Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் நகம்; நோய்களுக்கான அறிகுறிகளை அறியலாம்

சிவா | Published on the sun Mar 05, 2023 10:13 am | 280 Views

அழகை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சொல்லும் நகத்தைப் பராமரிப்பது எப்படி, எந்த நகத்தில் எந்த அடையாளம் இருந்தால், அது எந்த நோயின் அறிகுறி என அறியலாம். நகத்தில் ஏற்படும் மாற்றங்களும் நோய் அறிகுறிகள் சிலவற்றையும் பார்ப்போம்...

நாம் டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது நகப்பூச்சுகளை பூசுவதும் என நமது மனநிலை நகங்களிலும் பிரதிபலிக்கும். நமது கை மற்றும் கால் விரல்களில் உள்ள நகம், உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று. விரலுக்கு கவசமாக இருக்கும் நகம், `ஆல்ஃபா கெரட்டின்' (Alpha-keratin) என்னும் புரதப் பொருளால் ஆனது. அழகை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சொல்லும் நகத்தைப் பராமரிப்பது எப்படி, எந்த நகத்தில் எந்த அடையாளம் இருந்தால், அது எந்த நோயின் அறிகுறி? பொதுநல மருத்துவர் தினகரன் வழங்கிய தகவல்கள்...


நகத்தின் அமைப்பு, அதன் பணிகள்!


கை, கால்களில் வளரும் நகத்தின் மிகப்பெரிய வேலையே, விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான். நகத்தில் பல பாகங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் கை மற்றும் கால்விரல் நகங்களுக்குப் பொதுவானவை. மேற்புறத்தில் பளிச்சென்றும் வழுவழுப்பாகவும் இருக்கும் பாகமே நகத்தின் உறுதியான பாகம். இதில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இல்லை.


வெளிநகத்துக்கு அடியில் உள்ள நகத் தளத்திலேயே திசுக்களால் ஆன ரத்த ஓட்டப் படுக்கை இருக்கிறது. நகத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதே இந்த படுக்கையின் பிரதானமான பணி. இந்த நகத்தளத்தைத் தாண்டி வளரும் நகப்பகுதியைத்தான் நாம், `வேண்டாம்’ என்று வெட்டிவிடுகிறோம். இது இறந்த நகப்பகுதியாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தப் பகுதியை வெட்டும்போது எந்த வலியும் ஏற்படாததுதான்.


நகமும் சதையும் சேரும் இடத்தில், சதைக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர். இந்தப் பகுதியில்தான் நகம் முளைக்கும். இந்தப் பகுதியை அழுத்தினால் வலி உண்டாகும். அதற்குக் காரணம், நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இருப்பது. நகத்தைச் சுற்றியிருப்பது, `U’ வடிவத் தோல் அமைப்பு (Nail fold).


நகத்தின் அடியில் காணப்படும் பிறை போன்ற அமைப்பு `லுனுலா’ (Lunula) என்றும், நகத்துடன் இணைந்த தோல் பகுதி `எபோனைச்சியம்’ (Eponychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள உள்தோல் `பெரியோனைசியம்’ (Perionychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள மேல்தோலுக்கு `க்யூட்டிக்கிள்’ (Cuticle) என்றும் பெயர்.


நகம் வளரும் காலம்


நான்கு முதல் எட்டு மாதங்களில் ஒரு நகம் முழுவதுமாக வளர்ச்சியடைந்துவிடும். கோடை காலத்தில் வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு, கை விரலில் மூன்று மில்லி மீட்டரும், கால் விரலில் ஒரு மில்லி மீட்டரும் நகம் வளரும்.


நக வளர்ச்சி குறைவுக்குக் காரணம்...


* தொடர்ந்து நோய்வாய்ப்படுதல்


* சில வகையான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல்


* வயது முதிர்ச்சி


* ஊட்டச்சத்து குறைபாடு


நகமும் நோயும்


50-க்கும் அதிகமான நோய்களுக்கு முக்கியமான அறிகுறி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான். அவற்றில் சில...


* நகம் நீல நிறமாக இருந்தால், சீரற்ற ரத்த ஓட்டமாக இருக்கலாம்.


* நகத்தின் மேல் பகுதியின் நிறம் மாறாமல் கீழ்ப்பகுதியில் மாறியிருந்தால், அது சிறுநீரக நோயாக இருக்கலாம்.


* நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் இருந்தால் `சிரோசிஸ்’ (Cirrhosis) என்னும் கல்லீரல் நோய் மற்றும் இதயச் செயலிழப்பு நோயாக இருக்கலாம்.


* கைவிரல் நகங்கள் மிகவும் வெண்மையாகவும், ஸ்பூன் போன்று குழி விழுந்தும் இருந்தால் இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம்.


* கைவிரல் நகங்கள் வீங்கியிருத்தல். இதை `கிளப்பிங் நெய்ல்ஸ்’ (Clubbing Nails) என்பார்கள். இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், குடல் நோய், கல்லீரல் நோய், பிறவிக் கோளாறு, இதய உறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு போன்ற நோய்களின் பிரதான அறிகுறி இது.


* லுனுலாவில் சிவப்புப் புள்ளிகள் இருந்தால் `சொரியாசிஸ்’ என்னும் சரும நோயாக இருக்கலாம்.


* நகம் மஞ்சள் நிறமாக இருந்தால், மஞ்சள் காமாலை, நுரையீரல் நோய், நிணநீர்த்தேக்க நோய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம்.


* நகத்தில் கறுப்புக்கோடுகள் இருந்தால் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.


கால்சியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற வைட்டமின் குறைபாடுகளாலும் நகத்தின் குறுக்கே வெள்ளைக்கோடுகள், வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்.


ஆரோக்கியமான நகங்களுக்கு...


* அடிக்கடி விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கழுவிய பின்னர் ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும்.


* நகம் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். இதனால், நகத்தில் உள்ள கிருமிகள் வாய்க்கும், வாயில் உள்ள கிருமிகள் நகத்துக்கும் செல்லும்.


* கெமிக்கலைப் பயன்படுத்தும்போது தகுந்த கையுறைகளை அணியவேண்டும்.


* நகப்பூச்சு பயன்படுத்துபவர்கள், அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.


நகம் மட்டும் கருத்துப்போக என்ன காரணம்? ஏதாவது நோயின் அறிகுறியா?'


'கால் கட்டைவிரல் கருத்து இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பூஞ்சைத் தாக்குதலாக இருக்கலாம். இது உங்களுக்கு வலி தராமல் இருந்தால், பயப்பட வேண்டியது இல்லை. மாறாக வலி ஏற்பட்டால், மருத்துவரை அணுகவேண்டும். மற்ற விரல்களும் கருப்பாக மாறும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கால் விரல் நகத்தில் அடிபட்டு இருந்தாலும், இதுபோலக் கருத்துப்போக வாய்ப்பு உள்ளது. மேலும், இறுக்கமாக ஷூ அணிதல், அடுத்தவர்களின் ஷூ மற்றும் சாக்ஸ் அணிதல், கால் நகங்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருத்தல், நகச்சாயம் பூசுதல், காலனி அணியாமல் பொதுக் கழிப்பிடம் செல்லுதல், மிக வெப்பமான இடத்தில் இருத்தல், அதிக நேரம் தண்ணீரில் இருத்தல், துண்டு, நகம் வெட்டும் கருவி போன்றவற்றைப் பகிர்தல் இவையெல்லாம் உங்கள் கால்விரல் நகம் கருத்துப்போகக் காரணமாக இருக்கலாம். இது மட்டும் இன்றி், சர்க்கரை நோய், உடல் பலவீனமாக இருப்பவர்


களுக்கும்கூட இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு உடனடித் தீர்வு இல்லை. நீண்ட நாட்கள் மாத்திரை மருந்து எடுத்து கொள்ளவும் நேரிடும். உதாரணமாக ஒரு வருடம்கூட ஆகலாம். உடனடித் தீர்வு தேவையெனில் நகத்தை ஆபரேஷன் மூலம் நீக்கிக்கொள்ளலாம். உடல் பலவீனமாக உள்ளவர்களுக்கு இது எளிதில் வர வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் பூஞ்சை (Fungal test) பரிசோதனை எடுத்து, அதற்கேற்ப மருத்துவரின் ஆலோசனை பெற்று சரிசெய்துகொள்ளுங்கள். ஆரம்பத்திலே நீங்கள் இதைச் சரி செய்தால் மட்டுமே மீண்டும் வராமல் தடுக்கலாம். இல்லை எனில் இந்தப் பிரச்னை மீண்டும் வரும். இதுபோன்ற பிரச்னை வராமல் தடுக்க நகத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.'


நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட எளிய வழிகள்! 


நகத்தை கடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம்’ என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்களே அதிகமானோர். இந்தப் பழக்கத்திலிருந்து மீள்வத்ற்கான எளிய வழிமுறைகள் இங்கே...


'நகத்தை கடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்றது... முதல்ல வாயிலருந்து கையை எடு...’ என்று பெரியவர்கள் சொவ்வதையும், 'அய்யோ... நான் வேணும்னு செய்யலை. டென்ஷன் ஆச்சுன்னா என்னை அறியாம நகத்தைக் கடிக்க ஆரம்பிச்சுடுறேன்...’ என்று பதில் வருவதையும் நாம் அவ்வப்போது பார்த்திருப்போம். நகம் கடிப்பவர்களில், 'எப்படி இந்தப் பழக்கத்தை விடறதுன்னே தெரியலை’ என்று புலம்புபவர்கள் பலர். 'நகத்தை கடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம்’ என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்களே அதிகமானோர். இந்தப் பழக்கத்திலிருந்து மீள்வத்ற்கான எளிய வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் சுந்தர் ராமன்.


''நகம் கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குடல்புழுப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உண்டு. சிலர் நகத்தோடு சேர்த்து அதன் சதைப் பகுதியையும் கடித்துவிடுவார்கள். அப்போது அந்தப் பகுதியில் ரத்தம் வந்தால், தொற்று அபாயம் அதிகம் இருக்கும் என எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அதிக கவனத்தோடு பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.


இந்தப் பழக்கமுள்ளவர்களின் நகங்கள், சரியான வளர்ச்சியின்றி ஷேப்லெஸ்ஸாக இருக்கும். காரணம், தொடர்ந்து நகத்தை கடித்துக்கொண்டே இருந்தால், அதைச் சுற்றியுள்ள நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடும். பல் தொடர்பான பிரச்னைகள்


ஏற்படும். குழந்தைக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறதென்றால், பல் வளர்வதிலேயே சிக்கல் ஏற்படும். 'தொடர்ந்து நகம் கடிப்பது, Obsessive-compulsive disorder (OCD) எனப்படும் எண்ண சுழற்சி நோயின் அறிகுறியாக இருக்கும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பெரும்பாலானோர் அதன் தீமைகளை அறிந்தேவைத்திருக்கிறார்கள். இருந்தாலும், அனிச்சையாக இதைச் செய்துவிடுவார்கள். பதற்றம், கோபம், கவலை, யோசனை போன்ற சூழல்களில் நகம் கடிப்பது இவர்களுக்கு முக்கியமான வேலையாக இருக்கும். இந்தப் பழக்கத்தை 'ஆனிசோபேஜியா’ 'Onychophagia’ எனக் குறிப்பிடுகிறது மருத்துவம்.


இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகள்...


* ஒரு செயலில் ஈடுபடும்போது அதை அதிக கவனத்தோடு செய்யவேண்டியது அவசியம். அதே நேரத்தில், தன்னிலை மறக்கும் அளவுக்கு எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம்.


* நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.


* வேப்பெண்ணையைப் போன்ற கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தேய்த்துக்கொள்ளளுங்கள். இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி, நகத்தின் மீதான உங்கள் கவனத்தை அதிகப்படுத்தும்; அந்தப் பிரச்னையிலிருந்து வெளிவர உதவும்.


* வாய்ப்பிருந்தால், வாரத்துக்கு ஒருமுறை நகப் பராமரிப்பு 'மேனிக்யூர்' (Manicure) செய்துகொள்ளலாம். முடியாதவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு விரல்களில் பேண்டேஜ் மாதிரி எதையாவது சுற்றிக்கொள்ளலாம்.


* பதற்றமான சூழலில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, கை கழுவுவது, வாய் கொப்பளிப்பது, சாப்பிடுவது போன்றவை. கை மற்றும் வாய் தொடர்பான பயிற்சிகளாக இவை இருக்க வேண்டும்.


* கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு... என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.


* பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருக்கும். ஒரே நாளில் இந்தப் பழக்கத்தை முற்றிலுமாக விட முயற்சிப்பது வீண். நகம் கடிப்பதை ஒவ்வொரு விரலாக குறைத்துக்கொண்டு வரவும். முதலில், கட்டைவிரல் நகத்தை கடிக்காமல் இருங்கள். அதைத் தொடர்ந்து சுண்டு விரல், அடுத்து மோதிர விரல்... இப்படி முயற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.


* மன அழுத்தத்தையும், இறுக்கமான சூழலையும் உணரும் குழந்தைகள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகக்கூடும். பெற்றோர் அவர்களோடு அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்கங்களையும், நகம் கடிப்பதால் ஏற்படும் தீமைகளையும் சொல்லிக் கொடுக்கலாம். நகத்தைக் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதற்கு மாற்றாக வேறென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.


* உடலும் மனதும் சேர்ந்து செயல்படுவது மாதிரியான வேலைகளைச் செய்யவும். மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கவும். எண்ணம் மற்றும் உளவியல் பிரச்னைகளைச் சரிசெய்ய இது உதவும். குழந்தைகள் எனும் பட்சத்தில் பெற்றோர் அவர்களை தினமும் மாலை நேரத்தில் வெளியில் விளையாட அனுமதிக்கவும்.


ஒருவரின் நகத்தைவைத்தே அவருக்கு உடலில் என்ன பிரச்னை இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட நகத்தைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்! என்ன செய்தும் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பவர்கள், தயங்காமல் சரும மருத்துவரையும், மனநல மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெறலாம்.’’

About the author