ஒரு சிவன் கோயிலில் நெய்யினாலேயே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னும் அது உருகாமல் அப்படியே நிலைத்து இருக்கிறது. அது கடும் வேனில் காலமானாலும் சரி.. என்ன ஆச்சரியம்!
இந்த மகத்துவம் கொண்ட கோயில்தான் திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
தல புராணம்
தல புராணத்தைப் பார்த்தால் இது ஒரு பரசுராம க்ஷேத்ரமாகத் திகழ்கிறது. பரசுராமர் தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற பல க்ஷத்திரியர்களைக் கொல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.அந்தப் பாவத்திற்குப் பிராயசித்தம் செய்ய நினைத்த அவர், அங்கு பல சிவன் கோயில்களை எழுப்ப எண்ணம் கொண்டார். அதற்குத் தகுந்த நிலம் தேடி, பின்னர் சமுத்திரராஜனிடம் நிலத்திற்காக விண்ணப்பிக்க, சமுத்திர ராஜனும் கன்னியாகுமரி வரை பின்வாங்கிக் கொண்டு நிலம் அளித்தாராம். பின் அந்த இடத்தில் பல கோயில்கள் எழுப்பப்பட்டன.
இந்த வடக்குநாதனைக் கொஞ்சம் மேடான இடத்திற்குக் கொண்டு செல்ல ஆவல் கொண்டு நிலத்தைக் குன்று போல் உயர்த்தினாராம். கோயில் தயார் ஆவதற்குள் பரமேஸ்வரன் பார்வதியுடன் வந்து நின்றுவிட்டார். பின், உள்ளே வேலை நடப்பதைப் பார்த்து வெளியிலேயே ஒரு ஆலமரத்தின் கீழ் நின்றார். தன் பரிவாரகணங்களில் ஒருவனான சிம்மோதரனை அழைத்து, உள்ளே வேலை முடிந்துவிட்டதா என்று பார்த்து வருமாறு பணித்தார். அவனும் சென்று அந்த இடத்தைப் பார்த்துவிட்டு, அங்கேயே அமர்ந்து விட்டான். காத்து நின்ற சிவபெருமான் பின்னர் உள்ளே சென்று கோபத்தினால் அவனைக் காலால் எட்டி உதைத்தார். அந்த இடத்தில் சிம்மோதரனுக்கு ஒரு கோயில் இருக்கிறது.
பின்னர், பரமேஸ்வரன் அங்கிருந்த ஸ்தம்பத்தில் ஜோதி வடிவமாக ஐக்கியமாகிவிட்டார். இந்த இடமே பரமேஸ்வரனின் மூலஸ்தானமாயிற்று. இங்கு அவரது கோபத்தைத் தணிக்க நெய்யினாலேயே அபிஷேகம் செய்கின்றனர். அவர் சலவைக்கல் போல் காணப்படுகிறார். எத்தனை டிகிரி வெப்பம் ஏறினாலும் இந்த நெய் உருகுவதில்லை.
இது முன்பு ‘வடகுன்று நாதர்’ என்ற பெயரில் இருந்ததாம். பின் பெயர் மறுவி, வடக்கு நாதர் என்று ஆகிவிட்டது. பெயருக்குக் குன்று என்று இருந்தாலும் அந்த இடம் குன்று மாதிரி தெரிவதில்லை. குன்றின் உயரம் சுமார் 180 அடிதான். சேர மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட கேரளத்தில் அநேக சிவன் கோயில்கள் இருந்தன. இதில் வடக்குநாதர் கோயில் மிகப் பழமை வாய்ந்தது.
கோயிலின் அமைப்பு
எந்தக் கோயில் போனாலும் நாம் முதலில் போவது கணபதியிடம்தான். ஆனால் இந்தக் கோயிலில் அப்படி இல்லை. முதல் தரிசனம் நெய்யுடன் பளிங்கு போல் மின்னும் வடக்குநாதரைத்தான் செய்ய வேண்டும். அவரையும் பிரதட்சிணம் செய்யாமல் பிரதோஷ விரதம் போல் முக்கால் சுற்று சென்றுவிட்டு பின் திரும்பி வரவேண்டும். அதன் பின்தான் கணபதியின் தரிசனம். அதற்குப் பின் தரிசிக்க வேண்டியது கருணை பொழியும் பார்வதி அன்னையை. அதற்கு அடுத்த சன்னதி ஸ்ரீசங்கரநாராயணர். அவரைத் தரிசித்த பின்னர் நாம் வந்த வழியே திரும்பி கடைசியில், முதலில் பார்த்த வடக்குநாதர் சன்னதிக்கே வந்துவிடவேண்டும்.
வடக்கு நாதர் அமர்ந்திருக்கும் கர்ப்பகிரஹம் வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கிழக்கு முகமாக பார்வதி தேவியின் சன்னிதானம் இருக்க, மேற்கு முகமாக வடக்கு நாதர் சன்னதி அமைந்திருக்கிறது. இங்கு மின்சார விளக்கு ஏற்றப்படாமல் பல எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அந்தப் புனித ஒளியில் பரமேஸ்வரனை தரிசிக்கின்றோம். இங்கு இருக்கும் கோயில்களில் பிரசாதம் சந்தனம்தான். ஆஹா! என்ன மணம்! நாம் அதை நெற்றியில் தரிக்க, அந்த மணம் நம் கூடவே வந்து நம்மைச் சுற்றியும் பரவுகிறது. நுழையும் இடத்தில் துவார பாலகர்கள் இருவர் நிற்கின்றனர். மேலே கோபுரம் இல்லை. ஆனால், கேரள பாணியில் கூரை போல் செப்புத் தகடுகளால் மூடப்பட்டிருக்கிறது.
பிரகாரத்தைச் சுற்றி வருகிறோம். அங்கு ஒரு ராமர் சன்னதி இருக்கிறது. இதற்கும் ஒரு புராணக் கதை உண்டு. அர்ச்சுனன் பாசுபதம் பெற்றபின் சிவபெருமானைப் பார்க்க கயிலை சென்றான். அங்கு சிவபெருமான் இல்லாததால் இந்த வடக்குநாதர் கோயிலுக்கு வந்தான். சுற்றி வரும் போது பரசுராமர் கோயிலைக் கண்டு, அவர் ஷத்திரியனான தன்னை என்ன செய்யப் போகிறாரோ என்று எண்ணி, தன் அம்பை ஊன்றி சுவரைத் தாண்டி வெளிப்பக்கம் குதித்துவிட்டான். அவன் அம்பு ஊன்றிய இடத்தில் ஒரு சுனை ஏற்பட்டு இன்றும் அந்தச் சுனையில் எல்லோரும் கை கால்கள் அலம்பிக் கொள்கிறார்கள்.
பிரகாரத்தில் ஒரு பெரிய ஹால் இருக்க, அங்கு நாட்டிய நாடகங்கள் நடைபெறுகின்றன. இந்த இடத்தைக் கூத்தம்பலம் என்கிறார்கள். இதில் சுமார் ஆயிரம் பேர் அமரலாம். நாட்டியம் ஆடும் முன் ஒரு ஆள் உயரத்திற்குக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விடிய விடிய அது எரிந்து கொண்டிருக்கும்.
மேற்குத் திசையில் கோபுரத்திற்கு அருகில் ஒரு சதுரமான கல் இருக்கிறது. அதை நான்கு பக்கம் மேடை கட்டிக் காத்து வருகிறார்கள். கோயில் தரிசனம் முடிந்த பின் பிரசாதத்தில் கொஞ்சத்தை இதில் எறிய வேண்டுமாம். இந்தக் கல்லின் பெயர் ‘கலிக்கல்’. இது வளர்ந்து கொண்டே வருகிறதாம். கலி முற்ற இந்தக் கல் கொடிக்கம்பம் வரை வளர்ந்து விடும் என்று நம்புகிறார்கள். அதனால் அதன் மீது பிரசாதம் எரிந்து வளர விடாமல் செய்கிறார்களாம். இதைத் தவிர ஆதிசங்கரர் சமாதியான இடமும் அதற்கான ஆலயமும் இங்கு உள்ளது. இந்த இடத்தைச் ‘சங்கு சக்கரம்’ என்கிறார்கள்.
ஸ்ரீஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து வரும் போது சில மூலிகைகள் இந்தக் கோயிலின் வெளிப் பிரகாரத்தில் விழுந்து சிதறியதாம். ஆகையால் இங்கு வருபவர்கள் இந்த இடத்திலிருந்து சிறு புல்லையாவது பிடுங்கிக் கொண்டு போய் பத்திரப்படுத்துகின்றனர். இதைத் தவிர ஒரு மேடையின் மீது பல பெயர் தெரியாத சிலைகள் இருக்கின்றன. அவைகளை பூதங்கள் என்கின்றனர். இந்தக் கோயிலைத் ‘தென் கயிலாயம்’ என்றும் அழைக்கின்றனர்.
ஆதிசங்கரர் தொடர்பு
இந்த இடம் ஆதிசங்கரருடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆதி சங்கரரின் அன்னை திருமதி ஆர்யாம்பாள் குழந்தைக்காக ஏங்கி, வடக்கு நாதரை வேண்டினாராம். வடக்கு நாதரும் அவள் கனவில் வந்து, "ஆயுள் குறைந்த நல்ல சற்புத்திரன் வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளுடன் திறமை இல்லாத முட்டாளாக ஒரு புத்திரன் வேண்டுமா?" என்று கேட்க, அன்னையும் தனக்குப் புத்திசாலியான சற்புத்திரன்தான் வேண்டும் என்று மொழிய, அவரும் ‘அப்படியே நடக்கும்’ எனக் கூறி மறைந்து விட்டார். இந்தக் கோயிலின் வழிபாடு முழுவதையும் ஸ்ரீஆதிசங்கரரே முறைப்படுத்தி வைத்திருக்கிறார்.
ஜைனருக்கும் கோயில்
ஒரு காலத்தில் இங்கு ஜைனமதம் பரவி இருந்ததாம். அதன் தலைவர் ஸ்ரீ ரிஷபதேவர் என்பவர் பெயரில் ஒரு கோயில் இருப்பதாகத் தெரிய வருகிறது. சிலர் ரிஷப வாகனத்திற்காக இந்தக் கோயில் என்றும் சொல்கிறார்கள். இவருக்கும் பூசை, நிவேதனம் உண்டு. ஆனால் கோயில் கதவு மூடியபடியே இருக்கிறது. பக்தர்கள் அதை ஒரு துவாரத்தின் வழியாகத்தான் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனம் செய்யும்போது எல்லோரும் தன் உடையிலிருந்து ஒரு இழை நூலைப் பிய்த்து துவாரம் வழியே உள்ளே போட வேண்டுமாம். ரிஷபர் எப்போதும் தியானத்திலோ அல்லது நித்திரையிலோ இருப்பாராம். பக்தர்கள் தரிசிக்கும் முன் சொடுக்குப் போட்டு அவரை எழுப்புகிறார்கள். அவர் ஆடையில்லாமல் இருப்பதால் ஆடை செய்ய நூல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஐதீகம் சற்று வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இதற்கு வேறு உட்பொருள் இருக்கலாம்.
இரவு பூஜையின் போது, பல தேவர்கள் இந்தக் கோவிலுக்கு வருவதால் பக்தர்களை நடுவில் வெளியேற அனுமதியில்லை. எல்லாம் முடிந்த பின்தான் வெளியில் வரமுடியும். இந்தக் கோயிலின் சக்தியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இத்தனைச் சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அவசியம் போய் வாருங்கள். கோயம்பத்தூரிலிருந்து வெகு அருகில் கேரள எல்லையில் உள்ள "திருச்சூர்" என்ற இடத்தில் இந்தக் கோயில் உள்ளது.