Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

விநாச காலே விபரீத புத்தி

Admin | Published on the thu Jan 26, 2023 2:29 am | 462 Views

காலம் நம்மளுக்கு கெடுதலா போயிடுத்துன்னால் நம்ம புத்தி கெட்டுப் போறதோல்லையோ? திருதராஷ்டிரன் படிக்காதவனா, துரியோதனன் படிக்காதவனா? யாருக்குப் படிப்பில்லை? கர்ணன் படிப்பறிவில்லாதவனா? அவனுக்கு என்ன புத்திக் கூர்மை கிடையாதா? நேர்மை தெரியாதா? எல்லாம் தெரிந்தவர்கள். ஆனால் காலம் விநாச காலம் ஏற்பட்டுடறதா, அப்ப நம்ம புத்தி விபரீதமாப் போய்டறதா. அந்த புத்தியை எப்படி மத்தப்பேரும் கெடுக்கறா, நாம அதைத் தாண்டி எப்படி சமாளிச்சுடலாம், ஆனா சமாளிக்க முடியாம எப்படிக் கெட்டுப் போய்டறோம், அப்படிங்கறதை ஒரு ஸ்லோகத்தாலே விதுரர் ரொம்ப அழகா விளக்கறார்.


यस्मै देवा: प्रयच्छन्ति पुरुषाय पराभवं बुद्दिम् ।

तस्य अपकरिशन्ति चोवाचीणानि पश्यति ॥

[ யஸ்மை தேவாஹா ப்ரயச்சந்தி புருஷாய பராபவம் |

புத்திம் தஸ்ய அபகரிஷந்தி சோவாசீநாநி பஸ்யதி || ]


(ஸ்ரீவிதுரநீதி)


ஒருத்தன் தாழ்ந்த கர்மங்களிலேயே புத்தியைச் செலுத்தறான். உயர்ந்த செயல்களில் புத்தியைச் செலுத்தறது இல்லை. இதுக்கு என்ன காரணமாக இருக்கும்? தேவர்கள் இப்படித் தூண்டி இருக்கிறார்கள். அவா பார்த்து, இவனைத் தாழ்த்திடனும், இவன் கெட்டுப் போய்டனும், அப்படின்னு மனசு வைச்சுட்டார்களென்னால், இதைப் போல அவனைத் தூண்டி விட்டுடறா. அப்போ அவன் தாழ்ந்த செயல்களில்தான் புத்தியைச் செலுத்தறான். அப்படின்னு இந்த ஸ்லோகத்திலே சொல்றார்.


நமக்கு என்ன தோணும்ன்னா, தேவர்கள் கூடவா நம்மளைக் கெடுப்பா? நமக்கு நல்லது சொல்லி நம்மளைத் திருத்த வேண்டாமோ? என்று தோணும். திருத்துவார்கள். இப்போ பகவானே என்ன பண்றார்? அவர் ரொம்ப உதாசீநநாக இருப்பார். உதாசீநன்னா, நாம செய்யற ஒன்னொன்னிலேயும் அவர் குறுக்க வரவேமாட்டார். நமக்கு வேண்டிய எல்லாத்தையும் குடுத்துடறார். சரீரத்தைக் குடுத்து, ஞானத்தைக் குடுத்து, நல்லது தீயது விவேகித்துத் தெரிஞ்சுக்கறதுக்கு சாஸ்திரத்தைக் குடுத்து, ஆழ்வார் ஆச்சார்யார்களைப் பிறப்பித்து, அவர்களை உபதேசிக்க வைச்சுட்டு, இத்தனை நல்லதும் பண்ணிடுவார். ஆனா அதுக்கு அப்புறம் நீயா முடிவெடுத்துக்கோன்னு விட்டுடுவார். அவர் குறுக்க குறுக்க, ஒரு ஆட்டு மந்தையை ஓட்டிண்டு போறவனாட்டம், இப்படிப் போ, அப்படிப் போ, அப்படின்னு கொம்பைப் போடறது, கயிற்றைப் போடறது ஏதும் பண்ணமாட்டார். அந்தந்த ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்திரியம் இருக்கு, அதைப் பயன்படுத்து, உனக்கு ஞானம் குடுத்துருக்கேன், அந்த ஞானத்தை வச்சிண்டு, சாஸ்திரப் புஸ்தகத்தைப் படிச்சு, முன்னுக்கு வந்துக்கோ, அப்படின்னு பெருமான் நம்மிடத்தே விட்டுடுவார்.


ஆனா அதுக்கு மேலே என்ன பண்றார்ன்னால், நாம ஓரோரு தடவையும் முதல்ல ஒரு செயல்ல ஈடுபடும் போது, நாமா முடிவெடுக்கனும். அந்த முடிவை எது தெரியுமா எடுக்க வைக்கும்? ஒரு செயலை ஆரம்பிக்கறச்சே பெருமான் உதாசீநநா இருந்துருவார். அவர் அதுல குறுக்க வரவே மாட்டார். ஆனா அந்த சமயத்திலே நாமே முடிவெடுப்போம். நமக்கு ஒரு சுதந்திரம் இருக்கு. எது தாக்குதலை ஏற்படுத்தி, அந்த முடிவை எடுக்க வைக்கும்ன்னால், நாம் பழங்காலமா சேர்த்து வைச்சிருக்கற கர்மங்கள். அநாதி காலமாக கர்மங்களைச் சேர்த்துச் சேர்த்து வைச்சிருக்கோம். அதனுடைய தாக்கம் நம்மிடத்தில இருக்கும். அந்தக் கர்மங்களாலே, ஏற்கனவே தீய கர்மங்கள் அதிகமா இருக்கறவன் தீய செயலில் ஈடுபடுகிறான். நல்ல கர்மங்கள் அதிகமா இருக்கறவன் நல்ல செயலில் ஈடுபடுகிறான். அந்த ஈடுபாடைத் தொடங்கற முதல் நிமிஷம் இருக்கு பாருங்கோ, அந்த நிமிஷத்துல பெருமான் உதாசீநநா இருந்துருவார். அவர் ஏதும் குறுக்க வரவே மாட்டார். Indifferent, Unconcerned அப்படிங்கறாளோல்லையோ?, அதைப்போல அவர் Concerned ஆகவே இருக்க மாட்டார். இதைச் செய்ன்னு சொல்ல மாட்டார், இதைச் செய்யாதேன்னும் சொல்ல மாட்டார்.


ஆனால் அதுக்கு அடுத்த நிமிஷம் அனுமதிப்பார். நாம சரியான பாதையில நடக்கறதுக்குத் தேர்ந்தெடுத்துட்டோம்ன்னால், அதுல நடக்கறதுக்கு அனுமதிப்பார். நாம தப்பான பாதையைத் தேர்ந்தெடுத்தோம்னால், அதையும் அனுமதிப்பார். அப்ப நமக்கு ஒரு சந்தேகம் வந்துரும். ஸ்வாமி, முதல் நிமிஷம் உதாசீநநா இருந்துட்டார், ஒன்னும் பண்ணாம இருந்துட்டார், சரி. அடுத்த நிமிஷமாவது இவர் தடுக்கலாமோல்லையோ? தப்புப் பண்றேன்ங்கறது அவருக்குத் தெரியுமோல்லையோ? அது தெரியவும் தெரியும், தப்பைத் தடுக்கற சக்தியும் பகவானிடத்திலே இருக்கு. அப்போ தேவர்களெல்லாம் தடுத்து இருக்கலாமே? பெருமானே அதைத் தடுத்திருக்கலாமே? எதற்காக அனுமதிக்கிறார்?


ஏன் அனுமதிக்கிறார்ன்னால், இப்போ முதல் நிமிஷம் நாம முடிவெடுத்த அப்புறம், பெருமாள் அனுமதிக்காமல் மாத்திக்கோ, மாத்திக்கோன்னு சொன்னால், நம்ம புத்தி அதை ஏத்துக்கவே ஏத்துக்காது. அப்படின்னா பெருமாள் என்னை ஒரு பொருளாகவே நினைச்சிருக்கலாமோல்லையோ? ஒரு கூடையா நினைச்சிருக்கலாம், முறமா நினைச்சிருக்கலாம், கடிகாரமா நினைச்சிருக்கலாம். ஏன்னா நாம சொன்னபடிதான் அது நடக்கும். கடிகாரத்துக்கும், கூடைக்கும், முறத்துக்கும், புத்தகத்துக்கும் அறிவு கிடையாது. நமக்கு அறிவு குடுத்துருக்கார் பகவான். அப்போ நமக்கு அறிவு குடுத்துருக்கார்ன்னு அவரே மதிக்கிறார். ஆனால் அந்த மதிப்பெல்லாம் எனக்கு வேண்டாம், என்னை கடிகாரமாட்டமே, பொருளாட்டமே நினைச்சுக்கோன்னால்? அது ஆகாது அல்லவா? அப்போ பெருமாள் நமக்கு அறிவு குடுத்துட்டு, அதை மதித்து, நான் அதை அனுமதிக்கிறேன், நீ தப்பான வழி போக ஆரம்பிச்சியா, போ. நல்ல வழிக்குப் போக ஆரம்பிச்சியா, போ. அப்ப அந்த இடத்தில ஒரு சந்தேகம் வரும். ஸ்வாமி, அனுமதிக்கிறார்ன்னு சொன்னாலே அவர்தானே தூண்டறார்ன்னு அர்த்தம்? அவர் தூண்டறதே இல்லை. அவர் அனுமதிக்கிறார். அனுமதின்னா என்னன்னு பாருங்கோ. ஏற்கனவே ஒருத்தர் முடிவெடுத்து ஒரு செயலை ஆரம்பிச்சுட்டார், சரி மேற்கொண்டு தொடரட்டும்ன்னு நான் ஒத்துக்கறேன். இதுதான் அனுமதி. செய்யாத ஒன்றைச் செய், அப்படின்னு தூண்டுவது அனுமதியல்ல. அது துவக்கி வைப்பது. தூண்டுவதை பெருமான் செய்யவே இல்லை, ஆனால் வெறுமே அனுமதித்தார்.


அப்போ முதல் நிமிஷத்துல உதாசீநநா இருந்துடறார், அடுத்த நிமிஷத்தில் அனுமதிக்கிறார். அனுமதிக்கறச்சே குற்றம் உண்டோன்னு தோணும், தடுத்துருக்கலாமேன்னுட்டு. தடுக்க மாட்டார், மேலும் அவர் தூண்டியே விடலை. நம்ம முடிவெடுத்ததை, சரி, பண்ணுன்னார். அப்பவும் ஒரு சந்தேகம் வரும். ஸ்வாமி, எப்படியாவது அவர் புகுந்து தடுத்திருக்கலாமோல்லையோன்னா, தடுக்கறார் பாருங்கோ. வேதங்களைக் குடுத்து இந்தப் பாதையே தப்புன்னு சொல்றார். ஆழ்வார்களைப் பிறப்பித்து இந்தப் பாதை தப்புன்னு சொல்றார். அப்போ வேதங்களெல்லாம் குடுத்து, இதிகாச புராணங்களெல்லாம் குடுத்து, அருளிச் செயல்களைக் குடுத்து, இந்தப் பாதையில போகாதே, இது தப்புன்னு தடுத்திருக்காரே? என்ன, கழுத்துல கையை வச்சுத் தடுக்கலே. அதைப் பெருமாள் பண்ணலே. ஆனால் அதைத் தவிர என்ன சாத்வீக முறையை எடுக்கணுமோ, அதை எடுத்திருக்கிறார். கடுமையான முறையை அவர் எடுக்கவே இல்லை. யோசிச்சுப் பாருங்கோ, கடுமையான முறையைத்தான் எடுக்கணுமா? சாத்வீக முறையைப் பண்ணனுமா? பெருமாள் கடுமையா இருக்கார்ன்னா, நம்ம கழுத்துல கத்தி வச்சு, இந்தப் பக்கம் போகாதே, போ, அப்படின்னு சொல்றார்ன்னு அர்த்தம். சாத்வீகமா சொல்றார்ன்னா, இல்லப்பா, சாஸ்திரம் குடுத்திருக்கேன், இது தப்பு, போகாதே, அப்படின்னு சொல்றார்ன்னு அர்த்தம். நாம உடனே என்ன கேப்போம்ன்னால், ஸ்வாமி, அவர்தான் சாத்வீகமா முயன்று பார்த்தார், வேதத்தை எல்லாம் குடுத்துப் பார்த்தார், நான் கேட்கலைன்னு தெரிஞ்சு போச்சு, இனிமே என் கழுத்திலே கத்தியை வச்சுர வேண்டியதுதானே? அப்படின்னு கேட்டால், கழுத்தில கத்தியை வச்சான்னு நாமே புகார் பண்ணுவோம். நாம என்ன வேணா புகார் பண்றதுக்குத் தயாரா இருக்கோமோல்லையோ? பெருமான் நம்மை இவ்வளவு தூரம் சாத்வீகமா அணுகும் போதே, அவர் தலைல இத்தனை குற்றம் சொல்லிண்டு இருக்கோம். எனக்குத்தான் நீர் ஸ்வாதந்திரியம் குடுத்துட்டீர், ஞானம் குடுத்துட்டீர், சக்தி குடுத்திருக்கீர், அப்ப என் வழியை எனக்குப் பார்த்துக்கத் தெரியும், நீ யார்? அப்படின்னு திருப்பிக் கேட்ருவோமோல்லையோ? இதற்காகத்தான் பகவான் குறுக்க வருவதேயில்லை. அனுமதிச்சுடறார். ஆனால் சாஸ்திரங்களைக் குடுத்துத் தடுக்கப் பார்க்கிறார். அந்தத் தடுப்பை நாம மீறித்தானே போறோம்? அதனால பேச்சே இல்லை, அந்தக் குற்றமும் நம்மிடத்திலதான் வரும்.


இன்னும் மூன்றாவது ஒன்னு பண்றார். தூண்டியும் விடுவார். நாம ஒரு வழி போக ஆரம்பிச்சோம். பாபத்தின் வழி போறோம்ன்னால், பாபத்தின் வழியே தூண்டிடுவார். புண்ணியத்தின் வழி வரோம்ன்னால், புண்ணியத்தின் வழி தூண்டிடுவார். இதிலே ஒன்று புரிஞ்சு போய்டும். ஒருத்தர் புண்ணியம் பண்ண ஆரம்பிச்சுட்டார்ன்னா, தாரளமாத் தூண்டட்டும். அதை யாரும் வேண்டான்னு சொல்லலை. நல்லதுதான். அந்த மனுஷனுக்கும் நல்லது, லோகத்துக்கும் நல்லது. ஆனா ஒருத்தர் பாபம் பண்ணினா, எதுக்கு ஸ்வாமி தூண்டறார்? அங்கயாவது தூண்டாமயாவது இருக்கலாமோல்லையோ? நீர் முதல்ல சொன்ன உதாசீநநா இருப்பதே தேவலை போல இருக்கு. அதுக்கு மேல இருக்கற அனுமதி மோசம். அனுமதியே தேவலை போலருக்கு. இப்ப அவரே நன்னா தூண்டி வேறே விடறார்ன்னு சொல்றீரே, இதுவும் நியாயமான்னு கேட்டால், பண்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஏன்னு யோசிங்கோ.


இப்போ பெருமாளே நம்மளை நிறைய பாபம் பண்றதுக்குத் தூண்டறார். ஹிரண்யகசிபுவை பாபத்துக்காகத் தூண்டினார். ஹிரண்யாக்ஷனைத் தூண்டறார். இராவணனைத் தூண்டறார். எப்படித் தூண்டினார்? இவா தபஸ்ஸு பண்ணி வரம் கேட்கறச்சே, வரத்தைக் குடுக்க வைக்கிறாரோல்லையோ? பிரம்மா வரம் குடுக்கறார், உனக்கு சாகா வரம் குடுத்துடறேன், எதுவுமே உன்னைக் கொல்லாது. அந்தத் தெம்புலதானே அவன் ஊர் முழுக்க அழிக்கறதுக்குப் போனான். நமக்கு என்ன தோணும்? இவன் தபஸ்ஸுக்கே பலம் குடுக்காமல், அதை வீணாக ஆக்கி இருந்தால், அப்ப இவன் கஷ்டமே படுத்தி இருக்க மாட்டானேன்னால்? பெருமாள்தான் தூண்டியிருக்கார். அப்போ பாபச் செயலையும் தூண்டியிருக்காரேன்னால், காரணம் இருக்கு.


