல்கலைக்கழகத்தில் நரம்பியல் விஞ்ஞானியாக இருக்கும் டிரிஸ்டென் இனகாக்கி கூறுகிறார். ``மனிதர்கள் அதிக அளவில் சேர்ந்து வாழக் கூடியவர்கள். நாம் பிணைப்பு கொண்டிருக்கும்போது ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது. பிணைப்பாக இருப்பது அன்பை பகிர்வது போன்றது'' என்று அவர் தெரிவித்தார்.

அக்கறை காட்டும் போது உடல் இயக்க செயல்பாடுகளை இனகாக்கி ஆய்வு செய்து வருகிறார். உதவி செய்யும் மனப்பாங்கு மற்றும் ஆரோக்கியத்துடன் மூளையின் செயல்பாட்டில் எப்படி மாற்றம் நடக்கிறது என அவர் ஆய்வு செய்கிறார். நம் குழந்தைகளை கவனித்துக் கொள்வது, பாலூட்டிகளின் நிலைக்கு ஏற்ப அசாதாரணமாக உதவியற்ற நிலை, பிறருக்கு உதவி செய்யும் நிலை பற்றி கவனிக்கப்பட்டது.

தானியங்கி இயந்திரத்தில் வரிசையாக 3 செர்ரிகள் பரிசாகக் கிடைக்கும்போது மூளையில் எப்படி பிரகாசம் எழுமோ அந்தப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. பரிசு பெறுதலை, பெற்றோர் கடமையுடன் இணைப்பதன் மூலம், கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளை புறக்கணித்துவிடக் கூடாது என்பதை இயற்கை வலியுறுத்துவதாக இருக்கிறது.

அன்புக்கு உரிய பிறருக்கு நாம் ஆதரவு அளிக்கும் போது, மூளையின் இந்தப் பகுதியில் பிரகாசம் எழுவதாக இனகாக்கி மற்றும் அவருடைய சகாக்கள் நடத்திய நியூரோ இமேஜிங் பரிசோதனையில் தெரிய வந்தது.

அக்கறை காட்டும் செயல்பாடு தவிர, இயல்பான வழக்கமும் மன அழுத்தத்தைக் குறைப்பதாக உள்ளது. நாம் கனிவாக நடந்து கொள்ளும் போது, அல்லது நமது கடந்த கால அன்பான செயல்பாடுகளை மீண்டும் செய்யும்போது, நம் மூளையில் பயத்தை வெளிப்படுத்தும் மையம் குறைவாக செயல்படுகிறது. குழந்தை வளர்ப்புடன் இதை தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.

குழந்தைகளை கவனித்துக் கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்ற உணர்வுக்கு மாறுபட்டதாக இது இருக்கலாம். புதிதாக குழந்தை பெற்றவர்களை நீங்கள் கேட்டுப் பார்த்தால், குழந்தைகளை கவனித்துக் கொள்வது உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்வதைப் போல கிடையாது என்று கூறுவார்கள். ஆனால், விலங்குகள் அதே இனத்தின் குட்டிகளின் சிணுங்கல் ஒலியைக் கேட்கும்போது, பயத்தை ஏற்படுத்தும் உணர்வுகள் குறைகிற செயல்பாட்டை காண முடிகிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதேபோல, பெற்றோர்களிடம் அவர்களுடைய குழந்தையின் படத்தைக் காட்டினாலும் அதே மாதிரியான மாற்றம் நிகழ்கிறது. உண்மையில் பிறருக்குப் பயனுள்ள விஷயத்தை நாம் செய்யும்போது, மூளையில் பயத்தை உணர்த்தும் மையத்தின் செயல்பாடு குறைகிறது என்று இனகாக்கி விளக்குகிறார்.

``அவர்களின் மன அழுத்தத்தால் நீங்கள் முழுமையாக ஈடுபாடு கொண்டிருந்தால், முதலில் அவர்களுக்கு உதவ நீங்கள் அணுகுவதே சிரமமாக இருக்கும்'' என்று அந்தப் பெண் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

இவை அனைத்துமே ஆரோக்கியத்தில் நேரடி பயன்களைத் தருகின்றன. அக்கறை காட்டும் செயல்பாடுகளால் - நம் நரம்பு மண்டலத்தில் தொடர்புடைய, ரத்த அழுத்தம் மற்றும் அழற்சி செயல்பாடுகளில் தொடர்புடைய பயம் அறியும் மற்றும் பரிசுகளை அறியும் பகுதிகள் - மாற்றம் காண்கின்றன என்று இனகாக்கி விளக்குகிறார். அதனால் தான் பிறர் மீது அக்கறை காட்டுவது உங்களின் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், நீங்கள் நீண்டகாலம் வாழலாம்.

