ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:00 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரத்தையும் (தில்லை), வைணவர்களுக்கான கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்தையும் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் பெரியகோயில் என்றால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்று சொல்லப்படும் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம்தான்!

சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிற பிரமாண்டமான ஆலயம். சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜசோழன், தன்னை சிவபாதசேகரன் என அழைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டான். இவனின் மகன் ராஜேந்திர சோழன், தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாக 'சிவசரணசேகரன்’ எனும் பெயரைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டான். சைவத்தின் மீதும் சிவபெருமானின் மீதும் மாறாப் பற்றுக் கொண்ட தந்தையும் மகனும் கட்டிய ஆலயங்கள் ஏராளம்.

தாங்கள் அடைந்த பெருவெற்றியின் அடையாளமாகவோ அல்லது தங்கள் பெருமித வெற்றி தந்த ஆணவத்தின் வெளிப்பாடாகவோ அவர்கள் கோயில்களைக் கட்டவில்லை. கடவுளின் முன்னே அனைவரும் சமம் எனும் உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே ஆலயங்களை அமைத்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பெரியகோயிலில், திருமாளிகைப் பத்தி எனும் திருவூற்று மண்டபத் தின் ஒரு பகுதியைக் கடைக்கால் வரை தோண்டி, அடித்தளமாக விளங்கும் முண்டுக் கற்களை வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பகுதியை முழுவதுமாகச் சீரமைத்தனர். அப்போது உள்ளிருந்து எடுக்கப்பட்ட முண்டுக் கற்களில் மாமன்னன் ராஜராஜசோழனின் படைவீரர்களின் பெயர்கள் மற்றும் தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எதற்காக அங்கே பெயர் பொறித்தான் மன்னன்? கற்களை எவர் வழங்கினாரோ, அவர்களின் பெயரைக் கல்வெட்டுகளாகப் பொறித்து, அவர்களுக்குப் பெருமைச் சேர்த்த உயர்ந்த குணம் கொண்ட மன்னன் அவன்.

இதையெல்லாம் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஓர் உண்மை புலப்படும் நமக்கு. இந்த அழகிய, பிரமாண்டமான பெரியகோயிலின் அடித்தளக் கற்களில் ஓர் இடத்தில்கூட மன்னனின் பெயர் பொறிக்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களின் பெயர்களும் படைவீரர்களின் பெயர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கோயிலை நிலையாகத் தாங்கி ஆராதிப்பவர்கள் எளிய அடியார்களும் தொழிலாளர் களும்தான் என்பதை நமக்கு உணர்த்த, ராஜராஜசோழன் செய்திருக்கிற விஷயமாகத்தான் இது எனக்குத் தோன்றுகிறது.

அதேபோல், கோயிலின் திருச் சுற்று மாளிகையைப் பார்த்திருக் கிறீர்கள்தானே! அதன் அழகில் அசந்து போய்விடுவோம். அத்தனை அழகு; அத்தனை பிரமாண்டம்! அவன் நினைத்திருந்தால், அக்கா குந்தவை நாச்சியார் பெயரில், தன் மனைவியர் பெயரில், மகன் பெயரில், ஏன்... தன் பெயரில்கூட இந்தத் திருச்சுற்று மாளிகையைச் சொல்லியிருக்கலாம். ஆனால், தன் சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் பெயரில் திருச்சுற்று மாளிகையை அமைக்கச் செய்தான். இந்தத் தகவலை கோயிலில் உள்ள தூண் ஒன்றில் கல்வெட்டாகவும் பொறித்துள்ளான். அதாவது, சோழ தேசத்தின் மிக முக்கியமான கோயிலாக மட்டுமின்றி, உலகமே வியந்து பார்க்கும் ஆலயத்தின் கட்டுமானத்தில், அதன் பெருமை யில் அனைவரின் பங்களிப்பும் பெயர்களும் இருக்கவேண்டும் என்று பரந்த மனத்துடன் யோசித்துச் செயல்பட்டிருக்கிறான், மன்னன்.

அதேபோல், இன்னொரு சிலிர்ப்பான விஷயம்... கோயிலில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்குமான பூஜைகளுக்கு நிவந்தம் அளித்துள்ளார்கள், பலரும். தனிநபர்கள், வணிகர்கள், ஊர்ச்சபையினர் என நிவந்தம் அளித்தவர்களின் பெயர்களை யெல்லாம் கல்வெட்டுக்களில் பொறித்து, அவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறான் ராஜராஜசோழன்.

கோயில் விமானத்தின் வடக்குப் புறத்தில், சண்டீசர் சந்நிதிக்கு எதிரில், வாய்மொழி ஆணையாகச் சொன்னதை அப்படியே பதித்திருக்கிறான் மன்னன். 'தஞ்சாவூரில் தான் எடுப்பித்த கற்கோயிலான ராஜராஜச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரசாமிக்கு, தான் கொடுத்தது, தன் அக்கன் (சகோதரி) குந்தவைதேவியார் கொடுத்தது, தன் தேவிமார்கள் கொடுத்தது ஆகியோருடன் சிவனார்க்கு யார் யாரெல்லாம் எது எதெல்லாம் கொடுத்தார்களோ அந்தக் கொடை விவரங்களை தன் கொடை விவரத்துடன் சேர்த்துப் பொறிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப் பித்துள்ளான். அத்துடன், அருகிலேயே மிகப் பெரிய பட்டியலையும் குறித்துள்ளான். அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் பார்க்கலாம்.

அதுமட்டுமா? தஞ்சைப் பெரிய கோயிலுக்கென 400 ஆடல்மகளிரை நியமித்துள்ளான் மன்னன். இசைக்கவும் பக்கவாத்தியம் முழங்கவும் 220 பேரையும், தேவாரம் பாடுவதற்கு 50 ஓதுவாரையும், நூற்றுக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களையும் நியமித்திருக்கிறான் ராஜராஜசோழன். அவர்களின் பெயர், ஊர், ஊதியம், வேலை எனப் பலவற்றையும் கல்லில் பதித்திருக்கிறான்.

கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சரமல்லன். அவனைக் கௌரவிக்கும் பொருட்டு, அவன் பெயருடன் தன் பெயரையும் இணைத்து ராஜராஜப் பெருந்தச்சன் எனப் பட்டம் அளித்துச் சந்தோஷப்படுத்தியிருக்கிறான். அதுமட்டுமா? ஆயிரத்துக்கும் மேலான கோயில் பணியாளர்களின் வசதிக்காக ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்பாளர் கள்), சிகை அலங்காரம் செய்யும் நாவிதர் கள் எனப் பலரையும் நியமித்து, சிகை அலங்காரக் கலைஞன் ஒருவனுக்கு, ராஜராஜ நாவிதன் எனப் பட்டமளித்தான் மன்னன். இறைப் பணியில் எல்லா வேலையும் போற்றத்தக்கதே என்பதை வலியுறுத்திய பெரிய மனம் கொண்ட மன்னன், ராஜராஜ சோழன். இன்னொரு முக்கியமான விஷயம்... கலைகள் அனைத்தும் வளர்ந்த இடம் ஆலயம். கலைஞர்களுக்கு எஜமானன், பெருங்கோயில் ஈசனே! இதை உலகத்தார் உணரும் வகையில், ஈசனின் பண்டாரத்தில் இருந்து கலைஞர்களுக்கு ஊதியமும், கோயில் நிர்வாகிகளுக்கு அரசு பண்டாரத்தில் இருந்து ஊதியமும் அளித்து, கலைஞர்கள் இறைவனின் அடிமை என்பதையும், அரசனுக்கு ஒருபோதும் அவர்கள் அடிமை இல்லை என்பதையும் நிலைநாட்டி, அதனைக் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்துள்ளான் மன்னன்.

பஞ்சபூதங்களால் இயங்குகிற உலகம் இது. தஞ்சைப் பெரியகோயிலின் கட்டுமான அமைப்புகளும் பஞ்சபூதங்களின் வடிவமாகக் கட்டப்பட்டுள்ளன. இயற்கையையும் இறைவனையும், குறிப்பாக மக்களையும் ஒரு வரிசையில் கோத்து, சமமாகப் பாவித்து, பொற்கால ஆட்சியையே நடத்திச் சென்றான், ராஜராஜசோழன் என்பதை இன்னமும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன, கோயிலில் உள்ள கல்வெட்டுகள்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:04 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 2
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


சதாசிவலிங்கம்!

ராஜராஜீச்சரம் எனப்படும் தஞ்சை பெரியகோயிலின் விமானம் 216 அடி உயரம். தரையில் இருந்து கலசம் வரைக்கும் முழுக்க முழுக்கக் கருங்கல் கட்டுமானம். சுமார் 10 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போதே, பெருவுடையார் கோயில் விமானத்தைத் தரிசிக்கலாம்.

எல்லாக் கட்டடங்களையும் போல இதுவும் ஒரு கட்டடம், கோயில் விமானம் என்று நினைத்தால், அது தவறு. ராஜராஜப் பெருவுடையார் அப்படி நினைத்துக் கட்டவில்லை. இது, மகா சதாசிவலிங்கத் தோற்றத்தின் வடிவம். மகுடாகமம் அப்படித்தான் இதைத் தெரிவிக்கிறது. திருவதிகை வீரட்டம், திருவானைக்கா போன்ற தலங்களில் திருச்சுற்று மண்டபங்களில் சதாசிவலிங்கங்கள் (முகலிங்கம்) இருப்பதைப் பார்க்கலாம். அதாவது, பாணத்தின் நான்கு திசைகளிலும் நான்கு முகங்கள் இடம்பெற்றிருக்கும். திண்டிவனம் அருகில் உள்ள திருவக்கரை சிவாலயத்தின் மூலஸ்தானத்தில் முகலிங்கத்தைத் தரிசிக்கலாம்.

தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என சிவனாரின் ஐந்து வடிவத்தைச் சொல்வார்கள். இவற்றில், முதல் நான்கு வடிவங்களின் திருமுகங்களை, லிங்க பாணத்தில் காணலாம். ஈசான முகத்தை, ஊர்த்துவ முகம் எனக் கற்பனையில் கொள்ளவேண்டும்.

தஞ்சாவூர்ப் பகுதியில் சில சிவாலயங்களில், தாமரை மலரில் அமர்ந்தவராக நான்கு திருமுகங்களும் கொண்டு, சிவனாரின் திருவுருவத்தைக் காணலாம். இதனை 'வாக்ச சிவா’ என அழைப்பார்கள்.

தஞ்சைக் கோயிலில் கல்வெட்டுச் சாசனம் ஒன்றில், ராஜராஜ சோழ மன்னன் செய்து அளித்த செப்புத் திருமேனி பற்றிய குறிப்பு உள்ளது. சிவனாரின் உருவமான அந்தத் திருமேனியை 'பஞ்சதேக மூர்த்தி’ என்பார்கள். திருமேனியின் உயரம், வடிவம் ஆகியவற்றின் துல்லிய அளவையும் கல்வெட்டில் பொறித்துள்ளான், மன்னன். ஒருவேளை... பிற்காலத்தில் இந்தத் திருமேனி அதாவது திருவிக்கிரகம் கிடைக்கப் பெறாமல் போனால்கூட, அந்த விக்கிரகம் எப்படி இருந்திருக்கும் என்பதை அந்தக் கல்வெட்டின் மூலம் தெளிவுற அறியலாம். இதுகுறித்து இன்னொரு செய்தி... இந்தியாவில் எந்தவொரு சிவாலயத்திலும் பஞ்சதேகமூர்த்தி எனும் பெயரில் செப்புத் திருமேனி இருந்ததாகத் தெரியவில்லை.


சிவனாரின் ஐந்து தேகங்களையும் இணைத்து, செப்புச் சிலை வடிவில் ஓர் உருவமாகச் செய்து வழிபட்டிருக்கிறான் ராஜராஜ சோழன். அதுமட்டுமா? ஐந்து திருவுருவங்களையும் தனித்தனியே வடித்து, ஸ்ரீவிமானத்தின் கோஷ்டப் பகுதிகளில் வைத்து, விமானத்தையே சதாசிவலிங்கமாகக் காட்டி மகிழ்ந்திருக்கிறான். சிவனாரின் அந்த ஐந்து வடிவங்களை, பெரியகோயில் தவிர, வேறு எந்த ஆலயத்திலும் தரிசிக்க வாய்ப்பே இல்லை.

மூலவர் ஸ்ரீபிரகதீஸ்வரரை வணங்கிவிட்டு, அர்த்த மண்டபம் வழியே தெற்கு வாயிலுக்கு வரும் வழியில், கீழ்ப்புற கோஷ்டத்தில் தத்புருஷ மூர்த்தியும், விமானத்தின் தெற்குப் புற கோஷ்டத் தில் அகோர மூர்த்தியும் நின்று அருள்பாலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இல்லையெனில், அடுத்த முறை செல்லும்போது கவனிக்கத் தவறாதீர்கள். மேலிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன் இடது கரத்தில் மாதுளம்பழத்தை ஏந்தியபடி, முன் வலது கரத்தில் அபயம் காட்டி நிற்பார் தத்புருஷர். உடல் முழுவதும் பாம்புகளை ஆபரணம் போலச் சூடிக்கொண்டு, எட்டுத் திருக்கரங்களும், எடுப்பான மீசையும் கொண்டு அகோரமூர்த்தியும், விமானத் தின் மேற்கு கோஷ்டத்தில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் அபய வரதம் காட்டி சத்யோஜாத மூர்த்தியும், கோஷ்டத் தின் வடக்கில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் வாளும் கேடயமும் ஏந்தியபடி வாமதேவ மூர்த்தியும், விமானத்தின் வட கீழ்த் திசையில், அர்த்தமண்டபம் செல்லும் வாசலுக்கு அருகில் கோஷ்டத்தில் வலது கரத்தில் நீண்ட திரிசூலத்தை ஏந்தி, இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி ஈசான மூர்த்தியும் காட்சி தருகின்றனர். இந்த மூர்த்திகளைத் தரிசித்துவிட்டு, உலகமே போற்றுகிற 216 அடி உயர விமானத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அப்போது... அது, சதாசிவலிங்க திருவடிவம் என்பது புரியும்.கிழக்கு ராஜகோபுரமான கேரளாந் தகன் நுழைவாயிலின் மேல் நிலையில் வடதிசையிலும் மேற்குத் திசையிலும் பத்துக் கரங்கள், ஐந்து தலைகளுடன் கூடிய சதாசிவ மூர்த்தியின் சுதை வடிவங்களையும் தரிசிக்கலாம். தவிர, பெரியகோயிலில் சிவனாரின் பல்வேறு வடிவங்களான ஆடவல்லார், பிட்சாடனர், காலகால தேவர், விஷ்ணு அநுக்கிரஹ மூர்த்தி, ஹரிஹரர், லிங்கோத்பவர், சந்திர சேகரர், கங்காதரர், கௌரி பிரசாதர், திரிபுரம் எரித்த தேவர், ஆலமர்ச் செல்வர் ஆகிய மூர்த்தங்களும் உண்டு.

திருமந்திரத்தின் 7-ஆம் தந்திரத்தில், சதாசிவலிங்கத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார் திருமூலர். திருஞான சம்பந்தர் திருவாஞ்சியப் பதிகத்தில் 'உடல் அஞ்சினர்’ என்றும், திருநாவுக்கரசர் திருவதிகை வீரட்டானத்துப் பதிகத்தில் 'அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகை வீரட்டனீரே’ என்றும் சதாசிவ மூர்த்தியின் பெருமைகளை உரைத்துள்ளனர்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:08 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3

கும்பகோணம் நகரத்துக்குத் தென்மேற்கே கும்பகோணம்- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் புறநகராக விளங்குவது தாராசுரம் எனும் பேரூர். காவிரியின் கிளை நதியான அரசிலாறு, இந்த இரண்டு ஊர்களையும் பிரித்து நடுவே செல்கிறது. சோழப் பேரரசர்களின் கோநகரமான பழையாறை என்ற தலைநகரத்தின் ஒரு பகுதியாக ராசராசபுரம் விளங்கியது. இந்த ராசராசபுரம் நாளடைவில் ராராபுரமாக மருவி, பின்பு தாராசுரம் என அழைக்கப்படலாயிற்று.

சோழப் பெருமன்னன் இரண்டாம் ராசராசன் (கி.பி.1146-1163) இந்த ஊரை நிர்மாணம் செய்து, அங்கு ராசராசேச்சரம் என்ற பெயரில் பெரிய சிவாலயம் ஒன்றை எடுப்பித்தான். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், ராசராசபுரத்தின் சிறப்பையும் அங்கு திகழும் ராசராசேச்சரத்தின் பெருமையையும் 'தக்கயாகப்பரணி’ எனும் அருந்தமிழ் நூலில் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் அந்தக் கோயில் ஐராவதீஸ்வரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

சேக்கிழார் பெருமானையும் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற பேறுடையவன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனான இரண்டாம் ராசராசன். இவன், தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் தில்லையில் பெரிய புராணம் அரங்கேற்றம் நிகழ்ந்ததைக் கண்டு களித்தவன். பெரிய புராணத்தில் கூறப்படுகிற நாயன்மார் வரலாறு இந்த மன்னனை ரொம்பவே ஈர்த்தது. சேக்கிழார் பெருமான் சொல்லால் வடித்த அடியார்களின் வாழ்வை, கல்லில் சிற்பக் காட்சிகளாக வடித்து, அவற்றை தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் இடம்பெறச் செய்தான். ஒன்றரை அடி நீளம், ஆறு அங்குல உயரமுள்ள பகுதிகளுக்குள்ளே ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளன.

சுந்தரர் வரலாறு திருத்தொண்டர் புராணத்தில் எவ்வாறு உபமன்யு மகரிஷியால் விரித்துரைக்கப்பட்டுள்ளதோ, அதே போலவே சிற்பக் காட்சிகள் தொடங்கி, ஞானசம்பந்தர் வரலாறு, திருநாவுக்கரசர் வரலாறு, நாவுக்கரசர் 'மாதற்பிறைக் கண்ணியானை’ எனத் தொடங்கும் பதிகம் பாடும் காட்சி, பின்பு சுந்தரர் குறிப்பிடும் அறுபத்து மூவர் வரலாற்றுக் காட்சிகள் என நீண்டு, மொத்தம் 90 காட்சிகளில் சுந்தரரும் சேரமான் பெருமாளும் கயிலை செல்லும் காட்சியுடன் பெரிய புராணச் சிற்பக் காட்சிகள் நிறைவு பெறுகின்றன.

ஐராவதீஸ்வரர் திருக்கோயிலின் முக மண்டபத்தை, தேர் வடிவில் 'ராஜகம்பீரன் திருமண்டபம்’ என்ற பெயரில் சிற்பக்கலையின் கருவூலமாகவே படைத்திருக்கிறான் மன்னன். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் உள்ள நான்கு தூண்களின் நான்கு பக்கங்களிலும் 48 சிற்பக் காட்சிகள் உள்ளன. இவற்றில் கந்த புராணம் முழுவதும் சித்திரிக்கப் பெற்றிருப்பதைப் பார்த்தால், சிலிர்த்துப் போவீர்கள். கச்சியப்ப சிவாச்சார்யரின் கந்தபுராணம் எழுதப்படுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு கந்தபுராணம் சிற்பங்களாக வழங்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று!

இன்னொரு விஷயம்... இந்தக் கோயிலின் கோஷ்டங்களில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் உலகின் கலை வல்லுநர்களால் இன்றைக்கும் பிரமிப்போடு பார்க்கப் படுகின்றன; போற்றப்படுகின்றன. ஸ்ரீநரசிம்ம உருவத்தை அழிக்கும் சரபமூர்த்தி வடிவம் அரியதொரு பொக்கிஷம்! சிறகுகள் பெற்ற சிங்கவடிவாகிய சரபப்புள் பறந்து வந்து, சினமுற்ற நரசிங்கத்தை வான மண்டலத்துக்குத் தூக்கிச் செல்கிற அற்புதக் காட்சியைச் சிற்பமாக வடித்திருப்பதைப் பார்த்தால், நம் விழிகள் விரியும்.வான மண்டலமும், அங்கு திகழும் தேவர்களும், கழுகு மீனைத் தூக்கிச் செல்வது போல் நரசிங்கத்தை சரபம் தூக்கிச் செல்வதும் தத்ரூபமான காட்சிகளாகும். ராஜகம்பீரன் மண்டபத்தின் கிழக்குச் சுவரில் அமைந்த கோஷ்டம் ஒன்றில் காணப்பெறும் அர்த்தநாரியின் சூரிய வடிவம் உலகில் வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத ஒன்று! சிவசூரியன் இங்கே தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் எனும் நான்கு முகங்களுடன், உடலில் ஒரு பாதி ஆணாகவும், ஒரு பாதி பெண்ணாகவும் எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். கோஷ்டத்துக்கு மேல், சோழர் கால செந்தூர எழுத்துக்களில், 'அர்த்தநாரி சூரியன்’ என எழுதப்பட்டுள்ளது.