இவன் மேல மேல பாபம் பண்ணிண்டு போய்ட்டால், பாவத்துக்காக என்ன பிறவி கிடைக்கும் தெரியுமோ? கல்லாகவோ, மண்ணாகவோ, மரமாகவோ, செடியாகவோ, மிருகமாகவோ பிறக்கப் போகிறான். பாபம் வளர, வளர அப்படிப் போய் பிறப்பானோல்லையோ? அந்தப் பிறவி எடுத்துட்டால், சாஸ்திரம் வஸ்யதையே வராது. அப்படின்னா, வேதங்கள் பார்த்து இப்போ நம்மகிட்ட விதிக்கிறது, இதைச் செய், இதைச் செய்யாதே. அது செய்ன்னு சொன்னதைச் செஞ்சோம்ன்னால் புண்ணியம் கிடைக்கும், செய்யாதேன்னு சொன்னதைச் செஞ்சோம்ன்னால் பாபம் கிடைச்சுரும். இது மனிதனுக்குத்தான் கிடைக்கும். இதே சாஸ்திரம், ஒரு கல்லு கிடக்கறதுன்னு வச்சுக்கங்கோ, செய், செய்யாதேன்னு சொல்ல முடியுமா? கல்லு கேட்கப் போறதில்லையோல்லையோ, அதுக்கு அறிவே கிடையாதோல்லையோ? அப்போ சாஸ்திரங்கள் கல்லின் பேரிலே பாதிக்காது. வேதத்தைப் பொருத்தவரைக்கும், கல்லுக்கோ, மண்ணுக்கோ, மரத்துக்கோ, மிருகத்துக்கோ, சம்பந்தமே கிடையாது. இந்தப் பிறவியை பெருமான் நமக்குக் குடுக்கிறார். பாபத்தைத் தொடங்கினவனுக்கு, அதை அனுமதிச்சு, பாபத்துல தூண்டித் தூண்டிப் போய், நிறையப் பாவத்தைப் பண்ண வச்சு, அதனால கல்லாகவோ, மண்ணாகவோ பிறக்க வச்சுடறார். பிறந்துட்டா, அவன் பாவங்கள் குறைஞ்சுட்டே வரும். ஏன்னா அவன் அதை அனுபவிக்கிறானோல்லையொ? தண்டனையை அனுபவிக்க அனுபவிக்க பாபங்கள் குறைந்து கொண்டே வரும். ஆனால் அவனால பாபத்தைச் சேர்க்க முடியாது. கல்லாக எடுத்திருக்கற பிறவியில், வேதத்தின் உபயோகமே இல்லையோல்லையோ? அதனால நான் தப்பும் பண்ண முடியாது, சரியாகவும் பண்ண முடியாதோல்லையோ? அதனால பாபங்களைச் சேர்க்க மாட்டேன், ஆனால் தண்டனையை அனுபவிப்பதனால் கழிப்பேனோல்லையோ? அப்போ பெருமாள் எவ்வளவு மறைமுகமா நம்மளுடைய பாபத்தைத் தொலைக்கறதுக்கு வழி பண்ணிக் குடுத்துட்டார் பாருங்கோ.


இதனாலதான் விநாச காலே விபரீத புத்தி. இந்த புத்தியை ஏன் பகவான் விபரீதமா ஆக்கிடறார்? ஏன் தேவதைகளெல்லாம் விபரீதமாப் பண்றதுன்னா, இந்தப் புத்தியை மட்டும் அவா தூண்டாம இருந்து, இவன் இப்படியே இருந்து கொஞ்சம் கொஞ்சம் நல்லதைச் சேர்த்துண்டிருந்தான், இன்னும் இன்னும் மனிதப் பிறவியே எடுப்பான். மனிதப்பிறவி எடுத்தாலோ, இராட்சசப் பிறவி எடுத்தாலோ, அப்போ வேதங்கள் பொருந்தும். வேதங்கள் இவனுக்கு உபயோகப்படும், பாதிக்கும். இவன் தப்பு பண்ணினால் பாபம் வந்துடும். சரியாப் பண்ணினாத்தான் புண்ணியம் வரும். இதனாலதான் பெருமான் என்ன பண்ணிட்டா, வேண்டவே வேண்டாம், இவனைத் தவறான வழியிலேயே தூண்ட வச்சு, சீக்கிரமே கல்லாகவோ, மண்ணாகவோ, பறவையாகவோ பிறக்க வச்சு, பாபமே தீண்டாமல் பண்ணி, பாபத்தைக் குறைப்போம், அப்படின்னு. இது எவ்வளவு அழகான திட்டம் தெரியுமா? இதைப்பத்தி நம்ம பூர்வர்களெல்லாம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணி, பல வேதாந்த வாக்கியங்களை எடுத்து, இப்படித்தான் பெருமான் நடத்தறார், அப்படிங்கறதை அழகா நமக்கு விளக்கிக் குடுத்திருக்கா. அதை இந்த ஸ்லோகம் சொல்றது.


யஸ்மை தேவாஹா ப்ரயச்சந்தி – யாரொருத்தனை கெடுத்துடனும், இனிமே இவனுக்கு பாபத்தை வளர்த்து, அந்த ஜென்மத்தைக் குடுத்து மொத்தமா தொலைச்சுடனும் பாபத்தை, அப்படின்னு தேவர்கள் நினைக்கிறாளோ, புருஷாய பராபவம் – இவன் தாழனும்ன்னு தேவர்கள் நினைச்சுட்டாள்ன்னால், புத்திம் தஸ்ய அபகரிஷந்தி – அவனுடைய புத்தியை தப்பு வழியிலேயே பிடிச்சு இழுத்துடறா. சோவாசீநாநி பஸ்யதி – அவனுக்கு உடனே தப்பான இடத்துலதான் புத்தி போறது.


ஒரே ஒரு இடம் சொல்றேனே. கம்சன் தேவஹியைக் கொல்லுவதற்காகச் சென்றான். தேவஹிக்கும் வசுதேவருக்கும் கல்யாணம் ஆயிடுத்து. அன்னிக்கே தேரோட்டத்துல வந்துட்டு இருக்கறச்சே ஆகாசவாணி சொல்லித்து, ஏ முட்டாளே! இவாளைத் தேரோட்டிட்டு வரியே, இவள் கர்பத்தில பிறக்கற எட்டாவது குழந்தை, எட்டாவது கர்ப்பம்தான் உன்னைக் கொல்லப் போறது, அப்படின்னு ஆகாசவாணி சொல்லித்து. அவனுக்கு பயம் பிடிச்சுனுடுத்து. கையில இருக்கற கத்தியை உருவிண்டான். உடனே தேவஹியைக் கொல்றேன்னு போறான். வசுதேவர் மன்றாடினார். இவளைக் கொன்று உனக்கு என்ன லாபம்? இவள் வயிற்றில பிறக்கற கர்ப்பம்ன்னா உன்னைக் கொல்லப் போறது. இவளை விட்டுடு. பெண்ணைக் கொலை செய்த குற்றம் வேண்டாம், அதுவும் கல்யாணம் ஆன அன்னிக்கே கொல்ல வேண்டாம், தங்கையைக் கொன்ன குற்றம் வேண்டாம், விட்டுடு, அப்படின்னு அவர் சொன்னார், சரின்னு அவன் அன்னிக்கு விட்டுட்டான். சிறைச்சாலையில கொண்டு போய் அடைச்சுட்டான். பேசி வச்சிண்டிருந்தான், எந்தக் குழந்தை பிறந்தாலும் என்கிட்ட கொண்டு வந்து குடுத்துடனும், அப்படின்னு கம்சன் சொல்லியிருக்கான். முதல் குழந்தை பிறந்தது. வசுதேவர் எடுத்துண்டு போய் கம்சனிடத்திலே குடுத்தார். அவன் கொல்லப் போனான். வசுதேவர் அவன் கையைப் பிடிச்சிண்டு கெஞ்சறார். எதுக்கு இந்தக் குழந்தையைப் போய் கொல்றே? இதுவா உன்னைக் கொல்லப் போறது? எட்டாவது குழந்தைதானே உன்னைக் கொல்லப் போறது? இது இல்லியே, இதை விட்டுடேன், இல்லேன்னா சிசு கொலை, சிசுவைக் கொன்ற பெரிய பாபம் உனக்கு வந்துடாதா, வேண்டாம், அப்படின்னு சொல்லிப் பார்த்தார். என்னமோ அன்னைக்கு அவர் சொன்ன நல்ல வார்த்தை அவன் காதில பட்டிருக்கு. நல்ல வார்த்தை காதில பட்டாலே, காலம் இன்னும் கொஞ்சம் நன்னா இருக்குன்னு அர்த்தம். நல்ல வார்த்தையே காதில படலேன்னாத்தான் விநாச காலம், அப்போ விபரீத புத்தின்னு அர்த்தம். காதில வந்து கால தேவதை உட்கார்ந்துனுடுவராம். நம்ம காதுக்குள்ள நல்வார்த்தை போகாமல் தடுத்துண்டே இருப்பராம். இதுதான் எமதர்ம ராஜனோ, கால தேவதையோ, ம்ருத்யு தேவதையோ, ரொம்ப நன்னா திட்டம் போட்டு அவா செயல்படுத்திடுறா.


அப்படித்தான் இப்போ கம்சனுக்கு ஆச்சு. முதல் குழந்தையைக் கொண்டு வந்து குடுத்தார், சரின்னு திருப்பிக் குடுத்துட்டான் அவன். கொல்லலே. திரும்பி எடுத்துண்டு வரச்சேவே, வசுதேவருக்குச் சந்தேகம்தான். தீயவர்கள் அனுமதிக்கறதெல்லாம் நாம ஒரு அனுமதியா நினைச்சுக்க முடியாது. விடிஞ்சாப் போய்டும், இவன் புத்தி நிக்கவே நிக்காது. இருந்தாலும் சரி, இந்தமட்டும் குடுத்தானேன்னு எடுத்துட்டுப் போறார். அதே சமயத்தில தேவர்களெல்லாம் கூடினா. ஓ, ஆறு குழந்தைகளையும் இவன் கொல்லாம போனா அந்தப் பாபமே இவனுக்கு வராதே? அப்படி வராமயே போய்டுச்சுன்னா, இன்னும் கொஞ்சம் நல்லவனா போய்ட்டான்னா, நல்லவனாப் போனா அவன் இருக்கறவாள துன்புறுத்திக்கிட்டுதான் இருக்கப் போறான். அப்போ அடுத்த பிறவியும் இதே போல பிறவி கிடைக்கும். இன்னும் பாபத்தைச் சம்பாதிப்பான். வேண்டாம், இவன் பாபத்தை நிறுத்திடனும்ங்கறதுக்காக என்ன பண்ணா, நாரதரை அனுப்பி வைத்தார்கள். நாரதர் கம்சனிடத்திலே வந்தார். கம்சா, என்ன முதல் குழந்தையைக் கொன்னுட்டியான்னு கேட்டார். இல்லேல்லே, வசுதேவர் கேட்டுண்டார், அதனால முதல் குழந்தையைத் திருப்பிக் குடுத்துட்டேன். அதைக் கொன்னு நமக்கென்ன லாபம்? அப்ப நாரதர் பதில் சொன்னார், தேவர்களெல்லாம் நன்னாத் திட்டம் போட்டு உன்னை ஏமாத்தறா. வரிசையா அடுத்தடுத்த வருஷம் அடுத்தடுத்த குழந்தை பிறக்கப் போறது. உயரத்துலகூட வித்தியாசம் தெரியப் போறதில்லே. எது எட்டாவது குழந்தை, எது நாலாவது குழந்தை, எது முதல் குழந்தை? உனக்கு வித்தியாசமே தெரியாது. அப்ப என்ன பண்ணிடுவா? எட்டாவது குழந்தையை ஜாக்கிரதை படுத்திண்டு, வேறு குழந்தையை உன்கிட்ட எட்டாவது குழந்தைன்னு காமிச்சுட்டா? நீ ஏமாந்து போய்டுவியோல்லையோ? நன்னா ஏமாந்தாய்ன்னு ஒரு வார்த்தை சொன்னார். நாரதஹா கலகப்ரியஹா. கலகம் பண்றதிலேயே அவருக்கு விருப்பம். நல்லதுக்காக கலகம் பண்ணுவார். அதேபோல கம்சனுக்கும் தோணிப்போச்சு. ஓ, தேவர்களோட சதித்திட்டம் போலருக்கு, வசுதேவா, திரும்பக் கொண்டா. அனுப்பிச்ச குழந்தையைத் திருப்பிக் கூட்டுட்டு வந்து கொன்னுட்டான். அப்போ அடுத்ததையும் கொன்னான், அடுத்ததையும் கொன்னான். இப்போ தேவர்கள் ஒன்றுகூடி திட்டம் தீட்டி, இவனுடைய புத்தியை அதர்மத்தின் பாதையில இழுத்துட்டுப் போய்ட்டாளோல்லையோ? அதான் விநாச காலே விபரீத புத்தி.


நாமதான் ஜாக்கிரதையா இருந்துக்கணும். நல்லவர்களுடைய திருவடி பற்றி, நல்லார்களோடே சேர்ந்திருந்து, நல்ல வழியிலேயே புத்தியைச் செலுத்திக்கணும். அப்பப்போ தேவர்களோ, மற்றப் பேரோ, நம்மளைத் திசை திருப்பறாப்ல பண்ணுவா. அதுக்கெல்லாம் நாம் திசை திரும்பி விடுவதே கூடாது. அது ஸ்லோகத்தின் அர்த்தம்.


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

About the author