வளர் இளம்பருவத்தில் தன்னார்வ சேவையில் ஈடுபடுபவர்களுக்கு அழற்சியின் - interleukin 6 மற்றும் C-reactive protein இரண்டு அளவுகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. பெருந்தொற்று காலத்தில், பிறருக்கு உதவி செய்வதால் அதிக சக்தி கிடைக்கும் வாய்ப்பு மேம்படுகிறது. தன்னார்வ சேவை செய்வது, கோவிட்-19 பாதிப்பில் இருந்து நம்மைக் காப்பாற்றுமா என்ற ஆராய்ச்சி இன்னும் நடைபெறவில்லை. வைரஸ் பாதிப்புள்ள பிறருடன் உங்கள் தொடர்பு அதிகமாக இருந்தால், உங்களுக்கும் அந்த நோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கிறது.

இருந்தாலும், உங்களுக்கு இயல்பாகவே கொடுக்கும் குணம் இல்லாவிட்டால் என்ன செய்வது?

தன்னார்வ சேவை செய்தல் மற்றும் கொடையளித்தல் எண்ணத்துக்கு வேண்டிய பரிவு பெரும்பாலும் பரம்பரையில் வருவது - நமது ஜீன்களின் வரிசையில் மூன்றில் ஒரு பங்கு அப்படி இருக்கும். இருந்தாலும், குறைவான பரிவு கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்கள் விதி அப்படியே தான் இருக்க வேண்டும் என்று கிடையாது என்கிறார் கொன்ராத்.

``நாம் வெவ்வேறு தடகள திறமைகளுடன் பிறக்கிறோம். மற்றவர்களை காட்டிலும் நம்மில் சிலர் தசைகளை நன்கு உருவாக்கிக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் தசைகள் இருக்கின்றன. சில பயிற்சிகள் செய்தால் நாமும்கூட அப்படி ஆகலாம். நாம் எந்த இடத்தில் தொடங்குகிறோம் என்பது முக்கியமில்லை என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. நாம் எல்லோருமே பரிவை வளர்த்துக் கொள்ள முடியும்'' என்று அவர் கூறினார்.

சில தலையீடுகளுக்கு சில விநாடிகளுக்கு மேல் தேவைப்படாது. உதாரணமாக, இன்னொருவரின் கண்ணோட்டத்தில் நீங்கள் இந்த உலகைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு விநாடிகள் அப்படி செய்யலாம். அல்லது மன நிறைவு மற்றும் அன்பு-கருணை மிகுந்த தியானம் செய்யலாம். முடக்கநிலை காலத்தில் நேரத்தை செலவிட சிறந்த வழியாக செல்லப் பிராணிகளை கவனிக்கலாம் மற்றும் உணர்வுப்பூர்வமான புத்தகங்கள் படிக்கலாம். இதனால் பரிவு அதிகரிக்கும்.

2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2019ல் இதே காலத்தைவிட, பிரிட்டன் மக்கள் 800 மில்லியன் பவுண்ட்கள் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர். மற்ற நாடுகளில் இருந்தும் இதே அளவுக்குத் தகவல்கள் வருகின்றன. ஏறத்தாழ அமெரிக்கர்களில் பாதிபேர் பக்கத்தில் வசிக்கும் வயதான அல்லது நோயுற்றவர்களை சமீபத்தில் சந்தித்துள்ளனர். ஜெர்மனியில், கொரோனா வைரஸ் காலத்தில் மக்களின் நெருக்கம் அதிகரித்தது. 2020 பிப்ரவரியில் மற்றவர்களைப் பற்றி கவலை இல்லை என சுமார் 41 சதவீதம் பேர் கூறியிருந்தனர். கோடையின் தொடக்கத்தில் இந்த கருத்து கூறியவர்கள் எண்ணிக்கை 19 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

மேலும் பெருந்தொற்று காலத்தில் கருணை மிகுந்து வெளிப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. குழந்தைகளை மகிழ்விக்க அமெரிக்கர்களும், ஆஸ்திரேலியர்களும் ஜன்னல்களில் கரடி பொம்மைகளை வைத்தனர். பிரான்ஸ் நாட்டில் மலர்க் கொத்து தயாரிப்பவரான முரியெல்லெ மராசெனாக் என்பவர் பெர்பிக்னானில் மருத்துவமனை அலுவலர்களின் கார்களில் 400 மலர் கொத்துகளை வைத்தார்.

அன்பான செயல்பாடு இருதயத்துக்கு இதம் அளிப்பதுடன், நீண்டகாலம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. ``பிறருடைய நலன் குறித்து கவனம் செலுத்துவதே உண்மையில் நல்ல பயனைத் தரும். அது உங்களுக்கு நல்லது'' என்று இனகாக்கி கூறுகிறார்.

இதை மனதில் கொண்டு, வரக் கூடிய மாதங்களில் அன்பு காட்டுவதற்கு சில நிமிடங்களை நாம் எல்லோரும் ஒதுக்குவோம்.

About the author