சங்க நிதி, பதும நிதி, அகத்தியர், உபமன்யு மகரிஷி, அகோர மூர்த்தி, நான்கு திருமுகங்களுடன் 14 பாம்புகளை உடலில் தரித்த வண்ணம் ஆடும் ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீஆலமர்ச் செல்வர், ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜர், ஸ்ரீகணபதி, ஸ்ரீதிரிபுராந்தகர், ஆனை உரிச்ச தேவர், ஸ்ரீபைரவர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீஆதிசண்டேஸ்வரர், ஸ்ரீராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்கள் கல்வெட்டுப் பொறிப்புகளோடு கோஷ்டங்களில் இடம் பெற்றிருந்தன. இவற்றில் சில, பிற்காலத்தில் அகற்றப்பட்டுவிட்டன.

இந்தக் கோயிலிலிருந்து தஞ்சைக் கலைக்கூடத்துக்கு எடுத்துச் சென்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி என்ற ஆனை உரிச்ச தேவரின் சிற்பம் அற்புதமானது. ஸ்ரீகாலபைரவராக கஜாசுரன் என்ற அரக்க யானையின் உடலுள் புகுந்து, அதனைக் கிழித்தவாறு ஆடிக்கொண்டே வெளிவரும் அண்ணலைக் கண்டு உமாதேவி அஞ்சி, தன் கையில் அணைத்துள்ள குழந்தை முருகன் அந்தக் கோலத்தைப் பார்க்காதபடி மறைத்து நிற்கிறாள். அது கண்டு, கோபத்துடன் இருந்த ஆடுத்தேவர் புன்னகை செய்கிறார். அற்புதமான இந்தச் சிலையின் 45 டிகிரி கோணத்தில் ஒரு பக்கம் இருந்து பார்த்தால், முகத்தில் கோபம் தெரியும். அதே முகத்தில் தேவி இருக்கும் திசையில் 45 டிகிரி கோணத்திலிருந்து பார்த்தால் புன்னகை தெரியும். ஒரே முகத்தில் இரண்டு விதமான பாவங்களைச் சிற்பி காட்டியுள்ளார்.

'விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆக வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திகு மணிவாய்விள்ளச்
சரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’

என்ற திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல், இங்கு சிற்பமாகி நிற்பதையும் தரிசிக்கலாம்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:14 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! -4

கும்பகோணம்- தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலின் முக மண்டபமான ராஜகம்பீரன் திருமண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் நிற்கிறோம்.

இங்கே, மேல்தளத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் உள்ளன. அதன் மேலேறி முதல் தளத்துக்குச் சென்றால், அங்கே ஸ்ரீவிமானத்தையட்டி ஒரு மண்டபமும், அதன் மேல்தளத்தில் மேலும் ஒரு சிறுமண்டபமும் இருக்கின்றது.

கீழ் மண்டப வெளிச்சுவரிலும் உட்சுவரிலுமாக மொத்தம் எட்டு கோஷ்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நீங்கலாக, மற்ற ஏழு கோஷ்டங்களின் மாடங்களிலும் வேறு எந்த ஆலயத்திலும் இடம்பெற்றிராத ஏழு பெண்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த ஏழு பெண்களும், நதி தெய்வங்கள்.

இடுப்புக்கு மேலே பெண் உருவமும், இடுப்புக்குக் கீழே நீர்ச்சுழலுமாகத் திகழும் அந்தப் பெண்களின் ஒரு கரத்தில் தண்ணீர்ச் சொம்பு, மறு கரத்தில் தாமரை, குவளை போன்ற மலர்களில் ஒன்று எனக் காணலாம். இவை, நம் இந்திய தேசத்தின் புனித நதி தெய்வங்களின் உருவங்கள். நதிப்பெண்கள் என்பதால், இடுப்புக்குக் கீழே தண்ணீர்த்திரளைச் சுழலுடன் சோழச் சிற்பிகள் நயமாகக் காட்டியுள்ளனர்.

மேல் தளத்தில், ஏழு நதிப் பெண்களின் சிற்பங்கள் காணக் கிடைத்தாலும், கங்கை எனும் நதிமகளை, தரைத்தளமான ராஜகம்பீரன் திருமண்டபத்தின் உள்ளே மாடம் ஒன்றில் முழுப் பெண்ணாகவே வடித்துள்ளான் சிற்பி. கருப்பு நிறத்திலான, உயர்ந்த கருங்கல்லில் இந்தச் சிற்பத்தை வெகு அழகாக வடித்துள்ள விதம் ரசிக்கத்தக்கது.

மகுடம் அணிந்து, பேரெழிலுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீகங்காதேவி. வலது கரத்தில் மலர்ந்திருக்கிற தாமரைப் பூவையும், இடது கரத்தில் தண்ணீர்ச் சொம்பையும் ஏந்தியபடி இருக்கிறாள் அவள். இந்தச் சிற்பத்துக்கு மேலே கோஷ்டப் பகுதியில், சோழர் கால எழுத்துப் பொறிப்பாக, 'கங்காதேவி’ என்ற பெயர் செந்தூர எழுத்துகளில் மங்கிய நிலையில் காணப்படுகிறது.

குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் ஸ்ரீநாகேஸ்வரன் கோயிலில் பதிகம் பாடிய திருநாவுக்கரசர் கங்கை, யமுனை, சரஸ்வதி, தாவி (சிந்து நதியில் இணையும் காஷ்மீர நாட்டு நதி), கோமதி, கோதாவரி, பொன்னியாம் காவிரி என ஏழு நதி தெய்வங்கள் கும்பகோணத்துக்கு வந்து ஈசனை வழிபட்டதாகப் பாடியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள ஏழு நதி தெய்வங்களை, இங்கே தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலில் சிற்பமாகப் பார்க்கிறோம்.

அதேபோல், இந்தக் கோயிலில் வியக்க வைக்கும் இன்னொரு சிற்ப நுட்பம்... திருக்கயிலாயக் காட்சி. ஏழு நதி தெய்வங்கள் உள்ள மண்டபத்தின் மேற்தளத்தில் உள்ள சிறுமண்டபம், ஸ்ரீவிமானத்தின் கிழக்கு முகத்துடன் இணைந்துள்ளது. அந்த மண்டபத்தின் தென்புறம் மற்றும் வடபுறம் உள்ள சுவர்களின் வெளிப்புறம் திருக்கயிலாய மலையில் சிவபெருமானைத் தொழுது நிற்கும் தெய்வங்கள், இருடிகள், கணங்கள் என நூற்றுக்கணக்கானவர்களின் சிற்றுருவச் சிற்பங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இந்தச் சிறுமண்டபமும் ஸ்ரீவிமானமும் இங்கே திருக்கயிலாய மலையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.

சிறுமண்டபத்தின் உள்ளே உள்ள கற்பீடத்தின் மேலே, அமர்ந்த கோலத்தில் சிவபெரு மானும் உமாதேவியும் இருக்க, அருகே மற்றொரு பெண் தெய்வம் நின்ற கோலத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இந்த மூன்று வடிவங்களும் கி.பி.15-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு, சுண்ணாம்புச் சுதையால் வடிக்கப்பட்டவை.

ஸ்ரீவிமானமும் திருக்கயிலாயக் காட்சியைக் காட்டுகிற மண்டபமும் சோழர் காலப் படைப்பாக இருக்கும்போது, இவை மட்டும் ஏன் பிற்காலத்தில் சுதையால் அமைக்கப்பட்டன என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே நெடுங்காலம் தவித்து வந்தேன். சமீபத்தில்தான் அதற்கு விடை தெரிந்தது.


அதாவது, கி.பி.14-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், தமிழகத்தில் உள்ள கோயில்கள் பலவும் சூறையாடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் கோயில் உடைமைகளைக் காப்பாற்றும் விதமாக கோயிலின் வளாகத்துக்குள்ளேயே வைத்துப் புதைத்தனர். தாராசுரத்தில் அப்படிப் புதைக்கப்பட்ட இருபத்தொரு செப்புச்சிலைகளை, இந்தியத் தொல்லியல் துறையினர் பூமியில் இருந்து அகழ்ந்து எடுத்தார்கள். அவற்றில், திருக்கயிலாய மண்டபத்து பீடத்தின் மேல் வைக்கப்பட்ட கயிலாயப் பகுதி மற்றும் ஸ்ரீஉமாதேவி என இரண்டு செப்புச் சிலைகளும் அடங்கும்.

இரண்டாம் ராஜராஜ சோழன், ராஜராஜேச்சரம் என்ற பெயரில் எடுத்த கயிலாய மலையான தாராசுரம் திருக்கோயிலின் ஸ்ரீவிமானத்துக்கு, அந்தப் பேரரசனின் மகன் மூன்றாம் குலோத்துங்கன் பொற்தகடுகளைப் போர்த்தி, பொன்மலையாகவே மாற்றி இருந்தான். இதனை அவனுடைய கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

தாராசுரம் கோயில் மண்டபத்தின் மேற்தளத்தில் ஏறி நின்று, நதி தெய்வங்களைக் கண்டு வணங்கி, அங்கே உள்ள திருக்கயிலாயக் காட்சி மண்டபத்தில், புதையுண்டு கிடைத்த செப்புத் திருமேனிகளையும் அந்த ஸ்ரீவிமானத்தை பொற்தகடுகள் போர்த்தியிருந்த பொற்கயிலையாகவும் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால், சோழப் பேரரசர்கள் காலத்தில் திகழ்ந்த அந்த பொன் கயிலாயத்தின் மாட்சிமையும், அவர்களுக்கு சிவனார் மீதும் சிவாலயங்கள் மீதும் இருந்த பக்தியும் தெளிவுறப் புலப்படும்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:18 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 5
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
குடந்தை நாகேச்சரம்


பல்லவ தேசமான காஞ்சிபுரத்தையும், சோழ தேசமான திருக்குடந்தை எனும் கும்பகோணத்தையும் 'கோயில் நகரம்’ என்று சொல்வார்கள். எங்கு திரும்பினாலும் கோபுரங்கள்; எந்தத் தெருவில் நுழைந்தாலும் கோயில்கள்.

வடமேற்கில் கும்பேச்சரம் ஸ்ரீசார்ங்கபாணி கோயிலும், தென்மேற்கில் ஸ்ரீபிரம்மன் கோயிலும், தென்கிழக்கில் மகாமகக் குளத்துடன் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலும் (காரோணம்), வடகிழக்கில் ஸ்ரீபாணபுரீஸ்வரர் கோயிலும், வடக்கில் ஸ்ரீசக்ரபாணி கோயிலும் எனக் கோயில்களால் சூழ்ந்த கும்பகோணத்தில், இவை அனைத்துக்கும் நடுவில் கீழ்க்கோட்டம் எனும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது, திருநாகேஸ்வரம் எனும் தலத்தில் இருந்து வேறுபட்டது. திருநாவுக்கரசர் இந்த ஆலயத்தை 'குடந்தைக் கீழ்க்கோட்டம்’ எனத் தன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முற்காலச் சோழர் காலக் கோயில்கள் வரிசையில் இந்த ஆலயம் முக்கிய இடம் வகிக்கும் தலமாகத் திகழ்கிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தில் மூன்று நாட்கள், சூரியக் கதிர்கள் ஸ்ரீநாகேஸ்வரர் திருமேனியைத் தீண்டுவது சிறப்பு. கருவறை கோஷ்டங்களில் உள்ள தெய்வத் திருமேனிகளும் சோழ அரச- அரசியர் சிற்பங்களும் நேர்த்தியான கலைப் படைப்புகளாகத் திகழ்கின்றன.

மூலஸ்தானத்துக்கு முன்னே உள்ள மண்டபத்தின் தென்புறம், சிறிய கோயில் அமைந்துள்ளது. அதில் ஸ்ரீகணபதியார் சிற்பம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் இப்படியான கலை வடிவுடன் கூடிய கணபதியாரைக் காண்பது அரிது! வழவழப்பான கறுப்பு வண்ணக் கல்லில், பீடத்தின் மேல் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீபிள்ளையார். கீழ் நோக்கிய இரண்டு கரங்களில் அட்சமாலையும் கதையும் கொண்டிருக்க, வலது முன்கரத்தில் ஒடிந்த தந்தமும், இடது முன்கரத்தில் மோதகப் பாத்திரமும் ஏந்தியுள்ளார்.

அதுமட்டுமா? விநாயகப் பெருமானின் துதிக்கை, மோதகத்தை ஒடுக்கும் நிலையில் உள்ளது. தலைக்கும் மேலே உள்ள அலங்கார திருவாசியும் அதற்கும் மேலாக இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருக்கிற கந்தர்வர்களும் கொள்ளை அழகு! கீழே ஒருபக்கம் எலியும் மறுபக்கம் சிவகணமும் இருப்பதைப் பார்க்கலாம்.

தமிழகத்தின் சிற்ப அமைப்பில் இருந்து மாறுபட்ட இந்த விநாயகப் பெருமானுக்குச் சுவையான வரலாறு ஒன்றும் உண்டு. கி.பி.1012-ல் இருந்து 1044-ஆம் வருடம் வரை ஆட்சி செய்த கங்கை கொண்ட சோழன் எனப்படும் முதலாம் ராஜேந்திர சோழனின் படைகள், தற்போதைய வங்க தேசம் வரை சென்று பல நாடுகளை வென்று வந்தன. அங்கிருந்து பொருட்களை அள்ளி வந்தார்கள். அப்போது குடம் குடமாகக் கங்கை நீரையும் இங்கே எடுத்து வந்தார்கள்.

வங்க தேசத்து பாலர் மரபு அரசனான மகிபாலனை வென்ற சோழப்படை, வங்கத்தில் வழிபாட்டில் இருந்த கணபதியார் திருமேனி ஒன்றையும் எடுத்து வந்து, அதைக் குடந்தை கீழ்க்கோட்டமான ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்து, வழிபடலானார்கள். அந்தச் சிற்பமே இந்த ஸ்ரீவிநாயகர் திருமேனி. இவரை கங்கைகொண்ட விநாயகர் என்றே அழைக்கின்றனர்.

இந்தக் கோயிலில் நாம காணவேண்டிய மற்றொரு இடம்... கூத்தம்பலம் எனும் ஸ்ரீநடராஜ பெருமானின் மண்டபம். இந்த மண்டபம், ஆகாயத்தில் செல்லும் தேர் மண்டபம்போல் கட்டப்பட்டிருப்பது சிறப்பு. கல் தேராகத் திகழும் மண்டபத்தின் இரண்டு பக்கமும் சுமார் 9 அடி உயரத்தில் இரண்டு தேர்ச் சக்கரங்கள் உள்ளன. அந்தச் சக்கரங்களின் ஆரக்கால்களாக பன்னிரு ஆதித்தர்களின் (சூரியர்களின்) சிற்பங்களைக் கண்டு ரசிக்கலாம்.

ஒரே கல்லால் ஆன சக்கரம், தேரின் அச்சில் மாட்டப்பட்டிருக்கும். சக்கரங்களுக்கு முன்னே இரண்டு பக்கமும் குதிரைகள் தரையில் கால்கள் பாவாத நிலையில், பாய்ந்தபடி தேரை விண்ணில் இழுத்துச் செல்கின்ற சாதுர்யத்தை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர்.

தேர் மண்டபத்தின் உள்ளே சென்று பார்த்தால், பிரபஞ்ச பேரியக்கமாக விளங்கும் ஆடல்வல்லான் நடராஜப் பெருமான் ஆடிய வண்ணம் இருக்க, ஸ்ரீஉமாதேவி கைத்தாளம் இசைத்தபடி நிற்கிறார். திருமாலோ குழலொன்றினை இசைத்தபடி காட்சி தருகிறார். செம்பில் வடிக்கப் பெற்ற இவை, சோழர்தம் கலைத்திறனின் உச்சபட்ச வெளிப்பாடாகத் திகழ்கின்றன.

ஸ்ரீவிமானத்தின் தென்புறம் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோஷ்டத்துக்கு மேலாக முதல் தளத்தில் காணப்படும் ஸ்ரீவீணாதரர் சிற்பத்துக்கு இணையானதொரு சிற்பத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. 'வருங்கடல் மீள எம் இறை நல்வீணை வாசிக்குமே’ என்ற நாவுக்கரசரின் வாக்கு, இங்கு உயிர்ப்புடன் திகழ்வதைக் காணலாம்.

ஸ்ரீவிமானத்தின் அடித்தளமான அதிஷ்டானத்து கண்டபாத வரியில் 4 அங்குல உயரம் 4 அங்குல அகலம் உள்ள சிறுசிறு பகுதிகளாக 56 சிற்பப் படைப்புகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ராமாயணக் காட்சிகள். கலைக்கோட்டு முனிவர் செய்யும் புத்திர காமேஷ்டி யாகக் காட்சியில் தொடங்கி, ஸ்ரீராம கதை முழுவதும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இதே ஸ்ரீவிமானத்தில் சிவபுராணக் காட்சிகளும், நடன இசைக் கலைஞர்களின் சிற்பங்களும் அழகுற இடம் பெற்றுள்ளன.

இந்தக் கோயிலில் உள்ள செப்பேடு, சிறப்புக்கு உரியது. 18-ஆம் நூற்றாண்டில், தஞ்சை மராட்டிய மன்னர் துளஜாராஜா காலத்தில் இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி, அறக்கட்டளை ஒன்றை இந்தக் கோயிலில் அமைத்தனர். அதுகுறித்து செப்பேட்டு சாசனமும் எழுதிவைத்தனர். அந்தச் செப்பேட்டின் ஒரு பக்கத்தில் இந்தக் கோயில் இறையுருவங் களையும், கலைஞர்கள் வாசித்த 50 இசைக்கருவிகளையும் சிறிய உருவங்களாகச் செய்து அதில் பதித்துள்ளனர். இத்தனைப் பெருமைகள் கொண்டதாலும் நுண்கலைப் படைப்புகளாலும் தனித்தன்மையுடன் திகழ்கிறது குடந்தை ஸ்ரீநாகேச்சரம்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:31 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6
ஆலயம் ஆயிரம்!


குடுமியான்மலை. புதுக் கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம். ஒருகாலத்தில், பண்டு திருநலக்குன்றம் என்றும், சிகாநல்லூர் என்றும் அழைக் கப்பட்டதாக, இந்த ஊர் ஆலயத்தின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

சின்ன ஊர். அதன் நடுவே அழகிய மலை. அதன் அடிவாரத்தில் குடைவரைக் கோயில். இதையட்டி, பிற்காலப் பாண்டிய மன்னன் எடுப்பித்த ஸ்ரீசிகாநாதர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு நேர்கிழக்கே, அழகிய இடப மண்டபம்; மண்டபத்துக்கு முன்னே கோயிலின் புஷ்கரணியான பாற்குளம். ஒருமுறையேனும் இந்த இடத்துக்கு வந்து, சிற்ப நுட்பங்களையும் ஆலயக் கட்டுமானத்தையும் கண்ணாரப் பார்க்கவேண்டும்.

இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னம் இது. அதேநேரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகச் சிறந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்று என்றும் போற்றப்படுகிறது.

கோயிலுக்குள் நுழைந்தால்... களஞ்சியமெனக் காட்சி தரும் சிற்பங்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவோம். மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிவாலயம் இது. கருவறையில் சிவலிங்கம், முன்மண்டபத்தில் ரிஷபம், சுவரில் ஸ்ரீகணபதி, கருவறை வாசலில் துவாரபாலகர்கள் என மிக நேர்த்தியான சிற்பங்கள்; நுட்பமான வேலைப்பாடுகள்! மலையைக் குடையும்போதே சிற்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிய, ஆச்சரியப்பட்டுப் போகிறது மனம்.

பல்லவ மன்னர்கள்தான் குடைவரைக் கோயில்களுக்குப் பெயர் பெற்று விளங்கினார்கள். கருவறையை அப்படியே வெட்டியெடுத்து, பிறகு சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்வது அவர்கள் வழக்கம். ஆனால், முற்காலப் பாண்டியர் குடைவரைகளில், மலையைக் குடையும்போதே லிங்கத் திருமேனியையும் ரிஷபத்தையும் உருவாக்கிவைத்தார்கள். இதோ, இங்கே குடுமியான்மலை தலத்திலும் குடைவரைக் கோயிலாக அவற்றைக் காண முடிகிறது.

அதுமட்டுமா? முற்காலப் பாண்டியர்கள் தனியே தோற்றுவித்த ஸ்ரீசண்டீசர் திருமேனியும் அழகுற அமைந்துள்ளது, இங்கே. அற்புதமான திருமேனியில், அழகே உருவெனக் கொண்டு காட்சி தரும் அழகே அழகு!

இந்தியாவில் வேறு எந்த ஆலயத்துக்கும் இல்லாத சிறப்பு இந்தக் குடைவரைக் கோயிலுக்கு உண்டு. அதாவது, கோயிலின் வெளிப்புறம் மலைப்பாறையின் நடுவே ஸ்ரீவிநாயகரின் திருவுருவத்தை அமைத்து, அதைச் சுற்றிலும் கல்வெட்டு எழுத்துக்களைப் பொறித்து வைத்துள்ளனர். இசையின் இலக்கணத்தைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் இவை.

ஏழாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில், 'சித்தம் நமசிவாய’ என்று சிவ வணக்கத்துடன் துவங்குகிற குறிப்புகளைப் படிக்க முடிகிறது. இங்கு 'பரிவாதினி’ என்று வீணை பற்றிய குறிப்பும் உள்ளது.

இந்தக் குடைவரைக் கோயிலுக்கென பின்னாளில் (கி.பி.13-ஆம் நூற்றாண்டில்) துக்கையாண்டி என்பவரின் மகள் நாச்சி எனும் தேவரடியார், அம்மன் கோயில் ஒன்றை இங்கே எழுப்பியுள்ளாள்.

குடைவரைக்கோயிலுக்கு எதிரில் பெரிய அளவில் எடுக்கப்பட்ட ஸ்ரீசிகாநாதர் ஆலயத்தின் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. திருமாலின் தசாவதாரம், ரதி- மன்மதன், ராவணன், வாலி, ஸ்ரீஅனுமன், அகோர வீரபத்திரர், ஸ்ரீகாளி, ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீஆறுமுகப் பெருமான் ஆகியோரின் சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.

குறிப்பாக, கோயிலின் உள்ளே இருந்தபடி, குடுமியான்மலையின் மேலே உள்ள முகடு ஒன்றை உற்றுநோக்கினால், அங்கே ரிஷபாரூடராக சிவனார் எழுந்தருள... அறுபத்து மூன்று நாயன்மார்களும் அருகில் கைகூப்பியபடி நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். அந்த மலைமுகட்டில் சிவனாரும் நாயன்மார்களும் வானமண்டலத்தில் தோன்றி நமக்குக் காட்சி அளிப்பது போலான அந்தச் சிற்பப் படைப்பை வேறங்கும் காண்பது அரிது!

கோயிலுக்குக் கிழக்கில் உள்ள ரிஷப மண்டபத்தை அடுத்து உள்ள திருக்குளத்தில், அற்புதமான சிற்பம் அமைந்துள்ளது. அதாவது, குளத்துக்கு மழை நீரைக் கொண்டு வரும் கால்வாயில் கற்பலகை ஒன்று குறுக்கே நடப்பட்டுள்ளது. அதில் ஒரு பசுவின் உருவத்தைக் காணலாம். பசுவின் மடிக்காம்பு உள்ள இடத்தில், சிற்பப் பலகையில் துளையிடப்பட்டுள்ளது. அந்தத் துளை வழியே, மழை நீரானது குளத்துக்குள் வந்து விழும். அதாவது, சட்டென்று பார்த்தால், பசுவின் மடியில் இருந்து பால் பெருக்கெடுத்து வந்து குளத்தில் விழுவதுபோல் தோன்றும். அதனால்தான் இந்தக் குளத்துக்கு பாற்குளம் என்று பெயர் அமைந்ததாம்.

என்ன அழகிய கற்பனை பாருங்களேன்! அதாவது, திருக்குளத்து நீரையும் புனிதமான பசும்பாலாகக் கருதவேண்டும் என நமக்குக் கற்பித்த அந்தச் சிற்பியை எவ்வளவு பாராட்டினாலும் தகுமல்லவா!

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:34 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 7
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்ட பிரமாண்டமான கோயில் நகரம், காஞ்சிபுரம். தொண்டை நன்னாட்டுக் காஞ்சி எனப் போற்றுவார்கள். அத்தனைக் கோயில்களின் வரிசையில், திலகமெனத் திகழ்கிறது ஒரு சிவாலயம்.

கி.பி.700 முதல் 726-ஆம் வருடம் வரை நல்லாட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், மிக அருமையான சிவன் கோயில் ஒன்றை எழுப்பினான். இந்தக் கோயிலில் உள்ள இறைவனின் திருநாமம்- ஸ்ரீகயிலாசநாதர். தமிழகத்தின் சிற்பக் களஞ்சியம் என்றே இந்தக் கோயிலைச் சொல்லலாம். அதுமட்டுமா?

காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு காலத்தால் அழிக்க முடியாத மற்றொரு வரலாற்றுச் சிறப்பும் உண்டு. சோழ தேசத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழ மன்னன், இன்றைக்கும் எல்லோரும் வியக்கும்படியான பெரிய கோயிலைக் கட்டினான் அல்லவா! அப்படியரு கோயிலைக் கட்டவேண்டும், மிக அரிதான கோயிலாக அதை அமைக்க வேண்டும் என அவனுக்குள் ஆர்வத்தையும் வேகத்தையும் ஊட்டியதே இந்த ஸ்ரீகயிலாசநாதர் கோயில்தான்!

சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் எனும் இளைஞன், அரியணை ஏறியதும் வீர சபதம் ஒன்றை மேற்கொண்டான். தன் முன்னோரின் தலைநகரமான வாதாபியை பல்லவர்கள் அழித்ததால், அவர்களின் தலைநகரமான காஞ்சியைப் பூண்டோடு அழிப்பதாகச் சபதம் செய்தான். அதன்படி பெரும் படையுடன் காஞ்சிக்குள் நுழைந்தான்.அங்கே... அவன் முதலில் கண்டது ஸ்ரீகயிலாசநாதர் கோயிலைத்தான்!

உள்ளே நுழைந்தான். அங்கே வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு வியந்தான். கோயிலின் அழகில் சொக்கிப் போனான். கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவனின் கோபமும் பழி வாங்கும் உணர்ச்சியும் மெள்ள மெள்ள வடிந்து, காணாமல் போனது. ஸ்ரீகயிலாசநாதரின் சந்நிதிக்கு வந்து, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, சிவனாருக்குப் பொன்னையும் பொருட்களையும் வாரி வாரி வழங்கி, காணிக்கை செலுத்தினான். அங்கேயே கல்வெட்டும் பொறித்தான்!

அதுமட்டுமா? மயக்கவும் வியக்கவும் செய்த சிற்பங்களைப் படைத்த சிற்பிகளைக் கௌரவித்தான். அவர்களை சாளுக்கிய தேசத்துக்கு அழைத்துச் சென்றான். பட்டடக்கல் எனும் ஊரில், ஸ்ரீவிருபாட்சர் கோயிலைக் கட்டினான். அந்த உன்னதச் சிற்பிகளின் கைவண்ணத்தால், அந்தக் கோயில் சரித்திரத்தில் இடம்பெற்றுப் பொக்கிஷமெனத் திகழ்கிறது.

இத்துடன் முடிந்ததா சுவாரஸ்யம்?!

காஞ்சி நகரத்துச் சிற்பிகளின் கலைத் திறனில் வியந்து மிரண்ட ராஷ்டிரகூட கிருஷ்ணன், அவர்களை எல்லோராவுக்கு அழைத்துச் சென்றான். அங்கேயும் அழகியதொரு பிரமாண்ட ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உருவானது.

ஆக... மரபுகளும் தேசங்களும் கடந்த மன்னர்கள் பலரும் வியந்து போற்றிய காஞ்சி ஸ்ரீகயிலாசநாதர் கோயிலே அனைத்துக்கும் மூலகாரணமாகத் திகழ்ந்தது. கோயிலின் கட்டட அமைப்பையும், அங்கே உள்ள சிற்பங்களையும் பார்த்தால்... மலைத்துப் போய்விடுவோம்.

ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு முன்னால் உள்ள திறந்த வெளியில் ஒருபுறம் சிம்மத்தூண்கள் உள்ள மேடை ஒன்று இருக்கிறது. அந்த மேடையில் ரிஷபம் ஒன்று படுத்துக் கொண்டிருக்கும் பேரழகைப் பார்க்கலாம். ஈசான மூலையில் கோயிலின் திருக்குளம் அமைந்துள்ளது. ரிஷபத்துக்கு அருகில் உடைந்த தூணில், சிம்மம் செதுக்கப் பட்டிருக்கிறது. சுமார் 1,200 வருடங்களாக, அந்தச் சிம்மம் உயிர்ப்புடன் உறுமிக்கொண்டிருக்கும் அழகே அழகு!

ஸ்ரீகயிலாசநாதர் கோயில் திருமதிலின் கிழக்குப் பகுதியில் சிறிய கோபுரவாயில் ஒன்று உள்ளது. அந்த வாசலுக்கு வெளியே தென்புறம் இரண்டும், வடக்கில் ஆறும் என எட்டு சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் தாராலிங்கங்கள் இருந்துள்ளன. அந்த லிங்கங்களுக்குப் பின்புறம் கருவறைச் சுவரில் சிவபெருமான், உமையவள், மைந்தன் முருகன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் இருப்பதை இன்றைக்கும் காணலாம்.

ஒவ்வொரு சிற்பமும் பேரழகு வாய்ந்தவை. இந்தச் சிற்றாலயங்களின் வெளிப்புறச் சுவர்களில் சிவபெருமானின் பல்வேறு திருக்கோலங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

திருவாயிலின் வடக்குப் புறம் உள்ள ஆறு ஆலயங்களில் முதல் ஆலயத்துக்கு 'நித்ய வினிதீஸ்வரம்’ என்ற பெயர் கல்வெட்டாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் உள்ள மூன்றாவது கோயிலை, ராஜசிம்ம பல்லவனின் பட்டமகிஷி ரங்கபதாகை என்பவள் எடுப்பித்ததாகச் சொல்கிறது கல்வெட்டு.

நுழைவாயில் கோபுரம் கடந்து உள்ளே சென்றால், சிறிய பிராகாரங்களுடன் நடுவே ஒரு பெருங்கோயில் உள்ளது. இதனை ராஜசிம்ம பல்லவனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் அமைத்துள்ளான். 'மகேந்திர வர்மேஸ்வர கிருஹம்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கோயிலின் வெளிப்புறச் சுவர்களிலும் மதிலின் இரண்டு பக்கங்களும் அற்புதமான சிற்பங்கள், நேர்த்தியுடன் வடிக்கப் பட்டுள்ளன. இடையிடையே பாய்கிற சிம்மங்கள், அதன் மேல் வீரர்கள், அகத்தியர் பெருமான், ஸ்ரீலட்சுமி, சிவ திருக்கோலங்கள் என ஒவ்வொரு சிற்பமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.

கோயிலின் கருவறையில், எழிலார்ந்த தாராலிங்கமும் சோமாஸ்கந்தர் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபப் பக்கச் சுவர்களில் ஸ்ரீபிட்சாடனரும் சம்ஹாரத் தாண்டவரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் கோயிலுக்குப் பின்னே, அந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த ஸ்ரீகயிலாசநாதர் கோயில் அமைந்துள்ளது.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:39 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 8
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


உலகப் புகழ்மிக்க தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு முன்னோடியாக இருந்த காஞ்சி ஸ்ரீகயிலாசநாதர் கோயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியரு வியப்பின் உச்சம், இந்த ஆலயம்!

பரந்த முன்வெளியில் ரிஷபம், கோயிலுக்கு வெளியே சிறிது சிறிதான எட்டு ஆலயங்கள், அவற்றுக்குப் பின்புறத்தில் மூன்றாம் மகேந்திர பல்லவ மன்னன் எடுப்பித்த நித்திய வனிதீஸ்வரம் எனப்படும் சிவன் கோயில்.... 'கச்சிப்பேட்டுப் பெரிய தளி’ என்று பராந்தக சோழனும் ராஜராஜ சோழனும் கல்வெட்டுகளில் குறிப்பிடும் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு முன்னே உள்ள பிரமிக்கத்தக்க விஷயங்கள் இவையெல்லாம்!

கோயிலின் நான்குபுறமும் பிரமாண்ட மதில் சூழ்ந்திருக்க, திருக்கயிலாய மலையாகவே திகழ்கிறது ஆலயம். இதனை ராஜசிம்ம பல்லவ மன்னன் எடுப்பித்தான். எனவே, இந்தத் தலம் 'ராஜசிம்ம பல்லவ ஈஸ்வரம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.

பிராகாரச் சுவரில், திருமதிலின் வெளிப்புறம் முழுவதிலும் பாய்ந்து நிற்கிற சிம்மச் சிற்பங்களைக் காணலாம். உள்ளே... வேறு எந்தக் கோயிலிலும் தரிசிப்பது அரிது என்னும்படியாக, சுமார் 53 சிற்றாலயங்கள், சிம்மத்தூண் மண்டபங்களுடன் திகழ்கின்றன. இவற்றில் பெரும்பாலான இடங்களில், சிவபெருமான் உமையவளுடனும் பிள்ளை கந்தபிரானுடனும் காட்சி தரும் புடைப்புச் சிற்பங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன.

கோயிலின் உள்ளே உள்ள பல சிற்றாலயங்களில் சிவபெருமான், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு முதலானோரின் தெய்வத் திருவுருவங்கள், பல்வேறு திருக்கோலங்களில் வடிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில், ஸ்ரீதுர்கையின் சிற்பம் ஒன்று பேரழகுடன் வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டால், பிரமித்துப் போவீர்கள்.

ஆமாம்... ஒற்றைக் காலைத் தூக்கியபடி, கடும் கோபமான முகத்துடன், சிங்கத்தின் முதுகின் மேல் தன் இடதுகாலை ஊன்றியபடி, தரையில் நின்றிருக்கும் ஸ்ரீதுர்கையின் திருக்கோலத்தை வேறெங்கும் பார்ப்பது அரிதான ஒன்று! எட்டுத் திருக்கரங்களுடன் செம்மாந்து நிற்கும் தேவி, இடது கரங்களில் முறையே வில், கேடயம், சங்கு, கிளி ஆகியவற்றையும், வலது கரங்களில் அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றையும் ஏந்தியவாறு, ஒரு கரத்தை இடுப்பின் மீது வைத்தபடி நிற்கிறாள். இத்தனை இருந்தாலும், அவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தால், அதில் ததும்பி நிற்கிற கருணையை உங்களால் உணரமுடியும்!

ஸ்ரீதுர்கையின் சிற்றாலயத்துக்கு அடுத்து உள்ள சிறிய கோயிலில், சுவர் ஒன்றில் ஸ்ரீநரசிம்மரின் திருவுருவம் காணப்படுகிறது. இரணியனுடன் போர் புரியும் ஸ்ரீநரசிம்மத் தோற்றம். எட்டுத் திருக்கரங்கள். கடும் உக்கிரத்துடன் திருமுகம். இரணியனை ஆவேசமாகத் தாக்கும் காட்சி தத்ரூபமாக வடிக்கப் பட்டுள்ளது. இது, கருடனுக்கும் ஸ்ரீநரசிம்மருக்கும் நிகழும் போர் என்று ஆய்வாளர்கள் சிலர் குறித்துள்ளனர்.

தெற்கு மதிலுக்கு அருகில், மற்றொரு சிற்றாலயத்தில் ஸ்ரீபிரம்மாவின் தலையைக் கொய்து போடும் சிவனாரின் திருக்கோலம் வடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிம்மத் தூண்களுக்குப் பின்னே காணப்படுகிற இந்தக் காட்சியில் எட்டு திருக்கரங்களுடன் திகழும் சிவபெருமான் வில், வாள் முதலான பல ஆயுதங்களை ஏந்தியவராக, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலால் பாய்ந்தோடி வரும் நிலையில் காட்சி தரும் அழகே அழகு! மிக அற்புதமான சிற்ப நுட்பத்துடன் அமைத்திருக்கிறார்கள்.

கோப முகம், வாள் தூக்கிய திருக்கரம், ஒரு கரத்தில் துண்டித்த ஸ்ரீபிரம்மாவின் தலை, கீழே ஒரு தலையை இழந்து நான்முகனாய் காட்சி தரும் பிரம்மா சிவபெருமானை வணங்குவதும், அடியவர் ஒருவர் இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் அமர்ந்திருப்பதும் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.

அட்டவீரட்டம் எனப்படும் சிவபெருமானின் பராக்கிரமங்கள் நிகழ்ந்த திருத்தலங்களின் வரிசையில், தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருக்கண்டியூர் திருத்தலமும் ஒன்று. ஸ்ரீபிரம்மாவின் தலையைக் கொய்த தலம் அதுதான். ஆனால், அந்த நிகழ்வை இங்கே சிற்பமாக வடித்துள்ளனர் என்பது சிறப்பான ஒன்று.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by M.Saranya on Wed Sep 03, 2014 2:40 pm

எத்தனை ஆச்சர்யம்
பெயரை பொறிக்காமலேயே பெயரை நிலைக்க செய்த மாபெரும் சோழ மன்னன்
இவ்வளவு நல்ல குணங்கள் பொருந்திய மன்னன் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியம்
அரசியல் ஆட்சியை விட அரசாட்சியே மேலானது போலும்
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:47 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 9
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


ராஜசிம்மேஸ்வரம் எனும் காஞ்சிபுரத்து ஸ்ரீகயிலாசநாதர் கோயிலின் கருவறையில், புறச்சுவர்களில் முறையே ஸ்ரீகௌரி பிரசாததேவர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஉமாமகேஸ்வரர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஹரிஹரர், ஸ்ரீலிங்கோத்பவர், பிச்சை உகக்கும் பிட்சாடனர், சந்தியா தாண்டவமூர்த்தி, சம்ஹார தாண்டவமூர்த்தி, ஸ்ரீகணேசர், ஸ்ரீவீணாதரர், ஊர்த்துவ தாண்டவர், காலசம்ஹாரர், சிம்மவாஹினியாக தேவி, ஸ்ரீதிரிபுரசம்ஹாரர், ஸ்ரீபைரவி, ஸ்ரீபைரவர், ஸ்ரீயோகேச மூர்த்தி, ஸ்ரீகௌசிகி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஜேஷ்டாதேவி, ஸ்ரீகங்காதரன் என இருபத்து மூன்று எழிலார்ந்த தெய்வ வடிவங்கள் இடம் பெற்றிருப்பதைத் தரிசிக்கலாம்.

இந்தச் சிற்பங்கள் அனைத்தும் இந்தியக் கலை இயல் வரலாற்றில் தனி இடம் பெற்றுத் திகழ்பவை. தென்புறச் சுவரில் காணப்படும் ஆலமர்ச்செல்வரின் சிற்பம் தனித்தன்மை வாய்ந்தது. ஆலமரத்தின் கீழ் அண்ணல் நான்கு திருக்கரங்களுடனும், ஒரு காலை மடக்கிக்கொண்டு மறு காலைத் தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்த நிலையில், அழகே உருவெனக் காட்சி தருகிறார்.

வலது மேற்கரத்தில் உருத்திராட்ச மாலையும், இடது மேற்கரத்தில் எரி கொள்ளியும் திகழ, ஜடாபாரத்துடன் காணப்பெறுகிறார். வலது முன்கரம் உடைந்துள்ளது. இடது முன்கரத்தால் வியாக்கியான முத்திரை காட்டுகிறார். காலடியில் இரண்டு மான்களும், யானையும் படுத்துள்ளன. ஸ்வாமியின் தலைக்கு மேலே மகர தோரணத்தில் கணபதியார் திருவுருவம் உள்ளது. தாமரைத்தடாகம், உருமும் சிம்மங்கள், சனகாதி முனிவர்கள் ஆகிய சிற்பங்கள் இரண்டு பக்கங்களிலும் காணப்படுகின்றன.

மேற்குத் திசையில், எட்டுத் திருக்கரங்களுடன் சந்தியா தாண்டவமாடும் சிவனாரின் சிற்பம், பிரமிக்கத்தக்க ஒன்று. அந்தி மயங்கும் வேளையில் உமையவள் பார்க்க, அவர் ஆடுகிறார் என்பதை நமக்கு உணர்த்துவது அற்புதம். ஒரு கையை ஊன்றியும், ஒரு காலைத் தூக்கி மடித்த நிலையில் நின்றவாறும் காட்சி தருகிறார் உமையவள். சிவனாரின் திருமுகத்தில் ஆனந்தத்தையும் அன்னையின் திருமுகத்தில் சாந்தத்தையும் தத்ரூபமாகக் காட்டுகிற சிற்ப நுட்பத்தில் நாம் கிறங்கி நிற்போம், அங்கேயே!

இதையடுத்து, சம்ஹாரத் தாண்டவமாடுகிற சிவபெருமானின் சிற்பம். பத்துத் திருக்கரங்களும் விரித்த சடையும் கொண்டு ஆடுகிற ஈசன், ஒரு கரத்தைத் தலைக்கு மேலே உயர்த்தி, ஒரு காலை மண்டியிட்டபடி, இன்னொரு காலைப் பின்னோக்கி மடக்கி வைத்து ஆடும் அழகே அழகு! அந்தியில் நடனமாடியபோது இருந்த ஆனந்தம் இங்கே இல்லை. மாறாக, ரௌத்திரமே சிற்ப முகத்திலும் கண்களிலும் தெறிக்கிறது. அது சரி... சம்ஹாரத் தாண்டவத்தில் இருக்கும்போது ஆனந்தம் எப்படி ஒளிரும்?!

இங்கே, இந்தச் சிற்பத்தில் இன்னொரு ஆச்சரிய பிரமிப்பு! திருக்கரத்தில் சாமரம் ஏந்தியபடி நிற்கும் ஸ்ரீகங்காதேவியின் சிற்பத்தை வேறு எங்கும் பார்க்கவே முடியாது. அத்தனை நுட்பமாக இதை வடித்துள்ளனர், சிற்பிகள்.

அடுத்து, கருவறையின் புறச்சுவரில் ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தைத் தரிசிக்கலாம். ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்தவாறு, மார்பில் வீணையை வைத்துக்கொண்டு திருக்காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அவரின் காலடியில் குள்ள பூதம் ஒன்று கைத்தாளம் தட்டி மகிழும் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.

சிவனாரின் முடியழகும், படம் எடுத்தாடும் பாம்பின் சீற்றமும், சிவனார் தரித்துள்ள இடுப்பு ஆடையின் மடிப்புகளும் தத்ரூபமாகக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

இன்னொரு பக்கத்தில், பூதகணங்களின் அணிவகுப்பு. சிம்ம முக பூதமும் இசைக் கருவிகளை இயக்குகிற பூதங்களும் என வரிசையாகக் காட்சி அளிக்கிற சிற்பத்தைப் பார்க்கலாம்.

கருவறையின் மேற்குத் திசையில் லிங்கோத்பவர் தரிசனம் தருகிறார். ஒருபக்கம் திருமாலும் சூரிய- சந்திரர்களும் ஈசனை வணங்கியபடி நிற்க, ஜோதி வடிவான ஈசன் நெருப்புத் தூணில் இருந்து எட்டுத் திருக்கரங்கள் கொண்டு வெளிப்படும் சிற்ப நுட்பம், நம்மைப் பிரமிக்க வைக்கும்.

மேலே உள்ள மகர தோரணத்தில், யோக மூர்த்தியாகத் திகழும் சிவபெருமானின் சிற்றுருவச் சிற்பம் உள்ளது. பன்றியாக பூமியை அகழ்ந்து பார்க்கிற திருமாலின் வடிவம் சற்றே சிதைந்துள்ளது. பறக்கும் பிரம்மாவின் வடிவமோ பேரெழிலுடன் திகழ்கிறது. ஒவ்வொரு சிற்பக் காட்சிக்கும் இடையே பாயும் சிம்மங்கள் உயிர்ப்புடன் திகழ்வதைக் காணலாம்.

காஞ்சி ஸ்ரீகயிலாயநாதர் கோயிலின் தனிச் சிறப்புகளில் இவையும் ஒன்று.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:52 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 10
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


காஞ்சிபுரத்துக் கயிலாசமான ராஜசிம்மேச்சரத்தில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மணற்கற்கள் என்று கூறப்படும் ஒருவகைக் கல்லால் உருவாக்கப் பெற்றவை. அவை கருங்கற் சிற்பங்களின் உறுதித்தன்மையைவிட சற்றுக் குறைவு உடையவைதான்.

அந்த மணற் கற்சிற்பங்களை வழுவழுப்பாகச் செய்ய இயலாது. அதனால்தான் ராஜசிம்ம பல்லவன், கச்சிப்பேட்டுப் பெரிய தளியில் எடுத்த மணற் கற்சிற்பங்களின் மீது சுண்ணாம்புக் காரையைப் பூசி, அதன் மேல் வண்ணங்களைத் தீட்டச் செய்தான். இன்றைக்கும் ஸ்ரீகயிலாசநாதர் கோயில் சிற்பங்கள் சிலவற்றில் பழைய சுண்ணாம்புக் காரையையும், அதன் மேல் வண்ணங்கள் தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த திருப்பணிகளின்போது, மணற் கற்சிற்பங்கள்மீது அளவுக்கு அதிகமான சுண்ணாம்புக் காரையைப் பூசி, பல்லவ சிற்பங்களின் அழகைக் குறைத்து விட்டார்கள். ஆனாலும், அவர்கள் பூசிய பூச்சு கால வெள்ளத்தில் சிதைந்து விழுந்து விட்டதால், பல்லவச் சிற்பிகள் படைத்த நுட்பத்தையும் எழிலையும் இப்போது நம்மால் பார்க்கமுடிகிறது.

திருச்சுற்றில் உள்ள சிற்றாலயம் ஒன்றில் கிராதார்ஜுனர் புராணக் காட்சி இடம்பெற்றுள்ளதைக் காணலாம். மூகாசுரன் பன்றி வடிவில் காட்டில் திரிந்தபோது, அங்கு தவம் புரிய வந்த அர்ஜுனன் தனக்கு இன்னல் தந்த பன்றியைக் கொல்ல அம்பு தொடுத்தான். அதே நேரத்தில், அங்கு வேடுவனாக வந்த சிவபெருமான் அதே பன்றி மீது அம்பு எய்ய, பன்றி வீழ்ந்தது. இருவரும் தான்தான் பன்றியை வீழ்த்தியதாக ஒருவருக்கொருவர் பூசல் கொண்டு சண்டையிட்டார்கள். இந்தக் காட்சியை விளக்குகிற சிற்பப் படைப்பை இங்கே கண்டு பிரமிக்கலாம்.

பின்புலத்தில் பன்றி நிற்க, வேடுவனாக வந்த ஈசனை தன் வில்லால் அர்ஜுனன் தாக்க முற்படுகிறான். ஒருவருக்கொருவர் எதிரெதிர் நின்று மோதும் அந்தக் காட்சியை பல்லவச் சிற்பி அப்படியே சிற்பமாக கல்லில் வடித்துள்ள நுட்பம் நம்மை வியக்கச் செய்கிறது.

கருவறைச் சுவரில் எழிலார்ந்த சிம்மத் தூண்கள் அழகு செய்ய, கோஷ்ட மாடம் ஒன்றில் கங்காளத்தைத் தோளில் சுமந்தவாறு பிட்சாடனர் செல்கிறார். அந்தக் கோலத்துக்கே உரிய பாதரட்சைகள், அதேவிதமாக அவரின் திருவடியை அலங்கரிக்கின்றன.

தாருகாவனத்து ரிஷிப் பெண்கள் மண்டியிட்டு அமர்ந்தவாறு பணி செய்கின்றனர். பின்புலத்தில் ரிஷி ஒருவர், தலைக்கு மேல் கையுயர்த்தி தங்கள் மனைவியர் ஏமாறும் அவலத்தைக் காட்டி நிற்கிறார். பிறை மாடத்தின் கீழே யானை ஒன்று படுத்துள்ளது. மேலே, சிவபெருமான் காலை மடித்தும் உயர்த்தியும் சம்ஹாரத் தாண்டவம் ஆடி நிற்கிறார்.

திருச்சுற்றின் மேற்புறம் சப்தமாதர் ஏழு பேரும் நீண்ட ஆசனம் ஒன்றில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கருவறை கோஷ்டத்தில் மார்கண்டேயனுக்காக காலனை (எமன்) தன் காலால் உதைத்து உருட்டுகிற காலகால தேவரின் சிற்பம் காணப்பெறுகிறது. நான்கு திருக்கரங்களோடு இந்தத் தேவதேவன் கையில் திரிசூலமும் பாசமும் கொண்டு, ஒரு கரத்தால் தர்ஜனி முத்திரையும் மற்றொரு கையால் விஸ்மய முத்திரையும் காட்டியவாறு, விழுந்து கிடக்கிற எமன் மீது தன் வலக்காலை வைத்து, இடக் காலால் அவன் தலையை அழுத்த முற்படுகிறார். அழுத்தம் தாங்க இயலாத எமன் வாய் பிளந்து அலறுகிறான். ஈசனாரின் முகத்தில் கோபமும், எமன் முகத்தில் வேதனையும் வெளிப்படுவதை அப்படியே தத்ரூபமாகத் தரிசிக்கலாம்.

மற்றொரு கோஷ்டத்தில், திரிபுராந்தகராக சிவபெருமான் தேர் மீது எழுந்தருளும் காட்சியும் இங்கே வடிக்கப்பட்டுள்ளது. எட்டுக் கரங்களுடன் திகழும் பரமனுக்கு மேலே குடை திகழ, சிவனார் வில்லேந்தியவாறு கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

அவருக்கு அருகே திருமால் நிற்க, கீழே பூத கணங்கள் வாள், கதை போன்ற ஆயுதங்களை ஏந்திப் போரிடுகின்றனர். திரிபுர அசுரர்களைத் தன் புன்முறுவலால் எரித்த திரிபுராந்தகரின் எழிற் கோலத்தைச் சிற்பிகள் கல்லில் அழகுற வடித்துவிட்டார்கள். ஆனால், வார்த்தைகளில் அதனை வடிப்பது கடினமாக உள்ளது.

ஒரு மாடத்தில், பாய்ந்து வரும் சிம்மத்தின் முதுகில் அமர்ந்தவாறு ஸ்ரீதுர்கா தேவியின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. ஒரு கையால் வில்லை ஏந்தியவாறு அம்பறாத்துணியிலிருந்து அம்பை எடுக்க முயற்சி செய்கிறாள் தேவி. மற்ற திருக்கரங்களில் தேவியின் ஆயுதங்கள் உள்ளன. இந்தச் சிற்பத்தின் ஒரு சில பகுதிகள் சிதைவுற்றிருப்பினும், தேவியின் முகத்தில் காணப்பெறும் கருணையின் வெளிப்பாட்டுக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது.

மற்றொரு மாடத்தில், தேவி திரிபுரபைரவியாக ஆசனத்தின் மீது ஒரு காலை மடித்த நிலையில் அமர்ந்துள்ளாள். திரிசூலம், பரசு, கபாலம், அக்கமாலை ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். முகத்தில் ரௌத்திரத்தின் முழு வெளிப்பாட்டையும் நாம் கண்டு உணரலாம்.

இப்படியாக... எண்ணிலடங்காத சிற்பங்கள் பலவற்றைத் தாங்கி நிற்கும் காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்துக்குள் சென்று சிற்ப நுட்பங்களைப் பார்த்தால், உன்னதங்கள் பலவற்றைக் கண்ட புதிய மனிதனாகவே மாறி வெளியே வருவோம்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 2:59 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 11
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


தஞ்சையில், கி.பி.1014-ஆம் வருடம், சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்ட முதலாம் ராஜேந்திரசோழன், முதல் பத்து வருடங்கள் வரை தஞ்சை அரண்மனையிலேயே தங்கி, ஆட்சி புரிந்து வந்தான். மலேசியா, இந்தோனேஷியா, பாலித்தீவுகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள், போர்னியோ போன்ற கிழக்காசிய நாடுகளை வெற்றி கண்டு, அங்கெல்லாம் புலிக்கொடியை பறக்கச் செய்த மாபெரும் வெற்றியாளன் அவன்.

பின்னர், ராஜேந்திர சோழன் புதியதொரு தலைநகரை நிர்மாணித்தான். அங்கே, பெருவுடையார் கோயிலைப் போலவே, அதாவது தஞ்சாவூரில் உள்ள பெரியகோயிலைப் போலவே சிவாலயம் ஒன்றை எடுப்பித்தான். அந்த நகரத்துக்கு நீராதாரம் வேண்டும் என்பதால், மிகப்பெரிய ஏரி ஒன்றையும் வெட்டுவித்தான்.

அந்தக் காலகட்டத்தில், அவனின் போர்த்தளபதிகளும் வீரர்களும் வங்கதேசம் வரை படையெடுத்து வென்றனர். கங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான பொற்குடங்களில் புனிதநீரை எடுத்து வந்தனர். அந்தப் புண்ணிய நீரால், தான் நிர்மாணித்த புதிய நகரத்தைப் புனிதப்படுத்தினான். அங்கே, தான் கட்டிய கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் கங்கை நீரால் அபிஷேகம் செய்து, வணங்கினான்.

அந்த மிகப் பெரிய ஏரியில் கங்கை நீரைக் கலந்து, ஏரியைப் புனிதப்படுத்தினான். அதற்குச் சோழகங்கம் எனப் பெயரிட்டு மகிழ்ந்தான். சிவாலயத்துக்கு 'கங்கை கொண்ட சோழீச்சரம்’ எனப் பெயர் சூட்டினான்.

இன்றைக்கும் பார்த்துப் பிரமிக்கத்தக்க அளவில் பிரமாண்டமாகத் திகழ்கிறது கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயில். ஆனால் என்ன.... ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கோயில், இன்றைக்குப் பாதியளவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அந்நியப் படையெடுப்புகள், கிழக்கிந்திய- ஆங்கிலேயக் கம்பெனியாரின் தாக்குதல்கள், பிரெஞ்சுப் படையினரின் அட்டூழியம், கீழணை கட்டுவதற்காக ஆங்கிலேயப் பொதுப்பணித் துறையினர் வெடி வைத்துத் தகர்த்தது எனப் பல காரணங்களால், கோயிலின் கட்டடப் பகுதிகளும் சிற்பங்களும் அழிந்துபோயின. ஆனாலும், எஞ்சியிருப்பவையே மாபெரும் பொக்கிஷங்களாக, பிரமிப்பின் உச்சகட்டமாகத் திகழ்கின்றன.

கோயில் விமானத்தின் தென்புறம் தேவகோஷ்டத்தில் திருமகளின் சிற்பம், சிற்பியின் அதிஅற்புதப் படைப்புக்குச் சான்று! திருமகள் என்பவள், பண்டைய காலத்தில் தாய்தெய்வமாகப் போற்றி வணங்கப்பட்டதாகச் சொல்கின்றன, கல்வெட்டுகள். மலர்ந்த தாமரைப் பூவின்மீது தாயார் அமர்ந்திருக்கிறாள்.

கருத்த சூல் கொண்ட மேகங்கள் மழையைப் பொழியும். அதனால், அங்கே வளமையும் செழுமையும் அதிகரிக்கும். இதைச் சுட்டிக்காட்டுவதற்காக, தாமரை மீது திருமகள் அமர்ந்திருக்க, மேலே உள்ள இரண்டு யானைகளும் நீரைச் சொரியும்படி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. யானைகள், சூல் கொண்ட கருமேகங்களின் குறியீடு. இரண்டு யானைகளின் உடலானது பாதியாகவும், மீதியாக மேகங்களின் தோற்றமும் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு நகரவே தோன்றாது, நமக்கு.


ஸ்ரீகஜலட்சுமிக்கு அருகில் உள்ள வாயிலையட்டி இரண்டு பிரமாண்ட துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. துவாரபாலகரின் காலடியில், புழுவைப் போலத் திகழும் பாம்பு ஒன்று, தன் வாயில் யானை ஒன்றைக் கவ்வி விழுங்குவது போன்ற காட்சியைப் பார்க்கலாம். சுமார் 15 அடி உயரம் உள்ள துவாரபாலகர் சிற்பம், மிரட்டலான வேலைப்பாடு! இப்போது உண்மையான யானையின் அளவிலேயே அந்த யானைச் சிற்பத்தையும் கணித்தபடி பார்த்தால், மிரண்டே போவோம் நாம். அந்த துவாரபாலகர் தன் கையை உயர்த்தி, விரல் சுட்டி, ஈசனே மிகப் பெரியவன், அவன் ஆகாசமூர்த்தி என்பதைச் சொல்லாமல் சொல்கிற அழகே அழகு!

விமானத்தின் தென்புற தேவகோஷ்டத்தில் இன்னுமொரு சிற்பம்... ரிஷபத்தின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்தபடி உமையருபாகன் நிற்கும் சிற்பம், சிற்பக்கலையின் மேன்மையை எடுத்துரைக்கிறது. அந்தக் கோஷ்டத்தை அடுத்து இருக்கிற மாடத்தில், கையில் மழுவையும் சங்கையும் ஏந்தியபடி சிவ-விஷ்ணு... அதாவது ஹரிஹரனின் திருவுருவத்தைத் தரிசிக்கலாம். இந்தச் சிற்பத்தில், ஹரிஹரனின் வலதுபுற திருமுகத்தையும் இடதுபுற திருமுகத்தையும் உற்றுக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?

கங்கைகொண்ட சோழபுரம் எனும் அற்புதமான தலத்துக்கு வந்து, அந்தக் கோயிலில் உள்ள இந்தச் சிற்பத்தைத் தனித்தனியே கூர்ந்து பாருங்கள். இரண்டு வேறுபட்ட முகபாவங்களும் அந்த ஒருமுகத்தில் தெரிவது போன்று வடித்திருப்பதைப் பார்த்து ரசிக்கலாம்; வியக்கலாம்!

ஸ்ரீவிமானத்தின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் ஸ்ரீஆடல்வல்லானின் திருவடிவம், ஈடு இணை இல்லாத சிற்ப அழகு! திருவாலங்காட்டுத் திருத்தலத்தில் ஈசன் நடனமாடுகிறான் என்பதைக் காட்ட, ஆலமரக்கிளை ஒன்று, மேலே காட்டப்பட்டுள்ளது. அங்கே, திருநடனம் புரியும் ஈசனின் முத்துப்பற்கள் அப்படியே ஜ்வலிக்கின்றன.

ஆனந்தத்தின் உச்சத்தில், மகிழ்ச்சி முழுதும் பரவியபடி அந்த அருட்பார்வையும் திருமுகமும் வெளிப்படுத்துகிற உணர்ச்சிப் பெருக்கினைச் சொல்லில் வடிக்க வார்த்தைகளே இல்லை.

சிவனார் மகிழ்ச்சியும் சிரிப்புமாக இருக்கிறார் என்றால், ஸ்ரீகாளிதேவியோ தன் முகத்தில் மொத்தக் கோபத்தையும் குவித்தபடி இருக்கிறாள்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 3:01 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 12
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


கங்கைப் பேராற்றில் இருந்து பொற்குடங்களில் நீரை எடுத்து வந்தார்கள், சோழநாட்டு வீரர்கள். இங்கே, கங்கைகொண்ட சோழீச்சரத்து விமானத்தில் அந்தப் புனிதநீர் வார்க்கப்பட்டது. அத்தகைய புண்ணியம் மிக்க திருத்தலம், கங்கை கொண்ட சோழபுரம்.

கங்கைகொண்ட சோழீச்சரத்து ஸ்ரீவிமானத்தின் வடபுற கோஷ்டங்களில் ஸ்ரீதுர்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீகாமதகனமூர்த்தி, ஸ்ரீசரஸ்வதி - ஸ்ரீசாவித்திரி எனும் இரண்டு தேவியருடன் பிரம்மதேவர், ஸ்ரீகாலகால மூர்த்தி ஆகியோரின் திருவுருவங்கள் அழகுற இடம்பெற்றுள்ளன. அர்த்த மண்டபத்துக்குச் செல்லும் வடபுறத் திருவாயிலில், இரண்டு பிரமாண்டமான துவாரபாலகர்களின் சிற்பங்களும், அவர்களுக்கு அருகே மேற்கு திசையில் ஸ்ரீசண்டீச அநுக்கிரக மூர்த்தியும், கிழக்கு திசையில் ஸ்ரீசரஸ்வதியும் திருத்தமான திருமேனியராகக் காட்சி தருகின்றனர்.

கீழே சிங்கம் உறுமியவாறு நிற்க, எட்டுக் கரங்களுடன் ஸ்ரீதுர்காதேவி நின்றவாறு காட்சி தருகிறாள். வலக்கரம் அபயம் காட்ட, அதேபுறம் உள்ள மற்ற மூன்று திருக்கரங்களில் முறையே வாள், அம்பு, சக்கரம் ஆகியவையும், இடது கரம் தொடைமேல் இருத்தியபடியும் திகழ, இடதுபுறம் உள்ள மற்ற கரங்களில் கேடயம், வில், சங்கு ஆகியவை காணப்பெறுகின்றன. கருணை பொழியும் திருமுகத்தோடு அன்னை பராசக்தி அற்புதமே உருவெனக் கொண்டு காட்சி தருகிறாள்.

இங்கு காணப்பெறும் மற்றொரு கோஷ்டத்தில், எண்கரங்களோடு ஸ்ரீபைரவர் திகழ்கிறார். திருமுடியில் தீச்சுடர்கள் ஒளிர, பிதுங்கும் விழிகளுடன் ரௌத்திரமும், கருணையும் கலந்த திருமுகத்துடன் நின்ற கோலத்தில் திகழும் இந்த தேவதேவனின் திருக்கரங்களில் திரிசூலம், மழு, வாள், பாசம், நெருப்பு, கபாலம், வில், மணி ஆகியவை காணப்படுகின்றன. மார்பில் கபாலங்கள் கோக்கப் பெற்ற புரிநூலும், இடுப்பில் பாம்பும் திகழ்கின்றன. இத்திருமேனியின் திருமுக அழகை ஏட்டில் வடிப்பது இயலாத ஒன்று!

இங்கு திகழும் ஸ்ரீபிரம்மதேவன், தாடி மீசையுடன் நான்கு திருமுகங்களும் கொண்டு, வேள்வியின் அதிபதியாக நின்ற கோலத்தில் காணப்படுகிறார். எங்கும் காண இயலாத வகையில் இங்கு ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசாவித்திரி எனும் இரண்டு தேவியர் அவருக்கு இருமருங்கிலும் நின்ற கோலத்தில் காணப்பெறுகின்றனர். பிரம்மனோ மேலிரு கரங்களில் ஸ்ருவம் ஸ்ருக் எனும் வேள்விக் கரண்டிகளையும், தர்ப்பை கட்டையையும் ஏந்தியுள்ளார். வலக்கரத்தில் உருத்திராட்ச மாலையும் இடது கரத்தில் நீர்ச் சொம்பும் உள்ளன. இப்படியரு திருக்கோலக் காட்சியை, வேறு சிவாலயங்களில் காண்பது அரிது என்றே சொல்லலாம்!

காம தகனமும், எரிந்த காமனுக்காக ரதிதேவி இறைஞ்ச, காம தகன மூர்த்தி அவனை மீண்டும் உயிர்ப்பித்ததுமான காட்சியை மிக அற்புதமான சிற்ப வடிவில், இங்கே உள்ள கோஷ்டத்தில் வடித்துள்ளனர். ஒரு காலை மடித்து, ஒரு காலைத் தொங்கவிட்ட நிலையில், நான்கு திருக்கரங் களுடன் சிவபெருமான் அமர்ந்தவாறு, தன் நெற்றிக் கண்ணால் காமதேவனை நோக்குகிறார். அவன் தீயின் தகிப்பு தாளமல், இரு கரங்களையும் உயர்த்தித் தடுக்க முற்படுகிறான். எரியும் அவன் திருவுடலை ரதிதேவி பின்புறம் அமர்ந்தவாறு தாங்கிப் பிடித்தபடி, ஒரு கரத்தை தலைக்குமேல் உயர்த்தி ஈசனை வேண்டுகிறாள். அற்புதமான இந்தக் காட்சியை மிக நுட்பமாக வடித்திருக்கிறார்கள் சிற்பிகள்.

வடபுற படிக்கட்டை ஒட்டித் திகழும் கோஷ்டத்தில், ஈசனார் தேவியுடன் அமர்ந்தவாறு, தரையில் அமர்ந்துள்ள விசார சர்மருக்கு தலையில் தான் தரித்திருந்த கொன்றை மாலையை எடுத்துச் சூட்டுகிறார். இந்தக் காட்சியை ஸ்ரீசண்டீச அநுக்கிரக மூர்த்தி அருளும் காட்சி என்பர். இந்தக் கோஷ்டத்துக்கு இருமருங்கும் ஸ்ரீசண்டீசர் புராண வரலாறு சிற்றுருவ சிற்பங்களாகச் சித்திரிக்கப்பெற்றுள்ளன.மண்ணியாற்றில் சிவலிங்க பூஜை செய்யும் விசார சர்மர், குரா மரத்தில் மறைந்து அவரை கண்காணிக்கும் தந்தை எச்சதத்தன், திருமஞ்சனக் குடத்தைக் காலால் இடறும் தந்தை, தந்தையின் கால்களை மழுப்படையால் வெட்டும் தனயன், பசுக்கூட்டங்கள் என சிற்பங்களெல்லாம் அழகு செய்ய, நடுவே ஸ்ரீசண்டேச அநுக்கிரக மூர்த்தியின் கோலக் காட்சி இடம்பெற்றுள்ளது. உண்பன, உடுப்பன, சூடுவன என மூன்றையும் தந்து ஸ்ரீசண்டீச பெரும்பதம் அருளும் திருக்கோலம், இங்கு வெகு அற்புதம்!

அர்த்த மண்டப வாயிற் படிக்கட்டின் எதிர்ப்புறம், அமர்ந்த கோலத்தில் ஸ்ரீஞான சரஸ்வதியின் அழகிய திருவுருவம் காட்சி தருகிறது. வாயிலின் இருமருங்கும் பிரமாண்டமான துவாரபாலகர் சிற்பங்கள் யானையை விழுங்கும் பாம்புடன் காணப் பெறுகின்றன. திருக்கோயில் வளாகத்தின் வடகிழக்கில் உள்ள சிற்றாலயத்தில், இருபது கரங்களுடன் திகழும் துர்கா தேவி(மகிஷாசுர மர்த்தனியின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

மூலவர் திருக்கோயில் மகாமண்டபத்தின் வடகிழக்கில் சௌரபீடம் எனும் சூரிய பீடம் உள்ளது. இதனை நவக்கிரகம் எனக் கூறி வழிபடுகின்றனர், பக்தர்கள். தேவியின் திருவுருவமும் சௌரபீடமும் மேலைச் சாளுக்கிய நாட்டிலிருந்து எடுத்து வரப் பெற்ற திருமேனிகள். இப்படியாக, ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் தலம், பல அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டு, அழகுறத் திகழ்கிறது.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 3:07 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! 13
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான் திருக்கோயில் வெகு பிரசித்தம். இதை, ஸ்ரீவைகுண்டநாதர் ஆலயம் என்றும் சொல்வார்கள். நவதிருப்பதிகள் எனப்படும் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது இந்தக் கோயில்.

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள எழிலார்ந்த சிறுநகரம், ஸ்ரீவைகுண்டம். நம்மாழ்வாரின் இரண்டு பாசுரங்களில் போற்றப்படுகிற இந்தத் தலத்து நாயகனாம் ஸ்ரீவைகுண்டநாத பெருமாளும் கோயிலும், கோயிலில் உள்ள சிற்பங்களும் மனத்தைக் கொள்ளை கொள்ளச் செய்யும் பேரழகு கொண்டவை!

இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள், விஜயநகரப் பேரரசு காலத்தில் தென்பாண்டி நாட்டு ஆட்சியாளர்களால் தோற்றுவிக்கப்பட்டன. ஒன்பதுநிலை ராஜகோபுரத்தின் கல்ஹாரப் பகுதிச் சுவரிலும் (பித்தி), வடக்குப் பிராகாரத்தில் உள்ள திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் முன்மண்டபத்திலும் காணப்படுகிற சிற்பங்கள், சொல்லில் அடங்காத அழகுடன் மிளிர்கின்றன.

அதுமட்டுமா..? கோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் உட்பகுதியிலும் திருமாலின் திருக்கோலங்கள் பல உள்ளன. வாயிற்காவலர்களான ஜயன், விஜயன் மற்றும் பெண்கள், யானை மற்றும் குதிரைகள், பறவைகள், தவிர அழகும் நுணுக்கங்களும் கொண்டு திகழ்கிற கும்ப பஞ்சரங்கள் என, சிற்பப் படைப்புகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

இந்த வரிசையில் ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி ஆகியோர் பெருமாளுக்கு இருபுறமும் அமர்ந்திருக்க, படமெடுத்தாடும் பாம்பின் கீழ் அமர்ந்திருக்கிறார் பெருமாள்.

கோபுரச் சுவரின் வெளிப்புறம், கீழ்த்திசை நோக்கியபடி திகழ்கிறது திரிவிக்கிரம மூர்த்தியின் சிற்பம். வாமனனுக்கு, ஸ்ரீமகாபலிச் சக்கரவர்த்தி கையில் நீர்ச்சொம்பை வைத்துக்கொண்டு நீர் வார்த்துக் கொடுக்கும் காட்சி ஒருபக்கம் அமைந்துள்ளது. குள்ளனாக வந்த வாமனர் திரிவிக்கிரம உருவம் காட்டி, ஓரடியால் பூமியை அளந்து, இரண்டாவதாக மற்றொரு காலை தலைக்கு மேல் உயர்த்தி, வானத்தை அளக்கிறார். இந்தச் சிற்பத்தில், எட்டுத் திருக்கரங்களுடன் திகழும் அழகே அழகு!

வானத்தை அளந்த திருவடியை பிரம்மன் விண்ணக கங்கையால் அபிஷேகிக்கும் காட்சி சிலிர்க்கவைக்கிறது. அருகில் இரண்டு தூண்கள்; அவற்றில் தத்ரூபமாக வடிக்கப் பட்ட இரண்டு புறாக்கள். அதேபோல் கோபுரம் முழுவதும் உள்ள தூண்களில், ஆங்காங்கே புறாச் சிற்பங்கள்!

திருவேங்கடமுடையான் சந்நிதி திகழும் திருமண்டபத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள நான்கு தூண்கள் மற்றும் அதிஷ்டானத்து விளிம்புகளிலும் அழகுப் பதுமைகளாகப் பல சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. வாயிற் காவலர்களாகத் இரண்டு வீரர்களின் சிற்பங்கள் இரண்டு பக்கமும் திகழ, இடையேயுள்ள இரண்டு தூண்களில் வில்லேந்திய ஸ்ரீராமனின் திருவுருவங்கள் காணப்பெறுகின்றன. ஒரு வீரன் தன் ஒரு காலை உயர்த்தியவாறு வாளும் கேடயமும் ஏந்திக்கொண்டு, இன்னொருவனைத் தாக்கியவாறு நிற்கின்றான். அவன் தலை அலங்காரமும் மீசையும், அணிந்துள்ள ஆபரணங்களும், கோபம் காட்டும் விழிகளும் இந்தப் படைப்பைத் தத்ரூபமாக்கியுள்ளன. எதிர்ப்புறம் நிற்கும் மற்றொரு வீரன் அழகிய கொண்டை அலங்காரத்துடன் கைகளில் வாளும் வளைதடியும் ஏந்தியபடி உடல் முழுவதும் ஆபரணங்களுடன் திகழ்கிறான்.

அதேபோல் ஒரு கையில் வில்லும், மறு கரத்தில் ராம பாணமும் ஏந்தியபடி ஸ்ரீராமன், ஸ்ரீஅனுமனின் தோள்களை அணைத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது, அந்தச் சிற்பத்திலேயே அவர்களின் நெருக்கமும் அணுக்கமும், வாஞ்சையும் தோழமையும் பளிச்சிடுகின்றன. மறுபுறம் சுக்ரீவன் கரம் கூப்பித் தொழுகிறான். அனுமனோ வாய் பொத்திய நிலையில் பணிவுடன் நிற்கிறான். கீழே மூன்று வானரங்கள் வாளும் கேடயமும் ஏந்திப் போருக்குச் செல்கின்றன. இத்தனையும் ஒரு தூணாகவே விளங்குவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.இதேபோன்று, மற்றொரு தூணில் வில்லேந்திய ராமன் நிற்க, அருகே சீதா. ஸ்ரீராமனோ வில்லேந்திய திருக்கரத்துடன் அனுமனின் தோள்களைப் பிடித்தபடி திகழ்கிறார். சில தூண்களில் இசைக்கருவிகளை இசைக்கும் பாவனையில் இசைக்கலைஞர்களின் உருவங்கள் உள்ளன.

மண்டப அதிஷ்டானத்து விளிம்புகளில் உள்ள சிற்பத் தொகுதிகளில் அற்புதமானவை குறப்பெண்களின் சிற்பம். இரண்டு குறப் பெண்கள் கைகளில் பிரம்புக் கூடைகளை இறுக்கிப் பிடித்தபடி, உணவுக் கலங்களை ஏந்திச் செல்கின்றனர். அவர்கள் தோளில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள், அந்த உணவை எடுத்துச் சாப்பிடுகின்றனர். இரண்டு பெண்களும் இரு குழந்தைகளின் தலைமீது தங்கள் கரங்களை வைத்திருப்பது அழகு!

இந்தக் கோயிலின் வடபுற திருச்சுற்று மண்டபத்தின் கூரை விளிம்புகளாகிய கொடுங்கைப் பகுதிகளில் அமைந்துள்ள சிற்பங்களும் தனிச்சிறப்பு கொண்டவையே!

இரண்டு பூனைகள் சேவலையும், பெட்டைக் கோழியையும் வாயால் கவ்விப் பிடித்துச் செல்ல, இடையே இரண்டு கோழிக் குஞ்சுகள் பயந்து ஓடுகின்றன. அதேபோல், படமெடுத்தாடும் பாம்பின் முன் மகுடி வாசிக்கும் பாம்பாட்டி, சேட்டைகள் பல செய்யும் குரங்குகள் என அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் தலத்துக்கு வருவோரைக் கவர்ந்திழுக்கும் கலைநயமிகுந்த காலம் கடந்த படைப்புக்கள் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 3:11 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! 14
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


திருச்சிராப்பள்ளி என்றாலே, அந்த நகரத்தின் அடையாளச் சின்னமாக நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது... மலைக்கோட்டைதான்!

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, குறுங்குடி மருதனார் எனும் புலவர் அகநானூறு எனும் அருந்தமிழ் இலக்கியத்தில், 'உறைந்தைக் குணாது நெடும்பெருங்குன்றத்து அமன்ற காந்தட் போதவிழ்’ என்று குறிப்பிட்டுள்ளார். உறையூர் நகருக்குக் கிழக்கே அமைந்த குன்றாகிய மலையில் காந்தள் மலர்கள் மலர்ந்திருந்த காட்சியைத்தான் அந்தப் புலவர் அப்படிப் பாடியுள்ளார்.

இந்த மலையை, 'சிராமலை’ என்றார்கள் அந்தக் காலத்தில். இந்தச் சிராமலையில் ஐந்து முக்கியமான கோயில்கள் உள்ளன என்பது தெரியும்தானே உங்களுக்கு?!

மலையடிவாரத்து ஸ்ரீவிநாயகர் கோயில், மலையின் தென் பாரிசத்தில் உள்ள பெரிய குடைவரைக் கோயில், மலையின் நடுவே உள்ள ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி கோயில், அதற்கு மேலாக லலிதாங்குர பல்லவ ஈஸ்வர கிருஹம் எனப்படும் சிறிதான குடைவரைக் கோயில், மலை உச்சியில் ஸ்ரீஉச்சிப் பிள்ளையார் கோயில் என ஐந்து ஆலயங்கள் இந்த மலையில் அமைந்துள்ளன. மலையடிவாரத்தில் உள்ள விநாயகர், ஸ்ரீமாணிக்க விநாயகர் என அழைக்கப்படுகிறார். இவரை வணங்கிவிட்டு, சில படிகள் ஏறிச் சென்றால், யானை நிற்கும் இடத்தை அடையலாம். அங்கே, நீண்ட தெரு ஒன்று, மலையையட்டி இருக்கிறது.

அந்தத் தெருவில், மேற்கு நோக்கி சிறிது தொலைவு சென்றால், மலைக்கோட்டை மலையின் அடிவாரத்தில், குடைவரைக் கோயில் ஒன்று இருப்பதைக் காணலாம். உள்ளே நுழைந்தால், மிகப் பெரிய மண்டபம். அங்கே, கிழக்கு நோக்கியபடி ஒரு சிறிய கோயிலும், மேற்கு நோக்கியபடி ஒரு சிறிய கோயிலும் அமைந்துள்ளன. காண்பதற்கு அரிதான, அழகான அமைப்பை அங்கே கண்ணாரத் தரிசிக்கலாம். கோயிலும், அங்கே இருக்கிற துவார பாலகர்களும் கொள்ளை அழகு!

கருவறைக்கு முன்னே, நான்கு நான்கு தூண்களுடன் சிறிய முகமண்டபங்கள், படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளன. கோயிலுக்குப் பக்கவாட்டில், குகைச் சுவரில் இரண்டு அடியார்கள் ஒரு கரத்தை இடுப்பில் வைத்தபடி, இன்னொரு கரத்தை உயர்த்திக்கொண்டு, அங்கே குடிகொண்டிருக்கும் சிவனாரைப் போற்றிய நிலையில் இருப்பார்கள். பார்த்தால் சிலிர்த்துப் போவீர்கள். மேற்குப் புறத்தில் உள்ள சிறிய கோயிலின் கருவறைக்கு உட்புறச் சுவரில், சங்கு - சக்கரம் ஏந்தியபடி அமைந்துள்ள திருமாலின் திருவுருவமும், அடியவர்கள் இரண்டு பேர் விண்ணில் இருந்தபடி போற்றி வணங்குகிற நிலையிலான சிற்பமும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோயில், திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயில்.

எதிர்த்திசையில், கீழ்ப்புறம் இருக்கும் சிறிய கோயில். கயிலைநாதன் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்ட கோயில். ஆனால், உள்ளே இருந்த சிவபெருமானை பிற்காலத்தில் அகற்றிவிட்டார்கள். உட்புற மண்டபச் சுவரின் வடக்குப் புறத்தில், மிக பிரமாண்டமான ஐந்து தெய்வ உருவங்கள் அணி செய்து நிற்கின்றன. நடுவே, நான்கு முகங்களுடன் பிரம்மதேவர் காட்சி தருகிறார்.

அவருக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு அடியார்கள் அமர்ந்துள்ளனர். தலைக்கு மேலாக இரண்டு பக்கமும் இரண்டு கணங்கள், விண்ணில் பறந்தவாறு ஸ்ரீபிரம்மாவை வணங்கும் சிற்பம் வெகு அழகு!


ஸ்ரீபிரம்மாவுக்கு வலது பக்கத்தில், முருகப் பெருமான் நான்கு திருக்கரங்களுடன் நின்றவாறு அருளுகிறார். அவருக்கு இருபுறமும் இரண்டு குள்ள பூதங்கள் நிற்கின்றன. விண்ணிலே இரண்டு கந்தர்வர்கள் பறந்தபடி, அவரது திருமுடியைப் போற்றுகின்றன.

முருகப் பெருமானுக்கு வலதுபுறம், ஸ்ரீபிள்ளையார் நின்றவாறு அருள்பாலிக்கிறார். காலடியில் இரண்டு பூதகணங்களும், விண்ணில் கந்தவர்கள் இரண்டு பேருமாக வணங்குகின்றனர்.

பிரம்மதேவனுக்கு இடப்புறம் சூரிய தேவன் நின்றவாறு அருள்பாலிக்கிறார். தலைக்குப் பின்புறம் சூரிய வட்டம் திகழ, மேலிரு கரங்களில் உருத்திராட்ச மாலையும் தாமரையும் ஏந்தியவாறு, ஒரு கரத்தை இடுப்பில் அணைத்தபடி, மறு கரத்தால் வரத முத்திரை காட்டுகிறார், சூரிய பகவான். அவரின் திருவடியில் இரண்டு பேர் குத்திட்டு அமர்ந்தவாறு, ஆதவனைப் போற்றுகின்றனர். விண்ணிலே கந்தர்வர் இருவர் மிதந்தவாறு கையுயர்த்தி வாழ்த்துகின்றனர்.

சூரிய தேவனுக்கு இடப்புறம் ஆழியும் சங்கும் ஏந்திய கொற்றவை தேவி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அவளின் காலடியில் அமர்ந்துள்ள ஒருவர் மலர் கொண்டு வணங்க, மற்றொருவர் தன் சிகையை இடக்கரத்தால் பற்றியவாறு வலக்கரத்தில் ஏந்தியுள்ள வாளால் தன் கழுத்தை அரிகிறார். இதனை நவகண்டம் என்பர். கொற்றவைக்கு பலியாக உறுப்பரிந்து தரும் வீரர்கள் பற்றி சயங்கொண்டாரும், ஒட்டக்கூத்தரும் தம் பரணி நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கோயிலுக்கு இன்னுமொரு தனிச்சிறப்பு உண்டு. வேதங்களும் திருமுறைகளும் வைதீக சமயத்தின் அறுவகைச் சமயப் பிரிவுகள் பற்றி விவரிக்கின்றன. சிவபெருமானைப் போற்றும் சைவம், திருமாலைத் துதிக்கும் வைணவம், கணபதியைப் பரவும் காணாபத்தியம், முருகனை ஏற்றும் கௌமாரம், சூரியனைப் போற்றும் சௌரம், தேவியைத் துதிக்கும் சாக்தம் என்பவையே அந்த அறுவகைச் சமயங்கள்.

இந்தச் சமயக் கோட்பாடுகள் அடிப்படையில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பெற்றதே திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயிலும், அங்கே திகழும் அரிய சிற்பத் திருமேனிகளும் எனும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 3:14 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்! 15
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


கொங்கு நாட்டில், ஈரோட்டில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், காவிரியாறும் பவானியாறும் சங்கமிக்கும் கூடுதுறையில் அமைந்துள்ளது ஸ்ரீசங்கமேஸ்வரர் திருக்கோயில். 'திருநணா’ என்பது இந்த ஊரின் தேவார காலப் பழம்பெயராகும். திருஞான சம்பந்தர் இந்தத் தலத்துக்கு வந்து, பதிகம் பாடியுள்ளார்.

தேவாரத் தலம்தான் என்றாலும், சிவா- விஷ்ணு மூர்த்திகளின் தனித்தனிக் கோயில்களை ஒரே வளாகத்தில் பெற்ற, சைவமும் வைஷ்ணவமும் இணைந்த தலம் இது!

ஸ்ரீசங்கமேஸ்வரர் சந்நிதியில் இருந்து கிழக்கு வாசல் வழியே பார்த்தால், எழில் கொஞ்சும் காவிரியின் பேரழகைக் காணலாம். கோட்டை விநாயகர், ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி, ஸ்ரீவேதாம்பிகை எனும் அம்பாள் கோயில் ஆகியவை மூலவர் திருக்கோயிலுக்குரிய பரிவார ஆலயங்களாகத் திகழ்கின்றன.

அம்பாள் திருக்கோயிலுக்கு வடக்காக ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீசௌந்தரநாயகித் தாயார், ஸ்ரீநரசிம்மர் ஆகிய தெய்வங்கள் உறையும் மூன்று தனித்தனி சந்நிதிகள். கூடுதுறை எனும் புண்ணிய தீர்த்தமே, ஸ்தல தீர்த்தம்.

பல்லவ, சோழ, பாண்டிய மரபு மன்னர்கள் விட்டுச் சென்றுள்ள சிற்பப் படைப்புகள் குறித்து தமிழகத் திருக்கோயில்களில் பார்த்துச் சிலாகிப்போம். விஜய நகர அரசர்களின் கலைப் படைப்புகளும் பலராலும் போற்றப்படுபவையே! ஆனால், சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, சிற்றரசர்களாக விளங்கிய தமிழ் மரபு மன்னர்கள் எடுத்த கோயில்களும், அவர்தம் கலைப்படைப்புகளும் அவ்வளவாகத் தமிழ் மக்களால் அறியப்படாமலேயே இருக்கின்றன. அந்த வரிசையில், கொங்கு நாட்டில், குறிப்பாக பூவாணி நாட்டில் அரசர்களாகத் திகழ்ந்த கட்டிமுதலிகள் எடுத்த கோயில்களும், அங்கே காணப்படும் கலைப்படைப்புகளும், தமிழ்நாட்டுக் கலை இயல் வரலாற்றில் தனி இடம்பெற்றுத் திகழ்கின்றன.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேளிர் அரசர்களில் ஒரு பிரிவினரான 'கட்டி’ என்ற அரச மரபைச் சார்ந்தவர்களாக கட்டிமுதலிகள் இருத்தல் கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்கால கட்டிமுதலிகள் மரபில் இம்முடி கட்டிமுதலி, வணங்காமுடி கட்டிமுதலி என்ற இரண்டு பேர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆத்தூர், பவானி, ஈரோடு, திருச்செங்கோடு, மோகனூர் சேந்தமங்கலம், அமரகுந்தி, சங்ககிரி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய இடங்களில் கட்டிமுதலிகளின் கலைப் படைப்புகளை ஆலயங்களில் காணலாம்.

தற்போது நாம் பார்க்கிற ஸ்ரீபவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள் அனைத்தும் இம்முடி கட்டிமுதலியின் பணிகளே என்பதை, திருக்கோயில் வளாகத்தில் புலி உருவத்துடன் திகழும் கற்பலகைக் கல்வெட்டுக்களாலும், அம்பாள் திருக்கோயில் வசந்த மண்டப விதானத்துக் கல்வெட்டுக்களாலும் அறியமுடிகிறது.

பவானி ஆலயத்தில் உள்ள கட்டிமுதலி கலைப்படைப்புக்கள் வரிசையில் தலையாய இடம் பெறுவது, விஷ்ணு ஆலயத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மர் சந்நிதியின் முகப்பு மண்டபத்துத் தூண்களும், அதில் உள்ள சிற்பங்களும்! ஒரு தூணில் ஸ்ரீராமன் வில்லும் அம்பும் தரித்தவராக நிற்கும் திருக்கோலம்; அடுத்த தூணில், ஸ்ரீராமனின் பட்டாபிஷேகக் கோலம். ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் மகுடம் சூடிய ஸ்ரீராமர் அமர்ந்துள்ளார். சீதா பிராட்டியோ ஒரு காலை மடித்தும், ஒரு காலை குத்திட்டவாறும் அமர்ந்துள்ளார். ராமபிரான் தன் வலக்கரத்தால் அபயம் காட்டி, இடக்கரத்தால் ஜானகித் தாயை அணைத்தவாறு காட்சி தருகிறார். தேவியின் வலக் கரம் மலர் பிடிக்க, இடக்கரம் தரை யில் ஊன்றியபடியான காட்சியை அப்படியே சிற்பமாக நம் கண் முன்னே நிறுத்தி உள்ளனர் சிற்பிகள்.

இருவரின் திருப்பாதங்களையும் இரண்டு தாமரை மலர்கள் தாங்கி நிற்கின்றன. அமர்ந்திருக்கும் இருவருக்குக் கீழாக மலர்ந்த தாமரை மீது ஸ்ரீஅனுமன், பத்மாசனக் கோலத்தில் அமர்ந்துள்ளார். மேல் நோக்கும் அவர் திருமுகம் ஸ்ரீராமபிரானின் பாத கமலங்களைத் தரிசித்த சிலிர்ப்பில் அமைந்துள்ளது. ஸ்ரீஅனுமன், தன் வலக்கரத்தில் வீணையையும், இடக்கரத்தில் ராமாயணச் சுவடியையும் ஏந்தியுள்ளார். இத்தகைய காட்சியை, வேறு எங்கும் காண்பது அரிது!

அம்பாள் கோயிலின் வசந்த மண்டபம் அற்புதக் கலைக் கூடம்! குதிரை வீரர்களின் சிற்பங்களோடு திகழும் இந்த மண்டபத்துத் தூண் ஒன்றில், இம்முடி கட்டிமுதலி, அடியார் ஒருவருக்குப் பொருள் வழங்கும் காட்சியும், அவர் மனைவி எதிர் தூணில் இருந்து வணங்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. இந்த மண்டபத்து மேல் விதானத்தில் (உட்கூரைப் பகுதியில்) உள்ள சிற்பப் படைப்புகள் பேரழகு வாய்ந்தவை! மூன்று அடுக்குகளுடன் உள்ள தாமரை மலர்; நடுவிருந்து அதன் இதழ்களைச் சுற்றியுள்ள கிளிகள் கொத்துகின்றன. மலரைச் சுற்றி உள்ள சட்டப் பகுதியில் 18 நடனக் கலைஞர்கள் ஆடியும் பாடியும் நிற்கின்றனர். இந்தக் காட்சிக்கு வெளியே 16 தெய்வத் திருவுருவங்கள் உள்ளன. ஸ்ரீஊர்த்துவ தாண்டவர், ஸ்ரீகாளி, ஸ்ரீஉமை, ஸ்ரீபிரம்மன், மத்தளம் இசைக்கும் இடபதேவர், அதிகார நந்தி, கொடிப்பெண்கள் இருவர், அறுமுகன், இந்திரன், கிங்கரர், நாரதர், தும்புரு, திருமால் என தெய்வ உருவங்கள் திகழ... வெளிப்புறம் வில், அம்பு, வண்ணத் தடுக்கு, வாடாத மாலை, புலி, மகரம் ஆகிய கட்டிமுதலிகளின் அரச சின்னங்களும் உள்ளன. அருகே இந்த மண்டபத் திருப்பணி பற்றிய கட்டிமுதலியின் கல்வெட்டும் உள்ளது. இவை தவிர, லிங்கத்துக்குப் பால் சொரியும் பசு உள்ளிட்ட பல சிற்பங்கள் திருக்கோயில் முழுவதும் உள்ளன.

கட்டிமுதலியின் தாரமங்கலம் கல்வெட்டு, இலக்கியச் சுவை மிக்கது. 12 சூரியர்கள், 11 உருத்திரர், 10 திக்குகள், 9 கங்கைகள் (ஆறுகள்) 8 மலைகள், 7 கடல்கள், 6 கார்த்திகைப் பெண்கள், 5 மலர் அம்புகள் (மன்மதன்), 4 வேதங்கள், 3 தீச்சுடர்கள், 2 சாதிகள் என்பன போன்று, கட்டிமுதலியின் வாக்கு ஒன்றே என்கிறது அக்கவிதை.

'செங்கதிர் பன்னிரண்டீசன்
பதினொன்று திக்குபத்து
கங்கையும் ஒன்பது வெற்பு எட்டு, ஏழு
கடல் கார்த்திகை ஆறு
ஐயங்களை நான் மறை மூச்சுடர் சாதி
இவை இரண்டு
மங்கை வரோதையன் கட்டிமுதலி
வார்த்தை ஒன்றே!’

பவானி கூடுதுறையில் நீராடி, ஸ்ரீசங்கமேஸ்வரர் பாதம் பணிந்து, அனைத்து கலைச் செல்வங்களையும் கண்டு மகிழ்ந்து ஈசனின் பேரருளைப் பெறுவோம்!

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by M.Saranya on Wed Sep 03, 2014 4:01 pm

சிறப்பான பதிவு
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 9:09 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 16
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களின் வரிசையில், வரலாற்றுப் பெருமைகளாலும் பேரழகு வாய்ந்த சிற்பங்களைப் பெற்றுள்ளமையாலும் முதல் நிலையில் திகழ்வது 'மேலப்பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம்’ என்னும் பழுவேட்டரையர்கள் எடுத்த சிவாலயம்.

தஞ்சாவூர்- அரியலூர் சாலையில் உள்ள கீழப்பழுவூரிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் திருச்சி சாலையில் உள்ளது மேலப் பழுவூர். இந்த ஊர்தான், பழுவேட்டரையர்களின் தலைநகரமாக விளங்கியது. 'மன்னு பெரும் பழுவூர்’ எனக் கல்வெட்டுகள் இதைக் குறிப்பிடுகின்றன.

இந்த ஊரின் மேல் பாரிசத்தில் ஒரு சிவாலயமும், கிழக்குப் பகுதியான கீழையூர் எனும் இடத்தில்... ஒரே வளாகத்தில் இரண்டு சிவாலயங்களையும் பரிவார ஆலயங்களையும் கொண்ட 'அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம்’ எனும் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் சிற்பக் கருவூலம் எனக் கீழையூர் கோயிலைக் குறிப்பிடலாம்.

மேற்கு நோக்கியவாறு திகழும் கீழையூர் சிவாலயத்துக்கு மேற்கு வாயிலாக மூன்று நிலைகளையுடைய கோபுரம் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழைமையானது, இந்தக் கோபுரம். நுழைவாயிலில், கதையன்றைத் தாங்கியபடி இரண்டு திருக்கரங்களுடன், இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. அவற்றின் அழகே, அந்தக் கோயில் சிற்பங்களின் தன்மையை நமக்குப் பறைசாற்றிவிடுகிறது.திருக்கோபுரத்துக்கு நேராக உட்பிராகாரத்தில், தென் வாயில் ஸ்ரீகோயில் எனப்படும் ஸ்ரீஅகஸ்தீஸ்வரம் உள்ளது. இதன் வாயிலில் (திருமுற்றத்தில்) படுத்திருக்கும் ரிஷபத்தைப் பார்த்தால், 'அட... இங்கே காளை ஒன்று படுத்திருக்கிறதே..!’ என்று ஒரு கணம் திகைப்போம். அந்த அளவுக்கு உயிர்த்துடிப்புடன் திகழ்கிறது ரிஷபம்! அங்கே உள்ள வாயில் வழியே கோயிலின் உள்ளே சென்றால், அங்கே மற்றொரு காளை படுத்திருப்பதைக் கண்டு நாம் மிரண்டுவிடுவோம். அந்த மண்டபத்தின் தூண்கள் அத்தனையும் பாயும் சிங்கங்களுடன் இருப்பது, பேரழகு! இந்தத் தூண்கள் பல்லவர் காலப் பாணியிலிருந்து பிறந்த பழுவேட்டரையர்களின் தனிக் கலைப் பாணியைக் கொண்டவையாகத் திகழ்கின்றன.

சிம்மத் தூண்களுக்கு இடையே நின்றவாறு அகஸ்தீஸ்வரரான மகாலிங்கத்தைத் தரிசிக்கும் நேர்த்தி அற்புதம்! அங்கு திகழும் துவாரபாலகர் உருவங்களும், ஸ்ரீகங்காதர மூர்த்தியின் சிற்பமும் கொள்ளை அழகு! இரண்டு கரங்களுடன் திகழும் வாயிற்காவலர், அழகிய மலர்களுடன் உள்ள கிரீடத்தை அணிந்திருப்பார்; தலையின் பக்கவாட்டிலிருந்து ஒரு நாகம் படமெடுத்துச் சீறும்; அவர் அணிந்துள்ள காது குண்டலம் ஒன்றின் உள்ளே ஆந்தை அமர்ந்திருக்கும்; ஒரு கரத்தில் கதையைத் தாங்கியவாறும், ஒரு கரத்தைத் தூக்கியவாறும் அவர் நிற்கும் கம்பீரத்தைப் பார்த்துச் சொக்கிப் போவோம்.

தென் வாயில் ஸ்ரீகோயிலின் விமானம் சதுர வடிவில் மூன்று தளங்களையுடையதாக விளங்குகிறது. சிகரத்தில் காணப்படும் வீணை வாசிக்கும் சிவனாரின் திருக்கோலம், தனி அழகு! ஸ்ரீவிமானத்தின் மூன்று பக்கங்களிலும் காணப்படும் கோஷ்ட மாடங்களை அழகிய மகர தோரணங்கள் அலங்கரிக்கின்றன. தென் கோஷ்டத்தில் மானையும் மழுவையும் ஏந்திய நிலையில், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் சிவனார். இங்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி காணப்

படவில்லை. மேலுள்ள மகர தோரணத்தில், நடனமாடும் சிவனாரின் திருவுருவம் உள்ளது. வடக்கு கோஷ்டத்தில் ஸ்ரீபிரம்மா காட்சி தருகிறார். அவருக்கு மேலே உள்ள மகர தோரணத்தில், யானையின் உடலைப் பிளந்து கொண்டு வெளிவரும் ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தியின் திருவடிவமும், அவர்தம் கோலம் கண்டு அஞ்சி, முருகப் பெருமானை இடுப்பில் அணைத்தவண்ணம் ஒதுங்கும் ஸ்ரீஉமாதேவியின் வடிவமும் இடம் பெற்றுள்ளன.

கிழக்கு திசையில் அமைந்த தேவ கோஷ்டத் தில், நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப் பெருமானின் திருவுருவத்தைத் தரிசிக்கலாம்.

பொதுவாக, சிவாலயங்களின் ஸ்ரீவிமானத்து பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர் அல்லது அர்த்தநாரீஸ்வரர் அல்லது திருமால் என திருவுருவச் சிற்பத்தைக் காணலாம். இங்கு இரண்டு கோயில்களிலும் முருகப்பெருமானே இடம் பெற்றிருப்பது, கோயிலின் சிறப்பு அம்சம் என்கின்றனர் பக்தர்கள்.

மேலும், சப்தமாதர் கோயிலில் உள்ள அமர்ந்த கோல யோக மூர்த்தியின் சிற்ப வடிவம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஜடாபாரத்துடன் திருமுகம் விளங்க, மேலிரு கரங்களில் திரிசூல மும் அக்கமாலையும் திகழ, முன் வலக்கரம் அபயம் காட்ட, இடது கரத்தைத் தொடை மீது வைத்தபடி கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

இரண்டு சிவாலயங்களில், ஸ்ரீஅகஸ்தீஸ்வரத்தில் மட்டுமே இத்தனைச் சிறப்புகள் என்றால், அருகில் உள்ள மற்றொரு கோயிலையும் சிற்பங்களையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கோயிலின் பெயர் சோழீஸ்வரம்!

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 9:11 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 17
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


பொதுவாக, சோழர் காலக் கோயில்களின் கட்டட அமைப்பு மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை மூன்று பிரிவாகப் பிரிப்பார்கள். விஜயாலயச் சோழன் காலம் (கி.பி.846) வரை உள்ள படைப்புகளை, முற்காலச் சோழர்களின் கலை என்பார்கள். இந்தக் காலகட்டத்தில் படைக்கப்பட்ட சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் கலைச் சிறப்பால் முதலிடத்தில் திகழ்கின்றன.

முற்காலச் சோழர்களின் கலைப் படைப்புக்கு, அவர்களுடன் இணைந்து ஆட்சி புரிந்த சிற்றரசர்களான கொடும்பாளூர் வேளிர்களான இருங்கோளர்களின் பங்களிப்பும், பழுவூர் பகுதியை ஆட்சி புரிந்த பழுவேட்டரையர்களின் பங்களிப்பும் பெரிதும் துணை புரிந்தன. கீழையூரில் உள்ள அவனி கந்தர்ப்ப ஈஸ்வரகிருகம் எனும் இரட்டைச் சிவாலயங்களில், கோயில் வளாகத்தின் வடபுறம் உள்ளது, வடவாயில் ஸ்ரீகோயில்!

இந்தக் கோயிலும் தென்புறக்கோயில் போன்றே மேற்கு திசை நோக்கியே அமைந்துள்ள ஆலயம். தற்காலத்தில் இந்த ஆலயத்தை அருணாசலேஸ்வரம் என்றும் சோழீஸ்வரம் என்றும் அழைக்கின்றனர். இந்தக் கோயிலின் ஸ்ரீவிமானம் இரண்டு தளங்களுடன் விருத்த (வட்ட வடிவ) சிகரம் பெற்றுக் கற்றளியாகவே விளங்குகிறது.

கருவறைச் சுவரில் உள்ள தேவ கோஷ்டங்களில் வடக்கில் ஸ்ரீபிரம்மாவும், தெற்கில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், கிழக்கில் அமர்ந்த கோலத்தில் முருகப் பெருமானின் திருவுருவங்களும் இடம் பெற்றுள்ளன.

திருச்சுற்றில் எட்டு பரிவார ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீகணபதியார், ஸ்ரீமுருகன், ஸ்ரீசூரியன், ஸ்ரீபைரவர், ஸ்ரீசப்தமாதர், ஸ்ரீசண்டீசர் போன்ற பரிவார தெய்வங்கள் மிகப் பழைமையானவை.

ஸ்ரீகணபதியாரின் திருமேனி தனித்தன்மையுடன் திகழ்கிறது. மேல் வலக்கரத்தில் ருத்திராட்ச மாலையும், மேல் இடக்கரத்தில் அங்குசமும் உள்ளன. கீழ் வலக்கரத்தில் ஒரு பழமும், கீழ் இடக் கரத்தில் ஒரு பழமும் இருக்க, மற்றொரு பழத்தை துதிக்கையால் எடுத்து வாயில் இடும் காட்சியை இந்தக் கோயிலைத் தவிர, வேறு ஆலயங்களில் காண்பது மிகவும் அரிது எனப் போற்றுகின்றனர் சரித்திர ஆர்வலர்கள். வயிற்றில் உதரபந்தம், மணிகள் கோக்கப்பெற்ற முப்புரிநூல், அழகிய மகுடம் ஆகியவை கணபதியை அலங்கரிக்கின்றன.

சப்தமாதர் கோயிலில் ஒருபுறம் கணபதியும், மற்றொருபுறம் யோக மூர்த்தியாக சிவபெருமானும் அமர்ந்திருக்க, இடையே ஸ்ரீபிராம்மி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகௌமாரி, ஸ்ரீவராகி, ஸ்ரீஇந்திராணி, ஸ்ரீசாமுண்டி ஆகிய அன்னையர் ஏழு பேரும் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மரபு கலைப் படைப்புக்களாகத் திகழும் சப்தமாதர் சிற்பங்கள் வரிசையில் முதலிடம் பெற்றுத் திகழ்பவை இவை என்றால், மிகையில்லை!

தென்வாயில் ஸ்ரீகோயிலின் தென்புற கோஷ்டத்தில் ஸ்ரீசந்திரசேகரரான சிவவடிவமும் குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியது என்பார்கள். அவருக்கு மேல் காணப்படும் மகரதோரண வேலைப்பாடுகள், செம்பில் வார்த்தெடுக்கப்பட்டவைதானோ எனும் அளவுக்கு அத்தனை நேர்த்தியுடன் தத்ரூபமாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள விதம் போற்றுதலுக்கு உரியது.

அந்த மாடத்தில் திகழும் ஸ்ரீசந்திரசேகரர், மான்- மழு ஆகியவற்றை ஏந்தியவராக, ஒரு கரத்தால் அபய முத்திரை காட்டி, மறு கரத்தைத் தன் தொடை மீது இருத்தியுள்ளார்.

இந்தச் சிற்பத்தைப் போன்றே ஸ்ரீகந்தபிரானின் வடிவமும் அற்புத மாகக் காணப்படுகிறது. நெருங்கித் தொடுக்கப்பட்ட சிறிய மாலையுடன் மகுடம் சூடிய கந்தவேள், சன்ன வீரம், உதர பந்தம், அழகிய இடுப்பாடை ஆகிய வற்றைத் தரித்துள்ளார். மேலிரு கரங்களில் வஜ்ராயுதமும் சக்தி ஆயுதமும் திகழ, வலக்கரத்தால் அபயம் காட்டி, இடக்கரத்தைத் தொடை மீது இருத்தியுள்ளார்.

மேலப் பழுவூர் செல்வோர், கீழையூரில் உள்ள இரட்டைக் கோயில் களான அவனி கந்தர்ப்ப ஈஸ்வர கிருகத்தைக் கண்டு தரிசித்து, சிற்பப் பேரழகை ரசித்துவிட்டு, அதையடுத்து சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்கே உள்ள கலைப் பொக்கிஷத் தையும் கண்ணாரக் கண்டு களியுங்கள்! விலை மதிக்கமுடியாத அற்புதங்கள் பலவற்றையும் அங்கே சிற்பங்களாகத் தரிசிக்கலாம்.

குறிப்பாக, அழகு ததும்பக் காட்சி தரும் ரிஷபத்தைப் பார்த்தால், 'அட..!’ என்று வியந்து போவீர்கள். கீழப்பழுவூருக்குச் சென்று, திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருவாலந்துறையார் கோயிலையும், அருகில் இடிபாடுகளுக்கு இடையே உள்ள கோயில் சிற்பங்களையும் காணலாம்.

இவை அனைத்தும் பழுவேட்டரையர்கள் என்ற அரச மரபினர் தமிழகத்துக்குத் தந்த பெருங்கொடை!

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 9:15 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 18
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


கங்கைகொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் பெரிய கோயிலிலும், திருவையாற்று ஐயாறப்பர் திருக் கோயிலிலும் மூலவர் திருக்கோயிலைத் தவிர, தெற்குப் பிராகாரத்தில் தென்கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) எனும் ஒரு சிவாலயமும், வடக்குப் பிராகாரத்தில் வடகயிலாயம் (உத்ர கைலாசம்) எனும் தனித்த சிவாலயம் ஒன்றும் இருப்பதைக் காணலாம்.

கங்கைகொண்ட சோழபுரத்து தென்கயிலாயக் கோயிலின் கருவறையில் தற்போது மூலவர் லிங்கம் காணப்பெறவில்லை. வட கயிலாயமோ பின்னாளில் அம்மன் கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், திருவையாற்று தென் கயிலாயமும் வடகயிலாயமும் தற்போது வழிபாட்டில் திகழும் சிவாலயங்களாகவே விளங்குகின்றன.

தென்கயிலாயத்தை முதலாம் ராஜேந்திர சோழனின் தேவி பஞ்சவன் மாதேவியார் கற்கோயிலாக எடுத்தார் என்பதை அந்த ஆலயத்திலுள்ள ராஜேந்திர சோழனின் 31-ம் ஆட்சியாண்டு (கி.பி.1143) கல்வெட்டு எடுத்துக் கூறுகிறது. வடகயிலாயத்தை ராஜராஜ சோழனின் தேவி தந்தி சக்தி விடங்கி எனும் லோகமாதேவியார் எடுப்பித்தார் என்பதை அந்த ஆலயத்துக் கல்வெட்டு கூறுகின்றது.

பஞ்சவன் மாதேவியாரால் கற்கோயிலாகப் புதுப்பிக்கப்பெற்ற தென் கயிலாயம், திருநாவுக்கரசர் எனும் அப்பர் அடிகளின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடைய திருக்கோயிலாகும். 'திருக்கயிலையை கண்டல்லால் மீளேன்’ - என ஈசனிடமே சபதம் உரைத்து, வடபுலம் நோக்கிச் சென்ற அப்பரடிகள், இறுதியில் பரமேஸ்வரன் தன் கையில்

கொண்டு வந்த புனல் தடமொன்றில் (குளத்தில்) மூழ்கியதும் சுவடு படாமல் திருவையாற்றுக் குளத்திலிருந்து எழுந்தார். உடன் அவருக்குக் கயிலை தரிசனம் கிடைத்தது. இணை இணையாக வந்த விலங்கு களையும் பறவைகளையும் சிவசக்தியாகவே கண்டார்.

'மாதர் பிறைக் கண்ணியானை’ எனத் தொடங்கும் பாடலோடு பதினொரு பாடல்கள் உடைய திருப்பதிகம் (தேவாரம்) பாடியருளினார். அவர் கயிலை தரிசனம் செய்த இடமே தென் கயிலாயம் எனும் திருவையாற்றுத் திருக்கோயிலாகும்.

கருவறையுடன் கூடிய ஸ்ரீவிமானம், அர்த்த மண்டபம், முகமண்டபம், திருச்சுற்று மாளிகை எனும் சுற்றுப்பிராகார மண்டபம், திருக்கோபுரம் ஆகியவற்றுடன் தென் கயிலாயம் எனும் இத்திருக் கோயில் திகழ்கின்றது. வடதிசை நோக்கியுள்ள இத்திருக்கோயிலில் தென்கயிலாய நாதர் சிவலிங்க வடிவில் காணப்பெறுகிறார். முகமண்டபத்தில் அப்பர் அடிகளார் உழவாரம் ஏந்திய நிலையில் ஈசனைத் தொழுகின்றவராகக் காணப்பெறுகின்றார்.

ஸ்ரீவிமானத்தின் கீழ் திசையில் மூன்று தேவ கோஷ்டங்களும், தென்திசையில் ஒரு தேவ கோஷ்டமும், மேற்கு திசையில் மூன்று தேவ கோஷ்டங்களும் உள்ளன. கீழ்த்திசை கோஷ்டங்களில் முறையே பைரவர், கணபதியார், அமர்ந்த கோல சிவபெருமான் திருவுருவங்களும், தென் திசையில் அமர்ந்த கோல கயிலைநாதனின் வடிவமும், மேற்குத்திசையில் அமர்ந்த கோல ஈசனின் வடிவத்தோடு துர்கை, முருகப்பெருமான் திருவடிவங்களும் இடம் பெற்றுள்ளன.

பொதுவாக கருவறையின் மூன்று புற கோஷ்டங்களில் முறையே தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய திருவுருவங் களே காணப்பெறும். ஆனால் இவ்வாலயத்தில் அந்த திருவுருவங்கள் இடம் பெறாமல், அமர்ந்த கோல சிவனாரின் மாறுபட்ட வடிவங்களே காணப்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மதில் சுவருடன் இணைந்து திகழும் தென் கயிலாயத்துத் திருசுற்றுமாளிகையை 46 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவற்றில் 45 தூண்கள் தமிழ்நாட்டுக் கலைப்பாணியில் அமையாது, நுளம்பர் கலைப்பாணியில் காட்சி தருகின்றன.

நுளம்பபாடி என்பது மைசூர் ராஜ்ஜியத்தின் கீழ்ப்பகுதியையும் பல்லாரி மாவட்டத்தையும் தன்பாற் கொண்ட நாடாகும். அந்த நாட்டை ராஜேந்திர சோழனின் படை வெற்றி கண்டது. அப்போது, அவர்களின் கலையில் மயங்கிய சோழர் படை அந்த நாட்டிலிருந்த அழகிய கலைப்படைப்புகளில் சிலவற்றை எடுத்து வந்து சோழநாட்டுக் கோயில்களில் இடம்பெறச் செய்தது. அவ்வாறு மைசூர் பகுதியிலிருந்து திருவையாற்றுக்கு எடுத்து வரப்பெற்றவையே இந்த 45 தூண்களுமாகும். மரத்தை கடைசல் செய்து அமைத்தது போலவே கல்லில் மிக நேர்த்தியாக இத்தூண்களை வடிவமைத்துள்ளனர்.

இங்குக் காணப்பெறும் நுளம்பர் தூண்கள் சிலவற்றின் நடுப்பகுதியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்பெறுகின்றன. நாட்டியக் கலைஞர்கள், சூரியன், சந்திரன், ராம-லக்குவன் காண வாலியும் சுக்ரீவனும் சண்டையிடுதல், கஜசம்ஹார மூர்த்தி, பூரண கும்பம் எனப் பல நுட்பமிகு வேலைப் பாடுகளைக் காணமுடிகின்றது.

பஞ்சநதீஸ்வரர் என்னும் ஐயாறப்பர் திருக்கோயிலுக்குச் செல்வோர் மறக்காமல் பார்க்க வேண்டிய திருக்கோயில் தென் கயிலாயமாகும்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 9:20 pm


சேதி சொல்லும் சிற்பங்கள் - 19
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மஞ்சக்குடி எனும் சிறிய கிராமத்தில் திகழும் சிவாலயமும் விஷ்ணு ஆலயமும் சமீபகாலம் வரை புதர் மண்டிய நிலையில் இடிபாடுகளுடன் திகழ்ந்தன. அந்த ஊர் இளைஞர்களின் பெருமுயற்சியால், புதர்களும் இடிபாடுகளும் அகற்றப்பட்டன. பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்தபோது, இந்த ஆலயங்கள் அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை என்பது தெரியவந்தது.

புதுக்கோட்டைப் பகுதியை மதுரை பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தவர்கள் தொண்டைமான் வேந்தர்கள். கி.பி.14-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனின் பிரதிநிதியாக இருந்து, புதுக்கோட்டைக்கு உட்பட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னர், மஞ்சக்குடி எனும் ஊரில் இருந்தபடி ஆட்சி செய்ததால், அவர் மஞ்சக்குடியுடையார், திருநோக்கு அழகியார் தொண்டைமான் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

இவரின் மரபு வழியே வந்தவர்கள், அறந்தாங்கியில் கோட்டைக் கொத்தளங்கள் அமைத்து, அந்த ஊரையே தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். ஆவுடையார்கோவில் கலைச்செல்வங்கள் முதலானவை இவர்களின் பெருங்கொடையே!

மஞ்சக்குடியுடையார் தான் பிறந்த ஊரில், அதாவது மஞ்சக்குடியில் இரண்டு ஆலயங்களைக் கட்டினார். அந்த சைவ- வைணவ ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் இறைத் திருமேனிகளை தான் எப்போதும் வணங்கும் கோலத்தில், சுமார் ஐந்தரை அடி உயரம் உள்ள தனது உருவச்சிலைகளை நிறுவியுள்ளார்.

மஞ்சக்குடி சிவாலயத்தின் மூலவர் லிங்கத்தின் பாணம், கல்லாக மாறிய மரப்படிவப் பாறையாகும். பழங்காலத்தில் நடுதறி என்று சொல்லி நடப்பட்டு வணங்கப்படும் மரத்தாலான லிங்க பாணம் இங்கு கல்லாகக் காட்சி அளிக்கிறது. இந்தக் கோயிலின் அம்பாள் திருமேனி, பாண்டிய நாட்டுக்கே உரிய வகையில் இரண்டு திருக்கரங்களுடன், ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைத் தொடை மேல் வைத்தும் அருமையாகக் காட்சி தருகிறது.

இங்கே உள்ள மரத்தடியில் காட்சி தரும் ஸ்ரீபைரவர், கலைமகள், அமர்ந்த கோலத்திலான தேவி ஆகியோரின் திருவடிவங்கள் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன. சூரியனின் ஒரு கரம் உடைந்து பின்னப்பட்டுக் காணப்பட்டாலும், திருமுகம் பேரெழிலுடன் திகழ்கிறது. கருவறையின் பின்பக்க தேவ கோஷ்டத்தில் காணப்படும் லிங்கோத்பவர் வடிவமும் சிறப்பு கொண்டதாக அமைந்துள்ளது.


சோதி வடிவாகிய பெருந்தூணின் மேற்புறம் மாலை சுற்றப்பட்டுள்ளது. அருகே, அண்ணலின் முடி காணப் பறந்து செல்லும் அன்னமும் (பிரமனும்), அடி காண பூமியை அகழ்ந்து செல்லும் ஏனமும் (விஷ்ணு) காணப்பெறுகின்றன. அடிமுடி காட்டாவண்ணம் அண்ணாமலையார் மான் மழு ஏந்தியவாறு அருட்காட்சி தருகின்றார்.

இந்த ஆலயத்தில் காணப்பெறும் ஸ்ரீதுர்கையின் திருவடிவமும், கணபதியாரின் திருவுருவமும் கல்லா அல்லது உலோகமா என நம்மை மயங்க வைக்கின்றன.

மஞ்சக்குடி ஆலயத்துச் சிற்பங்கள் வரிசையில் மகுடமெனத் திகழ்வது, லிங்கத்துக்குப் பால் சொரிந்தவாறு நிற்கும் காராம்பசுவின் சிற்பமே! ஒரு கல்லாலான பலகை மீது நான்கு கால்களுடன் நிற்கும் இந்தப் பசு தன் மடியை லிங்கத்தின் மீது வைத்தவாறு பால் சொரிகின்றது. அவ்வண்ணமே நின்றவாறு, அது தன் தலையைத் திருப்பி, நாக்கால் அந்த லிங்கத்தை வருடும் நிலையில் காணப்பெறுகின்றது. இக்காட்சிகள் அனைத்தும் ஒரே கல்லில் வடிக்கப் பெற்றவையாகும்.

பொதுவாக, தமிழகத்திலுள்ள திருக்கோயில் களில் இக்காட்சிக்குரிய பசு சிற்பங்களை தூண்களிலும், சுவர்களிலும் புடைப்புச் சிற்பங்களாகப் பாதி உடல் மட்டுமே வெளியில் தெரியுமாறு அமைத்திருப்பர். இங்கு மட்டுமே முழுத் தனிச்சிற்பமாகப் பசுவும் லிங்கமும் இணைந்த நிலையில் காணப்பெறுகின்றன.

மறைஞானசம்பந்தர் அருளிய 'சிவதரு மோத்திரம்’ என்னும் நூலில் நத்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுனை என்ற சிவலோகத்து ஐவகைப் பசுக்கள் பற்றிக் குறிக்கப்பெற்றுள்ளன. உமாதேவியே பசு வடிவம் எடுத்து, திருவாவடுதுறை லிங்கப் பெருமான் மீது பால் பொழிந்ததாக அவ்வூர் தல புராணம் குறிக்கின்றது. மஞ்சக்குடியில் காணப்பெறும் பசுவின் திருவடிவை உமாதேவியாகவே கொண்டு நாம் வணங்கிப் போற்றுவோம்!

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 9:22 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 20
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


திருப்பைஞ்ஞீலி

'ஞீலி’ என்ற தமிழ்ச் சொல், வாழையின் ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிப்பதாகும். ஞீலி வாழை உண்பதற்கு ஏற்றதன்று. இவ்வகை வாழை இனத்தையே தல விருட்சமாகக் கொண்டதால், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலும், ஊரும்

திருப்பைஞ்ஞீலி என்றே அழைக்கப்பெறுகின்றன. திருவரங்கத்துக்கு வடக்காக மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை என்ற ஊர்களுக்கு அருகில் இவ்வூர் விளங்குகின்றது.

திருப்பைஞ்ஞீலியில் கோயில்கொண்டுள்ள ஈசனை நீலகண் டேஸ்வரர், ஞீலிவன நாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர் ஆகிய பெயர்களில் குறிப்பர். கல்ஹாரத்துடன் அழகிய துவாரபாலகர் சிற்பங்கள் திருவாயிலை அலங்கரிக்க, இவ்வாலயத்து மொட்டைக் கோபுரம் திகழ்கிறது. 2-ம் கோபுரமும் கலை நயம் வாய்ந்ததாகும். மூலவர் சிவலிங்கம், சிறிய பாணத்துடன் காணப்பெறுகிறது. உமாதேவியோ திருக்கரத்தில் சுவடி ஏந்திய நிலையில், ஞான முத்திரை காட்டியவாறு அருள்பாலிக்கின்றார்.

திருச்சுற்றில் காணப்பெறும் பைரவர் சிற்பமும், சூரியனின் திருவுருவமும் சோழர் கால கலைநயத்தோடு விளங்குகின்றன. பின்புறத்தில் நாய் நிற்க, நின்ற கோலத்தில் சூலம், கபாலம், டமருகம், பாசம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் கொண்டவராக, எரிதழல் நிரம்பிய மகுடத்துடன் பைரவரின் திருமேனி காட்சி தருகின்றது. சூரியனோ தன் இரு கரங்களிலும் கமலங்களை ஏந்தியவாறு காணப்பெறுகின்றார்.

நடராஜரின் திருவுருவம் உமையம்மையுடன் சுவரில் வண்ண ஓவியமாகத் திகழ, அவர் முன்பு ஸ்ரீபாதபீடம் உள்ளது. இங்கு காணப்பெறும் கல்லாலான பலகணி (ஜன்னல்) சிறந்த வேலைப் பாடுடையதாகும்.

திருவாரூரில் எவ்வாறு தியாகராஜப் பெருமான் (சோமாஸ்கந்தர்) வீதிவிடங்கர் என அழைக்கப் பெறுகின்றாரோ, அதுபோல இந்த ஆலயத்தில் குடபோக மாகக் (குடைவறை) காணப்பெறும் கருவறையின் சுவரில் சிவபெருமான், உமாதேவி, குழந்தை முருகன் (ஸ்கந்தன்) ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் காணப் பெறுகின்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வாலயத்து தேவாரப் பதிகத்தில் 'ஆரணீய விடங்கரே’ என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளது, இச்சிற்பத் திருவடிவத்தையே!

சுகாசன கோலத்தில் ஈசனார் மான், மழு ஆகியவற்றை ஏந்தியவாறு நான்கு திருக்கரங்களுடன் அமர்ந் திருக்க, அம்மையோ பக்கவாட்டில் திரும்பியவாறு, ஒருகாலைத் தொங்கவிட்டவாறும் மறுகாலைக் குத்திட்டவாறும் ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். இருவர் இடையே உள்ள முருகப்பெருமானைத் திருக்கரங்களால் பற்றியவாறு உமாதேவி காணப் பெறுகின்றார்.

தமிழகத்தில் உள்ள சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பங்கள் வரிசையில் இது தனித்தன்மையுடையது ஆகும். கலையமைதியை ஆராயும்போது, இந்தப் படைப்பு கிபி 8-ம் நூற்றாண்டைச் சார்ந்த முத்தரையர்களின் கலைவண்ணமே என்பதை உணரலாம். ஈசனின் காலடி யில் கிடக்கும் முயலகனை யமன் என இத்தலத்தார் தவறாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.

இத்தலத்தின் மிகுசிறப்பினை, கோயிலுக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலையன்றும் அதன் கரையில் காணப்பெறும் சுதைச் சிற்பக் காட்சியும் நமக்கு எடுத்துரைக்கின்றன. இச்சிற்பக் காட்சியில் அந்தணர் வடிவில் சிவபெருமான் சோற்று மூட்டை (பொதிச்சோறு) ஒன்றினை ஏந்தி நிற்க, எதிரே உழவாரம் ஏந்திய திருநாவுக்கரசர் நின்றுகொண்டிருக்கிறார். இது, ஈசனார் அப்பரடிகளுக்கு பொதிச்சோறு அளித்த நிகழ்வைக் குறிப்பதாகும்.

காவிரிக்கரைத் திருத்தலங்களை வழிபாடு செய்து திருப் பதிகங்கள் பாடிச் சென்ற திருநாவுக்கரசர், பழையாறையி லிருந்து பல தலங்களைக் கண்டு, திருப்பராய்த்துறை சென்றடைந்தார். பராய்த்துறை ஈசனைப் பாடிப் பரவிய பிறகு, திருபைஞ்ஞீலிக்குச் சென்று வழிபட வேண்டும் எனும் பெருவிருப்பால், கடுங் கோடையையும் பொருட்படுத்தாது வடதிசை நோக்கி தொடர்ந்து நடந்தார்.

பசி மிகுதியால் வாட்டமுற்ற அடியாரின் துயர் நீக்க விரும்பிய பைஞ்ஞீலி ஈசன், முதிய அந்தணர் வடிவில் வந்தார். அப்பரின் எதிரில் தோன்றி, கையில் எடுத்து வந்த சோற்றுப் பொதியை அவரிடம் தந்து, அங்கு அவரே தோற்றுவித்த குளத்தில் நீர் பருகவும் வேண்டினார்.

சோறு உண்டு நீர் பருகிய அப்பரடிகள், முதியவரோடு பைஞ்ஞீலியை அடைந்தார். கோயில் நெருங்கியதும் முதியவர் மறைந்தருள, ஈசனாரின் கருணைத்திறம் உணர்ந்த நாவுக்கரசர் அப்பதியில் தேவாரம் பாடித் திளைத்தார். இந்நிகழ்வைக் காட்டுபவையே அங்கு காணப்பெறும் சுதைச் சிற்பங்களும், நீர் நிலையும் ஆவன.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 9:26 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 21
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


காஞ்சி வைகுந்த பெருமாள்

நகரங்களில் சிறந்தது காஞ்சி (நகரேஷு காஞ்சி) என்ற சிறப்புக்கு உரிய காஞ்சிபுரத்தில் உள்ள மங்களாசாசனம் பெற்ற 14 திருக்கோயில்களில் ஒன்று ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் ஆலயம்! இந்தக் கோயிலைப் பற்றிக் குறிப்பிடும் பல்லவர் காலக் கல்வெட்டுச் சாசனங்கள், 'பரமேஸ்வர விண்ணகரம்’ என்றும், 'பரமேஸ்வர விஷ்ணுகிரஹம்’ என்றும் தெரிவிக்கின்றன. வைணவக் கோயில் ஒன்றுக்கு 'பரமேஸ்வரன்’ என சிவநாமம் அமைந்திருப்பது வியப்பைத் தருகிறது, பாருங்கள்!

எழிலார்ந்த இந்தக் கோயிலை எடுப்பித்தது, பல்லவமல்லன் எனும் இரண்டாம் நந்திவர்ம பல்லவனாவான். இவனைப் பற்றி வைகுந்தநாதர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டு, 'பல்லவ மல்லனான பரமேஸ்வரன்’ என்று குறிப்பிட்டு, அவனுடைய இயற்பெயர் பரமேஸ்வரன் என்பதைச் சுட்டுகிறது. இந்த மன்னன் கி.பி. 730-ல் துவங்கி 795 வரை சுமார் 65 வருட காலம் நீண்ட நெடிய ஆட்சி புரிந்திருக்கிறான்.

இவனுடைய சமகாலத்தில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார், இந்தக் கோயிலைப் பற்றிப் பத்துப் பாடல்கள் (பாசுரம்) பாடியுள்ளார். அதில், 'பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ண கரம் அதுவே’ என்று நந்திவர்மனின் புகழையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

அழகிய திருச்சுற்று; அதன் உட்புறம் சுவருடன் இணைந்த திருச்சுற்று மாளிகை எனும் மண்டபம்; இந்த மண்டபத்தின் நான்கு பத்திகளையும் சிம்மங்களுடன் உள்ள தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு சிம்மமும் உயிர்ப்புடன் நிற்பதான பிரமிப்பைத் தருகிறது!

மண்டப உட்புறச் சுவரில், இரண்டு அடுக்குகளாகத் தொடர் சிற்பக் காட்சிகள் உள்ளன. ஒவ்வொரு காட்சிக்குக் கீழேயும் பல்லவ கிரந்த எழுத்தில், அந்தக் காட்சிக்கு உரிய விவரங்கள் குறிப்புகளாக, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

திருச்சுற்றுக்கு நடுவே பிரதான ஆலயமான பரமேஸ்வர விண்ணகரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கருவறைக்கு மேலே ஒன்றன் மேல் ஒன்றாக, மூன்று தளங்களில் மூன்று மூலஸ்தானங்கள் அமைந்துள்ளன. கீழ்த்தளத்தில், ஸ்ரீவைகுந்தநாதர் மேற்கு நோக்கிய படி காட்சி தருகிறார். அதையடுத்து, மேலே அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

கருவறையின் புறச்சுவர் முழுவதும் திருமாலின் பல்வேறு திருக்கோலக் காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. பல்லவர் அல்லது சோழர், பாண்டியர் படைத்த எந்த வைணவ ஆலயத்திலும் இந்த அளவுக்குப் பேரழகு கொண்ட, பிரமிக்கத்தக்க சிற்பக் காட்சிகளைத் தரிசிப்பது அரிது!

ஸ்ரீவிமானத்து மூன்று திசைகளிலும் புறத்தில் சிறிய வாயில்கள் உள்ளன. இவை, கருவறையைச் சுற்றியுள்ள சாந்தாரம் எனும் சுற்று அறைக்குக் காற்றும் வெளிச்சமும் கிடைக்க அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய வாயில்களின் இரண்டு புறமும் தாமரை மலரை ஏந்தியபடி துவார பாலகர்கள் நிற்பதைக் காணலாம். இவற்றுக்கு நடுவே திருமாலின் திவ்வியக் காட்சிகளைத் தரிசிக்கலாம்.

கருடாழ்வார் தோளில் திருமால் அமர்ந்திருக்க, அருகே ஸ்ரீதேவி நிற்பது; சங்கு- சக்கரம் ஏந்திய திருமால் அமர்ந்திருக்க, அடியார் களும் தெய்வங்களும் தொழுது நிற்பது; ஐந்து தலை அரவின் கீழ் பரமபத நாதன் (வைகுந்தநாதர்) அமர்ந்திருக்க, திருமகள் வணங்கிப் போற்றுவது; தாமரை மலர் மீது மாலவன் நிற்க, இருபுறமும் சூரிய- சந்திரர் கையுயர்த்தி போற்றவும், கீழே முனிவர்கள் நால்வர் அமர்ந்திருப்பது; விஷ்வக் சேனனுக்கு திருமால், தலையில் மாலை சூட்டுவது ( சண்டீசருக்கு சிவன் மாலை சூட்டுவது போன்றே); இரணியனை மடியில் கிடத்தி, உடல் பிளக்கும் நரசிங்கத் திருவடிவம் என, கருவறையின் புறச்சுவர் முழுவதும் பேரழகு வாய்ந்த சிற்பக் காட்சிகளை நாம் கண்டுகளிக்கலாம்.

மூலவரான வைகுந்தநாத பெருமாளையும், மேல் நிலைகளில் உள்ள அமர்ந்த, கிடந்த கோலக் காட்சிகளையும், புறச் சுவரில் காணப்படும் திருமாலின் திரு அவதாரக் காட்சிகளையும் கண்டுகளித்தவாறு திருச்சுற்று மாளிகைப் பத்தியில் நுழைந்து, இரு அடுக்குகளாகக் கல்வெட்டுக் குறிப்புகளுடன் உள்ள சிற்பத் தொடரை அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் அறிந்துகொண்டு வியப்புடன் வெளிவர ஒருநாள் போதாது நமக்கு!

அந்தத் திருமாளிகையில் பல்லவ குல வரலாறு புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள் ளது. பல்லவ அரசர்களின் முடிசூட்டு விழாக்கள், அவர்கள் சாளுக்கியர்களோடும் பிறபுலத்து அரசர்களோடும் நிகழ்த்திய போர்க் காட்சிகள், வெற்றி விழாக்கள், பல்லவர் எடுத்த கோயில்கள், நாட்டியக் காட்சிகள், இறைத் திரு மேனிகள் என வரிசை வரிசையாகக் கல்வெட்டுக் குறிப்புகளுடன் இருப்பதைப் பார்த்து பிரமித்துப் போவோம்!


குறிப்பாக, 2-ம் நந்திவர்மனாகிய பரமேஸ்வரன் எடுத்த இந்த ஆலயமான பரமேசுவர விண்ணகரத் தின் சிற்பக் காட்சியையும் இங்கு நாம் காண முடிகிறது. பல்லவ மல்லனின் வரலாற்று நிகழ்வுகள் உயிரோட்டமான சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, காஞ்சி ஸ்ரீகயிலாய நாதர் ஆலயத்தை எடுப்பித்தவனும், பல்லவ மன்ன னின் முன்னோருமான ராஜசிம்ம பல்லவனும், அவன் தேவி ரங்கபதாகையும் நிற்கும் காட்சி அரிதானதொன்று!

காஞ்சிபுரம் செல்வோர், அந்த ஊரில் ஆழ்வார்களால் துதித்துப் போற்றி, மங்களாசாசனம் செய்யப்பட்ட 14 திவ்விய தேசங்களையும் கண்டு சேவித்த பின்பு, சிற்பசாகரமாகத் திகழும் ஸ்ரீவைகுந்த நாதர் ஆலயத்துக்கு மீண்டும் ஒருமுறை சென்று, அந்த அற்புதக் காட்சிகளை அணு அணுவாக ரசித்துப் பாருங்கள். திருமங்கை ஆழ்வாரின் கூற்று மெய்ப்படும்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 9:35 pm


சேதி சொல்லும் சிற்பங்கள் - 22
காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயம்
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


'கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில்’ என்று மணிவாசகப் பெருமான் போற்றும் சிறப்புடையது காஞ்சிபுரத்து பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில்.

தேவாரப் பாடல் பெற்ற கோயில்களாக ஸ்ரீஏகம்பம், திருமேற்றளி, ஓணகாந்தன் தளி, கச்சிநெறிக் காரைக்காடு, அநேகதங்காவதம் என்னும் ஐந்து திருக்கோயில்களும் காஞ்சி மாநகருக்கு அணியாகத் திகழ்கின்றன. ஏகம்பத்துத் திருக்கோயில் வளாகத்தினுள் 'கச்சி மயானம்’ என்ற சிறப்புடைய பழம்பதியன்றும் உள்ளது. ஏகாம்பரேஸ்வரர் மூலவர் மணல் (பிருத்வி) லிங்கமாகும். பஞ்சபூத தலங்களுள் இது 'நிலம்’ எனும் பூத தத்துவம் காட்டும் ஆலயம்.

உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மாமரத்தின் கீழ், மணலால் லிங்கம் அமைத்து, தவத்தில் ஈடுபட்டார். அப்போது ஆற்றில் வெள்ளம் பெருகி வர, உமையம்மை லிங்கத்தைத் தழுவிக் காத்தாள் என்கிறது ஸ்தல புராணம். அம்பிகை தழுவக் குழைந்தானாம் ஈசன். அதனால் 'தழுவக்குழைந்த பிரான்’ எனும் திருநாமம் பெற்றார் சிவனார்.இது நிகழ்ந்த தலமே, தற்போதைய திருவேகம்பம் கோயிலாகும். தல விருட்சம் மாமரம். இங்கே, மாமரத்துக்கு அருகில் புராணத்தைச் சுட்டிக்காட்டும் எழிலார்ந்த சிற்பங்கள் மூன்று உள்ளன.

முதற்காட்சியில், உமாதேவி (காமாக்ஷி) தீச்சுடரின் நுனியில் தன் ஒற்றைக்காலால் நின்ற வண்ணம், மறு காலைத் தூக்கி மடித்தவாறு, ஒரு கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, மறு கரத்தால் ஈசனைப் போற்றித் தவமிருக்கும் திருக்கோலம் இடம்பெற்றுள்ளது.

அதையடுத்து, ஸ்ரீலிங்கோத்பவர் திருவுருவம். அடிமுடி காணும் போட்டியில், அன்ன வடிவெடுத்த ஸ்ரீபிரம்மனின் திருவுருவம் அந்த லிங்க பாணத்தின் மேற் பகுதியிலும், பன்றி உருவெடுத்த திருமாலின் திருவுருவம் கீழ்ப் பகுதியிலும் உள்ளன. இடையே உள்ள வெட்டுப் பகுதிக்குள் ஈசனார் அடிமுடி காட்டாதபடி, தன் உருவைக் காட்டி ஸ்ரீஅண்ணா மலையாராகக் காட்சி தருகிறார்.

அடுத்து, மாமரத்தின் கீழ் தேவி ஸ்தாபித்த லிங்கத் திருமேனியை, கம்பா நதியின் வெள்ளப்பெருக்குக்குப் பயந்து கட்டித் தழுவுகிறார். தழுவக் குழைந்தானான கச்சி ஏகம்பனின் இந்தத் திருக்கோலக் காட்சி, அழகிய சிற்பமாகத் திகழ்கிறது!

சுற்றுப் பிராகாரத்தில் உள்ள மன்னவன் ஒருவனின் திருவுருவம் குறிப்பிடத்தக்க ஒன்று. தாடி மீசையுடன் நின்ற கோலத்தில் வணங்குகிறவராகக் காணப் படும் சிற்பம், கரிகால் சோழ மன்னன் என்கின்றனர். இது பல்லவ அல்லது சோழ மன்னனின் உருவச் சிலை என்பது மட்டும் உறுதி!

அதேபோல், பிராகாரத்தில் தூண் ஒன்றில் காணப்பெறும் ஸ்ரீநரசிம்மர் உருவம் வெகு அற்புதம்! இரணியனை மடியில் கிடத்தி, அவன் மார்பைப் பிளக்கும் இந்த ரௌத்திரமூர்த்தியின் கோலம் மெய்சிலிர்க்கச் செய்யும். முதல் திருச்சுற்றிலேயே, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற நிலாத்துண்டப் பெருமாளின் திருக்கோயிலில் விஷ்ணு மூர்த்தியின் அழகுமிகு சிற்பமும் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கோயிலின் ராஜகோபுரம், ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கி.பி. 1509-ம் வருடம், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் இந்தக் கோபுரத்தை எடுப்பித்தார். கோபுரத்தின் திருவாயிலில் நுழையும்போது, மேலே உள்ள நிலைக்காலின் அடிப் பகுதியைப் பார்த்தால், அங்கு 'ஸ்வஸ்தி ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பண்ணுவித்த திருக்கோபுரம்’ என்று தமிழிலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட கல்வெட்டைக் காணலாம்.

இந்தக் கோபுர வாயிலின் இருமருங்கும் காணப்படும் மூன்று சிற்பக் காட்சிகள் தனிச்சிறப்பு கொண்டவை! முதல் இரண்டு சிற்பக் காட்சிகள் ஒன்றன்கீழ் ஒன்றாக உள்ளன. மேலே காணப்படும் பகுதியில், சிவபெருமான் ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக அமர்ந்துகொண்டு, சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உரைக்கிறார். பெருமானாரின் இடப்புறம் மழு ஒன்றினைத் தன் தோளில் அணைத்தவண்ணம் சண்டீச பெருமான் நின்று வணங்குகிறார்.

கீழே காணப்படும் காட்சியில், தல வரலாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. அழகான ஸ்ரீவிமானமாகத் திகழும் கோயில் ஒன்று சிற்பமாகவே காட்சி தரும் அழகே அழகு! உள்ளே மூலவராகத் திகழும் லிங்க உருவமும் உள்ளது. இந்தக் கோயில் சிற்பம், திருவோத்தூர் என அழைக்கப்படும் தொண்டை நாட்டுத் திருத்தலமான செய்யார் சிவாலயத்தைக் குறிக்கிறது. அந்த ஆலயத்துக்கு முன்னர், குலைகள் தள்ளிய பனைமரமொன்று காணப்பெறுகின்றது. அதன்கீழ் ஒருபுறம் திருஞானசம்பந்தர் நின்றவாறு 'பூத் தேர்ந்து ஆயன கொண்டு...’ எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடியபடி நிற்கிறார். அவருக்கு எதிர்ப்புறம் திகம்பரராக சமணர் ஒருவர் நிற்கிறார். அருகே, அவரே தன் சூளுரைக்காகத் தாமே கழுவேறி நிற்கும் காட்சியும் உள்ளது.


திருவோத்தூர் திருத்தலத்தில் அனைத்தும் ஆண் பனைகளாகவே இருப்பது கண்டு சமணர்கள், 'சம்பந்தரால் இவற்றைக் குலைகாய்த்திடச் செய்தல் இயலுமோ?’ என வாது செய்து அழைக்கவே, திருஞானசம்பந்தர் 'குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்’ எனும் சொற்றொடர் கொண்ட பதிகத்தின் கடைப் பாடலைப் பாட... அங்கு திகழ்ந்த ஆண் பனைகள் குலை தள்ளியதாகச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். இந்தச் சரிதம் முழுவதையும் சிற்ப நுட்பமாக இங்கே தரிசித்து மகிழலாம்.

மூன்றாவதாகத் திகழும் சிற்பப் படைப்பில், கச்சி ஏகம்பத்து மாமரம் காணப்படுகிறது. அதன் முன், சிவபெருமானின் ஊர்தியான ரிஷபம் நிற்கிறது.

காஞ்சியம்பதியில், திருக்கச்சி ஏகம்பத்துச் சிற்பக் காட்சியில் காஞ்சி மற்றும் திருவோத்தூர் தல புராணங்களின் சிறப்பைக் கண்ணார ரசித்து, வியக்கலாம்.

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 9:38 pm


சேதி சொல்லும் சிற்பங்கள் - 23
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சிதம்பரம் நடராஜர் ஆலயம்


நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தத்துவத்தை எடுத்துரைக்கும் ஆலயங்களான கச்சி (அல்லது) ஆரூர், ஆனைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, தில்லை என்ற திருக்கோயில்கள் வரிசையில் திகழும் தில்லையம்பதியை- தில்லையம்பலத்தை சிதம்பரம் எனத் தொன்மையான நூல்கள் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் என்பது பிரபஞ்சப் பெருவெளியையும், சிதாகாசம் எனும் ஞானவெளியையும் குறிக்கிறது. அம்பலத்தில் ஆடுகிற வனாகக் காட்சியளிக்கும் நடேச மூர்த்தியின் திருவடிவத்தில் காணப்படும் கமல பீடமும் மகர வாயும், நிலம் எனும் பூதத்தையும்; பரமனின் சடையில் ஒடுங்கிக் கிடக்கும் கங்காதேவி, நீரையும்; பெருமானின் இட மேற்கரத்தில் திகழும் எரியகல் (தீச்சுடர்), நெருப்பையும்; கூத்தனின் விரிசடை, பறக்கும் காற்றின் வேகத்தையும்; தீச்சுடர்களோடு திகழும் பிரபை ஆகாசத்தையும் நம் முன் நிறுத்தும் குறியீடுகள்! இவை அனைத்தையும் நாம் ஒருங்கே தரிசிக்கக்கூடிய திருத்தலமான தில்லையம்பதியின் நான்கு திருக்கோபுரங்களையும் சிற்பசாகரம் என்றே சொல்லலாம்.

சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன் காலத்தில் தில்லைப் பெருங்கோயில் எவ்வாறு திகழ்ந்தது என்பதை, தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஓவியக் காட்சியாகக் காட்டியுள்ளான். பொன்னம்பலமும் பிற கோயில்களும், திருச்சுற்றுமாளிகையும், திருக்கோபுரங்களும் அந்தக் காலகட்டத்தில் எவ்வாறு திகழ்ந்ததோ, அவ்வாறே அவ்வோவியப் படைப்பில் திகழ்வதை இன்றைக்கும் பார்க்கலாம்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லையில் இன்றைக்கு நாம் காணும் ஏழு நிலைக் கோபுரங்கள் இடம்பெறவில்லை. மாறாக திருச்சூர், இருஞ்சாலக்குடா போன்ற கேரளத்துக் கோயில்களில் இடம்பெறும் மரவேலைப்பாடுகளுடன் ஓடுகள் வேயப்பட்ட சேரர் காலப் பாணியில் அமைந்த கோபுரங்களே இடம் பெற்றிருந்தன.

தில்லையில் முதன்முதலாக ஏழு நிலைக் கோபுரமாக மேற்குக் கோபுரத்தை இரண்டாம் குலோத்துங்கச் சோழன் எடுப்பித்தான். பின்னர் கோப்பெருஞ்சிங்கன், கிழக்கு மற்றும் தெற்குக் கோபுரங்களைக் கட்டினான். ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தெற்குக் கோபுரத்தைப் புதுப்பித்தான். விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் வடக்குக் கோபுரத்தை எடுத்தார்.

பல்வேறு காலகட்டங்களில், ஏழு நிலைகளைக் கொண்ட தில்லைக் கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தாலும், அந்தக் கோபுரங்களில் காலத்தால் முதற்படைப்பாக விளங்கும் மேற்குக் கோபுரத்தில் எவ்வாறு சிற்பங்களை இடம் பெறச் செய்தார்களோ, அதேமுறையை பிறகு அங்கு எடுக்கப்பட்ட மூன்று கோபுரங்களிலும் பின்பற்றினார்கள். ஆகவே, திட்டமிட்ட செயல்பாட்டுடன் கோயிலின் எல்லாக் கோபுரங்களும் ஒருசேர அழகு காட்டி நிற்பது இன்னும் பிரமிப்பைக் கூட்டுகிறது!

கோபுரங்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்களின் அமைப்பு முறையை, நான்கு பகுப்புகளில் அடக்கலாம். நுழைவாயிலின் இருமருங்கும் காணப்பெறும் மாடங்களில் உள்ள சிற்பங்கள், நுழைவாயிலின் இருமருங்கும் சுவரில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள், கோபுரங் களின் வெளிப்புறத்தில் அடித்தள மாக விளங்கும் உபபீடத்தில் உள்ள மாடங்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள், கோபுரத்தின் புறச் சுவரான பித்தியில் மேல்நிலை மாடங்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் என நான்கு வகைகளாகப் பிரித்துப் பார்க்கலாம். வெளிப்புறம் காணப்படும் சிற்பங்கள், நான்கு திக்குகளிலும் தொடர்ச்சியாக அமைந்திருப்பதால், அவற்றை ஆவர்ண கோஷ்ட சிற்பங்கள் என கட்டடக் கலை நூல்கள் குறிப்பிடுகின்றன.

தில்லைக் கோபுரங்களைப் பொறுத்தவரை, நுழைவாயிலின் மாடங்களில் ஸ்ரீபைரவர், ஸ்ரீதுர்கை, அதிகார நந்தி, கோபுரங்களை எடுத்த கர்த்தா ஆகியோருக்கு மாடங்கள் அமைத்து, சிற்பங்களை இடம்பெறச் செய்துள்ளனர். மேற்குக் கோபுரத்தில் இரண்டாம் குலோத்துங்கனின் உருவச் சிலையும், கிழக்கில் கோப்பெருஞ்சிங்கனின் உருவச் சிலையும், வடக்கில் கிருஷ்ணதேவராயரின் உருவச் சிலையும் இருப்பதை இன்றைக்கும் காணலாம்.

இவற்றில், தெற்கில் இருந்த மன்னவனின் சிலையும், கிழக்குக் கோபுரத்தில் இருந்த பைரவர் சிலையும் பின்னாளில் காணாது போய்விட்டன. மாறாக, பிற சிற்பங்களை அங்கு இடம்பெறச் செய்துள்ளனர். மேற்குக் கோபுரத் தில் குலோத்துங்கன் அருகில் சேக்கிழார் பெருமானின் திருவுருவச் சிற்பம் இடம் பெற்றுள்ளது. கோபுரத்தை எடுத்த கர்த்தாவுக்கு எதிர்ப்புறம் அந்தக் கோபுரத்தை உருவாக்கிய சிற்பிகளின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

கிழக்குக் கோபுரத்தை எடுத்த சிற்பிகளுக்கு அருகே, அவர்கள் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்திய அளவுகோலின் சிற்பமும் அதில் அளவுக்குறியீடுகளும்கூட சிற்பங் களாக வடிக்கப் பட்டு, பிரமிக்க வைக்கின்றன. வடக்குக் கோபுரத்தில் இடம்பெற்றுள்ள சிற்பிகளின் உருவச் சிற்பங்களுக்கு மேலாக விருத்தகிரி (விருத்தாசலம்) சேவகப்பெருமாள், சேவகப்பெருமாளின் மகன் விசுவமுத்து, அவன் தம்பி காரணாகாரி, திருப்பிறைக்கொடை ஆசாரி திருமருங்கன் என்ற அவர் களின் பெயர்கள் கல்வெட்டு வாசகங் களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

தில்லைக் கோபுர நுழைவாயில்களில், இரண்டு பக்கச் சுவர்களிலும் நாட்டிய சாஸ்திரத்தை எடுத்துரைக் கும் புடைப்புச் சிற்பங்கள் காணப்பெறுகின்றன. மேற்குக் கோபுரத்தில், பரத சாஸ்திர ஸ்லோக கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கூடவே, ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் கீழாக அதற்குரிய நாட்டிய கரணத்தை ஓர் ஆடற்பெண் ஆடிக்காட்டும் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு அருகில், குடமுழா போன்ற தாள இசைக் கருவிகளை இசைக்கும் கலைஞர்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. மேற்குக் கோபுரத்தில் 108 நாட்டியக் காட்சிகளும், கிழக்குக் கோபுரத்தில் 96 காட்சிகளும், தெற்குக் கோபுரத்தில் 104 காட்சிகளும், வடக்குக் கோபுரத்தில் 108 காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

பரத முனி இயற்றிய நாட்டிய சாஸ்திரம் காலங்காலமாக இந்தக் கோபுரங்கள் வழியே கட்டிக் காக்கப் பட்டு வருகிறது. அத்துடன் அந்த நாட்டிய சாஸ்திரக் கலையைப் பயில்வோருக்கு இந்தக் கோபுரங்களே போதிக்கும் கல்விச் சாலையாகவும் திகழ்கின்றன என்பது வியப்பூட்டுகிற உண்மை!

- புரட்டுவோம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum