உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am

» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
by சிவனாசான் Yesterday at 3:03 am

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 9:02 pm

» உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 8:33 pm

» ஏழுகறிக் கூட்டு
by ayyasamy ram Thu Dec 12, 2019 8:13 pm

» கடந்து போன நாட்களுக்காக கவலைப்படாதீர்கள்...!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 7:32 pm

Admins Online

பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:00 am


விழிப்பு வந்ததும் ராஜம் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். தூக்கக் கலக்கம் இல்லாவிட்டாலும் எதையோ எதிர் பார்த்தவன் போல் கொஞ்ச நேரம் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடி பக்கத்து வீட்டுச் சேவல் ‘கொக்.... கொக் கொக்கோகோ’ என்று கூவியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது.

‘நான் கண் திறக்க வேண்டும் என்று இந்தச் சேவல் காத்திருக்கும் போல இருக்கு! இப்போ மணி என்ன தெரியுமா? சரியாக நாலரை!’ என்று தனக்குள் சொல்லிச் சிரித்தவாறு, இடுப்பு வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு எழுந்தான்.

காலையில் அம்மா முகத்தில் விழித்து விடக் கூடாது என்று அவனுக்குக் கவலை. இருட்டில் கால்களால் துழாவியபடி இரண்டு தங்கைகளையும் தாண்டினான். அப்பால்தான் அம்மா படுத்திருந்தாள். கீழே குனியாமல் சுவிட்சைப் போட்டான். வெளிச்சம் வந்ததும் உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டான். ஆணியில் தொங்கிய கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்த்துக் கொண்டான். பிறகுதான் மனசு சமாதானப்பட்டது. அது என்னவோ, அம்மா முகத்தைப் பார்த்தபடி எழுந்தால் அன்றைய பொழுது முழுவதும் சண்டையும் சச்சரவுமாகப் போகிறது!

கடிகாரத்தில் மணி பார்த்தான். நாலு முப்பத்திரண்டு...!

பக்கத்து வீட்டில் கொல்லைப் பக்கம் ஒரு சின்ன கோழிப் பண்ணை வைத்திருக்கிறார்கள். சேவல் இல்லாமல் கோழிகள் ஏழெட்டு மாதம் முட்டை இடும் அதிசயம் அங்கே நடக்கிறது. சும்மா அழகுக்காக அடுத்த வீட்டுக்காரர் ஒரு சேவல் வளர்க்கிறார். ஜாதி சேவல்; ஒன்றரை அடி உயரம். வெள்ளை வெளேரென்று டினோபால் சலவை செய்த உருப்படி போல் இருக்கும். அதுதான் நாலரை மணிக்குச் சொல்லி வைத்தாற்போல் கூவுகிறது.

‘என்னைக்காவது ஒரு நாள் நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? சுவரேறி குதிச்சு சேவல் கழுத்தைத் திருகி, குழம்பு வச்சி தின்னுடப் போறேன். அதெப்படி கரெக்டா நாலரை மணிக்குக் கூப்பாடு போடுது! காலை நேரத்திலே ஐயோய்யோ என்று கத்தறாப் போலே சகிக்க முடியல்லே!’

அவன் கவனம் தறி மேடை மீது சென்றது. இரண்டை முழம் நெய்தால் சேலை அறுக்கலாம். கடைசிச் சேலை. இன்றைக்குச் சாயங்காலம் அறுத்துவிட வேண்டும். முடியுமா? முதலாளி கூப்பிட்டு ஏதாவாது வேலை சொல்லாமல் இருக்க வேண்டும். அம்மா சண்டை வளர்க்காமல் இருக்க வேண்டும். முதலாளி கூப்பிட்டால் சால்ஜாப்பு சொல்லலாம்? ஆனால் இந்த அம்மாவை எப்படி ஒதுக்குவது?

குனிந்து தைரியமாக அம்மாவைப் பார்த்தான். தூக்கத்திலே கூட உர்றென்று... பார்க்கச் சகிக்கவில்லை. பெற்றவளை அப்படிச் சொல்வது பாவல் இல்லையா? ஒன்றா? இரண்டா? ஆண் பிள்ளையிலே ஐந்து, பெண் பிள்ளையிலே ஐந்து, பத்தும் பிழைத்துக் கிடக்கின்றன, சேதாரம் இல்லாமல். அப்பா நெசவு வேலையில் கெட்டிக்காரர். குடித்துவிட்டு வந்து அம்மாவைத் தலைகால் பாராமல் உதைப்பார்; உதைத்து விட்டுத் தொலைவாரா? அம்மா காலில் விழாத குறையாக இரவு முழுவதும் அழுது கொண்டிருப்பார்.

ராஜம், வீட்டுக்கு மூத்த பிள்ளை. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுப் போட்டுப் பத்துக் குழந்தைகள் பிறந்த கதை அவனுக்குத் தெரியும்.

‘இவ்வளவு சண்டை போட்டிருக்காவிட்டால், இத்தனை குழந்தைகள் வந்திருக்காது. பெண்டாட்டியை ஏன் அடிக்கணும், பிறகு அது மோவாயைப் பிடித்து ஏன் கெஞ்சணும்? அதான் எனக்குப் புரியல்லே’.

அப்பாவால்தான் அம்மா கெட்டுப் போயிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவள் அப்பாவை எதிர்த்துப் பேசுவதில்லை. அடிதாங்க முடியாமல் எதிர்த்து வாயாடத் தொடங்கினாள். உடம்பிலே தெம்பு குறைந்ததும் பதிலுக்கு அடிக்கவும், கடிக்கவும் ஆரம்பித்தாள்.

அம்மாவுக்கு சோழிப்பல். உதடுகளைக் காவல் காப்பது போல் வெளியே நிற்கும். அப்படி குடி போதையில் அவளை அடிக்கும்போது, கையோ, காலோ, வாயோ, வயிறோ, பல்லில் சிக்கிய இடத்தைக் கடித்துக் குதறி விடுவாள்.

அவளிடம் கடிபடாமல் தப்புவதற்காக அப்பா தறிமேடையைச் சுற்றிச் சுற்றி ஓடிய காட்சியை நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“நீ நாயாப் பிறக்க வேண்டியவ...”

“அதுக்காவத்தான் உன்னைக் கட்டிக்கிட்டுச் சீரளியறேன்...”

அம்மா சாதாரணமாய் அப்பாவுக்கு ‘நீங்க’ என்று மரியாதை தருவது வழக்கம்; ஆனால் சண்டையின் உச்ச கட்டத்தில் இந்த மரியாதை பறந்து போகும்.

”உனக்கு வாய் நீளமாப் போச்சு. பல்லைத் தட்டி கையிலே கொடுத்தாத்தான்...”

“எங்கே பல்லைத் தட்டு, பார்க்கலாம்! ஆம்பிளையானா என்கிட்டே வா, பார்க்கலாம்!” என்று அம்மா சவால் விட்டு, தட்டுவதற்காகப் பற்களைப் பிரமாதமாய்க் காட்டுவாள்.

ஆனால், அப்பா அவளுடைய பற்களை நெருங்கத் துணிந்ததில்லை. தெளிந்த போதையை மீட்டுக் கொள்வதற்காக மறுபடியும் கள்ளுக்கடைக்கு ஓடி விடுவார்.

அம்மாவின் கடிக்கு பயந்துதானோ என்னவோ, அவள் பத்தாவதாக ஒரு பெண் குழந்தை பெற்றதும் அப்பா செத்துப் போனார். அவர் செத்ததே வேடிக்கைதான்.

அம்மாவின் பிரசவங்கள் எல்லாம் வீட்டில்தான் நடப்பது வழக்கம். துணைக்கு அத்தை ஒருத்தி வருவாள். குழந்தை பிறந்ததைத் தாம்பாளத்தில் தட்டி அத்தைதான் அறிவிப்பாள்.

“என்ன குளந்தே?” என்று கேட்டார் அப்பா.

“கணக்கு சரியாப் போய்ச்சு. ஆண் பிள்ளையிலே அஞ்சு இருக்கா? பெண் பிள்ளையும் அஞ்சு ஆயிடுச்சு”.

“பொண்ணு பிறந்திருக்குன்னா சொல்றே?”

“அதான் சொல்றேன்.”

“அஞ்சு பெண்களைக் கட்டிக் கொடுக்கிறதுக்குள்ளே நான் காவேரிக் கரைக்குப் போயிடுவேன். போயும் போயும் பெண்ணா பெத்தா?”

“நீங்க ஒண்ணும் கலியாணம் பண்ணிக் கிழிக்க வேணாம். அவங்க அவங்க தலை எழுத்துப்படி நடக்கும். நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம்” என்றாள் அம்மா, அறையில் இருந்தபடி.

”நான் எப்படி கவலைப்படாமே இருக்க முடியும்? நீ பொம்பிளே; வீட்டிலே உட்கார்ந்து பேசுவே. தெருவில் நாலு பேருக்கு முன்னாடி போறவன் நான் இல்லே? குதிராட்டம் பெண்ணுங்க கல்யாணத்துக்கு நிக்குதுன்னு என்னையில்லே கேப்பாங்க?”

“குளந்தே இப்பத்தான் பிறந்திருக்கு. அதுக்குள்ளே கலியாணத்தெப் பத்தி என்ன கவலை?”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:00 am“முன்னாடியே நாலு பெத்து வச்சிறிக்கியே. எல்லாத்துக்கும் கலியாணம் கார்த்தி செய்யறதுன்னா சின்ன வேலெயா? போயும் போயும் பெண்ணா பெத்தே?”

மனைவி, பெண் பெற்ற கவலையை மறப்பதற்காக அவர் காலையிலிருந்தே குடிக்கத் தொடங்கினார். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை அறை வாசலில் தலை காட்டுவார்; ‘போயும் போயும் பெண்ணா பெத்தே?” என்று பெருமூச்சு விடுவார்; வெளியே சென்று குடித்து விட்டு வருவார். நாள் பூராவும் இந்தக் கேள்வியும் குடியுமாகக் கழிந்தது.

இரவு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வீடு நாறும்படி வாயில் எடுத்தார். பிறகு ரத்தமாய்க் கக்கி விட்டு மயங்கிப் படுத்தவர், பெண்களுக்கு மணம் செய்து வைக்கிற சிரமத்தைத் தட்டிக் கழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

அப்புறம், எல்லாம் அம்மா பொறுப்பு.

அம்மா பொறுப்பு என்றால் அவள் பிரமாதமாய் என்ன சாதித்து விட்டாள்? குழந்தைகளை வாட்டி வதக்கி வேலை வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்கிறாள். வயிற்றில் கொட்டிக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறொன்றும் தெரியாது.

சந்தடி கேட்டு அம்மா விழித்துக் கொள்ளப் போகிறாளே என்று ராஜம் ஜாக்கிரதையாகவே பல் விளக்கினான். பல் விளக்கும்போது அவனுக்கு ஒரு பழைய ஞாபகம் சிரிப்பு மூட்டியது.

சிறுவனாக இருந்தபோது அம்மா பல் துலக்குவதைப் பார்ப்பது அவனுக்கு வேடிக்கை. ஒரு பிடி சாம்பலை அள்ளித் தண்ணீரில் நனைத்துப் பற்களைத் தேய்ப்பாள்; ஒவ்வொரு பல்லாக தேய்ப்பதற்கு நீண்ட நேரமாகும். சிறுவனான அவன் அவளருகில் போய் “ஒவ் அம்மா ஃபோக் சவஸ்தக் தாத் கூர் கெல்லர்த்தெகா?” (ஏன் அம்மா, அப்பாவைக் கடிக்கப் பல்லைக் கூராக்கிக்கிறியா?) என்று கேட்பான்.

“அரே தொகோ ஒண்டே பாடே ஃபந்தா! காய் திமிர்ஸா!” (அடே ஒனக்கு ஒரு பாடை கட்ட! என்ன திமிர் பாரு!) என்று எச்சில் கையால் அம்மா அவனை அடிக்க வருவாள்.

அவளிடம் சிக்காமல் அவன் தெருப்பக்கம் ஓடி விடுவான்.

மனத்தில் சிரித்தபடி பல் துலக்கி முடித்தான். பஞ்சாமி ஹோட்டலுக்குப் போய் ஒரு காபி சாப்பிட்டு வந்து பிறகு தங்கையை எழுப்பிக் கொண்டு தறிக்குப் போகலாம் என்று அவன் எண்ணம்.

முகத்தைத் துடைத்துக்கொண்டு கிழக்குத் திசையைப் பார்த்து, உதயமாகாத சூரியனைக் கும்பிட்டான். தறி மேடைக்குப் பக்கத்திலிருந்த மாடத்தில் கண்ணாடி இருந்தது. முகம் பார்த்து, தலை மயிரை வாரினான். சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் புறப்படத் தயாரானான்.

அம்மா சன்னமாய்க் குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள், பெண் பிள்ளைகள் குறட்டை விடலாமா? சொன்னால் கேட்பாளா? அவன் சொல்லி அவள் கேட்கிற பழக்கம் கிடையாது. அவன் சொன்னதற்காக அவள் பலமாய்க் குறட்டை விடுவாள். ‘நான் ஹோட்டல்லேயிருந்து வர்ற வரை குரட்டை விட்டார்.

”ரேய் ராஜம் கோட் ஜாரிஸ்தே?” (டே ராஜம், எங்கே போறே?) என்று அம்மாவின் குரல் கடப்பாரையாய் அவன் தலையில் இடித்தது.

ஹூம். நடக்கக்கூடாது என்று எதிர்ப்பார்த்தது நடந்து விட்டது. அவன் பேசவில்லை.

”கிளப்புக்குத்தானேடா? கிளாஸ்லே சாம்பார் வாங்கிட்டு வா.”

“கிளப்லே சாம்பார் தர மாட்டான்.”

“ஏன் தர மாட்டான்? ஒரு தோசை வாங்கிக்கோ.”

“பார்சல் வாங்கினாலும், பஞ்சாமி கிளப்லே தனியா சாம்பார் தர மாட்டான்.”

“எல்லாம் தருவான், கேளு.”

“தர மாட்டான். போர்டு போட்டிருக்கான்.”

“தோசை வாங்கினா சாம்பார் ஏன் தர மாட்டான்? எனக்கு ஒரு தோசை வாங்கிட்டு வர உனக்கு இடமில்லை. இருபது பைசா செலவாயிடும்னு பயப்படுறே. உன் வாய்க்கு மாத்திரம் ருசியா, சாம்பார் கொட்டிக்கிட்டு ஸ்பெசல் தோசை தின்னுட்டு வருவே.”

”காலை நேரத்துலே நா ஒரு காபி சாப்பிட்டு தறிக்குப் போகலாம்னு பார்த்தேன். நீ இப்படி வம்பு வளர்த்தா...”

“பெத்தவ தோசையும் சாம்பாரும் கேட்டா வம்பாவா தெரியுது?”

”வீடு பூரா தூங்குது. ஏன் இப்படி உயிர் போகிறாப் போல கத்தறே? பஞ்சாமி கிளப்பிலே, தனியா டம்ளர்லே சாம்பார் தர மாட்டான்னு சொன்னா....”

“அங்கே போக வேணாம். வேறெ கிளப்புக்குப் போ. சாம்பாரோடதான் நீ வீட்டிலே நுழையணும்.”

ராஜத்தின் நாவில் பஞ்சாமி ஹோட்டல் காபி மணத்தது. கும்பகோணத்தில் பசும் பால் காபிக்காப் பிரபலமான ஹோட்டல் அது.

அம்மா சாம்பாரைத் துறக்கத் தயாராக இல்லை.

“சரி, நான் கிளப்புக்குப் போகல்லே; காபியும் சாப்பிடல்லே. குள்ளி, ஓவ் (அடீ) குள்ளி, எகுந்திரு, தறிக்குப் போகலாம்.”

“நீ காபி சாப்பிடாவிட்டா சும்மா இரு. எனக்குத் தோசையும் சாம்பாரும் கொண்டா.”

“என்கிட்டே காசு இல்லே; காசு கொடு, வாங்கிட்டு வர்றேன்.”

இவ்வளவு நேரம் பாயில் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தவள் துணுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

”என்ன சொன்னே? சொல்லுடா, என்ன சொன்னே?”

“அதிசயமா என்ன சொல்லி விட்டேன்? காசு குடுத்தா தோசையும் சாம்பாரும் வாங்கிட்டு வர்றேன்னேன்.”

“பெத்தவளுக்கு ஒரு தோசை வாங்கிக் கொடுக்க வக்கில்லாமப் போச்சா? இன்னம் தாலி கட்டின பாடில்லே. பெண்டாட்டியா வரப்போறவளுக்கு வாங்கித் தர நோட்டு நோட்டா கிடைக்குது; இல்லியாடா?”

“இந்தாம்மா, சும்மா வாயை அவிழ்த்து விடாதே. நாலு குடித்தனத்துக்காரங்க தூங்கறாங்க. உன் குரலைக் கேட்டு முழிச்சுக்கப் போறாங்க. நான் யாருக்கும் ஒண்ணும் வாங்கித் தரல்லே.”

“பூனை கண்ணை மூடிக்கிட்டா ஊரே அஸ்தமிச்சதா நினைச்சுக்குமாம். நீ எதிர் வீட்டுப் பொண்ணுக்காக என்னென்ன செலவு செய்றேன்னு எனக்குத் தெரியாதா?”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:01 am“வாயை மூடு. ஊர்ப் பொண்ணுங்களைப் பத்தி இப்பிடி பேசினா...”

“இல்லாதது என்னடா பேசிட்டேன்? தெருவிலே போறப்போ நீ அதைப் பார்த்துச் சிரிக்கிறதும், அது உன்னைப் பார்த்து இளிக்கிறதும், ஊரே சிரிப்பா சிரிக்குது. நான் ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ; நீ அதைக் கட்டிக்கணும்னு ஆசைப்படறே, அது நடக்காது. நான் உயிரோட இருக்கிறவரை அவ இந்த வீட்டு மருமகளா வந்துட முடியாது.”

ராஜம், அம்மா முகத்தை வெறித்துப் பார்த்தான். அவளிடமிருந்து தப்புவதற்காக அப்பா தறி மேடையைச் சுற்றி ஓடியது ஞாபகம் வந்தது.

“என்ன செஞ்சிடுவே? கடிச்சிடுவியோ?” என்று கேட்டான் ஆத்திரமாக.

“அடே பேதியிலே போறவனே, என்னை நாய் என்றா சொல்றே?” என்று எகிறிக் குதித்தாள் அம்மா. “உன்னைச் சொல்லிக் குத்தமில்லே, அந்த எதிர்வீட்டுக் கழுதை உனக்கு சொக்குப்பொடி போட்டிருக்கா. அது உன்னை இப்பிடி ஆட்டி வைக்குது. டேய் பெத்தவளை நாய்ன்னு சொல்ற நாக்கிலே புழு விழும்டா, புழு விழும்.”

அடுத்த வீட்டுச் சேவல் ஐயய்யோ என்று கத்தியது. ராஜத்துக்கு ஒரே எரிச்சலாக வந்தது. சாம்பார் சண்டையைச் சாக்காக வைத்துக் கொண்டு அம்மா பங்கஜத்தையும் அல்லவா திட்டுகிறாள்? திட்டி ஊரையே கூட்டி விடுவாள் போல் இருக்கிறது. பங்கஜத்தின் பெற்றோர் அதைக் கேட்டால் என்ன நினைப்பார்கள்? பங்கஜம் கேட்டால் என்ன பாடுபடுவாள்?

“காளி, வாயை மூடு. பொழுது விடியறத்துக்குள்ளே இப்படி கூச்சல் போட்டா நல்லா இருக்கா? உனக்கு என்ன வேணும்? தோசை சாம்பார்தானே? டம்ளர் எடு.”

அம்மா அசையவில்லை.

”சாம்பாரும் தோசையும் அந்தக் கழுதை தலையிலே கொட்டு. என்னை நாய்ன்னு சொல்றியா? உனக்குப் பாடை கட்ட! வாயெ மூடிக்கிட்டுப் ’போனாப் போவுது, போனாப் போவுது’ன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன். என் தலைய்லே மிளகா அரைக்கிறியா? பரம்பரை புத்தி போகுமாடா? அப்பன் குடிகாரன், குடிகாரன் பிள்ளை எப்படி இருப்பான்?”

“சரி, போதும், நிறுத்து. நாய்ன்னு நான் சொல்லல்லே. டம்ளரை எடு. சாம்பார் வாங்கிட்டு வர்றேன்.”

அவன் சொன்னதை அவள் கேட்டதாகத் தெரியவில்லை. வாயிலிருந்த ஆபாசங்களை எல்லாம் துப்பிவிட்டுத்தான் நிறுத்துவாள் போலிருந்தது.

ராஜத்துக்கும் அளவு கடந்த கோபம். இவள் லண்டி; நிறுத்தமாட்டாள்; வாயில் ‘பளார், பளார்’ என்று நாலு அறை விட்டால்தான் இவள் வாயை மூடலாம். அறை விட்டிருப்பான்; அவளுடைய கூப்பாட்டுக்கு அஞ்சித்தான் அடக்கிக்கொண்டான்.

“என்னடா முறைக்கிறே? இதெல்லாம் என்கிட்டே வச்சிகாதே. பொம்பிளைதானே, அடிச்சா உதைச்சா யார் கேக்கப் போறாங்கன்னு நினைக்கிறாயா? பெத்தவலைத் தொட்டு அடி பார்க்கலாம், உன்னை என்ன செய்யறேன் பாரு. உடம்பிலே தெம்பு இல்லைன்னா நினைக்கிறே? நான் காளி குப்பம்மாவுக்குச் சொந்தக்காரிடா. என்னைத் தொட்டுடு. உன் வயித்தெ கிழிச்சு குடலை மாலையா போட்டுக்கிட்டு எதிர் வீட்டுக்காரி முன்னாலே போய் நிப்பேன்!”

காளி குப்பம்மாள். கணவணின் வயிற்றை அரிவாள் மணையினால் கிழித்துக் குடலைக் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு, தெருத் தெருவாய் கையில் அரிவாள்மணையுடன் சுற்றி விட்டுப் போலீசில் சரணடைந்ததாய்க் கும்பகோணம் சௌராஷ்டிரர்கள் கதையாகச் சொல்வதை ராஜமும் கேள்விப்பட்டிருந்தான். அம்மா, காளி குப்பம்மாவுக்கு சொந்தம் என்று இன்றுதான் உறவு கொண்டாடுகிறாள். அவ்வளவு தைரியம் இவளுக்கு வராது. ஏமாளிகளான பிள்ளைகளை மிரட்டுவாள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:01 amஅவளுக்கு முன்னால் நின்று பேச்சுக் கொடுக்க முடியாது என்று ராஜத்துக்குப் புரிந்தது. அவனே ஓர் எவர்சில்வர் டம்ளரை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டான்.

அவன் பேசாமல் கிளம்பிய பிறகு அம்மா விடவில்லை; “எனக்காக நீ ஒண்ணும் வாங்கிட்டு வராதே. வாங்கிட்டு வந்தா சாக்கடையிலே கொட்டுவேன்.”

அவன் பதில் பேசாமல் புறப்பட்டான். ஒரு விநாடி தயங்கி நின்றான். அம்மாவை பிடித்து இழுத்து, தலை முடியை உலுக்கு கன்னங்களில் மாறி மாறி அறைந்து, முகத்திலும் முதுகிலும் குத்தி, ‘விட்டுட்றா, விட்டுட்றா, இனிமே நான் உன் வழிக்கு வரல்லே; நீ பங்கஜத்தைக் கட்டிண்டு சுகமாயிரு. என்னை விட்டுடு’ என்று கதறக் கதற உதைத்துச் சக்கையாக மூலையில் எறிந்து விடலாமா என்ற ஒரு கேள்வி காட்சியாகக் கண்களுக்கு முன்னால் வந்தபோது அவன் மனசுக்கு சௌகரியமாயிருந்தது. ‘அப்பா அடிப்பாரே, அந்த மாதிரி, அப்பாவைக் கடிக்கப் பாய்வாளே, அப்படிக் கடிக்க வருவாளோ? வரட்டுமே; என்னிடம் பலிக்காது; பல்லைத் தட்டிக் கையில் தருவேன்’ என்று மனத்துக்குள் கறுவிக் கொண்டான்.

ஒரு விநாடிக்கு மேல் இந்த மனசுகம் நீடிக்கவில்லை, அம்மா தாடகை; பல்லைவிட அவள் சொல்லுக்குக் கூர் அதிகம். அவன் கை ஓங்கும்போதே, அவள், ‘கொலை கொலை’ என்று சத்தம்போட ஆரம்பிப்பாள். ஐந்து குடிகள் இருக்கிற வீடு, இருபது பேராவது இருப்பார்கள்; எல்லாரும் எழுந்து ஓடிவந்து விடுவார்கள். அவனைத்தான் கண்டிப்பார்கள்.

அம்மாவை ஜெயிக்க முடியாது.

அவன் பேசாமல் நடந்தான். பௌர்ணமி போய் ஆறேழு நாள் இருக்கும். அரைச் சந்திரனின் வெளிச்சம் தாழ்வாரத்தில் வெள்ளையடித்தாற்போல் கிடந்தது. மாசி மாதம்; பின்பனிக்காலம் என்று பெயர்; இரவு முழுவதும் நன்றாய்க் குளிருகிறது. புறாக் கூடு போல் அறை அறையாகப் பிரிந்துள்ள அந்த வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள்; விழித்துக் கொண்டிருந்தால் பேச்சு சத்தம் கேட்குமே? தறி சத்தம் கேட்குமே? மூன்றாவது குடியான சீதம்மா மட்டும் வெளியே படுத்திருப்பாள். அவள் மீது நிலா வெளிச்சம் விழுந்தது. போர்வை காலடியில் துவண்டு கிடக்க, அவள் உடலை அஷ்டகோணலாக ஒடுக்கிக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்தாலே அவளும் தூங்குகிறாள் என்று தெரிகிறது.

வீட்டில் யாரும் விழித்துக் கொள்ளவில்லை, அம்மாவின் காட்டுக் கத்தலைக் கேட்கவில்லை என்ற திருப்தியுடன் ராஜம் முன்கட்டை அடைந்தபோது, “என்ன ராஜம், ஹோட்டலுக்குப் புறப்பட்டியா?” என்று ஒரு குரல் தமிழில் கேட்டது.

சாரங்கன்; விழித்திருப்பான் போல் இருக்கிறது. அம்மாவும் ராஜமும் சண்டைப் போட்டதைக் கேட்டிருப்பானோ? கேட்டால் கேட்கட்டுமே! அவன் மட்டும் ஒசத்தியா? தினம் பெண்டாட்டியோடு சண்டை; மைத்துனன் மத்தியஸ்தம். சௌராஷ்டிரனாய்ப் பிறந்தவன் சௌராஷ்டிர மொழியில் பேசினால் என்ன? தமிழில்தான் பேசுவான்.

“ஹாய், ஹாய், ஏஃகெடிக் வெளோ கோட் ஜான்?” (ஆமா, ஆமா, இந்த நேரத்திலே வேறெ எங்கே போவாங்க?) என்று சௌராஷ்டிர பாஷையிலேயே பதில் சொன்னான் ராஜம்.

“கள்ளுக்கடைக்குப் போறியோன்னு பார்த்தேன்” என்று தமிழில் சிரித்தான் சாரங்கன்.

“அங்கு ஃபோதா தெளிஞ் செனிகா?” (இன்னும் போதை தெளியல்லியா?)

“அதெப்படி தெளியும்? பக்கத்திலேயே பானையில் வச்சிருக்கேனே? அது போகட்டும் எனக்கு ஒரு டம்ள்ர் சாம்பார் வாங்கிட்டு வா, ரெண்டு இட்லியும் பார்சல் கட்டிக்கோ” என்ற சாரங்கன் ஓர் அலுமினிய டம்ளரை நீட்டினான்.

மறுக்க வேண்டாம் என்று ராஜத்தின் எண்ணம். ஆனால் சாரங்கன் விஷமக்காரன். ஹோட்டலிலிருந்து திரும்பும் போது தாழிட்டு விடுவான். தொண்டைக் கிழியக் கத்தினாலும் கதவைத் திறக்க மாட்டான். ராஜத்தின் குரல் கேட்டு அம்மா கதவைத் திறப்பதற்குள் - அம்மா திறப்பாளா? கண் விழித்ததுமே காளி வேஷம் கட்டிக் கொண்டு விடுவாளே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:01 am“ஹோட்டலுக்கு வாயேன்” என்றவாறே ராஜம் டம்ளரை வாங்கிக்கொண்டான்.

”வெறும் கதவைப் போட்டுவிட்டு நாம் போயிட்டா, திருட்டுப் பய எவனாவது உள்ளே நுழைஞ்சி, பாவு அறுத்துகிட்டுப் போனா என்ன செய்றது? நான் காவலுக்கு இருக்கேன்; நீ இட்லி கொண்டு வந்து கொடு” என்று சாரங்கன் சமத்காரமாய்ச் சிரித்தான்.

மனசுக்குள் திட்டுவதைத் தவிர ராஜத்தினால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. இரண்டு டம்ளர்களையும் ஏந்தியவனாய்த் தெருவில் இறங்கினான்.

ஆகாயத்தில் நட்சத்திரங்களும் அரைச் சந்திரனும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. ராஜத்தைக் கண்டதும் தெரு நாய் ஒன்று எழுந்தது. அவனுக்குப் பின்னால் ஓடி வந்தது. அவன் அதற்கு ஒரு வாய் சோறு போட்டதில்லை. என்ன காரணமோ அதிகாலையில் அவன் ஹோட்டலுக்குப் போகும் போதும் திரும்பும் போதும் காவலாய்க் கூடவே ஓடி வரும். தெருவில் எலிகளும் பெருச்சாளிகளும் காலடிச் சத்தம் கேட்டுச் சிதறி ஓடின. பன்றிகளும் கழுதைகளும் தீனி தேடிக் கொண்டிருந்தன. சில பெண்கள் தெருவில் வீட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். நாய் அவனுக்குப் பின்னால் ஓடியது.

ராத்திரி அவனுக்கு ஒரு சொப்பனம். பழைய சொப்பனம். அவனுக்கு வினாத் தெரிந்த நாள் முதல் ஆயிரம் தடவைக்கு மேல் இந்தச் சொப்பனம் வந்திருக்கும். அவன் ஏதோ ஒரு தெருவோடு போகிறான்; ‘வவ் வவ்’ என்று குரைத்தவாறு ஒரு வெறி நாய் அவனைத் துரத்துகிறது; அவன் மூச்சுத் திணற ஓடுகிறான். அது அவன் மேல் பாய்ந்து வலக்கால் கெண்டைச் சதையைக் கடித்துப் பிடித்துக்கொள்கிறது. ‘ஐயோ’ என்று முனகிக் கொண்டோ, கத்திக்கொண்டோ அவன் விழித்துக் கொள்வான். கனவுதானென்று உறுதி செய்துக்கொள்ளச் சற்று நேரமாகும்.

ராத்திரியும் அதே கனவு; அதே வெறி நாய் அவனுடைய கால் சதையைக் கடித்தது. வெறி நாய் கடித்தால் மனிதனுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்கிறார்கள். கனவில் நாய் கடித்தாலும் பைத்தியம் பிடிக்குமா?

அவன் தெருமுனை திரும்பி விட்டான். நாலு திசைகளிலும் கண்ணோட்டம் விட்டான். மனித நடமாட்டமே இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டான். தெரு நாய்தான் கூட இருந்தது. அவன் நின்றதும் அதுவும் நின்ரது. கனவில் வந்த வெறிநாய் இந்த நாய் போல் சாது அல்ல; எவ்வளவு பயங்கரமாய் அது குரைத்தது! அவன் அப்படிக் குரைத்தால் அம்மா பயப்படுவாளா, மாட்டாளா? அவன் தெருநாயைப் பார்த்து கீச்சுக் குரலில் ‘வவ் வவ்’ என்று குரைத்தான். மனிதன் நாய் மாதிரி குரைப்பதைக் கேட்டிராத தெரு நாய் பயந்துவிட்டது போலும்; அது திரும்பிப் பத்து பன்னிரண்டு அடி தூரம் ஓடி, மறுபடியும் நின்று அவனை ஏறிட்டுப் பார்த்தது. நான் குரைத்தால் அம்மாவை ஓட ஓட விரட்டலாம் என்று சிரித்துக்கொண்ட ராஜம் ஹோட்டலை நோக்கி நடந்தான்.

நாய் அவனைப் பின்பற்றியது.

விநாயகர் கோயிலுக்கு அருகில்தான் ஹோட்டல். அந்த அதிகாலை நேரத்திலும் அங்கே ஒரே கூட்டம். பழையது சாப்பிட்டுவிட்டு நெசவாளர்கள் தறிக்குப் போகிற காலம் மலை ஏறி விட்டது. இப்போது காபியோ டீயோ இருக்கிற வட்டாரம் அல்லவா? ஹோட்டலில் எந்த சாமானும் ‘நிறையக்’ கிடைக்கும். கூஜா நிறையக் காபி கேட்டால் எப்படி தரமாகக் இருக்கும்? இரண்டு இட்லி பார்சல் கட்டிக் கொண்டு ஒரு டம்ளர் சாம்பார் கேட்டால் இட்லி எப்படி சுகப்படும்? ஹோட்டல்காரரை எப்படிக் குறை சொல்ல முடியும்?

“ஏது ராஜம், இந்தப் பக்கம் புதுசா? நீ பஞ்சாமி ஹோட்டல் குத்தகை இல்லை?” என்று அக்கறையாக விசாரித்தான் சப்ளையர் சீமா.

”அட சீமாவா? நீ எப்போ இங்கே வந்தே? பஞ்சாமி ஹோட்டலை விட்டு எத்தனை நாளாச்சு?”

“ஒரு வாரம் ஆச்சு...”

சீமா, புரோகிதம் ராமசாமி அய்யங்காரின் மகன். அவனுக்குப் புரோகிதம் பிடிக்கவில்லை; படிப்பும் வரவில்லை. சினிமா ஸ்டாராக வேண்டும் என்ற கனவுடன் ஹோட்டல் சப்ளையராக வாழ்க்கை தொடங்கினான். இரண்டு மாதம் சேர்ந்தாற்போல் அவனை ஒரு ஹோட்டலில் காண முடியாது; ஹோட்டலை மட்டும் அல்ல, ஊரும் மாற்றிக் கொண்டிருப்பான், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, மதராஸ் என்று. அவனிடம் ஒரு நல்ல குணம்; ஹோட்டல் வாடிக்கையாளர்கலை மிகவும் நயமாய் விசாரித்து சப்ளை செய்வான். அவர்கள் ஒன்று கேட்டால் இரண்டாய்த் தருவான். பில்லையும் குறைத்துப் போடுவான். அப்புறம் அவர்களை ஒரு வாரம் பத்து நாளைக்கொரு முறை தனியாகச் சந்தித்து சினிமாவுக்குச் சில்லறை வாங்கிக் கொள்வான். இதனால் இரு தரப்புக்கும் ஆதாயம்; இதனால் எந்த ஹோட்டல் முதலாளியும் கெட்டுப் போனதாய்த் தெரியவில்லை.

“சீமா, அங்கே என்ன அரட்டை அடிக்கிறே?” என்று பெட்டியடியில் இருந்தவாறு குரல் கொடுத்தார் ஹோட்டல்காரர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:01 am“சூடா ஒரு காபி...”

“இட்டிலி சூடா இருக்கு. கொத்சு ஏ ஒன். கொண்டு வர்றேன்” என்று சீமா விரைந்தான்.

இரண்டு இட்லி, ஒரு நெய் ரவா, டிக்ரி காபியோடு எழுந்தான் ராஜம். அம்மாவுக்கும் சாரங்கனுக்கும் பார்சல் கட்டிக் கொண்டான். சீமாவின் தயவால் இரண்டு டம்ளர்கள் வழிய கொத்சும், பில்லில் இருபத்தைந்து பைசாவும் ஆதாயம்.

“இதுக்குத்தாண்டா ராஜா உன் கையிலே டம்ளர் கொடுத்தேன்!” என்று சாரங்கன் பாராட்டினான்.

அம்மாவைச் சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று ராஜத்துக்கு ஆசை.

“அம்மா கொத்சு கொண்டு வந்திருக்கேன். ரொம்ப ஜோராயிருக்கு. நம்ம சீமாதான் டம்ளர் வழியத் தந்தான்....” என்றவாறு அவளிடம் நீட்டினான். அவள் வாங்கிக் கொள்ளவில்லை.

“கொண்டு வந்துட்டியா? எதிர் வீட்டுக்காரிக்குக் கொடு, போ!”

ராஜம் அவள் முகத்தைப் பார்த்தான். அந்த முகம் போயிருந்த போக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை; இந்தப் பீடையை யாரால் திருப்தி செய்ய முடியும்? அவனைத் திட்டட்டும்; இரண்டு அடி வேண்டுமானாலும் அடிக்கட்டும். எதிர் வீட்டுக்காரி பங்கஜத்தை ஏசுகிறாளே, என்ன நியாயம்? இவளிடம் யார் நியாயம் பேச முடியும்?

இவள் தொலைய வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி. இவளாகத் தொலைய மாட்டாள். நான் இவளைத் தொலைத்து தலை முழுக வேண்டும்.

“சாம்பார் கேட்டியேன்னு கொண்டு வந்தேன். வேண்டாம்ன்னா உன் இஷ்டம்... குள்ளி, பல் தேய்ச்சியா? தறிக்குப் போகலாமா?”

குள்ளிக்கு ஒன்பது வயசு இருக்கும்; கடைக்குட்டி. அண்ணன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள். ராஜம் மாடத்திலிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஐந்தரை.

அம்மா சளைக்கவில்லை. “நீ வாங்கிட்டு வந்ததை நான் ஏண்டா தொடறேன்? உன் பெண்டாட்டிகிட்டே கொண்டு போய்க் கொடு...”

“ஊர்ப் பொண்ணுங்களைப் பத்தி இப்படிப் பேசினா.. நல்லா இருக்காது!”

“நல்லா இல்லாவிட்டால் என்ன ஆயிடும்? ரெண்டு இட்டிலி வாங்கிட்டு வாடான்னா எத்தனை பேச்சு பேசுறே? நாய் என்கிறே; குரங்கு என்கிறே. பெத்தவளுக்கு வாங்கித் தரணும்னா காசு கிடைக்கலே. வரப் போறவளுக்கு ஜரிகைச் சேலை, தாம்புக் கயிறு சங்கிலி, பவுன் தாலி எல்லாம் செஞ்சு பெட்டியிலே பூட்டி வச்சியிருக்கியே. எனக்குத் தெரியாதுன்னா நினைச்சே? அதுக்கெல்லாம் எங்கேருந்து பணம் வருது?”

ராஜத்துக்கு வயிற்றில் மாட்டுக் கொம்பால் குத்துவது போலிருந்தது. “ஏண்டீ, திருட்டுத்தனமா என் பெட்டியைத் திறந்தா பார்த்தே? என்னைக் கேட்காமே என் பெட்டியை எப்படித் திறந்தே?” என்று கத்தினான்.

“என் வீட்லே இருக்கிற பெட்டியை நான் திறக்கிறதுக்கு உன்னை எதுக்கடா கேட்கணும்? நாக்கை அடக்கிப் பேசு. யாரைத் திருடி என்கிறே? இன்னொரு தடவை சொல்லு. அந்த நாக்கை இழுத்து வெட்டிடுவேன்.”

தன்னுடைய பெரிய ரகசியம் வெளிப்பட்டுவிட்டதால் ராஜத்துக்கு மருள் வந்தாற் போலிருந்தது. அவன் பங்கஜத்துக்காக - வரப்போகும் மனைவிக்காக - ஜரிகை புட்டா சேலை - அவன் கைப்பட நெய்தது; முதலாளியிடம் அடக்க விலைக்கு வாங்கி வைத்திருந்தான். பெரிய தாலியும் சிறிய தாலியும் தட்டி வைத்தான். ஒரு சங்கிலியும் தயார் செய்தான். யாருக்கும் தெரியாமல் பெட்டியில் வைத்துப் பூட்டி வைத்திருந்தான். கலியாணம் என்று ஆரம்பித்த பிறகு எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தேட முடியுமா? சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்தான். அவன் இல்லாத நேரத்தில் அம்மா கள்ளச் சாவியில் பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறாள். என்ன துணிச்சல்!

“ஏண்டி, என் பெட்டியைத் திறந்தே?” என்று அவன் அம்மாவின் இரண்டு கைகளையும் பிடித்தான். ஆத்திரத்தோடு ஓர் இருட்டு வயிற்றிலிருந்து பாய்ந்தாற்போல ஒரு சோர்வு.

“சீ, கையை விடுடா நாயே!” என்று கைகளை உதறி விடுவித்துக் கொண்டாள் அவள். ”தாலி கட்டின பாடில்லே; அதுக்குள்ளே இந்த ஆட்டம் போட்றியா? நான் சொல்றதை முடி போட்டு வச்சுக்கோ. அந்த மேனாமினுக்கியைக் கட்டிக்கணும்னு ஆசைப்படறே, அது நடக்காது. அவ இந்த வீட்டிலே கால் வச்சா கொலை விழும்; ஆமா, கொலைதான் விழும்!”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:01 am


ராஜத்தின் வாயை அம்மாவின் சொற்கள் மூடி விட்டன போலும். அவன் திணறியவன் போல் பேசினான்; “நான் யாரையும் கட்டிக்கலே. குள்ளி, என்ன வேடிக்கை பார்க்கிறே? தறி மேடை ஏறு.”
அவன் அவளுக்குப் பின்னாலேயே மேடை ஏறினான். நாடாவைக் கண்களில் ஒத்தி, சாமி கும்பிட்டபின் வேலையைத் தொடங்கினான். தங்கை கரை கோத்துக் கொடுத்து துணை செய்ய அவன் நெய்யத் தொடங்கினான். நாடா இப்படியும் அப்படியுமாக ஓடி வெறும் இழைகளாக இருந்த பட்டைச் சேலையாக்க ஆரம்பித்தது. ராஜம் கால் மாற்றிக் கட்டையை மிதிக்கும்போது ஓயிங் என்றொரு சத்தம்; அதைத் தொடர்ந்து அவன் பலகை அடிக்கும் சத்தம். குள்ளி பேசவில்லை. அம்மா ஓய்ந்துவிட்டாளா? அவள் ஓய்வாளா? ஒன்று அவன் சாக வேண்டும். அல்லதுஅவள் சாக வேண்டும். அதுவரை ஓய மாட்டாள்.

பெற்றவள் ஒருத்தி இப்படியும் இருப்பாளா? அம்மாவைத் திட்டுவதும் அடிப்பதும் பாவமாம். அவள் மட்டும் ஊர் உலகத்தில் இல்லாத விதத்தில் நடக்கலாமா? பன்றிக் குட்டி போல் போட்டதைத் தவிர இவள் வேறு என்ன செய்து விட்டாள்?

அப்பாவுக்குப் பேராசை. என்றைக்காவது ஒரு நாள் பணக்காரனாகலாம் என்று கனவு கண்டார். உழைத்துச் சிறுகச் சிறுக முன்னேற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டப் பரீட்சை செய்கிறார்கள், அல்லவா? அப்பா குழந்தைகளை அதிர்ஷ்டப்பரீட்சையாகப் பெற்றார். ‘இந்தக் குழந்தையின் ஜாதகம் சுகப்படவில்லை. அடுத்த குழந்தை நல்ல நேரத்தில் பிறக்கும் பார்!’ என்று அடுத்த குழந்தைக்குத் தயார் ஆவார். எதாவது ஒரு குழந்தைக்கு யோக ஜாதகமாய் அமைந்து, அதன் மூலம்தான் பணக்காரன் ஆகிவிடலாம் என்று அவர் எண்ணம்.

அம்மா அப்படி நினைக்கவில்லை. தான் பெற்றுப் போட்ட புண்ணியத்துக்குப் பதிலாக ஒவ்வொரு குழந்தையும் பாடுபட்டுத் தனக்குச் சோறு போட வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெண் குழந்தைகளுக்கும் அந்த கதிதான்.

ஐந்தாவது வயதில் அவன் கையில் நாடா தந்தார்கள். இன்றுவரை - அவனுக்கு இப்போது இருபத்தைந்து வயது - நாடா அவனை விடவில்லை. ஒவ்வொரு தம்பி தங்கையின் கதி இதுதான். மூன்று தங்கைகள் கல்யாணம் செய்து கொண்டு அம்மாவிடமிருந்து தப்பி விட்டார்கள். கடைசி இரு தங்கைகளும் - குள்ளிக்கு ஒன்பது வயது, ராஜாமணிக்குப் பதின்மூன்று வயசு. - நெசவு வேலை செய்கிறார்கள். நாலு தம்பிகளும் தனியாக இருக்கிறார்கள். அம்மாவிடம் பணம் கொடுத்துவிட்டு இரண்டு வேளை சாப்பிட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு அம்மாவால் அதிகத் தொல்லை இல்லை.

சகதியில் சிக்கிக் கொண்டவன் அவன் தான். அவனும் தனியே போயிருப்பான். தோதாகத் தறி மேடை உள்ள இடம் வாடகைக்குக் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் தறி மேடைக்கு மட்டும் இரண்டு ரூபாய் வாடகை; இப்போது ஏழு ரூபாய் கேட்கிறார்கள்; அதற்கும் மேடை கிடைப்பதில்லை. மூன்று தங்கைகளில் கல்யாணத்துக்குப் பட்ட கடனை அடைக்க வேண்டும்; இரண்டு தங்கைகள் திருமணத்துக்கும் ஜாக்கிரதை செய்து கொள்ள வேண்டும். தம்பிகளுக்கு அந்தப் பொறுப்புகளோ கவலையோ இல்லை. அவன் அப்படி இருக்க முடியுமா? அம்மாவோடு இருந்தால் சிக்கனமாக இருக்கலாம் என்றுதான் அவளோடு தங்கினான்.

இப்படிப் பொறுப்புக் கட்டிக் கொண்டு ஆசைப்பட்டதனால்தான் அம்மாவிடம் வசமாய்ச் சிக்கிக் கொண்டான். அவன் என்ன செய்தாலும், அம்மா எதிர்க்கட்சி. பங்கஜத்துக்கு என்ன குறைச்சல்? பெற்றவர்கள் இருக்கிறார்கள்! நாலு அண்ணன் தம்பிகளுக்கு நடுவில் ஒரே பெண்; தறி வேலை தெரியும்; வீட்டு வேலைகளும் தெரியும். சினிமா ஸ்டார் போல இல்லாவிட்டாலும் கச்சிதமாக இருப்பாள். அவளைப் பெற்றவர்கள் அவனுக்குப் பெண் தர முன்வந்தார்கள். அவனுடைய முதலாளியிடம் பேச்சு கொடுத்தார்கள். முதலாளி ஜாதகப் பொருத்தம் பார்த்தார். ‘கொடுக்கல் வாங்கல்’ எல்லாம் அவர்தான் பேசி முடித்தார்.

இவ்வளவு ஆன பிறகு ‘எனக்கு இந்தப் பொண்ணு பிடிக்கல்லே, அவளைக் கட்டிக்கக் கூடாது’ என்கிறாளே, இது அக்கிரமம் இல்லையா? ஆரம்பத்தில் அவளிடம் கேட்கவில்லை என்ற குறை; அவளிடம் பேசியிருந்தால் தனியாக ஐம்பது, நூறு கேட்டு வாங்க்யிருப்பாள். அது கிடைக்கவில்லை என்று ஆத்திரம். அதற்காகப் பங்கஜத்தைப் பற்றி கேவலமாய்ப் பேசுகிறாளே, இவள் உருப்படுவாளா? பங்கஜம் எதிர் வீடுதான்; ஆனால் அவன் அவளைத் தலை தூக்கியாவது பார்த்ததுண்டா? அல்லது அவள் இவன் இருக்கும் திசைப்பக்கமாவது திரும்பி இருப்பாளா? அந்த உத்தமியைக் கரிக்கிறாளே இந்தச் சண்டாளி, இவள் வாயில் புழு நெளியுமா, நெளியாதா? அப்பாவைக் கை தூக்கி அடித்த இந்த ராட்சசிக்குப் பங்கஜம் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:02 amஎண்ணங்களோடு போட்டியிட்டுக்கொண்டு நாடா பறந்தது. இந்தக் குழப்பத்திலும் ஓர் இழைகூட அறவில்லை; அண்ணனுடைய மன வேகத்தைப் புரிந்து கொண்டு குள்ளியும் நாடா கோத்துக் கொடுத்தாள்.

முதலாளி அவன் பக்கம்; அவருக்கு அவன் மேல் ஓர் அபிமானம். ஒரு நம்பிக்கை. எதற்கெடுத்தாலும் அவனைக் கூப்பிடுவார். அவருடைய உதவி இருந்ததால்தான் அவன் மூன்று தங்கைகளின் திருமணக் கடனைத் தீர்க்க முடிந்தது. தன் கல்யாணத்துக்காகவும் சேலை, செயின், தாலி எல்லாம் தயார் செய்ய முடிந்தது.

அம்மாவுக்கு தெரியக்கூடாது என்றுதான் அவன் அவற்றைப் பெட்டியில் பூட்டி வைத்தான். அந்தப் பெட்டியைக் கள்ளத்தனமாய்த் திறந்து பார்த்திருக்கிறாளே, என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்?

அவனுக்குப் படபடவென்று கோபம் மூண்டது. அதே நேரத்தில் அம்மாவின் குரல், “குள்ளி, ஓவ் குள்ளி, ஏட் ஆவ்!” (குள்ளி, அடி குள்ளி. இங்கே வா!) என்று கூப்பிட்டது.

சிறுமியான குள்ளிக்கு இருதலைக் கொள்ளியாக இருந்தது. அவளுக்கு அம்மாவும் வேண்டும். அண்ணாவும் வேண்டும்.

“அண்ணா, அம்மா கூப்பிட்றா” என்று நாடாவை நிறுத்தினாள்.

“வேலை நேரத்தில் ஏன் கூப்படறா?”

“காய்கீ” (என்னவோ)

“இரு புட்டா முடிச்சுட்டுப் போகலாம்”

அதற்குள் அம்மாவின் குரல் மறுபடியும் வீறிட்டது. :ஓவ் ஃபொ வர்தே காணும் பொஃடர்னி? அவிஸ் கீந் ஹீ?” (அடி கூப்பிடறது காதிலே விழல்லே? வர்றியா இல்லையா?)

அதற்கு மேல் சோதனை செய்யக் குள்ளி தயாராக இல்லை. நாடாவை அப்படியே போட்டுவிட்டு, எழுந்து தறி மேடையிலிருந்து கீழே குதித்து அம்மாவிடம் ஓடினாள்.

சினம் பீறிட்டுக் கொண்டு வந்தது ராஜத்துக்கு. ஆனால் சினத்தில் தலையில் ஓர் ஓய்ச்சல் இருந்தது. சுருட்டிக் கொண்டு படுத்துத் தூங்கிவிட வேண்டும், எழுந்திருக்கவே கூடாது என்று தோன்றியது. சண்டை போடுவதற்கான தெம்பே இல்லை. உடல் நரம்புகள் மக்கிவிட்டார் போல் இருந்தது. சாம்பார்ச் சண்டை கல்யாணச் சண்டையாக முடிந்தது. எங்கே முடிந்தது? இன்னும் கிளை விட்டுக் கொண்டிருக்கிறதே!

அவன் மௌனமாய்த் தலை குனிந்து இழைகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

சமையலறை பத்தடி தூரத்தில்தான் இருந்தது. அம்மா குள்ளீயை அதட்டுவது தெளிவாய்க் கேட்டது.

“ஏண்டை, நான் கூப்பிட்டது காதிலே விழல்லே? ஏண்டி இத்தனை நேரம்?”

”சத்தத்திலே கேக்கல்லே.”

“நீ இனிமே இந்தத் தறிக்குப் போக வேண்டாம். புதுத் தெரு சென்னப்பன் நூறு ரூபா பணம் தர்றேன்னான். பழையது கொட்டிக்கிட்டு அங்கே போ.”

குள்ளியாலே அந்த அநியாயத்தைப் பொறுக்க முடியவில்லை. “அண்ணன் தறியிலே இன்னும் ஒண்ணே முக்கால் முழம் இருக்கு. முதலாளி அவசரமா சேலை வேணும்னு...”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:02 am”அதெல்லாம் உன்னை யார் கேட்டா? பேசாம பழையது கொட்டிக்கிட்டுத் தொலை!” என்னும் போது குள்ளியின் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜம் தறி மேடையை விட்டுக் கீழே இறங்கினான்.

“ஏண்டி, என்ன சொல்றே?”

“புதுத் தெரு சென்னப்பன் குள்ளிக்கு நூறு ரூபா முன் பணம் தர்றேன்னான். அவளை அங்கே போகச் சொன்னேன்.”

கரை கோத்துக் கொடுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இப்போது நல்ல கிராக்கி. ஐம்பதும் நூறும் முன்பணம் தந்து நெசவாளர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியும்.

“அவளை அங்கே அனுப்பிவிட்டா நான் என்ன செய்யறது?”

”நீ வேறே ஆளைப் பார்த்துக்கோ. குள்ளிதான் வேணும்னா நூறு ரூபா முன் பணம் கொடு.”

ராஜத்துக்கு அவளுடைய தந்திரம் புரிந்தது. களவாணித்தனமாய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாளா? பெட்டியில் தாலி, சேலை செயினோடு நூறு ரூபா பணம் இருப்பதைக் கண்டு விட்டாள். அந்தப் பணத்தைப் பறிக்கத்தான் இந்தக் குறுக்குவழியில் போகிறாள்.

“மூணு பேருக்கும் நான் உழைச்சுப் போடறேன். குள்ளி வெளியிலே வேலை செய்வாளா?”

“நீ உழைச்சி எங்களுக்குப் போட வேணாம். முன்பணம் நூறு ரூபா கொடுத்தாத்தான் குள்ளி உன்னோடு வேலை செய்வாள். ராஜாமணிக்கு வயசாச்சு. அவ கல்யாணத்துக்கு நான் தயார் செய்யணும். அவளுக்கு ஒரு தோடு வாங்கப் போறேன்.”

அவன் கல்யாணத்துக்குத் தயார் செய்து கொள்கிறான் அல்லவா? ஏட்டிக்குப் போட்டியாக ராஜாமணியின் கல்யாணத்துக்குத் தயார் செய்கிறாளாம்! ராஜாமணிக்குப் பதின்மூன்று வயசு; கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? அப்படியே நல்ல இடத்தில் கேட்டாலும் அவனுக்கல்லவா அந்தப் பொறுப்பு!

மூன்று தங்கைகளைக் கட்டிக் கொடுத்துவிட்டுக் கடன் காரனாய்க் கஷ்டப்படுகிறவன் அவன் அல்லவா? இவள் என்ன செய்தாள்? ராஜாமணிக்குத் தோடு வாங்கவா பணம் கேட்கிறாள்? அவனிடமுள்ள பணத்தைக் கறக்க வேண்டும்; அவனுக்கு மணமாகாமல் இடைஞ்சல் செய்ய வேண்டும்; அவன் வேலை செய்ய முடியாதபடி தொல்லை தர வேண்டும். இதுதான் அவள் எண்ணம்.

பெற்றவளுக்கு இவ்வளவு கெட்ட மனசு இருக்குமா? ராட்சசி, ராட்சசி!

அப்பா இருந்தவரை எலிக்குஞ்சு போல இருந்தவள், அப்பா போனவுடனே பெருச்சாளி போல் ஆகிவிட்டாள். பிள்ளைகளும் பெண்களும் சம்பாதித்துப் போடப் போட இவளுக்குச் சதை கூடிக் கொண்டே போகிறது. ஏன் கூடாது? தறிவேலை செய்து கொடுக்கக் கூட இவளுக்கு உடம்பு வளைவதில்லை; கூலி வாங்கிக்கொண்டு அவனிடமே பாதி வேலை வாங்கிவிடுகிறாள். நாள் முழுவதும் கொறிக்கிற கொழுப்புதான் இவளை இப்படியெல்லாம் பேச வைக்கிறது, செய்ய வைக்கிறது. இந்தத் திமிரை ஒடுக்க வேண்டும். அப்பா செத்தபோது ஊருக்காக ஒப்பாரி வைத்தாள். இவள் உடம்பு கரைய ஒப்பாரி வைத்துக் கதறிக் கதறி அழ வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:02 amஅவனுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களில் சினமே இல்லை. “ராஜாமணி கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? நான் செய்ய மாட்டேனா?”

“செய்யறவங்க ரொம்ப பேரைப் பார்த்தாச்சு. கல்யாணத்துக்கு முந்தியே தலை கீழா நடக்கிறே. கல்யாணம் ஆனப்புறம் யார் புத்தி எப்படி இருக்குமோ, யார் கண்டா?”

“பெட்டியிலே இருக்கிற பணத்தைப் பார்த்துட்டே. அதைப் பறிமுதல் செய்யறவரை உன் மனசு ஆறாது, இல்லியா?”

“நான் உன்னை யாசகம் கேட்கல்லே! என் மவ வேலை செஞ்சி கழிக்கப் போறா!”

“நான் தர மாட்டேன்.”

“நான் கட்டாயப்படுத்தல்லியே! குள்ளி புதுத்தெருவுக்குப் போவா..”

“நீயே எடுத்துக்கோ, இந்தா!” என அவன் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த பெட்டிச் சாவியை அவளிடம் எறிந்தான். சட்டையை மாட்டிக் கொண்டான். கண்ணாடியில் முகம் பார்த்துப் பவுடர் போட்டுக் கொண்டான். கிராப்பை ஒழுங்கு செய்து கொண்டான். அவனுடைய வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் செத்து அழுகி வெளிவருவதாகவும், நாறுவதாகவும் அவனுக்குத் தோன்றியது.

“பெட்டியிலே நூறு ரூபா இருக்கு. எடுத்துக்கோ, சேலை கட்டிக்கோ, செயின் போட்டுக்கோ, போ... போ...”

அவளிடம் பேசுவதற்குத் தன்னிடம் சொற்களே இல்லை, எல்லாம் தீர்ந்து விட்டன என்று அவனுக்குப் புரிந்தது. அவன் பதில் பேசாமல் கீழே குனிந்தவாறு நடந்தவன் தயங்கி நின்றான்.

“காய்ஃதா?” (என்ன அண்ணா) - என்றவாறு அவள் ஓடி வந்தாள்.

”ராஜாமணிக்கிட்டே நான் அஞ்சுரூபா கடன் வாங்கினேன். அவ சாப்பிட வார்றப்போ ஒரு ரூபா சேர்த்து அவகிட்ட கொடுத்துடு.”

”ஏழு ரூபா எதுக்கு அண்ணா?”

உனக்கு ஒரு ரூபா, பிரியப்பட்டதை வாங்கித் தின்னு. அம்மாகிட்ட காட்டாதே.”

‘ஒரு ரூபா எதுக்கு அண்ணா?”

“வச்சுக்கோ, வச்சுக்கோ”

சொல்லிக் கொண்டே அவன் நடந்தான். தலையில் கொதியாய்க் கொதித்தது. நெஞ்சில் எரியாய் எரிந்தது. பரபரவென்று வீட்டை விட்டு வெளியே வந்தான். கிழக்கே நடந்தான்.

மாதப்பா சந்தைத் தாண்டி கீழ்க் கடலங்குடித் தெருவை அடைந்தான். உடம்பில் சொல்லி முடியாத ஓய்ச்சல், யாரோ கழுத்தை நெட்டித் தள்ளிக் கொண்டு போவது போல் இருந்தது. எல்லா இரைச்சல்களும் அடங்கி ஒரே ஓர் இரைச்சல் கேட்டது. நாய் குரைக்கும் சத்தம். நாய் குரைத்தபடி அவனைக் கடிக்க வருகிறது. அவன் பயந்து கொண்டு ஓடுகிறான். சீ, கனவில் வந்த நாய் உண்மையில் துரத்துமா? கடிக்க வருமா? இதென்ன பைத்தியக்காரத்தனம்?

அவன் நடந்து கொண்டிருந்தான்.

மகாமகக் குளத்தை நெருங்கியதும் அவன் நின்றான். இந்தக் குளத்தில் விழுந்து செத்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்கிறார்கள். போன மாதம் கூட அவன் தெருவில் இருந்த கிழவி இதில் விழுந்தாள்; பல பேர் விழுகிறார்கள். அவனும் விழுந்தால் என்ன? தண்ணீரிலே விழுந்த பிணம் என்பார்கள். அவன் அதைப் பார்த்திருக்கிறான். அவன் குளத்தில் விழுந்து செத்து, புசுபுசுவென்று பலூன் போல மிதந்தால், அம்மா அடையாளம் கண்டு கொள்வாளா? பயப்படுவாளா? அழுவாளா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by சிவா on Thu May 01, 2014 4:02 amஆனால், அவனுக்கு நீந்தத் தெரியும். குளத்தில் விழுந்தால் லேசில் உயிரை விட முடியாது. அவனுக்குத்தான் கஷ்டம்.

அவன் தொடர்ந்து நடந்தான். மரணத்துக்கு அஞ்சி ஓடுகிறவன் போல வேர்க்க விறுவிறுக்க நடந்தான். வெறி நாய் மறுபடியும் துரத்துகிறது. நிஜ நாய் அல்ல. கனவு நாய் தான். ஆனாலும் அது கடிக்க வருகிறது. அது போதாதா? பக்கத்து வீட்டுச் சேவல் ஐயோய்யோ என்று கத்துகிறது.

அவன் விழித்தபடி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான். மணி ஒன்பது நாற்பது. ஒன்பது ஐம்பதுக்கு ஒரு ரயில் வருகிறது. ரைட்!

அவன் தண்டவாளத்தோடு நடந்து கொண்டே இருந்தான். இரண்டு பர்லாங்கு நடந்திருப்பானா? எதிரில் ரயில் வருவது தெரிந்தது. ‘அப்பாடா’ என்று ஓர் உற்சாகம் உண்டாயிற்று. ரயிலுக்கு எதிரில் ஓடினால், டிரைவர் ரயிலை நிறுத்திவிடுவான் என்று அப்போதும் அவனுக்கு ஜாக்கிரதை இருந்தது. ஆகையால் அவன் ஒதுங்கியே நின்றான்.


அரசலாற்றை நெருங்கியதும் ரயில் ‘வர்ர்ர்ர்ர்ர்றேன்!’ என்று ஊதியது. அவன் சிரித்தான். அது பாலத்தைத் தடதடவென்று கடப்பதற்குள், அவனுக்கு அவசரம். நூறுமுறை விழுந்துவிட்டான். மனதிற்குள்.

எஞ்சின் அவனைத் தாண்டியது. டிரைவர் அவனைப் பார்த்துச் சிரித்துக் கையை ஆட்டினார். நெருப்புச் சூடு அவனைக் கர்றென்று கிள்ளியது. நாய் குரைத்தது. சேவல் கூவியது. அம்மா கத்தினாள். ராஜம் ஓட்டப் பந்தயத்துக்கு நிற்பவன் போல வலது காலை முன்னெடுத்து வைத்தான்.

”தூ ரொஃடி!” (நீ அழுது அழுது சாகணும்!) என்று பலமாய்க் கத்திக் கொண்டே இரண்டு பெட்டிகளுக்கிடையில் பாய்ந்தான்.

ஆஸ்பத்திரியிலிருந்து சடலத்தை இரவு பத்து மணிக்குத்தான் கொடுத்தார்கள். பிரேதத்தை வீட்டுக்குள் கொண்டு போகக் கூடாது என்பதற்காகத் திண்ணையிலேயே ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்கள். ரயில் டிரைவர் சந்தேகப்பட்டுப் பிரேக் போட்டதால் உயிர் போகும் அளவுக்குத் தலையின் பின்பக்கம் அடிபட்டதைத் தவிர ராஜத்துக்குப் பெரிய நஷ்டம் ஏதும் இல்லை. ஆஸ்பத்திரிக்காரர்களும் நறுவிசாக வேலை செய்திருந்தார்கள். ஆக, ராஜத்தின் உடம்பு பார்ப்பதற்குப் பயங்கரமாக இல்லை. கழுத்தில் ரோஜா மாலையுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் உட்கார்ந்திருந்தது.

அம்மா அழாமல் இருக்க முடியுமா? கதறிக் கதறி அழுதாள். இந்த தெருவாசிகள் மட்டும் அல்ல, பல தெருக்களிலிருந்து மக்கள் கூட்டமாக வந்து பார்த்துக் கலங்கினார்கள்.

எதிர் வீட்டில்தான் பங்கஜம் இருந்தாள். அவளுடைய பெற்றோர் எதிர் வீட்டுக்குப் போய்விட்டதால் அவள் தன் சகோதரர்களோடு இருந்தாள்.

“ஹய்யா, தூஜீதோ?” (ஏண்டி, நீ போய்ப் பார்க்கவில்லையா?) என்று அண்ணன் கேட்டான்.

“பார்க்காமே என்ன? பைத்தியக்காரப் பிள்ளை! கலியாணம் ஆனப்பறம் இந்த வேலை செய்யாமல் இருந்தானே!” என்ற பங்கஜம் போர்வையால் தலையையும் சேர்த்து மூடிக் கொண்டாள்.

குளிர் மட்டும் அல்ல; கும்பகோணத்தில் கொசுத் தொல்லையும் அதிகம்.

****
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் Empty Re: பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை