Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

கிளி ஜோதிடம்

சிவா | Published on the sat Jan 28, 2023 5:03 am | 1369 Views

கிளி ஜோதிடம்


கிளி ஜோதிடம் என்பது கிளியை வைத்து ஜோதிடம் சொல்லும் முறை ஆகும். நடமாடும் சோதிடக் கலையாக இது விளங்கி வருகிறது. கிளி ஜோதிடம் என்பது இலக்கிய வழக்காக இருந்தாலும் ''கிளி ஜோஸ்யம்'' என்பதே பெரு வழக்காக உள்ளது. கிளி ஜோதிடம் பற்றிய நம்பிக்கையானது நாட்டுப் புற மக்களிடத்தில் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் இன்றளவும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதற்குக் காரணம் கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களுக்குப் புலம் பெயர்ந்து வாழ்க்கையை மேற்கொண்டாலும் அவர்களின் மனதில் உள்ள நம்பிக்கைகள் மாறாமல் இருந்து வருவதே எனலாம். ஜோதிடம் பார்ப்போருக்கான பலன்கள் கிளி எடுத்துக் கொடுக்கும் அட்டையின் உள்ளே உள்ள தெய்வப்படங்களை வைத்தே கூறப்படுவதால் இச் சோதிடத்தில் தெய்வ நம்பிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இக்கட்டுரையில் கிளி ஜோதிடம் நிகழ்த்தப்படும்முறை. ஜோதிடம் தொடர்பான நம்பிக்கைகள். இக்கலை இன்றளவும் நிலை பெற்று வருவதற்கான காரணங்கள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் களப்பணித் தரவுகளின் அடிப்படையில் முன் வைக்கப்படுகின்றன.


கிளியின் மாண்புகள்


கிளி சோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கிளியின் மாண்புகள் பல்வேறு இலக்கியங்களிலும் புராணங்களிலும் தொன்று தொட்டுச் சிறப்பித்துக் கூறப்பட்டு வந்துள்ளன. அழகர்கிள்ளை விடு தூ தில் கிளியானது '' அரி, பச்சைக்குதிரை, ஞானதீபம். பார்வதி, தந்தை, கீரம், சுகரூபம், வன்னி, பச்சைப்பிள்ளை, சுகம், கிள்ளை அவந்திகை'' என்ற பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றனது. பறவைகள் பல வண்ணங்களில் இருந்தாலும் அவை அனைத்தும் கிளியின் ஐந்து வண்ணங்களுக்குள் அடக்கம் என்பர். கிளி மொழி, கிளி கடித்த எச்சில் பழம், இதன் வளைந்த சிவந்த மூக்கு, மேனி அழகு இவை அனைவரையும் கவர்வதால் கிளியைப் பெண்ணிற்கு ஒப்புமையாக கூறுவதும் உண்டு. கிளியின் பசுமை நிறத்தையே திருமாலும் உமையும் கொண்டுள்ளதாக கூறுவர்.


கிளியின் வகைள் தினை கவரும் செய்திகள் குறிஞ்சித் தினை பாடல்களில் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. கிள்ளைப்பத்தில் ''பசிய நிறமுடைமையால் பைம்புறச்சிறுகிளி எனவும், சிவந்த வாயுடைமையால் செவ்வாய்ப் பசுங்கிளி எனவும், தினை கவரும் இயல்புடைமையால் தினை பாய் கிள்ளை'' எனவும் கபிலரால் வர்ணிக்கப்பட்டுள்ளன.


பழங்காலப் புலவர்கள் முதல் தற்காலக் கவிஞர்கள் வரை அனைவரும் கிளியைத் தங்கள் எழுத்தில் வடிக்கத் தவறியதில்லை என்னும் அளவிற்குக் கிளி எவரின் இதயத்தையும் எளிதில் கவரும் காதல் பறவையாகவே உலா வந்து கொண்டிருக்கிறது. இதையறிந்தே சோதிடர்களும் கிளியைப் சோதிடத்தில் பயன்படுத்தத் தலைப்பட்டனர் எனக் கூறலாம்.


கிளி பற்றிய தொன்மச் செய்திகள்


விக்கிரமாதித்தன் கதையின் அவரஞ்சி பற்றிய செய்தியில் கிளி தீர்ப்புக் கூறுவதாகக் கதை அமைந்துள்ளது. மேலும் ''தஞ்சாவூரை ஆண்ட கருடதேவ மகாராசா திடீரெனப் பார்வை இழந்துவிட அவருக்கு மீண்டும் பார்வை கொடுப்பதற்காக, அருணகிரி நாதர் ''அட்டமாசித்தி'' (எந்த உருவமும் எடுக்கக் கூடிய) சக்தி மூலம் கிளி உருவெடுத்து தேவலோகத்திற்குச் சென்று பாரிஜாத மலரைப் பறித்துக் கொண்டு வந்து மீண்டும் பார்வை பெறச் செய்தார். இதற்கிடையில் மந்திரவாதிகளால் அருணகிரிநாதரின் உடல் எரிக்கப்பட்டு விடுகிறது. அன்று முதல் கிளி உருவிலேயே காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன், அபிராமி அம்மன் போன்ற சக்தி வடிவம் பெற்ற தெய்வங்களின் தோள் மீது இருந்து வருகிறார். கிளி சோதிடத்திலும் அவரே அட்டையை எடுத்துக் கொடுத்து வருகின்றார் என்றும் கிளி சோதிடர்கள் கிளி பற்றிய தங்களின் நம்பிக்கையை தெரிவிக்கின்றனர். மேலும் முருகப் பெருமானை வணங்குபவர்களுக்குக் கூண்டில் நின்றும் சாட்சி சொல்வார். பாதை தெரியாமல் நடுக்காட்டில் தவிப்பவர்களுக்கு கிளி உருவிலேயே வந்து பாதை காட்டுவார் என்றும் சரஸ்வதி தேவி கிளி உருவிலேயே நான்கு வேதங்களையும் முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும், ரிசிகளுக்கும் போதித்ததாகவும் கூறுகின்றனர். மேற்கூறிய மரபுச் சொற்களின் அடிப்படையில் கிளி பற்றிய தொன்மைப் பண்புகளை அறியலாம்.


கிளியை சோதிடத்தில் பழக்கும் முறை


முன்னூறுக்கும் மேற்பட்ட கிளி வகைகள் உலகெங்கும் காணப்பட்டாலும் கூண்டுப் பறவையாக வளர்க்கப்படும் பச்சைக் கிளிகளே (குறைந்தது இரண்டு கிளிகள்) சோதிடத்திற்குப் பழக்கப்படுத்தப்படுகின்றன. கிளிக் குஞ்சுகளை மரப் பொந்து, தோப்பு ஆகிய இடங்களிலிருந்து எடுத்து வந்து சோதிடத்தில் பயன்படுத்தும் அட்டைகளை அலகால் கவ்வி எடுத்துக் கொடுக்கும் பயிற்சியைக் சோதிடர்கள் மேற்கொள்கின்றனர். கிளிகள் அட்டைகளைத் தேர்ந்தெடுப்பதற்குச் சில மறைமுகச் சைகைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மற்றொரு கிளியானது முதல் கிளியின் செயல்களைப் பார்த்துப் பார்த்து தானே பழகிக் கொள்கிறது. குஞ்சுக் கிளியைப் பழக்க ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சோதிடர்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர்.


கிளியானது கூண்டுக் கதவைத் திறந்தவுடன் வெளியில் வந்து அடுக்கி வைக்கப்பட்ட அல்லது வரிசையாகப் பரப்பி வைக்கப்பட்ட அட்டைக்குள் ஒன்றை சோதிடரின் சைகையின்படி எடுத்துக் கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டுக்குள் செல்லும்படி பழக்கப்படுத்தப்படுகிறது. சில இடங்களில் கிளி அட்டையை எடுத்துக் கொடுப்பதற்கு முன்பே அதன் முன்னால் நாணயத்தைப் போட்டவுடன் அதை உணர்ந்து அட்டையை எடுத்துக் கொடுக்கிறது. ''யானையின் துதிக்கையில் காசை வைத்தவுடன் துதிக்கையால் தலையில் ஆசிர்வதிப்பது போல்'' கிளியும் சோதிடர்களால் பழக்கப்படுத்தப்படுகிறது.


தெய்வப்படங்களுக்கான நம்பிக்கைகள்


கிளி சோதிடத்தில் அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற 27 நட்சத்திரங்களின் அடிப்படையில் 27 தெய்வப் படங்களடங்கிய அட்டைகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. இத் தெய்வங்களை அடிப்படையாக வைத்தே சோதிடப் பலன்கள் சோதிடரால் எடுத்துரைக்கப்படுகின்றன.


1.விநாயகர் 2. சிவபெருமான் 3. முருகன் வள்ளி தெய்வானை 4. கண்ணன் 5. திருப்பதி வெங்கடாஜலபதி 6. ஐயப்பன் 7. மதுரைவீரன் 8. ஐயனார் 9. ராமன் அரியனையில் வீற்றிருத்தல் 10. நாகூர் ஆண்டவர் 11. மதுரை மீனாட்சியம்மன் 12. காஞ்சி காமாட்சியம்மன் 13. சமயபுர மாரியம்மன் 14. முத்துமாரியம்மன் 15. சரஸ்வதி 16. மகாலட்சுமி 17. ராஜகாளியம்மன் 18. அபிராமி அம்மன் 19. வேளாங்கன்னி மாதா 20. முருகன் (ஆண்டிக் கோலம்) 21. ராமன் žதை வனவாசம் 22. கருடன் (கழுகு) 23. நாகதேவி (பாம்பு) 24. சனி பகவான் (காகம்) 25. காளியம்மன் தலைவிரிக்கோலம் 26. ஆஞ்சனேயர் 27. எமன் தூதன். மேற்கூறப்பட்ட படங்களில் ''வேளாங்கன்னி மாதா'' வரை உள்ள முதல் 19 படங்கள் நன்மை பயக்கும் தெய்வங்கள் என்றும் மீதமுள்ள படங்கள் பிரச்சனைக்குக் காரணமானவை என்றும் கூறப்படுகின்றது.


விநாயகர் வந்தால் தொழில் தொடங்கலாம், திருப்பதி வெங்கடாஜலபதி வந்தால் செல்வச் செழிப்பு, முருகன் வள்ளி தெய்வானை வந்தால் இரு மனைவிகள் அமைவர். காகம் வந்தால் சனி தோசம், பாம்பு வந்தால் நாக தோசம், கருடன் வந்தால் கருட தோசம், முருகன் ஆண்டிக் கோலத்தில் வந்தால் செல்வத்தை இழப்பர், ராமன் žதை வனவாசம் வந்தால் பதவியை இழப்பர் என்றும் படங்களுக்குரிய பலன்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. தீய பலன்களைப் போக்கும் பரிகார முறைகளும் சோதிடர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.


கிளி ஜோதிடம் சொல்லும் முறை


கிளி சோதிடர், ஜோதிடம் கேட்போருடைய வயது, கல்வி, இருப்பிடம் தொழில் ஆகியவை பற்றிக் கேட்டறிந்து பின் கிளி எடுத்துக் கொடுக்கும் தெய்வப்படங்களுக்கான சோதிடப் பலன்களை விரித்துரைக்கின்றார். மேலும், அட்டையில் இடம் பெற்றுள்ள தெய்வப்படங்களுக்கான விளக்கங்களை ராசிபலன் தொடர்பான நூல்களின் உதவியுடனும் தெளிவுபடுத்துகின்றார். சில சோதிடர்கள் கோடாங்கி (பெரிய உடுக்கு) என்ற இசைக் கருவியைப் பயன்படுத்திப் பாடல் வடிவிலும் பலன்களைச் கூறுகின்றனர். முத்துக் குலுக்கிப் பார்த்து அதனடிப்படையில் விரிவான விளக்கமளிக்கின்றனர். இங்கு, கிளி சோதிடர் ஒரு உளவியல் மருத்துவராகச் செயல்பட்டு ஜோதிடம் பார்ப்போரின் மன உணர்வுகள், உளைச்சல்களுக்குச் சிகிச்சையளிக்கின்றார் என்று கூறினால் மிகையாகாது.

கிளி சோதிடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள்


கிளி சோதிடத்தில் கிளிக்கூண்டு, அட்டைகள், ராசிபலன் கூறும் நூல்கள், கோடாங்கி (உடுக்கு) சோவிகள் போன்ற பொருட்கள் சோதிடரால் பயன்படுத்தப்படுகின்றன.


கிளிக் கூண்டு


கிளிக் கூண்டு இரண்டு கிளிகள் தங்கும் வகையில் இரு அறைகளுடன் மரம் அல்லது இரும்புத் தகட்டினால் செய்யப்பட்டதாக உள்ளது. அதனுள் இரு நீர்க் கின்னங்களும் வைக்கப்பட்டுள்ளன. கிளிகள் வெளியே வந்து அட்டையை எடுத்துக் கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே செல்வதற்கு வசதியாக திறப்பும் அத் திறப்பு காற்று வசதிக்காக சாளரம் போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கிளிக் கூண்டைத் தூக்கிச் செல்ல மேல் பகுதியில் கைப்பிடி போன்ற அமைப்பும் அதன் அருகில் அட்டைகள், நுல்கள், சோவிகள், விரிப்பான் இவற்றை வைப்பதற்கு ஓர் அறையும் உள்ளது


அட்டைகள்


கிளி சோதிடத்தில் பயன்படுத்தப்படும் தெய்வப் படங்களைப் பாதுகாப்பதற்கு எளிதில் கிழிந்துவிடாத கெட்டியான அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அட்டையில் மடித்து வைக்கப்படும் தெய்வப்படங்களை எளிதில் எடுப்பதற்கு இரு பக்கங்கள் திறவையாக உள்ளன. இவ்வட்டைகள் பத்தாண்டுகள் வரை சிதையாமல் சோதிடத்திற்குப் பயன்படுகின்றன. அட்டையின் மேல் பகுதியில் ஒன்று, இரண்டு, மூன்று என்ற வரிசை எண்கள் இடப்பட்டுள்ளன. இவ்வெண்கள் எந்த அட்டையில் எந்த தெய்வம் வைக்கப்பட்டுள்ளது என்பதை சோதிடர் அறிந்து கொள்ள உதவுகின்றன.


நூல்கள்


கிளி சோதிடப் பலன்களைத் தெரிவிக்க ''அகஸ்தியர் ஆருடம்'' அல்லிப் பூ ராசிப் பொருத்தம், ''ராசி பலன்'' ஆகிய நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அட்டைகளில் உள்ள படங்களுக்கேற்ப நூல்களில் உள்ள விளக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.


கோடாங்கி (உடுக்கை)


கோடாங்கி எனப்படும் பெரிய உடுக்கானது கிளி சோதிடத்தில் சோதிடர்களால் பயன்படுத்தப்படுகின்றது. தொன்மையான இசைக்கருவியான இது சிவபெருமானுக்குரியதாகக் கருதப்படுகிறது. சோதிடர் உடுக்கின் மணிக்கயிற்றை இடக்கையில் இறுகிப்பிடித்து வலது கை விரல்களால் வட்ட முகப்பில் தட்டி ஓசை எழுப்பிப் பாடல் வரிகளாக சோதிடப் பலன்களை விளக்குகின்றார். உடுக்கைப் பயன்படுத்தும் சோதிடரிடம் கேட்போர் அதிகம் கூடுவதைக் களப்பணியில் அறிய முடிந்தது.


சோவிகள்


ஒரே அளவுடைய வெண்மை நிறமுடைய பனிரெண்டு சோவிகளை சோதிடர் கையால் குலுக்கித் தரையில் போட்டு அவை விழும் தன்மையை வைத்துப் பலன்களைக் கூறுகின்றார். சோவிகளை மூன்று முறை போட்டுப் பார்த்து மூன்றாவது முறையில் விழும் தன்மையை வைத்துப் பலன்களைப் நூல்களின் உதவியுடன் விளக்குகின்றார். இதை முத்துப் போட்டுப் பார்த்தல் என்று கூறுகின்றனர்.


பிற பொருட்கள்


விரிப்பான்


ஜோதிடம் பார்க்கும் இடத்தில் கிளிக் கூண்டினை வைப்பதற்கு ஒரு விரிப்பானும், சோதிடர் அமர்வதற்கும், கேட்போர் அமர்வதற்கும் எனத் தனித்தனி விரிப்பான்களும் பயன்படுத்தப் படுகின்றன. மேலும் குடை, தெய்வப்படங்கள், விளம்பரப் பலகை, உணவுப் பொட்டலம், பத்தி, சூடம், குங்குமம், எலுமிச்சம் பழம், திருநீறு, மாற்று உடைகள், துண்டு போன்ற பெருட்களும் சோதிடரால் ஜோதிடம் சொல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.


கிளி ஜோதிடம் பார்க்கப்படும் இடங்கள்


மருத்துவமனை, நீதி மன்றங்கள், கோவில்கள், சந்தைக் கூடும் இடங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள், பேருந்து நிலையம் என்று மக்கள் கூடும் இடங்களில் கிளி சோதிடர்கள் பரவலாகக் காணப்படுகின்றனர். மருத்துமனைகளில் நோயாளிகள் சேர்க்கப்பட்டிருக்கும் பொழுது அவர்களின் உறவினர்களாலும், நீதி மன்றங்களில் வழக்கு நடைபெறும் பொழுது தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதை அறியவும், மக்கள் கிளி சோதிடரை நாடுகின்றனர். சோதிடர்கள் கிராமப் புறங்களில் வீடு வீடாகவும், தெருத்தெருவாகவும் சென்று ஜோதிடம் கூறுகின்றனர். நகர்ப்புறங்களில் முக்கிய இடங்களில் நிரந்தரமாக அமர்ந்து ஜோதிடம் கூறும் முறை காணப்படுகின்றது.


இன்றளவும் நிலைபெறுவதற்கான காரணங்கள்


சைவம், வைணவன் என்ற இரு சமயங்களும் பிரசித்தி பெற்றிருந்த காலத்தில் தங்கள் கடவுளரின் தோளில் (வைணவம் - ஆண்டாள், சைவம் - மீனாட்சியம்மன்) கிளி இருப்பதால் தங்கள் எதிர்காலத்தை தெய்வமே கிளி உருவில் வந்து கூறுவதாக மக்கள் நம்புகின்றனர்.


கனத்த இதயங்களுக்குச் சுமை தாங்கியாகக் கிளி ஜோதிடம் அமைகிறது. மனிதன் மன வேதனையை குழப்பத்தை கவலையைத் தீர்த்துக் கொள்ள கிளி சோதிடனை நாடுகிறான். எதிர்காலம் இருண்டதாகத் தெரியும் நிலையிலும், வாழ்க்கைப் பாதை அடைப்பட்டிருப்பது போலத் தோன்றும் பொழுதும், செய்வதறியாது திகைக்கும் வேளையிலும், எதிர்கால நிலை பற்றி அறிய கிளி சோதிடனை நாடி உள்ளத் தெளிவு பெற முற்படுகிறான்.


சென்னையில் சவேரா ஓட்டலில் ஒரு பகுதியில் ''மால்குடிஸ் உணவகம் உள்ளது. அங்கு உணவு உண்ண வருபவர்களுக்கு ''கிளி ஜோதிடம் இலவசம்'' என்ற விளம்பரப்பலகை எழுதப்பட்டு தின்னையில் ஒரு கிளி சோதிடரை நிர்வாகத்தினர் அமர்த்தியுள்ளனர்.


கிளி சோதிடர்கள் பிற சோதிட முறைகளையும் கற்று வல்லவர்களாகத் திகழ்வதால் கேட்போருக்கு ஒரே இடத்தில் பல பலன்கள் அறியும் வாய்ப்பு ஏற்படுகின்றது. சோதிடருக்கும் வருமானமும் அதிகரிக்கின்றது.


கிளி ஜோதிடம் உயிரோட்டத்துடன் காணப்படுவதற்குக் காரணம் சோதிடக் குறிப்பேட்டில் உள்ள விசித்திரமான அட்டைகளும், மறைவான குறிப்புகளும், அறிந்த படங்களும், எளிதில் அறியப்படாத கணிப்பும் ஆகும். இவையனைத்தும் கிளி சோதிடத்திற்கு ஓர் அறிவியல் தோற்றத்தைத் தருகின்றன.


கிளி ஜோதிடம் மனதிற்கு திருப்தி தருவதால் வரவேற்கப்படாத உண்மைகள் கூட ஏற்றுக் கொள்ளப்பட்டு கனத்த இதயத்திற்கு இதமளிக்கின்றது. ஒரு பக்கம் சாட்டிலைட், இண்டர்நெட் என்று அறிவியல் வளர்ந்து கொண்டே இருந்தாலும் மற்றொரு பக்கம் கிளி சொல்வதைக் கேட்டு தன் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் கூட்டம் பெருகிக் கொண்டுதான் வருகின்றது. சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் மட்டுமல்லாது பல உலக நாடுகளிலும் கிளி ஜோதிடம் நிலைபெற்ற ஒன்றாய் இருந்து வருகின்றது.


கணிப்பொறி ஜோதிடம், எண் கணித ஜோதிடம் போன்ற புதிய சோதிட முறைகளின் ஆதிக்கம் தற்பொழுது காணப்பாட்டலும், மனிதனின் தற்கால நிவாரணியாக விளங்கும் கிளி சோதிடமானது தன் மதிப்பை இழக்காமல் இன்றும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டுதான் வருகின்றது. மூக்கு உள்ளவரை சளி இருக்கும் என்பதைப் போல மனிதன் இருக்கும் வரை பிரச்சனைகளும் இருக்கும். பிரச்சனைகள் உள்ளவரை கிளி சோதிடமும் தொடரும்.

About the author